இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
தெற்காசியாவின் பகைமை அணு ஆயுத சக்திகளான இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போரில் இறங்குவதற்கான விளிம்பில் நிற்கின்றன. அத்தகைய மோதல், பிராந்தியத்தின் 2 பில்லியன் மக்களுக்கு மட்டுமன்றி, முழு உலகிற்கும் பேரழிவை ஏற்படுத்தும். இந்தியா-பாகிஸ்தான் போரானது விரைவில் அணு ஆயுத அழிவாக விரிவடைந்து, ஏனைய பெரும் வல்லரசுகளை, குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனாவை போருக்குள் இழுக்கக் கூடும்.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ஜனத்தொகையில் ஆறில் ஒரு பங்கும் பொருளாதாரத்தில் பத்தில் ஒரு பங்கும் கொண்டுள்ள பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப், பாகிஸ்தான் அதன் அணு ஆயுதக் கிடங்கைப் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்படக் கூடும் என பலமுறை எச்சரித்துள்ளார். கடந்த புதன்கிழமை, நவீன ரஃபேல் ஜெட் விமானங்கள் உட்பட 75 க்கும் மேற்பட்ட போர் விமானங்களை உள்ளடக்கி நடத்தப்பட்ட இந்தியாவின் பெரிய அளவிலான ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா 'இந்தப் பகுதியில் ஒரு முழுமையான போரை திணித்தால்... எந்த நேரத்திலும் ஒரு அணுசக்தி போர் வெடிக்கக் கூடும்' என்று ஆசிஃப் கூறினார்.
சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட, ஆனால் அதற்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருக்காத, நான்கு நாட்கள் நடந்த தீவிர எல்லை தாண்டிய ஏவுகணை மற்றும் ஆட்டிலரித் தாக்குதல்களுக்குப் பின்னர், சனிக்கிழமையே புது தில்லியும் இஸ்லாமாபாத்தும் ஒரு போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உண்மை (Truth) என்ற சமூக ஊடக தளத்தில் முதலில் அறிவித்த போர் நிறுத்தம் நீடிக்குமா என்பது கடுமையான சந்தேகத்தில் உள்ளது.
கிட்டத்தட்ட உடனடியாக, போர் நிறுத்தத்தை மீறியதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக்கொண்டதோடு இரு தரப்பினரும் தாமே சிறப்பாக தாக்குதல் நடத்தியதாக கூறிக்கொண்டனர். புது தில்லியும் இஸ்லாமாபாத்தும், பொதுமக்களையும் மதத் தளங்களையும் வேண்டுமென்றே குறிவைத்ததாக ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத குற்றச்சாட்டுகளையும் பரிமாறிக்கொண்டன.
ஏப்ரல் 22 அன்று, இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைக் குற்றம் சாட்டிய பின்னர் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் நடைமுறையில் இருக்கும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இவற்றில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் பங்கேற்பதை இடைநிறுத்துவதும் அடங்கும் - இந்த நடவடிக்கையை பாகிஸ்தானின் விவசாயம், உணவு வழங்கல் மற்றும் மின்சார கட்டமைப்புக்கு விடுக்கும் அச்சுறுத்தலாக எச்சரித்த இஸ்லாமாபாத், இது ஒரு 'போர் நடவடிக்கை' என்று கண்டித்துள்ளது.
அணு ஆயுதம் கொண்ட நாடுகளுக்கு இடையிலான முன்னெப்போதும் இல்லாத முழுமையான ஆபத்தான போரை உலகம் நெருங்கி வந்துள்ளது என்பது உறுதி.
இந்த முன்னேற்றங்களை உலக ரீதியில் அரசுகளுக்கு இடையேயான உறவுகளில் ஏற்பட்டுள்ள பரந்தளவிலான விரிசலின் ஒரு பகுதியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். உலக புவிசார் அரசியலானது மேலும் மேலும் அதிகரித்து வரும் வர்த்தக மோதல்களால் மேலாதிக்கம் செய்யப்படுகிறது. இது அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் வழிநடத்தலுடன் பாரிய மறு ஆயுதமயமாக்கல் திட்டங்களை செயல்படுத்துதல், பிராந்திய போர்களை கட்டவிழ்த்து விடுதல், காசாவில் ஏகாதிபத்திய ஆதரவுடன் நடக்கும் இனப்படுகொலை, அணு ஆயுதத்தைக் கொண்டு அச்சுறுத்துவதை 'சாதாரணமாக்குதல்' ஆகியவற்றை நோக்கி விரைகிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மீண்டும் போர் நெருக்கடிகளை எதிர்கொண்டன. குறிப்பாக 2016 மற்றும் 2019 இல், பாகிஸ்தானுக்கு எதிராக சட்டவிரோத எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்துவதன் மூலம் 'விளையாட்டின் விதிகளை மாற்ற' புது தில்லி எடுத்த முயற்சிகளை வாஷிங்டன் ஆதரித்தபோது, இந்த நிலை ஏற்பட்டது. இருப்பினும், கடந்த வார இராணுவ மோதல்கள் பல தசாப்தங்களின் பின்னர் காணப்பட்ட மிகவும் தீவிரமான மோதலாக இருந்தது. இதில் பெரிய அளவிலான போர் ஜெட் விமானங்களின் குறுந்தூர தாக்குதல்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மீதான தாக்குதல்கள் மற்றும் முதல் முறையாக நடந்த ட்ரோன் மற்றும் எல்லை தாண்டிய ஏவுகணை தாக்குதல்கள் ஆகியவை அடங்கும்.
இந்தியாவும் பின்னர் பாகிஸ்தானும் வேண்டுமென்றே ஒருவருக்கொருவர் சிவப்பு கோடுகளைக் கடந்தனர். இந்தியாவின் மே 6–7 தாக்குதல் பாகிஸ்தானின் பஞ்சாபி மையப்பகுதிக்குள் பல இலக்குகளைத் தாக்கியது. மோதல் உக்கிரமடைந்த நிலையில், இரு தரப்பினரும் இராணுவ தளங்களை குறிவைத்தனர். இஸ்லாமாபாத்தின் கூற்றுப்படி, ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தானின் இராணுவ தலைமையகத்திற்கு அருகிலுள்ள விமான தளத்தைத் தாக்க இந்தியா மேற்கொண்ட முயற்சியும் இதில் அடங்கும். ஒரு தரப்பினர் அல்லது இரு தரப்பினரும் தந்திரோபாய அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளும் மற்றொன்றின் பிரதான மக்கள்தொகை மையங்களை எரித்து அழிக்கும் திறன் கொண்ட தந்திரோபாய மற்றும் மூலோபாய அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன. மிகவும் மெய் சிலிர்க்குமளவில் கூறுவதென்றால், 2008 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அளவிலான 100 குண்டுகள் -மொத்தம் 1.5 மெகாடன்கள்- மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட அணு ஆயுதபரிமாற்றம் கூட, ஒரு பேரழிவு தரும் 'அணுசக்தி குளிர்காலத்தை' தூண்டக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ரிச்சர்ட் ரோட்ஸ், அணுகுண்டின் தயாரிப்பு (The Making of the Atomic Bomb) என் நூலின் 2012 ஆம் ஆண்டு பதிப்பில் விளக்கியது போல், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணு ஆயுத பரிமாற்றமானது
தவிர்க்க முடியாமல், எரியக்கூடிய பொருட்களால் நிரப்பப்பட்ட நகரங்களை இலக்காகக் கொண்டிருப்பதுடன், [தீப்புயல்களை ஏற்படுத்தி] அது மேல் வளிமண்டலத்தில் பாரிய அளவிலான கருப்பு புகையை செலுத்தும். இந்தப் புகை உலகம் முழுவதும் பரவி, பூமியை நீண்ட காலத்துக்கு குளிர்வித்து, உலகளவில் விவசாய வீழ்ச்சியை உருவாக்கும்.
தீ மற்றும் கதிர்வீச்சினால் உடனடியாக 20 மில்லியன் பேர் இறக்க நேரிடுவதோடு அதைத் தொடர்ந்து வெகுஜன பட்டினியால் ஒரு பில்லியன் பேர் வரை மரணிக்க நேரிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தோ-பாகிஸ்தான் மோதலில் பதற்றத்தைத் தணிக்க வாஷிங்டன் விடுத்த தாமதமான அழைப்புகளைப் பயன்படுத்தி, தான் அமைதிக்காக முன்நிற்பதாக இழிந்த முறையில் காட்டிக்கொள்ளும் பாசிச ஜனாதிபதியின் பாசாங்கை வலுப்படுத்த ட்ரம்பும் அவரது கூட்டாளிகளும் மேற்கொள்ளும் முயற்சிகளை தொழிலாளர்கள் அவமதிப்புடன் நிராகரிக்க வேண்டும்.
இராணுவத் தாக்குதல்களை புதுப்பித்து வேண்டுமென்றே பட்டினிக்குள் தள்ளி காசாவில் இனப்படுகொலையை நிறைவேற்ற இஸ்ரேல் எடுக்கும் முயற்சிகளுக்கு ட்ரம்ப் வசதியளிப்பதாலேயே, ஈரானை 'அழிப்பதாக' அச்சுறுத்தி, சீனாவுடனான வாஷிங்டனின் மோதலை துரிதப்படுத்துவதோடு பாதுகாப்பு செலவுகளை 1 ட்ரில்லியன் டொலருக்கு உயர்த்துவதால் மட்டும் இதை நிராகரிக்க வேண்டுமென்பதில்லை. எல்லா இடங்களிலும் போலவே தெற்காசியாவிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வகிபாகம் எரியூட்டும் தன்மை கொண்டுள்ளது.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, சீனாவிற்கு எதிரான அதன் இராணுவ-மூலோபாய தாக்குதலை அபிவிருத்தி செய்வதில் இந்தியாவை ஒருங்கிணைப்பதற்கு வாஷிங்டன் முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்காக, ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்கள் இரண்டும் புது தில்லிக்கு பிரதான மூலோபாய சலுகைகளை வழங்கியுள்ள அதே நேரம், பாகிஸ்தானுடனான உறவுகளை வியத்தகு முறையில் குறைத்துள்ளன.
இந்தோ-அமெரிக்க 'பூகோள மூலோபாய கூட்டாண்மையானது' இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசாங்கத்தை பாகிஸ்தானுக்கு எதிரான அதன் மோதல் நிலைப்பாட்டில் தைரியப்படுத்தியுள்ள அதே நேரம், இஸ்லாமாபாத் பெய்ஜிங்குடனான அதன் கூட்டணியை ஆழப்படுத்தவும் தள்ளியுள்ளது. இதில், இந்து மற்றும் பசிபிக் சமுத்திரங்களில் நெருக்கடிப் புள்ளிகளை முற்றுகையிடும் அமெரிக்க முயற்சிகளுக்கு எதிராக சீனாவிற்கு ஒரு மாற்றீட்டை வழங்கும் நோக்கம் கொண்ட சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட ஒத்துழைப்பும் அடங்கும்.
இந்திய-பாகிஸ்தான் மோதல், சீனாவின் எழுச்சியைத் தடுக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் பெருகிய முறையில் பின்னிப் பிணைந்துள்ளதுடன், இது இரண்டு முரண்பாடுகளுக்கும் வெடிக்கும் தன்மையை விரிவாக்குகிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முழு அளவிலான போர், யூரேசிய புவிசார் அரசியல் ஒழுங்கை தகர்ப்பதற்கு அச்சுறுத்தி, அமெரிக்காவையும் சீனாவையும் அதற்குள் இழுத்துப் போட்டு, இந்தப் பிராந்திய மோதலை பூகோள மோதலாக மாற்றும்.
பேரழிவை நோக்கி துரிதமாக நகர்ந்த பரஸ்பர இராணுவத் தாக்குதல்களின் சுழலுக்குள் இந்தியாவும் பாகிஸ்தானும் சிக்கிக் கொள்ளும் வரை, வாஷிங்டன் தெற்காசிய போர் நெருக்கடியைப் புறக்கணித்தமையானது உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியையும் உலகளாவிய வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சியையும் எதிர்கொண்டுள்ள ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்களின் ஈவிரக்கமற்ற தன்மைக்கு ஒரு அளவீடாகும்
சமீபத்தில் வெளியிடப்பட்ட தனது நினைவுக் குறிப்பில், ட்ரம்பின் முதல் பதவிக் காலத்தில் வெளியுறவுச் செயலாளராக இருந்த மைக் பொம்பியோ, 2019 இல் இந்தியாவின் அப்போதைய வெளியுறவு அமைச்சர், பாகிஸ்தான் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தத் தயாராகி வருவதாகவும், அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா தனது சொந்த ஆயுதக் கிடங்கைத் தயார் செய்து வருவதாகவும் புது தில்லி தன்னிடம் கூறியதை நினைவு கூர்ந்தார்.
பாம்பியோ எழுதியதாவது:
இந்தியா-பாகிஸ்தான் பகைமை 2019 பெப்பிரவரியில் அணு ஆயுத மோதலாக எவ்வளவு நெருக்கமாக விரிவடைந்தது என்பதை உலகம் சரியாக அறிந்திருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.
ஆனால் கடந்த வியாழக்கிழமை போலவே, சீன-விரோத இந்திய-அமெரிக்க இராணுவ கூட்டணியை பலப்படுத்த கடந்த மாதம் புது தில்லிக்குச் சென்ற அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், இந்த மோதல் 'அடிப்படையில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத' காரணத்தால் தெற்காசியாவில் தீவிரமடைந்து வரும் போரில் ட்ரம்ப் நிர்வாகம் அக்கறை கொள்ளவில்லை என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
பைடன் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்காவால் தொடங்கப்பட்ட பூகோளப் போரின் எல்லைக் கோடுகள், ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா-நேட்டோ தூண்டி விட்ட போர், 'பாலஸ்தீன பிரச்சினைக்கு' 'இறுதி தீர்வை' திணிப்பதற்கான அமெரிக்க-இஸ்ரேலிய பிரச்சாரம், மத்திய கிழக்கின் வரைபடத்தை மறுவரையறை செய்தல், சீனாவிற்கு எதிரான தீவிரப்படுத்தப்பட்ட அமெரிக்க உந்துதல் ஆகியவற்றின் மூலம் வடிவம் பெற்றன.
தற்போது தன்னலக்குழு, சர்வாதிகாரம் மற்றும் ஏகாதிபத்திய வன்முறையின் உருவகமான ட்ரம்ப், தனது பூகோள வர்த்தகப் போர் மற்றும் கனடா, கிரீன்லாந்திலிருந்து, பனாமா கால்வாய் மற்றும் காசா வரை இணைப்பு இலக்குகளின் பட்டியலை விரிவுபடுத்துவதன் மூலம், அரசுகளுக்கு இடையேயான உறவுகள் விரிசலடைவதை துரிதப்படுத்தியுள்ளார்.
ஆனால், ஒரே பாதையைப் பின்பற்றுகின்ற அனைத்து ஏகாதிபத்திய மற்றும் குறைந்த முதலாளித்துவ சக்திகளும், சந்தைகள், வளங்கள் மற்றும் மூலோபாய பிரதேசங்கள் மீதான கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான ஈவிரக்கமற்ற போராட்டத்தில் சிக்கிக் கொள்கின்றன. கடந்த நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களுக்கு வழிவகுத்த அதே இன்றியமையாத முரண்பாடுகளால் இந்த உந்துதல் இயக்கப்படுகிறது.
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தற்கு வழங்கிய தனது உரையில் விளக்கியது போல்:
கடந்த நூற்றாண்டில், போர் மற்றும் பாசிசத்திற்கு வழிவகுத்த முதலாளித்துவ அமைப்பின் அதே பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகளே, இப்போதைய அரசியல் காட்டுமிராண்டித்தனம் மற்றும் பேரழிவு தரும் உலகப் போருக்குச் செல்வதற்கான தீர்க்கமான காரணங்களாக இருக்கின்றன. இந்த ஒன்றோடொன்று தொடர்புடைய முரண்பாடுகள், முதலில், முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புடன் உலகப் பொருளாதாரத்தின் பொருந்தா தன்மை; இரண்டாவதாக, சமூக ரீதியில் அழிவுகரமான தன்மை கொண்ட, பண வெறி பிடித்த தன்னலக் குழுக்களால் (oligarchs) கட்டுப்படுத்தப்படும், உற்பத்தி சாதனங்களின் முதலாளித்துவ தனியார் உடைமைக்கும் பில்லியன் கணக்கான மக்களின் உழைப்பை உள்ளடக்கிய சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சமூகமயப்படுத்தப்பட்ட உற்பத்திக்கும் இடையிலான முரண்பாடாகும்.
பேரழிவைத் தவிர்க்க வேண்டுமானால், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான ஆழமடைந்து வரும் தாக்குதலுக்கும், அந்த தாக்குதல்களுக்கு மூலகாரணமான முதலாளித்துவ முறைமைக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டத்தை ஒன்றிணைக்கின்ற, ஒரு உலகளாவிய போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவதே தீர்க்கமான பணி ஆகும்.
மேலும் படிக்க
- பாகிஸ்தானுக்குள் இந்திய விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் தெற்காசிய மோதல்கள் தீவிரமடைகின்றன
- தெற்காசியாவின் போட்டி அணுவாயுத சக்திகளுக்கு இடையே பதட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இந்திய இராணுவத் தாக்குதலை "நெருங்கிவிட்டதாக" பாகிஸ்தான் எச்சரிக்கிறது
- இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதட்டங்கள் அதிகரித்துள்ளன
- புது தில்லி பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்லாமாபாத்தை குற்றம் சாட்டியதை அடுத்து, இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நோக்கி விரைகின்றன