இந்திய-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு தெற்காசியா கத்தி முனையில் நிற்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் நகருக்கு அருகில், 7 மே 2025 புதன்கிழமை, இந்திய ஏவுகணைத் தாக்குதலால் சேதமடைந்த ஒரு மசூதி கட்டிடத்தின் வளாகத்தில், இந்திய ஏவுகணைகளின் உலோகத் துண்டுகளை ஊடக உறுப்பினர்கள் படம் பிடித்தனர். [AP Photo/Asim Tanveer]

தெற்காசியாவின் பகைமை அணு ஆயுத சக்திகளான இந்தியாவும் பாகிஸ்தானும், பல தசாப்தங்களின் பின்னர் நடக்கும் மிகப்பெரிய இராணுவ மோதலில் டஜன் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட பின்னர், முழுமையான போருக்கான விளிம்பில் நிற்கின்றன.

செவ்வாய்க்கிழமை இரவு (மே 6-7) இந்தியா நடத்திய வான் தாக்குதலுக்கு பதிலளிக்க, பாகிஸ்தான் இராணுவத்துக்கு 'அது தேர்வுசெய்யும் நேரத்தில், இடத்தில் மற்றும் முறையில்' தாக்குதல் நடத்துவதற்கு தேசிய பாதுகாப்பு சபை 'முழு அங்கீகாரம் அளித்துள்ளது' என்று பாகிஸ்தான் புதன்கிழமை அறிவித்தது.

உடனடியாக, எந்தவொரு பாகிஸ்தானிய இராணுவ நடவடிக்கைக்கும் இந்தியா அதே விதத்தில் பதிலடி கொடுக்கும் என்று புது தில்லி தெரிவித்துள்ளமை, இரு பக்கத்திலிருந்தும் பரஸ்பர தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்பை அடிக்கோடிட்டு காட்டுவதோடு இது விரைவில் கட்டுப்பாட்டை இழந்து முழு அளவிலான போராகவும் மாறக்கூடும். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற வெளிநாட்டு அரசாங்கங்களுக்குத் தெரிவித்ததைச் சுருக்கமாகக் கூறிய இந்திய அதிகாரி ஒருவர், “பாகிஸ்தான் தீவிரப்படுத்த முடிவு செய்தால், இந்தியா உறுதியாக பதிலடி கொடுக்க சிறப்பாக தயார் நிலையில் உள்ளது” என்றார்.

இரு தரப்பிலும் உள்ள அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர் அச்சுறுத்தல்களின் கூச்சலுக்கு மத்தியில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அணு ஆயுத மோதலுக்கான அச்சுறுத்தலை பற்றி குறிப்பிட்டார். இந்தியா 'பிராந்தியத்தில் ஒரு முழுமையான போரை திணித்தால், ஒரு விட்டுக்கொடுப்பற்ற நிலையில் அத்தகைய ஆபத்துகள் ஏற்பட்டால், எந்த நேரத்திலும் ஒரு அணு ஆயுதப் போர் வெடிக்கலாம்,' ஆசிப் ஜியோ நியூஸ் ஊடகத்திடம் கூறினார்.

புதன்கிழமை அதிகாலையில், பாகிஸ்தானுக்குள் உள்ள பல இலக்குகளை இந்தியா தாக்கியது. இந்த தாக்குதலை, ஏப்ரல் 22 அன்று இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் பஹல்காம் அருகே 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக புது தில்லி கூறிக்கொண்டது. பஹல்காம் தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்குள், இந்தியாவின் இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசாங்கம், இந்த பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் பின்னால் இருந்து திட்டமிட்டிருப்பதாக குற்றம் சாட்டிய போதிலும், இன்றுவரை அது தனது கூற்றை ஆதரிக்க எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.

முரண்பாடான உரிமைகோரல்கள்

மே 6-7 இரவு நடந்த மோதல்கள் குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் இப்போது முரண்பட்ட கூற்றுக்களைச் சொல்லி வருவதுடன், ஒவ்வொரு தரப்பினரும் தங்கள் இராணுவ வலிமையைப் பற்றி பெருமையாகக் கூறிக் கொள்கிறார்கள்.

இந்த கட்டத்தில் உறுதியாகக் கூறக்கூடியது என்னவென்றால், இஸ்லாமாபாத்தின் கூற்றுப்படி, 75க்கும் மேற்பட்ட போர் விமானங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய அளவிலான தாக்குதலை இந்தியா நடத்தியதுடன் குறைந்தபட்சம் ஆறு இலக்குகளை தாக்கியுள்ளது அல்லது சாத்தியமான வகையில் ஒன்பது வெவ்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தது. அவற்றில் மூன்று தாக்குதல்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலும், ஏனையவை ஆசாத் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் நடந்துள்ளன.

இந்தியாவின் இரத்தக்களரித் தாக்குதல் உடனடியாக இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீரையும் பிரிக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே ஆட்டிலரி மற்றும் மோட்டார் குண்டு மழையை தூண்டிவிட்டது. இதன் விளைவாக ஜம்மு-காஷ்மீரில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக இந்திய செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

'பயங்கரவாத முகாம்களைத்' தாக்குகிறோம் என்ற பெயரில், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து விமானம் மற்றும் ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல்களை இந்தியா நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவின் தாக்குதல்களில் ஏழு வயது சிறுவன் உட்பட 31 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 57 பேர் காயமடைந்ததாகவும் அது கூறுகிறது.

இஸ்லாமாபாத் மூன்று இந்திய போர் விமானங்களையும் இரண்டு ட்ரோன்களையும் வீழ்த்தியதாகக் கூறுகிறது.

இந்திய இராணுவ இழப்புகள் குறித்த பாகிஸ்தானின் கூற்றுக்கள் குறித்து புது தில்லி இதுவரை மௌனமாகவே இருந்து வருகின்ற போதிலும், இந்து மற்றும் நியூயோர்க் டைம்ஸ் உட்பட பல்வேறு செய்தி நிறுவனங்கள், விமானங்கள் வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்களை உறுதிப்படுத்தியுள்ளதுடன் பிரான்சில் தயாரிக்கப்பட்ட நவீன ரஃபேல் போர் விமானம் உட்பட இழப்புகளை ஒப்புக்கொண்ட பெயர் குறிப்பிடப்படாத இந்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் என்று அழைக்கப்பட்ட பாகிஸ்தான் மீதான இந்தியத் தாக்குதலானது, துணைக்கண்டத்தை ஆபத்தான முறையில் முழுமையான போருக்கு நெருக்கமாகக் கொண்டு வந்த, 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அது நடத்திய எல்லை தாண்டிய தாக்குதல்களை விட மிகப் பெரியது, மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் இராணுவ ரீதியாக மிகவும் அதிநவீனமானது என்று இந்தியா பெருமை பேசுகிறது.

காஷ்மீர் தொடர்பாக இஸ்லாமாபாத்துடனான அதன் பிற்போக்கு தகராறின் ஒரு பகுதியாக, புது தில்லி தனக்குச் சொந்தமானது என்று கூறும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் தனது தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, பல தசாப்தங்களில் முதல் முறையாக, பஞ்சாபின் முக்கிய நகரங்களுக்கு அருகிலுள்ள இலக்குகளை இந்தியா தாக்கியுள்ளது. மற்றும், போர் ஜெட் விமானங்கள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழையாமல் இந்த தாக்குதல்களை அது நடத்தியுள்ளது.

முன்னாள் தூதரும் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான பங்கஜ் சரண், இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதுகையில், பாகிஸ்தான் மீதான அதன் சமீபத்திய தாக்குதலுடன், அதன் வரலாற்றுப் பகையாளியுடனான இந்தியாவின் மூலோபாய மோதலைப் பொறுத்தவரை, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கமானது விளையாட்டின் விதிகளை மாற்றியுள்ளது என்று கூறினார்.

சரண் எழுதியதாவது:

பாகிஸ்தான் விடுக்கும் முழுமையான போர் அச்சுறுத்தல், கட்டுப்பாடற்ற அதிகரிப்பு மற்றும் பிரமாண்ட பதிலடி, அல்லது மிக முக்கியமாக, அணு ஆயுத அச்சுறுத்தலைப் பற்றிப் பேசுவது போன்றவற்றில் இந்தியா இனிமேல் கவனம் செலுத்தப்போவதில்லை. … ஆபரேஷன் சிந்தூர், மற்றும் அதற்கு முன்னரும், 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட பதிலடிகள், இந்தியாவுக்கு இராணுவ மற்றும் ஏனைய தேர்வுகள் உள்ளன என்பதைக் காட்டுகின்றன.

இந்தியா தனது தாக்குதல் 'ஒருமுகப்படுத்தப்பட்ட, அளவிடப்பட்ட மற்றும் தீவிரமடையாத தன்மை கொண்டது' என்று கூறியுள்ள போதிலும், அது தெளிவாக ஒரு பெரிய போருக்கு தயாராகி வருகிறது.

1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் பின்னர் முதல் முறையாக, புதன்கிழமை, இந்தியா நாடு முழுவதும் சிவில் பாதுகாப்பு பயிற்சிகளை நடத்தியது. இந்தியாவின் 780 மாவட்டங்களில் சுமார் 250 மாவட்டங்களில் பயிற்சிகள் நடத்தப்பட்டன -இந்த மாவட்டங்கள், எல்லைக்கு அருகாமையில் இருப்பதால் அல்லது பிரதான இராணுவ தளங்கள், அணுமின் நிலையங்கள் அல்லது ஏனைய இன்றியமையாத உள்கட்டமைப்புகளைக் கொண்டிருப்பதால் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடியவையாக கருதப்படுகின்றன. பயிற்சிகளின் ஒரு பகுதியாக, விமானத் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பைப் பெறுவதற்காக டெல்லி உட்பட பிரதான இந்திய நகரங்களில் 15 நிமிட மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டது.

அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தி வைப்பது மற்றும் பாகிஸ்தானுடனான அடிப்படை தரைப்பாதைக்  கடவையை மூடுவது மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியாவின் பங்களிப்பை நிறுத்தி வைப்பது ஆகியவை உட்பட பாகிஸ்தானுக்கு எதிராக அது மேற்கொண்ட ஏனைய 'பழிவாங்கும்' நடவடிக்கைகளை கைவிடுவது ஒருபுறம் இருக்க, இஸ்லாமாபாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கத்தில் உள்ள எவரிடமிருந்தும் எந்த பிரேரணையும் இல்லை..

சிந்து நதி நீர் ஒப்பந்தம் 65 ஆண்டுகளுக்கு முன்பு அமுலுக்கு வந்ததிலிருந்து, இந்தியா பாகிஸ்தானுடன் இரண்டு அறிவிக்கப்பட்ட போர்களையும், பல அறிவிக்கப்படாத போர்களையும், எண்ணற்ற எல்லை மோதல்களையும் நடத்தியுள்ளது. இருப்பினும், பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் மின்சார விநியோகத்திற்கு மிகவும் இன்றியமையாத, இந்தியா வழியாக ஓடும் சிந்து நதியின் மூல நீர்வளங்களை ஒதுக்கிடு செய்யும் ஒப்பந்தத்தை இதற்கு முன் ஒருபோதும் நிறுத்தி வைக்கவில்லை. கடந்த வார இறுதியில், பாகிஸ்தானை அடையும் நீரில் 90 சதவீதத்தை துண்டிக்கும் நோக்கத்துடன் செய்வதாக அறிவித்து, சிந்து நதியின் இரண்டு துணை நதிகளில் உள்ள அணைகள் வழியாக நீர் ஓட்டத்தை இந்தியா சரிசெய்யத் தொடங்கியமை பாகிஸ்தானில் தற்போதைய தாழ்நிலங்களில் நடவு பருவத்தை கடுமையாக பாதிக்கும்.

பாகிஸ்தானின் நீர் விநியோகத்தை துண்டிக்க பாஜக அமைச்சர்கள் விடுக்கும் அச்சுறுத்தல்களை பெரிதாக்கி, செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தான் மீதான இந்தியாவின் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மோடி, இனிமேல் இந்தியாவின் நீர் 'தேசிய நலனுக்காக' மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் 'இனி வெளியே பாயக்கூடாது' என்றும் அறிவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்பது போட்டி முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான ஒரு பிற்போக்கு மோதலாகும். இந்த மோதல்கள் 1947 இல் துணைக்கண்டத்தை வெளிப்படையாக முஸ்லிம் பாகிஸ்தான் மற்றும் இந்து இந்தியாவாக வகுப்புவாத அடிப்படையில் பிரித்ததிலேயே வேரூண்றியுள்ளன. இதுவும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஸ்ராலினிசம், காலனித்துவ நாடுகளில் ஏகாதிபத்தியத்துடனும் தேசிய முதலாளித்துவத்துடனும் சேர்ந்து சமூகப் புரட்சியை நசுக்கி முதலாளித்துவத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக மேற்கொண்ட செயல்முறையின் ஒரு பகுதியே ஆகும்.

கடந்த எட்டு தசாப்தங்களாக, போட்டி முதலாளித்துவ ஆட்சிகள் தெற்காசியாவில் அதிகாரம் மற்றும் நலன்களுக்காக தங்கள் கொள்ளையடிக்கும் மோதலைத் தொடர்வதில் எண்ணற்ற உயிர்களையும் வளங்களையும் வீணடித்துள்ளன. அதேநேரம், அவர்கள் இந்த மோதலை வகுப்புவாத எதிர்வினையைத் தூண்டவும், வெகுஜன வறுமை மற்றும் கடுமையான சமூக சமத்துவமின்மையால் ஏற்பட்ட சமூக பதட்டங்களையும் வெளிப்புறமாகத் திசைதிருப்பி விடவும் பயன்படுத்தினர்.

வாஷிங்டனின் தீமூட்டும் வேலை

கடந்த இரண்டு தசாப்தங்களாக, இந்திய-பாகிஸ்தான் மோதல் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான மூலோபாய மோதலுடன் மேலும் அதிகமாக பிணைக்கப்பட்டுள்ளமை, ஒரு உலகளாவிய மோதலைத் தூண்டும் சாத்தியக்கூறுடன் ஒரு புதிய வெடிக்கும் பரிமாணத்தை சேர்த்துக்கொண்டுள்ளது. ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் முதல் இன்று ட்ரம்ப் வரையிலான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஜனாதிபதிகள் இருவரின் கீழும், வாஷிங்டன் இந்தியாவை உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதலுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும், சீனாவிற்கு ஒரு எதிர் எடையாக அதை கட்டமைக்கவும் ஆக்ரோஷமாக முயற்சிக்கின்றது.

இதன் விளைவாக, அமெரிக்கா ஒரு காலத்தில் அதன் பிரதான தெற்காசிய நட்பு நாடாக இருந்த பாகிஸ்தானுடனான தனது உறவுகளை வியத்தகு முறையில் குறைத்துக்கொண்டதால், இஸ்லாமாபாத் சீனாவுடனான அதன் 'எல்லா சூழ்நிலையிலுமான' கூட்டாண்மையை இரட்டிப்பாக்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை, வாஷிங்டன் மற்றும் புதுதில்லி இரண்டுடனும் மோதல் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது.

சமீபத்திய நாட்களில், குறிப்பாக செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, ஈரான், பங்களாதேஷ் மற்றும் வளைகுடா நாடுகள் உட்பட பரந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து வல்லரசுகளிடமிருந்தும் அரசாங்கங்களிடமிருந்தும் உடனடியாக பதட்டத்தைத் தணிக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அரசும் சொந்த சுயநலத்தை முன்நகர்த்தி, தனது செயல்பாட்டு சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயல்வதால், எப்போதும் போல இந்த அழைப்புகளில் பாசாங்குத்தனம் உட்பொதிந்துள்ளது.

எனவே, பாகிஸ்தான் மீதான மோடி அரசாங்கத்தின் சட்டவிரோத எல்லை தாண்டிய தாக்குதலையோ அல்லது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ஆத்திரமூட்டும் வகையில் இடைநிறுத்தி வைப்பதையோ எந்த ஏகாதிபத்திய சக்திகளும் கண்டிக்கவில்லை அல்லது பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற இஸ்லாமாபாத்தின் முன்மொழிவை கடுமையாக எதிர்த்ததற்காக இந்தியாவை விமர்சிக்கவுமில்லை.

'சுய பாதுகாப்பு' மற்றும் 'பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுதல்' என்ற பெயரில் சர்வதேச சட்டத்தை ரத்து செய்ய தனக்கும் அதன் இஸ்ரேலிய ஏவல்-நாய்க்கும் உள்ள அதே 'உரிமை' தனது நட்பு நாட்டுக்கும் இருப்பதாகக் கூறிக்கொண்டு, 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், முதலில் ஒபாமா மற்றும் பின்னர் ட்ரம்ப் தலைமையில், பாகிஸ்தான் மீதான புது தில்லியின் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு அமெரிக்கா தனது ஆதரவை உறுதியாக அறிவித்தது.

இன்றுவரை, 'பதட்டத்தைக் குறைப்பதற்கான' தாமதமான அழைப்புகளுடன் அமெரிக்க அதிகாரிகள் தங்களை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளதுடன், பதட்டத்திற்கானப் பெரும் பொறுப்பை பாகிஸ்தானின் மீது சுமத்தியுள்ளனர்.

'இது மிகவும் கொடூரமானது, அவர்கள் நிறுத்துவதை நான் பார்க்க விரும்புகிறேன், இப்போது அவர்களால் நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்,' என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை கூறினார்.

மோதலைப் பற்றிய புதுதில்லியின் விவரிப்பை பெருமளவில் எதிரொலிக்கும் வகையில், தொடர்ந்து பேசிய அவர், 'என்னால் ஏதாவது செய்ய முடிந்தால் உதவி செய்வேன்' என்று தெளிவற்ற வார்த்தைகளில் யோசனை தெரிவிப்பதற்கு முன்னதாக, 'அவர்களிடம் ஒரு பழிக்குப் பழிவாங்கும் எண்ணம் உள்ளது, எனவே அவர்கள் இப்போது அதை நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்,' எனக் கூறினார்.

பாசிச ஜனாதிபதி தன்னை ஒரு அமைதிப் போராளியாகக் காட்டிக் கொள்ள முயற்சிப்பது, மற்ற எல்லா அரங்குகளிலும் போலவே தெற்காசிய அரங்கிலும் ஒரு ஏமாற்று வேலை ஆகும்.

புதுதில்லியுடன் சீனாவுக்கு எதிரான 'உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை' உறுதி செய்வதற்கு வாஷிங்டன் எடுத்த நடவடிக்கைகள், பிராந்திய மேலாதிக்கம் செலுத்துவதற்கான இந்தியாவின் நாட்டத்தில் அதை பெருமளவில் தைரியப்படுத்தியுள்ளன.

2016 மற்றும் 2019 இல் இந்தியா நடத்திய தாக்குதல்களுக்கு மேற்கூறியவாறு பச்சைக்கொடி காட்டியமைக்கும் மேலாக, பின்வருவனவும் அமெரிக்க நடவடிக்கைகளில் அடங்கும்:

* உயர் தொழில்நுட்ப அமெரிக்க ஆயுதங்களுடன் இந்தியாவை ஆயுதபாணியாக்குதல்;

* சிவில் அணுசக்தி தொழில்நுட்பத்தில் வர்த்தகம் செய்வதற்கான வசதியை அதற்கு கிடைக்கச் செய்தல், அதன் உள்நாட்டு ஆயுத மேம்பாட்டில் அணுசக்தி திட்டத்தை அதிகரிக்க உதவுதல்;

* அதன் ஆழ்கடல் கடற்படையின் அபிவிருத்தியை ஆதரித்தல்;

* அதன் மிக முக்கியமான ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்கர இராணுவ-பாதுகாப்பு பரிமாற்றங்களின் மிகப் பரந்த வலையமைப்பில் அதை ஒருங்கிணைத்தல்;

* மற்றும் இந்தியாவின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியமான ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு தன்னாட்சி அந்தஸ்தைப் பறித்து, அதை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசமாகக் குறைத்த, சர்ச்சைக்குரிய காஷ்மீரில் மோடி அரசாங்கம் 2019 இல் மேற்கொண்ட அரசியலமைப்பு சதிக்கு ஒப்புதல் அளித்தல்.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள தொழிலாளர்கள், அந்தந்த அரசாங்கங்கள் மற்றும் ஆளும் வர்க்கங்களின் பிற்போக்கு போர் வெறியையும், உலகை மறுபகிர்வு செய்வதற்கான அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியப் போராட்டத்தில் தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை மையக் களமாக மாற்றுவதையும் எதிர்க்க வேண்டும்.

ஒரு இந்திய-பாகிஸ்தான் போர் தெற்காசியாவின் மக்களுக்கும், உண்மையில் முழு கிரகத்திற்கும் ஒரு பேரழிவாக இருக்கும். இரு தரப்பிலும் உள்ள ஆளும் வர்க்க செய்தித் தொடர்பாளர்கள் இந்த மோதல் ஒரு அணுசக்தி மோதலுக்கு வழிவகுக்கும் சாத்தியக்கூறு குறித்துப் பேசும் துணிச்சலான பாணியால் இது அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

மேலும், வெளிப்புற ஆக்கிரமிப்பானது வர்க்கப் போரின் தீவிரத்துடன் கைகோர்த்து செல்கிறது. தெற்காசியாவில் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப்பிணைந்துள்ள இனவெறியையும், வகுப்புவாதத்தையும் தூண்டிவிடுவதன் மூலம், இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் உலகளாவிய மூலதனத்தை ஈர்ப்பதற்காக தொழிலாளர் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்தும் தங்கள் உந்துதலுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் அச்சுறுத்தி மௌனமாக்க முயல்கின்றன.

உலகெங்கிலும் போலவே, தெற்காசியாவிலும் தீர்க்கமான பிரச்சினை என்னவெனில், போருக்கு எதிரான எதிர்ப்பை சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடன் இணைக்கும், ஒரு உலகளாவிய, தொழிலாள வர்க்கத் தலைமையிலான போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதாகும் - அதாவது, சோசலிசத்திற்காக ஒரு அரசியல் தாக்குதலை முன்னெடுப்பதாகும்.

Loading