முன்னோக்கு

ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

பீல்ட் மார்ஷல் வில்ஹெல்ம் கீட்டல் ஜேர்மன் இராணுவத்தின் நிபந்தனையற்ற சரணடைதலில் கையெழுத்திடுகிறார், மே 8, 1945

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 80 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவுகூரல்கள் உலகப் போர் மற்றும் பாசிசத்தின் மீள்வருகையின் மத்தியில் நடைபெற்று வருகின்றன.

1945 மே 8-9 இரவு பேர்லினில் ஜேர்மன் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதிகள் சரணடைவதற்கு ஒப்புதல் அளித்தபோது, அந்த நகரம் இடிந்து சிதைந்து கிடந்தது. ஜேர்மன் இராணுவம் ஒரு தீர்க்கமான தோல்வியைச் சந்தித்தது. இடிபாடுகளில், நேச நாட்டுப் படைகள் மனிதகுலத்திற்கு எதிராக நாஜிக்கள் மேற்கொண்ட கொடூரமான குற்றங்களுக்கான ஆதாரங்களை கண்டுபிடித்தனர்.

நாஜிக்கள் சரணடைவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான், செம்படை சிப்பாய்கள் பேர்லினுக்கு அருகிலுள்ள சாக்சன்ஹவுசன் சித்திரவதை முகாமையும், ஆயிரக்கணக்கான நாஜி எதிர்ப்புப் போராளிகள் கொல்லப்பட்டிருந்த பேர்லின்-புளோட்ஸென்சி சிறையையும் விடுவித்திருந்தனர். அங்கு அவர்கள் எதிர்கொண்ட காட்சிகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிகவும் கொடூரமானவை.

இரண்டாம் உலகப் போரின் போது 55 மில்லியன் பொதுமக்கள் உட்பட 70 முதல் 85 மில்லியன் பேர்கள் கொல்லப்பட்டனர். நாஜிக்கள் மேற்கொண்ட அழித்தொழிப்பு போரில் 27 மில்லியன் சோவியத் குடிமக்களின் உயிர்கள் பலியாகின. மேலும், யூத இனப்படுகொலையில் 6 மில்லியன் யூதர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டு வீசியதைத் தொடர்ந்து ஜப்பான் சரணடைந்ததுடன், நான்கு மாதங்களுக்குப் பின்னர் ஒட்டுமொத்தமாக போர் முடிவுக்கு வந்தது.

இன்று தீவிரமடைந்து வரும் உலகளாவிய மோதல் நிலைமைகளின் கீழ் “ஐரோப்பிய வெற்றி தினத்தின்” (V-E Day) நினைவுகூரல் அனுசரிக்கப்படுகிறது. இன்று உலகம் வெறுமனே உலகப் போரின் விளிம்பில் மட்டும் இல்லை, அதற்கான ஆரம்பக் கட்டங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டன. தற்போதைய மோதல் மண்டலங்கள் மற்றும் வெடிப்புப் புள்ளிகள் ஐரோப்பாவில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் ஆசியா வரையிலும், ஆர்க்டிக் மற்றும் விண்வெளி வரையிலும் கூட நீண்டு செல்கின்றன.

உக்ரேனில், அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும், ரஷ்யாவை பலவீனப்படுத்தி துண்டுதுண்டாக்கும் நோக்கில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய தரைவழிப் போரை நடத்தி வருகின்றன. இப்போது அதன் மூன்றாவது ஆண்டில், இந்த மோதல் ஏற்கனவே 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளது அல்லது காயப்படுத்தியுள்ளது. ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், ஐரோப்பிய சக்திகள் உக்ரேனுக்குள் நேரடியாக தரைப்படை துருப்புகளை நிலைநிறுத்துவது குறித்து பகிரங்கமாக விவாதித்து வருகின்றன. இந்த நகர்வு பினாமிப் போரை ஒரு முழு அளவிலான ஐரோப்பிய மோதலாக அதிகரிக்க அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையாகும்.

சமீபத்திய நாட்களாக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இராணுவ மோதல்கள் கூர்மையாக அதிகரித்துள்ளன. இந்தியப் படைகள் புதனன்று காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்குள் உள்ள இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தின. இந்த அபிவிருத்திகள் அப்பிராந்தியத்திற்கும் உலகிற்கும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன், இரண்டு அணுஆயுத அரசுகளுக்கு இடையே ஒரு முழு அளவிலான போரைத் தூண்டவும் அச்சுறுத்துகின்றன.

தெற்காசியாவில் அதிகரித்து வரும் மோதலுக்குப் பின்னால், தாய்வானை மையமாகக் கொண்டு, சீனாவிற்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பரந்த இராணுவ கட்டமைப்பு உள்ளது. ஜப்பான், தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் உடனான கூட்டு இராணுவ ஒத்திகைகள், தைபேக்கு ஆயுத ஏற்றுமதிகளை விரிவுபடுத்துவதுடன் இணைந்து, சீனாவை இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் வாஷிங்டனின் மூலோபாயத்தின் பாகமாக உள்ளன.

தைவான் தொடர்பாக சீனாவுடன் போர் தொடுக்க அமெரிக்கா அதிகரித்தளவில் அச்சுறுத்தி வருகிறது. இது சாத்தியக்கூறு என்பதுக்கும் அப்பால், தவிர்க்க முடியாதது. முன்னாள் நேட்டோவின் கூட்டு இராணுவத் தலைமைத் தளபதி ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஸ் சமீபத்தில் “பெய்ஜிங்குடனான ஒரு உண்மையான துப்பாக்கிச் சண்டைக்கு நாம் இன்று இருப்பதைப் போல, நாங்கள் நெருக்கமாக இருந்ததாக நான் ஒருபோதும் உணரவில்லை” என்று எச்சரிக்கை விடுத்தார்.

சீனா மீதான ஓர் உலகளாவிய வர்த்தகப் போரை அதன் நிகழ்ச்சி நிரலின் ஒரு மத்திய தூணாக அறிவித்துள்ள பாசிச ட்ரம்ப் நிர்வாகம், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டுடன் ஒரு “வெளிப்படையான போருக்கு” செயலூக்கத்துடன் தயாரிப்பு செய்து வருகிறது. வாங்கும் திறன் சமநிலை மூலம் அளவிடப்படுகையில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏற்கனவே அமெரிக்காவை விஞ்சிவிட்டது. இது அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மூலோபாய அச்சங்களை தீவிரப்படுத்தியுள்ளது.

கனடா, கிரீன்லாந்து, பனாமா கால்வாய் மற்றும் காஸாவை அமெரிக்காவின் பிரதேசங்களாக இணைக்கும் ட்ரம்பின் திட்டத்தை இந்த சூழலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிராந்தியங்கள், பனாமா கால்வாய், செங்கடல் மற்றும் ஹோர்முஸ் வளைகுடா மற்றும் வட கடல் பாதை போன்ற மூலோபாய உலகளாவிய வர்த்தக தடை முனைகளை உள்ளடக்கி உள்ளன என்பதோடு, அவற்றைக் கைப்பற்றுவது அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு பரந்த மூலோபாயத்தின் பாகமாக இருக்கிறது.

நாஜி ஆட்சியின் குற்றங்கள் அம்பலப்படுத்தப்பட்டு எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், பாசிசத்துடன் தொடர்புடைய மிகவும் கொடூரமான அட்டூழியங்கள் மீண்டுமொருமுறை இயல்பாக்கப்பட்டு வருகின்றன. இது அனைத்திற்கும் மேலாக காஸா மீதான இனப்படுகொலையில் தெளிவாக உள்ளது. இது அப்பிராந்தியம் முழுவதிலும் தீவிரமடைந்து வரும் போரின் பாகமாக உள்ளது. ஏகாதிபத்திய சக்திகள் - தங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒரு “புதிய மத்திய கிழக்கை” உருவாக்குவதாக சூளுரைத்துள்ள நிலையில் - பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய அரசின் இனப்படுகொலைத் தாக்குதலில் உடந்தையாக இருப்பது மட்டுமல்லாமல், அவற்றை மேற்பார்வை செய்து கொண்டிருக்கின்றன.

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 7, 2023 முதல் 50,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும் உண்மையான இறப்பு எண்ணிக்கை 100,000 ஐ நெருங்கக்கூடும். இரண்டு மாதங்களுக்கும் மேலாக உணவு, தண்ணீர் அல்லது எரிபொருள் அனுமதிக்கப்படாமல், காஸா திட்டமிட்டு பட்டினிக்கு உள்ளாக்கப்படுகிறது. இங்கு குறைந்தது 10,000 பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெதன்யாகுவுக்கு நெருக்கமான ஒரு வலதுசாரி ஒளிபரப்பாளருடன் தொடர்புடைய, இஸ்ரேலிய தொலைக்காட்சி தயாரிப்பாளர் எலாட் பராஷி, காஸாவில் விஷவாயு அறைகள் மற்றும் நாடுகடத்தல் இரயில்களை அறிமுகப்படுத்த சமீபத்தில் அழைப்பு விடுத்தார். “ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்—எந்த வகையிலும், நாம் அவர்களுக்கு எதிராக ஒரு ஷோவாவை [இனப்படுகொலை] நடத்த வேண்டும்.” பாரிய படுகொலைக்கான இத்தகைய அழைப்புகள் இனப்படுகொலையின் தர்க்கத்தையே பகிரங்கமாக அம்பலப்படுத்துகின்றன.

தீவிரமடைந்து வரும் உலகப் போர், இப்போது ட்ரம்பின் வழிகாட்டுதலின் கீழ், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஏகாதிபத்திய சக்தியும் வேகமாக மீள்ஆயுதபாணியாகி வருகின்றன. உலகளாவிய இராணுவ செலவுகள் கடந்த ஆண்டு 2.7 ட்ரில்லியன் டாலருக்கு அதிகரித்தன. இது 1988 இல் புள்ளிவிவரங்கள் தொடங்கியதிலிருந்து இதுவரை பதிவு செய்யப்படாத மிக உயர்ந்த மட்டமாகும்.

இராணுவ செலவினங்களில் மிகப்பெரிய சதவீத அதிகரிப்புகள் ஜேர்மனி மற்றும் ஜப்பானில் இருந்து வந்தன. ஜேர்மனியின் இராணுவ செலவினம் 2024 இல் 88.5 பில்லியன் டாலராக உயர்ந்து, அதை உலகின் நான்காவது பெரியதாகவும் ஐரோப்பாவில் மிக உயர்ந்ததாகவும் ஆக்கியது. இது 2023 ஆம் ஆண்டை விட 28 சதவீத அதிகரிப்பாகும், மேலும் 2015 முதல் 89 சதவீத அதிகரிப்பாகும்.

பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன், ஜேர்மனியின் புதிய அரசாங்கம், தேர்தலுக்கு முன்னர் பாசிச ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியுடன் (AfD) ஒத்துழைத்த பிரெடெரிக் மெர்ஸ் தலைமையில் அமைந்துள்ளது. அது, இப்போது இராணுவச் செலவினங்களை வானளாவிய உயரங்களுக்கு செலுத்த தயாரிப்பு செய்து வருகிறது. ஜேர்மனியின் உள்கட்டமைப்பை போருக்கு பொருத்தமானதாக மாற்ற 500 பில்லியன் யூரோ சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் அதன் இராணுவ செலவினங்களை 2024 இல் 21 சதவீதம் அதிகரித்து, 1958 க்குப் பின்னர் தேசிய செலவினங்களில் மிக உயர்ந்த பங்கை இராணுவத்திற்கு ஒதுக்கியது.

ஏகாதிபத்திய சக்திகளின் தீவிர மறுஆயுதமயமாக்கல் “தேசிய பாதுகாப்பு” என்ற பதாகையின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த முழக்கத்திற்குப் பின்னால், சமரசம் செய்ய முடியாத முரண்பாடுகளை எதிர்கொள்ளும் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் மிருகத்தனமான நலன்கள் உள்ளன. மாபெரும் புரட்சியாளரான லியோன் ட்ரொட்ஸ்கி, இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக, போரும் நான்காம் அகிலமும் என்ற புத்தகத்தில் பின்வருமாறு விளக்கினார்:

நவீன முதலாளித்துவத்தில் இருந்து பிரிக்கவியலாத, கடந்த ஏகாதிபத்திய போரைத் தூண்டிய அதே காரணங்கள், இப்போது 1914 இன் நடுப்பகுதியில் இருந்ததை விட எண்ணற்ற பதட்டத்தை எட்டியுள்ளன. ஒரு புதிய போரின் விளைவுகள் குறித்த பயம் மட்டுமே ஏகாதிபத்தியத்தின் விருப்பத்தைத் தடுக்கும் ஒரே காரணியாகும். ஆனால், இந்தத் தடையின் செயல்திறன் குறைவாகவே உள்ளது. உள்முரண்பாடுகளின் அழுத்தம், ஒன்றன்பின் ஒன்றாக நாடுகளை பாசிசத்தை நோக்கிய பாதைக்குத் தள்ளுகிறது. பாசிசம் தன் பங்கிற்கு சர்வதேச வெடிப்புகளைத் தயாரிப்பதன் மூலம் மட்டுமே அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். அனைத்து அரசாங்கங்களும் போருக்கு அஞ்சுகின்றன. ஆனால், எந்த அரசாங்கத்திற்கும் தேர்வு செய்யும் சுதந்திரம் இல்லை. பாட்டாளி வர்க்கப் புரட்சி இல்லாமல், ஒரு புதிய உலகப் போர் தவிர்க்க முடியாதது.

இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்த முதலாளித்துவ முரண்பாடுகள் நாஜி ஜேர்மனியின் தோல்வியால் தீர்க்கப்படவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கம் பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான நேரடி மோதலை தற்காலிகமாக அடக்கிய போதிலும், இந்த ஸ்திரமற்ற சமநிலை 1970 களில் அவிழ்க்கத் தொடங்கியது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்புடன் உலகின் பரந்த பகுதிகள் மீண்டும் மூலதனத்திற்கு அணுகக்கூடியதாக மாறியபோது, ​​பழைய மோதல்கள் உச்சத்திற்கு வந்து, இப்போது புதிய பரிமாணத்தைப் பெற்றன. இரண்டு உலகப் போர்களுக்கு வழிவகுத்த அதே முரண்பாடுகள் இவைதான்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் இந்த ஆண்டு இடம்பெற்ற மே தினப் பேரணியில் பின்வருமாறு விளக்கினார்:

அரசியல் காட்டுமிராண்டித்தனம் மற்றும் பேரழிவு தரும் உலகளாவிய போருக்குள் இறங்குவதற்கான அத்தியாவசிய காரணங்கள், கடந்த நூற்றாண்டில் போர் மற்றும் பாசிசத்திற்கு வழிவகுத்த முதலாளித்துவ ஆட்சியின் அதே பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகளாகும். இந்த ஒன்றோடொன்று தொடர்புடைய முரண்பாடுகள், முதலில், உலகப் பொருளாதாரம் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புடன் பொருந்தாத தன்மையாகும்; இரண்டாவதாக, பண வெறி கொண்ட தன்னலக்குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் உற்பத்தி சக்திகளின் முதலாளித்துவ தனியார் உடமையின் சமூக அழிவுகரமான தன்மை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை உள்ளடக்கிய பில்லியன் கணக்கான மக்களின் உழைப்பை உள்ளடக்கிய சமூக உற்பத்தி ஆகியவையாகும்.

அனைத்து சமூக செல்வ வளங்களையும் உருவாக்கிவரும், போர் மற்றும் நெருக்கடிகளின் முழுச் சுமையையும் சுமந்து செல்லும் சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஒரு புதிய பேரழிவைத் தடுக்கும் திறனைக் கொண்டுள்ளது.

தொழிற்சங்கங்களின் எந்திரத்தால் ஆதரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படும் தேசியவாதம், போர் மற்றும் வர்த்தகப் போரின் வளர்ச்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை தொழிலாளர்கள் முன்நிறுத்த வேண்டும். இராணுவவாதத்தின் புத்துயிரூட்டலுக்காகவும் வரலாற்றின் இழிவான பொய்மைப்படுத்தல்களுக்காகவும் நினைவு தினங்களை வெறுக்கத்தக்க வகையில் சுரண்டுவதை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். அத்துடன் உலகப் போரின் கொடூரங்கள் குறித்த அவர்களின் சொந்த நினைவுகூரல்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்: முதலாளித்துவம் காட்டுமிராண்டித்தனத்திற்கு இட்டுச் செல்கிறது, மேலும் உலக சோசலிசக் குடியரசுக்காக தொழிலாள வர்க்கத்தின் பாரிய இயக்கத்தால் அதைத் தூக்கியெறிவதன் மூலம் மட்டுமே இதைத் தடுக்க முடியும்.

இதனால்தான் சோசலிச சமத்துவக் கட்சியையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் கட்டியெழுப்புவது மிக அவசரமான பணியாக உள்ளது. ட்ரொட்ஸ்கி உலக நிலைமை குறித்த அவரது மார்க்சிச புரிதலின் அடிப்படையில், இரண்டாம் உலகப் போர் குறித்து எச்சரிக்கை விடுத்தது போலவே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் இன்று ஆபத்து எச்சரிக்கை மணியை ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் அந்த எச்சரிக்கை அப்படியே இருக்கிறது: ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சி இல்லாமல், ஒரு புதிய உலகப் போர் தவிர்க்க முடியாதது.

Loading