இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
2025 சர்வதேச மே தின இணையவழிப் பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் ஆற்றிய உரையின் காணொளி மற்றும் உரையை WSWS இங்கே பதிவேற்றுகிறது.
ஆளும் வர்க்கங்கள் பாசிசம், சர்வாதிகாரம் மற்றும் போரை நோக்கித் திரும்பும் நிலையில், அசாதாரணமாக தீவிரமடையும் முதலாளித்துவத்தின் உலக நெருக்கடியின் மத்தியிலேயே இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
வேறு எந்த நாட்டையும் விட, அமெரிக்காவிலேயே இந்த தீவிரம் காணப்படுகிறது. தனது இரண்டாவது பதவிக்காலத்தில் நூறு நாட்கள் கழித்து, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி பதவியை சர்வாதிகாரத்தின் கட்டுப்பாடற்ற கருவியாக மாற்ற முயல்கிறார்.
அமெரிக்க முதலாளித்துவத்தின் குற்றவியல் பண்பின் பிம்பமாக, ட்ரம்ப், தன்னலக் குழு மற்றும் கலாச்சார சீரழிவை அரவனைத்துக்கொண்டு, இப்போது வெள்ளை மாளிகையிலிருந்து ஆட்சி செய்யும் அரசியல் பாதாள உலக கோஷ்டியின் உருவகமாக இருக்கின்றார்.
தனது நிர்வாகத்தின் முதல் மூன்று மாதங்களில், ட்ரம்ப் நீதிமன்ற உத்தரவுகளை மீறி, புலம்பெய்ர்ந்துள்ள மாணவர்களை சட்டவிரோதமாக நாடுகடத்த மத்திய அரச முகவர்களை நியமித்து, நீதிபதிகளைக் கைது செய்து, அரசியல் எதிர்ப்பிற்கு விரோதமாக ஒரு போரை முன்னெடுத்துள்ளதுடன், அமெரிக்க பிரஜைகளை வெளிநாடுகளில் உள்ள வதை முகாம்களுக்கு நாடு கடத்தும் தனது நோக்கத்தை அறிவித்துள்ளார்.
மிகவும் கொடூரமான சர்வாதிகாரங்களுடன் தொடர்புடைய காட்சிகள் இப்போது தினமும் காட்சிக்கு வருகின்றன. அந்நிய எதிரிகள் சட்டத்தின் கீழ் பெருமளவில் புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் மேரிலாந்தில் வசிக்கும் கில்மர் அப்ரிகோ கார்சியாவும் ஒருவர். அவர் அவரது குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு எல் சால்வடாரில் 'தவறாக' சிறையில் அடைக்கப்பட்டார். காசா இனப்படுகொலைக்கு எதிராக ஒரு தலையங்கக் கட்டுரை எழுதியதற்காக, முகமூடி அணிந்த முகவர்களால் தெருவில் கைதுசெய்யப்பட்ட டஃப்ட்ஸ் பல்கலைக்கழக மாணவி ருமேசா ஓஸ்டுர்க்; ட்ரம்பின் நிர்வாக உத்தரவுகளை எதிர்த்ததற்காக கார்னலில் வசிக்கும் மொமோடூ தால் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்; மற்றும் கொலம்பியாவில் கிரீன் அட்டை வைத்திருப்பவரான மஹ்மூத் கலீல், கைது உத்தரவு இல்லாமல் கைது செய்யப்பட்டு அவரது அரசியல் கருத்துக்களுக்காக நாடுகடத்தலை எதிர்கொண்டார்.
வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவின் ஒரு குறிப்பில், கலீல் தனது 'கடந்த கால, தற்போதைய அல்லது எதிர்பார்க்கும் நம்பிக்கைகளுக்காக' நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார். முதலில் நாஜிக்களால் வடிவமைக்கப்பட்ட இந்த 'சிந்தனை குற்றம்', இப்போது ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகையால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
அதே நேரம், ட்ரம்ப் நிர்வாகமானது. இப்போது இன அழிப்புக்கான இறுதி கட்டத்தில் உள்ள, காசாவில் இனப்படுகொலையின் தொடர்ச்சி முதல் ஈரான், சீனா மற்றும் அதற்கு அப்பால் போருக்கான தயாரிப்புகள் வரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய போர்களை அதிகரித்து வருகிறது. 'அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது' என்ற பதாகையின் கீழ் தொடங்கப்பட்ட ட்ரம்பின் வர்த்தகப் போர், உலக ஆதிக்கத்திற்கான மிகப் பெரிய பிரச்சாரத்தின் பொருளாதார களமுனையாகும்.
அமெரிக்க சமூகத்தின் பெருந்தனவந்த குணாம்சத்துக்கு ஏற்ப, முதலாளித்துவ அரசின் வன்முறையான மறு அணிசேர்வை நாம் காண்கிறோம். உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்க செயல்திறன் துறை என்று அழைக்கப்படும் திணக்களமானது மத்திய அரச தொழிலாளர்களை பெருமளவில் வேலை நீக்கம் செய்து, முழு நிறுவனங்களையும் கலைத்து வருகிறது. மருத்துவ பராமரிப்பு, மருத்துவ உதவி மற்றும் சமூகப் பாதுகாப்பு உட்பட சமூகத் திட்டங்கள் வெட்டப்படுகின்றன. விஞ்ஞானம் மற்றும் பொது சுகாதாரம் இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
கடந்த ஆண்டு, அமெரிக்காவில் உள்ள 19 பணக்கார குடும்பங்கள் தங்கள் செல்வத்தை 1 டிரில்லியன் டொலர்களால் அதிகரித்துக்கொண்டுள்ளன. அது அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு தொழிலாளிக்கும் 7,000 டொலர்கள் சம்பளம் உயர்த்த போதுமானது. இதன் மூலம் பொதுக் கல்விக்கான ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க முடியும். இந்த தொகையில் வீடற்ற நிலையை ஒரே இரவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும். அதற்கு பதிலாக, இந்த பரந்த செல்வமானது போருக்கும் நாடுகடத்தல் முகாம்களை அமைக்கவும், பங்குச் சந்தைக்கும் மற்றும் பணக்காரர்களின் பைகளுக்கும் போய் சேருகிறது.
ஒரு புதிய முன்னோக்கி செல்லும் பாதை அவசியம். ஜனநாயகக் கட்சிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்காமல் ட்ரம்பிற்கு எதிரான போராட்டத்தை நடத்த முடியாது. ஜனநாயகக் கட்சியே ட்ரம்ப்பின் ஒவ்வொரு முன்நகர்வும் வெற்றிபெற உதவியது. பைடன் நிர்வாகமும் அதன் வலதுசாரி போர் மற்றும் பிற்போக்கு திட்ட நிரலுமே ட்ரம்ப் மீண்டும் தேர்வாவதற்கு வழி வகுத்தன. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரை தீவிரப்படுத்துவதே ஜனநாயகக் கட்சியின் பிரதான கவனமாக இருந்த அதே நேரம், உள்நாட்டில் அது வரலாற்று சமத்துவமின்மையை உருவாக்கிவிட்டது.
காசாவில் இஸ்ரேலிய ஆட்சியின் இனப்படுகொலைக்கும், லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களைப் படுகொலை செய்வதற்கும் ஆயுதம் கொடுத்து நிதியளித்தவர் பைடனே ஆவார். இனப்படுகொலையை எதிர்க்கும் மாணவர் போராட்டக்காரர்களை பெருமளவில் ஒடுக்கத் தொடங்கியவரும் பைடனே ஆவார். ட்ரம்ப் அரசியலமைப்பின் மீது தாக்குதல் தொடுக்கும் போது அதை எதிர்க்காமல், ஜனநாயகக் கட்சியினர் அவருடன் ஒத்துழைத்தனர். ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஜனநாயகக் கட்சி வெள்ளை மாளிகையில் அவரை வரவேற்று அவருக்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்ததுடன் அவரது ஆட்சிக்கு தடையற்ற நிதி கிடைக்கச் செய்வதாகவும் உறுதியளித்தனர்.
பெர்னி சாண்டர்ஸ் மற்றும் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் போன்ற நபர்களைப் பொறுத்தவரை, அவர்கள் பெருந்தனவந்த குழுக்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள், முதலாளித்துவத்தைப் பற்றி பேசுவதில்லை. ஆளும் வர்க்கம், சர்வாதிகாரத்திற்குத் திரும்புகின்ற நிலையில், அவர்களின் வேலைத் திட்டமானது திவாலான சமூக மற்றும் பொருளாதார அமைப்பின் விளிம்புகளை சரி செய்வதன் மூலம் நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என்பது போல், நிதி சீர்திருத்தத்திற்கான பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஜனநாயகக் கட்சியில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டுமென தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அவர்கள் வலியுறுத்த விரும்புகிறார்கள்.
அதனது அதிகாரத்தை உடைக்காமல் பெருந்தனவந்த குழுவை எதிர்த்துப் போராடுவது சாத்தியமற்றது. இதன் அர்த்தம், பில்லியனர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தல் ஆகும் -அவர்களின் செல்வத்தைக் கைப்பற்றுவதோடு தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக சமூகத்தை சோசலிச முறையில் மறுசீரமைத்தல் வேண்டும். செய்ய வேண்டியது என்னவென்றால், அரசு எந்திரத்திற்குள் இருப்பவர்களுக்கு தார்மீக வேண்டுகோள்கள் விடுப்பது அல்லது அரசியல் சூழ்ச்சி உபாயங்களை கையாள்வது அல்ல, மாறாக வெகுஜன, புரட்சிகர போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதாகும்.
அந்தப் போராட்டம், அனைத்துலகவாதத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும். அமெரிக்கத் தொழிலாளர்கள், உலகின் மிகவும் சக்திவாய்ந்த சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியாகும். உலகம் முழுவதும், வெகுஜன வறுமை, போர், சர்வாதிகாரம் போன்ற ஒரே மாதிரியான நிலைமைகளே காணப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும், ஆளும் வர்க்கங்கள் தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் மோதலுக்குள் இழுத்துவிட முயற்சிக்கின்றன.
அமெரிக்காவில், இந்த நச்சு தேசியவாதம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் ஊக்குவிக்கப்படுகிறது. இதில் தங்களை 'சீர்திருத்தவாதிகள்' என்று காட்டிக்கொள்பவர்களும் அடங்குவர். அவர்களில், பைடனின் மிகவும் தீவிரமான ஊக்குவிப்பாளரான ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத் (UAW) தலைவர் ஷான் ஃபைன், இப்போது ட்ரம்பின் வரி சுமத்தல்களை வெளிப்படையாக ஆதரித்து, தொழிலாளர்களை போர் இயந்திரத்தின் பின்னால் இழுத்துவிடத் தயாராகி வருகிறார்.
சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமெரிக்கப் புரட்சியையும் பிரிட்டிஷ் முடியாட்சிக்கு எதிரான போராட்டத்தையும் தொடங்கிய லெக்சிங்டன் மற்றும் கொன்கோர்ட் போர்களின் 250 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடினோம். இரண்டாம் அமெரிக்கப் புரட்சிக்கு தலைமை தாங்கி, அடிமை உடமையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்ததன் மூலம் அடிமைத்தனத்தை ஒழித்த ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்டு 160 வது ஆண்டு நிறைவையும் நாங்கள் நினைவு கூர்ந்தோம்.
நமது காலத்தின் மகத்தான பணி, தன்னலக் குழுவின் சர்வாதிகாரத்தைத் தூக்கியெறிந்து, முதலாளித்துவத்தை ஒழித்து, சமூக சமத்துவத்தையும் பொருளாதார வாழ்க்கையின் ஜனநாயகக் கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதையும் அடிப்படையாகக் கொண்ட, ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவுவதற்கான மூன்றாவது அமெரிக்கப் புரட்சியை -உலகப் புரட்சியின் பாகமாக சோசலிசப் புரட்சியை- முன்னெடுப்பதாகும்.
இதை முன்னெடுத்துச் செல்ல, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு வேலைத்திட்டம், மூலோபாயம் மற்றும் வரலாற்றின் படிப்பினைகளுடன் ஆயுதபாணியாக்கப்பட்ட அதன் சொந்தக் கட்சி அவசியமாகும். அந்தக் கட்சி உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகும்.
சோசலிச சமத்துவக் கட்சியில் சேருங்கள்! சோசலிசத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும், எதிர்காலத்திற்காகவும் போராடுங்கள்.