மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை NBC தொலைக்காட்சியில் இடம்பெற்ற Meet the Press நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு அசாதாரண நேர்காணலில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக, அரசியலமைப்பை தாங்கிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் பலமுறை பிரகடனம் செய்தார்.
“நீங்கள் ஜனாதிபதியாக அமெரிக்காவின் அரசியலமைப்பை நிலைநிறுத்த வேண்டாமா?” என்ற கேள்விக்கு “எனக்குத் தெரியாது” என்று ட்ரம்ப் பதிலளித்தார்.
அரசியலமைப்பின் கீழ் அமெரிக்காவில் “அனைத்து மக்களுக்கும்” உரிய நடைமுறைக்கு உரிமை உள்ளவர்களா என்பது குறித்து நெறியாளர் கிறிஸ்டென் வெல்கர் அழுத்தம் கொடுத்து கேட்டபோது, ட்ரம்ப் மீண்டும் “எனக்குத் தெரியாது. நான் வக்கீல் இல்லை” என்று பதிலளித்தார்.
இந்தப் பரிமாற்றத்தில், ட்ரம்ப், பல வார்த்தைகளில், ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை பிரகடனப்படுத்துகிறார். அரசியலமைப்பை - அதனுடன் சேர்ந்து அனைத்து ஜனநாயக உரிமைகளையும் - தனது சொந்த விருப்பத்துக்கு வழங்கப்பட்டதாகவோ அல்லது பறிக்கப்பட்டதாகவோ கருதும் ஒரு அரசியல் குற்றவாளியால் அமெரிக்கா வழிநடத்தப்படுகிறது.
அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட இந்த உரிமைகள் யாவை? அவற்றில் அரசியலமைப்பின் முதல் பத்து திருத்தங்களும் அடங்கும். இது உரிமைகள் மசோதா என்றும் அழைக்கப்படுகிறது. இவை அரசாங்க அதிகாரத்திலிருந்து தனிமனித சுதந்திரத்தின் பாதுகாப்பை விவரிக்கின்றன. இவற்றில், பேச்சு மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம், மனசாட்சி சுதந்திரம், ஒரு கிரிமினல் வழக்கில் தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அறிந்து கொள்வதற்கான தனிநபரின் உரிமை, தங்கள் சகாக்களின் நடுவர் மன்றத்தின் முன் விரைவான பொது விசாரணைக்கான உரிமை, பொலிஸ் சோதனைகள் மற்றும் கைதுகளில் இருந்து ஒருவரின் சொந்த வீட்டில் பாதுகாப்பாக இருப்பதற்கான உரிமை மற்றும் சித்திரவதையில் இருந்து சுதந்திரம் ஆகியவை அடங்கும்.
அடிமைத்தனத்தை தடை செய்தல் (13 வது திருத்தம்), மாநில அரசாங்கங்களிடமிருந்து உரிய செயல்முறை பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பிறப்புரிமை குடியுரிமையை உறுதி செய்தல் (14 வது திருத்தம்) மற்றும் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாத்தல் (15 வது திருத்தம்) போன்ற மாபெரும் உள்நாட்டுப் போர் திருத்தங்களும் அரசியலமைப்பில் அடங்கும்.
ட்ரம்ப் அரசியலமைப்பிற்கு தான் கட்டுப்பட்டவர் அல்ல என்று அறிவிப்பதன் மூலம், அமெரிக்க மக்கள் 250 ஆண்டுகால போராட்டங்களின் மூலமாக வென்றிருப்பதாக நம்பும் எந்த உரிமைகளும் அவர்கள் கொண்டிருக்கவில்லை என்றும், தமது விருப்பப்படி சித்திரவதையைத் திணிக்கவும், அரசியல் எதிரிகளை நாடுகடத்தவும், அடிமைத்தனத்தை ஒழிப்பதைக் கூட மாற்றியமைக்கவும் முடியும் என்றும் அவர் நம்புவதாக ட்ரம்ப் வலியுறுத்துகிறார்.
ஒரேயொரு உதாரணத்தை எடுத்துக் கொண்டால், நெறியாளர் வெல்கரின் கேள்வி வரிசையின் தொடக்கப் புள்ளியான உரிய நடைமுறை விதி ஐந்தாவது திருத்தத்தில் காணப்படுகிறது. இது அரசாங்கத்தின் பொலிஸ் அதிகாரங்களைக் கண்டிப்பாக கட்டுப்படுத்துகிறது. “எந்தவொரு நபரும் ... சட்டத்தின் உரிய நடைமுறை இல்லாமல் உயிர், சுதந்திரம் அல்லது சொத்துக்களை பறிக்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கிறது”. இந்த வார்த்தைகள் குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை.
ஆனால் மாடிசனும், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களும் கவனமாகப் படித்துத் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் ட்ரம்பிற்கு எந்த அர்த்தத்தையும் தராது. ஐந்தாவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் வெளிப்படையாக உரிய நடைமுறைக்கு கடமைப்பட்டவர்களாக இருக்கும் குடியுரிமை பெறாத புலம்பெயர்ந்தவர்களை மட்டுமல்ல, அனைவரையும் எல் சால்வடோர் சித்திரவதை முகாம்களுக்கு நாடுகடத்துவதற்கு அவர் செயலூக்கத்துடன் சதித்திட்டம் தீட்டி வருகிறார். மாறாக, அமெரிக்க பிரஜைகளை “உள்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள்” என்று அழைப்பதை அவர் கையிலெடுத்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக அவர்களை நாடு கடத்தவும் ட்ரம்ப் சதி செய்து வருகிறார். உண்மையில், ட்ரம்ப் ஏற்கனவே சிறு குழந்தைகள் உட்பட, 4 ஆம் நிலை புற்றுநோயுடன் போராடும் ஒரு குடிமகனை நாடு கடத்தியுள்ளார்.
ட்ரம்பின் கருத்துக்களுக்கு முரணாக, ஒரு ஜனாதிபதியானவர் அரசியலமைப்பை நிலைநிறுத்த வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அத்தகைய உறுதிமொழியின் அடிப்படையில்தான் இந்தப் பதவி நிறுவப்பட்டது என்று ஷரத்து 2 எளிய ஆங்கிலத்தில் கூறுகிறது. ட்ரம்ப் சமீபத்தில் ஜனவரி 20 அன்று தனது பதவியேற்பு விழாவில் ஷரத்து 2 க்கு சத்தியப்பிரமாணம் செய்தார்.
அவர் பைபிளில் கை வைத்து பின்வருமாறு சொன்னார்,:
நான் அமெரிக்க ஜனாதிபதியின் பதவியை விசுவாசமாக நிறைவேற்றுவேன் என்றும், எனது சிறந்த திறனுக்குட்பட்டு, அமெரிக்காவின் அரசியலமைப்பை தற்காத்து பாதுகாப்பேன் என்றும் மனப்பூர்வமாக சத்தியம் செய்கிறேன்.
ஜோர்ஜ் வாஷிங்டன் தனது முதல் பதவிக்காலத்திற்காக ஏப்ரல் 20, 1789 அன்று பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும் ஒரே மாதிரியான பதவிப் பிரமாணத்தை எடுத்து வருகின்றனர். இது ஒரு மோசடி என்று ட்ரம்ப் நினைக்கிறார். 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், எனக்கு ஒரு பிரிவு II உள்ளது, “ஜனாதிபதியாக நான் என்ன வேண்டுமானாலும் செய்ய எனக்கு உரிமை உண்டு” என்று அவர் கூறியிருந்தார்.
அரசியலமைப்பை உருவாக்கிய அமெரிக்கப் புரட்சி இதற்கு நேர்மாறான கோட்பாட்டை நிறுவியது. மன்னர்களாலோ அல்லது அவர்களின் நீதிபதிகளாலோ வழங்கவோ அல்லது பறிக்கவோ முடியாத “பிரிக்க முடியாத” உரிமைகளுடன் மக்கள் பிறக்கிறார்கள் என்ற கருத்தை இது நிறுவியது. அத்தகைய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மட்டுமே “அரசாங்கங்கள் மனிதர்களிடையே நிறுவப்படுகின்றன”, “அவர்களின் நியாயமான அதிகாரங்களை ஆளப்படுபவர்களின் ஒப்புதலிலிருந்து பெறப்படுகின்றன” என்று ஜெபர்சன் கூறுகிறார். இந்த விடயங்கள் குறித்த ட்ரம்பின் பார்வையில், பிரான்சின் சர்வ வல்லமை தாங்கிய பதினான்காம் லூயியின் பாணியில், மன்னரின் விருப்பப்படி உரிமைகள் வழங்கப்படுகின்றன அல்லது பறிக்கப்படுகின்றன. ட்ரம்ப் பதினான்காம் லூயியுடன் இதில் முழுமையாக உடன்படுவார்: L’État, c’est moi! (அரசு, நான்தான்!)
ஒரு முடியாட்சியில், இறையாண்மை அதிகாரம் இறுதியில் கிரீடத்தில் தங்கியுள்ளது. இது, திருச்சபையின் தெய்வீக ஒப்புதலால் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், அமெரிக்கப் புரட்சியும் பிரெஞ்சுப் புரட்சியும் - முதலில், காலனிகளில் இருந்து மன்னர் ஜோர்ஜ் III க்கு அடிபணிந்த பிணைப்புகளைத் துண்டிப்பதன் மூலமும்; இரண்டாவதாக, மன்னர் பதினாறாம் லூயி இன் தலையை அவரது உடலில் இருந்து துண்டிப்பதன் மூலமும், மன்னர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தன
ட்ரம்ப் கட்டியெழுப்பி வரும் சர்வாதிகாரம் அமெரிக்க மக்களுக்கு மட்டும் ஆபத்தை ஏற்படுத்தவில்லை. அமெரிக்க இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருக்கும் ஜனாதிபதி, போர் மற்றும் அணு ஆயுதங்கள் மீது கட்டுப்பாடற்ற அதிகாரத்தைக் கொண்டுள்ளார். ஒரு அமெரிக்க ஃப்யூரரின் (நாஜித் தலைவர் - Führer) எழுச்சியால் முழு உலகமும் அச்சுறுத்தப்படுகிறது.
“Meet the Press” நிகழ்ச்சியில் ட்ரம்ப் கூறிய கருத்துக்கள் சர்வாதிகாரத்தைப் பற்றிய அவரது முதல் அறிக்கை அல்ல. பிப்ரவரி 25 அன்று, சமூக ஊடகங்களில் பதிவிட்ட அவர், “தனது நாட்டைக் காப்பாற்றுபவர் எந்த சட்டத்தையும் மீறுவதில்லை,” என்று அவரது வரலாற்று ஆதர்சங்களை எதிரொலித்தார்: ஹிட்லர் (”ஃபியூரரின் அதிகாரம் சட்டங்களால் வரையறுக்கப்படவில்லை”), முசோலினி (”அரசுக்குள் எல்லாம், அரசுக்கு வெளியே எதுவும் இல்லை, அரசுக்கு எதிராக எதுவும் இல்லை.”), பினோச்சே (ஆயுதப்படைகள் நாட்டைக் காப்பாற்ற செயல்பட்டன), மற்றும் பிராங்கோ (”என்னால் மட்டுமே ஸ்பெயினைக் காப்பாற்ற முடியும்”).
அமெரிக்க குடியரசு, அதன் 250 வது ஆண்டு நிறைவை நெருங்கி வருகிறது, ஒரு திட்டமிட்ட திட்டத்தின்படி செயல்படும் ஒரு பாசிச சதிக்கூட்டத்தால் படிப்படியாக அது விழுங்கப்பட்டு வருகிறது. எச்சரிக்கை விளக்குகள் சிவப்பு நிறத்தில் ஒளிர்கின்றன:
- ட்ரம்பின் ஞாயிற்றுக்கிழமை நேர்காணல், நீண்டகால பாசிச உதவியாளரான ஸ்டீபன் மில்லரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிப்பதை பரிசீலித்து வருவதாக அவர் அறிவித்ததை ஒத்திருக்கிறது. சமீபத்திய வலதுசாரி போட்காஸ்ட் ஒன்றில், மில்லர் நீதிபதிகளை “தீவிர இடதுசாரிகள்” என்று அச்சுறுத்தியதுடன், தீவிர வலதுசாரி உச்ச நீதிமன்றம் இணங்கத் தவறினால்கூட அதையே ட்ரம்பால் புறக்கணிக்க முடியும் என்று எச்சரித்தார். “ஜனாதிபதியிடம் உள்ளார்ந்த அதிகாரங்கள் மற்றும் பலம் தொடர்பாக வேறு பல விருப்பங்கள் உள்ளன, அவற்றை நான் இங்கு குறிப்பிட மாட்டேன்” என்று மில்லர் கூறினார்.
- நீதிமன்ற தீர்ப்புகள் தங்களுக்குப் பொருந்தும்போது மட்டுமே அது பின்பற்றப்படும் என்று ட்ரம்பும் அவரது ஆலோசகர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர் - இது நீதித்துறை சுதந்திரத்தை வெளிப்படையாக நிராகரிப்பதாகும்.
- ட்ரம்ப் தனது முதல் 100 நாட்களில் 142 நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பித்து, சட்டமன்ற அதிகாரத்தை நிர்வாக அதிகாரத்தின் கீழ் ஒருங்கிணைத்து, ஆணை மூலம் ஆட்சி செய்கிறார். இந்த உத்தரவுகள் மிகப்பெரும் சமூக வெட்டுக்களைத் திணித்து, அடிப்படை ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்துள்ளன.
- அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையினர் (ICE) மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு முகவர்கள் இப்பொழுது வெள்ளை மாளிகையின் தனிப்பட்ட அதிரடி துருப்புக்களாக செயல்பட்டு புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் சட்டபூர்வமாக வசிப்பவர்களை இலக்கில் வைத்துள்ளனர். விஸ்கான்சின் நீதிபதி ஹன்னா டுகன் ஒரு புலம்பெயர்ந்தவரைப் பாதுகாப்பதற்காக ICE ஐ மீறியபோது, ட்ரம்பின் FBI இயக்குனர் காஷ் பட்டேல் அவரைக் கைது செய்ய உத்தரவிட்டார்.
- முகமூடி அணிந்த ICE முகவர்கள் பட்டப்பகலில் சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களைக் கடத்திச் செல்கின்றனர். குடியிருப்பாளர்களுக்கு உரிய நடைமுறை அல்லது வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்புகொள்ளும் உரிமையை மறுத்து வருகின்றனர். வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவின் குறிப்பு, சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர் மஹ்மூத் கலீலை அவரது “கடந்த கால, தற்போதைய அல்லது எதிர்பார்க்கப்படும் நம்பிக்கைகளுக்காக - குறிப்பாக, காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலையை எதிர்த்ததற்காக நாடு கடத்த வேண்டும் என்று கோருகிறது. (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது.)
ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புகளை விட ஜனநாயகக் கட்சியிடமிருந்து எந்த தீவிரமான பதிலும் இல்லாதது குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. ஏனெனில், ஜனநாயகக் கட்சி தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையைச் சொல்வதன் மூலம் ஏற்படும் புரட்சிகர தாக்கங்களையிட்டு மிகவும் அஞ்சுகிறது. ட்ரம்ப் இந்த “எதிர்க்கட்சியின்” உடந்தை குறித்து நன்கறிந்துள்ளார். மேலும் அதில் நம்பிக்கையும் வைத்துள்ளார். நடைமுறையில், ஜனநாயகக் கட்சியினர் மக்களின் உரிமைகளுக்கு எதிரான ஒரு நீண்டகால சதியின் பங்காளிகளாக இருந்து வருகின்றனர். அத்தகைய அரசியல் கட்சிக்கு அழைப்புவிடும் முயற்சிகள் பயனற்றவை என்பதை விட மோசமானது ஒன்றில்லை.
அரசியலமைப்பை நிலைநிறுத்த அவர் கடமைப்பட்டவர் அல்ல என்ற ட்ரம்ப் ஞாயிறன்று வெளிட்ட அறிவிப்புக்கு விடையிறுப்பாக, ஜனநாயகக் கட்சியிடம் இருந்து வந்த ஒரு பொருத்தமான அறிக்கை பின்வருமாறு இருந்தது: “இவை ஒரு அரசியல் குற்றவாளியின் அறிக்கைகள்: இப்போது அவர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதே பிரச்சினை.” ஆனால் ஜனநாயகக் கட்சியின் எந்தத் தலைவரும் ட்ரம்ப் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை. கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் ஒருபுறம் இருக்கட்டும், அவர்களில் ஒருவர் கூட பதவி நீக்க விசாரணைக்கு அழைப்பு விடுக்கவில்லை. அப்பட்டமாக கூறுவதானால், தான் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டவர் அல்ல என்ற ஜனாதிபதியின் பகிரங்க அறிவிப்பு “உயர் குற்றங்கள் மற்றும் தவறான நடத்தைகளை” உள்ளடக்காது என்றால், பின்னர் எதுவும் அவ்வாறு செய்யாது.
மாறாக, செய்தி ஊடகம் மற்றும் உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் பொதுவான விடையிறுப்பு அலட்சியமாக இருந்தது. செனட் ஜனநாயகக் கட்சியின் தலைவரான சார்லஸ் சூமர் கூறியது இதுதான்:
பதவியில் இருக்கும் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், அரசியலமைப்பை நிலைநிறுத்த வேண்டுமா இல்லையா என்று தனக்குத் “தெரியாது” என்று கூறுவதை விட அமெரிக்கர்களுக்குப் பொருந்தாத ஒன்றை கற்பனை செய்வது கடினம்.
குடியரசைக் காப்பாற்ற உச்ச நீதிமன்றம் செயல்படும் என்ற எந்தவொரு நம்பிக்கையும், 2000 ஆம் ஆண்டு புஷ் எதிர் கோர் வழக்கில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உத்தரவிட்டது முதல், புஷ்ஷிற்கு தேர்தலை வழங்கியது வரை, கடந்த கோடையில் ட்ரம்ப் எதிர் அமெரிக்கா வழக்கில் அதன் மூச்சடைக்கச் செய்யும் நிறைவேற்று அதிகார விரிவாக்கத்தில், ஜனாதிபதி “அதிகாரப்பூர்வமாக கடமைகளைச் செயல்படுத்தும்போது”, வரம்பற்ற அதிகாரத்தைக் கொண்டுள்ளார், அதன் அளவுருக்களை அவரே வரையறுக்கலாம் என்று தீர்ப்பளித்ததுவரை, அதன் சமீபத்திய வரலாறு முழுவதையும் புறக்கணிப்பதாகும்.
டொனால்ட் ட்ரம்ப் அரசியல் சீரழிவின் நீட்டிக்கப்பட்ட நிகழ்ச்சிப்போக்கில் இருந்து எழுகிறார். ஒட்டுமொத்தமாக ஆளும் வர்க்கத்திற்குள்ளேயே, அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு எந்த குறிப்பிடத்தக்க தளமும் இல்லை. உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் வாரயிறுதியில் நடந்த சர்வதேச இணையவழி மே தின பேரணியில் விளக்கியவாறு:
புறநிலை அர்த்தங்களில், ஜனநாயகத்தின் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதல், சமூகத்தில் நிலவுகின்ற வர்க்க உறவுகளுக்கு ஏற்ப அரசியல் ஆட்சி வடிவங்கள் வன்முறையாக மறுஒழுங்கமைக்கப்படுவதைக் குறிக்கிறது. வெள்ளை மாளிகை மோசடியின் துர்நாற்றம் வீசும் சாணக் குவியலின் மேல் மிதக்கிறது. ஒரு முரட்டுத்தனமான ஏமாற்றுக்காரரும் மோசடியின் மேதையுமான ட்ரம்ப், ஒரு குற்றகரமான தன்னலக்குழுக்களின் உருவகமே அன்றி வேறொன்றுமில்லை.
மார்க்சிஸ்டுகள் அமெரிக்க அரசியலமைப்பை ஒருபோதும் ரோஜா நிறக் கண்ணாடியுடன் பார்த்ததில்லை. அது, அந்தக் காலத்தின் விளைபொருளாக இருந்ததால், அது ஒரு முரண்பாடான தன்மையை மட்டுமே கொண்டிருந்திருக்க முடியும். அறிவொளிக் காலத்தில் இருந்து எழுந்த அரசியலமைப்பு, குடியரசு மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளை, குறிப்பாக அதன் மாபெரும் உரிமைகள் மசோதா மற்றும் உள்நாட்டுப் போர் திருத்தங்களை பொதித்து வைத்திருக்கிறது. இவை உலகளாவிய மானுட விடுதலையின் இலட்சியத்தை பெரிதும் முன்னெடுத்தன. ஆனால் அரசியலமைப்பு, அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம் ஒரு கண்டம் முழுவதும் ஆட்சி செய்து விரிவடைவது மட்டுமல்லாமல், பின்னர் உலகம் முழுவதும் —அதனுடன் தொடர்புடைய அத்தனை இரத்தக்களரி குற்றங்களுடன்— ஆட்சி செய்து விரிவடையும் கட்டமைப்பை நிறுவி, அதன் உண்மையான வர்க்க ஆட்சியை சட்டபூர்வமான போர்வையின் கீழ் மறைக்கவும் செய்தது.
ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க ஆளும் வர்க்கம், கால் நூற்றாண்டாக அது ஆட்சி செய்த கட்டமைப்பை இப்போது தீக்கிரையாக்கி வருகிறது. பரந்த புரட்சிகர தாக்கங்கள் உள்ளன. அமெரிக்க தொழிலாள வர்க்கம், முதலாளிகளுக்கு எதிராக, ஜனநாயக மனப்பான்மையுடன் சிந்திக்கிறது. வெள்ளை மாளிகையிலிருந்து நடத்தப்படும் வர்க்கப் போருக்கு எதிராக அது நகரும்போது, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, 1775-1789 மற்றும் 1861-1865 ஆம் ஆண்டுகளின் முதல் இரண்டு அமெரிக்க புரட்சிகளின் மகத்தான ஜனநாயக மரபுகள் மற்றும் சாதனைகளையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை அது கண்டறிந்துள்ளது.
அதற்கும் மேலாக, ட்ரம்ப் எடுத்துக்காட்டுவது என்னவென்றால், ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பது தன்னலக்குழுக்களைத் தூக்கியெறிவதில் இருந்தும் அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிவதில் இருந்தும் பிரிக்கவியலாததாக ஆகியிருக்கிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது. அது, சோசலிசத்திற்கான ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்தின் அபிவிருத்தியுடனும், ஆளும் வர்க்கத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதுடனும், பொருளாதார வாழ்வின் மீது ஜனநாயகக் கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதுடனும் பிணைந்துள்ளது.