இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
புதன்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு இந்திய இராணுவம் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீருக்குள் உள்ள இலக்குகள் மீதும், பாகிஸ்தானுக்குள்ளேயும் தாக்குதல்கள் நடத்தியதையடுத்து, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுடனான பதட்டங்களை ஆத்திரமூட்டும் வகையில் உக்கிரமாக்கியுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சு, ஒன்பது இலக்குகள் தாக்கப்பட்டதாக அறிவித்துள்ள போதிலும், விவரங்களை வழங்கவில்லை. தாக்குதல்கள், பாகிஸ்தான் இராணுவத் தளங்கள் மற்றும் வசதிகளைத் தவிர்த்து 'பயங்கரவாத உள்கட்டமைப்பை' இலக்கு வைத்து 'குறிவைத்து, அளவிடப்பட்டு மற்றும் விஸ்தரிக்கும் பண்பு இல்லாதவாறு' மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அது கூறியது.
ஆதாரங்களை வழங்காமல், ஏப்ரல் 22 அன்று இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் பஹல்காம் அருகே 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாகவும், பதிலடி கொடுப்பதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கம் இந்தத் தாக்குதலுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்து, சம்பவம் குறித்து நடுநிலை விசாரணையை நடத்த இணங்கியுள்ளது.
வான்வழித் தாக்குதல்கள் உலகின் மிகவும் ஆபத்தான போர் வெடிக்கக் கூடிய புள்ளியில் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அணு ஆயுதம் ஏந்திய இரு நாடுகளும் ஏற்கனவே தாம் உரிமை கோரும் காஷ்மீர் விவகாரத்தில் மூன்று போர்களை நடத்தியுள்ளன. இப்போது இந்த மோதல், பாகிஸ்தானுடன் வலுவான உறவுகளைக் கொண்ட சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் நடக்கும் போர் தயாரிப்புகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. பெய்ஜிங்குடனான மோதலை அதிகரித்துள்ள நிலையில், வாஷிங்டன் தெற்காசியாவில் அதன் பிரதான மூலோபாய பங்காளியாக புதுடெல்லியுடன் தனது இராணுவ உறவுகளை வலுப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இந்த வான்வழித் தாக்குதல்களை 'வஞ்சக எதிரியால்' நடத்தப்பட்ட 'கோழைத்தனமான தாக்குதல்கள்' என்று கண்டனம் செய்துள்ளதுடன் 'கோழைத்தனமான தாக்குதல்களை' நடத்தியதற்கு பதிலடி கொடுப்பதாகவும் சபதம் செய்துள்ளார். 'இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் போர்ச் செயலுக்கு வலுவான பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை இருப்பதோடு வலுவான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது' என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் குறைந்தது ஐந்து இந்திய விமானப்படை ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறியது. இந்திய விமானங்கள் இந்திய வான்வெளியில் தங்கியிருந்ததாகவும், தாக்குதல்களை நடத்த 'தொலைவிலிருந்து தாக்கும் ஆயுதங்களை' பயன்படுத்தியதாகவும் அதன் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. அல் ஜசீராவின் கூற்றுப்படி, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீரையும் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரையும் பிரிக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் இராணுவம் ஏற்கனவே கடுமையான பீரங்கித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இந்திய தரைப் படைப்பிரிவின் தலைமையகத்தை அழித்ததாகக் கூறுகிறது.
பாகிஸ்தானுக்குள் முரிட்கே மற்றும் பஹாவல்பூர் நகரங்களுக்கு அருகிலும், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் பாக், கோட்லி மற்றும் முசாபராபாத்திலும் இந்திய விமானப்படைத் தாக்குலில் 'பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாக' ஆயுதப்படை செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரிப் சவுத்ரி கூறினார். எட்டு பேர் கொல்லப்பட்டதுடன் 35 பேர் காயமடைந்ததோடு இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
பஞ்சாபில் உள்ள ஒரு மசூதியில் நடந்த தாக்குதலில் ஒரு குழந்தை மற்றும் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த இரு வாரங்களாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்திய மற்றும் பாகிஸ்தான் துருப்புக்கள் இரவு முழுவதும் சிறிய ஆயுதத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இந்த வான்வழித் தாக்குதல்கள் நடந்தன. 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியா பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள இலக்குகள் மீது நேற்றிரவு வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறைந்தது 40 இந்திய துணை ராணுவப் படையினரைக் கொன்ற தற்கொலை கார் குண்டுவெடிப்புக்கு இஸ்லாமாபாத்தை குற்றம் சாட்டிய பின்னர், அதன் போர் விமானங்கள் பல இடங்களைத் தாக்கின. மேலும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அகமதுபூர் கிழக்கு மற்றும் முரிட்கே மீதான சமீபத்திய தாக்குதல்கள், 1971 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு பாகிஸ்தானுக்குள் நடந்த மிக ஆழமான தாக்குதல்களாகும்.
இன்றைய தாக்குதல்களின் தீவிரத்தை மூடி மறைக்க புது தில்லி மேற்கொண்ட முயற்சிகள், ஏப்ரல் 22 பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவின் வலதுசாரி இந்து மேலாதிக்க அரசாங்கத்தின் போர் வெறிமிக்க பதிலால் பொய்யாக்கப்பட்டன. அப்போதிருந்து, மோடியும் உயர் அரசாங்கத் தலைவர்களும் குற்றவாளிகளை மட்டுமல்ல, 'பயங்கரவாதத்தின் எஜமானர்கள்' மற்றும் 'அமைப்பாளர்களை' தாக்குவதாக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தியுள்ளனர் - இது பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் ஆயுதப்படைகளுக்கும் எதிரான மறைமுக அச்சுறுத்தலாகும்.
மோடி அரசாங்கம், பாகிஸ்தான் நகரங்கள் மற்றும் மாநகரங்களுக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் விநியோகத்தை துண்டிப்பதாக அச்சுறுத்தி, முதன்முறையாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் பங்கேற்பதை நிறுத்தி வைத்துள்ளது. 1960 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம், பாகிஸ்தான் பெரிதும் சார்ந்திருக்கும் நதி அமைப்பிலிருந்து நீர்வளங்களைப் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மையுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. சிந்து நதியானது சீனாவில் இருந்து ஊற்றெடுத்தாலும், அது இந்தியா வழியாகவே பாய்கிறது.
வெள்ளை மாளிகையில் இருந்து வெளிப்படையாக கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் ஆபத்தான இராணுவத் தாக்குதல் 'ஒரு அவமானம்' என்று அறிவித்தார். இந்திய வான்வழித் தாக்குதல்கள் பற்றி இப்போதுதான் கேள்விப்பட்டதாகக் கூறிக்கொண்ட அவர், 'அவர்கள் நீண்ட காலமாக மோதிக்கொள்கின்றனர். அது மிக விரைவாக முடிவடையும் என்று நான் எதிர்பார்க்கிறேன்' என்று கூறினார்.
உண்மையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்தியாவுடனான நெருங்கிய உறவுகளும் மூலோபாய கூட்டாண்மையும், ஏப்ரல் 22 பயங்கரவாத தாக்குதலை சாக்காகப் பயன்படுத்தி, பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்ரோஷமாக பதிலளிக்க மோடியை ஊக்குவித்தது. இந்திய அதிகாரிகளின் கூற்றுப்படி, பயங்கரவாத தாக்குதலின் பின்னர் உடனடியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், வான்வழித் தாக்குதல்கள் நடத்துவது பற்றி இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவிடம் சுருக்கமாக விளக்கியிருந்த போதிலும், இந்தியா விரைவில் பதிலடி கொடுக்கும் என்பதை டிரம்ப் நிர்வாகம் சந்தேகத்திற்கு இடமின்றி முன்கூட்டியே அறிந்திருந்தது.
ஏப்ரல் 30 அன்று, ரூபியோ இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்து, இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீருக்குள் நடந்த 'கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்தார். 'பதட்டங்களைத் தணிக்க' அழைப்பு விடுத்த அதே நேரம், 'பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை ரூபியோ மீண்டும் உறுதிப்படுத்தினார்' -இந்த கருத்து கட்டுப்படுத்துவதற்காக அல்ல, மாறாக ஆக்ரோஷமாக பிரதிபலிக்க இந்தியாவை ஊக்குவிக்க மட்டுமே செய்தது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பல தசாப்த கால பகைமை, 1947 ஆம் ஆண்டு இந்திய துணைக்கண்டத்தை ஒரு முஸ்லிம் பாகிஸ்தான் மற்றும் ஒரு இந்து இந்தியாவாகப் பிரிப்பதில் வேரூன்றிய ஒரு பிற்போக்கு மோதலாகும். புது தில்லியின் அழுத்தத்தின் கீழ், சமஸ்தானத்தின் இந்து ஆட்சியாளர் இந்தியாவுடன் இணையத் தேர்ந்தெடுத்த பிறகு, முஸ்லிம் பெரும்பான்மை காஷ்மீர் மீதான இராணுவ மோதல் மிக வேகமாக வெடித்தது.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கும் முதலாளித்துவ ஆட்சியை வலுப்படுத்துவதற்கும் ஒரு வழிமுறையாக, வகுப்புவாத அரசியலைத் தூண்டிவிடுவதை நம்பியிருந்தன. இரு நாடுகளிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள், காஷ்மீர் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மிதித்து நசுக்கியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் இந்தியாவின் ஜனநாயக விரோதக் கொள்கைகள், 1989 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானால் கையாளப்பட்ட ஆயுதக் கிளர்ச்சி வெடிப்பதற்கு மட்டுமே வழிவகுத்ததோடு இதன் விளைவாக இந்தியா கடுமையான பொலிஸ் அரசு நடவடிக்கைகளைத் திணித்தது.
2019இல் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு, தன்னாட்சி அந்தஸ்தை ரத்து செய்து, அதை நேரடியாக இந்தியாவின் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த மோடியின் இந்து பேரினவாத பாரதிய ஜனதா கட்சியின் கீழ் பதட்டங்கள் கூர்மையடைந்துள்ளன.
சமீபத்திய வான்வழித் தாக்குதல்கள் 'அளவிடப்பட்டவை மற்றும் விஸ்தரிக்கப்படாதவை' என்பதற்குப் பதிலாக, இந்திய அரசாங்கம் அதன் நீண்டகால பிராந்திய போட்டியாளரான பாகிஸ்தானுக்கு குழிபறிக்கும் நோக்கில் ஒரு ஈவிரக்கமற்ற இராணுவ பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இது நேற்றிரவு ட்விட்டரில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் 'இந்திய தாய்நாட்டுக்கு வெற்றி' என்ற மகிழ்ச்சியான பதிவில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இராணுவ மோதல் அமெரிக்காவையும் சீனாவையும், ஏனைய வல்லரசுகளையும் உள்ளிழுப்பதோடு ஒரு பேரழிவு தரும் உலகளாவிய மோதலுக்கான வெடிப்புப் புள்ளியாக மாறும்.
மேலும் படிக்க
- தெற்காசியாவின் போட்டி அணுவாயுத சக்திகளுக்கு இடையே பதட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இந்திய இராணுவத் தாக்குதலை "நெருங்கிவிட்டதாக" பாகிஸ்தான் எச்சரிக்கிறது
- இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதட்டங்கள் அதிகரித்துள்ளன
- புது தில்லி பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்லாமாபாத்தை குற்றம் சாட்டியதை அடுத்து, இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நோக்கி விரைகின்றன