இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஏற்கனவே சம்பளப் பற்றாக்குறை மற்றும் மோசமான வேலை நிலைமைகளை எதிர்கொண்டுள்ள ஆடைத் தொழிலாளர்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சுங்கவரிப் போரினால் இப்போது கொடூரமான தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர்.
இலங்கையில் உள்ள ஆடைத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு (GWAC), நாடு முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள ஆடைத் தொழிலாளர்கள் தங்கள் தொழில்கள், ஊதியங்கள், வேலை நிலைமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க போராடுவதற்கு அவசரமாக தயாராக வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றது.
இது ஒரு சர்வதேச போராட்டம் என்பதை, ட்ரம்பின் உலகளாவிய வரிப் போர் மீண்டும் காட்டியுள்ளது. தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள ஆடை உற்பத்தித் தொழில்களில் உள்ள நமது அனைத்து வர்க்க சகோதர சகோதரிகளையும், இப்போது இதே போன்ற தாக்குதலை எதிர்கொள்பவர்களையும், தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க ஒருங்கிணைந்த நடவடிக்கையை ஒழுங்கமைக்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். வாடிக்கையாளர் நாடுகளிலிருந்து ஆடைகளை கொள்வனவு செய்யும் மாபெரும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சில்லறை விற்பனையாளர் நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு மத்தியிலும் இத்தகைய நடவடிக்கை விரிவாக்கப்பட வேண்டும்.
இலங்கை, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் மற்றும் மியான்மர் ஆகியவை முறையே 44, 49, 48, 46 மற்றும் 44 சதவீதம் என்ற அளவில் பாரிய வரிகளை எதிர்கொள்கின்றன. ட்ரம்ப் இந்த வரி உயர்வை 90 நாட்களுக்கு 'இடைநிறுத்தி' வைத்திருப்பது, குறித்த நாடுகளில் உள்ள தொழில்துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த நெருக்கடியைத் தீர்ப்பது ஒருபுறம் இருக்க, குறைக்கப் போவதில்லை. அமெரிக்காவால் தூண்டப்பட்டுள்ள வர்த்தகப் போர் நடவடிக்கைகள் உலகையே மூழ்கடித்து, பொருளாதர மந்தநிலைக்கும், உலகளாவிய மோதலை நோக்கியும் தள்ளுகின்றன.
இலங்கையின் ஆடைகளுக்கான மிகப்பெரிய சந்தையாக இருக்கும் அமெரிக்காவில் இருந்து, கடந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர் அல்லது நாட்டின் மொத்த ஆடை ஏற்றுமதியில் 40 சதவீதத்தை வருமானமாக ஈட்டியது. புதிய வரி விகிதங்கள் அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில் 20 சதவீதம் சரிவையும், ஆண்டுதோறும் 300 மில்லியன் டொலர் இழப்பையும் காணும் என்று பப்லிக் பைனான்ஸ் எல்கே இன் (PublicFinance.lk) சிந்தனைக் குழு மதிப்பிடுகிறது. ஆடைத் தொழிற் துறையின் சரிவு, தொழிற்சாலை மூடல்களுக்கும் பாரிய வேலை இழப்புகளுக்கும் அத்துடன் ஊதிய வெட்டு மற்றும் வேலை நிலை வெட்டுக்களுக்கும் வழிவகுக்கும்.
தற்போது, இலங்கையின் ஆடைத் துறையில் 350,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாக வேலை செய்வதுடன் சுமார் 600,000 பேர் மறைமுக தொழிலாளர்களாக உள்ளனர். பெரும்பாலான ஆடைத் தொழிலாளர்களுக்கு சுமார் 35,000 ரூபாய் (116 டொலர்) என்ற அற்ப மாத ஊதியம் வழங்கப்படுகிறது. கடினமான உற்பத்தி இலக்குகளை அடைய நிர்ப்பந்திக்கப்படும் அவர்கள், அதிக நேரம் வேலை செய்து கூடுதலான வருமானம் ஈட்டத் தள்ளப்பட்டுள்ளனர். ஆடை நிறுவனங்கள் தமது உற்பத்தி செலவுகளைக் குறைப்பதற்காக, குறைந்த-ஊதிய ஒப்பந்த நிறுவனங்களைப் பயன்படுத்துவதை அதிகரித்து வருகின்றன.
ட்ரம்பின் வரிப் போர், ஆடைத் தொழிலுக்கு மட்டுமன்றி, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு பூகோள வர்த்தக நெருக்கடியையும் ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் வரி உயர்வால் அதிர்ச்சியடைந்த மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் 'தேசிய ஐக்கியத்துக்கு' அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதி திசாநாயக்க ஏப்ரல் 11 அன்று அனைத்துக் கட்சி மாநாட்டை கூட்டினார்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் தமிழ் அரசு கட்சி உட்பட அனைத்து பாராளுமன்ற எதிர்க் கட்சிகளும், மாநாட்டில் பங்கேற்று அரசாங்கத்தை ஆதரிக்க ஒப்புக்கொண்டன.
திசாநாயக்க, கோரிக்கைகளை நிறைவேற்றத் தனது தயார் நிலையை ட்ரம்ப் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சபை, கூட்டு ஆடைத்துறை சங்க சம்மேளனம் போன்ற பெருவணிக ஆலோசனை குழுக்கள் மேலதிக வரி குறைப்புகளையும் ஏனைய சலுகைகளையும் வழங்குமாறு திசாநாயக்க அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றன. இலங்கை மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை ஆதரிக்க முயலும் கொழும்பு, நெருக்கடியின் முழு சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்த நடவடிக்கை எடுக்கவுள்ளது. இந்தத் தாக்குதல்கள், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய கொடூரமான சிக்கனத் திட்டத்திற்கும் மேலதிகமாக சுமத்தப்பட உள்ளன.
தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் துரோகப் பங்கு
இந்த அதிகரித்து வரும் தாக்குதல்களை எதிர்த்துப் போராட தொழிலாளர்கள் தயாராக வேண்டியுள்ள அதே வேளை, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்கி, அரசாங்கத்திற்கும் முதலாளிகளின் தாக்குதலுக்கும் முண்டுகொடுக்கத் தயாராகி வருகின்றன.
சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கத்தின் (FTZGSEU) பொதுச் செயலாளர் அன்டன் மார்கஸ், நிலைமையைச் சமாளிப்தற்காக, கம்பனிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஒரு குழுவை நிறுவுமாறு பாராளுமன்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மிகப்பெரிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பதன் மூலமும் பிற இறக்குமதிகளுக்கான வரிகளைக் குறைப்பதன் மூலமும் இலங்கை ட்ரம்பின் இதயத்தை 'வெல்ல' முடியும் என்று மார்கஸ் பரிந்துரைத்துள்ளார்.
ஏப்ரல் 4 அன்று, இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் (CMU) பொதுச் செயலாளர் எஸ்.பி. நாதன், ஆயிரக்கணக்கான இலங்கை தொழிலாளர்கள் தொழிலை இழக்கக் கூடும் என்பதால், 'முந்தைய வரி விகிதத்திற்குத் திரும்புமாறு' வேண்டுகோள் விடுத்து ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வ வேண்டுகோள் ஒன்றை அனுப்பினார்.
ஒவ்வொரு நாளும் புலம்பெயர்ந்தோரை வெளியேற்றுவது, காசா இனப்படுகொலையை எதிர்ப்பவர்களை சிறையில் அடைப்பது, சமூக சேவைகள், சுகாதாரம், விஞ்ஞானம் ஆகியவற்றை அகற்றுவது மற்றும் பல்லாயிரக் கணக்கான அரச தொழில்களை அழிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வாஷிங்டனில் உள்ள பாசிச ஆட்சிக்கு இந்த பரிதாபகரமான வேண்டுகோள் செவிடன் காதுகளில் சங்கு ஊதுவது போன்றது.
கடந்த காலத்தைப் போலவே, சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம், சி.எம்.யு., ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் (ICWU) மற்றும் ஏனைய சங்கங்கள் உட்பட இலங்கை தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், ஒவ்வொரு நெருக்கடிக்கும் கொழும்பு அரசாங்கங்களுடனும் பெரிய நிறுவனங்களுடனும் தங்கள் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதன் மூலமே பதிலளித்துள்ளன.
2008 பூகோள நிதி நெருக்கடி மற்றும் அதனுடன் தொடர்புடைய உலகப் பொருளாதார மந்தநிலையின் போது, தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்தின் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் (NLAC) இணைந்து தொழிற்சாலை மூடல்களையும் பெருமளவிலான வேலை நீக்கங்களையும் ஆதரித்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2020 இல் கோவிட்-19 தொற்றுநோய் வெடித்தபோது, முதலாளிகள், தொழிலாளர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களைக் கொண்ட ஒரு கோவிட்-19 'முத்தரப்பு செயற்குழுவை' உருவாக்கினார். வேலை நீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாப்பற்ற நிலையில் வேலை வாங்குவதை உறுதி செய்வதற்கான கம்பனியின் திட்டங்களை சுமத்துவதே இந்த செயற்குழுவின் பணியாக இருந்தது. 40 தொழிற்சாலைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து குறைந்தபட்சம் 150,000 பேர் வேலை இழந்ததுடன் சிறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 73,000 பேர் வேலை இழந்தனர்.
2022 இல் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்குபற்றிய வெகுஜனப் போராட்டங்களைத் தூண்டிவிட்ட இலங்கையின் பொருளாதார சரிவின் போது, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை நீக்கங்களை எதிர்த்துப் போராட தொழிற்சங்க எந்திரம் எதுவும் செய்யவில்லை. அதேபோல், அடுத்து அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அமுல்படுத்திய சர்வதேச நாணய நிதிய கொள்கைகளை தொழிற்சங்கங்கள் ஆதரித்ததுடன் இப்போது சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்கு திசாநாயக்க ஆட்சிக்கு உதவுகின்றன.
தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த மாத தொடக்கத்தில், ஏப்ரல் 8, 9 ஆகிய திகதிகளில், வோக் டெக்ஸ் ஆடைத் தொழிற்சாலையானது அமெரிக்காவின் வரி உயர்வை மேற்கோள் காட்டி, அதன் தொழிலாளர்களுக்கு வழக்கமான வருடாந்த போனஸை வழங்க முடியாது என்று திடீரென அறிவித்ததை எதிர்த்து, தொழிலாளர்கள் ஒரு சக்திவாய்ந்த உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தை நடத்தினர். வோக் டெக்ஸ் தொழிலாளர்களின் உறுதியான தொழில்துறை போராட்டமானது, போராடுவதற்கான அவர்களின் விருப்பத்தைத் தெளிவுபடுத்தியிருந்தாலும், ஆடைத் தொழிலாளர்கள் ஒரு புதிய உத்தியைக் கடைப்பிடித்தால் மட்டுமே முன்னேற முடியும்.
ஆடைத் தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழுவானது தொழிற்சங்க அதிகாரத்துவம் கடந்த காலத்தில் செய்தது போல் அரசாங்கத்தினதும் பெருவணிகங்களதும் கோரிக்கைகளை தொழிலாளர்கள் மீது திணிக்க அனுமதிக்கக் கூடாது என்று ஆடைத் தொழிலாளர்களை எச்சரிக்கிறது.
ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாக்க தொழிலாளர்கள் போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனாலேயே ஆடைத் தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழுவானது அனைத்து தொழிற்சாலைகளிலும் அவற்றின் சுற்றுப்புறங்களிலும் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டுமென ஆடைத் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுக்கின்றது. முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரையும் பாராளுமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் இந்த சுயாதீன நடவடிக்கை குழுக்களுக்குள் அனுமதிக்க கூடாது.
இந்த தொழிலாள வர்க்கக் குழுக்கள், முதலாளிகளதும் அரசாங்கத்தினதும் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிற்சாலை ஆக்கிரமிப்புகள் உட்பட, எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடி முடிவுசெய்ய முடியும். தனியார் தொழில்துறை மற்றும் அரசுத் துறை முழுவதும் உள்ள தொழிலாளர்களுடன் அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
ஆடைத் தொழிலாளர்கள் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள்:
- தொழில் வெட்டு, ஊதிய வெட்டு வேண்டாம். வேலை நிலைமைகளை குறைக்க வேண்டாம்! வேலைச் சுமைகளை அதிகரிக் வேண்டாம்!
- அனைத்து தொழிற்சாலை மூடல்களையும் எதிர்த்திடுங்கள். தொழிற்சாலை ஆக்கிரமிப்பு உட்பட தொழில்துறை போராட்டத்துக்குத் தயாராகுங்கள். முதலாளிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும் அற்ப இழப்பீட்டை நிராகரிக்க வேண்டும்! புதிய தொழில்கள் வழங்கப்படும் வரை முழு ஊதியத்தில் இழப்பீடு கோர வேண்டும்.
- உண்மையான ஊதியங்களின் இழப்பை ஈடுசெய்யுமளவு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். அனைத்து ஊதியங்களும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப அதிகரிப்பதாக இருக்க வேண்டும்.
- முழு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுமுறை வேண்டும். ஒழுக்கமான வீட்டுவசதி மற்றும் சுகாதார வசதிகள் வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தைப் போலவே, அமெரிக்க அரசாங்கத்தின் வரி அதிகரிப்புப் போரின் பேரழிவுகரமான விளைவுகளுக்கு எதிரான போராட்டமும் சர்வதேச ரீதியானதாகும். பூகோள பொருளாதார நெருக்கடிக்கும் அதிகரித்து வரும் சங்கவரிப் போருக்கும் தொழிலாளர்கள் பொறுப்பல்ல.
வரி நெருக்கடிக்கு பிரதிபலித்த ஜனாதிபதி திசாநாயக்க, 'ஒரு தேசமாக அதை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும்' என்று அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பெருவணிகத்திற்காக தொழிலாளர்கள் ஏன் தங்கள் உரிமைகளை தியாகம் செய்ய வேண்டும்? உழைக்கும் மக்களால் இலாப அமைப்பிற்குள் தங்கள் தொழில்கள், ஊதியங்கள், ஜனநாயக உரிமைகள் மற்றும் தங்கள் எதிர்காலத்தையும் பாதுகாக்க முடியாது.
இலங்கை ஆடைத் தொழிலாளர்கள் தங்கள் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றுபட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் முன்முயற்சியின் அடிப்படையில் நிறுவப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் ஜனநாயக அமைப்பான தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியில் இணைந்து, அதைக் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே இதை அடைய முடியும்.
பங்களாதேஷ், இந்தியா, வியட்நாம், லாவோஸ் மற்றும் பிற தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள ஆடைத் தொழிலாளர்களை இந்தப் போராட்டத்தில் எங்களுடன் இணையுமாறு நாங்கள் நேரடியாக வேண்டுகோள் விடுக்கின்றோம். இது குறித்து உங்களுடன் கலந்துரையாடவும், தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதில் உதவவும் நாங்கள் தயாராக உள்ளோம்.
எங்களைத் தொடர்பு கொள்ளவும்:
தொலைபேசி / வட்ஸ்அப்: +94 773562327
மின்னஞ்சல்: action.committeees.sl@gmail.com
மேலும் படிக்க
- மே தினம் 2025: பாசிசம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்
- இலங்கை ஜனாதிபதி திசாநாயக்க சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கிறார்
- போருக்கும் சிக்கன வெட்டுக்களுக்கும் சர்வாதிகாரத்துக்கும் எதிராக, சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்துக்காக இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றது