முன்னோக்கு

மே தினம் 2025: பாசிசம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், 2025 சர்வதேச மே தின இணையவழிப் பேரணியைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரையின் காணொளியையும் உரையையும் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இங்கே வெளியிடுகிறது.

2025 மே தினப் பேரணியில் டேவிட் நோர்த் வழங்கிய உரை

2025 மே தின கொண்டாட்டத்தைத் தொடங்குகையில், உலக சோசலிசப் புரட்சிக்கான கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, உலகம் முழுவதும் முதலாளித்துவ அரசுகளாலும் அவற்றின் பொலிஸ் நிறுவனங்களாலும் சுதந்திரம் மற்றும் வாழ்வதற்கான ஜனநாயக உரிமையை பறிக்கப்பட்ட அனைவருடனும் தனது ஒருமைப்பாட்டை அறிவிக்கிறது.

ஒரு வருடமாக சிறையில் அடைக்கப்பட்டு 'தேசத்துரோக' குற்றச்சாட்டில் விசாரணைக்காகக் காத்திருக்கும் உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக்கின் விடுதலைக்கான போராட்டத்தை விரிவுபடுத்துமாறு அனைத்துலகக் குழு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடபட்ட பினாமிப் போருக்கு எதிராகவும், கியேவ் மற்றும் மாஸ்கோவில் உள்ள ஆட்சிகளால் ஊக்குவிக்கப்படும் பிற்போக்கு தேசிய இனவெறிக்கு எதிராகவும், உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஐக்கியத்துக்காகப் போராடியதற்காகவே அவர் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அனைத்து ஏகாதிபத்திய அரசாங்கங்களின் ஆதரவுடன் செயல்படும், குற்றவியல் இஸ்ரேலிய ஆட்சியால் முன்னெடுக்கப்படும் இனப்படுகொலை வன்முறை பிரச்சாரத்திற்கு ஆளாகியுள்ள காசா மக்களுடன் எங்கள் ஒருமைப்பாட்டை நாங்கள் அறிவிக்கிறோம்.

இஸ்ரேலிய முதலாளித்துவ அரசுக்கு எதிரான பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக தொடர்ந்து போராடுவதற்கு அனைத்துலகக் குழுவும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் உறுதியளிக்கின்றன. சியோனிச பேரினவாதத்தின் கொலைகார சித்தாந்தத்தையும் அரசியல் முட்டுச்சந்தையும் நிராகரித்து, சோசலிச பாலஸ்தீனம் மற்றும் மத்திய கிழக்கின் சோசலிச கூட்டமைப்புக்கான போராட்டத்தில் தங்கள் அரபு சகோதர சகோதரிகளுடன் ஒன்றுபட இஸ்ரேலில் உள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் மீண்டும் அழைப்பு விடுக்கிறோம்.

அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி, ட்ரம்பின் கெஸ்டபோவின் (நாஜி பொலிஸ்) முகவர்களால் கைது செய்யப்பட்ட மஹ்மூத் கலீல், ருமேசா ஓஸ்டுர்க் மற்றும் லெகா கோர்டியா ஆகியோரை அமெரிக்காவில் உள்ள அவர்களது வீடுகளுக்கு உடனடியாகத் திருப்பி அனுப்பக் கோருகிறது. அமெரிக்க அரசியலமைப்பால் அமெரிக்க பிரஜைகளுக்கும் அமெரிக்க பிரஜைகள் அல்லாதவர்களுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு சுதந்திர உரிமையைப் பயன்படுத்தும் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான துன்புறுத்தலை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் கோருகிறோம்.

அமெரிக்காவில் வசிக்கும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை -ஆண்ட்ரி ஹெர்னாண்டஸ் ரோமெரோ மற்றும் கில்மர் அர்மாண்டோ அப்ரேகோ கார்சியா ஆகியோரை- எல் சால்வடாரில் உள்ள ஒரு வதை முகாமுக்கு கொடூரமாக நாடு கடத்தியதை நாங்கள் கண்டிக்கிறோம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அபு கிரைப் போர் முகாமில் ஈராக்கியர்கள் சித்திரவதை செய்யப்பட்டதை அம்பலப்படுத்தும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதால் உலகம் அதிர்ச்சியடைந்தது. புஷ் நிர்வாகம் ஈராக்கிய சிப்பாய்களுக்கு எதிரான கொடூரமான துஷ்பிரயோகத்திற்கான நேரடிப் பொறுப்பைத் தவிர்க்கும் முயற்சியில், குற்றங்களுக்கு தனிப்பட்ட குற்றவாளிகளின் அனுமதிக்கப்படாத செயல்களே காரணம் என்று கூறியது.

இன்று, அத்தகைய பொறுப்பைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் எதுவும் இல்லை. அமெரிக்காவில் தற்போது வசிக்கும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை எல் சால்வடாரின் CECOT எனப்படும் மோசமான பயங்கரவாத தடுப்பு மையத்திற்கு நாடு கடத்தும் திட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் பெருமையாகக் கூறுகிறது. 40,000 பேரைத் தடுத்து வைக்க வடிவமைக்கப்பட்ட இந்த வசதி ஒரு வதை முகாமுக்குச் சமம் ஆகும். இந்த அறைகளில் 65 முதல் 156 கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அங்கு அவர்கள் ஒவ்வொரு நாளும் 23.5 மணி நேரம் நிரந்தர செயற்கை விளக்குகளின் கீழ் அடைத்து வைக்கப்படுகிறார்கள். அவர்கள் மெத்தைகள், தலையணைகள் அல்லது விரிப்புகள் இல்லாமல் உலோகப் படுக்கைகளில் தூங்குகிறார்கள். கைதிகளை அடிக்கின்றனர். போதுமான உணவு மற்றும் தேவையான மருத்துவ பராமரிப்பு அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. அவர்கள் திட்டமிட்டு அவமானப்படுத்தப்படுகிறார்கள், மேலும் மின்சார அதிர்ச்சிகளைப் பயன்படுத்துவது உட்பட சித்திரவதை செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.

பயங்கரவாத தடுப்பு மையத்தில் (CECOT), மார்ச் 2023 இல் உள்ள கைதிகள் [புகைப்படம் [Photo by Presidencia de El Salvador]

எல் சால்வடாரின் ஜனாதிபதி நயீப் புக்கேல் ஏப்ரல் மாதம் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்தபோது, ​​ஜனாதிபதி ட்ரம்ப் 'உள்நாட்டில் வளர்ந்த' அமெரிக்கர்களை - அதாவது அமெரிக்க பிரஜைகளை- CECOT க்கு நாடு கடத்தும் தனது நோக்கத்தை பகிரங்கமாக அறிவித்தார்; அத்துடன் ட்ரம்ப் நாடுகடத்துவதாக அச்சுறுத்தும் பல்லாயிரக்கணக்கானோரை தங்க வைக்க மேலும் ஐந்து முகாம்களைக் கட்டுவது அவசியம் என்று கூறினார்.

ட்ரம்பின் வலைவீச்சில் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 2 வயது 4 மற்றும் 7 வயதுடைய மூன்று சிறுவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் அமெரிக்க குடிமக்கள். அவர்கள் ஹொண்டுரான்சுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 4 வயது சிறுவனுக்கு நான்காம் கட்ட புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருந்து மற்றும் மருத்துவ வசதி இல்லாமலேயே சிறுவன் நாடு கடத்தப்பட்டுள்ளான்.

2025 மே தினத்தை நாம் கொண்டாடும் போது, ​​நிகழ்வுகளை பொருத்தமான வரலாற்று சூழலில் வைப்பது அவசியமாகும். இந்த மே தினம் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த எண்பதாவது ஆண்டு நிறைவோடு ஒத்துப்போகிறது. 8 மே 1945 அன்று நாஜி ஆட்சி சரணடைந்தது. இதைத் தொடர்ந்து மூன்று மாதங்களின் பின்னர், அமெரிக்காவால் அணுகுண்டுகள் வீசப்பட்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி எரிக்கப்பட்ட பிறகு ஜப்பான் சரணடைந்தது.

1939 மற்றும் 1945 க்கு இடையிலான இரண்டாம் உலகப் போரின் ஆறு ஆண்டுகள், உலகம் இதற்கு முன்பு அனுபவித்த எதையும் விட காட்டுமிராண்டித்தனத்தை கண்டது. ஐரோப்பாவில் வதை முகாம்கள் திறக்கப்பட்டமை பாசிச காட்டுமிராண்டித்தனத்தின் பிரமாண்டத் தன்மையை அம்பலப்படுத்தியது. ஐரோப்பிய யூதர்களின் இனப்படுகொலை -தொழில்துறை வெகுஜன படுகொலைக்காக முறையாக திட்டமிட்ட பிரச்சாரத்தை செயல்படுத்துதல் என்பது- முதலாளித்துவத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட உலகளாவிய வன்முறையின் ஒரு பயங்கரமான பகுதி மட்டுமே.

இந்தப் போர், உலக மக்கள்தொகையில் தோராயமாக 3 சதவீதமான 70 முதல் 85 மில்லியன் வரையான உயிர்களைக் கொன்றது. இராணுவ மரணங்கள் 21 முதல் 25 மில்லியன் வரை இருக்கும் என்றும், பொதுமக்கள் இறப்புகள் 50 முதல் 55 மில்லியன் வரை இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. போருக்குப் பிறகு, அந்த மோதலின் கொடூரங்கள் மீண்டும் நடக்க அனுமதிக்க முடியாது என்று வெற்றியாளர்கள் கூறினர்.

1945-46 நியூரம்பெர்க் விசாரணையில், இனப்படுகொலை குற்றம் மற்றும் அமைதிக்கு எதிரான குற்றங்களுக்காக நாஜி தலைவர்களை பொறுப்பேற்கச் செய்த புதிய சட்டங்கள், இதேபோன்ற செயல்களைச் செய்யும், அமெரிக்கா உட்பட எந்தவொரு நாட்டினதும் தலைவர்களுக்கும் எதிராக எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும் என்று, அமெரிக்க வழக்கறிஞர்கள் அறிவித்தனர்.

ஜெர்மனியின் பவேரியாவின் நியூரம்பெர்க்கில் உள்ள போர்க் குற்றவாளிகள் மீதான சர்வதேச இராணுவ தீர்ப்பாய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் காட்சி.

நிச்சயமாக, அந்த உறுதிமொழி மறக்கப்பட்டுவிட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய தசாப்தங்களில், ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்கள் மில்லியன் கணக்கானவர்களின் மரணங்களுக்கு வழிவகுத்த போர்களை நடத்தினர். ஆனால் ஏகாதிபத்திய குற்றங்களின் இரத்தக்களரி பதிவை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், தற்போதைய உலக ஒழுங்கு அதிர்ச்சியூட்டுமளவிலான அரசியல் மற்றும் தார்மீக பின்னடைவின் செயல்முறைக்கு உட்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. முதல் உலகப் போரின் மத்தியில், ஏகாதிபத்திய ஆட்சியானது, சுயநலத்துக்கும் மற்றும் ஜனநாயக ஆட்சிகளுக்கும் இடையில் நடைமுறையில் அழிவை நோக்கிச் செல்கிறது என்று லெனின் எச்சரித்தார். விதியானது 'எல்லாப் பக்கத்திலிருந்தும் எதிர்வினை ஆளும்', என்று அவர் கூறினார்.

அந்த விதி சமகால நிகழ்வுகளால் உறுதிப்படுத்தப்படுகிறது. முழு உலகத்தின் கண்களுக்கு முன்பாக காசா மக்களுக்கு எதிராக இனப்படுகொலை குற்றம் செயல்படுத்தப்படுகிறது. 1937 இல் குர்னிகா மற்றும் 1940 இல் ரோட்டர்டாம் மீதான நாஜி குண்டுவீச்சு, ஒரு குற்றவியல் அரசால் மட்டுமே செய்யக்கூடிய மோசமான செயல்களாகக் கருதப்பட்டது. ஆனால் 2,000 பவுண்டு குண்டுகள் வீசப்பட்டு காசா திட்டமிட்டு அழிக்கப்படுவது, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் 'ஜனநாயக' அரசாங்கங்களால் நியாயப்படுத்தப்படுகிறது. இஸ்ரேலைக் கண்டிப்பதற்குப் பதிலாக, ஏகாதிபத்திய சக்திகள் -சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகளைப் புறக்கணித்து- இனப்படுகொலைக்கு எதிரான மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களைக் கண்டித்து குற்றமாக்குகின்றன. சர்வாதிகார ஆட்சிகளால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுவதாக நம்பப்பட்ட ஒரு அளவிலான வஞ்சகம் மற்றும் இழிவான தன்மையுடன், வார்த்தைகள் திரிபுபடுத்தப்பட்டு அவற்றின் அசல் மற்றும் புறநிலை அர்த்தத்திற்கு எதிரான ஒரு பொருள் கொடுக்கப்படுகின்றது. எனவே இனப்படுகொலையை கண்டனம் செய்வது இப்போது 'யூத எதிர்ப்பு' என்று அறிவிக்கப்படுவதுடன், நாஜி பாணியிலான வெகுஜன படுகொலை பிரச்சாரத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கும் யூத மக்கள் யூத-எதிரிகளாக கண்டிக்கப்படுகிறார்கள்.

நாஜி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர், எண்ணற்ற கல்வியாளர்கள் மூன்றாம் ஜேர்மன் குடியரசு ஒரு வினோதமான வரலாற்று நிகழ்வு, எதிர்பாராத கார் விபத்து போன்றது, இது தர்க்கரீதியான விளக்கத்தை மீறியது என்று வாதிட்டனர். மார்க்சியத்தை மறுத்து, பேரழிவுக்கான பொறுப்பிலிருந்து முதலாளித்துவத்தையும் அதன் ஆளும் உயரடுக்கினரையும் விடுவிக்கும் முயற்சியில், பாசிசத்திற்கான காரணம் முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் ஏகாதிபத்திய புவிசார் அரசியலில் காணப்படவில்லை, மாறாக உளவியலில், அதாவது மனித நனவின் பகுத்தறிவற்ற தன்மையில் காணப்பட்டது என்று வாதிடப்பட்டது.

இத்தகைய விளக்கங்கள், 1930கள் மற்றும் 1940களின் பேரழிவுகளுக்கான உண்மையான காரணங்களைப் பற்றிய அறிவியல் பூர்வமான நுண்ணறிவை வழங்காததோடு, தற்போது வெளிப்படும் நிகழ்வுகளை விளக்குவதில் அவை பயனற்றவை ஆகும். நாஜி ஆட்சியின் சரிவு மற்றும் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து எண்பது ஆண்டுகளின் பின்னர், அரசியலமைப்பு ஜனநாயகம் உடைந்து, பாசிச அரசியல்வாதிகளின் செல்வாக்கும் சக்தியும் வளர்ந்து வருகின்றன. அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் இராணுவச் செலவுகளை பெருமளவில் அதிகரித்து வருகின்றன. தசாப்தத்தின் இறுதிக்குள் ரஷ்யாவுடன் ஒரு புதிய போருக்குத் தயாராக வேண்டியதன் அவசியத்தைப் பற்றி ஜெர்மன் அரசியல் தலைவர்கள் பேசுகின்றனர். இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மனிதகுலம் ஒரு அணுசக்தி உலகப் போருக்கு நெருக்கமாக உள்ளது.

கடந்த நூற்றாண்டில், போர் மற்றும் பாசிசத்திற்கு வழிவகுத்த முதலாளித்துவ அமைப்பின் அதே பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகளே, இப்போதைய அரசியல் காட்டுமிராண்டித்தனம் மற்றும் பேரழிவு தரும் உலகப் போருக்குச் செல்வதற்கான தீர்க்கமான காரணங்களாக இருக்கின்றன. இந்த ஒன்றோடொன்று தொடர்புடைய முரண்பாடுகள், முதலில், முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புடன் உலகப் பொருளாதாரத்தின் பொருந்தா தன்மை; இரண்டாவதாக, சமூக ரீதியில் அழிவுகரமான தன்மை கொண்ட, பண வெறி பிடித்த தன்னலக் குழுக்களால் (oligarchs) கட்டுப்படுத்தப்படும், உற்பத்தி சாதனங்களின் முதலாளித்துவ தனியார் உடைமைக்கும் பில்லியன் கணக்கான மக்களின் உழைப்பை உள்ளடக்கிய சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சமூகமயப்படுத்தப்பட்ட உற்பத்திக்கும் இடையிலான முரண்பாடாகும்.

இந்த முரண்பாடுகள் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு வழிவகுத்ததை விட இன்று, பல மடங்கு பெரிய அளவிலும் தீவிரத்திலும் செயல்படுகின்றன. தேசிய பொருளாதாரங்களின் இறையாண்மை ஒரு பரந்த உலகளாவிய உற்பத்தி வலையமைப்பால் கலைக்கப்பட்டுள்ளது. பொருட்களின் உற்பத்தி என்பது உலகம் முழுவதிலுமிருந்து வரும் தொழிலாளர்களின் உழைப்பை ஒருங்கிணைக்கும் ஒரு செயல்முறையை உள்ளடக்கியுள்ளது. பொருட்களின் பெரும் பாகங்களில் குறிப்பிட்ட தேசிய தோற்றத்தை அடையாளம் காணும் முயற்சிகள் அனைத்தும் அபத்தமானவை. தேசிய பொருளாதாரத்தின் புனிதத்தை வலியுறுத்தி, தேசிய அடிப்படையிலான உற்பத்தியை அதன் உச்ச இலட்சியமாக அறிவிக்கும் அதேவேளை, அனைத்து ஏகாதிபத்திய அரசுகளின் உண்மையான குறிக்கோள், உலக உற்பத்தி வலையமைப்புகள் மற்றும் உலகளாவிய உற்பத்தி பண்ட சங்கிலியின் மீது கட்டுப்பாட்டை வைத்திருப்பது அல்லது ஒரு சாதகமான நிலையை தக்க வைத்துக்கொள்வதாக உள்ளது. ஆதிக்கம் அல்லது உயிர்வாழ்வதற்கான போராட்டமானது தவிர்க்க முடியாமல், உழைப்பு மற்றும் உலக சந்தைகள் உட்பட முக்கியமான வளங்களை பெறுவதில் கடுமையான போராட்டங்களுக்கு வழிவகுக்கிறது.

இந்த உலகப் போராட்டத்தில் பிரதான கதாபாத்திரம் வகிப்பது அமெரிக்கா ஆகும். அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பூகோள மேலாதிக்கத்திற்கான போராட்டத்தில், குறிப்பாக அதன் இரக்கமற்ற மற்றும் வன்முறைத் தன்மையை கொண்ட செயல்களுக்கு காரணமாக இருப்பது, உண்மையான பொருளாதார சக்தி என்ற நிலையிலிருந்து அதன் நீடித்த வீழ்ச்சியே ஆகும். அமெரிக்க தொழில் துறைகள் உலகை ஆதிக்கம் செலுத்திய, டொலரின் அதிகாரம் தங்கத்தால் ஆதரிக்கப்பட்ட, வெளிநாட்டு வர்த்தக உபரிகளால் அங்கீகரிக்கப்பட்ட, அதன் உண்மையான பாரிய தொழில்துறை அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த, அமெரிக்க உற்பத்தி சக்தியின் செழிப்பு நாட்கள், ​​நீண்ட காலத்துக்கு முன்னரே முடிவுக்கு வந்துவிட்டன.

அமெரிக்க கூட்டாட்சி கடன் [Photo by Federal Reserve Economic Database]

கடந்த அரை நூற்றாண்டில், அமெரிக்க பொருளாதாரத்தின் உண்மையான அடித்தளம் தொழில்துறை உற்பத்தியிலிருந்து நிதி ஒட்டுண்ணித்தனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் செல்வமானது உற்பத்தி வளர்ச்சியின் அடிப்படையில் அன்றி, வரம்பற்ற கடனின் விரிவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. அமெரிக்க முதலாளித்துவம் இப்போது போலி மூலதனத்தின் ஒரு பெரிய மாளிகையை உள்ளடக்கிக்கொண்டுள்ளது -எதிர்கால வருமான ஓட்டத்துக்கான சட்டப்பூர்வ உரிமைகோரல்களானவை கடன்கள் மற்றும் முடிவற்ற கடன் உருவாக்கத்திலேய தங்கியிருக்கின்றன.

அமெரிக்க மத்திய அரசின் மொத்த கடன் 1970 இல் 371 பில்லியன் டொலராக இருந்தது. இது 1980 இல் 908 பில்லியன் டொலராக உயர்ந்தது. 2020 வாக்கில் இது 26 டிரில்லின் டொலராக உயர்ந்தது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேலும் 10 டிரில்லியன் டொலரால் உயர்ந்துள்ளது. ஒட்டுண்ணித்தனத்தின் அளவு கிட்டத்தட்ட புரிந்துகொள்ள முடியாததாக உள்ளது. அமெரிக்க நிதி நிறுவனங்கள் ஊடாக புழக்கத்தில் உள்ள நிதிகளில் சுமார் 15 சதவீதம் மட்டுமே புதிய வணிக முதலீட்டிற்கு நிதியளிக்கிறது என்ற உண்மை, செல்வத்தின் போலித் தன்மைக்கு எடுதுக்காட்டாகும். மீதமுள்ள 85 சதவீதம் இருக்கும் சொத்துக்களுக்குப் பின்னால் துரத்துகிறது. இதனால், வோல் ஸ்ட்ரீட் மற்றும் உலகளாவிய நிதிச் சந்தைகளில் வாங்கப்பட்டு விற்கப்படும் பங்குகளின் விலை, உழைப்புச் சக்தியை செலவிட்டு செய்யப்படும் உண்மையான உற்பத்தி செயல்பாட்டில் உபரி மதிப்பை உருவாக்குவதுடன் அநேகமாக தொடர்புபட்டிருக்கவில்லை.

மெக்கின்சி குளோபல் நிறுவனம் 2021 இல் வெளியிட்ட சர்வதேச நிதி பற்றிய ஆய்வில் கூறியதாவது: “2000 முதல் 2020 வரை, பங்குகள், பத்திரங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் போன்ற நிதி சொத்துக்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 8.5 இலிருந்து 12 மடங்கு அதிகரித்தன. சொத்து விலைகள் உயர்ந்ததால், நிகர புதிய முதலீட்டில் ஒவ்வொரு டொலருக்கும் கிட்டத்தட்ட 2 டொலர் கடனும், கடன் உட்பட மொத்த பொறுப்புகளில் சுமார் 4 டொலரும் உருவாக்கப்பட்டது.”

சமீபத்திய மாதங்களில், அமெரிக்க டொலர் மீது வளர்ந்து வரும் நம்பிக்கையீனம் பற்றி ஏராளமான தகவல்கள் எழுதப்பட்டுள்ளன. இது வோல் ஸ்ட்ரீட்டில் பல விற்றுத்தள்ளல்களுக்கு வழிவகுத்ததுடன் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 3,500 டொலராக உயர்ந்துள்ளது. இது ஆகஸ்ட் 1971 இல் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன், ஒரு அவுன்ஸ் தங்கம் 35 டொலர் என்ற விகிதத்தில் டொலரை தங்கமாக மாற்றுவதை முடிவுக்குக் கொண்டுவந்தபோது காணப்பட்ட​​ தங்கத்தின் அதிகாரப்பூர்வ விலையை விட நூறு மடங்கு அதிகம் ஆகும்.

'நம்பிக்கை இழப்பு' என்பதன் புறநிலை முக்கியத்துவம் என்னவென்றால், அமெரிக்காவின் பாரிய வர்த்தக பற்றாக்குறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடன் குவிப்பின் நீடித்த தன்மை இப்போது உலகளாவிய முதலீட்டாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. வெளிப்படையாகக் கூறினால், அமெரிக்கா திவால்நிலையை நெருங்கி வருவதாக அஞ்சப்படுகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல் இங்கேதான் உள்ளது. அவரது கொள்கைகள் எவ்வளவு வெறித்தனமாகவும் பொறுப்பற்றதாகவும் தோன்றினாலும், அவை அனைத்தும், இறுதி பகுப்பாய்வில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மையான நெருக்கடிக்கு அவநம்பிக்கையான பிரதிபலிப்பாகும். முதலாளித்துவத்தின் அடிப்படையில் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு எந்த மனிதாபிமான பதிலும் இல்லாததால், ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகள் நெருக்கடியை ஆழமாக்கி விஷயங்களை மோசமாக்குகின்றன.

பல ட்ரில்லியன் டொலர் வர்த்தக பற்றாக்குறைகள் வரிகளை விதிப்பதன் மூலம் குறைக்கப்படும். முக்கியமான சமூகத் திட்டங்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் நடத்துவதன் மூலம் பாரிய வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகள் குறைக்கப்படும். உற்பத்தி மூலம் செல்வத்தை உருவாக்க இயலாத ட்ரம்ப், மற்ற நாடுகளின் வளங்களை கொள்ளையடிக்க வெளிப்படையாகத் திட்டமிட்டுள்ளார். ட்ரில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள மூலோபாய கனிம வளங்கள் மட்டுமே உக்ரேனின் தலைவிதி சம்பந்தமாக அமெரிக்கா ஆர்வம் காட்டுவதற்கு காரணம், என்று அவர் வெளிப்படையாகக் கூறினார். பதவியேற்றதிலிருந்து அவர் கூறிய உண்மையான கருத்து இதுவாக இருக்கலாம்,

1938 இல், ஹிட்லர் ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவை இணைத்துக்கொண்டதைப் பின்பற்றி, ட்ரம்ப் கனடா மற்றும் கிரீன்லாந்தை கைப்பற்றுவதாக அச்சுறுத்துகிறார். பனாமா கால்வாய் மீது அமெரிக்க கட்டுப்பாட்டை மீண்டும் நிறுவுவதற்கான தனது நோக்கத்தை அவர் அறிவித்துள்ளார்.

28 மார்ச் 2025 வெள்ளிக்கிழமை, கிரீன்லாந்தில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் பிட்டுஃபிக் விண்வெளி தளத்தில் துணைத் ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உரையாற்றுவதை, எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் (இடதுபுறம்), வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். [AP Photo/Jim Watson]

ஹிட்லருக்கும் ட்ரம்பிற்கும் இடையே புறநிலை உந்துதல்கள் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் ஒரு தனித்துவமான ஒற்றுமை உள்ளது. மறைந்த பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் டிம் மேசன், ஹிட்லரின் அரசாங்கத்தை 'பெருமளவில் அதுவே உருவாக்கிய பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளில் மேலும் மேலும் சிக்கிக் கொண்ட ஒரு ஆட்சி' என்றும், “தொடர்ச்சியான திடீர் கொள்கை சூழ்ச்சிகள் மற்றும் வெடிக்கக்கூடிய நிலையிலான அபாயங்களை எடுப்பதன் மூலம், அதன் தனித்துவமான அடையாளத்திலிருந்து தப்பிக்க அல்லது அதை தீர்க்க அல்லது பராமரிக்க முயன்றது' என்றும் விவரித்தார். அமெரிக்காவில் பல தசாப்தங்களாக அடிப்படை நெருக்கடி உருவாகி வருகிறது என்ற நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், ஹிட்லரின் கொள்கை வகுத்தல் குறித்த வரலாற்றாசிரியரின் விளக்கம், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதிக்கும் பொருந்தும்.

ட்ரம்பின் கொள்கைகளை, ஒரு தீய முட்டாள்தனத்தின் உளவியல் பிரச்சினையாக அன்றி, முற்போக்கான அல்லது அமைதியான பதில் இல்லாத ஒரு நெருக்கடிக்கு, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பாக ஆராயப்படும்போது, அது,​​அமெரிக்காவின் 'அதிகாரத்திற்கான விருப்பத்தின்' பிற்போக்கு மற்றும் வன்முறை உள்ளியல்பைப் பற்றிய ட்ரொட்ஸ்கியின் நுண்ணறிவை நிரூபிக்கிறது. 1928 இல் ட்ரொட்ஸ்கி எழுதியதாவது:

“நெருக்கடி காலத்தில், அமெரிக்காவின் மேலாதிக்கம், செழிப்பு காலத்தை விட முழுமையாகவும், வெளிப்படையாகவும், இரக்கமின்றியும் செயல்படும். ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவில் இது நடந்தாலும் சரி, அல்லது இது அமைதியாகவோ அல்லது போரின் மூலமாகவோ நடந்தாலும் சரி, அமெரிக்கா முதன்மையாக ஐரோப்பாவின் இழப்பில் தனது சிரமங்கள் மற்றும் நோய்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயலும்.”

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1934 இல், அவர் மற்றொரு மெய் சிலிர்க்கும் கணிப்பை வெளியிட்டார். அவர் எழுதியதாவது:

“உலகம் பிரிக்கப்பட்டுள்ளதா? அது மீண்டும் பிரிக்கப்பட வேண்டும். ஜெர்மனியைப் பொறுத்தவரை இது 'ஐரோப்பாவை ஒழுங்கமைப்பது' பற்றிய பிரச்சினையாகும். அமெரிக்காவுக்கு உலகை 'ஒழுங்கமைக்க' வேண்டிய பிரச்சினை ஆகும். வரலாறு மனிதகுலத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலைபோன்ற வெடிப்புடன் நேருக்கு நேர் கொண்டு வருகிறது.”

1932 இல் லியோன் ட்ரொட்ஸ்கி

அந்த வெடிப்பு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பூகோளப் போருக்கான தயாரிப்புக்கு உள்நாட்டில் போரை தீவிரப்படுத்துவது அவசியமாக்குகிறது. ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்திலிருந்தே, ஜனாதிபதி பதவியை ஒரு இராணுவ-பொலிஸ் அரச சர்வாதிகாரத்தை செயல்படுத்தும் அறையாகப் பயன்படுத்தி வருகிறார். அரசியலமைப்பு மற்றும் சட்ட மரபுகளை தான் அவமதிப்பதாக அவர் எந்த பாசாங்கும் செய்யவில்லை. காங்கிரஸின் ஒப்புதலைப் பெறுவதற்குப் பதிலாக, ட்ரம்ப் நிர்வாக உத்தரவுகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதானது, அவரது வரம்பற்ற அதிகாரங்களை நிரூபிப்பதாகும். டிரம்ப் கையொப்பமிட்டு ஏப்ரல் 28 அன்று வெளியிடப்பட்ட ஒரு நிர்வாக உத்தரவு, சட்டக் கட்டுப்பாடுகள் இல்லாமல், பொலிஸ் அதிகாரத்தை வரம்பற்ற முறையில் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கிறது. உத்தரவின் பிரிவு 4, 'சட்டம் மற்றும் ஒழுங்கிற்காக தேசிய பாதுகாப்பு வளங்களைப் பயன்படுத்துதல்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அது பிரகடனம் செய்வதாவது:

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 90 நாட்களுக்குள், சட்டமா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளரும், உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஏஜன்சிகளின் தலைவர்களுடன் பொருத்தமான வகையில் கலந்தாலோசித்து, மாநில மற்றும் உள்ளூர் சட்ட அமுலாக்கத்திற்கு உதவுவதற்காக உள்ளூர் அதிகார வரம்புகளில் அதிகப்படியான இராணுவ மற்றும் தேசிய பாதுகாப்பு வளங்களின் ஒதுக்கீடுகளை அதிகரித்துக்கொள்ளலாம்.

பின்னர் அந்தப் பிரிவு கூறுவதாவது

பாதுகாப்புச் செயலாளர், சட்டமா அதிபருடன் ஒருங்கிணைந்து, குற்றங்களைத் தடுக்க இராணுவ மற்றும் தேசிய பாதுகாப்பு வளங்கள், பயிற்சி, உயிருக்கு ஆபத்தில்லா உபகரணங்கள் மற்றும் சிப்பாய்களை எவ்வாறு மிகவும் விளைபயனுள்ள வகையில் பயன்படுத்தலாம் என்பதைத் தீர்மானிப்பார்.

அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த உத்தரவானது -'குற்றத்தை எதிர்த்துப் போராடுதல்' என்ற வெளிப்படையான மோசடி போர்வையில்- உரிமைகள் திருத்தச் சட்டத்தை ஒழிக்கிறது. இந்த நிர்வாக ஆணையின் சர்வாதிகார தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் பிரிவு 6, பின்வருமாறு கூறுகிறது:

சட்ட மா அதிபரும் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளரும், 20 ஜனவரி 2025 (படையெடுப்பிலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாத்தல்) அன்று நிர்வாக ஆணை 14159 இன் படி உருவாக்கப்பட்ட, உள்நாட்டுப் பாதுகாப்புப் பணிப் படைகளை (HSTFs) பயன்படுத்தி இந்த உத்தரவின் நோக்கங்களை ஒருங்கிணைத்து முன்னேற்றுவார்கள்.

தனது சர்வதேச கொள்கைகளைப் போலவே, ட்ரம்ப் தனது தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் மட்டுமன்றி, அமெரிக்காவை ஆளும் தன்னலக் குழுவின் பிரதிநிதியாகவும் செயல்படுகிறார்.

ட்ரம்ப் நிர்வாகம் ஒரு விதிவிலக்கு அல்ல; மாறாக, அது ஜனநாயகத்துடன் பாரிய சமூக சமத்துவமின்மையின் பொருந்தாத தன்மையின் அரசியல் வெளிப்பாடாகும். உலகின் பணக்காரரை தனது முதன்மை ஆலோசகராகத் தேர்ந்தெடுத்து, மெகா மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களை தனது அமைச்சரவையில் அமர்த்தும் ட்ரம்ப், தனது அரசாங்கமானது தன்னலக் குழுவினால் தன்னலக் குழுக்களுகாக அமைக்கப்பட்ட ஒரு அரசாங்கம் என்பதை மறைக்க கொஞ்சமும் முயற்சிப்பதில்லை. ஆனால் ட்ரம்ப் தன்னலக் குழுவை உருவாக்கவில்லை. இது நிதியமயமாக்கல் செயல்முறை மற்றும் போலி மூலதன குவிப்பின் விளைவாகும்.

11 பெப்ரவரி 2025 செவ்வாய்க்கிழமை, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் எலோன் மஸ்க் பேசும்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக்கொண்டிருக்கின்றார். [AP Photo/Alex Brandon]

பொருளாதார ரீதியில் நோயுற்ற நிலையில் இருந்துகொண்டு பங்குதாரர் மதிப்பு என்று அழைக்கப்படுவதை அதிகரிப்பதற்காக கவனம் செலுத்துவதனாது -அதாவது, தன்னலக் குழுக்களின் வருமான பெருக்கெடுப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதனாது- ஒரு உள்ளார்ந்த ஊழல் அமைப்பை நியாயப்படுத்துகிறது. இந்த ஊழல் முறைமையில், இலாபமானது உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து பெறப்படவில்லை, மாறாக, எடுத்துக்காட்டாக பங்குகளை மீளக் கொள்வனவு செய்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் சொத்துக்களை வாங்குவதை ஊக்குவித்தல் போன்ற, சூழ்ச்சித்திறனைக் கையாளுவதன் மூலமே பெறப்படுகிறது.

தெளிவான சொற்களில், பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்டாலும் கூட, பல பில்லியனர் தன்னலக் குழுக்களின் தனிப்பட்ட செல்வம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் செல்வங்களை சுருட்டிக்கொண்ட பிரபுக்களின் செல்வத்தை விட அதிகமாக உள்ளது. மக்கள்தொகையின் ஒரு சிறிய பிரிவில் குவிந்துள்ள செல்வத்தின் அளவுடன் ஒப்பிடமுடியாதுள்ளது. அமெரிக்காவில் செல்வ விநியோகம் குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட பகுப்பாய்வு, 2024 ஆம் ஆண்டில் 19 பணக்கார அமெரிக்க குடும்பங்களுக்காக 1 ட்ரில்லியன் டொலர் மேலதிக செல்வம் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தது. மக்கள்தொகையில் இந்த 0.00001 சதவீதத்தினர் –அதாவது கோடிக்கு ஒருவர்- மொத்த அமெரிக்க குடும்ப செல்வத்தில் கிட்டத்தட்ட 2 சதவீதத்தை தன்வசம் கொண்டுள்ளார்.

சமூக துருவமுனைப்படுதல் போக்கு ஒரு வீரியம் மிக்க புற்றைப் போல வளர்ந்து வருகிறது. 2021 இல் 1,370 பில்லியனர்கள் இருந்தனர். 2024 இறுதியில், இந்த எண்ணிக்கை 1,990 ஆக உயர்ந்துள்ளது. இது 45 சதவீதம் அதிகரிப்பாகும். அமெரிக்காவின் செல்வத்தில் 31 சதவீதத்தை அதி பணக்காரர்களில் 1 சதவீதம் பேர் சொந்தமாக வைத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, அதி செல்வந்த 10 சதவீதம் பேர் நாட்டின் செல்வத்தில் 67 சதவீதத்தை சொந்தமாக வைத்துள்ளனர். ஒப்பிடுகையில், கீழ்மட்ட 50 சதவீதம் பேர் 3 சதவீதத்தை மட்டுமே சொந்தமாக வைத்துள்ளனர்.

சமூக சமத்துவமின்மையின் இந்த அதிர்ச்சியூட்டும் அளவை ஜனநாயக ரீதியில் பேண முடியாது. பெருத்தனவந்த குழுக்கள், குறிப்பாக 2008 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் போல், முழு மோசடி அமைப்பும் சரிவின் அபாயத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலைகளில், நிதிச் சந்தைகளுக்கு தொடர்ச்சியான கடன் வழங்கல் மற்றும் கடன் உட் செலுத்துதலையே சார்ந்து இருக்கிறார்கள் என்பதை வலியுறுத்த வேண்டும்.

இந்த செயல்முறை, COVID-19 தொற்றுநோய்க்கு பெடரல் ரிசர்வ் மற்றும் மத்திய வங்கிகளின் பிரதிபலிப்பில் எடுத்துக்காட்டப்பட்டது. அரசாங்கங்களின் பிரதான அக்கறை உயிர்களைக் காப்பாற்றுவதாக இருக்கவில்லை. மாறாக நிதிச் சந்தைகளையும் அவற்றின் ஆளும் வர்க்க முதலீட்டாளர்களையும் காப்பாற்றுவதாகவே இருந்தது.

இந்தப் கூட்டத்திற்கு விரைவில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கவிருக்கும் எனது தோழர் நிக் பீம்ஸ் விளக்கியது போல்:

நிதிய தன்னலக் குழுக்களின் செல்வமானது உற்பத்தி மூலம் மதிப்பை உருவாக்குவதன் மூலம் அன்றி, மாறாக, நிதிச் சந்தைகளில் அரசு தொடர்ந்து போலியான மூலதனத்தை உட்செலுத்துவதன் மூலமே முண்டுகொடுக்கப்படுகின்றது.

புறநிலை அடிப்படையில், ஜனநாயகத்தின் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதல், சமூகத்தில் நிலவும் வர்க்க உறவுகளுக்கு ஏற்ப அரசியல் ஆட்சி வடிவமானது வன்முறையாக மீண்டும் அணிதிரள்கின்றது. வெள்ளை மாளிகையானது மோசடியின் துர்நாற்றம் வீசும் சாணக் குவியலின் மேல் மிதக்கிறது. மோசடியின் தலைசிறந்த வியாபாரியான ட்ரம்ப், ஒரு குற்றவியல் தன்னலக் குழு கும்பலின் உருவகமே தவிர வேறொன்றுமில்லை.

அமெரிக்க அனுபவம் தனித்துவமானது அல்ல. இது அனைத்து பிராதன முதலாளித்துவ நாடுகளிலும் பரவி வரும் அரசியல் மற்றும் சமூக எதிர் புரட்சி அலையின் மிகவும் பிரசித்தமான வெளிப்பாடு மட்டுமே. மிலனில் முசோலினியின் உடல் அவரது குதிக்காலில் தொங்கவிடப்பட்டு, ஹிட்லர் தனது வாயில் ஒரு தோட்டாவை சுட்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட, எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், கிட்டத்தட்ட அனைத்து முன்னேறிய நாடுகளிலும் பாசிசக் கட்சிகளும் அரசியல்வாதிகளும் பலம் பெற்று வருகின்றனர். இந்த அரசியல் உண்மையையும் அதன் ஆபத்தான தாக்கங்களையும் எதிர்க்க வேண்டும். ஆபத்து எப்படியோ கடந்துவிடும், அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்பிக்கொள்ளும் சுய ஏமாற்றுதலுடன் சேர்ந்து, யதார்த்தத்தை மென்மையாக்குவதானது அரசியல் பேரழிவுக்கான பாதையைத் திறந்து விடுவதற்கு மட்டுமே உதவுகிறது.

ஆனால், பாசிச ஆபத்தின் அளவையும் உலகப் போரின் அச்சுறுத்தலையும் ஒப்புக்கொள்வது என்பது உலக முதலாளித்துவ நெருக்கடியின் தவிர்க்க முடியாத விளைவாக இரண்டையும் ஏற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்துவதில்லை. மிகவும் மாறுபட்ட விளைவு சாத்தியமாகும். பாசிசத்தின் ஆபத்தை ஒருவர் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆனால் அதை யாரும் மிகைப்படுத்தவும் கூடாது. டிரம்ப், தனது நோக்கங்களிலும் ஆளுமையிலும், ஒரு பாசிஸ்ட். ஆனால் ஹிட்லர் செய்தது போல், ஒரு வெகுஜன பாசிச இயக்கத்தை அவர் இன்னும் கட்டளையிடவில்லை. அத்தகைய வெகுஜன பிற்போக்கு இயக்கத்தின் வளர்ச்சியும் வெற்றியும் தொழிலாள வர்க்கத்தின் மனச்சோர்வைச் சார்ந்துள்ளது என்று வரலாறு கற்பிக்கிறது. ஆனால் இன்று நிலவும் சூழ்நிலை அதுவல்ல.

இந்த தசாப்தத்தின் முதல் ஐந்து ஆண்டுகளில் முதலாளித்துவ அரசியல் ஒரு மூர்க்கமான பிற்போக்கு தன்மையைப் பெற்றுள்ளது என்பது உண்மைதான்.

முதலாளித்துவ-ஏகாதிபத்திய எதிர்வினையின் வளர்ச்சியுடன், தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் சமூக மற்றும் அரசியல் தீவிரமயமாக்கல் என்ற மற்றொரு எதிர் செயல்முறை நிகழ்ந்து வருகிறது. இந்த இயக்கம் உலக அளவில் பலமடைந்து வருகிறது.

ஆளும் உயரடுக்கினரை பாசிசம் மற்றும் போரை நோக்கித் தள்ளும் அதே பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகளே, வர்க்கப் போராட்டம் மற்றும் சமூகப் புரட்சியை தீவிரப்படுத்துவதற்கான உந்துதலை வழங்குகின்றன. ஆகஸ்ட் 1914 இல், முதலாம் உலகப் போர் வெடித்ததைத் தொடர்ந்து, 1917 பெப்ரவரியில் வெடித்த ரஷ்யப் புரட்சி, 1917 அக்டோபரில் போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றவும் உலகின் முதல் தொழிலாளர் அரசை நிறுவவும் வழிவகுத்தது. இரண்டாம் உலகப் போரானது தொழிலாள வர்க்கத்தினதும் காலனித்துவத்தக்கு உட்பட்டிருந்த மக்களினதும் உலகம் முழுவதும் பரவிய வெகுஜன புரட்சிகரப் போராட்ட அலையை கட்டவிழ்த்துவிட்டது.

அக்டோபர் 1917 இல் தொழிலாளர்கள் மற்றும் வீரர்களின் ஆர்ப்பாட்டம்

இன்று அதே வரலாற்று இயங்கியல் செயல்படுகிறது. காலாவதியான முதலாளித்துவ அமைப்பின் அடித்தளத்தில் உருவாகும் உலகளாவிய நெருக்கடி, இரண்டு சாத்தியமான தீர்மானங்களை அனுமதிக்கிறது -பாசிசம் மற்றும் போரின் விளைவாக மனித சமூகத்தின் முடிவு அல்லது சோசலிசப் புரட்சி மூலம் அது புதுப்பிக்கப்படுதல் ஆகும்.

தற்போது நிலவும் அனைத்து ஆபத்துகளும் இருந்தபோதிலும், ஆளும் வர்க்கத்தின் பிரமாண்டமான அழிவுகரமான வளங்கள் மற்றும் திறன்களை குறைத்து மதிப்பிடாமல், சமூகப் புரட்சிக்கான சாத்தியக்கூறு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. புறநிலை அர்த்தத்தில், தொழிலாள வர்க்கத்தின் சக்தி அதன் உச்சத்தில் உள்ளது. தேசிய-அரசு அமைப்பின் சிதைவு முதலாளித்துவ ஆட்சியின் வரலாற்று அடித்தளத்தை வெகுவாக அரித்துவிட்டது. ஆனால் உற்பத்தியின் பூகோளமயமாக்கலானது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அளவையும் சாத்தியமான பொருளாதார சக்தியையும் பெருமளவில் விரிவுபடுத்தியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில், உலகளாவிய பாட்டாளி வர்க்கம் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்களால் வளர்ந்துள்ளது. ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் அளவு அதிகரித்துள்ளது. முன்னேறிய நாடுகளில் தொழிலாள வர்க்கமயமாக்கல் செயல்முறையானது முன்னர் குட்டி முதலாளித்துவம் அல்லது நடுத்தர வர்க்கம் என்று வரையறுக்கப்பட்ட தொழில்களையும் விழுங்கிவிட்டது. முன்பு நடுத்தர வர்க்கப் பதவிகளில் இருந்த பலர் உட்பட 60 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு ஊதியம் கிடைத்தால்தான் வாழ்வு. அதிக ஊதியம் பெறும் தொழிலாளர்கள் கூட இப்போது கிட்டத்தட்ட எல்லாவற்றுக்கும்  சம்பளத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள். 1930 களில், ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், அமெரிக்காவை வீட்டு உரிமையாளர்களின் தேசமாக மாற்றுவதன் மூலம் புரட்சியைத் தடுப்பேன் என்று இழிவாகக் குறிப்பிட்டார். ஆனால் கடந்த 45 ஆண்டுகளில், தொழிலாள வர்க்க வீட்டு உரிமை 65 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஒரு காலத்தில் கட்டுக்கதையாகக் கூறப்பட்ட 'வரம்பற்ற வாய்ப்புகளின் நிலம்' இப்போது செலுத்த முடியாத கடனின் நிலமாக மாறியுள்ளது. அமெரிக்க வீட்டுக் கடன் இப்போது 17.5 ட்ரில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இதில் அடமானங்கள் 12.4 ட்ரில்லியன் டொலர், கார் கடன்கள் 1.6 ட்ரில்லியன், கடன் அட்டை கடன் 1.1 ட்ரில்லியன் மற்றும் தனிநபர் கடன்கள் 600 பில்லியன் டொலர்கள் ஆகும். மாணவர்களைப் பொறுத்தவரை, வாழ்க்கையைத் தொடங்கும் போதே, ​​அவர்கள் 1.7 ட்ரில்லியன் டொலர் கடன் சுமையைச் சுமக்கிறார்கள். சராசரியாக, 43 மில்லியன் தற்போதைய அல்லது முன்னாள் மாணவர்கள், 37,000 டொலர் கடன்பட்டுள்ளனர். பல பட்டதாரி மாணவர்கள் இன்னும் அதிகமாக கடன்பட்டுள்ளனர்.

ஆனால், இந்த புள்ளிவிவரங்கள் சமூக துயரத்தின் குறிகாட்டிகளாக எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், அவை மட்டுமே சோசலிசப் புரட்சியின் தீர்க்கமான உந்துசக்தி அல்ல. தேசிய அரசு முறைமைக்கு அழிவுகரமான பூகோளமயமாக்கல் நிகழ்வுப் போக்கானது, தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைக்கிறது. பூகோள பண்ட உற்பத்தி சங்கிலிகளை நனவுடன் இயக்கப்பட்ட புரட்சிகர நடவடிக்கைக்கான உலகளாவிய வலையமைப்புகளாக மாற்ற முடியும்.

வரலாற்றில் மிகப்பெரிய அறிவியல் புரட்சிகளில் ஒன்றின் மத்தியில் நாம் தற்போது வாழ்ந்து வருகிறோம். இந்தப் புரட்சியின் துணை விளைபொருளான தகவல் தொடர்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், உலக அளவில் அதன் போராட்டங்களைத் திட்டமிடுவதற்கும், ஒழுங்கமைப்பதற்கும், இயக்குவதற்கும் தொழிலாள வர்க்கத்திற்கு அசாதாரண வழிகளை வழங்கியுள்ளன.

தொழிலாள வர்க்கம் பயன்படுத்தக் கூடிய மற்றொரு சக்திவாய்ந்த ஆயுதம் இப்போது கிடைக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, தொழிலாள வர்க்கத்துக்கு தகவல் மற்றும் அறிவை பெறும் திறனில் அதிவேக அதிகரிப்பை சாத்தியமாக்குகிறது. நிச்சயமாக, ஆளும் உயரடுக்குகள் இந்த தொழில்நுட்பங்களை இலாப அமைப்பின் நலனுக்காகப் பயன்படுத்த முயல்கின்றன.

ஆனால் செயற்கை நுண்ணறிவானது, வெகுஜனங்களுக்கு கல்வி மற்றும் அரசியல் அறிவொளியை ஊட்ட இதுவரை கற்பனை செய்ய முடியாத சாத்தியக்கூறுகளைத் திறந்து விட்டிருக்கிறது. சோசலிச இயக்கத்தின் வரலாற்று கீதமான “சர்வதேச கீதத்தில்” விடுக்கப்படும் தொழிலாளர்களுக்கான வேண்டுகோளில் 'அனைத்து மூடநம்பிக்கைகளையும் ஒழித்துக்கட்டுங்கள்' எனக் கூறப்படுவதை உணர ஒரு சக்திவாய்ந்த வழி கிடைத்துள்ளது. 1945 ஜூலையில் முதல் அணுகுண்டு வெடிப்பைக் கவனித்தபோது, ​​இயற்பியலாளர் ரொபர்ட் ஓப்பன்ஹைமர், “நான் காலன், உங்களை அழிக்க வந்தவன்” என்று பகவத் கீதையில் இருந்து ஒரு பகுதியை நினைவு கூர்ந்தார். 'அதிவேக விரிவாக்கப்பட்ட மனித நுண்ணறிவு' தொழில்நுட்பம் என்று மிகவும் பொருத்தமாக வகைப்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியுடன் -அது மக்களின் அரசியல் நடைமுறையில் ஊடுருவி செல்வாக்கு செலுத்தும் அளவிற்கு- முதலாளித்துவத்தை அழிப்பவனாக மாறுகிறது.

ஆனால் தொழில்நுட்பத்தால் மட்டுமே சோசலிசப் புரட்சியைக் கொண்டு வர முடியாது. உலக முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் அதன் சோசலிச தீர்வை அமுல்படுத்த, அது புரட்சிகரத் தலைமை நெருக்கடியைத் தீர்க்க வேண்டும். வர்க்கப் போராட்டத்தை அடக்குவதற்கு தங்கள் சக்தியில் உள்ள அனைத்தையும் செய்யும் முதலாளித்துவ சார்பு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கட்டுப்பாட்டிலிருந்து அது விடுபட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கம் அனைத்து வகையான பிற்போக்கு தேசியவாதத்தையும் நிராகரிக்க வேண்டும். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்கான அழைப்பு ஒரு கற்பனாவாதக் கனவு அல்ல. இது நவீன உலகில் புரட்சிகர மூலோபாயத்தின் அத்தியாவசியமான மற்றும் ஒரே யதார்த்தமான அடித்தளமாகும்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, வியட்நாமிய தொழிலாளர்களும் விவசாயிகளும் சைகோனுக்குள் நுழைந்து அமெரிக்காவின் கைக்கூலி அரசாங்கத்தைத் தூக்கியெறிந்து 1975 மே தினத்தைக் கொண்டாடினர். இது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு பெரிய தோல்வியாகும். ஆனால் மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கில் உள்ள ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் தேசியக் கொள்கைகளால் புரட்சி தனிமைப்படுத்தப்பட்டது. தேசிய ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டமை, 30 ஆண்டுகால போராட்டத்தின் அனைத்து தியாகங்களையும் மீறி, முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதற்கும் வியட்நாமை மலிவு உழைப்பு தளமாக சீரழிப்பதற்கும் வழிவகுத்தது.

30 ஏப்ரல் 1975 இல், சைகோன் ஜனாதிபதி அரண்மனைக்குள் நுழையும் வட வியட்நாமிய பீரங்கி [Photo by Milano in Movimiento / undefined]

ஏகாதிபத்தியத்தின் பூகோள முரண்பாடுகளைத் தீர்க்க தொழிலாள வர்கத்துக்கு தேசிய தீர்வுகள் இல்லை என்பதற்கான மற்றொரு நிரூபணமாக இந்த வரலாற்று அனுபவம் உள்ளது. தேசிய அரசுகளின் பல துருவ கூட்டணி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்கு மாற்றீடாக உள்ளது என்ற கூற்றும் ஒரு மாயை ஆகும். தேவைப்படுவது தேசிய அரசுகளின் புதிய மூலோபாய கூட்டணி அல்ல. மாறாக தேசிய அரசு முறைமையையும் உற்பத்தி சாதனங்களின் முதலாளித்துவ உரிமையும் ஒழிப்பதே அவசியமாகும்.

உலக வரலாற்றில் மிகப்பெரிய புரட்சிகர போராட்டங்களின் காலகட்டத்திற்குள் நாம் நுழைகிறோம். இதன் மீதே மனிதகுலத்தின் தலைவிதி தங்கியிருக்கின்றது. தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர வர்க்கமா அல்லது சோசலிசம் சாத்தியமா என்று ஊகிப்பதில் நேரத்தை வீணடிப்பதில் அர்த்தமில்லை. நடைமுறையைத் தவிர்த்து சிந்தனையின் யதார்த்தம் அல்லது யதார்த்தமற்ற தன்மை குறித்த விவாதங்கள் அர்த்தமற்றவை என்று மார்க்ஸ் தனது ஃபியூர்பாக் பற்றிய ஆய்வறிக்கைகளில் எழுதினார். வர்க்கப் போராட்டத்தில் பங்கெடுப்பதை ஓதுக்கி வைத்துவிட்டு, போரை நிறுத்துதல், பாசிசத்தை தோற்கடித்தல் மற்றும் சோசலிசத்தை நிறுவுதலின் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிப்பது முற்றிலும் பயனற்றது. சோசலிசத்தை அடைவதற்கான முயற்சியை நடைமுறையில் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த நூற்றாண்டின் வரலாறு சோசலிசப் புரட்சியின் சாத்தியத்தை நிரூபித்தது. ஆனால் வெற்றி என்பது தொழிலாள வர்க்கத்தில் ஒரு மார்க்சிஸ-ட்ரொட்ஸ்கிசத் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவதையே தங்கியிருக்கின்றது என்பதையும் இது நிரூபித்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ளன.

இந்த தீர்க்கமான மே தினத்தில், இந்த உலகக் கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரையும் நமது உலகக் கட்சியில் சேர்ந்து சோசலிசத்தின் வெற்றிக்காகப் போராடுமாறு நாங்கள் அழைக்கின்றோம்.

Loading