இலங்கை: உள்ளூராட்சித் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்

போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை ஆதரியுங்கள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் மே 6 அன்று நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் புத்திஜீவிகளையும் எங்கள் கட்சிக்கு வாக்களிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அழைப்பு விடுக்கின்றது. சோ.ச.க.க்கு நீங்கள் அளிக்கும் வாக்கு, ஏகாதிபத்தியப் போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு எதிரான ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான உங்கள் ஆதரவை வெளிப்படுத்தும்.

சோ.ச.க. கொழும்பின் புறநகர்ப் பகுதியில் உள்ள கொலன்னாவ நகர சபைக்கும், போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் பிரதேச சபைக்கும் முறையே 21 மற்றும் 13 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. எங்கள் வேட்பாளர்களுக்கு நீண்டகால கட்சித் தலைவர்களான விலானி பீரிஸ், பரமு திருஞன்சம்பந்தர் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

2025 ஏப்ரலில் யாழ்ப்பாணத்தில் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் கூட்டம் [Photo: WSWS]

ஆரம்பத்திலிருந்தே, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) / தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக தனது கைகளை வலுப்படுத்திக்கொள்வதற்கே இந்தத் தேர்தலை நடத்துவதாக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு சோ.ச.க. எச்சரித்து வருகிறது.

400க்கும் மேற்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் / மறுசீரமைப்பு செய்தல், உழைக்கும் மக்கள் மீது அதிக வரிகளை சுமத்துதல் மற்றும் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை பொது சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை வெட்டுதல் ஆகியவை இதில் அடங்கும். இதன் விளைவாக லட்சக்கணக்கான தொழில்கள் அழிக்கப்படுவதுடன், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் குறைக்கப்படும்.

நாங்கள் சொல்வது சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

தனது மே தினச் செய்தியில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, “உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொண்டு, நமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சுமையை இலங்கையின் உழைக்கும் மக்களே தொடர்ந்து சுமக்கிறார்கள்,” என வலியுறுத்தினார்.

இலங்கையிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவ நெருக்கடி தொடர்ந்து மோசமடைந்து வருவதால், அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய சுமைகளை சுமத்தும் என்பதே அவரது கருத்துக்களின் அர்த்தம்.

ஜே.வி.பி./தே.ம.ச. மே தினக் கூட்டத்தில் பேசிய திசாநாயக்க, 'தொழிற்சங்கங்கள் தங்கள் பழைய அணுகுமுறைகளைக் கைவிடுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். அற்ப விஷயங்களுக்குக் கூட போராட வேண்டாம்' என்று அறிவித்தார்.

ஜனாதிபதி தொழிற்சங்கங்களைப் பற்றி குறிப்பிட்டாலும், அவரது உண்மையான இலக்கு தொழிலாள வர்க்கமே ஆகும். தொழிலாளர்களின் எந்தவொரு எதிர்ப்பையும் அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது, வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை அடக்குவதற்கு பொலிஸ்-அரசு அடக்குமுறையைப் பயன்படுத்தத் தயங்காது என்பதற்கான எச்சரிக்கையே இது.

ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும், தமிழ் மற்றும் முஸ்லிம் முதலாளித்துவக் கட்சிகளும், முதலாளித்துவத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழிமுறையாக சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிரலை முழுமையாக ஆதரிக்கின்றன. வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே அவர்கள் அரசாங்கத்தின் மீது வாய்ச்சவடாலாக விமர்சனம் செய்வதோடு வெற்று வாக்குறுதிகளும் கொடுக்கின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மையமாகக் கொண்ட பூகோள முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியின் மத்தியிலேயே இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது. கடந்த ஒரு மாதமாக நடந்த நிகழ்வுகள், எங்கள் தேர்தல் அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான மற்றும் சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை பெருமளவில் உறுதிப்படுத்தியுள்ளன.

பாசிசவாத அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 1930களின் நாஜி சர்வாதிகாரத்தின் சித்தாந்தத்தை வெளிப்படையாகப் பயன்படுத்துகிறார். புலம்பெயர்ந்தவர்களை பெருமளவில் நாடுகடத்துதல், அத்தியாவசிய சமூக சேவைகளை அகற்றுதல், லட்சக்கணக்கான பொதுத்துறை ஊழியர்களை வேலைநீக்கம் செய்தல் மற்றும் சீனாவிற்கு எதிரான போர் தயாரிப்புகளை தீவிரப்படுத்துவதோடு பூகோள வர்த்தகப் போரைக் கட்டவிழ்த்து விடுவதிலும் அவர் சட்டங்களையும் அரசியலமைப்பையும் அப்பட்டமாக மீறுகிறார்.

அணு ஆயுதம் கொண்ட இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய மோதல், அமெரிக்கா மற்றும் சீனாவிற்கும் இடையேயான நெருங்கி வரும் போரின் அபாயத்தை பெரிதும் அதிகரிக்கிறது. ஏப்ரல் 22 அன்று இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதோடு சிந்து நதிக்கு தண்ணீர் திறப்பதைத் துண்டிப்பதாக அச்சுறுத்தியுள்ளார் - இது ஒரு போர் நடவடிக்கை ஆகும்.

கட்டவிழ்ந்து வரும் மோதல், தெற்காசியா முழுவதும் உள்ள தொழிலாளர்களை, உலகளவில் அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுடன், சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தில் ஒன்றிணைக்க வேண்டியதன் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த வேலைத் திட்டத்துக்காகவே நான்காம் அகிலத்தின் சர்வதேசக் குழுவின் (ICFI) இலங்கைப் பிரிவான சோ.ச.க. போராடி வருகிறது.

காரைநகரில் உள்ள ஊரி கிராமத்தில் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டம் [Photo: WSWS]

கடந்த மாதம் மோடியின் இலங்கை விஜயத்தின் போது, ​​அவரும் திசாநாயக்கவும் ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டனர். இந்த இராணுவ ஒப்பந்தம் சீனாவிற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டுள்ளதோடு கூட்டுப் பயிற்சிகள், உளவுத்துறை பகிர்வு, பயிற்சி, திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் உயர் மட்ட பரிமாற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். தனது முன்னோடியான, அமெரிக்காவின் மோசமான கைக்கூலி ரணில் விக்கிரமசிங்கவைப் போலவே, திசாநாயக்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்த் திட்டங்களுக்குள் இந்தியாவுடன் இலங்கையை ஒருங்கிணைக்கின்றார்.

சர்வதேச நாணய நிதியம் தனது கடுமையான சிக்கன உத்தரவுகளை செயல்படுத்தியதற்காக திசாநாயக்கவை பகிரங்கமாகப் பாராட்டியுள்ளது. இருப்பினும், சர்வதேச நாணய நிதியம் முழுமையான அர்ப்பணிப்புகளைக் கோருவதால், இன்னும் பல பாதிப்புகள் வரவுள்ளன. 2022 தவணைத் தவறிய கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு கடன் மறுசீரமைப்பை பூர்த்தி செய்வதன் பேரில், 3 பில்லியன் அமெரிக்க டாலர் சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு கடனின் அடுத்த தவணையைப் பெறுவதற்கு ஈடாக, இலங்கை மின்சார சபையை இலாபகரமாக்க மின்சார விலை கட்டணங்களை உயர்த்துவது, அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை விரைவுபடுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.

ஏற்கனவே உழைக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, ஒரு நபர் உயிர்வாழத் தேவையான குறைந்தபட்ச செலவு 2019 முதல் பிப்ரவரி 2025 வரை 134 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வருமான நிலைகள் தேக்கமடைந்து வருகின்றன, 15 முதல் 24 வயதுடைய இளைஞர்களிடையே வேலையின்மை 26 சதவீதத்தை நெருங்கி வருகின்றது. சமீபத்திய உலக வங்கி அறிக்கை, ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பதாகவும், தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வதாகவும் கண்டறிந்துள்ளது.

உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது ஆழமான தாக்குதல்களை நடத்தியதனதால் 1948 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து ஆட்சி செய்து வரும் பாரம்பரியக் கட்சிகளுக்கு எதிரான பரவலான வெகுஜனக் கோபத்தைப் பயன்படுத்திக்கொண்டு, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. பதவிக்கு வந்ததும், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கான தனது வாக்குறுதிகளை திசாநாயக்க கைவிட்டுள்ளதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை முழுமையாக செயல்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

விக்கிரமசிங்க, திசாநாயக்க இருவரின் ஆட்சியிலும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை அடக்கி நாசப்படுத்திய தொழிற்சங்கங்களும் இந்த சமூகப் பேரழிவிற்கு பொறுப்பாளிகள் ஆகும். தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட நிரலுடன் உடன்படுவதோடு, போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை அரசாங்கத்திற்கு பயனற்ற வேண்டுகோள் விடுக்கும் நடவடிக்கையாகவும், எதிர்ப்பை கலைத்துவிடும் வழிமுறையாகவும் வேண்டுமென்றே மட்டுப்படுத்தியுள்ளனர்.

முதலாளித்துவக் கட்சிகளையோ அல்லது போலி இடது கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்துகொண்டு அவற்றுக்கு வக்காலத்து வாங்குபவர்களையோ நம்ப வேண்டாம் என்று சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களை எச்சரிக்கிறது. தொழிலாளர்களால் அரசாங்கத்தை இடதுபுறமாகவும் 'சரியான பாதையிலும்' நடக்க அழுத்த கொடுக்க முடியும் என்று முன்னிலை சோசலிசக் கட்சி கூறுகிறது. நடந்தது இதற்கு நேர்மாறானதாகும் – ஜே.வி.பி./தே.ம.ச. சமூக நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளதுடன் தொழிலாளர்களின் எந்தவொரு எதிர்ப்பையும் ஈவிரக்கமின்றி ஒடுக்கியுள்ளது.

முதலாளித்துவ அரசியல் பிரதிநிதிகளின் பிற்போக்கு கொள்கைகளின் விளைவாக ஏற்பட்டுள்ள முதலாளித்துவத்தின் போர் காட்டுமிராண்டித்தனத்திற்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராக, தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீன பலத்தை நம்பி, ஒரு சோசலிச மாற்றீட்டுக்காகப் போராட வேண்டும்.

மீதொட்டமுல்லவில் பிரச்சாரம் செய்த சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் [Photo: WSWS]

தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராட ஒவ்வொரு வேலைத் தளத்திலும் சுற்றுப்புறத்திலும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. இந்த முயற்சிக்கு எங்கள் முழு அரசியல் ஆதரவையும் நாங்கள் உறுதியளிக்கிறோம்.

தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தை வளர்ப்பதற்கும் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டுவதற்கும் வழிமுறையாக, இந்த நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டிற்கான எங்கள் பிரச்சாரத்தை இரட்டிப்பாக்குவோம். முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிந்து, சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் மட்டுமே உழைக்கும் மக்கள் தங்கள் வர்க்க நலன்களைப் பாதுகாக்க முடியும்.

அனைத்துலகவாதமே எங்கள் வேலைத்திட்டத்தின் அடிக்கல்லாகும். தொழிலாளர்கள் சிங்கள மேலாதிக்கவாதம், தமிழ் பிரிவினைவாதம் உட்பட அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் வகுப்புவாதத்தையும் எதிர்ப்பதோடு சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட போராட வேண்டும். இலங்கையில் உள்ள உழைக்கும் மக்கள், கொள்ளையடிக்கும் பூகோள மூலதனத்திற்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான வழிமுறையாக, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் (IWA-RFC) தங்கள் நடவடிக்கைக் குழுக்களை இணைக்க வேண்டும்.

காரைநகர் மற்றும் கொலன்னாவையில் எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு சோசலிச மாற்றீட்டுக்கான உங்கள் ஆதரவை வெளிப்படுத்துமாறு தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஏனைய பகுதிகளில், எந்தக் கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ வாக்களிப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை.

எங்களுக்கு வாக்களிக்கும் அனைவரையும் அடுத்த முக்கியமான நடவடிக்கையை எடுக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தைப் படித்து, வரவிருக்கும் போராட்டங்களுக்குத் தேவையான வெகுஜன புரட்சிகரக் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப அதில் சேருங்கள்.

இலங்கையிலும் தெற்காசியா முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற உழைப்பாளிகள் மற்றும் சோசலிச எண்ணம் கொண்ட புத்திஜீவிகள் அனைவருக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஏற்பாடு செய்யும் சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் விசேடமாக வேண்டுகோள் விடுக்கின்றோம். இது மே 4 ஞாயிற்றுக்கிழமை (இலங்கை மற்றும் இந்திய நேரப்படி) அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கும்.

Loading