முன்னோக்கு

கனடாவின் கூட்டாட்சி தேர்தலும் தொழிலாள வர்க்க அரசியல் முன்னோக்கின் நெருக்கடியும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

யுனிஃபர் தலைவர் லானா பெய்னுடன் பிரதமர் மார்க் கார்னி [Photo by Mark Carney]

கனடாவினல் ஏப்ரல் 28 அன்று இடம்பெற்ற கூட்டாட்சித் தேர்தலில், ட்ரம்பின் உலகளாவிய வர்த்தகப் போர் மற்றும் கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்ற “பொருளாதார பலத்தை” பயன்படுத்துவதற்கான அவரது சபதம் ஆகியவை ஆதிக்கம் செலுத்தின.

கனடாவிலுள்ள அனைத்துக் கட்சிகளும் கனேடிய தேசியவாதத்தை தம்பட்டம் அடித்து போர்வெறி பிடித்த பிரச்சாரத்தை மேற்கொண்ட பின்னர், சமீபத்தில் உருவாக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட தலைவரான முன்னாள் மத்திய வங்கியாளரும், புளூசிப் கார்ப்பரேட் நிர்வாகியுமான மார்க் கார்னியின் (Mark Carney) கீழ் தாராளவாதிகள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டனர்.

வருங்கால பாசிச சர்வாதிகாரி ட்ரம்பிற்கு எதிரான மக்கள் விரோத அலையின் மீது சவாரி செய்ததன் மூலம் தாராளவாதிகள் இதைச் செய்தார்கள்.

கடந்த ஜனவரி தொடக்கத்தில், ட்ரம்ப்பின் வர்த்தகப் போர் நடவடிக்கைகள், கனடாவை இணைப்பது குறித்த அச்சுறுத்தல்கள் மற்றும் ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய நிர்பந்திப்பதற்கு முன்பு, தாராளவாதிகளின் அரசாங்கம் ஒரு இறந்த சடலமாகவே இருந்தது. ஒரு வருடத்திற்கும் மேலாக, கருத்துக் கணிப்புகள், தீவிர வலதுசாரித் தலைவரான பியர் பொய்லீவ்ரேவின் கீழ் பழமைவாதிகள் வரவிருக்கும் தேர்தலில் ஆட்சிக்கு வருவார்கள் என்று சுட்டிக்காட்டின.

ஆனால், ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு வந்தது பொய்லிவ்ரேவின் தோல்வியாக நிரூபிக்கப்பட்டது. பழமைவாதிகள் 2021 தேர்தலில் பாராளுமன்ற இடங்களையும் வாக்குகளையும் பெற்றிருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, மோசமான முறையில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மீதான மக்களின் கோபமும், ட்ரம்ப் மீதான பழமைவாதிகளின் வெளிப்படையான பாசத்தின் காரணமாகவும், “கனடா முதலில்” என்பதை அவர்களின் முக்கிய பிரச்சார முழக்கமாகவும், ட்ரம்ப் போன்ற தீவிர வலதுசாரி நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொண்டதன் மூலமும் அவர்கள் உழைக்கும் மக்களால் தீர்க்கமாக நிராகரிக்கப்பட்டனர்.

ட்ரம்ப்பும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்திற்கும் — தன்னலக்குழு, சர்வாதிகாரம், பாசிசம் மற்றும் போர் — எதிரான முற்போக்கான பதிலை மார்க் கார்னியும் அவரது தாராளவாதிகளும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்ற நம்பிக்கையில், அவர்களுக்கு வாக்களித்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் குரூரமாக வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு தொழிற்சங்கங்களும், சமூக ஜனநாயக புதிய ஜனநாயகக் கட்சியும் (NDP) முக்கிய பொறுப்பாகும். மேலும், மனித உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஆளும் வர்க்கக் கொள்கைகளை செயல்படுத்தியதில், ரஷ்யாவிற்கு எதிராகப் போரை நடத்தியதில், இராணுவச் செலவினங்களை பெருமளவில் அதிகரித்ததில், காஸா இனப்படுகொலையை ஆதரித்ததில், வேலைநிறுத்தங்களைத் தடை செய்ததில், ட்ரூடோவின் சிறுபான்மை தாராளவாத அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுப்பதில் NDP யினர் கடந்த ஐந்து ஆண்டுகளைக் கழித்தனர்.

மேலும், அமெரிக்க தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை இலக்கு வைக்கும் கனேடிய முதலாளித்துவத்தின் தாராளவாத அரசாங்கத்தின் தலைமையிலான வர்த்தகப் போர் எதிர்தாக்குதலின் தீவிர ஆதரவாளர்களாக தொழிற்சங்கங்களும் NDPயும் இருந்து வருகின்றன.

தொழிற்சங்கங்களும் NDP-யும் பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அரசியலுக்குக் கட்டிப்போட்டு, சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கு எதிரான பாரிய எதிர்ப்பை அடக்கி, பிற்போக்குத்தனத்தின் மிகவும் வெளிப்படையான ஆதரவாளர்களான பழமைவாதிகள் அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்க பெருவணிக தாராளவாதிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வாதிட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு பார்க்கையில், ட்ரம்பிடம் இருந்து வந்த அச்சுறுத்தலை எதிர்கொண்டு NDPக்கான ஆதரவு பொறிந்து போனதில் ஆச்சரியமில்லை. தாராளவாதிகளுக்கு கிடைத்த ஆதரவில் 11 சதவீத புள்ளி அதிகரிப்பில் பெரும்பாலானவை NDP-ன் இழப்பிலிருந்து வந்தவை.

கார்னேயின் தாராளவாத அரசாங்கம், ஏற்கனவே முக்கிய பழமைவாதக் கொள்கைகளை வகுத்துள்ளதன் மூலம் எடுத்துக்காட்டியபடி, சிக்கன நடவடிக்கை, மறு ஆயுதமயமாக்கல் மற்றும் போரின் அரசாங்கமாக இருக்கும். “கனடாவின் இறையாண்மை” மற்றும் “பொருளாதார மீள்தன்மையை” வலுப்படுத்துதல் என்ற பெயரில், ஆளும் வர்க்கம் எதிர்பார்க்கும் ட்ரம்ப்பின் கொள்கைகளை அது செயல்படுத்தும். இவற்றில் பின்வருவன உள்ளடங்கும்: பெருநிறுவன வரி குறைப்புகளுக்கு நிதியளிப்பதற்காக சமூக செலவினங்களில் பாரிய வெட்டுக்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு செலவின அதிகரிப்புக்கு ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்களை ஒதுக்குதல்; மூலதனத்தின் மீதான பிற ஒழுங்குமுறைகள் மற்றும் அனைத்து சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்குதல்; மேலும், போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் பிற முக்கியமான உள்கட்டமைப்பை பாதிக்கும் வேலைநிறுத்தங்களுக்கு நிரந்தர தடை விதித்தல் ஆகியவைகளாகும்.

கார்னே, ஒன்டாரியோ மாநிலத்தின் பழைமைவாத முதல்வர் டக் ஃபோர்ட் அல்லது கனேடிய ஆளும் வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளில் எவரேனும் ட்ரம்பை எதிர்க்கின்றனர் என்றால், அது முற்றிலுமாக கனேடிய ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களைப் பாதுகாக்கும் நிலைப்பாட்டில் இருந்து வருகிறது.

கனேடிய முதலாளித்துவத்தின் விருப்பமான தேர்வு, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான அதன் நீண்டகால பொருளாதார மற்றும் இராணுவ கூட்டாண்மையைப் பராமரிப்பதாகும். மேலும், சீனா மற்றும் பிற நாடுகளுக்கு எதிராக அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ட்ரம்ப் தலைமையிலான வட அமெரிக்காவின் கோட்டையில், வாஷிங்டன் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் இளைய பங்காளியாக முறையாக அங்கீகரிக்கப்பட்ட பங்கைப் பெறுவதும் இதன் நோக்கமாகும்.

தேர்தலுக்கு அடுத்த நாள், இந்த முடிவை நோக்கி நகர்ந்த கார்னே, விரைவில் ட்ரம்பை சந்திக்க இருப்பதாக அறிவித்தார். இருப்பினும், அத்தகைய பேச்சுவார்த்தைகள் கடுமையான மோதலில் தோல்வியடைந்தால், கார்னே ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளபடி, ரஷ்யா மீதான போரை தொடர்ந்து நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதில் பிரிட்டிஷ், ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்களுடனும், இதர ஏகாதிபத்திய சக்திகளுடனும் ஆக்கிரமிப்பு போரில் ஒட்டாவா இணைவதன் மூலம், கனேடிய ஆளும் வர்க்கத்தின் கூலிப்படை நலன்களை அது பாதுகாக்க முயற்சிக்கும்.

ட்ரம்ப் கனடா மற்றும் உலக தொழிலாளர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளார்.

எவ்வாறிருப்பினும், முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தையும், அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளையும், மற்றும் கனேடிய ஏகாதிபத்தியத்தின் கூட்டாட்சி அரசையும் எதிர்த்து, அமெரிக்கா, மெக்சிக்கோ மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களுடன் தங்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்தி, சோசலிசத்திற்கான ஒரு பாரிய இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக மட்டுமே கனேடிய தொழிலாளர்களால் ட்ரம்பையும், சமூக எதிர்ப்புரட்சியையும், போரையும் எதிர்க்க முடியும்.

அத்தகைய போராட்டத்திற்கு முக்கிய தடையாக இருப்பது தொழிற்சங்கங்கள், புதிய ஜனநாயகக் கட்சி (NDP) மற்றும் அவற்றின் போலி இடது துணைக்குழுக்கள் ஆகும்.

இவை, பல தசாப்தங்களாக வர்க்கப் போராட்டத்தை அடக்கி, பெருவணிகத்துடனும் அரசுடனும் ஒரு பெருநிறுவன கூட்டாண்மைக்குள் தங்களை முன்னெப்போதிலும் பார்க்க முழுமையாக ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளன.

2021 இலையுதிர்காலத்தில் இருந்து கடந்த டிசம்பரில் அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் வரை, தொழிலாளர்கள் பெரும் வேலைநிறுத்த அலைகளைத் தொடங்கினர். ஆனால் ஒவ்வொரு திருப்பத்திலும், NDP ஆதரவு பெற்ற தாராளவாத அரசாங்கத்துடன் இணைந்து, தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டங்களைத் தனிமைப்படுத்தி, அதன் கழுத்தை நெரித்தன.

வாகனத் துறையில், மேற்குக் கடற்கரைத் துறைமுகங்களில் மற்றும் இரயில்வேயில், தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் ஒப்பந்தங்கள் இல்லாமல் இருந்தபோதும், சலுகைக் கோரிக்கைகளை எதிர்கொண்டபோதிலும் கூட, கனடா-அமெரிக்க எல்லையின் இருபுறங்களிலும் இருக்கும் தொழிற்சங்க அமைப்புகளால், ஒரே நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் கூட்டுப் போராட்டங்களைத் தடுத்து நிறுத்துவதுக்கு ஒரு முக்கிய அங்கமாக இருந்தன.

தெற்கே உள்ள பேராசை கொண்ட டாலர் குடியரசை விட, கனேடிய முதலாளித்துவம் ஒரு வகையான “முற்போக்கான”, “மென்மையான, கனிவான” சமூகத்தை உருவாக்குகிறது என்ற பொய்யை அடிப்படையாகக் கொண்ட பிற்போக்குத்தனமான கனேடிய மற்றும் கியூபெக் தேசியவாதம்தான், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பெருவணிக கூட்டாண்மையின் அரசியல்-சித்தாந்த உறுதிப்பாடாகும். இவ்வாறாக, ஆளும் வர்க்கம் முன்பினும் கூடுதலாக வலதை நோக்கி நகர்கின்ற நிலையிலும் கூட, தொழிற்சங்க எந்திரமும் புதிய ஜனநாயகக் கட்சியும் “கனேடிய மதிப்புகளை” பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வர்த்தகப் போரில் தொழிலாளர்களை அதன் பின்னால் அணிதிரளுமாறு கட்டளையிட்டு வருகின்றன.

தொழிற்சங்கங்களும் புதிய ஜனநாயகக் கட்சியும், இத்தகைய கொள்கைகள் ட்ரம்ப் மற்றும் பொய்லிவ்ரேயின் அதிவலது அச்சுறுத்தலை நிறுத்தும் என்று கூறி, தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாராளவாத அரசாங்கத்தின் தாக்குதலுக்கும், வர்த்தகப் போரின் போது அவை இடைவிடாமல் கொடியை அசைக்கும் தேசியவாதத்திற்கும், அவை வழங்கிவரும் ஆதரவை நியாயப்படுத்துகின்றன. உண்மையில், நிதியியல் செல்வந்த தன்னலக்குழுவின் ஒரு ஈவிரக்கமற்ற பிரதிநிதியான கார்னியைப் பலப்படுத்துவதில் மட்டும் அவர்கள் வெற்றி பெறவில்லை, மாறாக தொழிற்சங்கத்தின் மீதான தொழிலாளர்களின் கோபத்தையும் மற்றும் NDP- ஆதரவிலான தாராளவாத அரசாங்கத்தின் பொருளாதார துயரங்களுக்கான பொறுப்பையும் சுரண்டி, ஒரு சிடுமூஞ்சித்தனமான சமூக முறையீடு செய்த அதிவலது வாய்வீச்சாளரான பொய்லிவ்ரேயின் பின்னால் சில தொழிலாளர்களை விரட்டியடிப்பதிலும் அவர்கள் வெற்றி பெற்றனர்.

கார்னியின் சிறுபான்மை அரசாங்கத்தின் தேனிலவு குறுகிய காலமே நீடிக்கும். அது தொழிற்சங்கங்களிடம் இருந்து தங்குதடையற்ற ஆதரவையும் NDP இடமிருந்து நாடாளுமன்ற ஆதரவையும் பெறும் என்றாலும், தாராளவாதிகளின் சிக்கன நடவடிக்கைகள், ஏகாதிபத்தியப் போர், இராணுவ செலவின அதிகரிப்பு, மற்றும் தொழிலாளர்கள் மீது வர்த்தகப் போர் செலவுகளை திணிப்பது ஆகியவை, அதை தொழிலாள வர்க்கத்துடன் நேரடி மோதலுக்குள் கொண்டு வரும். ட்ரம்பை எதிர்ப்பதாக நம்பி தாராளவாதிகளுக்கு வாக்களித்த மில்லியன் கணக்கான தொழிலாளர்களும், பொய்லிவ்ரேயின் வாய்வீச்சால் ஏமாற்றப்பட்டவர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையினரும், தாங்கள் ஒரு பெரிய தொகைக்கு விற்கப்பட்டதை விரைவாக உணர்ந்து கொள்வார்கள்.

ட்ரம்பிற்கு எதிரான அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் பெருகிவரும் சமூக எதிர்ப்புடன் இந்தப் போராட்டங்கள் வெளிப்படும். கனடாவில் உள்ள தொழிலாளர்கள் இந்த சக்தியின் —ட்ரம்ப் “மிகப்பெரிய அச்சுறுத்தல்” என்று முத்திரை குத்திய “உள்ளே இருக்கும் எதிரி”— பக்கம் திரும்ப வேண்டும்.

ட்ரம்பின் வர்த்தகப் போர் மிகவும் சீர்குலைந்த வகையில் நிரூபித்துள்ளபடி, கனடா மற்றும் அமெரிக்கத் தொழிலாளர்கள், அதே மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களால் சுரண்டப்படுகிறார்கள் மற்றும் எண்ணற்ற பண்டங்களின் ஒருங்கிணைந்த உற்பத்தியில் புறநிலையாக ஒன்றுபட்டுள்ளனர். தொழிற்சங்கங்களும் போலி இடதுகளும் நீண்ட காலமாக இழிவுபடுத்தவும் மறைக்கவும் முயன்று வரும் கூட்டுப் போராட்டத்தின் சக்திவாய்ந்த மரபுகளையும் கனடா மற்றும் அமெரிக்கத் தொழிலாளர்கள் கொண்டுள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சி (கனடா) அதன் தேர்தல் அறிக்கையில் விளக்கியவாறு:

வட அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து முக்கிய எழுச்சிகளும் —1930களின் உன்னதமான தொழிலாளர் மாவீரர்கள் முதல் உள்ளிருப்பு வேலைநிறுத்தங்கள் மற்றும் 1960களின் பாரிய சமூகப் போராட்டங்கள் வரை— கியூபெக்கின் பிரெஞ்சு மொழி பேசும் தொழிலாளர்கள் உட்பட, கனடா-அமெரிக்க எல்லையின் இருபுறமும் ஆதரவைத் திரட்டின. இந்த மரபுகளின் சிறந்த கூறுகளை உள்வாங்கிக் கொண்டு, அவற்றிற்கு ஒரு புதிய, உயர்ந்த சோசலிச உள்ளடக்கத்தை ஊட்டுவதே இன்றைய பணியாகும்.

உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி, அமெரிக்காவில் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை அமைக்கவும், சீனாவுடனான போருக்குத் தயாராக கனடா, கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாயைக் கைப்பற்றுவதன் மூலம் வரைபடத்தை மீண்டும் வரையவும் ட்ரம்பை உந்தித் தள்ளுகிறது. அதே நெருக்கடியானது, தொழிலாளர்கள் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்தவும், ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் உலகின் காட்டுமிராண்டித்தனமான மறுபங்கீட்டில் அதன் இடத்தைப் பாதுகாக்கவும் கனேடிய ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை இரக்கமற்ற முறைகளை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ட்ரம்புக்கு எதிரான போராட்டமானது, அமெரிக்க மற்றும் கனேடிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாகவும், ஒரு சோசலிச வட அமெரிக்காவிற்கான போராட்டத்தில் கனேடிய, அமெரிக்க மற்றும் மெக்சிக்கன் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கான போராட்டமாகவும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதன் பொருள், தொழிலாளர்களை வர்த்தகப் போர் நடவடிக்கைகளில் ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தி, கியூபெக் பிரிவினைவாதிகளைப் போலவே தேசிய, இன அல்லது மொழி ரீதியிலான வழிகளில் அவர்களைப் பிளவுபடுத்தும் அனைத்து முயற்சிகளையும் நிராகரிப்பதாகும்.

மேலும் இதன் பொருள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அரசு துன்புறுத்தலுக்கு அஞ்சாமல் எங்கு வேண்டுமானாலும் வாழ்ந்து வேலை செய்வதற்கான உரிமை உட்பட, அனைத்து தொழிலாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு முன்வருவதாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, தீர்க்க முடியாத உலக முதலாளித்துவ நெருக்கடியால் கோரப்படும் சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் புரட்சிகர தலைமையை கட்டியெழுப்ப தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.

இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டம், இன்று சனிக்கிழமை சர்வதேச இணையவழி மே தின பேரணியின் மைய அச்சாக இருக்கும். ஏகாதிபத்தியப் போர், பாசிச சர்வாதிகார அச்சுறுத்தல் மற்றும் தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் நிலைமைகள் மீதான தாக்குதலை எதிர்த்துப் போராட விரும்பும் அனைத்து தொழிலாளர்களும், இதில் கலந்துகொள்ளத் திட்டமிடுமாறு நாங்கள் அவசரமாக வேண்டுகோள் விடுக்கிறோம்.

Loading