இலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது குறித்து கலந்துரையாடியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

9 ஏப்ரல் 2025 அன்று கொழும்பில் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் உள்ளூராட்சித் தேர்தலுக்கான கூட்டம் [Photo: WSWS]

இலங்கையில் மே 6 அன்று நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் ஏப்ரல் 9 அன்று கொழும்பில் ஒரு பகிரங்க கூட்டத்தை நடத்தின.

நாட்டின் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் உள்ள காரைநகர் பிரதேச சபையிலும், கொழும்புக்கு அருகிலுள்ள கொலன்னாவ நகர சபையிலும் முறையே 12 மற்றும் 21  வேட்பாளர்களை நிறுத்தி சோசலிச சமத்துவக் கட்சி தலையிடு செய்கின்றது.

சோ.ச.க  மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. பேச்சாளர்கள் முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் உலகளாவிய நெருக்கடி, பாசிச மற்றும் சர்வாதிகார போக்குகளின் வெடிப்பு, உலகப் போரின் அச்சுறுத்தல் மற்றும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் தேவை குறித்து விளக்கினர்.

கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் பாணி விஜேசிறிவர்தன, கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் இரண்டு உள்ளூராட்சிப் பகுதிகளிலும் கட்சியின் தேர்தல் தலையீட்டின் முக்கியத்துவத்தை விளக்கினார். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ., தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்திற்காகப் போராட வேண்டியதன் அவசியம் குறித்து இந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்குக் கல்வியூட்ட நீண்ட போராட்டத்தை நடத்தியுள்ளதாக அவர் கூறினார்.

முழு உலகிற்கும் எதிரான தொடர்ச்சியான வர்த்தகப் போர் நடவடிக்கையாக இருக்கும், ட்ரம்பின் பாரிய வரி அதிகரிப்புகளால் தூண்டப்பட்ட, விரைவாக மாறிவரும் சர்வதேச நிலைமை குறித்து, பேச்சாளர் விசேட கவனம் செலுத்தினார். உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்ற ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகளை அவர் நினைவு கூர்ந்தார்.

9 ஏப்ரல் 2025 அன்று நடைபெற்ற கொழும்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பாணி விஜேசிறிவர்தன [Photo: WSWS]

ட்ரம்பின் வரிவிதிப்புப் போர் அமெரிக்க முதலாளித்துவத்தின் பலத்தை  குறிக்கவில்லை, மாறாக அதன் பலவீனத்தையே குறிக்கிறது என்று விஜேசிறிவர்தன கூறினார். இந்த நடவடிக்கைகள், அமெரிக்காவில் மட்டுமன்றி இலங்கை உட்பட அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள ஆளும் உயரடுக்குகள், இந்த முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த வேலை செய்கின்றன என அவர் மேலும் கூறினார்.

கட்சியின் முந்தைய தேர்தல் தலையீடுகளை விட, இம்முறை சர்வதேச சூழ்நிலை சம்பந்தமாக உழைக்கும் மக்கள் மற்றும்  இளைஞர்கள் மத்தியல் ஆர்வம் அதிகரித்துள்ளதாக பேச்சாளர் கூறினார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி, டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் மற்றும் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை அவர்கள் புரிந்துகொள்ள முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.

விஜேசிறிவர்தன, 2022 ஆம் ஆண்டு நாடு தழுவிய அரசாங்க-எதிர்ப்பு எழுச்சியின் அத்தியாவசிய அரசியல் படிப்பினைகளை எடுத்துரைத்தார்.

'இந்த வெகுஜன இயக்கம் ஒரு சோசலிச முன்னோக்கு மற்றும் மார்க்சிச-ட்ரொட்ஸ்கிஸ தலைமையுடன் ஆயுதபாணி ஆக்கபடாமையே பிரதான பிரச்சனை' என்று அவர் கூறினார். தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் போலி- இடது முன்னிலை சோசலிசக் கட்சியும் இந்த போராட்டத்தை நாடாளுமன்ற முட்டுச்சந்துக்குள் திசை திருப்பிவிட மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உடன் இணைந்து சதி செய்தன,' என்று அவர் தொடர்ந்தார்.

இந்த எழுச்சியின் போது தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக ஆயுதபாணியாக்க போராடியதோடு ஒவ்வொரு வேலைத் தளத்திலும், கிராமப்புறங்களிலும் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புதற்கு வலிறுத்திய ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மாத்திரமே, என விஜேசிறிவர்தன விளக்கினார்.

இந்தக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கட்டியெழுப்பவும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுத்ததாக அவர் தொடர்ந்தார். ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் போராடுவதற்கு, இந்த மாநாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசரத்தை தற்போதைய சூழ்நிலை உறுதிப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

9 ஏப்ரல் 2025 அன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான பொதுக் கூட்டத்தில் சகுந்த ஹிரிமுத்துகொட உரையாற்றிய போது [Photo: WSWS]

ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் முன்னணி உறுப்பினர் சகுந்த ஹிரிமுதுகொட, ஜனவரி 3 அன்று பேராதனை பல்கலைக்கழக அதிகாரிகளால் 'சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவது எப்படி' என்ற தலைப்பிலான ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தை ஜனநாயக விரோதமாக தடை செய்தமை பற்றி பேசினார். பிரதமர் ஹரிணி அமரசூரியவின் அலுவலகம் ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டம் குறித்து 'விசாரித்ததாக' அவர் தெரிவித்தார்.

அதிகாரிகள் வெளிப்படுத்திய கவலை, 'அரசாங்கத்தின் கொள்கைகளை சவால் செய்த' கூட்டத்தின் தலைப்புதான் என்று ஹிரிமுத்துகொட கூறினார். அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் வெகுஜன கோபம் ஐ.வை.எஸ்.எஸ்.இ. மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் சோசலிச அனைத்துலகவாத வேலைத்திட்டத்தில் வெளிப்படும் என்பதே அதிகாரிகளின் உண்மையான கவலை. அப்போதிருந்து, அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

மாணவர்களும் இளைஞர்களும் தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்பாமலும் சோசலிசத்திற்காகப் போராடாமலும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க போராட முடியாது என்று ஹிரிமுதுகொட கூட்டத்தில் கூறினார். மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் பிரச்சாரத்தை ஆதரிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்து முடித்தார்.

கட்சியின் முன்னணி வேட்பாளரான சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும்

கொலன்னாவை தொகுதிக்கான கட்சியனின் தலைமை வேட்பாளருமான விலானி பீரிஸ், கொழும்பு கூட்டத்தில் இறுதி உரையை நிகழ்த்தினார்.

முழு உலகத்திற்கும் எதிரான ட்ரம்பின் வர்த்தகப் போரின் தாக்கங்களையும், உலக நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதில் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் பங்கையும் பீரிஸ் எடுத்துரைத்தார்.

ஜே.வி.பி.யின் போலித்தனம் மற்றும் அதன் முந்தைய 'ஏகாதிபத்திய எதிர்ப்பு' கோஷங்கள் உட்பட, பிரச்சாரத்தின் போது வாக்காளர்கள் எழுப்பிய சில கேள்விகளையும் அவர் பகுப்பாய்வு செய்தார். ஜே.வி.பி. இப்போது ஏகாதிபத்திய-சார்பு அமைப்பாக இருப்பதாகக் குறிப்பிட்ட ஒரு தொழிலாளி, அதன் விரோத தோரணை அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு 'தந்திரோபாயமா' என்று கேட்டதாக அவர் கூறினார்.

9 ஏப்ரல் 2025 அன்று பொதுக் கூட்டத்தில் விலானி பீரிஸ் உரையாற்றிய போது [Photo: WSWS]

ஆரம்பத்திலிருந்தே ஜே.வி.பி. ஒரு போலி-மார்க்சிசக் கட்சி என்று அவர் விளக்கினார். 'ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் வலதுசாரி போக்கை தொழிலாள வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும், அதற்காக ஒரு விஞ்ஞான பகுப்பாய்வு அவசியம்,' என்று அவர் கூறினார்.

1970இல் ஜே.வி.பி.யின் அரசியலும் வர்க்கப் பண்பும் என்ற தொடர் கட்டுரைகளில் கீர்த்தி பாலசூரியவின் ஜே.வி.பி. பற்றிய ஆரம்ப பகுப்பாய்வின் சமகால முக்கியத்துவத்தை அவர் விளக்கினார். அப்போது சோசலிச சமத்துவ கட்சியின் முன்னோடியான புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளராக பாலசூரிய இருந்தார்.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தக்கூடிய ஒரே சக்தி 'தேசபக்தி' கொண்ட சமூக அடுக்கு மட்டுமே என்ற ஜே.வி.பி.யின் பிழையான கூற்றுக்களின் பிற்போக்குத் தன்மையை பாலசூரியவின் பகுப்பாய்வு அம்பலப்படுத்தியது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை தேசபக்தியுடன் கலப்பது, 'மார்க்சிச அனைத்துலகவாதத்திற்கு முற்றிலும் எதிரானது மற்றும் தொழிலாள வர்க்கத்தை அதன் எதிரியான முதலாளித்துவ வர்க்கத்திற்கு அடிபணியச் செய்யும் ஒரு வேலைத்திட்டமாகும்' என்று பீரிஸ் கூறினார்.

இந்த தேசியவாதக் கொள்கைகளும், தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மீதான அதன் விரோதமும், ஜே.வி.பி.யை ஒரு பாசிச இயக்கமாக மாற்றக்கூடும் என்று பாலசூரிய முன்னரே எச்சரித்தார். 1988-1990ல் அரசியல் எதிரிகள் மற்றும் தொழிலாளர்கள் மீதான அதன் பாசிச தாக்குதல்களில் இது நிரூபிக்கப்பட்டது.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் ஆதரவுடன், இலங்கை முதலாளித்துவ அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது பல தசாப்தங்களாக நடத்திய கொடூரமான தாக்குதல்களை பீரிஸ் சுருக்கமாகக் கூறினார்.

ஜே.வி.பி./தே.ம.ச.யின் அரசாங்கம் முந்தைய ஆட்சிகளின் கொள்கைகளைப் பின்பற்றி வருவதாகவும், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற வெகுஜனங்கள் மீது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் தாக்குதல்களைத் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

இலங்கை நகரங்கள் மற்றும் கிராமங்களில் வீட்டுவசதி ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது, ஆனால் அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசாங்கங்களால் அதற்கு தீர்வு காணப்படவில்லை என்று பீரிஸ் கூறினார். ஏழைகளின் வீடுகளை இடித்து, அவர்கள் பல தசாப்தங்களாக வாழ்ந்த பகுதிகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, பெரிய முதலீட்டாளர்களிடம் நிலத்தை ஒப்படைப்பதற்கு அரசாங்கங்கள் பொலிசைப் பயன்படுத்தியதை அவர் நினைவு கூர்ந்தார்.

ஜே.வி.பி.யின் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெற்கில் உள்ள கொழும்பு மற்றும் கதிர்காமத்தில் அரசாங்கம் அதிக நிலங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கும் என்று சமீபத்தில் அறிவித்ததாக பீரிஸ் கூட்டத்தில் கூறினார். இந்த அடக்குமுறையைத் தோற்கடிக்க நகர்ப்புற ஏழைகளும் கிராமப்புற மக்களும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கி, தொழிலாள வர்க்கத்துடன் இணைந்து ஒரு சோசலிச வேலைத்திட்டத்திலும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட்டும் ஒழுங்கமைய வேண்டும் என்று அவர் கூறினார்.

கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிக்குமாறும், அதன் பிரச்சாரத்தில் பங்கேற்று அதன் அணிகளில் சேருமாறும் வலியுறுத்தி அவர் உரையை முடித்தார்.

கூட்டத்திற்குப் பிறகு, இளம் கட்டுமானத் தொழிலாளியான மலிந்த, “தொழிலாள வர்க்கம் கல்வியூட்டப்பட வேண்டும் என்ற விலானியின் கூற்றுடன் நான் உடன்படுகிறேன். தொழிலாளர்கள் முதலாளித்துவ அமைப்பைத் தாண்டி சிந்திக்கக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமை அவசியம்,” என்று தொடர்ந்தார்.

“ஜனாதிபதி ட்ரம்ப்பின் வரி அதிகரிப்புகள் பற்றி அனைவரும் பேசுகிறார்கள், இது குறித்த ஒரு முக்கியமான பகுப்பாய்வு இந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்டது. இந்தப் பிரச்சினை அதிகரித்து வரும் போர் ஆபத்தையும் அதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்கு அழைப்பு விடுப்பதன் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது,” என்று மேலும் கூறினார்.

“பொதுமக்கள், தங்கள் பாடசாலைக் கல்வியின் தொடக்கத்திலிருந்தே, முதலாளித்துவ அமைப்பின் கீழ் எவ்வாறு வாழ்வது என்று கற்பிக்கப்படுகிறார்கள், அதை எவ்வாறு தோற்கடிப்பது என்பது பற்றி கற்பிக்கப்படுவதில்லை. நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வை முதலாளித்துவ அமைப்பிற்குள் காணலாம் என்று ஏனைய கட்சிகள் கூறுகின்றன, ஆனால் உங்கள் கட்சி வேறுபட்டது. முதலாளித்துவ அமைப்பின் கீழ் மனிதகுலம் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்பட முடியாது என்றும் உலக சோசலிசம் அவசியம் என்றும் சோசலிச சமத்துவக் கட்சி விளக்குகிறது. இவை முக்கியமான புள்ளிகள்,” என்று அவர் கூறினார்.

தனது முதலாவது  சோசலிச சமத்துவக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை மின்சார துறைத் தொழிலாளி  ஒருவர் கூறியதாவது: “சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளின்படி, சுமார் 400 அரசு நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுகின்றன. ஐந்து லட்சம் வேலைகள் இழக்கப்படும் என்று கூட்டம் விளக்கியது.”

“நான் மின்சார சபையில் வேலை செய்கின்றேன். நாங்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை எங்கள் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதாகும். இந்த தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம் ஒரு புதிய மின்சார மசோதாவைக் கொண்டு வந்துள்ளது, ஆனால் அதில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா அல்லது எங்கள் வேலைகள் பாதுகாக்கப்படுமா என்பது எங்களுக்குத் தெரியாது,” என்று அவர் தொடர்ந்தார்.

“எவ்வாறாயினும் நாம் ஒரு உலக சூழ்நிலையை எதிர்கொள்வதால், வாக்களிப்பதன் மூலம் வேலைகளைப் பாதுகாக்க முடியுமா என்பது சந்தேமாக உள்ளது. அமெரிக்கா எங்களைப் போன்ற சிறிய நாடுகளின் பொருளாதாரங்களையும் கீழறுக்க முயற்சிக்கிறது என்று நான் நினைக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, ட்ரம்பின் வரிவிதிப்புகள் முழு உலகையும் பாதிக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

“கூட்டத்தில் விளக்கியபடி, உலகம் போரை நோக்கித் தள்ளப்படுகிறது. தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கி, நமது உரிமைகளுக்காக ஒழுங்கமைய வேண்டும் என்று இந்தக் கூட்டம் கூறியது. இது முக்கியமானது, நான் அதைப் படித்து வருகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

'உங்கள் அரசியலைப் படிக்க ஜே.வி.பி. தொடர்பான மற்றும் ரஷ்யப் புரட்சியும் முடிவுறா இருபதாம் நூற்றாண்டும், ஜேர்மனி 1931-1932 மற்றும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாடு தொடர்பான புத்தகத்தையும் வாங்கியுள்ளேன்,' என்று அவர் முடித்தார்.

Loading