காரைநகரில் இலங்கை பிரதமரின் போலித் தேர்தல் வாக்குறுதிகள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை காரைநகர் ஊரியில் 27 ஏப்பிரல் 2025 அன்று நடந்த சோ.ச.க.யின் பகிரங்க கூட்டத்தில் மகாலிங்கம் டிலக்ஸ்சன் உரையாற்றுகையில் [Photo: WSWS]

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய மே மாதம்  6ம் திகதி, நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்திக்கு (ஜே.வி.பி./தே.ம.ச.) ஆதரவாக ஏப்பிரல் 11 அன்று காரைநகரில் நடந்த கூட்டத்தில் உரையாற்றினார்.

அமரசூரிய, உள்ளுராட்சித் தேர்தலில் ஒரு பெரிய வெற்றியை எதிர்பார்த்து, காரைநகர் மற்றும் பிற இடங்களில் உள்ள கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு ஜே.வி.பி./தே.ம.ச. அர்ப்பணிப்புடன் உள்ளதாக கூறி  தங்களை ஆதரிக்குமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜே.வி.பி./தே.ம.ச., செப்டம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நவம்பரில் நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆறு மாதங்களுக்குப் பின்னர், வெகுஜனங்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதாகவும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் கூறிய அதன் வாக்குறுதிகளை தகர்தெறிந்துள்ள நிலையில், அது சர்வதேச நாணய நிதியம் மற்றும் பெறுவணிகத்தினதும் ஒரு கருவியாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

காரைநகரில், சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) வேட்பாளரான நான், ஜே.வி.பி./தே.ம.ச.யின் சமீபத்திய பொய் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கு எச்சரிக்கின்றேன். மேடையில் அமரசூரிய பேசியவை, பொய்களும் அப்பட்டமான மூடி மறைப்புக்களுமே ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஒரு சோசலிச அனைத்துலகவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக, வடக்கில் காரைநகர் பிரதேச சபையிலும், கொழும்புக்கு அருகில் உள்ள கொலன்னாவை நகர சபையிலும் சோ.ச.க. போட்டியிடுகின்றது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற யாழ்ப்பாண தீபகற்பத்தைச் சுற்றியுள்ள சிறிய தீவுகளில் காரைநகரும் ஒன்றாகும். இது, வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய பிரதேசங்களைப் போலவே பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 1983இல் தொடங்கிய 26 ஆண்டுகால கொடூரமான இனவாத யுத்தத்தால் நாசமாக்கப்பட்டது.

நவம்பரில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், நீண்ட காலமாக இருந்து வரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் போன்ற கட்சிகளை தோற்கடித்து, ஜே.வி.பி./தே.ம.ச. காரைநகர் உட்பட்ட வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் வெற்றிபெற்றது. இந்த மதிப்பிழந்த பாரம்பரிய தமிழ் முதலாளித்துவக் கட்சிகளுக்கு எதிராக தமிழ் மக்கள் இடையே உள்ள கோபத்தை அதனால் சுரண்டிக்கொள்ள முடிந்தது.

உரையின் தொடக்கத்தில், 1970 களில் சுமார் 80,000 ஆக இருந்த உள்ளூர் மக்கள் தொகை. கடந்த நான்கு தசாப்தங்களில் 10,500 ஆக பாரிய அளவில் குறைந்ததையிட்டு அமரசூரிய தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய ஏப்பிரல் 11 அன்று காரைநகர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் [Photo: WSWS]

“மக்கள் கல்வி கற்கவும் செல்வதந்தர்களாக ஆவதற்குமே காரைநகரை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என அவர் கூறினார். அப்போது காரைநகரை விட்டு வெளியேறாத மக்கள் “இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா?” என கேட்டார்.

மாவட்டத்தில் இல்லாத பத்தாயிரக் கணக்கானோர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் படித்தவர்களாகவும் செல்வந்த தட்டினராகவும் இருக்கின்றார்கள் எனக் கூறுவது ஒரு அபத்தம் ஆகும். இது, 2009 இல் முடிவடைந்த மற்றும் பல மக்களின் மனங்களில் இன்னும் ஆறாத ரணமாக இருக்கின்ற கொடூரமான இனவாத யுத்தத்தின் போது நிகழ்ந்த துயரங்களை மூடி மறைப்பதாகும்.

யுத்தத்தின்போது பலர் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளனர். வீடுகள் குண்டு வீச்சுக்களால் தரைமட்டமாக்கப்பட்டன. சிலர் இராணுவ - துணைக் கொலைப் படைகளால் சாதாரணமாக “காணாமல் ஆக்கப்ட்டனர்.” நாட்டை விட்டு வெளியேற முடியாமல், ஒரு அகதி முகாமில் இருந்து இன்னொரு அகதி முகாமிற்கு தஞ்சம் அடைந்து வாழ்ந்தோர் பெரும்பாலும் மிகக் குறைந்த ஊதிய வேலைகளில் உள்ளனர்.

அமரசூரிய இந்த இனவாத மோதல் பற்றி குறிப்பிடவே இல்லை. அவர் தனது உரையில் “யுத்தம்” என்ற வார்த்தையை, அது முடிந்த பிறகு எதுவும் மாறவில்லை என சாதாரணமாக கூறுவதற்கே மூன்று முறை பயன்படுத்தினார். யுத்தம் பற்றியும் அது கட்டவிழ்த்துவிடப்பட்டது ஏன் என்பது பற்றியும் அவர் கூறவில்லை.

பல்கலைக்கழக கல்வியாளராக இருந்த பிரதமர், 2011 இல் இருந்து அரசியலுக்கு வந்த பின்னரும் கூட 26 ஆண்டு-கால யுத்தத்தை எதிர்த்ததே கிடையாது. “வன்முறை”யை எதிர்ப்பது மற்றும் ”நல்லிணக்க”த்தை ஆதரிப்பது பற்றிய அவரின் வெற்று வாய்ச்சவடால்கள், வெகுஜனங்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட பல பாசாங்குத்தனமான வார்த்தைகளே ஆகும்.

இந்த மூடி-மறைப்பிற்கு பின்னால் இருப்பது என்ன? அவர் ஜே.வி.பி.யின் குற்றம் நிறைந்த கடந்த காலத்தை மூடி மறைக்கும் முன்னனி அமைப்பாக 2019 இல் தேசிய மக்கள் சக்தியை ஒழுங்கமைக்க ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு உதவுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

சிங்கள பேரினவாதத்தில் ஆழமாக மூழ்கியுள்ள ஜே.வி.பி., அதன் தொடக்கத்தில் இருந்தே போரின் தீவிர ஆதரவாளராக இருந்த கட்சி ஆகும். இராணுவ நடவடிக்கைகளை நடத்துவதில் போதுமான அளவு ஆக்கிரோஷமாக இல்லை என்பது தான் அடுத்தடுத்து பதிவிக்கு வந்த கொழும்பு ஆட்சிகள் மீதான ஜே.வி.பி.யின் ஒரே விமர்சனம் ஆகும்.

முழு கொழும்பு அரசியல் ஸ்தாபனமும் ஜே.வி.பி.யும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியை பாராட்டியது. இறுதிப் போரின்போது, ஐக்கிய நாடுகள் சபையின்படி குறைந்தது 40,000 பேர் படுகொலை செய்யப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கபட்டதுடன் 300,000 பேர் இராணுவ-கட்டுப்பாட்டில் இருந்த முகாம்களில் மாதக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஜே.வி.பி, இராணுவத்தின் யுத்தக் குற்றங்களையும் அட்டூழியங்களையும் தொடர்ச்சியாக நியாயப்படுத்தி வந்துள்ளது.

காரைநகரில் சுற்றுப்பயணம் செய்யும் எவரும் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டதை இன்றும் காணலாம். நீங்கள் ஒரு வயதான நபரிடம் பேசினால் அவர்கள் கொலைகள், அழிவு மற்றும் அவர்கள் அனுபவித்த துண்பங்களை பற்றி விளக்குவார். மக்கள் இந்த கடந்த காலத்தை மறக்க வேண்டும் என்றே அமரசூரிய விரும்புகின்றார்.

காரைநகரின் கடலோரப் பகுதி இலங்கை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதோடு பல தசாப்தங்களாக அதி உயர் பாதுகாப்பு வலயமாக கட்டுப்படுத்தப்பட்டது. சீ-நோர் மீன்பிடி படகு தொழிற்சாலை நாசமாக்கபட்டதோடு அங்கு ஒரு பெரிய கடற்படைத் தளம் நிறுவப்பட்டது.

காரைநகர் ஊரியில் உள்ள இறால் பிடிக்கும் குடும்பத்தின் கொட்டில் வீடு. இந்த குடும்பம் சுமார் 12 ஆண்டுகளாக இதில் வசித்துவருகின்றது. [Photo: WSWS]

1987 இல், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் காரைநகர் உட்பட இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை இந்திய அமைதி காக்கும் படை (IPKF)  ஆக்கிரமித்தது. அமைதி காக்கும் படை என அழைக்கப்பட்ட இந்திய படை, புலிகளை நிராயுதபாணியாக்கி, எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க முயற்சித்தபோது, கொடூரமான அடக்குமுறைகளை முன்னெடுத்து ஆயிரக்கணக்கானோரை படுகொலை செய்தது.

ஜே.வி.பி., தொழிலாள வர்ககத்தை பாதுகாக்கும் நிலைப்பாட்டில் அல்லாது ”தேசத்தைப் பாதுகாக்கும்” நிலைப்பாட்டில் இருந்தே 1987 இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தது. இந்தியப் படைகளின் வருகையையும் தமிழ் உயரடுக்கிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வு கொடுப்பதையும், தேசத்தை காட்டிக்கொடுக்கும் செயல் என அறிவித்த ஜே.வி.பி., விசமத்தனமான இந்திய-விரோத பேரினவாத பிரச்சாரத்தை தொடங்கியது.

தாம், அழைப்பு விடுக்கும் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் இணைய வேண்டும் என்று கோரி, தெற்கில் பாசிச தாக்குதல்களைத் தொடங்கிய ஜே.வி.பி., ஆயிரக்கணக்கான அரசியல் எதிரிகள், தொழிற்சங்கவாதிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைக் கொன்றது என்பது வரலாற்றுப் பதிவுகளில் ஒன்றாகும்.

சோ.ச.க.வின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) தோழர்கள் ஜே.வி.பி. துப்பாக்கிதாரர்களால் கொல்லப்பட்டனர். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தது. ஆனால் அது நாட்டைப் பாதுகாக்கும் நிலைபாட்டில் இருந்து அல்ல. மாறாக, மோதலை உடனடியாக நிறுத்தவும் வடக்கு கிழக்கில் இருந்து சகல படைகளையும் விலக்கிக்கொள்ளவும் கோரி, ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் நோக்கிலேயே எதிர்த்தது.

தொடக்கத்தில் இருந்தே போரை எதிர்த்த பு.க.க./சோ.ச.க., யுத்தமானது 1948 உத்தியோகபூர்வ சுதந்திரத்தில் இருந்தே, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களால் பின்பற்றப்பட்ட தமிழர் - விரோத பாகுபாட்டின் தொடர்ச்சி என விளக்கியது. இந்த மோதல், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதையும் முதலாளித்துவ ஆட்சியைப் பலப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு சிங்கள மேலாதிக்கவாதத்தை அடிப்படையாகக் கொண்டு, 1983 தமிழர்-விரோத படுகொலையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

நாம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட தமிழ் முதலாளித்துவ கட்சிகளின் தேசியவாத அரசியலையும் எதிர்க்கிறோம். இந்த கட்சிகள் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து அக்கறை கொண்டிருக்கவில்லை. மாறாக தமிழ் உயரடுக்குகளின் சலுகைகள் குறித்து மட்டுமே அக்கறை கொண்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்தக் கட்சிகளும், தொழிலாளர்களையும் கிராமப்புற ஏழைகளையும் கூட்டாகச் சுரண்டுவதன் பேரில், வடக்கு கிழக்கிற்கு பரந்த அதிகாரப் பகிர்வுடன் ஒரு தனியான முதலாளித்துவ அரசை உருவாக்குதவற்கு ஏகாதிபத்தியத்திடம் வேண்டுகோள் விடுத்தன.

பு.க.க./சோ.ச.க., தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிச குடியரசுகளைக் கட்டியெழுப்புவதன் பாகமாக, ஸ்ரீலங்கா - ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராட, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக அழைப்பு விடுத்தது.

பற்றாக்குறையான கல்வி வசதிகள், சுத்தமான குடிநீர் பிரச்சினை, புறக்கணிக்கபட்ட வீதிகள் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை சுட்டிக்காட்டி காரைநகரில் மக்கள் எதிர்கொள்ளும் பரிதாபகரமான வாழ்க்கை நிலைமைகள் பற்றி அமரசூரிய போலிக் கண்ணீர் வடித்தார்.

தனது தேர்தல் பிரச்சாரத்தின் புள்ளிக்கு வந்த அமரசூரிய, “உள்ளூராட்சி மிகவும் முக்கியமானதாக மாறும் இடம் இதுதான். ஒரு மாதத்திற்கு முன்பு வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இந்த சகல தேவைகளையும் நிவர்த்தி செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சதமும் புத்திசாலித்தனமாக செலவு செய்யப்பட வேண்டும். நீங்கள் சுத்தமான கறைபடியாத மக்களை தேர்வுசெய்ய வேண்டும்,” என கூறினார்.

அவர் உண்மையில் கூறியது ஜே.வி.பி./தே.ம.ச.க்கு வாக்களியுங்கள் என்பதுதான்.

அனைத்து நோய்களுக்கும் ஓர் அருமருந்து என பிரதமர் பாராட்டிய வரவு-செலவுத் திட்டம் எப்படியானது. இது பாரிய சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் உழைக்கும் மக்கள் மீது சுமைகளைத் திணிக்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒரு வரைபடத்தை தவிர வேறு ஒன்றுமல்ல. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டிலினா ஜோர்ஜிவா, வரவு-செலவுத் திட்டத்தை முழு மனதாகப் பாராட்டியதோடு ”திரு. ஜனாதிபதிக்கு, சபாஷ், எனது இதயம் உங்களிடம் இருக்கிறது,” என்று வாழ்த்தினார்.

அமரசூரிய அரசாங்கத்தின் இரு முக்கியமான முன்னுரிமைகளை அடிக்கோடிட்டு காட்டிய போது அரசாங்கத்தின் உண்மையான வர்க்க நலன்கள் முன்னுக்கு வந்தன. முதலாவது “பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வது” என அவர் கூறினார். மோசமான நிர்வாகம் மற்றும் கடுமையான ஊழல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறிது நிவாரணம் கிடைக்க வேண்டும் அத்தோடு பொருளாதாரம் திருத்தப்படல் வேண்டும் என குறிப்பிட்ட அவர், “எமது பொருளாதாரத்துடன் நாம் மிக ஒழுக்கமாக இருக்க வேண்டும், அதிக செலவு செய்ய கூடாது” என சேரத்துக்கொண்டார்.

“சரியான பாதையில் செல்வது” மற்றும் “அதிகளவில் செலவு செய்ய கூடாது” என்பதன் அர்த்தம் என்ன? அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளைப் பின்பற்றுவதும் உழைக்கும் மக்களை தமது வயிற்றை மேலும் இறுக்கி கட்டிக்கொள்ள நிர்ப்பந்திப்பதுமே ஆகும். திசாநாயக்க, பாரிய சர்வதேச கடன் வழங்குனர்களுக்கு திருப்பிச் செலுத்தவதற்கும் பெரு நிறுவனங்களின் இலாபத்தை அதிகரிப்பதற்கும்  வரிகள், கட்டண சேவைகள் மற்றும் அனைத்து அத்தியவசியப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்த, தனது முன்னோடியான சர்வதேச நாணய நிதியத்துக்கு சார்பான ரணில் விக்கிரமசிங்கவின் சிக்கன நடவடிக்கைகளை நீடித்துள்ளார்.

இரண்டாவது முன்னுரிமையாக, “இந்த நாட்டில் ஜனநாயகத்ததை மீட்டெடுப்பது” என அமரசூரிய அறிவித்தார். ஆறு மாதங்களுக்குள் இரண்டு தேர்தல்களை நடத்தியதே இதற்கான அவரது சான்று ஆகும். ஜே.வி.பி./தே.ம.ச. ஜனநாயகத்தை நேசிக்கின்றமையால் இந்த தேர்தல்கள் நடத்தப்படவில்லை. மாறாக, சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்காக அதன் கைகளை பலப்படுத்திக்கொள்வதற்கே ஆகும்.

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, பயங்கரவாத தடைச் சட்டம் (PTA), மற்றும் கருத்துச் சுதந்திரத்தை தடுக்கும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் (OSA) ஆகியவை அகற்றப்பட்டு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் மற்றும் வடக்கு கிழக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள காணிகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என திசாநாயக்க அறிவித்தார்.

ஆனால், நடைமுறைகள் இதற்கு மாறாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் இளைஞர்களை தடுத்து வைக்க பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றது. சிரேஷ்ட இராணுவ தளபதிகள் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றனர். அமைச்சர்கள் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக அளித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கி, பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களே உள்ளனர், அவர்களை உடனடியாக விடுவிக்க முடியாது, என்று கூறுகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கில் அடக்குமுறை இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கிறது.

டிசம்பரில் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் பொலிஸாரால் வன்முறை மூலம் அடக்கப்பட்டது. மாணவர்களின் போராட்டங்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை தொடர்கின்றது. போராட்டத்திற்கு வரும் தொழிலாளர்கள், பொருளாதார மீட்சிக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை நாசப்படுத்த வேண்டாம் என்று அச்சுறுத்தும் வகையில் எச்சரிக்கப்பட்டனர்.

அனைத்துக்கும் மேலாக, வெளிப்படையான ஜனநாயக விரோத நகர்வாக, ஜனவரி 3 அன்று சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) ஏற்பாடு செய்திருந்த விரிவுரையை அரசாங்கத்தின் துாண்டுதலின் பேரில் பேராதனைப் பல்கலைக் கழக அதிகாரிகள் தடை செய்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை எவ்வாறு தோற்கடிப்பது என்ற தலைப்பிடப்பட்ட கூட்டம், அரசாங்கத்தின் கொள்கையை சவால் செய்வதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

ஜே.வி.பி./தே.ம.ச., ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு அப்பால், அடிப்படை ஜனநாயக உரிமைகளை மிதித்து வருகின்றது, என்பதையே இந்த சம்பவம் அம்பலப்படுத்துகிறது. உண்மையில், அதன் சிக்கன வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் சர்வதிகார ஆட்சியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி, சோசலிக வேலைத் திட்டத்தின் அடிப்படையில் இன வேறுபாடுகளைக் கடந்து, சகல முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்து சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் அணிதிரட்டவும் இந்த தேர்தலில் தலையீடு செய்யகின்றது. முதலாளித்துவ அமைப்புமுறைக்குள் அல்லது தேசிய கட்டமைப்பிற்குள் எந்த தீர்வும் கிடையாது.

நாம், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை எமது வேலைத்திட்டத்தை படித்து இந்தப் போராட்டத்தை அரசியல் ரீதியில் வழிநடத்தும் ஒரு புரட்சிகர கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப அதில் இணையுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இந்த வேலைத்திட்டத்திற்கு உங்கள் ஆதரவைப் பதிவு செய்ய காரைநகர் மற்றும் கொலன்னாவை தொகுதியில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.

Loading