மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
உக்ரேனில் மூன்று ஆண்டுகால நேட்டோ-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு வாஷிங்டனுக்குள் உள்ள பிரிவுகள் மத்தியஸ்தம் செய்ய முயற்சித்துவரும் நிலையில், ஐரோப்பாவில் போர்நிறுத்தத்திற்கு எதிரான கண்டனங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால், வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையே உக்ரேனைக் கொள்ளையடிப்பது தொடர்பாகவும், ட்ரம்பின் சுங்கவரிகள் தொடர்பான உலகளாவிய வர்த்தகப் போர் அதிகரித்து வரும் நிலையில், உலகப் பொருளாதாரத்தை எவ்வாறு பங்கிட்டுக் கொள்வது என்பது குறித்தும் கடுமையான போட்டிகள் உள்ளன.
ஏப்ரல் 25 வெள்ளிக்கிழமை, அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர மாஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்தித்தார். பேச்சுவார்த்தைகள் “ஒரு உடன்பாட்டிற்கு மிக நெருக்கமாக” இருந்ததாகவும், “பெரும்பாலான முக்கிய விஷயங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும்”, ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் “அவற்றை முடித்து” நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்றும் ட்ரம்ப் கூறினார். புட்டினின் உதவியாளர் யூரி உஷாகோவ், இந்தப் பேச்சுவார்த்தைகள் “மிகவும் பயனுள்ளதாக” இருப்பதாகவும், வாஷிங்டனும் மாஸ்கோவும் “உக்ரேனில் மட்டுமல்ல, பல சர்வதேசப் பிரச்சினைகளிலும் நெருக்கமாக இருப்பதாகவும்” கூறினார்.
உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரை சுதந்திரத்திற்கான போர் என்று பாராட்டும் அனைத்து ஏகாதிபத்திய பிரச்சாரங்களுக்கும் அமெரிக்காவின் பேச்சுவார்த்தை நிலைப்பாடு முற்றுப்புள்ளி வைக்கிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. வாஷிங்டன், பொருளாதார ரீதியாக பேரழிவு தரும் கனிம ஒப்பந்தம் செய்துகொள்ளவும், உக்ரேனை கொள்ளையடித்து, நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் சுரங்க வருமானத்தை அமெரிக்காவுக்கு அனுப்பவும் கோருகிறது. அதே நேரத்தில், குறைந்தபட்சம் இப்போதைக்கு, அது தற்போது இராணுவ ரீதியாகக் கட்டுப்படுத்தும் பகுதிகள் மீதான ரஷ்யாவின் அதிகார வரம்பிற்கு இணங்குகிறது - ரஷ்ய துருப்புக்களால் கட்டுப்படுத்தப்பட்டுவரும் அனைத்து முன்னாள் உக்ரேனிய பிரதேசங்களையும் மீண்டும் கைப்பற்றும் நேட்டோவின் போர் இலக்கையும் வாஷிங்டன் கைவிடுகிறது.
ஒரு “நிரந்தர போர்நிறுத்தத்திற்கு” அழைப்பு விடுக்கும் ஒரு ஆவணம், அதன் விதிமுறைகளை “அமெரிக்காவிலிருந்து இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாத இறுதி சலுகை” என்று அழைக்கிறது. இது கிரிமியா மீதான ரஷ்ய இறையாண்மையை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கவும், லுஹான்ஸ்க் பகுதிகள் மற்றும் மாஸ்கோவால் கட்டுப்படுத்தப்படும் சபோரிஷியா, டோனெட்ஸ்க் மற்றும் கெர்சன் பகுதிகளின் சில பகுதிகள் மீதான ரஷ்ய கட்டுப்பாட்டை சவால் செய்யாமல் இருக்கவும் முன்மொழிகிறது. உக்ரேன் நேட்டோவில் சேரக்கூடாது என்றும், அது ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரலாம் என்றும், தன்னார்வத் தொண்டு செய்யும் “ஐரோப்பிய மற்றும் ஐரோப்பியரல்லாத நாடுகளின் தற்காலிகக் குழுவால்” அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அது நிபந்தனை விதிக்கிறது.
இந்த முன்மொழிவு, உக்ரேனிய வருவாயில் மலைப்பூட்டும் வகையில் 500 பில்லியன் டாலரை வாஷிங்டன் பைக்குள் போட அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு அமெரிக்க-உக்ரேனிய “பொருளாதார கூட்டுறவு/கனிமவள உடன்படிக்கையை” உக்ரேன் மீது அது திணிக்கிறது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் தற்போது செயல்படாமல் இருக்கும் சபோரிஜியா அணு மின் நிலையத்தின் மீதான கட்டுப்பாட்டையும் அது கோருகிறது. இதற்குப் பிரதிபலனாக, அது கியேவில் 2014 நேட்டோ-ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் இருந்து ரஷ்யா மீது திணிக்கப்பட்ட பொருளாதாரத் தடையாணைகளை நீக்கும் என்பதோடு, எரிசக்தி விடயத்தில் “அமெரிக்க-ரஷ்ய கூட்டுறவுக்கு” உறுதியளிக்கும்.
இந்த போர்நிறுத்தம் ஒரு நீடித்த சமாதானத்திற்கு தயாரிப்பு செய்யாது. மாறாக, மில்லியன் கணக்கான உக்ரேனிய மற்றும் ரஷ்ய உயிர்களை பலிகொண்ட ஒரு போரை உறைய வைக்கும். முக்கியமாக நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் இழந்த உக்ரேன் போரில் வாஷிங்டன் செலவிட்ட பெரும் தொகையை மீட்டெடுப்பதே இதன் நோக்கமாகும். இது முதன்மையாக உக்ரேனிய மக்களின் இழப்பில் செய்யப்படுகிறது. அவர்களுடைய நாடு சிதைக்கப்பட்டு, அவர்களுடைய வருவாய்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கொள்ளையடிக்கப்பட உள்ளன. ஆனால் இது உக்ரேனில் இருந்து கொள்ளையடிக்கப்படும் கனிம வளங்கள் மற்றும் பிற கொள்ளைப்பொருட்களின் பெரும் பகுதியை கைப்பற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் அபிலாஷைகளின் இழப்பிலும் செய்யப்படுகிறது.
நேட்டோ சக்திகள் உக்ரேனிய மற்றும் உலக வளங்களை மேலாதிக்கம் செலுத்த போட்டியிடுவதாலும், 1945 இல் இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து தங்கள் உறவுகளை நிர்வகித்து வரும் ஒப்பந்தங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் வர்த்தகப் போர் வரிகளால் ஒருவருக்கொருவர் அச்சுறுத்தி வருவதாலும், அமெரிக்க-ஐரோப்பிய உறவுகள் வரலாற்று சரிவைச் சந்தித்து வருகின்றன. ஐரோப்பிய வல்லரசுகள் அமெரிக்காவிலிருந்து சுயாதீனமாகப் போரை நடத்தத் தயாராகும் வகையில், 800 பில்லியன் யூரோ ஐரோப்பிய ஒன்றிய இராணுவத் திட்டம் உட்பட, வரலாற்று மீள்ஆயுதமயமாக்கல் உந்துதலைத் தொடங்குகின்றன. இது ஐரோப்பிய செய்தி ஊடகங்களில், முன்மொழியப்பட்ட அமெரிக்க போர்நிறுத்தம், கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகி வருவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஜேர்மனியில், டெர் ஸ்பீகல் பத்திரிகை போர்நிறுத்த திட்டத்தை முதலாம் உலக போரில் ஜேர்மன் தோல்விக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் “வேர்சாய் உடன்படிக்கையுடன்” ஒப்பிட்டது. இந்த ஒப்பந்மானது, ஜேர்மனி மீது பரந்த நிதி அபராதங்களை திணித்து 1923 இல் ஜேர்மனியின் ரூர் பள்ளத்தாக்கை பிரான்ஸ் ஆக்கிரமிக்க பாதை வகுத்தது. “அமெரிக்கா உக்ரேனுக்கு ஒரு அமைதியை முன்மொழிகிறது, இது முக்கியமாக ஆக்கிரமிப்பாளரான ரஷ்யாவிற்கு பயனளிக்கிறது” என்று அது புகார் கூறியது.
முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சியின் சான்சிலர் சிக்மார் கேப்ரியலை டெர் ஸ்பீகல் பேட்டி கண்டது. உக்ரேனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் மீண்டும் கைப்பற்றுவதற்கான முந்தைய நேட்டோ அழைப்புகளை ட்ரம்ப் நிர்வாகம் கைவிட்டதற்காக அவர் கண்டனம் தெரிவித்தார்.
“இவையனைத்தும் ட்ரம்பின் அமெரிக்க அரசாங்கம் சாத்தியமானளவுக்கு விரைவாக பின்வாங்குவதற்கும் அதன் பொறுப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்குமான வெறுமனே ஒரு வழிவகையாகும்,” என்று காப்ரியேல் ஸ்பீகலுக்கு தெரிவித்தார். “ஆக்கிரமிப்புக்கு பலியாகிய நாடு, அதாவது உக்ரேன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாமல், மோதலில் ஆக்கிரமிப்பு தரப்பான ரஷ்யாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துவது இயல்பாகவே அபத்தமானது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“நல்ல நடவடிக்கையாக, ட்ரம்ப் நிர்வாகம் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெற வேண்டும்” என்றும் கேப்ரியல் கோரினார்: “இந்த பிரியாவிடை எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ, அவ்வளவுக்கு நல்லது. பின்னர், புட்டின் ஐரோப்பாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு நிர்பந்திக்கப்படுவார்.” ஐரோப்பிய ஒன்றிய இராணுவ செலவுகளை அதிகரிக்க அழுத்தமளித்து, காப்ரியேல் பின்வருமாறு கூறினார்: “இதன் பொருள் ஐரோப்பாவின் பொறுப்புகள் அதிகரிக்கும். … ஆனால் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் ஐரோப்பாவில் குழப்பத்தை விதைப்பதைத் தொடர்ந்தால் அது இன்னும் மோசமாக இருக்கும்.”
பிரிட்டனில், கார்டியன் பத்திரிகை போர்நிறுத்தத் திட்டத்தை “வெறும் துண்டாடுதல்” என்று கண்டித்ததுடன், “ட்ரம்பின் அமைதித் திட்டம் உக்ரேனை தியாகம் செய்ய” திணித்துள்ளதாக கூறியது. மேலும், அது போர்நிறுத்தத்தை “முந்தைய போர்களின் முடிவில் ஏற்பட்ட பெரும் வல்லரசு சிந்தனையை நினைவூட்டுவதாக” தாக்கியது: “1919 இல் வெர்சாய்ஸில், குறுகிய அளவில் மட்டுமே தோற்கடிக்கப்பட்ட ஒரு நாடு கைப்பற்றப்பட்டு நடத்தப்பட்டது போல அல்லது 1945 இல் போட்ஸ்டாமில் ஐரோப்பாவை மேற்கு மற்றும் கிழக்கு எனப் பிரித்தது போல ட்ரம்பின் அமைதித் திட்டம் கையாளப்படுகிறது.”
பிரான்சில் இருந்து மிகவும் விஷமத்தனமான விடையிறுப்பு வந்தது. ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் வியாழனன்று புட்டினுக்கு எதிராக ரஷ்யாவிடமிருந்து “நிபந்தனையற்ற போர்நிறுத்தம்” கோரி ஒரு வசைமாரியைத் தொடங்கினார். “பொய் சொல்வதை நிறுத்துமாறு” புட்டினிடம் மக்ரோன் புகார் செய்தார்: “[புட்டின்] அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்களுடன் பேசும் போது, ‘எனக்கு அமைதி வேண்டும்’ என்று கூறுகிறார்... ஆனால் அவர் உக்ரேன் மீது குண்டுகளை வீசி உயிர்களை கொன்று குவித்து வருகிறார்” என்று மக்ரோன் குறிப்பிட்டார்.
யதார்த்தத்தில், எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மோதல்கள் 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பின் பிற்போக்குத்தனமான தாக்கங்களை அம்பலப்படுத்துகிறது. சோவியத் தொழிலாள வர்க்கத்தை வெவ்வேறு முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்தியதன் மூலமாக, அது ஏகாதிபத்திய சூழ்ச்சிக்கும் இரத்தந்தோய்ந்த போருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக உக்ரேனுக்குள்ளேயே இரத்தந்தோய்ந்த போருக்கு பாதை அமைத்துக் கொடுத்தது. நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் கியேவில் அவற்றின் பினாமி ஆட்சியுடனும், புட்டினை சுற்றியிருந்த முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களுடனும், முற்றிலும் பிற்போக்குத்தனமான கொள்கைகளைப் பின்பற்றின.
வாஷிங்டன் மட்டுமல்ல, மாறாக அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் கூட கடந்த தசாப்தத்தில், உக்ரேனில் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் எரியூட்டும் பாத்திரத்தை வகித்து வந்துள்ளனர். 2014 இல், கியேவில் இப்போதைய அதிவலது ஆட்சியை நிறுவிய பாசிஸ்ட்டுக்கள் தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பையும், உக்ரேனில் ரஷ்ய மொழி பேசுவதைத் தடை செய்ய முயன்றதையும் அவை ஆதரித்தன. உக்ரேனின் ரஷ்ய மொழி பேசும் பகுதிகளில் எட்டு ஆண்டுகாலமாக இடம்பெற்றுவந்த சண்டை மற்றும் நிலையற்ற போர்நிறுத்தங்களுக்குப் பின்னர், பிப்ரவரி 2022 இல் புட்டின் உக்ரேன் மீதான அவரது பிற்போக்குத்தனமான படையெடுப்பைத் தொடங்கிய போது, நேட்டோ சக்திகள் ஏப்ரல் 2022 இல் இஸ்தான்புல்லில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர்கள் ஒப்புக்கொண்ட ஒரு சமாதான உடன்படிக்கையையும் தகர்த்தன.
இப்போது, ரஷ்யர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய, ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக உக்ரேனிய உயிர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய இந்தப் போர், நேட்டோவிற்கு ஒரு படுதோல்வியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போரை நிறுத்தியிருந்தால், தற்போது பார்த்ததை விட, உக்ரேன் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது.
பிரிட்டன் மற்றும் பிரான்சைப் பொறுத்த வரையில், உக்ரேனில் இருந்து ட்ரம்ப் வெளியேறியதால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப துருப்புகளை அனுப்ப சூளுரைத்த நிலையில், அவை இப்போது வேகமாகவும் சம்பிரதாயமின்றியும் அவற்றின் வாக்குறுதிகளைக் கைவிட்டு வருகின்றன.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத பிரிட்டிஷ் அதிகாரிகள் டைம்ஸ் ஆஃப் லண்டனிடம் கூறியதாவது:
ஆபத்துகள் மிக அதிகம் மற்றும் அத்தகைய பணிக்கு படைகள் போதுமானதாக இல்லை. இது எப்போதும் இங்கிலாந்தின் சிந்தனையாக இருந்தது. பிரான்ஸ் தான் அதிகமாக மல்லுக்கட்டும் அணுகுமுறையை விரும்பியது.
பிரிட்டனும் பிரான்சும் தற்போது ஒரு பெரிய இராணுவ நிலைநிறுத்தலை அல்ல, “இராணுவ பயிற்சியாளர்களின்” ஒரு சிறிய படையை அனுப்ப திட்டமிட்டு வருகின்றன என்பதையும் இந்த அதிகாரிகள் சேர்த்துக் கொண்டனர். “பயிற்சியாளர்கள் அங்கு இருப்பதன் மூலம் ‘உறுதியளிக்கிறார்கள்’, ஆனால் ஒரு தடுப்பு அல்லது பாதுகாப்பு படை அல்ல,” என்று அவர்கள் கூறினர். இது “நேரடி பாதுகாப்பு பணிகளில் ஈடுபடாமல் சிப்பாய்களை நிலைநிறுத்துவதற்கான ஒரு உறுதிப்பாட்டை” நிறைவேற்றுகிறது என்பதையும் அவர்கள் சேர்த்துக் கொண்டனர்.
உண்மையில், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் இரண்டும் ரஷ்யாவுடனான போருக்கு உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்ப வேண்டும் என்ற பெருமளவிலான மக்கள் வெறுப்பு அழைப்புகளால் தங்கள் சொந்த மக்களையே தாக்கி வருகின்றன. இங்கிலாந்து பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் மார்ச் 15 அன்று, இலண்டனில் நடந்த ஒரு மெய்நிகர் உச்சிமாநாட்டில் உக்ரேனுக்கு 10,000 துருப்புகளை அனுப்ப அழைப்பு விடுத்தார். மேலும் பாரிஸில் போர் உச்சிமாநாடுகளுக்காக மக்ரோன் மற்றும் பிற ஐரோப்பிய அதிகாரிகளைச் சந்தித்தார். குறிப்பாக பிரிட்டிஷ் அரசாங்கம், இந்த சூழ்நிலையை, உக்ரேனின் கனிம வளங்களைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்ட வாஷிங்டனுடன் போட்டியிட்டு, அதன் சொந்த திட்டங்களை வகுப்பதோடு தொடர்புபடுத்தியுள்ளது.
இந்தப் போரில் ஈடுபட்டுள்ள திவாலான தேசிய அரசாங்கங்களில் ஒன்றோடு தங்களை இணைத்துக் கொள்வதன் மூலம், தொழிலாளர்கள் இரத்தக்களரியையும் துரிதமாகிவரும் சர்வதேச மோதல்களையும் தடுத்து நிறுத்த முடியாது. ஒவ்வொரு தேசிய அரசின் கொள்கைகளையும் ஆணையிடும் இராணுவவாத முதலாளித்துவ தன்னலக்குழுக்கள் தங்களை திவாலானவர்களாகவும் ஈவிரக்கமற்றவர்களாகவும் நிரூபித்து வருகின்றன. இன்றைய தீர்க்கமான கேள்வி, முன்னாள் சோவியத் யூனியன், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களை போருக்கு எதிரான சோசலிச சர்வதேசிய எதிர்ப்பின் அடிப்படையில் போராட்டத்தில் ஒன்றிணைப்பதாகும்.