மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இற்றைக்கு 250 ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 19, 1775 அன்று, அமெரிக்கப் புரட்சியின் முதல் போர்கள் மாசசூசெட்ஸின் லெக்சிங்டன் மற்றும் கொன்கோர்டில் இடம்பெற்றன. வளர்ந்து வந்த புரட்சிகர நெருக்கடியிலிருந்து பிறந்த அந்தப் போர்கள் இடம்பெற்ற நாள், போரின் விளைவை முன்னறிவித்தது: அப்போது உலகின் மிகப்பெரிய சக்தியாக இருந்த பெரிய பிரித்தானியாவை புரட்சி வெற்றிகொண்டு, உலகின் முதல் பெரிய நவீன ஜனநாயகக் குடியரசை நிறுவியது.
1775 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், வட அமெரிக்காவில் இருந்த பிரிட்டிஷ் காலனிகளில், குறிப்பாக மாசசூசெட்ஸில் ஏற்பட்ட எழுச்சி ஒரு மேம்பட்ட கட்டத்தை எட்டியது. மாசசூசெட்ஸில், பிரிட்டிஷ் வட அமெரிக்காவின் தலைமைத் தளபதியும், மாசசூசெட்ஸ் விரிகுடா மாகாணத்தின் சமீபத்தில் நியமிக்கப்பட்ட ஆளுநருமான தோமஸ் கேஜின் வார்த்தைகளில், “கிளர்ச்சியின் தீப்பிழம்புகள் கற்பனைக்கும் அப்பால் நாடு முழுவதும் பரவியிருந்தன”.
ஏப்ரல் 14, 1775 அன்று, பெரிய பிரித்தானியாவின் பிரதம மந்திரி பிரபு நோர்த்தின் அரசாங்கத்தில் காலனிகளுக்கான அரசு செயலாளராக இருந்த பிரபு டார்ட் மவுத்திடமிருந்து நேரடியாக அந்த “கிளர்ச்சியின் தீப்பிழம்புகளை” அணைக்க ஜெனரல் கேஜ் உத்தரவுகளைப் பெற்றார். “அனைத்து இராணுவ களஞ்சியங்களையும் கைப்பற்றி அழிக்கவும், முக்கிய தலைவர்களைக் கைது செய்யவும்”, டார்ட் மவுத் எழுதினார். காலனித்துவ மக்களின் கிளர்ச்சி “ஒரு முதிர்ந்த நிலையை அடையாதபடி” அவர்களை அடக்குமாறு கேஜிடம் உத்தரவிடப்பட்டது.
ஆச்சரியம் அளிக்கும் வகையில் பிரிட்டன் இரகசிய தாக்குதல் திட்டத்தை கொண்டிருந்தது. ஏப்ரல் 19 ஆம் தேதி இரவு கடும் இருட்டில், ஜெனரல் கேஜ், பொஸ்டனில் உள்ள அவர்களின் தளத்திலிருந்து வெளியேறி, சார்லஸ் ஆற்றின் குறுக்கே மொத்தம் 700 சிப்பாய்களைக் கொண்ட 21 கம்பெனி படையணிகளை அணிவகுத்துச் சென்றார். நள்ளிரவில், ஒன்றுகூடிய இலகு காலாட்படை மற்றும் கையெறி குண்டுகளைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற படையணி, கிழக்கு கேம்பிரிட்ஜிலிருந்து கொன்கோர்ட் நோக்கி தங்கள் அணிவகுப்பைத் தொடங்கின. அங்கு மாசசூசெட்ஸ் புரட்சியின் இரண்டு தலைவர்களான சாம் ஆடம்ஸ் மற்றும் ஜோன் ஹான்காக் இருப்பதை உளவுத்துறை சுட்டிக்காட்டியது. இந்த இருவரும் கைது செய்யப்பட்டு, பெரிய பிரித்தானியாவுக்கு தேசத்துரோக குற்றத்திற்காக விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். காலனித்துவ விடுதலைப் போராளிகளால் சேகரிக்கப்பட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படவிருந்தன.
ஆங்கிலேயர்களிடம் உளவாளிகள் இருந்தனர். ஆனால், பல ஆக்கிரமிப்புப் படைகள் பல ஆண்டுகளாகக் கற்றுக்கொண்டது போல, புரட்சிக்கு அதன் சொந்தக் கண்களும் காதுகளும் இருப்பதை ஜெனரல் கேஜ் விரைவில் கண்டுபிடிப்பார். பிரித்தானியா சிப்பாய்களின் நடமாட்டம் குறித்து அவர்கள் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே தேசபக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், பிரபலமாக, பால் ரெவரே தனது நள்ளிரவு சவாரியில் கிராமப்புறங்களை எச்சரிக்கவும், ஆடம்ஸ் மற்றும் ஹான்காக்கை எச்சரிக்கவும் அனுப்பப்பட்டார். அவர்கள் கேர்னல் பிரான்சிஸ் ஸ்மித் மற்றும் மேஜர் ஜோன் பிட்காயின் ஆகியோரின் கட்டளையின் கீழ், பிரிட்டிஷ் படைகள் வருவதற்கு முன்னால் கொன்கோர்டை தயக்கத்துடன் விட்டுச் சென்றனர்.
எச்சரிக்கை மணிகள் எழுப்பப்பட்டன. லெக்சிங்டனுக்கு அவர்கள் அணிவகுத்துச் சென்ற காலம் முழுவதும், “ஆங்கிலேயர்கள் தேவாலய மணிகள் ஒலிப்பது, எச்சரிக்கை வேட்டுக்களை தீர்ப்பது, டிரம்ஸ் அடிப்பது மற்றும் எரியும் தீச்சுவாலைகளின் வெளிச்சத்தில்” அங்கிருந்தனர் என்று வரலாற்றாசிரியர் மெரில் ஜென்சன் எழுதுகிறார். விடியற்காலையில் லெக்சிங்டனுக்கு சிவப்பு கோட்டுகள் அணிந்த பிரிட்டிஷ் சிப்பாய்கள் வந்தபோது, “ஒரு நிமிட அறிவிப்பில் ஒன்றுகூடத் தயாராக இருந்த 80 காலனிகளின் போராளிக் குழுவினர்” தங்களுக்காகக் காத்திருந்ததைக் கண்டார்கள் – ஏனெனில், காலனிகளின் குடிமக்கள் பிரிட்டிஷ் சிப்பாய்களை சிவப்பு கோட்டுகள் என்று அழைத்தனர். அவர்களது அணுகுமுறை குறித்த அறிவிப்பின் பேரில், மாசசூசெட்ஸ் போராளிகள் அணியினர் ஒரு நிமிட அறிவிப்பில் ஒன்றுகூடத் தயாராக இருந்தனர். போராளிகளின் தளபதி கேப்டன் ஜோன் பார்க்கர், பிரிட்டிஷ் படைகளின் பலத்தை உணர்ந்து, பிட்காயினின் உத்தரவின் பேரில் தனது ஆட்களை பின்வாங்க உத்தரவிட்டார்.
அந்த நேரத்தில், லெக்சிங்டன் கிரீன் பகுதி மீது யாரோ ஒருவர் துப்பாக்கிச் சூடு —யார் என்பது ஒருபோதும் தீர்மானிக்கப்படவில்லை— நடத்தினார். காலனி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பிரிட்டிஷ் அணிகளின் ஒழுக்கம் உடைந்தது. அவர்கள் துப்பாக்கிச் சூட்டை நிறுத்தியபோது, எட்டு காலனி மக்கள் இறந்து போயினர். போரில் மரணம் அடைந்த பல்லாயிரக்கணக்கானவர்களில் “தேசபக்த கல்லறைகளை” கண்ட முதல் மனிதர்கள் இவர்கள்தான். எட்டு ஆண்டுகள், நான்கு மாதங்கள் மற்றும் 15 நாட்கள் நடந்த சண்டை, பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் அமெரிக்காவின் சுதந்திரம் ஆகியவற்றில் உச்சக்கட்டத்தை அடைந்தது. (மக்கள்தொகையில் பதிவான இறப்புகளைக் கணக்கிடும்போது, அமெரிக்கப் புரட்சி, உள்நாட்டுப் போருக்குப் பிறகு, நாட்டின் இரண்டாவது மிக இரத்தக்களரிப் புரட்சியாகவும், வியட்நாம் வரை மிக நீண்டதாகவும் இருந்தது.)
பார்க்கரின் ஆட்களை விரட்டியடித்துவிட்டு, பிரிட்டிஷ் படையினர் கொன்கோர்டை நோக்கி முன்னேறி, காலை 7:00 மணிக்கு வந்து சேர்ந்தனர். கிளர்ச்சியாளர்களால் வெறிச்சோடி காணப்பட்ட நகரத்தைக் கண்டறிந்த ஆக்கிரமிப்பாளர்கள் வெடிமருந்துகளை எரிக்க நெருப்பை மூட்டத் தொடங்கினர். அருகிலுள்ள மலைகளில் இருந்த தேசப்பற்று போராளிகள், பிரிட்டிஷ் படையினர் நகரத்தை எரிக்க திட்டமிட்டுள்ளதாக நம்பி, கீழே இறங்கி, வடக்குப் பாலத்தில் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அதில் மூன்று பிரிட்டிஷ் சிப்பாய்களும் இரண்டு காலனி மக்களின் போராளிகளும் கொல்லப்பட்டனர். ஆபத்தை உணர்ந்த கேர்னல் ஸ்மித், நண்பகலில் பொஸ்டனுக்குத் திரும்பிச் செல்ல தனது படைகளுக்கு உத்தரவிட்டார். கொன்கார்டில் இருந்து ஒரு மைல் தொலைவில், மிரியம்ஸ் சந்தில், அவரது படையினர் போராளிகளின் புதிய தாக்குதலுக்கு ஆளாகினர்.
அன்றைய சண்டை தொடங்கிய லெக்சிங்டனில், பிட்காயினின் சோர்வடைந்த துருப்புக்களுடன் ஜெனரல் ஹக் பெர்சி பிரபுவின் கீழ் 1,400 பேர் கொண்ட இன்னும் பெரிய மீட்புப் படை இணைந்து கொண்டது. மேலும், பொஸ்டனுக்குத் திரும்பும் வழியில் வெளியேற்றம் தொடர்ந்தது. சுமார் 2,000 பேர் கொண்ட ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் படைகள், கற்கலான தடுப்புகள் மற்றும் கொட்டகைகளுக்குப் பின்னால் இருந்து போராளிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டுத் தாக்குதலை தொடர்ந்து எதிர்கொண்டன. இந்தக் கொரில்லா தாக்குதல் சண்டையில் சுமார் 4,000 நியூ இங்கிலாந்து போராளிகள் இணைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் பொஸ்டனுக்குத் பின்வாங்கிய நேரத்தில், 273 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர், மேலும் 26 பேர் காணாமல் போயிருந்தனர். அன்றைய சண்டையில் அமெரிக்கர்கள் 95 பேர் இறந்தனர் அல்லது காயமடைந்தனர்.
அடுத்த சில நாட்களில், நியூ இங்கிலாந்து முழுவதிலுமிருந்து நிமிட அறிவிப்பில் ஒன்றுகூடத் தயாராக இருந்த போராளிகள் பொஸ்டனை நோக்கி அணிதிரண்டனர். அவர்கள் புரட்சியின் முதல் படையில் ஒன்றிணைந்து, வட அமெரிக்காவில் பிரித்தானியாவின் நடவடிக்கைகளின் முக்கிய தளமாக இருந்த சுமார் 20,000 பேர் கொண்ட பொஸ்டன் நகரத்தை முற்றுகையிட்டனர். இது ஒரு தொழில்முறையான இராணுவம் அல்ல. ஆனால், “அவர்களை ஒரு ஒழுங்கற்ற கும்பல் என்று நிராகரித்த எவரும் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவார்கள்” என்று ஜெனரல் பெர்சி பிரபு எச்சரித்தார். வெர்மான்ட்டின் ஈதன் ஆலனின் “பச்சை மலை இளைஞர்கள்” என்று அழைக்கப்பட்டவர்கள் உட்பட இதர நியூ இங்கிலாந்துக்காரர்கள், மே 10 அன்று கோட்டை டிக்கோண்டெரோகாவை, அதன் 78 பீரங்கிகளுடன் கைப்பற்றி, சாம்ப்ளேன் ஏரியை நோக்கி வடக்கே நகர்ந்தனர். நடைமுறை பொறியியலின் ஒரு சாதனையாக, பொஸ்டன் புத்தக விற்பனையாளர் ஹென்றி நாக்ஸின் கட்டளையின் பேரில், போராளிகள் டிகொண்டெரோகாவின் மிகப்பெரிய பீரங்கியை பொஸ்டனுக்கு தரைவழியாக இழுத்துச் சென்றனர். அங்கு அந்த பீரங்கி, மார்ச் 17, 1776 அன்று 11 மாத முற்றுகைக்குப் பிறகு பிரிட்டிஷ் படைகளின் வெளியேற்றத்தை கட்டாயப்படுத்துவதற்கு உதவியது.
மாசசூசெட்ஸ் மற்றும் காலனிகள் முழுவதும் காலனித்துவ அதிகாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் பிரித்தானியாவின் ஜெனரல் கேஜ் தோல்வியடைந்தார். உண்மையில், லெக்சிங்டன் மற்றும் கொன்கோர்ட் போர்களுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, குறிப்பாக மாசசூசெட்ஸில், பிரித்தானிய பேரரசின் அதிகாரத்தின் உண்மையான பயன்பாடு காலனிகளில் சிதைந்து கரையத் தொடங்கியிருந்தது. முடியாட்சியிலிருந்து சுயாதீனமான அமைப்புகளின் பெருக்கமானது, ஆரம்பத்தில் சிறிய மாசசூசெட்ஸ் நகரங்களில் இரட்டை அதிகார சூழ்நிலையை உருவாக்கியது: குறிப்பாக, நகரக் கூட்டங்கள், கடிதப் போக்குவரத்துக் குழுக்கள், அரசியல் காக்கஸ்கள் எனப்படும் அரசியல் இயக்கங்கள், போராளி அமைப்புகள் மற்றும் மதுக்கடைகள் என்பன உருவாகியிருந்தன. ஆனால் 1774 வாக்கில், அரச அதிகாரம் பெரும்பாலும் போராளிகளுக்கு கீழ்ப்பட்டிருந்தது, அல்லது ஒதுக்கித் தள்ளப்பட்டிருந்தது. அந்த ஆண்டு, முடியாட்சியால் அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றங்கள் கலைக்கப்பட்டன அல்லது வொர்செஸ்டர், ஸ்பிரிங்ஃபீல்ட், கிரேட் பாரிங்டன் மற்றும் பிளைமவுத், எசெக்ஸ், நோர்போக் மற்றும் மிடில்செக்ஸ் மாவட்டங்களில் போராளிகளுக்கு விசுவாசமாக சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன.
நியூ இங்கிலாந்தின் “சிறந்த மனிதர்கள்”, முடியாட்சி மரபின்படி தலைமுறை தலைமுறையாக சொந்த சொத்தாக பதவிகளை வகித்தவர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அத்தகைய ஒரு குலமாக வொர்செஸ்டரின் சாண்ட்லர் குடும்பம் இருந்தது, அவர்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக அந்த நகரத்தை ஆண்டனர். பின்னர், இங்கிலாந்துக்கு நாடுகடத்தப்பட்டதிற்குப் பின்பு ஜோன் சாண்ட்லர் IV எழுதுகையில், லெக்சிங்டன் மற்றும் கொன்கோர்டுக்கு இன்னும் அரை வருடம் முன்னதாக, புரட்சி அவரை ஒதுக்கித் தள்ளிய தருணத்தை பின்வருமாறு நினைவு கூர்ந்தார்:
கி.பி 1774 செப்டம்பரில், அண்டை நகரங்களிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான ஆயுதமேந்திய மக்கள் கூட்டம், வொர்செஸ்டரில் நடைபெறவிருந்த நீதி மன்றங்களை நிறுத்துவதற்காக ஒன்றுகூடினர். இதை நிறைவேற்றிய பின்னர், அவர்கள் நீதிமன்றித்தில் குறிப்பெடுக்கும் பணியாளரைப் பிடித்தனர். இதனால், இந்த குறிப்பெடுக்கும் பணியாளர், உடனடி மரணத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, மேற்கூறிய எதிர்ப்பைக் கைவிட்டு, மிகவும் துரோகக் கூட்டணி மற்றும் ஒப்பந்தத்தில் நுழைய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.
“இந்த அவமானகரமான அடிபணிவுடன், அரசியல் மற்றும் இராணுவம் ஆகிய இரண்டும் கொண்ட அனைத்து பிரிட்டிஷ் அதிகாரமும்... வொர்செஸ்டர் மாவட்டத்திலிருந்து என்றென்றும் மறைந்துவிட்டன” என்று வரலாற்றாசிரியர் ரே ரஃபேல் கருத்துரைக்கிறார். இந்த நிகழ்வுகளுக்கு முன்பு தனது சக்தியற்ற தன்மையை உணர்ந்த ஜெனரல் கேஜ், கூடுதல் வீரர்களுக்காக டார்ட்மவுத்திடம் அழைப்பு விட்டார். “வொர்செஸ்டரில், அவர்கள் விதிமுறைகளை புறக்கணித்தனர், ஆயுதமேந்திய எதிர்ப்பை வெளிப்படையாக அச்சுறுத்தினர், ஆயுதங்களை வாங்கினர், அவற்றைத் தயாரித்தனர், அவற்றைச் சுட்டனர், துப்பாக்கி பவுடரை வழங்கினர், மேலும் அவர்களை எதிர்க்கத் துணிந்த எந்த துருப்புக்களையும் தாக்குவதாக அச்சுறுத்தினர்...” என்று ரஃபேல் எழுதினார்.
அமெரிக்கப் புரட்சி என்பது சுயராஜ்ஜியம் மட்டுமல்ல, நாட்டை யார் ஆளுவார்கள் என்பது பற்றிய பிரச்சனை என்ற வரலாற்றாசிரியர் கார்ல் பெக்கரின் கூற்றை இதுபோன்ற நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
பெஞ்சமின் பிராங்க்ளினின் 1754 யூனியனின் “அல்பனி திட்டத்திலிருந்து” காலனிகள்பற்றி அவ்வப்போது கார்ட்டூன்களில் சித்தரிக்கப்பட்டுள்ளதால், காலனிகளின் ஒற்றுமையின் அடையாளமாக குறிப்பிட்ட விரியன் பாம்பின் தலையை வெட்டி, மாசசூசெட்ஸை ஒரு எடுத்துக்காட்டாக மாற்ற ஆங்கிலேயர்கள் விரும்பினர். ஜெனரல் கேஜின் தண்டனைப் பயணம் அதற்கு நேர்மாறான விளைவை ஏற்படுத்தியது. பெரும்பாலான காலனிவாசிகள் மாசசூசெட்ஸின் துயரங்களைப் பகிர்ந்து கொண்டனர் என்ற எளிய காரணத்திற்காக தேசபக்தர்கள் போருக்குத் தயாராகினர்.
ஏப்ரல் 29 அன்று நியூ யோர்க் நகரில், “மாசசூசெட்ஸ் விரிகுடாவில் நடந்த இரத்தக்களரி காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த” சுமார் 1,000 குடியிருப்பாளர்கள், “பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் தன்னிச்சையான மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்து ... கான்டினென்டல் காங்கிரஸால் (அமெரிக்கப் புரட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை அமெரிக்க காலனி அரசாங்கங்களின் ஒருங்கிணைத்த நிர்வாகக் குழுவாக கான்டினென்டல் காங்கிரஸ் இருந்தது) பரிந்துரைக்கப்பட்ட எந்த நடவடிக்கைகளையும் நிறைவேற்றுவதாக” சபதம் செய்தனர். தேசபக்தி குழுக்கள் நகரத்தின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றி, பொஸ்டனுக்கு அனுப்பப்படும் அனைத்து கப்பல் போக்குவரத்தையும் நிறுத்திவிட்டு, பிரிட்டிஷ் சுங்க அலுவலகத்தை மூடின.
ஜென்சன் சொல்வது போல், பென்சில்வேனியாவில் “மாசசூசெட்ஸில் இருந்து வந்த செய்திகள் ஏற்கனவே நடந்து கொண்டிருந்த ஒரு இயக்கத்தை துரிதப்படுத்தின”. நியூ இங்கிலாந்தைப் போலவே, மாநிலத்தின் மேற்குப் பகுதியில் ஏற்கனவே போராளிக் குழுக்கள் உருவாகியிருந்தன. பிலடெல்பியாவில், இன்னும் ஒரு பழமைவாத பிரிவால் கட்டுப்படுத்தப்படும் சட்டமன்றம், தாய் நாட்டிற்கு எதிராக தற்காப்புக்காக 4,300 பேரை திரட்ட வாக்களித்தது. அவர்கள் கீழிருந்து வந்த கூச்சலுக்கும், டாம் பெயின் மற்றும் தாமஸ் யங்கைச் சுற்றி குழுவாக இருந்த ஒரு புதிய தீவிரவாதக் குழுவிற்கும் பதிலளித்தனர். ஏப்ரல் 25, 1775 அன்று, ஆயிரக்கணக்கான மக்கள் மாநில மாளிகைக்கு வெளியே கூடி, நகர சுற்றுப்புறங்களை அடிப்படையாகக் கொண்டு 31 போராளிக் கம்பெனி படையணிகளை உருவாக்கினர்.
புரட்சியின் முதல் போரில் வேர்ஜீனியா மாசசூசெட்ஸை கிட்டத்தட்ட தோற்கடிக்கும் நிலையில் இருந்தது. ஏப்ரல் 20 அன்று, பொஸ்டன் அருகே நடந்த இரத்தக்களரி படுகொலை பற்றிய செய்திக்கு சில நாட்களுக்கு முன்பு, “துப்பாக்கி வெடிமருந்து சம்பவம்” என்று அறியப்பட்ட வில்லியம்ஸ்பர்க் கிடங்கிலிருந்து துப்பாக்கி வெடிமருந்துகளை அகற்ற டன்மோர் பிரபு உத்தரவிட்டார். “எனக்கு சுதந்திரம் கொடுங்கள் அல்லது எனக்கு மரணத்தை கொடுங்கள்!” என்ற புரட்சிகர முழக்கத்திற்குப் பிரபலமான பட்ரிக் ஹென்றியின் தலைமையிலான போராளிக்குழு, பின்னர் வில்லியம்ஸ்பேர்க்கை நோக்கி அணிவகுத்துச் சென்றது. துப்பாக்கி வெடிமருந்துகளுக்கு வேர்ஜீனியர்களிடமிருந்து இழப்பீடு பெற்றதால் போர் தவிர்க்கப்பட்டது. ஆனால், லெக்சிங்டன் மற்றும் கொன்கோர்டைத் தொடர்ந்து போராளிகள் தொடர்ந்து ஆயுதம் ஏந்தினர். டன்மோர் மற்றும் அவரது குடும்பத்தினர், பாதுகாப்பிற்காக ஜூன் 8, 1775 அன்று யோர்க் நதியில் நங்கூரமிட்டிருந்த பிரிட்டிஷ் போர்க்கப்பலான HMS ஃபோவிக்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
புரட்சியின் தனிப்பட்ட தலைவர்களிடையேயும் இதேபோன்ற எதிர்வினை இருந்தது. “லெக்சிங்டனில் நடந்த படுகொலை பற்றிய செய்தி, பெரிய பிரித்தானியாவின் பிம்பத்தை ஒரு கடுமையான பெற்றோரிடமிருந்து ஒரு இரக்கமற்ற எதிரியாக மாற்றியது” என்று வேர்ஜீனியாவின் எட்மண்ட் ராண்டால்ஃப் அறிவித்தார். 1774 நவம்பரில் பிலடெல்பியாவிற்கு வந்த டாம் பெய்ன், போரைப் பற்றி அறிந்தபோது, அவர் “இங்கிலாந்தின் கடினமான, கோபமடைந்த பாரோ மன்னரை என்றென்றும் நிராகரித்தார்.” லெக்சிங்டன் மற்றும் கொன்கோர்ட் என்பது “பின்வாங்க முடியாதது மற்றும் மாற்ற முடியாத முடிவு” என்று ஜோன் ஆடம்ஸ் எழுதினார்.
ஆயினும்கூட, இந்தப் போர், குறைந்தபட்சம் 1765 ஆம் ஆண்டு முத்திரைச் சட்ட நெருக்கடி வரையிலான முந்தைய நிகழ்வுகளின் விளை பொருளாகும். அப்போது காலனிவாசிகள் அனைத்து காகிதப் பொருட்களுக்கும் வரி விதிக்கப்படுவதை எதிர்த்து கிளர்ச்சி செய்தனர். இந்த எழுச்சிக்கு நாடாளுமன்றம் வரியை ரத்து செய்வதன் மூலம் பதிலளித்தது. ஆனால் பிரகடனச் சட்டத்தில், காலனிகள் நேரடியாக பொது மன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படாவிட்டாலும் கூட, அவற்றின் மீது வரி விதிக்கும் பிரத்தியேக அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக வலியுறுத்தியது.
அன்றிலிருந்து, காலனிகளின் மீது அதிகாரத்தை நிலைநாட்ட பிரிட்டன் மேற்கொண்ட ஒவ்வொரு தொடர்ச்சியான முயற்சியும் புதிய போராட்ட அலைகளை உருவாக்கியது: 1767 ஆம் ஆண்டின் டவுன்ஷென்ட் கடமைச் சட்டங்கள்; 1768 இல் பொஸ்டன் ஆக்கிரமிப்பு; 1770 இன் பொஸ்டன் படுகொலை; 1773 இன் தேயிலைச் சட்டம்; மற்றும் 1774 இன் வற்புறுத்தல் அல்லது சகிக்க முடியாத சட்டங்கள். இந்த நிகழ்வுகள் ஜோன் ஆடம்ஸ் பின்னர் கவனித்தபடி, மக்கள் நனவில் மாற்றத்தை ஏற்படுத்தின.
புரட்சி என்றால் என்ன? போர்? இது புரட்சியின் ஒரு பகுதி அல்ல, இது அதன் ஒரு விளைவு மற்றும் தாக்கம் மட்டுமே. லெக்சிங்டனில் ஒரு சொட்டு இரத்தம் சிந்தப்படுவதற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே, 1760 முதல் 1775 வரை புரட்சி மக்களின் மனதில் இருந்தது.
இந்தக் காலகட்டம் முழுவதும் “பிரிட்டிஷ் பேரரசின் நெருக்கடி” தீவிரமடைந்து வந்ததுடன், பொஸ்டன் அதன் மையப்புள்ளியாக இருந்தது. ஒரு முறையான அரசியல் அர்த்தத்தில், இந்த சர்ச்சை வரிவிதிப்பு மற்றும் பிரதிநிதித்துவம் குறித்த சட்டபூர்வமான விவாதத்தால் வகைப்படுத்தப்பட்டது. ஆனால், அதன் பின்னால் இறையாண்மை மற்றும் சமத்துவம் தொடர்பான கேள்விகளைச் சுற்றி ஒரு பெரிய பிரச்சினை சுழன்று கொண்டிருந்தது. மூன்றாம் ஜோர்ஜ் மன்னரும், பாராளுமன்றமும் வரிவிதிப்பு தொடர்பாக காலனிவாசிகளுக்கு சலுகைகளை வழங்கியிருந்தால், இது மற்ற எல்லா அம்சங்களிலும் அவர்களின் இறையாண்மையைக் குறைத்து மதிப்பிடவில்லையா? இது, பிரிட்டிஷ் பிரபுத்துவத்தின் மிகக் குறைந்தளவில் கணக்கிடப்படக்கூடிய தரவரிசையிலும் கூட, கடல் கடந்து வாழும் நாடுகளில் வசிப்பவர்களுக்கு ஒருபோதும் வழங்கப்படாத ஒரு சமமான நிலைப்பாட்டைக் குறிக்கவில்லையா?
லண்டன் மேயரான பிரபு ஜோன் வில்க்ஸ் போன்ற பிரிட்டிஷ் அரசியலில் மிகவும் தீவிரமான நபர்களைத் தவிர, அரசாங்கத்தில் அதிகாரத்தின் இந்த மிக அடிப்படையான கேள்விகளுக்கு அனைத்து பிரிட்டிஷ் அரசியல் கன்னைகளிடமிருந்தும் பதில் சமரசம் இருக்க முடியாது என்பதே.
நாம் இரண்டு மாற்று வழிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளோம் என்று மான்ஸ்ஃபீல்ட் பிரபு பாராளுமன்றத்தில் கூறினார்: ஒன்று கட்டாய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அல்லது காலனிகள் மீதான இறையாண்மைக்கான எங்கள் உரிமையை என்றென்றும் கைவிட வேண்டும். ... பிரிட்டிஷ் சட்டமன்ற அதிகாரத்தின் மேலாதிக்கம் முழுமையானதாகவும் நிபந்தனையற்றதாகவும் இருக்க வேண்டும், அல்லது காலனிகள் விடுவிக்கப்பட்டு சுதந்திரமாகவும் இருக்க வேண்டும். ஒருவேளை பாராளுமன்றமும் அமைச்சகமும் தவறுகளைச் செய்திருக்கலாம் என்று மான்ஸ்ஃபீல்ட் ஒப்புக்கொண்டார். ஆனால், உரிமை ஒருபுறம் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டு மறுபுறம் அங்கீகரிக்கப்படும் வரை, தேவையைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்வது முற்றிலும் சாத்தியமற்றது.
உண்மையில், அமெரிக்க சுதந்திரம் போன்ற ஒரு விளைவை மன்னராலும் பாராளுமன்றத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் காலனிகளின் இழப்பு, பிரிட்டிஷ் வணிக மேலாதிக்கத்தை அச்சுறுத்தியது. இது மார்க்ஸ் பூர்வீக குவிப்பு என்று அழைத்த முதலாளித்துவ வளர்ச்சியின் காலகட்டத்தில் ஐரோப்பிய சக்திகள் மீது மிகப்பெரிய செலவில் இது அடையப்பட்டது.
கேம்டன் பிரபு பின்வருமாறு விளக்கினார்:
...வர்த்தகம் இல்லாமல் இந்தத் தீவு, கண்டத்தின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஒரு சிறிய முக்கியமற்ற புள்ளி மட்டுமே: இது நமது வர்த்தகத்திலிருந்து மட்டுமே வருகிறது, மேலும் அந்த விளைவை நாம் பெரிய அரசியல் அளவில் தாங்குகிறோம். ஐரோப்பாவின் பல பெரிய சக்திகளுடன் ஒப்பிடும்போது, ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளில், இங்கிலாந்து, ஒரு குளத்தில் மிதக்கும் பறவைக் கூடு தவிர வேறில்லை.
ஆடம்ஸ் விளக்கியது போல, முந்தைய ஆண்டுகளில் காலனி மக்கள் புரட்சிக்கு சித்தாந்த ரீதியாக தயாராக இருந்தனர். அவர்கள் தங்கள் போராட்டத்தை முதன்மையாக 17 ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் புரட்சிகளின் தொடர்ச்சியாகவும் ஆழமாகவும் பார்த்தார்கள். ஜேம்ஸ் ஓடிஸ் போன்ற பிரமுகர்களின் துண்டுப்பிரசுரங்கள், கையேடுகள், உரைகள் மற்றும் சாமுவேல் ஆடம்ஸ் போன்ற பிரமுகர்களின் தீவிர புரட்சிகர அமைப்பு மூலம் மக்கள் உயர்ந்த ஜனநாயக நனவுக்கு உயர்த்தப்பட்டனர். போட்டியில் உள்ள பிரச்சினைகள் பெருநகரத்திற்கும் காலனிக்கும் இடையிலான உறவுகளைப் பற்றியது மட்டுமல்ல, அடுத்த தலைமுறைகளுக்கு சுதந்திரத்தையும் மனித சமத்துவக் கொள்கையையும் உத்தரவாதம் செய்யும் நோக்கில் உலகளாவிய கொள்கைகளையும் உள்ளடக்கியது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.
ஆயினும், பின்னர் “நிறுவனத் தந்தைகள்” என்று அழைக்கப்பட்ட அமெரிக்கத் தலைவர்கள், லெக்சிங்டன் மற்றும் கொன்கோர்டுக்கு முன்பாக, தங்கள் பிரிட்டிஷ் எதிரிகளைப் போல அவ்வளவு தெளிவான பார்வை கொண்டவர்களாக இருக்கவில்லை. முக்கியமாக, தேசபக்த தலைவர்களின் சிந்தனை புரட்சிகர திசையில் திரும்பியது. அமைச்சகத்தின் பார்வையில், அது குறைந்தபட்சம் கிளர்ச்சியை தூண்டுவதாக இருந்தது. ஆனால் 1774 வரை அவர்கள் தேவையான புரட்சிகர முடிவுகளை எடுப்பதில் இருந்து விலகியிருந்தனர். புரட்சியின் அதீத தாக்கங்களை அவர்களால் சிந்திக்க முடியவில்லை, அதன்படி, ஜோர்ஜ் மன்னர் காலனிகளை ஒரு தனித்துவமான சாம்ராஜ்யமாக ஆட்சி செய்ய அழைக்கலாம் என்ற முடிவுக்கு வருவதற்கு முன்பு, பாராளுமன்றத்துடன் சமரசம் செய்வதற்கான வழிகளைத் தேடினார்கள், இந்த நிலைப்பாடு 1775 ஜூலை மாதம் இரண்டாவது கான்டினென்டல் காங்கிரஸின் ஆலிவ் கிளை மனுவில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஜோர்ஜ் மன்னரும் செப்டம்பர் 1774 இல் போருக்காக தனது மனதைத் தீர்மானித்திருந்தார்: “இப்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது, காலனிகள் அடிபணிய வேண்டும் அல்லது வெற்றிகொள்ளப்பட வேண்டும்” என்று அவர் பிரபு நோர்த்துக்கு கடிதம் எழுதினார்.
லெக்சிங்டன் மற்றும் கொன்கோர்ட் மீதான பிரிட்டனின் நடவடிக்கை, பாராளுமன்றத்தின் ஒவ்வொரு செயலையும் முன்பு செய்தது போல, காலனிகளில் அரசியல் சூழ்நிலையை மாற்றியமைத்ததுடன், போர்க்குணமிக்க தலைவர்களுக்கும் நிகழ்வுகளின் தர்க்கத்திலிருந்து புரட்சிகர முடிவுகளை எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கும் மேலும் சாதகமாக அமைந்தது. வரிவிதிப்பு மற்றும் பிரதிநிதித்துவம் குறித்த அமெரிக்க நிலைப்பாட்டை கோடிட்டுக் காட்டிய பென்சில்வேனியா விவசாயியின் கடிதங்கள் மூலம் வெளிப்படுத்திய டெலாவேரின் பழமைவாத ஜோன் டிக்கின்சன் போன்ற சமரச மனப்பான்மை கொண்ட நபர்கள் குறுகிய கால அரசியல் வாழ்க்கையை வாழ்ந்தனர்.
மிகவும் தீவிரமான மனநிலையைக் கொண்டவர்கள், இரண்டாவது கான்டினென்டல் காங்கிரஸில் —மாசசூசெட்ஸில் நடந்த நிகழ்வுகளின் நிழலில் மே 10, 1775 அன்று பிலடெல்பியாவில் கூடியது— விவாதத்தை இடதுபுறமாகத் திருப்பத் தொடங்கினர். மாசசூசெட்ஸின் ஜோன் ஆடம்ஸ், வேர்ஜீனியாவின் தோமஸ் ஜெபர்சன் மற்றும் பென்சில்வேனியாவின் பெஞ்சமின் பிராங்க்ளின் போன்றவர்கள் முன்னணிக்கு வந்தனர். போர்கள் நடந்தபோது கடலின் நடுவில் இருந்த பெஞ்சமின் பிராங்க்ளின், சுதந்திரம் மட்டுமே சாத்தியமான நடவடிக்கை என்ற நம்பிக்கையில் பிரிட்டனை விட்டு வெளியேறினார்.
வரலாற்றாசிரியர் கோர்டன் வுட் வாதிட்டது போல, அமெரிக்கப் புரட்சி உண்மையில் ஒரு தீவிரமான வரலாற்று நிகழ்வாகும், அதன் காலத்தில் அதைத் தொடர்ந்து வந்த பெரும் புரட்சிகளைப் போலவே தீவிரமானது. நிகழ்வுகளின் தர்க்கத்திலிருந்தும் போரின் மூடுபனியிலிருந்தும் உருவான அதன் ஆரம்ப உந்துதல்கள் எதுவாக இருந்தாலும், அமெரிக்கப் புரட்சி பிரிட்டிஷ் அரசியலமைப்பை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, முற்றிலும் புதிய அரசாங்க கட்டமைப்பை நிறுவுவதற்காகவும், அறிவொளியின் தத்துவார்த்த வெற்றிகளின் அடிப்படையில் முற்றிலும் புதிய சமூகத்தை நிறுவுவதற்காகவும் நடத்தப்பட்டதுடன் அதன் விளைவாக இருந்தது என்பது விரைவில் தெளிவாகியது.
அமெரிக்கப் புரட்சி வெறுமனே ஒரு தேசிய நிகழ்வு மட்டுமல்ல. அது அனைத்து பெரிய ஐரோப்பிய சக்திகளையும் போரின் சூறாவளிக்குள் இழுத்தது. மேலும், அது மார்க்ஸ் கூறியது போல், “ஒரு பெரிய ஜனநாயகக் குடியரசு என்ற கருத்தை… பதினெட்டாம் நூற்றாண்டின் ஐரோப்பியப் புரட்சிக்கு வழங்கப்பட்ட முதல் உந்துதலாக இருந்தது.” இது, 1789 ஆம் ஆண்டின் மாபெரும் பிரெஞ்சுப் புரட்சிக்கு நேரடியாக ஊட்டமளித்தது.
முதல் முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சிகளுக்கு உயிரூட்டிய சித்தாந்தத்தில் பெரும்பாலும் தனிநபர் மற்றும் வர்க்க நலன்களை (சம்பந்தப்பட்டவர்களுக்கும் கூட) மறைத்தாலும், சொத்துரிமை வர்க்கங்களின் உறுப்பினர்கள் 1787 அரசியலமைப்பு வரைவு செய்யப்பட்டபோது, மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பினர். இதேபோல், 1789 இல், இவர்களின் பிரெஞ்சு சகாக்கள் “தேசத்திற்காக” பேசுவதாகக் கூறினர். அட்லாண்டிக் உலகம் முழுவதும், முதலாளித்துவ குடியரசுவாதத்தின் சொல்லாட்சி சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனித உரிமைகளை அறிவித்தது.
ஆயினும்கூட, நடைமுறையில், இந்தப் புரட்சிகள் பழைய வர்க்க ஆதிக்க வடிவங்களை புதியவற்றால் முறையாக இட்டு நிரப்பின. அமெரிக்காவில் இவற்றில் மிகவும் அருவருப்பானது உள்நாட்டுப் போர் வரையிலும், தெற்கின் தோட்டப் பொருளாதாரத்தின் விரிவாக்கத்துடன் இணைந்து, “சுதந்திர நிலத்தில்” வளர்ந்த சாட்டல் அடிமைத்தனத்தின் இருப்பாகும். இது, “தனித்துவமான நிறுவனத்தை” முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஸ்தாபக தலைமுறையின் சந்தேகங்கள் மற்றும் முயற்சிகள் இருந்தபோதிலும், தெற்கின் தோட்டப் பொருளாதாரத்தின் விரிவாக்கத்துடன் இணைந்து வளர்ந்தது.
அதன் காலத்தால் விதிக்கப்பட்ட வரம்புகள் இருந்தபோதிலும், அமெரிக்கப் புரட்சி உலக வரலாற்றுத் தன்மை கொண்ட ஒரு முற்போக்கான நிகழ்வு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது உலக வரலாற்றில் முதன்முறையாக தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்ட அடிமைத்தனம் பற்றிய கேள்விக்குறியை எழுப்பியது. இந்தப் புரட்சி அமெரிக்காவில் முடியாட்சியை ஒழித்தது. பிறப்புரிமை, பரம்பரை உரிமை மற்றும் பரம்பரையாக பொதுப் பதவிகள் போன்ற சொத்துரிமையின் நிலப்பிரபுத்துவக் கருத்துக்களின் எச்சங்களையும் ஒழித்துக்கட்டியது. இது, அதன் சிறந்த நிறுவன ஆவணங்களான சுதந்திரப் பிரகடனம் (1776), அரசியலமைப்பு (1787) மற்றும் உரிமைகள் மசோதா (1789) ஆகியவற்றில் ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக் கொள்கைகளை வகுத்தது. குறிப்பாக, பேச்சு சுதந்திரம், நீதி மன்ற விசாரணைக்கான உரிமை மற்றும் தன்னிச்சையான சிறைவாசத்தைத் தடை செய்தல், சித்திரவதை மற்றும் நாடுகடத்தலைத் தடை செய்தல் போன்ற அடிப்படை உரிமைகள் இதில் அடங்கும். இந்த உரிமைகள் அனைத்து மக்களின் உள்ளார்ந்த அல்லது “இயற்கையின்” சொத்து என்று அது அறிவித்தது. இவற்றை ஒரு கொடுங்கோல் அரசாங்கத்தால் “வழங்கவோ” அல்லது பறிக்கவோ முடியாது. மிக முக்கியமாக, சுதந்திரப் பிரகடனம் கூறுவது போல், ஒரு அரசாங்கம் “இந்த இலக்குகளை அழிக்கும் போது” அதை ஒழித்துக்கட்டுவது மக்களின் உரிமை மற்றும் கடமையாகும்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் எதிர்ப் புரட்சி, அமெரிக்கப் புரட்சியின் 250வது ஆண்டு நிறைவின் முக்கியத்துவத்தை பெரிதும் மேம்படுத்திக் கொள்வதுக்கு மட்டுமே உதவுகிறது. எனவே, தற்போதைய ஆளும் வர்க்கம் இந்தப் பிரச்சினையை வெளிப்படையான பதட்டத்துடன் அணுகுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. புரட்சியின் உண்மையான வரலாற்றை “நினைவூட்டுவதற்கு” என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும், அது வரலாற்றை “மறக்க” முயல்வது உறுதி. அது, ட்ரம்ப் விரும்புகின்ற புராண காலத்து வலதுசாரி தேசபக்தி விளக்கத்தையோ அல்லது நியூ யோர்க் டைம்ஸ் 1619 திட்டத்தால் முன்வைக்கப்பட்ட அந்தக் கட்டுக்கதையின் பிசாசுத்தனமான தலைகீழான மாற்றத்தையோ விரும்புகிறது.
ஜோர்ஜ் மன்னர் மேற்கொண்ட நீண்டகால துஷ்பிரயோகங்கள் மற்றும் சூறையாடல்களுக்கு எதிராக 1775 ஆம் ஆண்டில் காலனி மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இப்போது மன்னர் டொனால்ட் அதை மீண்டும் உயிர்ப்பித்து, அதற்கு அப்பாலும் செல்கிறார். மத்திய கிழக்கில் ஒரு இனப்படுகொலைப் போரை ட்ரம்ப் ஆதரித்து, சீனாவிற்கு எதிரான உலகளாவிய போருக்குத் தயாராகி, 18 ஆம் நூற்றாண்டின் மாபெரும் வணிகப் பேரரசுகளின் மிருகத்தனமான வர்த்தகப் போர்கள் மற்றும் வெளிப்படையான கடற்கொள்ளையை நினைவூட்டும் ஒரு உலகளாவிய வர்த்தகப் போரை நடத்தும் அதே வேளையில், வெள்ளை மாளிகையின் தற்போதைய குடியிருப்பாளர் அமெரிக்காவின் ஸ்தாபக ஆவணங்களில் பொதிந்துள்ள அனைத்து அடிப்படை உரிமைகளையும் காலில் போட்டு மிதித்து வருகிறார்: குறிப்பாக, பொலிசார், சட்டப்பூர்வமான குடியிருப்பாளர்கள் உட்பட மக்களை விசாரணையின்றி கடத்தி, மற்ற நாடுகளில் உள்ள சிறை முகாம்களுக்கு நாடு கடத்துவது; அமெரிக்க குடிமக்களுக்கும் அவ்வாறே செய்வேன் என்று அவர் மீண்டும் மீண்டும் மிரட்டல் விடுப்பது; தேசிய பாதுகாப்பின் நலனுக்காக அவர் என்ன கூறுகிறாரோ அது சட்டபூர்வமானதாகும் என்று கூறும் முடியாட்சியின் வலியுறுத்தல்; கிளர்ச்சிச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்பை முற்றிலுமாக இடைநிறுத்தி வைப்பதான அவரது அச்சுறுத்தல் ஆகியவை அடங்கும்.
இந்த அடிப்படைக் கோட்பாடுகளை நோக்கிய வேண்டுகோள்தான் அமெரிக்காவில் ஜனநாயகப் புரட்சி வெற்றி பெற்றதற்கான வழிமுறையாகும். இதற்கு ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வை, அசைக்க முடியாத தீர்மானம் மற்றும் ஒவ்வொரு அரசியல் போராட்டமும் உலகளாவிய கோட்பாடுகளைக் கொண்டுள்ளது என்ற புரிதல் தேவைப்பட்டது.
இன்று நிலவும் சமூக சமத்துவமின்மையின் கொடிய நிலைமைகளுடன் அடிப்படை ஜனநாயக உரிமைகள் ஒருபோதும் பொருந்திப் போகாது. மேலும், காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளபடி, இவை ஏகாதிபத்தியப் போரை நடத்துவதுக்கும் பொருந்திப் போகாதவை. 1770 களில் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் செய்ததைப் போலவே, 250 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் அமெரிக்க பிரதிநிதியிலும் சமரசத்திற்கான மனநிலை இல்லை. இது, தனது செல்வத்தில் எந்த இடையூறையையும் பொறுத்துக்கொள்ளாத, மேலும் தனது செல்வத்தைப் பாதுகாக்கத் தேவையான வன்முறைக்கு எந்த வரம்புகளையும் சகித்துக்கொள்ளாத ஒரு ஆளும் வர்க்கமாகும். பழைய முடியாட்சிகளைப் போலவே, ட்ரம்ப் தலைமையிலான ஆளும் வர்க்கமும், மண்டியிட்டு அணுகப்பட வேண்டும் என்று கோருகிறது.
ஆனால், அமெரிக்கத் தொழிலாள வர்க்கம்தான், 1770கள் மற்றும் 1860களின் முதல் இரண்டு புரட்சிகளின் உண்மையான வாரிசுகளாகும். ட்ரம்ப் மற்றும் அவரது கூட்டாளிகளால் ஏற்படும் தீவிர ஆபத்தைப் பற்றி தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மார்ச் 1775 இல் காலனித்துவவாதிகளைப் பற்றி எட்மண்ட் பேர்க் கூறியதை அவர்களால் செய்ய முடியும்: “ஒவ்வொரு தீய காற்றிலும் கொடுங்கோலனின் அணுகுமுறையை மூச்சுத் திணறச் செய்கிறார்கள்”. இது உண்மையில் ஒரு வரலாற்றுத் தேவையாகும். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஆளும் வர்க்கத்திடம் எந்தப் பிரிவுகளும் இல்லை. இந்த வரலாற்று உண்மைகளைப் பாதுகாத்து, வேலைவாய்ப்பு, அமைதி, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான சூழல் போன்ற சமூக உரிமைகளை உள்ளடக்கியதாக அவற்றின் விரிவாக்கம் ஆகியவை புரட்சிகரமான பணிகளாக மாறிவிட்டன.
மிக அடிப்படையான மட்டத்தில், அமெரிக்கப் புரட்சியும் அதன் முதல் லெக்சிங்டன் மற்றும் கொன்கோர்ட் போர்களும், ஒரு நாள் சாத்தியமற்றதாகத் தோன்றும் புரட்சி, அடுத்த நாள் நிகழ்வுகளின் மிகவும் தர்க்கரீதியான போக்காக மாறும் என்பதையும், புரட்சியின் காற்றுக்களை விதைப்பது கொடுங்கோலர் சக்தியே என்பதையும் கற்பிக்கின்றன.