முன்னோக்கு

உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோட்டியுக் கைது செய்யப்பட்டு ஒரு வருடம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜோன் ரீடின் உலகை உலுக்கிய பத்து நாட்கள் நூலின் பழைய சோவியத் பதிப்பில் லியோன் ட்ரொட்ஸ்கியின் படத்தைக் காட்டும் போக்டன் சிரோட்டியுக், ஏப்ரல் 2023 [Photo: WSWS]

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, ஏப்ரல் 25, 2025 அன்று, 25 வயதாக இருந்தபோது, எமது தோழர் போக்டன் சிரோட்டியுக் உக்ரேனிய இரகசிய சேவையால் (SBU) கைது செய்யப்பட்டார். போக்டன் உக்ரேனிய போரின் ஒரு சோசலிச எதிர்ப்பாளர் என்பதோடு, எங்கள் அமைப்பான போல்ஷிவிக் -லெனினிஸ்டுகளின் இளம் காவலரின் (YGBL) முன்னணி உறுப்பினர் ஆவார். உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் உலக சோசலிச வலைத்தளத்துடன் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பு தனது ஒற்றுமையை அறிவித்துள்ளது.

போக்டன் மீது “இராணுவச் சட்டத்தின் கீழ் தேசத்துரோகக்” குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மோசமான சுகாதார நிலைமைகளின் கீழ், நெரிசல் மிகுந்த நிகோலேவிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போக்டன் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறையில், தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் தனது தலைவிதியை பகிர்ந்து அவர் கொள்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 15 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும். போக்டன் “ரஷ்ய பிரச்சார மற்றும் தகவல் நிறுவனமான உலக சோசலிச வலைத் தளத்தின் பிரதிநிதிகளின் சார்பாக வெளியீடுகளைத் தயாரிப்பதில் சம்பந்தப்பட்டிருந்தார்” என்ற SBU இன் கூற்றே இந்த குற்றச்சாட்டு மற்றும் விசாரணையின் மையமாக உள்ளது. குற்றச்சாட்டுகளுக்கான முக்கிய “ஆதாரம்” WSWS ஆல் வெளியிடப்பட்ட அவர் எழுதிய கட்டுரைகள் ஆகும்.

உண்மையில், போக்டன் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) நன்கு ஆவணப்படுத்தப்பட்ட கருத்துக்கள் SBU இன் இந்தக் கூற்றை நேரடியாக மறுக்கின்றன. ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களுக்கு மட்டுமே சேவை செய்யும் மற்றும் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தும் உக்ரேன் மீதான படையெடுப்பை ICFI மற்றும் YGBL ஆகியவை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றன. இது ஏகாதிபத்தியம், ரஷ்யாவை சுற்றி வளைப்பதற்கு ரஷ்ய தன்னலக்குழுவின் பிற்போக்குத்தனமான பதிலே இந்த படையெடுப்பாகும்.

உக்ரேனிய, ரஷ்ய மற்றும் உலகத் தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஐக்கியப்படுத்தப்படுவதன் மூலம் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று போக்டன் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்துள்ளார். அவர் ஜெலென்ஸ்கி ஆட்சி மற்றும் புட்டின் ஆட்சி இரண்டையுமே தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளார். இவை இரண்டையுமே, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதன் பிற்போக்குத்தனமான விளைவுகளாக அவர் குணாம்சப்படுத்தி வந்துள்ளார்.

உக்ரேனில் YGBL இன் பிரதிநிதியாக, கடந்த ஆண்டு ICFI இன் மே தின இணையவழி பேரணியில் போக்டன் கூற விரும்பியது இதுதான்:

சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்துக்கான இந்த நாளில், இளம் போல்ஷிவிக்-லெனினிஸ்ட் காவலர் அமைப்பின் உக்ரேனிய கிளையின் உறுப்பினர்களான நாங்கள் மற்றும் ஒட்டுமொத்த YGBL ன் உறுப்பினர்கள், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், உக்ரேனிய மற்றும் ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தை ஏகாதிபத்திய நாடுகளின் பாட்டாளி வர்க்கத்துடன் ஐக்கியப்படுத்தவும் அழைப்பு விடுக்கிறோம்!

முன்னாள் சோவியத் குடியரசுகள் அனைத்திலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கிளைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

உலகெங்கிலும் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் தலைவரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பதாகையின் கீழ் ஒன்றுபட வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கெல்ஸின் வார்த்தைகள் இன்னும் சத்தமாகவும் பலமாகவும் ஒலிக்கட்டும்: “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!”

போக்டன் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த வார்த்தைகளை எழுதியிருந்தார். ஆனால் இவற்றை அவரால் உச்சரிக்க முடியவில்லை. அவரது “குற்றங்களின்” உள்ளடக்கத்தை தெளிவுபடுத்த இந்த வார்த்தைகள் மட்டுமே போதுமானவை.

உண்மையில், போக்டன் தனது போர்-எதிர்ப்பு சோசலிச கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காகவும், உக்ரேனிய பாசிஸ்டுகளின் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காகவும், அனைத்திற்கும் மேலாக, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் கைது செய்யப்பட்டார்.

ஸ்ராலினிசத்தால் அக்டோபர் புரட்சியின் தேசியவாத காட்டிக்கொடுப்பிற்கு எதிராக ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பு இயக்கத்தின் போராட்டம் பற்றிய உண்மையை வெளிக்கொணர முயற்சிக்கும் ஒரு அமைப்பாக YGBL 2018 இல் நிறுவப்பட்டது. சோவியத் வரலாற்றாசிரியர் வாடிம் ரோகோவின் ட்ரொட்ஸ்கிசத்திற்கான எரிந்த பூமி என்று பொருத்தமாக விவரித்த சூழ்நிலையில் YGBL உருவானது.

1930களின் மாபெரும் பயங்கரத்தின் போது, கிட்டத்தட்ட அனைத்து ட்ரொட்ஸ்கிஸ்டுகளும் ஏனைய ரஸ்ய புரட்சியாளர்களும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சரீர ரீதியில் அழிக்கப்பட்டிருந்தனர். அதற்குப் பிந்தைய பல தசாப்தங்களில், ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பாளர்களின் போராட்டம் குறித்த அத்தனை தகவல்களும் சிதைக்கப்பட்டன அல்லது மறைக்கப்பட்டன.

நாங்கள் வளர்ந்தவுடன், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நனவான போராட்டத்தில் இணைவது அவசியம் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம். இந்த அங்கீகாரம், தொழிலாள வர்க்கத்தை வழிநடத்தும் தகைமை கொண்ட ஒரே சக்தியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணைவதற்கான எங்கள் முடிவில் வெளிப்பட்டது. இன்று, YGBL, ICFI உடன் இணைந்து, ஸ்ராலினிசத்தின் மரபைக் கடந்து, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தொழிலாள வர்க்கத்திற்குள் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் சர்வதேசிய மரபுகளை புதுப்பிக்க போராடி வருகிறது.

உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ தொடுத்துவரும் போர், புட்டினின் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகத்திற்கான ஒரு போர் என்ற ஏகாதிபத்திய பிரச்சாரத்தை போக்டனின் வழக்கு விசாரணை அம்பலப்படுத்துகிறது. ஒரு சோசலிஸ்ட்டான இந்த இளைஞனை துன்புறுத்துவதற்காக, சர்வாதிகார சட்டங்கள் ஒன்றுதிரட்டப்பட்டு வருகின்றன. அவை உக்ரேனிய அரசாங்கம், குடிமக்கள் “அரசுக்கு துரோகிகள்” என்று சந்தேகித்தால், அவர்களின் அறிக்கைகளுக்காக வழக்குத் தொடர அனுமதிக்கின்றன. அத்தகைய குற்றங்களை “நிரூபிக்க”, அறிக்கைகளின் “குற்றவியல்” உள்ளடக்கத்தை நிரூபிக்க, சிறப்பு மொழியியல் “நிபுணர்கள்” கொண்டு வரப்படுகிறார்கள். உண்மையில், நடப்பது “கருத்தைக்கூறுவது குற்றம்” என்று மக்களைத் துன்புறுத்துவதாகும். இது முன்னர் நாஜி ஜேர்மனியுடன் தொடர்புடைய ஒரு நடைமுறையாகும். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் இந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போர் தொடங்கியதில் இருந்து, நூறாயிரக்கணக்கான உக்ரேனிய இளைஞர்களும் தொழிலாளர்களும் போர் முனையில் இறந்துள்ளனர். மேலும் பலர் நிரந்தரமாக காயமடைந்துள்ளனர் அல்லது முடமாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உயிர்கள், “சுதந்திரத்திற்காக” மற்றும் “ஜனநாயகத்திற்காக” அல்ல, மாறாக ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் பேராசை கொண்ட தன்னலக்குழுக்களின் சூறையாடும் நலன்களுக்காகவே கொடூரமாக வீணடிக்கப்பட்டுள்ளன.

உக்ரேனில் போருக்கு பெருகிவரும் எதிர்ப்பும், பாரிய சமூக நெருக்கடிக்கும் இடையே போக்டன் கைது செய்யப்பட்டார். அக்டோபர் புரட்சி மீதான ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பில் இருந்து எழுந்துள்ள உக்ரேனிய தன்னலக்குழுக்கள், அதன் ரஷ்ய சமதரப்பினரைப் போலவே, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் அதன் ஆட்சிக்கு முன்னிறுத்தப்படும் அச்சுறுத்தல் குறித்து கூர்மையான உணர்திறன் கொண்டவையாக உள்ளன. போருக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் இயக்கத்தின் மத்தியில், போக்டனின் கருத்துக்கள் பரந்த அளவில் கேட்கப்படும் என்று அஞ்சி, அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போக்டானின் கைது வெறுமனே போக்டன் மற்றும் YGBL மீதான தாக்குதல் மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதும் மற்றும் குறிப்பாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மீதும் நடத்தப்படும் ஒரு தாக்குதலாகும். ட்ரொட்ஸ்கிசத்தை குற்றகரமாக்குகின்ற நோக்கத்துடன் அரசு தனது வழக்கை உருவாக்கி வருகிறது. போக்டனின் விசாரணையை அம்பலப்படுத்துவதற்கும் அவரது கருத்துக்கள் பற்றிய உண்மையான தகவல்களுக்கும் உக்ரேனியர்கள் அணுகுவதைத் தடுக்கும் பொருட்டு, போக்டன் கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு ICFI இன் இணைய வெளியீடான WSWS அங்கு தடை செய்யப்பட்டது.

போக்டானின் கைது கியேவால் மட்டுமல்ல, மாறாக பேர்லின், இலண்டன் மற்றும் வாஷிங்டனில் உள்ள ஜெலென்ஸ்கி ஆட்சியின் ஏகாதிபத்திய ஆதரவாளர்களாலும் முடுக்கிவிடப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பல ஆண்டுகளாக அரசாங்கங்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வந்துள்ளது என்பதை நினைவில் கொள்வது மதிப்புடையதாகும். 2018 இல், ஜேர்மனியில் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) “தீவிரவாத இடதுசாரி அமைப்புகளின்” பட்டியலில் சேர்க்கப்பட்டது. கடந்த ஆண்டு, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் இளைஞர் பிரிவான IYSSE, “அரசியலமைப்புக்கு எதிரான அமைப்புகளின்” பட்டியலில் சேர்க்கப்பட்டது.

ஆனால், இதுபோன்ற தாக்குதல்களுக்கு நாங்கள் அஞ்சியதில்லை, ஒருபோதும் பயப்பட மாட்டோம். போக்டானின் கைதுக்கு அனைத்துலகக் குழு உலகளாவிய மட்டத்தில் ஒரு சக்திவாய்ந்த பிரச்சாரத்துடன் பதிலளித்து வருகிறது. அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் அவர் எதற்காக நிற்கிறாரோ அந்த ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளைப் பிரபலப்படுத்தவும் அனைத்துலகக் குழு கோரி வருகிறது. போக்டன் காவலில் வைக்கப்பட்ட முதல் நாட்களில், அவரை விடுவிக்கக் கோரி ஒரு மனு தயாரிக்கப்பட்டு 4,700 க்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன. உலக சோசலிச வலைத் தளத்தின் ஒரு சிறப்புப் பக்கம் போக்டன் மற்றும் இந்த பிரச்சாரம் பற்றிய தகவல்களை வழங்கி வருகிறது.

கடந்த வருடம் ஜூன் 13 அன்று, உலகெங்கிலுமான உக்ரேனிய தூதரகங்களுக்கு வெளியே மறியல் போராட்டங்களை நடத்திய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, போக்டான் சிரோட்டியுக்கை விடுதலை செய்யக் கோரி உக்ரேனிய அரசாங்கத்திற்கு உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் எழுதிய கடிதத்தை வாசித்தது. இங்கிலாந்து, இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜேர்மனியில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களின் மையக் கருப்பொருள்களில் ஒன்றாக, போக்டனின் விடுதலைக்கான போராட்டம் இருந்தது.

போக்டனின் விடுதலைக்கான பிரச்சாரமானது, பிரிட்டிஷ் ராக் இசைக்குழுவான பிங்க் ஃபிலாய்ட்டின் இணை நிறுவனர் ரோஜர் வாட்டர்ஸ் உட்பட பல அமைப்புகள், புத்திஜீவிகள் மற்றும் பொது நபர்களிடமிருந்து ஆதரவைப் பெற்றுள்ளது. இதன் விளைவாக, அரசாங்க வக்கீல்கள் தீவிர பொது ஆய்வின் கீழ் வந்துள்ளனர் மற்றும் போக்டனுக்கு எதிரான தங்கள் வழக்கை நிரூபிக்க நீதிமன்றத்தில் பரபரப்புடன் உள்ளனர்.

ஆனால், இந்தப் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. ஒரு வருடம் கழித்து, போக்டனின் விடுதலைக்கான போராட்டம் முன்னெப்போதையும் விட மிகவும் அவசரமானதாக உள்ளது. போக்டனின் சுதந்திரம் மட்டுமல்ல, உலகப் போர், பாசிசம் மற்றும் வளர்ந்து வரும் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரட்டலும் ஆபத்தில் உள்ளது. உக்ரேன் மற்றும் ரஷ்யாவுடன் அமெரிக்கா நடத்தி வரும் தற்போதைய பேச்சுவார்த்தைகளின் விளைவு எதுவாக இருந்தாலும், உலகின் புதிய ஏகாதிபத்திய மறுபகிர்வை நோக்கிய பாதை உள்ளது. ஆனால், உக்ரேனில் நடந்துவரும் போரின் அனுபவம் காட்டுவது போல், போருக்கு எதிரான எதிர்ப்பியக்கத்தின் மீது மிருகத்தனமான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து பாசிச சக்திகளை வலுப்படுத்தாமல், ஏகாதிபத்தியப் போரையும் அதனால் தொடர்ந்து ஏற்பட்டுவரும் பாரிய மரணத்தையும் தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்க முடியாது.

ட்ரம்ப் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, அவரது நிர்வாகம் “சட்டவிரோத புலம்பெயர்ந்தவர்களை” நாடு கடத்துவதை நியாயப்படுத்த சட்டத்தைப் மீண்டும் புதுப்பித்துள்ளது. ஏற்கனவே 100,000 க்கும் அதிகமானவர்களை நாடு கடத்தியுள்ளதுடன், 1,600 க்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களின் நுழைவு அனுமதிகளையும் இரத்து செய்துள்ளது. அவர்களில் 1,000 க்கும் அதிகமானவர்கள், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை எதிர்த்து வெளியிட்ட அரசியல் அறிக்கைகளுக்காகவே இலக்கு வைக்கப்பட்டனர். போக்டனைப் போலவே, அவர்கள் போர் மற்றும் பாசிசத்தை எதிர்த்ததற்காக “கருத்துக்கூறுவது குற்றம்” என்று துன்புறுத்தப்படுகிறார்கள்.

ஆகவே பாசிசம், சர்வாதிகாரம், போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான நனவான போராட்டத்தின் ஒரு மையப் பகுதியாக, போக்டனை விடுதலை செய்வதற்கான பிரச்சாரத்தில் இணையுமாறு ரஷ்யா, உக்ரேன், அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

  • போக்டனின் விடுதலையைக் கோரும் மனுவில் கையெழுத்திட்டு, அதை உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
  • பாசிசமும் போரும் வேண்டாம்! ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக, உக்ரேனிய, ரஷ்ய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காக போராடுவோம்!

மே 3 அன்று நடைபெறும் 2025 இணையவழி மே தினப் பேரணியில் பங்கேற்கவும்!

  • சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்பு!
  • போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலைக்காகப் போராடு!
Loading