புது தில்லி பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்லாமாபாத்தை குற்றம் சாட்டியதை அடுத்து, இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நோக்கி விரைகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பாகிஸ்தானின் கராச்சியில் 24 ஏப்ரல் 2025 வியாழக்கிழமை, பாகிஸ்தானுடனான நீர் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது, ​​பாகிஸ்தான் முர்காசி முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர், “மோடி கசாப்புக்காரன்” என்ற வாசகங்களுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தின் மீது புள்ளடி கீறப்பட்ட சுவரொட்டியை ஏந்தியுள்ளார் [AP Photo/Fareed Khan] [AP Photo/Fareed Khan]

இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே பொறுப்பு என இந்தியா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, தெற்காசியாவின் போட்டி அணு ஆயுத சக்திகளான இந்தியாவும் பாகிஸ்தானும் வேகமாக போரை நோக்கி விரைகின்றன. செவ்வாயன்று இருபத்தாறு சுற்றுலாப் பயணிகள், இயற்கை எழில் கொஞ்சும் பைசரன் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்கம் அருகே ஒரு கமாண்டோ தாக்குதலால் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் தவிர அனைவரும் இந்தியப் பிரஜைகள்.

24 மணி நேரம் கடந்த பின்னர், இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) தலைமையிலான இந்திய அரசாங்கம், பாகிஸ்தானை குறிவைத்து தொடர்ச்சியான போரைத் தூண்டும் 'பழிவாங்கும்' நடவடிக்கைகளை அறிவித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, இது ஒரு ஆரம்ப அஸ்திரம் மட்டுமே என்பதற்கான அனைத்து அறிகுறிகளையும் அது காட்டியுள்ளது - துணைக்கண்டத்தை முழுமையான போரின் விளிம்பிற்கு கொண்டு சென்ற 2016 மற்றும் 2019 இல் நடந்ததை விட பாகிஸ்தான் மீது இன்னும் பெரிய இராணுவத் தாக்குதல் நடத்துவது பற்றி பரிசீலிக்கப்படுகிறது, இல்லையேல் ஏற்கனவே தயாரிப்பில் உள்ளது.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, குறிப்பாக இந்து கடும்போக்காளராகக் கருதப்படும் நரேந்திர மோடியின் கீழ், சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரிவடைந்து வரும் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. 2019 இல், ட்ரம்ப் தனது முதலாவது பதவிக் காலத்தின்போது, பாகிஸ்தானுக்குள் இந்தியாவின் சட்டவிரோத தாக்குதலைப் பாராட்டியது போல், ​​அவர் இப்போதும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பார் என்று புது தில்லி சந்தேகத்திற்கு இடமின்றி நம்புகிறது.

புதன்கிழமை, தெளிவாக பாகிஸ்தானைக் குறிவைத்த கருத்துக்களில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், 'இந்த சம்பவத்தை நடத்தியவர்களை மட்டுமன்றி, திரைக்குப் பின்னால் அமர்ந்து, இந்திய மண்ணில் இதுபோன்ற செயல்களைச் செய்ய சதி செய்தவர்களையும் நாங்கள் நெருங்குவோம்' என்று அறிவித்தார்.

ஆயினும்கூட, பலகிராம் தாக்குதலில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டதாகக் கூறும் அதன் கூற்றுக்களை ஆதரிக்க புது தில்லி எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்றதாகக் கூறப்படும் பயங்கரவாதக் குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் குழு, முன்னதாக பாகிஸ்தான் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் சில பிரிவுகளின் ஆதரவைப் பெற்ற ஒரு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்புடையது என்று புது தில்லி வெறுமனே வலியுறுத்தியுள்ளது.

புதன்கிழமை அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளில் பின்வருவன அடங்கும்: இராஜதந்திர பணியாளர்களைத் தவிர, இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் ஏப்ரல் 29 ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவு; அமிர்தசரஸ் மற்றும் லாகூரை இணைக்கும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மிக முக்கியமான தரைவழி கடவையை மூடுவது; இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருக்கும் அனைத்து பாகிஸ்தான் இராணுவத்தினரையும் வெளியேற்றுவது; மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து ஒரு சில ஊழியர்களைத் தவிர மற்ற அனைவரையும் திருப்பி அழைப்பது.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் பங்காளியாக இருப்பதை நிறுத்தி வைப்பதாக புது தில்லி அறிவித்திருப்பது மிகவும் ஆத்திரமூட்டும் விஷயமாகும். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த 55 ஆண்டுகளில், இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு பிரகடனப்படுத்தப்பட்ட போர்கள், பல அறிவிக்கப்படாத போர்கள் மற்றும் எண்ணற்ற எல்லை மோதல்களில் ஈடுபட்டன. ஆனால் இதற்கு முன்பு, பாகிஸ்தானின் மின்சார கட்டமைப்பு மற்றும் விவசாயம் சார்ந்திருக்கும் நீர் விநியோகத்தை மறுக்கும் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு, ஒருபோதும் இந்தியா இந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தவில்லை.

வியாழக்கிழமை, மோடி இதைத் தொடர்ந்து ஒரு ஆத்திரமூட்டும், போர் வெறி கொண்ட உரையை நிகழ்த்தினார். அதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை “முற்றிலும் அழிப்பதாக” விடுக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் காசாவின் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலையைத் தூண்டும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உரைகளதும் எதிரொலிகளை ஒருவர் கேட்க முடியும்.

பீகாரில் நடந்த பா.ஜ.க. கூட்டமொன்றில் உரையாற்றிய மோடி, 'இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்களுக்கும் அதைத் திட்டமிட்டவர்களுக்கும் அவர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை கிடைக்கும். ... பயங்கரவாதிகளின் மீதமுள்ள நிலத்தை தூசியாக மாற்ற வேண்டிய நேரம் இது. 140 கோடி (1.4 பில்லியன்) இந்தியர்களின் உறுதிப்பாடு இப்போது பயங்கரவாதத்தின் எஜமானர்களின் முதுகை உடைக்கும்' என்று சபதம் செய்தார். இந்திய அரசாங்கம் நீண்ட காலமாக தனது பரம எதிரியான பாகிஸ்தானை உலகின் பிரதான 'பயங்கரவாத நாடு' என்று கண்டித்து வருகிறது.

பாகிஸ்தானும் அதே விதத்தில் பிரதிபலித்துள்ளது. வியாழக்கிழமை, 1971 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு ஜூலை 1972 இல் கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தமான சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அது அறிவித்தது. ஒப்பந்தித்தில் அடங்கியுள்ள ஏனையவற்றுடன், சிம்லா ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களுக்கு அமைதியான இருதரப்பு தீர்வைப் பெறவும், முழு காஷ்மீர் மீதான இறையாண்மைக்கான அவர்களின் போட்டி உரிமைகோரல்களுக்கும் இறுதித் தீர்வு காண்பது நிலுவையில் இருக்க, இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீரிலிருந்து பிரிக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டை (LOC) நிறுவவும் உறுதியளிக்கிறது.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பலூச்சி பிரிவினைவாதிகள் மற்றும் இஸ்லாமிய தெஹ்ரீக்-இ-தலிபான்-இ-பாகிஸ்தான் (பாகிஸ்தான் தாலிபான்) ஆகியோருக்கு மறைமுக ஆதரவை வழங்குவதன் மூலம், இந்தியா நாட்டை ஸ்திரமற்றதாக்க முயல்கிறது என்ற தனது சமீபத்திய குற்றச்சாட்டுகளை இஸ்லாமாபாத் விரிவுபடுத்தியது.

'பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதத்தைத் தூண்டுதல்; நாடுகடந்த கொலைகள்; மற்றும் காஷ்மீர் மீதான சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. தீர்மானங்களை இந்தியா பின்பற்றாமை போன்ற அதன் வெளிப்படையான நடத்தையை நிறுத்திக்கொள்ளாத வரை, சிம்லா ஒப்பந்தம் உட்பட, அவை மட்டும் அல்லாமல், இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைக்கும் உரிமையைப் பாகிஸ்தான் பயன்படுத்தும்,' என அந்த அறிக்கை தெரிவித்தது.

தண்ணீர் 'பாகிஸ்தானின் ஒரு இன்றியமையாத தேசிய நலனாக' மற்றும் 'அதன் 240 மில்லியன் மக்களுக்கு ஒரு உயிர்நாடியாக' இருக்கும் போது, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தமை சட்டவிரோதமானது, என்றும் அந்த அறிக்கை குற்றம் சாட்டியது.

பாகிஸ்தானுக்கான நீர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியா இப்போது விடுத்துள்ள அச்சுறுத்தலை அமுல்படுத்தினால், அது போரை வெடிக்கச் செய்யும் என்று இஸ்லாமாபாத் எச்சரித்தது: 'சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்குச் சொந்தமான நீரின் ஓட்டத்தை நிறுத்த அல்லது திசைதிருப்ப எடுக்கும் எந்தவொரு முயற்சியும் ... ஒரு போர்ச் செயலாகக் கருதப்படுவதோடு சாத்தியமான எல்லா வழிகளிலும் தேசிய சக்தியின் முழு பலத்துடன் பதிலளிக்கப்படும்.'

இந்தோ-பாகிஸ்தான் மோதல் என்பது போட்டி முதலாளித்துவ நாடுகளுக்கு இடையிலான ஒரு பிற்போக்கு மோதலாகும். இந்த மோதலின் தோற்றுவாய், 1947 ஆம் ஆண்டு தெற்காசியாவை ஒரு வெளிப்படையான முஸ்லிம் பாகிஸ்தான் மற்றும் ஒரு இந்து இந்தியாவாக வகுப்புவாத ரீதியில் பிரித்ததில் வேரூன்றியுள்ளது. வளர்ந்து வந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு போர்க்குணமிக்க தொழிலாள வர்க்கத்தின் தோற்றம் குறித்து பீதியடைந்திருந்த, முதலாளித்துவ தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ், ஒன்றுபட்ட, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவிற்கான அதன் சொந்த வேலைத்திட்டத்தை கைவிட்டு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் அமைக்கப்பட்ட காலனித்துவ முதலாளித்துவ அரசின் மீதான கட்டுப்பாட்டை பெறுவதற்கு விரைவான அதிகார பரிமாற்றத்திற்காக லண்டனுடன் ஒரு இழிந்த உடன்பாட்டை மேற்கொண்டது. இதில், துணைக்கண்டத்தை வகுப்புவாத ரீதியில் பிரிப்பதற்காக அதன் வலதுசாரி போட்டியாளரான முஸ்லிம் லீக்குடன் இணைந்து செயல்படுவதும் அடங்கும். இதனால் தூண்டிவிடப்பட்ட வகுப்புவாத வன்முறையில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதுடன், முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்தும், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் பாகிஸ்தானிலிருந்தும் தப்பி ஓடினர். இதனல் சுமார் 20 மில்லியன் மக்கள் கட்டாயமாக இடம்பெயர்ந்தனர்.

இன-மொழியியல் மற்றும் புவியியல் பிராந்தியமான காஷ்மீர் மீதான கட்டுப்பாடு, அத்துடன் பிரிட்டனின் முன்னாள் இந்தியப் பேரரசின் ஒரு சிற்றரசு அல்லது நிலமானிய அரசு என்ற அதன் பெயர் ஆகியவையே இந்தோ-பாகிஸ்தான் மோதலின் மையமாகும். 1947-48 இல் போரின் மூலம் காஷ்மீரானது, மோதிக்கொள்ளும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய கட்டுப்பாட்டில் உள்ள 'காஷ்மீர்கள்' எனப் பிரிக்கப்பட்டது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் முதலாளித்துவ வர்க்கங்கள் இரண்டும் காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கியுள்ளன. இந்தியாவின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் தேர்தல்களில் ஏற்பட்ட மோசடிகளுக்கு பதிலளிக்கும் விதமாக 1989 இல் வெடித்த வெகுஜன போராட்டங்களை புது தில்லி கொடூரமாக அடக்கியது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தரவின் பேரில் பாகிஸ்தானில் சோவியத் ஆதரவு பெற்ற அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கிய இஸ்லாமிய போராளிகளின் வலையமைப்பை மீண்டும் நிலைநிறுத்தி விரிவுபடுத்துவதன் மூலம், பாகிஸ்தான் தனது சொந்த பிற்போக்கு நலன்களை மேம்படுத்திய நிலையில், இது ஒரு கிளர்ச்சியைத் தூண்டியது.

பெருந்தொகையான இந்திய மற்றும் பாகிஸ்தான் துருப்புக்களும் பீரங்கிகளும் ஒன்றுக்கொன்று எதிராக நிலைகொண்டுள்ளதாலும்; மற்றும் இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதி, உலகின் மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக இருப்பதாலும், பல தசாப்தங்களாக, இந்த எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி உலகின் மிகவும் ஆபத்தான மோதல் மண்டலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.  14 மில்லியன் மக்கள் வசிக்கும் பகுதியில் அரை மில்லியனுக்கும் அதிகமான இந்திய பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மீதான மோதலும் உலக புவிசார் அரசியலும்

நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, சீனாவுடனான இந்தியாவின் பகைமை மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலுடன் இந்திய-பாகிஸ்தான் மோதலானது மேலும் பூகம்ப நிலையில் இருக்கின்றது.

இந்தியாவுடன் ஒரு 'உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை' முன்னெடுப்பதற்காக, வாஷிங்டன் பனிப்போரின்போது தனது பிராதன பிராந்திய கூட்டாளியாக இருந்த பாகிஸ்தானுடனான உறவுகளை பெருமளவில் குறைத்துக்கொண்டது. வளங்கள் மற்றும் உலகிற்கான ஏற்றுமதிகளுக்காக இந்திய சமுத்திரத்தின் கடல் பாதையில் பிரவேசிப்பது சீனாவிற்கு இன்றியமையாததாக உள்ள நிலையில், குறித்த கடற் பிராந்தியத்தில் இந்தியாவுடனான பங்காண்மையுடன் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக்கொள்ள, சீனாவிற்கு எதிரான ஒரு எதிர் எடையாக இந்தியாவை கட்டியெழுப்புவதே வாஷிங்டனின் நோக்கமாகும்.

ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் முதல், ஆட்சியில் இருந்த ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் அமெரிக்க ஜனாதிபதிகள் அமெரிக்க-இந்திய 'கூட்டாண்மையை' பெருமைப்படுத்தியுள்ளனர். சில சமயங்களில் நூற்றாண்டு முழுவதும் அமெரிக்காவின் ஆதிக்கத்தைப் பேணுவதற்கு 'மிக முக்கியமானது' என்று விவரிக்கும் அளவுக்குச் இது சென்றுள்ளது.

உயர்தர ஆயுதங்கள் மற்றும் சிவிலியன் அணுசக்தி தொழில்நுட்பத்தை பெறுவது உட்பட அமெரிக்கா இந்தியாவுக்கு மூலோபாய சலுகைகளை வழங்கியதால், வாஷிங்டன் பிராந்தியத்தில் 'அதிகார சமநிலையை' ஆபத்தான முறையில் சீர்குலைத்து வருவதாக பாகிஸ்தான் எச்சரித்தது. ஆனால் அதன் அதிகரித்து வரும் கூர்மையான எச்சரிக்கைகள் வெளிப்படையாக புறக்கணிக்கப்பட்டன. இதற்கு பிரதிபலிக்கும் விதமாக, பாகிஸ்தான் சீனாவுடனான அதன் 'எல்லா சூழ்நிலையிலுமான' மூலோபாய கூட்டாண்மையை இரட்டிப்பாக்கி, வாஷிங்டனையும் புது தில்லியையும் மேலும் பகைத்துக் கொண்டுள்ளது.

அமெரிக்க ஆதரவால் துணிவுபெற்றுள்ள மோடி அரசாங்கம், பிராந்திய மேலாதிக்க சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் 'விதிகளை மாற்ற' முயன்றுள்ளது. பாகிஸ்தானுக்குள் மோடி நடத்திய எல்லை தாண்டிய 'இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள்' இந்தியாவின் முதல் நடவடிக்கையாக இல்லாத போதிலும், இதற்கு முன்பு புது தில்லி அதைப் பற்றி இந்தளவுப் பெருமையாகப் பேசி, வாஷிங்டன் மற்றும் டெல் அவிவில் உள்ள ஏகாதிபத்திய கும்பல்களின் பாணியில், விருப்பப்படி சர்வதேச சட்டத்தை மீறுவதற்கான 'உரிமை'யை வலியுறுத்தியதில்லை.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் விரோதம், காஷ்மீர் பிராந்தியத்திற்கு புதிய பூகோள மூலோபாய முக்கியத்துவத்தை அளித்துள்ளது. சீனாவின் பெல்ட் அன்ட் ரோட் முன்முயற்சியில் ஒரு பிரதான அங்கமாக இருக்கும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கு (CPEC) அதன் விடாப்பிடியான எதிர்ப்பிற்கான அதன் 'சட்ட-இராஜதந்திர' நியாயப்படுத்தலின் ஒரு பகுதியாக, காஷ்மீர் முழுவதும் தனது உரிமையை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஊடாக, சீனாவானது பாகிஸ்தானின் குவாடர் அரேபிய கடல் துறைமுகத்தை ரயில் மற்றும் குழாய் வழியாக மேற்கு சீனாவுடன் இணைப்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளதுடன், இதன் மூலம் சீனப் பொருளாதாரத்தை நெரிப்பதற்காக கடல் தடைகளைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்க திட்டங்களைத் தவிர்க்கிறது.

2019 ஆகஸ்ட்டில், பிரதமராக இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற சிறிது நேரத்திலேயே, மோடி, அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் வகையில், இந்தியாவிற்குள் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு, தன்னாட்சி அந்தஸ்தை ஒழித்தார். இது பா.ஜ.க. மற்றும் இந்து வலதுசாரிகளின் நீண்டகால இலக்காகும். ஆனால், காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக, அதை ஒரு யூனியன் பிரதேசமாக கீழிறக்குவதை உள்ளடக்கிய மோடியின் சதி, சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக தன் கையை வலுப்படுத்திக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டது. இதில் ஒரு அம்சம், சீனாவின் எல்லையான தொலைதூர லடாக் பகுதியை துண்டாக்கி, அதை ஒரு தனி யூனியன் பிரதேசமாக மாற்றி, அதன் மூலம் எல்லையில் பாரிய இராணுவ உள்கட்டமைப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ள இராணுவத்திற்கு சுதந்திரமான செயற்பாடுகளுக்கு இடமளிப்பது ஆகும்.

2020 மே-ஜூனில், இந்திய கட்டுப்பாட்டில் உள்ள லடாக் மற்றும் சீனாவின் அக்சாய் சின் இடையேயான சர்ச்சைக்குரிய எல்லையில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் மோதிக்கொண்டன. உலகின் மிகவும் சாதகமற்ற நிலப்பரப்பு மற்றும் காலநிலைகளின் ஒன்றில், இந்தியாவும் சீனாவும் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள், பீரங்கி மற்றும் போர் விமானங்களை பெருமளவில் முன்னோக்கி நிறுத்திய நிலையில், எல்லையில் ஒரு பதட்டமான விட்டுக்கொடுப்பற்ற நிலை ஏற்பட்டது. ட்ரம்ப் மற்றும் பைடன் இருவரின் கீழும் அமெரிக்கா, இந்த மோதலில் இந்தியாவைத் தூண்டிவிட்டு, அதைப் பயன்படுத்தி இந்தியாவை அதன் சீன-எதிர்ப்பு கூட்டணிகளின் வலையமைப்பில் மேலும் ஒருங்கிணைக்கப் பயன்படுத்தியது. வாஷிங்டன், இந்தியா-சீன எல்லைப் பிரச்சினையை சீனாவிற்கும் அதன் தென் சீனக் கடல் அண்டை நாடுகளுக்கும் இடையில் அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட பிராந்திய மோதல்களுடன் பகிரங்கமாக இணைத்து, சீனாவை ஆக்கிரமிப்பாளராக முத்திரை குத்தியதுடன், முதல் முறையாக சீன-இந்திய எல்லைப் பிரச்சினையில் ஒரு நிலைப்பாட்டை எடுத்து, புது தில்லி சரியாக நடந்துகொள்கின்றது என்று அறிவித்தது.

இந்தியா தனது கொள்ளையடிக்கும் அபிலாஷைகளைப் பாதுகாப்பதில் எவ்வளவு தூரம் சென்று ஆபத்தை விளைவிக்கத் தயாராக உள்ளது, மேலும் வாஷிங்டன் அதன் சீன-விரோத கூட்டணியை வலுப்படுத்துவதில் வரும் நாட்களில் எவ்வளவு தூரம் செயல்படும். பாகிஸ்தான் அரசையும் முதலாளித்துவத்தையும் உலுக்கி வரும் பல நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, அதி-வலதுசாரி மோடி அரசாங்கம் தனது போட்டியாளர்களுக்கு ஒரு பெரிய அடியை கொடுக்க முடியும் என்று கணக்கிடலாம்.

அணு ஆயுதம் கொண்ட இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எந்தவொரு இராணுவ மோதலும் விரைவாக கட்டுப்பாட்டை இழந்து பேரழிவில் முடிவதோடு, மற்ற சக்திகளையும் ஈர்க்கக்கூடும் என்பது உறுதி.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகள், வகுப்புவாதத்தைத் தூண்டிவிடவும், தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைத் தாக்குவதற்கும், முன்னர் மிகவும் வெடிக்கும் தன்மை கொண்டதாகக் கருதப்பட்ட பிற்போக்கு கொள்கைகள் மற்றும் திட்டங்களை முன்னெடுக்கவும் இந்தப் போர் நெருக்கடியைப் பற்றிக்கொள்ளும் என்பது உறுதி. இந்த விஷயத்தில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விரக்தியடையச் செய்வதாகக் கூறி, இந்தியா சிறிது காலமாக அதன் அதிருப்தியைக் காட்டி வருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க

Loading