மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த புதன்கிழமை, முதலாளித்துவ வர்க்கத்தின் ஓர் அதிகாரபூர்வமான குரலான வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், அதன் முதல் பக்கத்தில் அமெரிக்காவின் 19 பணக்கார குடும்பங்கள் 2024 ஆம் ஆண்டில் தங்கள் செல்வத்தை 1 டிரில்லியன் டாலர்கள் அளவிற்கு அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. அவர்களின் ஒட்டுமொத்த செல்வவளம் 1.6 ட்ரில்லியன் டாலரில் இருந்து 2.6 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது மலைப்பூட்டும் வகையில் ஒரே ஆண்டில் 62.5 சதவீத அதிகரிப்பாகும். இந்தக் குழுவிலுள்ள ஆகக் குறைந்தவரின் சொத்து மதிப்பு 45 பில்லியன் டாலர் ஆகும்.
இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெரும்பாலான பெயர்கள் பழக்கமானவை, முக்கியமாக தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவை: எலோன் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பெர்க், லாரி எலிசன் (ஆரக்கிள்), பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர் (மைக்ரோ சொப்ட்), செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் (கூகிள்), மைக்கேல் டெல் ஆகியோர்களுடன் வாரன் பஃபெட், மைக்கேல் ப்ளூம்பெர்க் மற்றும் ஸ்டீவன் ஸ்வார்ஸ்மேன் (பிளாக்ஸ்டோன் தனியார் பங்கு) ஆகியோரும் இணைந்துள்ளனர். ஒரு புதிய தொழில்நுட்ப அதிபர், என்விடியாவின் ஜென்சன் ஹுவாங், வோல்-மார்ட் பேரரசின் வாரிசுகளான மூன்று வால்டன்கள் மற்றும் தீவிர வலதுசாரி எண்ணெய் நிறுவன குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு கோச்கள் ஆகியோரும் இதில் உள்ளடங்குவர்.
செல்வக் குவிப்பின் போக்குகள் குறித்த முன்னணி பகுப்பாய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் காப்ரியல் ஜுக்மேனால் இந்த மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன. கடந்த நூற்றாண்டில் அமெரிக்க குடும்பங்களில் உயர்மட்ட 0.00001 சதவீதத்தினர் அல்லது ஒவ்வொரு 10 மில்லியன் குடும்பங்களில் ஒருவர் வைத்திருக்கும் செல்வத்தின் அளவு விகிதத்திலான போக்கைக் காட்டும் விளக்கப்படத்துடன் சேர்ந்து, இந்த மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 1913 இல் இருந்து 1982 வரையில் ஒரு சீரான கீழ்நோக்கிய சரிவு இருந்தது. பின்னர் ரீகன் நிர்வாகத்தின் வரி வெட்டுக்களுக்கு பின்னர் ஒரு கூர்மையான மேல்நோக்கிய திருப்பம் இருந்தது. இது டாட்-காம் பொறிவுக்கு சற்று முன்னர் 1999 இல் ஒரு அதிகரிப்பில் உச்சக்கட்டத்தை அடைந்தது, மேலும் 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவில் ஒரு மெதுவான சரிவு ஏற்பட்டது. அதன்பிறகு, பைடென் நிர்வாகத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளில், 2023-24 ஆம் ஆண்டில் சமத்துவமின்மையின் நிலையான உயர்வு வானளாவ உயர்ந்தது.
ஜேர்னல் பின்வருமாறு எழுதுகிறது:
மொத்த அமெரிக்க வீட்டுச் செல்வத்தில், அமெரிக்கர்களின் முதல் 0.00001 சதவீதத்தினரின் - இந்த சிறிய குழுவில் 11 குடும்பங்கள் மட்டுமே இருந்தபோது - பங்கின் அளவு 1982 இல் 0.1 இலிருந்து 2023 இல் 1.2 ஆக வளர நான்கு தசாப்தங்கள் ஆனது. ... கடந்த ஒரு வருடத்தில், 2024 ஆம் ஆண்டின் இறுதியில், நவீன 0.00001 சதவீதத்தினரின் - அந்த 19 குடும்பங்கள் - மொத்த அமெரிக்க வீட்டுச் செல்வத்தின் பங்கு 1.8 சதவீதமாக அல்லது சுமார் 2.6 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்தது. இது ஒரு வருடத்தில் பதிவான மிகப்பெரிய அதிகரிப்பு என்று ஜுக்மேன் கூறுகிறார்.
கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பைடென் நிர்வாகம், அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை இருந்தபோதிலும் அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு நிலையான தொழிலாளர் விநியோகத்தையும் குறைந்த தொழிலாளர் செலவுகளையும் உறுதி செய்வதற்காக பள்ளிகள் மற்றும் பணியிடங்களை மீண்டும் திறப்பதை அதன் முதன்மையான தேசிய முன்னுரிமையாக மாற்றியது. தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட இந்தக் கொள்கையின் விளைவாக, தேசிய வருமானத்தில் தொழிலாளர்களின் பங்கு வரலாற்றில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.
கடந்த ஜனவரியில், ட்ரம்ப் பதவியேற்று வெறும் சில வாரங்களுக்குப் பின்னர், “அமெரிக்காவில் ஒரு தன்னலக்குழு உருவாகி வருவதாக” பைடென் அறிவித்தார். ஆனால், சுக்மனின் புள்ளிவிபரங்கள், முதலாவதாக, ஜனநாயகக் கட்சியினரின் சொந்தக் கொள்கைகளே பில்லியனர்களுக்கு உதவியது என்பதையும், இரண்டாவதாக, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் குறைந்த விலைகள் குறித்த ட்ரம்ப்பினது பொய் வாக்குறுதிகளுடன் தேர்தலில் வெற்றிபெற அவை அவருக்கு உதவின என்பதையும் நிரூபிக்கின்றன
WSWS விளக்கியதைப் போல, ட்ரம்பின் இரண்டாவது தேர்தலானது, “அமெரிக்காவில் நிலவுகின்ற நிஜமான சமூக உறவுகளுக்கு பொருத்தமாக அமெரிக்க அரசியல் மேற்கட்டுமானத்தின் வன்முறையான மறுஒழுங்கமைப்பை” பிரதிநிதித்துவம் செய்கிறது.
ஒரு பில்லியனரான ட்ரம்ப், நிதிய தன்னலக்குழுவால் மற்றும் அதற்கான ஒரு அரசாங்கத்திற்கு தலைமை தாங்குகிறார். உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதன் மூலமும், கூட்டாட்சி அரசாங்கத்தால் வழங்கப்படும் சமூக சலுகைகளைக் குறைப்பதன் மூலமும் 1 டிரில்லியன் டாலர்களை வெட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறார்.
2024 ஆம் ஆண்டில் மட்டும் 19 சூப்பர்-பில்லியனர்களால் குவிக்கப்பட்ட 1 டிரில்லியன் டாலர் கூடுதல் செல்வத்தை பறிமுதல் செய்வதற்கான கோரிக்கைகளுடன் ட்ரம்ப்-மஸ்க் வெட்டுக்களை எதிர்ப்பது, தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். இன்னும் அடிப்படையாக, ஒரு தொழிலாளர் அரசாங்கத்தின் கீழ், பொருளாதார வாழ்வை சோசலிச மறுஒழுங்கமைப்பிற்கான அடித்தளத்தை வழங்குவதற்காக, முதலாளித்துவ வர்க்கத்தின் ஒட்டுமொத்த செல்வமும், தொழிலாள வர்க்கத்தின் உழைப்பால் உற்பத்தி செய்யப்பட்ட ட்ரில்லியன்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
அமெரிக்காவில் ஒரு தொழிலாளர் அரசாங்கம், வெறுமனே 19 குடும்பங்களின் செல்வ வளத்தில் 1 டிரில்லியன் டாலர் கூடுதல் செல்வத்தைக் கைப்பற்றுவதன் மூலமாக, வறுமை, பசி மற்றும் வீடற்ற நிலையை ஒழிக்க முடியும். இது ஒவ்வொரு அமெரிக்க தொழிலாளிக்கும் 7,000ம் டாலர் ஊதிய உயர்வு வழங்க முடியும். இது K-12 பொதுக் கல்விக்கான பட்ஜெட்டை இரட்டிப்பாக்கும்.
எவ்வாறிருப்பினும், உயர்மட்டத்தில் உள்ள 19 பேரின் செல்வத்தை மட்டுமல்ல, அமெரிக்காவில் இப்போது கிட்டத்தட்ட 2,000ம் ஆக இருக்கும் அனைத்து பில்லியனர்களின் செல்வத்தையும் கைப்பற்றுவதற்கு இன்னும் முக்கியமான காரணம் உள்ளது. இந்த செல்வம் சமூகத்தால் உற்பத்தி செய்யப்படும் வளங்களின் முழுமையான வீணாக்கம் மட்டுமல்ல, அதை சிறப்பாகப் பயன்படுத்தவும் முடியும். அதற்கும் அப்பால், அதன் தனியுடைமை நிதிய எஜமானர்களுக்கு இணையற்ற சமூக அதிகாரத்தை வழங்குகிறது. இந்த சிறிய ஒட்டுண்ணி அடுக்கு, அமெரிக்க சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும், குறிப்பாக பொருளாதாரம், அரசியல், ஊடகங்களில் மேலாதிக்கம் செலுத்துகிறது.
முதலாளித்துவ அமைப்புமுறைதான் மக்கள்தொகையில் பரந்த பெரும்பான்மையினராக இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை நிர்ணயிக்கிறது. மேலும், பெருநிறுவன உயரடுக்குகள், வேலைகள், ஊதிய விகிதங்கள், வேலை நிலைமைகள் ஆகியவற்றைத் தீர்மானிக்கிறது. வேலையிடத்திற்குள் ஒரு சர்வாதிகாரத்தை செயல்படுத்துகிறது. இது தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் உள்ள அவர்களின் ஊதியம் பெறும் தொழில்துறை பொலிஸாரால் வலுப்படுத்தப்படுகிறது.
நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, முன்னணி கல்வி நிறுவனங்களை பில்லியனர்கள் கட்டுப்படுத்துகின்றனர். மேலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு நிதி வழங்கும் பெரும் நன்கொடையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடத்திட்டங்களை அகற்றுவதற்கான கோரிக்கைகளோடு, ட்ரம்ப் நிர்வாகத்தின் வலதுசாரி கையகப்படுத்தலுடன் சமரசம் செய்ய பல்கலைக்கழகத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
முக்கிய செய்திப் பத்திரிகைகள், தொலைக்காட்சி வலைப்பின்னல்கள், திரைப்பட ஸ்டுடியோக்களை அவர்கள் சொந்தமாக வைத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள், பெருநிறுவன மற்றும் சமூக ஊடகங்கள் இரண்டையும் தணிக்கை செய்ய அதிகளவில் முயன்று வருகின்றனர். பில்லியனர் ரூபர்ட் முர்டோக் குடியரசுக் கட்சியின் பாசிச மாற்றத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். அமேசானின் ஜெஃப் பெசோஸ் வாஷிங்டன் போஸ்ட்டை மறுவடிவமைத்துள்ளார். மேலும் பில்லியனர் ஷாரி ரெட்ஸ்டோன் 60 மினிட்ஸ் தயாரிப்பாளரை வெளியேற்றி, ட்ரம்பின் உயர்மட்ட ஆதரவாளர்களில் ஒருவரான லாரி எலிசனின் மகனுக்கு பாரமவுண்ட்/CBS ஐ விற்க உதவியுள்ளார்.
இந்த பில்லியனர்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டினதும் அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கி விற்கின்றனர். அவ்விதத்தில் உத்தியோகபூர்வ அரசியலில் சவாலுக்கிடமற்ற ஏகபோகத்தையும் அனுபவித்து வருகின்றனர். நிதியப் பிரபுத்துவத்தின் அடிப்படை நலன்கள் பிரச்சினையில் இருக்கும்போது, காங்கிரஸ் உறுப்பினர்கள், செனட்டர்கள் மற்றும் ஜனாதிபதிகள் உடனடியாக கவனத்தை ஈர்க்கின்றனர். செனட் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் சார்ல்ஸ் சூமர் ட்ரம்ப் நிர்வாகத்தின் செலவின மசோதா மீதான அவரது எதிர்ப்பை திடீரென கைவிட்டு, நிதியியல் சந்தைகளுக்கு மறுஉத்தரவாதமளிக்க அவசியமான போது, அதை நிறைவேற்றுவதற்கான வாக்குகளைப் பெற்றார். உயர்மட்ட மத்திய வங்கியாளரை நீக்குவது சந்தை பொறிவைத் தூண்டக்கூடும் என்று வோல் ஸ்ட்ரீட் சமிக்ஞை செய்த போது, பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலுக்கு எதிரான அவரது மிரட்டல் அச்சுறுத்தல்களில் இருந்து ட்ரம்ப் பின்வாங்கினார்.
இந்த நிலைப்பாட்டில் இருந்துதான் உலக சோசலிச வலைத் தளம் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் ஆகியோரால் நடத்தப்பட்டுவரும் மோசடியான “செல்வந்த தட்டுக்களை எதிர்த்துப் போராடும்” பிரச்சாரத்தை அம்பலப்படுத்தியுள்ளது. அவர்களின் பேரணிகளில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டதும், ஏப்ரல் 5 மற்றும் 19 தேதிகளில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்களில் பெருமளவில் மக்கள் பங்கேற்றதும், மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் சமூக கோபத்தையும், எதிர்த்துப் போராடுவதற்கான அவர்களின் விருப்பத்தையும் வெளிப்படுத்திக் காட்டுகின்றன.
ஆனால் சாண்டர்ஸும் ஒக்காசியோ-கோர்டெஸும் ஒருபோதும் முதலாளித்துவத்தை ஒரு அமைப்புமுறையாக குற்றஞ்சாட்டுவதில்லை, அல்லது அதற்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதில்லை. முன்னைய பைடென் நிர்வாகம் நிதியியல் பிரபுத்துவத்தின் தரப்பில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரியளவில் செல்வக் குவிப்புக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த போதிலும் கூட அவர்கள் அதை ஆதரித்துப் பாராட்டி வந்தனர்.
செல்வந்த தன்னலக்குழுகளுக்கு எதிரான அவர்களின் அத்தனை கூச்சல்களுக்கும் அப்பால், பில்லியனர்கள் முறைகேடாக ஈட்டிய செல்வ வளங்களைப் பறிக்கக் கூடிய எந்தவொரு கோரிக்கையையும் முன்னெடுப்பதை அவர்கள் கவனமாக தவிர்த்து வருகின்றனர். செல்வவளத்தை கடுமையாக மறுபகிர்வு செய்யாமல், பில்லியனர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யாமல், சமூகத்தை மாற்ற முடியும் என்று அவர்கள் பாசாங்கு செய்து வருகின்றனர்.
சமீபத்திய வாரங்களில், அமெரிக்க புரட்சி மற்றும் உள்நாட்டுப் போர் குறித்த பல முக்கியமான ஆய்வுகளை WSWS வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வுகள் அதன் ஆண்டு நிகழ்வுகளின் போது வெளியிடப்பட்டன. ஆனால் இதற்கு இன்னும் அடிப்படையான முக்கியத்துவம் உள்ளது. அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் வரலாற்றின் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
1775-83 ஆம் ஆண்டின் முதல் அமெரிக்கப் புரட்சி மனிதனின் சமத்துவத்தை அறிவித்தது. இரண்டாவது அமெரிக்கப் புரட்சியான உள்நாட்டுப் போர், அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டது. நடைமுறையில் இதன் அர்த்தம் அடிமையுடைமையாளர்களது உடைமைகளை, அதாவது புரட்சிகரமாக அவர்களது உடைமைகளைப் பறிப்பதையே அர்த்தப்படுத்தியது.
பில்லியனர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யாமல் சமகால அமெரிக்காவின் பெரும் சமூகப் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் இருக்க முடியாது.
உச்ச நீதிமன்றத்தின் இழிபுகழ்பெற்ற குடிமக்கள் ஐக்கியம் (Citizens United ) என்ற தீர்ப்பை ரத்து செய்வது அல்லது செல்வந்தர்களுக்கான வருமான வரி விகிதத்தை ஒரு சிறிய அளவு மட்டுமே உயர்த்துவது போன்ற அவர்களின் ஊசிகுத்தும் சீர்திருத்த திட்டங்கள், பில்லியனர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு செயல்படுத்த முடியாது என்பதையும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பிடத்தக்க விளைவையும் ஏற்படுத்தாது என்பதையும் சாண்டர்ஸ் மற்றும் ஒகாசியோ-கோர்டெஸ் அறிவார்கள். தொழிலாள வர்க்கத்தின் சீற்றம் மற்றும் போர்க்குணத்தின் எழுச்சி அலையை ஜனநாயகக் கட்சியின் அழுகிய கட்டமைப்பிற்குள் பொறிவைத்து, வைத்திருக்க முற்படும் அரசியல் ஏமாற்றுக்காரர்கள் என்பதால் அவர்கள் இத்தகைய திட்டங்களை முன்வைத்து வருகின்றனர்.
சோசலிச சமத்துவக் கட்சி, சமூகத்தின் மீது ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கத்தை கூட்டாக உறுதிப்படுத்தும் முதலாளித்துவ தன்னலக்குழுவின் இரண்டு கட்சிகளுடன் முறித்துக் கொள்ள அழைப்பு விடுக்கிறது.
தொழிற்சங்கங்களால் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்ட இரும்புக் கவசத்தை உடைத்தெறிய வேண்டும். அவை பணியிடங்கள் மற்றும் தொழில்துறையில் இடம்பெறும் ஒவ்வொரு போராட்டத்தையும் தனிமைப்படுத்தி, முதலாளிகளால் எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் சட்டங்களின் கண்டிப்புகளுக்கு அனைத்து போராட்டங்களையும் கீழ்ப்படுத்துகின்றன. இனம், பாலினம் மற்றும் பாலியல் நோக்குநிலை ஆகியவற்றின் அடிப்படையில் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதற்கு, குறிப்பாக போலி-இடதுகள் மற்றும் ஜனநாயகக் கட்சியால் வளர்க்கப்படும் முயற்சிகளை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக, அமெரிக்கத் தொழிலாளர்களை கனடா, மெக்சிகோ, சீனா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளிடம் இருந்து பிரிக்கும் தேசியவாதத்தை தொழிலாள வர்க்கம் நிராகரிக்க வேண்டும். இதன் பொருள், குறிப்பாக இப்போது, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பையும், சுதந்திரமாகவும் கட்டுப்பாடுகள் இல்லாமல் வாழவும் வேலை செய்யவும் அவர்களின் உரிமையை எடுத்துக்கொள்வதாகும்.
வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஏகாதிபத்திய உலகப் போர் அச்சுறுத்தலை நிறுத்துவதற்குமான வர்க்கப் போராட்டத்தைப் பின்தொடர்வதில், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கம் புதிய, சுயாதீனமான வர்க்க அமைப்புகள், சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்துகிறது. இந்த அமைப்புகள், இலாப அமைப்புமுறை மற்றும் முதலாளித்துவ தேசிய அரசை நிராகரிப்பதை அடிப்படையாகக் கொண்டவை. மேலும், தொழிலாளர்களை அவர்களின் பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் தேசிய எல்லைகளைக் கடந்து ஐக்கியப்படுத்த இந்த அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன.
இந்த முன்னோக்கைப் பற்றி மேலும் அறிய விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை மே 3 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஏற்பாடு செய்துள்ள மே தின பேரணியில் கலந்துகொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம். இந்தப் பேரணியில் பங்கெடுக்க, உலக சோசலிச வலைத் தளத்தில் முன்பதிவு செய்யுங்கள்.