முன்னோக்கு

அமெரிக்க குடிவரவு கெஸ்டாபோ, அமெரிக்க பாலத்தில் தவறாகச் சென்ற வெனிசுலாவைச் சேர்ந்த ஒருவரை எல் சால்வடோர் நாட்டிற்கு காணாமல் ஆக்கியது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ரிக்கார்டோ பிராடா வாஸ்குவேஸ் [புகைப்படம்: ஹ்யூகோ பிராடா வழியாக நியூ யோர்க் டைம்ஸ்] [Photo by Hugo Prada via New York Times]

அமெரிக்காவில் சட்டபூர்வமாக வசிக்கும் 32 வயதான வெனிசுவேலா புலம்பெயர்ந்தவரான ரிக்கார்டோ பிராடா வாஸ்குவேஸ் (Ricardo Prada Vásquez), மிச்சிகன், டெட்ராய்டில் உள்ள அம்பாசிடர் பாலத்தில் தவறுதலாக திரும்பிய பின்னர், எல் சால்வடோரின் இழிபுகழ்பெற்ற பயங்கரவாத தடுப்பு மையத்திற்கு (CECOT) அனுப்பப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

வட அமெரிக்காவின் பரபரப்பான சர்வதேச போக்குவரத்துக் கடவைகளில் ஒன்றான இந்தப் பாலம், டெட்ராய்டை ஒன்டாரியோவின் வின்ட்சருடன் இணைக்கிறது. அருகிலுள்ள நெடுஞ்சாலைகளின் சிக்கலான தன்மை காரணமாக, உள்ளூர்வாசிகள் கூட எப்போதாவது தவறான வளைவில் செல்கின்றனர். பிராடாவைப் பொறுத்த வரையில், இந்த அப்பாவித்தனமான தவறு கைது, சிறைவாசம் மற்றும் நாடுகடத்தலுக்கு இட்டுச் சென்றது—இது அவர் ஒரு வெளிநாட்டு சிறையில் காணாமல் போவதில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

கனடாவின் ஒன்டாரியோவிலிருந்து அம்பாசிடர் பாலம் வழியாக லாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைகின்றன, பிப்ரவரி 3, 2025 திங்கட்கிழமை, டெட்ராய்ட் [AP Photo/Paul Sancya]

கடந்த செவ்வாய்கிழமை காலை, நியூ யோர்க் டைம்ஸ் பிராடா நாடுகடத்தப்பட்டது குறித்து செய்தி வெளியிட்டதுடன், அவரது தற்போதைய இருப்பிடம் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டது. 10 மணி நேரத்திற்கும் மேலாக, உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) அவர் இருக்கும் இடத்தை வெளியிட மறுத்துவிட்டது. கிட்டத்தட்ட மாலை 4:00 மணிக்குப் பிறகுதான், DHS செய்தித் தொடர்பாளர் டிரிசியா மெக்லாக்லின், மார்ச் 15 அன்று பிராடா “எல் சால்வடோருக்கு மாற்றப்பட்டார்” என்று X (ட்விட்டர்) இல் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

பிராடா ஒரு “TDA [ட்ரென் டி அரகுவா] குண்டர் உறுப்பினர்” என்றும் “பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” என்றும் எந்த ஆதாரமும் இல்லாமல் மெக்லாக்லின் வாதிட்டார். பிப்ரவரி 27 அன்று அவரை வெளியேற்ற குடிவரவு நீதிபதி உத்தரவிட்டதாக அவர் வலியுறுத்திக் கூறினார்.

பிராடாவின் குடியேற்ற அந்தஸ்து தெளிவாக ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. டைம்ஸ் ஆரம்பத்தில் தெரிவித்தது போல், நவம்பர் 2024 இல், CBP One செயலி மூலம் அனுமதிக்கு முன்பதிவு செய்த பிறகு பிராடா அமெரிக்காவிற்குள் சட்டப்பூர்வமாக நுழைந்தார். ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், இந்த செயலி ஒரு புகலிட தளத்திலிருந்து CBP முகப்பு என மறுபெயரிடப்பட்ட கட்டாய “சுய-நாடுகடத்தலுக்கான” ஒரு கருவியாக மாற்றப்பட்டது.

அமெரிக்காவிற்கு வந்த பின்னர், பிராடா டெட்ராய்டில் குடியேறி ஒரு விநியோக ஓட்டுநராக பணியாற்றி வந்தார். ஜனவரி 15 ஆம் தேதி, மெக்டொனால்டில் இருந்து ஒரு ஆர்டரைப் பெறும்போது, ​​அவர் வீதியில் தற்செயலாக ஒரு திருப்பத்தை மேற்கொண்டார். இதனால் அவர் அம்பாசிடர் பாலத்தை கடந்து கனடாவுக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் சட்டபூர்வ அந்தஸ்துக்கு உட்பட்டவராக இருந்தபோதிலும், அவர் மீண்டும் திரும்பிச் செல்ல அனுமதிப்பதற்குப் பதிலாக, குடிவரவு அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் “மீண்டும் நுழைய” முயற்சித்ததாக குற்றஞ்சாட்டி அவரைக் கைது செய்தனர்.

டெக்சாஸ் தடுப்புக்காவல் மையத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, பிராடா மார்ச் 15 அன்று சிக்காகோவில் இருந்த தனது நண்பரான ஜேவியரை தொலைபேசியில் அழைத்தார். அந்த அழைப்பில் —அவரது கடைசித் தொடர்பு— பிராடா தான் வெனிசுவேலாவுக்கு திருப்பி அனுப்பப்படுவதை நம்புவதாகக் கூறினார். அதே இரவில், ட்ரம்ப் நிர்வாகம் எந்த குற்றப் பின்னணியும் இல்லாத பெரும்பான்மையான புலம்பெயர்ந்தோரை எல் சால்வடோரின் CECOT சிறைக்கு இரகசிய விமானங்களில் திருப்பி அனுப்பத் தொடங்கியது.

இந்த நாடுகடத்தல்கள் வாஷிங்டன், டி.சி., அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் இ. போஸ்பெர்க்கின் உத்தரவை நேரடியாக மீறும் வகையில் நடந்தன. அந்த உத்தரவானது, விமானங்கள் ஏற்கனவே வானில் பறந்தால் நிறுத்தப்பட வேண்டும் அல்லது திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பதாகும்.

அதன்பிறகு பிராடாவைப் பற்றி எந்த தகவலும் இல்லை. மார்ச் மாதம் வெனிசுலா மற்றும் எல் சால்வடோரில் இருந்து சட்டவிரோதமாக CECOT க்கு மாற்றப்பட்ட 288 ஆண்களை ஆவணப்படுத்தும் வழக்கறிஞர்கள் மற்றும் சிவில் உரிமைகள் குழுக்களால் தொகுக்கப்பட்ட பகுதி பட்டியலில் அவரது பெயர் இல்லை. இவர் காணாமல் போய்விட்டார் என்று கூறினால் அது மிகைப்படுத்தல் அல்ல: அமெரிக்க அரசாங்கம் அங்கு தடுத்து வைத்துள்ள அனைவரின் விரிவான பட்டியலையும், விளக்கத்தையும் வழங்க மறுத்துவிட்டது.

CECOT சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் எந்தக் குற்றத்திற்காகவும் குற்றம் சாட்டப்படவில்லை என்பதை சுயாதீன விசாரணைகள் உறுதிப்படுத்துகின்றன. தடுத்து வைக்கப்பட்டவர்களில்: ஒரு ஓரினச்சேர்க்கை ஒப்பனை கலைஞரான ஆண்ட்ரூ ஹெர்னாண்டஸ் ரோமெரோ, ஒரு இசைக் கலைஞரான ஆர்ட்டுரோ சுவாரெஸ் ட்ரெஜோ, ஒரு தொழில்முறை கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான ஜெர்ஸ் ரெய்ஸ் பாரியோஸ், மற்றும் நீண்டகாலமாக மேரிலாந்தில் வசித்து வருபவரும், ஒரு அமெரிக்க குடிமகளை மணந்து மூன்று அமெரிக்க குடியுரிமைபெற்ற குழந்தைகளுக்கு தந்தையுமாகிய கில்மார் அப்ரெகோ கார்சியா ஆகியோர் அடங்குவர்.

ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், மூத்த DOJ வழக்கறிஞர் எரெஸ் ருவேனி, அப்ரிகோ கார்சியா “நிர்வாகப் பிழை” காரணமாக தவறாக நாடு கடத்தப்பட்டதை ஒப்புக்கொண்டார். இந்த ஒப்புதலுக்காக, ருவேனி விடுப்பில் அனுப்பப்பட்டார். இதற்குப் பின்னர் ஏப்ரல் 15 அன்று ட்ரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டை —அதாவது அமெரிக்க குடிமக்கள் உட்பட எவரையும், உரிய நடைமுறையோ அல்லது நீதித்துறை மீளாய்வோ இன்றி நாடுகடத்துவதற்கு அரசாங்கத்திற்கு தடையற்ற அதிகாரம் உள்ளது என்ற நிர்வாகத்தின் நிலைப்பாட்டை “ஆர்வத்துடன் அறிவுறுத்த” தவறியதற்காக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

“பயங்கரவாதி” என்ற முத்திரையின் கீழ் தனிநபர்களை காணாமல் ஆக்குவதற்கான அதிகாரத்தை ட்ரம்ப் வலியுறுத்துவது ஜனநாயகத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகும். இந்த அரசாங்கம் ஜனநாயகக் கட்சியினரிடமிருந்தோ அல்லது உத்தியோகபூர்வ ஸ்தாபனங்களிடமிருந்தோ கிட்டத்தட்ட எந்த எதிர்ப்பும் இல்லாமல் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்கி வருகிறது.

புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் சர்வதேச மாணவர்கள் மீதான ட்ரம்பின் தாக்குதல்கள் உட்பட அவரது எதேச்சதிகார கொள்கைகளுக்கு எதிராக ஏப்ரல் 5 மற்றும் ஏப்ரல் 19 இல் தேசியளவிலான பாரிய போராட்டங்கள் நடந்த அதேவேளையில், ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள் அவரது நியாயப்படுத்தல்களை குறைத்து மதிப்பிட்டுள்ளனர் அல்லது எதிரொலித்துள்ளனர்.

ஏப்ரல் 18 அன்று நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் - 2028 ஜனாதிபதி வேட்பாளராக இருக்க வாய்ப்புள்ளது - அப்ரிகோ கார்சியா வழக்கை “அன்றைய தினத்தின் கவனச்சிதறலாக” நிராகரித்தார். மேலும், ஜனநாயகக் கட்சியினர் “MS-13 ஐப் பாதுகாக்கிறார்களா?” என்ற கேள்விக்கு, ஜனநாயகக் கட்சியினர் தங்களை கேள்விக்குள்ளாக்கிக் கொள்ளும் வகையில் ட்ரம்பின் வாய்வீச்சை அவர் எதிரொலித்தார்.

இதேபோல, பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர், நாடுகடத்தல்கள் “ஜனநாயகக் கட்சியினருக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்க வேண்டுமா” என்று கேள்வி எழுப்பியதாகவும், மற்றொருவர் ட்ரம்ப் “ஒரு பொறி அமைத்து வருகிறார்” என்று கூறி பொதுமக்களின் சீற்றத்தை வெறுமனே “இன்றைய நாளுக்கான சூப்” என்று உதறித்தள்ளியதாகவும் ஆக்சியோஸ் இணையத்தளம் அறிவித்தது.

ஜனநாயகக் கட்சி, எதிர்ப்பதற்குப் பதிலாக, ட்ரம்பின் பாசிச நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த உதவுகிறது. ட்ரம்பின் பாசிச நிகழ்ச்சி நிரல் உலகளாவிய போருக்குத் தயாராகும் அதே வேளையில், நிதி உயரடுக்கிற்கு செல்வத்தை பாய்ச்சுகிறது. ட்ரம்ப் ஏற்கனவே அத்துமீறி வரும் நீதிமன்றங்களை தொழிலாளர்கள் நம்ப முடியாது.

வாகனத்தில் வீதியில் ஒரு தவறுதலான திருப்பத்தை ஏற்படுத்தியதுக்காக, ஒரு அப்பாவி மனிதனை ஒரு வெளிநாட்டு நிலவறை சிறையில் தள்ள முடியும் என்றால், ட்ரம்ப் ஆட்சியின் பாசிசக் கொள்கைகளை எதிர்க்கத் துணியும் எந்தவொரு தொழிலாளியையும் —குடியுரிமையைப் பொருட்படுத்தாமல்— எது பாதுகாக்கிறது?

உரிய நடைமுறைகள் இன்றி பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் ஜனநாயகத்தின் செயற்பாடுகள் அல்ல. காண்டோர் நடவடிக்கை என்றழைக்கப்படும் தென் அமெரிக்காவில் பயங்கரவாத ஆட்சிக்கான ஆதரவு, சிலியின் பினோட்சேயின் ஆட்சி, ஆர்ஜென்டினாவின் “கறைபடிந்த போர்” மற்றும் பிரேசிலின் இராணுவ சர்வாதிகாரம் போன்ற அமெரிக்க ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் இருண்ட அத்தியாயங்களை இவை எதிரொலிக்கின்றன.

இந்த சட்டவிரோத ஆட்சியை நிறுத்த தொழிலாளர்கள் சுயாதீனமாக செயல்பட வேண்டும். “அடுத்த தேர்தலுக்காக” காத்திருப்பது முட்டாள்தனம் ஆகும். ட்ரம்ப் வெளிப்படையாக அரசியலமைப்பிற்கு விரோதமான மூன்றாவது பதவிக்காலத்தை நாட இருக்கிறார். அதே நேரத்தில் “உள்நாட்டு மக்களை” - அதாவது அமெரிக்க குடிமக்களை - நாடு கடத்துவதாக உறுதியளிக்கிறார்.

தொழிலாளர்கள் தேசியவாத தொழிற்சங்கங்களை நம்பக் கூடாது. ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஷான் ஃபெயின் மற்றும் டீம்ஸ்டர்ஸ் இன் தலைவர் சீன் ஓ’பிரையன் ஆகியோர் ட்ரம்பின் வர்த்தகப் போர் தேசியவாதத்துடன் அணி சேர்ந்துள்ளனர். மூன்றாம் உலகப் போருக்கான தயாரிப்புகள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், அவர்கள் வருங்கால சர்வாதிகாரிக்கு “தொழிலாளர் போலீஸாக” தங்களது சேவையை வழங்கி வருகிறார்கள். அதே நேரத்தில், புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்பினது தாக்குதல்களை ஆதரித்து வருகின்றனர்.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க, தொழிற்சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் என அனைத்து வேலையிடத்திலும் தொழிலாளர்கள், சாமானியத் தொழிலாளர் குழுக்களை சுயாதீனமாக உருவாக்க வேண்டும். பாசிசத்திற்கு எதிரான போராட்டம் என்பது ஒரு வர்க்கப் போராட்டமாகும். புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக இன்று பயன்படுத்தப்படும் கருவிகள், ட்ரம்ப் நிர்வாகத்தை எதிர்க்கும் அனைவருக்கும் எதிராகத் திருப்பப்படும்.

Loading