முன்னோக்கு

கோவிட்-19 பெருந்தொற்றின் 5 ஆண்டுகள்: உலக சோசலிச வலைத் தளத்தின் பதில்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கி ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், உலக சோசலிச வலைத்தளத்தின் ஐந்தாண்டு மதிப்பீட்டின் ஒரு பகுதியாக, இந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள விரிவான காலவரிசையை எமது வாசகர்கள் கவனமாக மதிப்பாய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஒரு சோசலிச அடிப்படையிலான பொது சுகாதார திட்டத்திற்காக நடைபெறும் போராட்டத்தில் செயற்பாட்டுடன் ஈடுபட, கீழே உள்ள படிவத்தை நிரப்புமாறு நாங்கள் உங்களை அழைக்கிறோம்.

***

மார்ச் 11, 2020 அன்று உலக சுகாதார நிறுவனம் (WHO) கோவிட்-19 ஐ ஒரு உலகளாவிய பெருந்தொற்றாக அறிவித்து ஐந்து ஆண்டுகளைக் கடந்தபோதிலும், இந்த நோயானது உலகெங்கும் தொடர்ந்து பரவிக் கொண்டே வருகிறது, ஏற்கனவே ஏற்பட்ட பெரும் துன்பத்தையும் உயிரிழப்புகளையும் மேலும் தீவிரமாக்கி வருகிறது. கோவிட்-19 மற்றும் அதனால் உண்டான பல்வேறு உடல்நல பாதிப்புகள் காரணமாக உலகளவில் சுமார் 30 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் தற்போது நீண்டகால கோவிட் (நெடுங் கோவிட் - Long COVID) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பேரழிவு தவிர்க்க முடியாததல்ல. இது, இலாபங்களை மனித உயிர்களுக்கு மேல் வைத்து, ஜனநாயக விரோதமான கொள்கை முடிவுகளை மேற்கொண்ட முதலாளித்துவ அரசாங்கங்களின் செயற்கை முடிவுகளால் நிகழ்ந்தது— இது பெரிய அளவிலான சமூகப் படுகொலையின் ஒரு வடிவாகவே அமைகிறது.

பெருந்தொற்றின் ஆரம்பத்திலிருந்தே, உலக சோசலிச வலைத்தளத்தை (WSWS) வெளியிடும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), விஞ்ஞான அடிப்படையிலான ஒருங்கிணைந்த உலகளாவிய பதிலின்மையின் விளைவாக, கோவிட்-19 ஆனது மனித இனத்துக்கே அபாயம் விளைவிக்கும் என்று எச்சரித்தது. எங்களது பிழையற்ற அரசியல் பகுப்பாய்வும் செய்திகளும், தொற்றுநோயியல் நிபுணர்கள், நுண்ணுயிரியல் நிபுணர்கள் மற்றும் பிற விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இருந்தன. ஆனால் இந்த எச்சரிக்கைகள், முதலாளித்துவ அரசாங்கங்களால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டன; அவர்கள் இவ்விழிப்புணர்வை அடக்க முயன்றனர்.

இந்தக் காலகட்டம் முழுவதும், வைரஸின் பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தும் நோக்குடன், கிடைக்கக்கூடிய அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் உலகளவில் செயல்படுத்த வேண்டியதான, உலகளாவிய ஒழிப்பு மூலோபாயத்தின் அடிப்படையில், பெருந்தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கான விஞ்ஞானபூர்வ அணுகுமுறைக்காக உலக சோசலிச வலைத் தளம் போராடி வந்துள்ளது.

இந்தக் கட்டுரை, கோவிட்-19 பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை, அதனை எதிர்கொள்ள நாங்கள் எடுத்த கோட்பாட்டு மற்றும் செயல்திட்ட நடவடிக்கைகளின் வளர்ச்சியை சுருக்கமாக விளக்குகிறது. உலக சோசலிச வலைத் தளத்தின் தொடர்ச்சியான பதிவுகள், பெருந்தொற்றிற்கு முதலாளித்துவம் அளித்த பதிலின் மீது மறுக்க முடியாத குற்றச்சாட்டாக நிற்கின்றன. மேலும், ஆரம்பத்திலிருந்தே சோசலிச பொதுச் சுகாதார திட்டம் பின்பற்றப்பட்டிருந்தால், கோவிட்-19 மூலம் ஏற்பட்ட பெரும்பான்மையான உயிரிழப்புகளும் உடல் நலக்குறைவுகளும் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியதாக இருந்திருக்கும்; கோடிக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்க முடியும் என்பதற்கான உறுதியான சாட்சியமாகவும் அமைந்துள்ளன.

ஆரம்ப நெருக்கடி, பூச்சிய-கோவிட் மற்றும் “கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கை

பெருந்தொற்று நோயின் ஆரம்ப மாதங்களில், 2019 டிசம்பரின் இறுதியில் இருந்து 2020 ஏப்ரல் ஆரம்பம் வரை, அதனை எதிர்கொண்ட இரண்டு முக்கியமான மூலோபாயங்களை தெளிவாக வரையறுத்தன: முழுமையாக ஒழித்தல் (elimination) மற்றும் “கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி” (herd immunity) கொள்கை.

ஜனவரி 23, 2020 அன்று, அமைதியிழந்த தொழிலாள வர்க்கத்திடமிருந்து அதிகரித்து வந்த அழுத்தத்தை எதிர்கொண்டு, சீன அதிகாரிகள் உலகின் முதலாவது பூச்சிய-கோவிட் கொள்கையை நடைமுறைப்படுத்தினர், வுஹானில் 13 மில்லியன் மக்களுள்ள பகுதியில் மனித வரலாற்றில் முதலாவது வெகுஜன ஊரடங்கு நிலைமை தொடங்கப்பட்டது. இந்தக் கொள்கை ஹூபே மாகாணம் முழுவதும் விரிவடைந்ததுடன், வழமையான வெகுஜன பரிசோதனை, கடுமையான தொடர்புத் தடமறிதல், பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல், பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் உலகளவில் முகக்கவசம் அணிதல், வைரஸ் பரவுவதைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகளின் ஒரு விரிவான தொகுப்புடன் இணைக்கப்பட்டிருந்தது. எழுபத்தி ஆறு நாட்களுக்குப் பிறகு, சீனச் சமூகம் இந்த முழு அடைப்பிலிருந்து வெளியேறி பெரும்பாலும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியது.

இந்த ஏப்ரல் 2020 புகைப்படத்தில், அரசாங்க ஊழியர்கள் வுஹானில் இருந்து பெய்ஜிங்கில் நியமிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட தளங்களுக்கு பயணிகளை கொண்டு செல்வதை ஒருங்கிணைக்கின்றனர். [AP Photo/Sam McNeil, File]

வைரஸைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கைகள் அவசியமானவை என்பதை உலக சோசலிச வலைத் தளம் ஆரம்பத்திலேயே திடமாக ஏற்றுக்கொண்டது. ஜனவரி 24, 2020 கட்டுரையில், சீனாவில் நோயின் தாக்கத்தின் திடீர் அதிகரிப்பு மற்றும் ஆரம்ப எதிர்வினை குறித்து நாங்கள் முதலில் தெரிவித்தோம். ஜனவரி 28, 2020 முன்னோக்கில், புதிய கொரோனா வைரஸின் அபாயங்கள் குறித்து எச்சரித்தோம் மேலும் விஞ்ஞானரீதியான பதில் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தோம். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) 2020 பிப்ரவரி 28 அறிக்கையில், “பரவி வரும் கொரொனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு உலகளாவிய ஒருங்கிணைந்த அவசரகால நடவடிக்கைக்கு” நாங்கள் அழைப்பு விடுத்ததுடன், மேலும் வலியுறுத்தியிருந்தோம்

இதற்கான தீர்வு உலகளாவியதாக இருக்க வேண்டியது அவசியம். கொரொனா வைரஸை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும், இறுதியில் முற்றாக ஒழிக்கவும் தேவையான செயல்திறனுடைய எதிர்வினைகளை அபிவிருத்தி செய்வதைத் தாமதப்படுத்தும் ‘தேசிய நலன்கள்’ மற்றும் புவிசார் அரசியல் மோதல்களால் தடுக்கப்படாமல், உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியும் தொழில்நுட்பத்தையும் பகிர அனுமதிக்கப்பட வேண்டும். ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ளவை போன்ற அனைத்து வர்த்தகப் போர்களுக்கான நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத் தடைகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். எந்த மனிதருக்கும், அவரது தேசிய அல்லது இன அடையாளத்தின் அடிப்படையில் அவசரமாக தேவைப்படும் மருத்துவ சிகிச்சை மறுக்கக் கூடாது.

இதற்கு நேர்மாறாக, ட்ரம்ப் நிர்வாகமும் பிற முதலாளித்துவ அரசாங்கங்களும், “ஈவிரக்கமற்ற அலட்சியக்” கொள்கையாக ஏற்றுக்கொண்டன. இது விரைவில், தெளிவாக இனத்தூய்மைவாத (eugenicist) மற்றும் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் மால்தூசியக் (Malthusian) கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட, பெருந்தொற்றை வேண்டுமென்றே பரப்பும் பாசிசக் கொள்கையான “கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கையாக மாறியது. பின்னாளில் வெளியான தகவல்களின்படி, கோவிட்-19 வைரஸால் ஏற்படும் பேராபத்துகள் குறித்து 2020 ஆம் ஆண்டு ஜனவரியிலேயே ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் நோயின் ஆபத்துகளைப் பற்றிய உண்மைகளை திட்டமிட்டு பொதுமக்களிடமிருந்து மறைத்து, தவறான தகவல்களை பரப்பியதுடன், நோய் கண்காணிக்கப்படாத வகையில் பரவ அனுமதிக்கப்பட்டது.

ஜனவரி முழுவதும், இந்நோய் உலகளவில் பரவி வந்த நிலையில், சீனாவில் கோவிட்-19 பரிசோதனை பரவலாக கிடைத்த போதிலும், அமெரிக்காவில் எந்த பரிசோதனையும் நடத்தப்படவில்லை. பிப்ரவரி மாதம் முழுவதும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருந்தது, மார்ச் மாதத்திற்குள், மருத்துவமனைகளும் பிணவறைகளும் கொள்ளளவு திறனைவிட நிரம்பி வழிந்தன. அமெரிக்க மிட்வெஸ்டில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் திடீர் வெளிநடப்புப் போராட்டங்களைத் தொடங்கினர், இது வேலையிடங்கள் மற்றும் பள்ளிகளை மூட நிர்பந்தித்தது.

ஏறத்தாழ உடனடியாக, ஆளும் உயரடுக்கின் பிரிவுகளும் அவற்றிற்கு வளைந்து கொடுக்கும் ஊடகங்களும் உடனடியாக அனைத்தையும் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று கோரத் தொடங்கின. மார்ச் 22, 2020 அன்று, நியூயார்க் டைம்ஸ் தாமஸ் ஃப்ரீட்மேன் எழுதிய ஒரு தலையங்கத்தை வெளியிட்டது, அது வேலைக்குத் திரும்புவதற்கான பிரச்சாரத்திற்கான புதிய மந்திரத்தை உருவாக்கியது: “நோயை விட மோசமான சிகிச்சை இருக்க முடியாது.” கேர்ஸ் சட்டம் (CARES Act) நிறைவேற்றப்பட்ட அடுத்த வாரத்தில், இந்தப் பிரச்சாரம் சூடுபிடித்தது. இது, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் ஓய்வு பெற்றவர்களும் ஒவ்வொரு நாளும் வேகமாக உயிரிழந்து கொண்டிருந்தபோது, செல்வந்தர்களுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்களை வழங்கத் தொடங்கியது.

ஐரோப்பா முழுவதும் இதேபோன்ற கொள்கைகள் செயல்படுத்தப்பட்டன. பிரிட்டனில், போரிஸ் ஜோன்சன் ஆரம்பத்தில் குடிமக்களை வீட்டிலேயே தங்கும் உத்தரவை அமல்படுத்த நிர்பந்திக்கப்படுவதற்கு முன்னர் “கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கைக்காக வாதிட்டார். ஸ்வீடனில், அரசாங்கம் வேண்டுமென்றே வெகுஜன தொற்றுநோய் கொள்கைக்கு முன்னோடியாக பள்ளிகள் மற்றும் உணவகங்களைத் திறந்து வைத்திருந்ததுடன், அவர்கள் அதை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தனர். பிரேசிலில், அதிவலது ஜனாதிபதி ஜெய்ர் போல்சொனாரோ கோவிட்-19 ஐ ஒரு “சிறிய வைரஸ் காய்ச்சல்” என்று நிராகரித்தார், அதேநேரத்தில் வைரஸ் நாட்டின் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களை நாசம் செய்தது.

இந்த அபிவிருத்திகள் குறித்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தத்துவார்த்த பகுப்பாய்வு, அரசு மற்றும் வர்க்க உறவுகள் குறித்த ஒரு மார்க்சிச புரிதலில் வேரூன்றி இருந்தது. மார்ச் 17, 2020 முன்னோக்கில், நாங்கள் விளக்கினோம்:

இரண்டு வர்க்கங்களின் சமரசப்படுத்த முடியாத இரண்டு நலன்கள் ஒன்றுக்கொன்று எதிராக நிற்கின்றன. முதலாளிகளைப் பொறுத்த வரையில், இது அவர்களின் இலாப நலன்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மற்றும் செல்வம் யாராலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் அவசியமான ஒன்றாக இருந்தது. அவர்களின் நலன்களைப் பாதிக்கும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படக்கூடாது. தொழிலாள வர்க்கம் தனியார் இலாபத்தில் இருந்து அல்ல, மாறாக சமூகத் தேவையிலிருந்து தொடங்கி, மனிதகுலத்தின் பரந்தளவிலான நலன்களைக் குறித்து அக்கறை கொண்டுள்ளது.

இந்தப் பகுப்பாய்வு, பெருந்தொற்றுக் காலம் முழுவதும் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

வேலைக்கு மீண்டும் திரும்புவதற்கான பிரச்சாரம்: வோல் ஸ்ட்ரீட் மரணத்திற்கு விருந்தளிக்கிறது

இந்தத் தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே, அதனை முழுமையாக ஒழித்துவிடுவதற்கு நடவடிக்கை எடுக்காத நாடுகளில், ஆளும் வர்க்கத்தால் எடுக்கப்பட்ட ஒவ்வொரு செயல்பாடும் நிதியியல் தன்னலக்குழுவின் நலன்களிலிருந்து உத்தரவிடப்பட்டிருந்தன. மக்களின் உயிர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில், ட்ரம்ப் நிர்வாகம், ஒட்டுமொத்த அரசியல் அமைப்பின் ஆதரவுடன், வரலாற்றிலேயே செல்வந்தர்களுக்கான மிகப்பெரியளவிலான அரசாங்க பிணையெடுப்பை வடிவமைத்தது.

வாஷிங்டனில் மார்ச் 13, 2020 அன்று வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் கொரோனா வைரஸ் குறித்து ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசுகிறார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் 2020 சர்வதேச இணையவழி மே தினப் பேரணியைத் தொடங்கி வைத்து உரையாற்றிய உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த், இந்தப் பெருந்தொற்று உலக வரலாற்றில் ஒரு “தூண்டுதல் நிகழ்வு” என வகைப்படுத்தினார், இது “முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் தார்மீக திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது” மற்றும் “முதலாளித்துவ அரசாங்கங்களின் கொள்கைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தேவைகளையும் மற்றும் நலன்களையும் கட்டுப்படுத்தி தீர்மானிக்கும் பெருநிறுவன-நிதியியல் தன்னலக்குழுக்களுக்கு இடையே இருக்கும் பிரிக்கமுடியாத இடைவெளியை அம்பலப்படுத்தியிருக்கிறது.”

அப்போது முழுவீச்சில் வேலைக்குத் மீண்டும் திரும்ப வைப்பதற்கான பிரச்சாரத்தை உந்தும் அடிப்படை பொருளாதார சக்திகளை விளக்கி, நோர்த் இவ்வாறு கூறினார்:

பணவியல் புழக்க (quantitative easing) கொள்கைகளில் ஏற்படுத்திய புதிய திருப்பமாக, பெடரல் ரிசர்வின் சொத்துக் கொள்முதல் ஒரு நாளைக்கு 80 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கப்பட்டிருந்தது.

பெடரல் ரிசர்வின் பரந்தளவிலான கடன் விரிவாக்கத்திற்கு சேவை செய்யத் தேவைப்படும் வருவாய்க்கு, தொழிலாள வர்க்கத்தின் சுரண்டலை அதிதீவிரப்படுத்தக் கோருகிறது. இந்தத் தேவைதான், தொழிலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சூழ்நிலையிலும் அவர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப வைப்பதற்கு, தூண்டப்படுகின்ற, ஒரு பிரச்சாரத்தை ஊடகங்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

ஆளும் உயரடுக்கிற்கு டிரில்லியன் கணக்கான டாலர்களை கையளித்திருப்பது பரவலான வெறுப்பையும் கோபத்தையும் தூண்டியதுடன் மட்டும் நிற்கவில்லை. முதலாளித்துவ அமைப்புமுறைக்கான அங்கீகரிப்பு எதன் மீது தங்கியிருக்கிறதோ அந்த ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் தத்துவார்த்த அடித்தளத்தையும் பலவீனப்படுத்தியிருக்கிறது. முதலாளி பணத்தை முதலீடு செய்கின்றார் அதனால் உருவாகும் ஆபத்திற்கும் முகம்கொடுக்கின்றார் என்பதுதான் ஓயாமல் பிரகடனம் செய்யப்பட்டு வந்திருப்பதாகும். ஆனால் இந்தக் கூற்றுக்கள் எதுவும் உண்மையைக் கொண்டிருக்கவில்லை. நிதி ஆதாரங்கள் சமூகத்தால் வழங்கப்படுகின்றன மற்றும் முடிவற்ற பிணையெடுப்புகளின் வாக்குறுதி மூலமாக ஆபத்து என்பதே இல்லாமல் செய்யப்படுகிறது.

மீண்டும் வேலைக்குத் திரும்ப வைப்பதற்கான முயற்சி வேகமாக உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்க தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப நிர்பந்திக்கப்பட்ட நிலையில், வோல் ஸ்ட்ரீட் இலத்தீன் அமெரிக்கா உற்பத்தியை இன்னும் விரைவுபடுத்த வேண்டும் என்று கோரியது. இதை ஜூலை 15, 2020 முன்னோக்கில், கீழ்கண்டவாறு நாங்கள் குறிப்பிட்டோம்:

தற்போது, தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு திரும்பவைப்பதற்கான தீவிரமுயற்சி அமெரிக்காவில் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்த சமயத்தில், பெருமளவிலான நோய்தொற்று பரவலால் வாகன தொழிற்சாலைகள், இறைச்சி பொதியிடும் நிறுவனங்கள், பண்ணைகள் மற்றும் பண்டகசாலைகள் உட்பட, வட அமெரிக்காவின் வேலையிடங்கள் மரணப் பொறிகளாக மாறியிருந்தன. அமெரிக்கா தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப வலியுறுத்தி வரும் நிலையில், இலத்தீன் அமெரிக்கா உற்பத்தியை மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்று வோல் ஸ்ட்ரீட் கோருகிறது.

ஐரோப்பாவில், இதேபோன்ற குற்றவியல் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டன. ஜேர்மனியில், விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை மீறி அரசாங்கம் மீண்டும் முழு அடைப்பிலிருந்து வெளிவர அழுத்தம் கொடுத்தது. ஐரோப்பாவின் ஆரம்ப தொற்றுநோயின் பரவலின் குவிமையமாக இருந்த இத்தாலியில், தொழிலாளர்கள் தொழிற்சாலைகளுக்குத் திரும்ப நிர்பந்திக்கப்பட்டனர், இது தொற்றுநோய்களின் புதிய அலைகளுக்கு இட்டுச் சென்றது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஐரோப்பிய பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சி (ஜேர்மனி), சோசலிச சமத்துவக் கட்சி (பிரிட்டன்), சோசலிச சமத்துவக் கட்சி (பிரான்ஸ்), மற்றும் சோசலிச சமத்துவக் குழு (துருக்கி) ஆகியவை “ஐரோப்பாவில் கோவிட்-19 மீண்டும் ஏற்படப்போகும் பரவலைத் தடுக்க ஒரு பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்காக!” என்று தலைப்பிட்ட ஒரு கூட்டாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டன. இந்த அறிக்கையானது கண்டம் முழுவதும் பெருந்தொற்று வேண்டுமென்றே பரப்பும் கொள்கையை அம்பலப்படுத்தியதுடன், ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு போராட்ட வேலைத்திட்டத்தை விவரித்துக் காட்டியது.

ஆளும் உயரடுக்குகள் தங்கள் மக்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப வற்புறுத்தி வைரஸ் பரவுவதை எளிதாக்கிய அதேவேளை, ஆளும் உயரடுக்குகள் சர்வதேச அளவில் வூஹான் ஆய்வக பொய்யை உருவாக்கி தங்களின் குற்றவியல் கொள்கைகளால் ஏற்படும் வெகுஜன தொற்றுகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு சீனா மீது பழியைத் திருப்ப முயற்சித்தன.

ஆரம்பத்தில் ட்ரம்பின் பாசிசவாத ஆலோசகர் ஸ்டீவ் பானனால் வகுக்கப்பட்ட தீவிர வலதுசாரிக் கோட்பாடு, டாக்டர் பீட்டர் டஸ்ஸாக் சர்வதேச அளவில் சக ஊழியர்களுடன் இணைந்து பணிபுரியும் சீன விஞ்ஞானிகளே உலகளவில் கோவிட்-19 ஐ கட்டவிழ்த்து விட்டதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று பொய்யாகக் கூறியது. இந்தத் தொற்றுநோயின் ஐந்தாண்டு நிறைவில், முற்றிலும் நிராகரிக்கப்பட்ட இந்தச் சதிக் கோட்பாடு, சீனாவுடன் மேற்கொள்ளவிருக்கும் போர் தயாரிப்புகளில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்கு ஏற்ப நியூ யோர்க் டைம்ஸாலும் சர்வதேச அளவிலும் மீண்டுமொருமுறை புத்துயிர் கொடுக்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசி தேசியவாதமும் மற்றும் பெருந்தொற்று நோய் மூலம் இலாபம் ஈட்டுதலும்

2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கோவிட்-19 க்கு எதிரான பயனுள்ள தடுப்பூசிகளை உருவாக்கியது விஞ்ஞானத்தின் ஒரு வெற்றியாகும். எவ்வாறாயினும், இந்த தடுப்பூசிகளின் விநியோகம் மூலம் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் கொடூரமான தர்க்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

கோவிட்-19 தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் மீதான காப்புரிமை பாதுகாப்புகளை ஒழிப்பதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) தொடர்ந்து அறிவுறுத்தியது. அதேவேளையில், தடுப்பூசிகளின் அபிவிருத்தி, உற்பத்தி மற்றும் விநியோகம் மருந்து நிறுவனங்களின் கைகளிலிருந்து பறிக்கப்பட்டு பொதுவுடைமை மற்றும் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. ஃபைசர் (Pfizer), மாடர்னா (Moderna) மற்றும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) போன்ற மருந்து நிறுவனங்கள் பில்லியன் கணக்கான மக்களுக்கு உயிர் காக்கும் தடுப்பூசிகளுக்கான அணுகல் மறுக்கப்பட்ட நிலையில், தொற்றுநோயிலிருந்து எப்படி அபரிமிதமான இலாபம் ஈட்டுகின்றன என்பதை நாங்கள் அம்பலப்படுத்தினோம்

தடுப்பூசி தேசியவாதம் குறித்த உலக சோசலிச வலைத் தள (WSWS) பகுப்பாய்வு உலகளாவிய முதலாளித்துவ அமைப்பு பற்றிய மார்க்சிச புரிதலில் அடித்தளமாக இருக்கிறது. பெருந்தொற்று நோய் எவ்வாறு ஏகாதிபத்திய சுரண்டலை தீவிரப்படுத்தியது என்பதையும், உலகளாவிய தடுப்பூசி சமத்துவத்திற்கான போராட்டம் எவ்வாறு முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது என்பதையும் நாங்கள் விளக்கினோம்.

இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய டெல்டா அலை

பெருந்தொற்று நோய் மூலம் இலாபம் பெறுவதற்கான அணுகுமுறையின் விளைவுகள் மார்ச்-ஜூன் 2021 இல் இந்தியாவில் பேரழிவுகரமான டெல்டா அலையின் போது மிகவும் துயரமான முறையில் நிரூபிக்கப்பட்டன, அங்கு பாசிசவாத மோடி அரசாங்கத்தால் மேற்பார்வையிடப்பட்ட “கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கை மூலோபாயம் வெறும் மூன்று மாத காலத்திற்குள் நாற்பது இலட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது.

நெருக்கடி ஆழமடைந்த நிலையில், நிரம்பி வழியும் மருத்துவமனைகள், ஆக்சிஜன் பற்றாக்குறைகள், பெரியளவில் தகனங்கள், நெருக்கடியின் உண்மையான நிலையை அரசாங்கம் வேண்டுமென்றே மூடிமறைத்தல் என இந்தியா முழுவதிலும் கட்டவிழ்ந்து வந்த கொடூரமான காட்சிகளை ஆவணப்படுத்தி உலக சோசலிச வலைத் தளம் அன்றாடம் கட்டுரைகளை வெளியிட்டது. ஏப்ரல் 23, 2021 முன்னோக்கில், நாங்கள் எழுதினோம்:

இந்தியாவில் பேரழிவு என்பது தேசிய எல்லைகளை மதிக்காத மற்றும் கடவுச்சீட்டு தேவைப்படாத ஒரு வைரஸை எதிர்கொள்ளும் ஒரு உலகளாவிய பேரழிவாகும் என்று வலியுறுத்தப்பட வேண்டும். அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் தலைமையில், பெருந்தொற்று பரவுவதைத் தடுக்கும் எந்தவொரு திட்டமிட்ட முயற்சியையும் கைவிட வேண்டும் என்ற உலக அரசாங்கங்களின் முடிவானது கோவிட்-19 இன்னும் கடுமையான, சாத்தியமான தடுப்பூசி-எதிர்ப்பு திரிபுகளாக மாற்றமடையவும் அபிவிருத்தி செய்யவும் முடிந்த நிலைமைகளைத்தான் உருவாக்கியுள்ளது. கோவிட்-19 ஐ ஒழிப்பதற்கான ஒருங்கிணைந்த உலகளாவிய, விஞ்ஞான அடிப்படையிலான முயற்சியானது முதலாளித்துவ இலாபத்தை குறிக்கோளாகக் கொள்ளாமல், மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதில் முன்னறிவிக்கப்பட்டாலொழிய, இந்தப் போக்கு அப்படியே தொடரும். இந்தியாவில் பரவும் தற்போதைய பெருந்தொற்று காட்டுத்தீயில் இருந்து வரும் தீப்பொறிகள் போல உலகம் முழுவதும் தீயை பற்றவைக்கப்போகிறது. உண்மையில், இந்திய இரட்டை-திரிபு வகைத் தொற்றுக்கள் [B.1.617.2 Delta) இப்போது வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கிலும் பரவுகின்றன என்று அறிவிக்கப்படுகின்றன.

மே 25, 2021 அன்று ஸ்ரீநகரில் உள்ள ஒரு தகனத்தில், கோவிட்-19 நோயால் இறந்த ஒருவரின் சிதையில் குடும்ப உறுப்பினர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

இந்தியாவில் டெல்டா அலையானது தடுப்பூசி தேசியவாதம் மற்றும் பெருந்தொற்று நோய் இலாபவெறி போன்ற பிரச்சினைகளையும் அடிக்கோடிட்டுக் காட்டியது. செல்வந்த நாடுகள் தடுப்பூசிகளை பதுக்கி வைத்துக்கொண்டதால், இந்தியாவும் பிற வளரும் நாடுகளும் போதுமான விநியோகம் கிடைக்காமல் இருந்தன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உலகளவில் முழுமையாக ஒழிப்பதற்கான போராட்டத்திற்கு தலைமை தாங்குகிறது

இந்தத் தொற்றுநோயின் ஆரம்பத்தில் இருந்தே விஞ்ஞான அடிப்படையிலிருந்து உலகளவில் ஒழிப்பதற்கான மூலோபாயத்திற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) வாதிட்டுவருகிறது, கோவிட்-19 பரவுவதற்கு ஒரு மனித ஊட்டுயிரியைச் சார்ந்துள்ளது மற்றும் பரவுவதற்கான அனைத்து வழிகளையும் துண்டிப்பது மட்டுமே அதை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.

ஆகஸ்ட் 21, 2021 முன்னோக்கில், உலக சோசலிச வலைத் தளம் இவ்வாறு வாதிட்டது:

ஆகவே, இந்தப் பெருந்தொற்று காலம் முழுவதிலும் முன்னணி தொற்றுநோய் நிபுணர்கள், நுண்கிருமியியல் நிபுணர்கள் மற்றும் மற்றய விஞ்ஞானிகள் முன்வைத்த கொள்கைகளின் அடிப்படையில், இதை முழுமையாக நீக்கம் செய்வது மட்டுமே ஒரே நம்பகமான மூலோபாயமாகும். கோவிட்-19 ஐ எதிர்த்து இந்த வைரஸை ஒரேயடியாக முழுவதுமாக நீக்க, உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள ஒவ்வொரு ஆயுதத்தையும் உலகளவில் பயன்படுத்தவேண்டியது இந்த நடவடிக்கைகளில் உள்ளடங்கி இருக்கிறது.

இந்த இன்றியமையாத அறிக்கை, அந்த நேரத்தில் பல்வேறு நாடுகளில் நடைமுறையில் இருந்த “தணிப்புவாத” திட்டங்களை முற்றிலும் கேள்விக்குள்ளாக்கியது. இத்திட்டங்களை, வைரஸின் விஞ்ஞானப் பண்புகளுக்கும் ஆளும் வர்க்கத்தின் நிதி நலன்களுக்கும் இடையிலான சமரசத்தை மேற்கொள்ளும், தெளிவற்ற மற்றும் இழிந்த அரசியல் நோக்கமுள்ள நடவடிக்கைகளின் குழப்பமூட்டும் தொகுப்பாக வரையறுத்தது. இதையே “தங்க நடுநிலைப் பாதை தொற்றுநோயியல்” என்ற பித்துப்பிடித்த கொள்கை எனக் குறிப்பிட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

முதலாளித்துவ அரசியலில் சீர்திருத்தவாதம் என்பது என்னவோ, அதுதான் நோய்தொற்றுயியலில் தணிப்பு மூலோபாயம் என்பதுமாக இருக்கிறது. படிப்படியான மற்றும் சிறிய சிறிய சீர்திருத்தங்கள், காலப் போக்கில், இலாபகர அமைப்புமுறையின் தீமைகளைக் குறைத்து அனைத்தையும் சீர்படுத்திவிடும் என்று சீர்திருத்தவாதி நம்பிக்கையை விதைப்பது போல, கோவிட்-19 பொதுவான சளிக்காய்ச்சலை விட சற்று கடுமையான ஏதோவொரு நோயாக மாறிவிடும் என்ற பிரமையை இந்த தணிப்புவாதிகள் (mitigationists) ஊக்குவித்துக்கொண்டிருக்கிறார்கள். இது இந்த பெருந்தொற்று பற்றிய விஞ்ஞானத்திலிருந்து முற்றிலும் தடுக்கப்பட்ட ஒரு எட்டமுடியாத கனவாகும்.

யதார்த்தத்தில், வைரஸ் பரவும் முறையில், அது புதிய திரிபுகளாக மாறிக்கொண்டே இருக்கும், அவை அதிக தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடியவை, அதிக கொடியவை மற்றும் தடுப்பூசிகளை எதிர்க்கும் தன்மை மேலும் அனைத்து மனிதகுலத்தையும் அச்சுறுத்தும். இது உலகளவில் முழுமையாக ஒழிக்கப்படாவிட்டால், நீறுபூத்த நெருப்பாக தங்கியிருக்கும் கோவிட்-19 தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து, புதிய வைரஸ்கள் பரவும் நிலைமைகளை உருவாக்கும்.

முழுமையாக ஒழிப்பதற்கு உலக சோசலிச வலைத் தளத்தின் வாதங்கள் கற்பனாவாத சிந்தனையை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக இந்த முழுமையாக ஒழித்தல் அணுகுமுறை வெற்றியடையும் என்பதற்கான விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையைக் கொண்டிருக்கிறது. 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு வெகுஜன சமூகமான சீனாவிலும், அட்லாண்டிக் கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளிலும் இந்த முழுமையாக ஒழிக்கும் மூலோபாயம் மிகவும் பயனுள்ளவகையில் நிரூபிக்கப்பட்டது. இந்த வெற்றிகள் 2020 மார்ச்-ஏப்ரல் மாதங்களிலும், அதற்குப் பிறகும், தடுப்பூசிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பே நிகழ்ந்தவையாகும். கோவிட்-19 ஐ ஒழித்த பிறகு, இந்த நாடுகள் டெல்டா திரிபு மற்றும் சர்வதேச பயணங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட பிறவற்றின் தொடர்ச்சியான பெருந்தொற்று நோய் பரவலை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடின.

அக்டோபர் 24, 2021 இணையவழிக் கூட்டத்தில் பங்கேற்பாளர்களில் சிலர் [Photo: WSWS]

அக்டோபர் 24, 2021 “தொற்றுநோயை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது” என்ற வெபினார் (webinar) இணையவழிக் கூட்டத்தின் மூலம் எங்கள் விஞ்ஞானரீதியான அணுகுமுறை மேலும் மேம்படுத்தப்பட்டது, இது முன்னணி விஞ்ஞானிகளையும் உலக சோசலிச வலைத் தளத்தையும் ஒன்றிணைத்து முழுமையாக ஒழித்தல் மூலோபாயத்தை விவாதிக்க வைத்தது. இதைத் தொடர்ந்து, மில்லியன்கணக்கான தடுக்கக்கூடிய உயிரிழப்புகளுக்கு வழிவகுத்த குற்றவியல் கொள்கைகளை அம்பலப்படுத்த நவம்பர் 22, 2021 அன்று தொடங்கப்பட்ட கோவிட்-19 தொற்றுநோய் குறித்த உலகளாவிய தொழிலாளர்களின் விசாரணை (Inquest into the COVID-19 Pandemic) பற்றிய கூட்டம் நடந்தப்பட்டது.

உலகளாவிய தொழிலாளர்களின் விசாரணை என்பது இந்தப் பெருந்தொற்றின் போது ஆளும் வர்க்கத்தின் குற்றங்களை ஆவணப்படுத்திய ஒரு மிகச்சிறந்த ஒரு முயற்சியாக இருந்தது. தொழிலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களிடமிருந்து அது சாட்சியங்களைச் சேகரித்தது, அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் பெருநிறுவன முறைகேடுகள் குறித்த ஆதாரங்களைத் தொகுத்தது, அத்துடன் பெருமளவிலான உயிரிழப்புகளுக்கு இட்டுச் சென்ற திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொள்கைகளை அம்பலப்படுத்தியது. விசாரணையை அறிவிக்கும் அறிக்கையில் நாங்கள் விளக்கியுள்ளபடி:

முதன்முதலில் SARS-CoV-2 கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தவிர்த்திருக்கக்கூடிய மில்லியன்கணக்கான உயிரிழப்புகளுக்கு பொறுப்பான கொள்கைகளை நியாயப்படுத்த, முன்வைக்கப்படுகின்ற மூடிமறைப்புகள், பொய்மைப்படுத்தல்கள் மற்றும் தவறான தகவல்கள் மொத்தத்தையும் தகர்ப்பதற்கு, இந்த விசாரணை தேவைப்படுகிறது.

பைடென் நிர்வாகம் “என்றென்றும் கோவிட்” கொள்கையை முன்னெடுக்கிறது

பெருந்தொற்று தொடர்ந்து பரவியநிலையில், முதலாளித்துவ அரசாங்கங்கள் வைரஸைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் போலித்தனத்தை கூட பெருமளவில் கைவிட்டன. அதற்குப் பதிலாக, அவர்கள் பெருந்தொற்று மற்றும் உயிரிழப்புகளை இயல்பாக்க ஒரு மிகப்பெரும் பிரச்சார நடவடிக்கையை மேற்கொண்டனர்.

செப்டம்பர் 20, 2022 அன்று வெளியிடப்பட்ட கோவிட், முதலாளித்துவம் மற்றும் வர்க்கப் போர்: தொற்றுநோயின் ஒரு சமூக மற்றும் அரசியல் காலவரிசை தொகுதி 1 இன் அறிமுகத்தில், நாங்கள் எழுதினோம்:

இந்தப் பிரச்சார நடவடிக்கை வெகுஜன நனவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, உலகெங்கிலும் பத்து கோடிக்கணக்கான மக்களை முகக்கவசம் அணிவதை நிறுத்தவும், தற்போதைய கோவிட்-19 அச்சுறுத்தலுக்கு எதிராக அவர்களின் விழிப்புணர்வை கைவிடவும் ஊக்குவிப்பதன் மூலம் அவர்களை நிராயுதபாணியாக்குகிறது. சமூகம் “வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்” என்பதே உலகெங்கிலும் அரசியல்வாதிகளால் மீண்டும் மீண்டும் கூறப்படும் இந்தக் கொள்கையை வழிநடத்தும் மந்திரமாகும். நடைமுறையில், இந்தக் கீழான முழக்கம் நிரந்தர வெகுஜன மரணம் மற்றும் உடல் பலவீனத்தை இயல்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பைடென் நிர்வாகம் இந்த அணுகுமுறையைத் தொடர்ந்தது மற்றும் ஆழப்படுத்தியது, இது “என்றென்றும் கோவிட்” கொள்கையில் உச்சக்கட்டத்தை அடைந்தது, இது இன்றும் நடைமுறையில் உள்ளது. ஜூலை 26, 2022 கட்டுரையில், நாங்கள் குறிப்பிட்டோம்:

அமெரிக்க மக்கள் “கொரோனாவுடன் வாழக் கற்றுக்கொள்ளவில்லை”; அவர்கள் அதற்குள் கட்டாயமாக தள்ளப்பட்டனர். “விஞ்ஞானத்தைப் பின்பற்றுவதாக” தெரிவித்த ஒருவரைத் தேர்ந்தெடுத்தபோதிலும், ஆனால் உண்மையில் அவர் பின்பற்றியது பணம்தான் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அவர்களுக்கு பொய் சொல்லப்பட்டுள்ளது. இந்தத் பெருந்தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் நிதியியல் உயரடுக்கின் இலாப நலன்களுடன் முற்றிலும் மோதலில் உள்ளன, ஆகவே பொது சுகாதாரம் தனியார் பண நலனுக்காக தியாகம் செய்யப்படுகிறது.

பொது சுகாதார நடவடிக்கைகளைக் கைவிடுவது 2023 இல் துரிதப்படுத்தப்பட்டது, இது உலக சுகாதார நிறுவனம் (WHO) மே 5, 2023 உச்சக்கட்டத்தை தொட்டது, சர்வதேச பொது சுகாதார அவசரநிலை நிறுவனம் (PHEIC) கோவிட-19 ஐ முடிவுக்கு கொண்டுவந்தது. நடைமுறையில், உலகின் முன்னணி பொது சுகாதார நிறுவனம் “ பெருந்தொற்று நோய் முடிந்துவிட்டது” என்ற உலகளாவிய உரிமை கோரல்களுக்கு ஒப்புதல் அளித்தது.

கோவிட்-19 பரவுவதை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டதோடு, விஞ்ஞானத்திற்கு எதிரான தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டன. அதேசமயம், ஆளும் வர்க்கத்தினுள் இனத்தூய்மைவாதக் கோட்பாடுகள் இயல்பான ஒன்றாக மாற்றப்பட முயற்சி செய்யப்பட்டது. இந்த நிலைப்பாட்டைப் பற்றிய உலக சோசலிச வலைத்தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு, 2024 புத்தாண்டு அறிக்கையில் இவ்வாறு தொகுத்தளித்தது:

“என்றென்றும் கோவிட்” என்பதை உலகளவில் ஏற்றுக்கொள்வது ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளுக்குள்ளும் தேர்ந்தெடுக்கப்பட்ட மனித இனப்பெருக்கத்தை ஆதரிக்கும் இனத்தூய்மைவாத கருத்தாக்கங்களின் (Eugenics என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் இனப்பெருக்கம் மூலம் மனிதர்களை மேம்படுத்த முடியும் என்ற விஞ்ஞானமற்ற தவறான கோட்பாடு) புதுப்பிப்பதை அவசியமாக்கியுள்ளது. பெருந்நோய்த் தொற்று, உடல் பலவீனம் மற்றும் மரணத்தின் தொடர்ச்சியான அலைகளை நியாயப்படுத்துவதற்காக, வயதானவர்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் உத்தியோகபூர்வ சமூகத்தால் பயனற்றவர்களாகக் கருதப்பட வேண்டும்…

பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டமானது, பீட்டர் ஹோட்டஸ் (Peter Hotez) போன்ற விஞ்ஞானிகளின் உயிருக்கு எதிரான சரீர ரீதியான அச்சுறுத்தல்கள் உட்பட, விஞ்ஞான சமூகத்தின் மீதான இடைவிடாத தாக்குதலால் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒரு பிரச்சாரத்தில் ஜனநாயகக் கட்சி தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், பல தசாப்த கால வரவுசெலவுத் திட்ட வெட்டுக்களுக்குப் பிறகு பொதுக் கல்வி கீழ்நோக்கி வீழ்ச்சியடைந்துள்ளது. இது, இப்போது அனைத்து கூடுதல் பெருந்தொற்று நிதியும் தீர்ந்து வருவதால் அவை கூட்டப்படுகின்றன. அறிவொளிக்குப் (Enlightenment) பிந்தைய ஒவ்வொரு முற்போக்கான வளர்ச்சியும், பொது சுகாதாரத்தின் அனைத்து அடிப்படைக் கொள்கைகளும், பாசிசம் மற்றும் அணு ஆயுதப் போரை நோக்கிச் செல்லும் ஆளும் வர்க்கத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகின்றன.

“கோவிட் உடன் வாழ்வது” பிரச்சாரத்தின் ஒரு முக்கியமான அம்சம், ஆரம்ப நோய்த்தொற்றுக்குப் பிறகு மாதங்கள் அல்லது ஆண்டுகள் நீடிக்கும் உடலைப் பலவீனப்படுத்தும் அறிகுறிகளின் சிக்கலான நெடுங் கோவிட் நோயை ( Long COVID) வேண்டுமென்றே குறைத்து மதிப்பிடுவதாகும்.

நெடுங் கோவிட் நோயின் மிகவும் பொதுவான சில அறிகுறிகள்

நெடுங் கோவிட் ஒரு வெகுஜனத்தை இயற்கையாகவே முடக்கக்கூடிய நிகழ்வாக அமையும் என்பதையும், அதற்கான விரிவான பொது சுகாதார எதிர்வினை தேவைப்படுவதையும் அங்கீகரிக்க உலக சோசலிச வலைத்தளம் தொடக்கத்திலிருந்தே திட்டமிட்டபடி போராடி வருகிறது. 2020 அக்டோபர் 26 ஆம் தேதி வெளியான கட்டுரையில், “கோவிட் நீடித்த அறிகுறிகளுடன் தொடரும் நோயாளிகள்” பற்றிய முதலாவது முறையான ஆய்வுகளையும், நெடுங் கோவிட் குழந்தைகளையும் பாதிக்கக்கூடும் என்ற வளர்ந்துவரும் விஞ்ஞானச் சான்றுகளையும் வெளியிட்ட முன்னோடிகளில் நாங்கள் முதன்மையாக இருந்தோம். நெடுங் கோவிட் பாதிப்படைந்தோருக்கான விரிவாக்கப்பட்ட மருத்துவ சேவை, ஆராய்ச்சி, மற்றும் பொருளாதார ஆதரவுக்காக நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். அதேசமயம், தொற்றுநோயை ‘இயல்பாக்கும்’ முதலாளித்துவ உந்துதலால், பல்லாயிரக்கணக்கானோர் உலகம் முழுவதும் தனிமையிலும் அவல நிலைகளிலும் தள்ளப்பட்டிருப்பதை நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம்.

சீனாவில் பூச்சிய-கோவிட் கொள்கை பேரழிவுக்காக கைவிடல்

சீனாவின் பூச்சிய-கோவிட் கொள்கை (Zero-COVID policy) மேலும் அதை நவம்பர் 2022 இல் அது கைவிடப்பட்டது குறித்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வு, சீன அரசின் முதலாளித்துவ வர்க்கத் தன்மை மற்றும் “சீன குணாம்சங்களுடனான சோசலிசத்தின்” முரண்பாடுகள் குறித்த ஒரு கோட்பாட்டு ரீதியான ட்ரொட்ஸ்கிச புரிதலை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

சீனாவின் பூச்சிய-கோவிட் கொள்கையைத் தொடர்ந்து ஆதரித்து மற்றும் உலகளவில் அதை விரிவுபடுத்த வாதிட்ட உலகின் ஒரே சோசலிச வெளியீடாக உலக சோசலிச வலைத் தளம் (WSWS) மட்டுமே இருந்தது. டிசம்பர் 2021 விசாரணை சமர்ப்பிப்பு, “சீனாவில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மற்றும் தவறாக சித்தரிக்கப்பட்ட பூச்சிய கோவிட் கொள்கை” சீனாவின் அணுகுமுறையின் விரிவான விஞ்ஞான பகுப்பாய்வை வழங்கியது, முதலாளித்துவ நாடுகள் கோவிட் நோயை கட்டுப்பாடின்றி பரவ அனுமதித்தபோது அது எவ்வாறு வைரஸை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது என்பதை விளக்குகிறது.

நவம்பர் 15, 2022 அன்று வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், சீனா பூச்சிய-கோவிட் கொள்கையை முடித்துவைக்கப்போகிறது என்பதை சரியாக முதலில் நமது செய்தி ஊடகமே அடையாளம் கண்டது, இது பேரழிவை ஏற்படுத்தப்போகிறது என்ற நிலைப்பாட்டை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம் மற்றும் எச்சரித்தோம்,.

பெய்ஜிங்கில் உள்ள ஒரு மருத்துவமனையின் அவசர வார்டில் நோயாளிகள் நரம்பு வழியாக இரத்த ஓட்டத்தில் கலக்கும் மருந்து சொட்டுகளைப் பெறுகிறார்கள், வியாழக்கிழமை, ஜனவரி 5, 2023.

டிசம்பர் 16, 2022 முன்னோக்கு கட்டுரையில், உலக சோசலிச வலைத் தளம், இந்த பாரிய மரணக் கொள்கையைத் நடைமுறைப்படுத்துவதில் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அவற்றின் ஊடகங்கள், அத்துடன் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆற்றிய குற்றகரமான பங்கைக் கண்டனம் செய்தது. நாங்கள் இவ்வாறு வலியுறுத்தினோம்:

பூச்சியக்-கோவிட் செயல்முறையை நிறுத்த வேண்டும் என்று கோரியது சீன மக்கள் அல்ல, மாறாகச் சர்வதேச நிதி மூலதனமும் மேற்கத்திய ஊடகங்களில் அதன் ஊதுகுழல்களும்தான். அவர்கள் இதற்காகச் கூச்சலிட்டு, சீனாவின் பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு எதிராகச் சர்வதேச பொதுக் கருத்தை நஞ்சூட்ட முடிந்த அனைத்தையும் செய்தனர்.

மார்ச் 2023 இல் வெளியிடப்பட்ட இரண்டு பகுதி தொடரில், சர்வதேச அளவில் நடுத்தர வர்க்க போலி-இடது அரசியல் போக்குகள் எவ்வாறு சீனாவின் பூச்சிய-கோவிட் கொள்கையைகைவிட வேண்டும் என்று சேர்ந்து பாடுவதற்கு ஒன்றாக இணைந்தன என்பதை நாங்கள் அம்பலப்படுத்தினோம்.

இது, இந்த பெருந்தொற்று நோய் முழுவதிலும் “கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி” கொள்கைக்கான போலி-இடதுகளின் ஆதரவின் தொடர்ச்சியையும் ஆழத்தையும் குறித்துக் காட்டியுள்ளது. மாபெரும் பாரிங்டன் பிரகடனத்தின் இணை-ஆசிரியர்களில் ஒருவரான மார்ட்டின் குல்டோர்ஃப் உடனான ஒரு சாதகமான நேர்காணலை செப்டம்பர் 2020 இல் ஜாக்கோபின் பிரசுரித்தது அது அவர்களின் ஆழ்ந்த பிற்போக்குத்தனமான அணுகுமுறையின் ஆரம்ப அறிகுறியாக இருந்தது, இதை உலக சோசலிச வலைத் தளம் பொருத்தமாக “மரணத்தின் அறிக்கை” என்று வகைப்படுத்தியது.

நவீன ஏகாதிபத்திய சகாப்தத்தில், அனைத்து சமூக மற்றும் ஜனநாயக பிரச்சினைகளும் உலக சோசலிசப் புரட்சியின் மூலம் மட்டுமே அடிப்படையில் தீர்க்கப்பட முடியும் என்ற மார்க்சிச புரிதலின் அடிப்படையில் சீனாவில் பூச்சிய-கோவிட் கொள்கை நீக்கப்பட்டதற்கு எங்களுடைய எதிர்ப்பு அமைந்திருந்தது. சீனாவின் பூச்சிய-கோவிட் கொள்கை கைவிடலுக்கு போலி இடதுகளின் ஆதரவு குறித்த தொடரில் நாங்கள் இவ்வாறு எழுதியது:

சீனா, நியூசிலாந்து மற்றும் பிற நாடுகளின் அனுபவத்தால் காட்டப்பட்டதைப் போல, பூச்சிய-கோவிட் பொது சுகாதார மூலோபாயம் ஒரு புரட்சிகர கொள்கை கூட அல்ல. ஆயினும், நிரந்தரப் புரட்சி கோட்பாடு குறித்த தனது விளக்கத்தில் லியோன் ட்ரொட்ஸ்கி தெளிவுபடுத்தியது போல், நவீன ஏகாதிபத்திய சகாப்தத்தில் அனைத்து சமூக மற்றும் ஜனநாயகப் பிரச்சினைகளும் உலக சோசலிசப் புரட்சியின் அடிப்படையில் மட்டுமே தீர்க்கப்பட முடியும்.

பெருந்தொற்றுக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலையீட்டிற்கும் தொழிலாள வர்க்கத்தின் பதில்

இந்தப் பெருந்தொற்று நோய் முழுவதிலும், ஒவ்வொரு தொழில்துறையிலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொழிலாளர்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்துள்ளன. அவர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பும் கொலைவெறி பிரச்சாரத்தை எளிதாக்கினர் மற்றும் ஆளும் உயரடுக்குகளின் மற்றும் அவர்களின் ஊடகங்களின் விஞ்ஞான-விரோத “என்றென்றும் கோவிட்” பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்டனர், மேலும் கோவிட்-19 மற்றும் நெடுங் கோவிட் இன் தற்போதைய ஆபத்துக்கள் குறித்து தொழிலாளர்களுக்குக் கல்வியூட்ட எதுவும் செய்யவில்லை.

முதலாளித்துவ வர்க்கத்தின் இந்த பெருநிறுவன முகவர்களுக்கு எதிராக, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஆகியவை பொது சுகாதாரத்திற்காகப் போராடுவதற்கும் அவர்களின் உயிர்கள் மற்றும் சமூக நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தைக் கொண்டு சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்க முனைந்துள்ளன. இதற்கு ஆரம்ப எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக, மார்ச் 14, 2020 அன்று “கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வாகனத் தொழில்துறையை மூடு!” என்று தலைப்பிட்டு சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) வெளியிட்ட ஒரு அறிக்கை ஆயிரக்கணக்கான வாகனத்துறை தொழிலாளர்களால் வாசிக்கப்பட்டதுடன், டெட்ராய்ட் பெருநகர பிராந்தியத்தில் வேலைநிறுத்தங்களைத் துரிதப்படுத்த உதவியது, அது விரைவில் வாகன தொழில்துறையை மூடியது.

சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) கட்டியெழுப்புவதற்கான போராட்டம் என்பது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான பலத்தை அணித்திரட்டுவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எடுத்த ஒரு இன்றியமையாத முன்முயற்சியாகும். சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) ஏப்ரல் 23, 2021 தொடங்கப்பட்டபோது வெளியிட்ட அறிக்கை பெருந்தொற்று நோயின் மைய முக்கியத்துவத்தை வலியுறுத்தி இவ்வாறு அறிவித்தது:

தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் உள்ள தொழிலாளர்களின் புதிய, சுயாதீன, ஜனநாயக மற்றும் போர்க்குணமிக்க நிறுவனங்களுக்கான கட்டமைப்பை சர்வதேச அளவில் உருவாக்க, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) செயல்படும். தொழிலாள வர்க்கம் போராட தயாராக உள்ளது. ஆனால் எதிர்ப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் அடக்கும் பிற்போக்குத்தனமான அதிகாரத்துவ அமைப்புகளால் இது கட்டுப்படுத்தப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கோருவதற்கும், பாதுகாப்பற்ற தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துதல் மற்றும் வைரஸ் பரவுவதை தடுக்க தேவையான பிற அவசர நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கோருவதற்கான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான ஒரு வழிமுறையாக இது இருக்கும்.

உலகெங்கிலும் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு எதிரான எண்ணற்ற தொழிலாளர்களின் போராட்டங்களில் எங்கள் கட்சி நேரடியாக தலையீடு செய்துள்ளது. மே 2020 இல், வேலைக்குத் திரும்பும் பிரச்சாரத்தின் உச்சத்தில், கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் உயிர்களைக் காப்பாற்றவும் சாமானிய தொழிற்சாலை மற்றும் வேலையிட குழுக்களைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுத்து நாங்கள் ஒரு அறிக்கை வெளியிட்டோம். இது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வாகனத்துறை ஆலைகள், பள்ளிகள் மற்றும் பிற வேலையிடங்களில் குழுக்களை உருவாக்க இட்டுச் சென்றது.

கல்வித் துறையில், ட்ரம்ப் மற்றும் பின்னர் பைடெனின் கீழ், வைரஸ் பரவுதலுக்கான ஒரு முக்கிய வைரஸ் நோயைக் கடத்தும் இடமாக ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்ட பள்ளிகளை குற்றகரமாக மீண்டும் திறப்பதற்கு எதிராக ஆசிரியர்களை ஒழுங்கமைப்பதில் சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) ஒரு முக்கியபாத்திரம் வகித்தது. எமது செப்டம்பர் 8, 2021 அறிக்கை, “கோவிட்-19 ஐ ஒழிப்பதற்கான மூலோபாயத்தின் ஒரு பகுதியாக அனைத்து அமெரிக்க பள்ளிகளும் மூடப்பட வேண்டும்!”, பெருந்தொற்று நோய்களின்போது நேரில் கற்பிப்பதற்கான ஆசிரியர்களின் எதிர்ப்புக்கு ஒரு விஞ்ஞான அடிப்படையை வழங்கியது. சோசலிச சமத்துவக் கட்சியால் தொடங்கப்பட்ட கல்வியாளர்களின் சாமானிய தொழிலாளர் பாதுகாப்பு குழு, அமெரிக்கா முழுவதிலும் ஒரு டஜனுக்கும் அதிகமான உள்ளூர் அல்லது மாநிலந் தழுவிய கல்வியாளர்களின் குழுக்களுடன் சேர்ந்து, தொலைதூர கற்றல் மற்றும் பாதுகாப்பான வேலையிட நிலைமைகளுக்காகப் போராட அமெரிக்கா முழுவதிலும் கல்வியாளர்களை ஒழுங்கமைத்தது.

இலங்கையின் கொழும்பில் அக்டோபர் 8, 2021 வெள்ளிக்கிழமையன்று நடந்த வேலைநிறுத்தப் போராட்ட நடவடிக்கையின்போது இலங்கை சுகாதார ஊழியர்கள் சிறந்த ஊதியம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

ஆஸ்திரேலியாவில், 2021 இன் பிற்பகுதியில் பகுதி அடைப்புகள் மற்றும் எல்லை மூடல்களை மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் ஆபத்தான முறையில் கைவிட்டதை எதிர்த்த சோசலிச சமத்துவக் கட்சி, பள்ளிகள் மற்றும் வேலையிடங்களை பாதுகாப்பற்ற முறையில் மீண்டும் திறப்பதை எதிர்க்கவும், கோவிட்-19 ஐ ஒழிப்பதற்கான உலகளாவிய போராட்டத்தில் இணையவும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க அழைப்பு விடுத்தது.

பிரிட்டனில், சோசலிச சமத்துவக் கட்சி, பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கு எதிராகப் போராடும் கல்வியாளர்களை ஆதரித்ததுடன், பிரிட்டன் கல்வியாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுவை அமைக்கவும் உதவியது. இதேபோன்ற குழுக்கள் ஜேர்மனி, கனடா, பிரேசில் மற்றும் சர்வதேச அளவிலும் கட்டப்பட்டன.

பெருந்தொற்று நோய்களின் போது வர்க்கப் போராட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் தலையீடு, தொழிலாள வர்க்கத்தின் புறநிலைரீதியில் புரட்சிகர தன்மையின் பாத்திரம் குறித்த ஒரு மார்க்சிச புரிதலால் வழிநடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 1, 2020 தீர்மானத்தில் நாங்கள் விளக்கியபடி:

உலக வரலாற்றின் ஒரு முக்கியமான தூண்டுதல் நிகழ்வாக, கோவிட்-19 பெருந்தொற்று, ஏற்கனவே வெகுவாக முன்னேறிய நிலையில் உள்ள உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை மேலும் வேகமாக தீவிரப்படுத்தி வருகிறது. இது, சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தை மிகுந்த செறிவும், புதிய உச்சங்களையும் நோக்கி தூண்டக்கூடிய நிபந்தனைகளை உருவாக்கி வருகிறது. தொழிலாளர் வர்க்கம் தற்போது சந்தித்து கொண்டிருக்கும் இந்த நெருக்கடிக்கு, முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகரமான போராட்டத்தைத் தவிர, எந்தவொரு முற்போக்கான தீர்வும் இல்லை. இந்த போராட்டம், அரச அதிகாரத்தை கைப்பற்றி, பொருளாதாரத்தின் மீது தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டை நிறுவி, சந்தை அராஜகத்திற்கு பதிலாக விஞ்ஞானபூர்வமான திட்டமிடலையே அமலாக்கி, தேசிய-அரசு அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, சமத்துவம், வறுமை ஒழிப்பு, ஒடுக்குமுறை மற்றும் அனைத்து விதமான பாகுபாடுகளின் ஒழிப்பு, வாழ்க்கைத் தரத்திலும் சமூக கலாச்சாரத்திலும் மிகப் பெரிய முன்னேற்றம், மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு உலக சோசலிச சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

ட்ரம்பின் வருகை விஞ்ஞான மற்றும் பொது சுகாதாரம் மீதான போரைத் தீவிரப்படுத்துகிறது

டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியிருப்பது, அவரது பாசிசவாத திட்டநிரலின் ஒரு முக்கிய கூறுபாடாக விஞ்ஞான மற்றும் பொது சுகாதாரம் மீதான போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஜனவரி 23, 2025 முன்னோக்கில், நாம் இவ்வாறு எழுதினோம்: “கோவிட்-19 பெருந்தொற்றை நோக்கிய கொடூரமான ‘கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தி’ வெகுஜன தொற்று கொள்கையின் ஆரம்ப சிற்பியான ட்ரம்ப், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கி இன்னும் அதிகமாக தீவிரமடைவதற்கு வருகிறார்.”

இந்த எதிர்ப்புரட்சிகர நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் நோக்கில், ட்ரம்ப் சுகாதார செயலாளராக, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி எதிர்ப்பு சதி கோட்பாட்டாளரான ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியரை நியமித்துள்ளார். ‘நரி கோழிக்கூட்டிற்கே காவலராக நியமிக்கப்பட்டது’ என்பதற்கும் மேல் ஒரு பாரதூரமான சூழ்நிலை இதுவாகும். கென்னடி ஒரு காலத்தில் உலகின் முன்னணி பொது சுகாதார நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு, தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் இப்போது அவர் மேற்பார்வையிடும் அதே ஏஜென்சிகளுக்கு எதிராக வழக்குகள் தொடர்ந்ததன் மூலம் மில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டினார். அதே நேரத்தில், தடுப்பூசிக்குத் திறந்த எதிர்வினை மற்றும் விஞ்ஞான எதிர்ப்பு கருத்துகளை பரப்பும் நூல்களை எழுதி விற்பனை செய்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி நீல் கோர்சுச் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் செயலாளராக ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியருக்கு பதவிப்பிரமாணம் செய்வதை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பார்த்துக்கொண்டிருக்கிறார், அவரது மனைவி செரில் ஹைன்ஸ் வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025 அன்று வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் பைபிளை வைத்திருக்கிறார். [AP Photo/Alex Brandon]

மகா செல்வந்தர் எலோன் மஸ்க் மற்றும் அவரது அரசாங்க செயல்திறன் துறை (DOGE) உடனான நெருக்கமான ஒத்துழைப்புடன், கென்னடியும் ட்ரம்பும் அமெரிக்காவில் பொது சுகாதாரத்தின் கடைசி எச்சங்களையும் முற்றிலுமாக அழிக்கப் புறப்பட்டு வருகின்றனர், இது உலகளாவில் பரந்தளவிலான தாக்கங்களை ஏற்படுத்தப்போகிறது.

ட்ரம்ப் நிர்வாகம் வெறும் அதன் முதல் இரண்டு மாதங்களிலேயே, உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) விலகிக் கொண்டது, சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் (HHS) துறையில் உள்ள அனைத்து 13 முகமைகள் மீதும் முன்னொருபோதும் இல்லாத வாய்மூடல் உத்தரவை விதித்து, சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் (HHS) முகமைகளில் 5,000 க்கும் அதிகமான பணியாளர்களைப் பணிநீக்கம் செய்தது, புரட்சிகரமான mRNA தடுப்பூசிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீதான ஆராய்ச்சிக்கு தடை விதித்துள்ளது, மேலும் நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் (CDC), தேசிய சுகாதார நிறுவனங்கள் (NIH), உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA ) மற்றும் பிற முகமைகளின் வலைத் தளங்களில் ஆயிரக்கணக்கான தகவல் பக்கங்களை துடைத்தழிக்க கட்டாயப்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 10, 2025 கட்டுரையில், நாங்கள் குறிப்பிட்டோம்:

பொது சுகாதாரத்திற்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் போர் என்பது விஞ்ஞான அடிப்படையிலான நிர்வாகத்தைக் சிதைப்பதற்கும், மருத்துவ ஆராய்ச்சியை நசுக்குவதற்கும், அமெரிக்க சமூகத்தின் மீது விரிவுபடுத்துவதன் மூலம், உலகின் பிற பகுதிகள் மீதும் ஒரு தீவிர கருத்தியல் திட்டநிரலைத் திணிப்பதற்குமான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கிறது. பொது சுகாதார ஆராய்ச்சியை ஒடுக்குவது, வலதுசாரிச் சிந்தனைக் குழுக்கள் மூலமாக விஞ்ஞான ஒருமைப்பாட்டைக் கரைப்பது, மற்றும் கல்வித்துறை இதழ்கள் போல் வேடமிடும் சித்தாந்த வெளியீடுகளுக்கு நிதியளிப்பது ஆகிய அனைத்தும் விஞ்ஞானத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பலவீனப்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த முயற்சியைச் சுட்டிக்காட்டுகின்றன.

பிப்ரவரி 8, 2025 முன்னோக்கு, “பொது சுகாதாரத்தின் மீதான ட்ரம்பின் தாக்குதலும் H5N1 பறவைக் காய்ச்சல் பெருந்தொற்றின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலும்,” பொது சுகாதார உள்கட்டமைப்பை தகர்த்தல் என்பது புதிய பெருந்தொற்று நோய் அச்சுறுத்தல்கள் எழுகின்ற நிலையிலேயே துல்லியமாக நடந்து வருகிறது, இது இன்னும் பெரிய பேரழிவுகளுக்கான நிலைமைகளை உருவாக்குகிறது என்று எச்சரித்தது. மார்ச் 2020 இல் தொழிலாளர்களால் கட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் உலகளவில் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய வரையறுக்கப்பட்ட முழு அடைப்புகள் ஒருபுறம் இருக்க, கோவிட்-19 தொற்றுநோயின் அனுபவம் அப்பட்டமாக தெளிவுபடுத்தியுள்ளது என்னவென்றால், அடுத்த பெருந்தொற்று நோய் எப்போது தொடங்குகிறது, அல்லது SARS-CoV-2 இன் மிகவும் கொடிய திரிபு உருவானால், முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகள் எந்தவொரு பொது சுகாதார நடவடிக்கைகளையும் கூட பொறுத்துக் கொள்ளாது.

முடிவுரை

இந்தப் பெருந்தொற்று நோயின் ஆறாவது ஆண்டில் நாம் நுழைகின்ற வேளையில், H5N1 பறவைக் காய்ச்சல் போன்ற புதிய வைரஸ் அச்சுறுத்தல்கள் முன்னிலையில் இருப்பதைக் காணலாம் . இந்நிலையில், உலகளாவிய ஒழிப்பு மற்றும் முழுமையான நீக்கம் எனும் கோட்பாடுகளின் அடிப்படையில் பொது சுகாதாரத்திற்கான விஞ்ஞான அடிப்படையிலான அணுகுமுறையை முன்னிறுத்தி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மேற்கொள்ளும் போராட்டம், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரத்துடன் செயல்படுகிறது. இந்தப் போராட்டம், முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான பரந்த வர்க்கப் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாக இருக்கிறது.

பொது சுகாதாரத் துறையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் மூலம் வரவிருக்கும் அதிர்ச்சிகள் அமெரிக்க சமூகத்தைக் கூடுதலாக நிலையற்ற தன்மைக்கு உட்படுத்தும் என்பதோடு, தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாக்கலைத் துரிதப்படுத்தும். தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரவும், இலாபத்தை விட மனித வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பவும் சர்வதேச அளவில் தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) தொடர்ந்து போராடும்.

வரவிருக்கும் காலகட்டத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் கோவிட்-19 ஐ முழுமையாக ஒழிப்பதற்கான உலகளாவிய ஒருங்கிணைந்த மூலோபாயத்திற்கான போராட்டத்தை ஆழப்படுத்தும்:

  1. “என்றென்றும் கோவிட்” கொள்கையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், விஞ்ஞான அடிப்படையில் பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்து! வெகுஜன பரிசோதனை, தொடர்புத் தடமறிதல், பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல், முகக்கவசம் அணிதல் மற்றும் அனைத்து உட்புற பொது இடங்களிலும் உயர் திறன் கொண்ட துகள் காற்று (HEPA) வடிகட்டிகள் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு (Far-UVC) அமைப்புகளை பாதுகாப்பாக நிறுவுதல் உட்பட தேவையான அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் உலகளவில் அமல்படுத்தப்பட வேண்டும்.
  2. அடுத்த தலைமுறை தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பாரிய முதலீடு செய்! இதற்கு மருந்துத்துறை தொழில்துறையின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, உலகளவில் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளை இலவசமாக விநியோகிக்கப்பட வேண்டும்.
  3. சாமானிய தொழிலாளர் குழுக்கள் மூலமாக வேலை இடங்களின் நிலைமைகளின் மீது தொழிலாளர் வர்க்கத்தின் கட்டுப்பாடு மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) கட்டியெழுப்புவதற்காக! வாழ்வதற்கான மிக அடிப்படையான உரிமை உட்பட நமது எந்தவொரு சமூக உரிமைகளையும் பாதுகாக்க தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் எதுவும் செய்யப் போவதில்லை என்பதை இந்தத் பெருந்தொற்று நோய் அப்பட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
  4. பொதுக் கல்வி பெருமளவில் விரிவாக்கப்படுவதற்காக! — அது அழிக்கப்படக் கூடாது! முழுமையான நிதியுதவியுடனும், தேவையான அனைத்து வளங்களுடனும் செயல்படும் பள்ளிகளில் அடுத்த தலைமுறையை வளர்ப்பதன் மூலமாக மட்டுமே விஞ்ஞானத்தையும் பொது சுகாதாரமும் பாதுகாக்கப்பட்டு, வளர்ச்சியடையச் செய்ய முடியும்.
  5. சோசலிசக் கோட்பாடுகளின் அடிப்படையில் சமூகத்தை மறுஒழுங்கமைப்பதற்காக! தனியார் இலாபம் அல்ல, பொதுச் சுகாதாரமே முக்கியம் என்பதை உறுதி செய்யவும், அனைத்து மக்களின் வாழ்க்கை தேவைகள் பூர்த்தி செய்யப்படவும் இதுவே ஒரே வழியாகும்.

கோவிட்-19 பெருந்தொற்று நோய் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, உலகம் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பு, ஏகாதிபத்திய பதட்டங்களின் தீவிரப்படல், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயப்படல் என உலக முதலாளித்துவத்தின் அனைத்து முரண்பாடுகளையும் இந்த பெருந்தொற்று தீவிரப்படுத்தியுள்ளது. முதலாளித்துவம் மனித வாழ்க்கை மற்றும் சமூக நல்வாழ்வின் அடிப்படைத் தேவைகளுடன் ஒத்துப்போகாது என்ற மார்க்சிச புரிதலை இது ஊர்ஜிதம் செய்துள்ளது.

சாமானிய தொழிலாளர் குழுக்கள் மூலமாக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுதல், உலகளாவிய முழுமையாக ஒழிப்பதற்கான மூலோபாயத்திற்கான போராட்டம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பெருந்தொற்று நோய்க்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்ட பதில், முன்னோக்கி செல்வதற்கான ஒரே நம்பகமான பாதையை வழங்குகிறது.

இந்தப் போராட்டத்தில் இணையுமாறு உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பாரிய சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே மனிதகுலத்தால் கோவிட்-19 பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவர முடியும் மற்றும் எதிர்கால பேரழிவுகளைத் தடுக்க முடியும். சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து, நோய், சுரண்டல் மற்றும் போரில் இருந்து விடுபட்ட ஒரு உலகத்திற்கான— அதாவது தனியார் இலாபத்திற்காக அல்லாமல் மனிதயின தேவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிச உலகத்திற்கான— ஒரு போராட்டத்தை முன்னெடுங்கள்.

Loading