நந்த விக்ரமசிங்க (1939-2025): வாழ்நாள் ட்ரொட்ஸ்கிசத் தலைவர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

நந்த விக்கிரமசிங்க [Photo: WSWS]

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) உலகெங்கிலும் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) தோழர்கள் மத்தியில் தோழர் விக்ஸ் என்று அழைக்கப்படும் நந்த விக்ரமசிங்கவின் இழப்பை ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கின்றது.

1968 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக கம்யூனிஸ்ட் கழகத்தை (பு.க.க.) ஸ்தாபித்த தோழர்களில், மறைந்த கீர்த்தி பாலசூரியா, விஜே டயஸ் மற்றும் தற்போதைய தலைமை உறுப்பினரான கே. ரட்நாயக்க ஆகியோருடன் விக்ஸும் ஒருவராக இருந்தார்.

தோழர் விக்ஸ் ஏப்ரல் 20 அன்று அதிகாலையில் தூக்கத்திலேயே இறந்தார். அவரது மனைவி மணிகே, மகள்கள் வேரா மற்றும் ஸ்வாபா, மகன் லியோன் மற்றும் அவரது பேரப் பிள்ளைகளுடன் அவர் வாழ்ந்து வந்தார்.

ட்ரொட்ஸ்கிஸவாதியாக நந்த விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களுக்கு நீடித்தது. முதுமைப் பிணிகள் அவரைக் கட்சிப் பணிகளில் இருந்து விலகியிருக்க நிர்ப்பந்தித்த போதிலும், இறுதி வரை எங்கள் தோழர் தனது புரட்சிகர உணர்வை ஒருபோதும் இழக்கவில்லை.

அவர் மறைவதற்கு சில நாட்களுக்கு முன்பு தோழர்கள் அவரைச் சந்தித்தபோது, ​​பாசிச ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்காவில் தொழிலாள வர்க்க போர்க்குணம் வளர்ந்து வருவதைக் கேள்விப்பட்டு விக்ஸ் உற்சாகமடைந்தார். 'நமது கட்சியை [அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியை] ஒரு வெகுஜனக் கட்சியாகக் கட்டியெழுப்புவதற்கும், உலகப் புரட்சிக்கும் இது தீர்க்கமானது' என்று அவர் கூறினார்.

விக்ஸ் மிக சமீபத்தில் கே. ரட்நாயக்கவுடன் கலந்துரையாடிய போது [Photo: WSWS]

தோழர் விக்ஸ், இரண்டாம் உலகப் போர் தொடங்கி ஆறு வாரங்களுக்குப் பிறகு, 15 அக்டோபர் 1939 அன்று, (அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்ட) இலங்கையின் தெற்கு நகரமான தெனியாயவிற்கு அருகிலுள்ள தபஸ்சரகந்த என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கிராமப் பாடசாலைத் தலைமை ஆசிரியர், அவரது தாயார் ஒரு இல்லத்தரசி. ஐந்து குழந்தைகளில் விக்ஸ் இரண்டாவதாகப் பிறந்தார்.

விக்ஸ் தனது ஆறு வயதிலே அயலவர்கள் வந்து போரைப் பற்றி கலந்துரையாடுவதை தான் கேட்டுக்கொண்டிருந்ததாக அடிக்கடி நினைவுகூருவார். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழும் அதன் போர் முயற்சிகளுடன் பிணைக்கப்பட்டும் இருந்த இலங்கையில் மக்களின் வாழ்க்கையைப் போர் மோசமாகப் பாதித்தது.

10 வயதில், சோவியத் எழுத்தாளர் ஒருவர் எழுதிய லெனினின் வாழ்க்கை வரலாற்றைப் படித்த விக்ஸ், 1949 சீனப் புரட்சி பற்றிய செய்திகளைக் கேட்டு ஆர்வமடைந்தார். அவரது தந்தை இலங்கையின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்ததால் அவருக்கு நூல்கள் கிடைத்தன.

ஐந்தாம் வகுப்பு தேர்வுப் பரீட்சையில் சித்தி பெற்ற பிறகு, இடைநிலைக் கல்விக்காக திக்வெல்ல மத்திய கல்லூரியில் சேர்ந்த அவர், ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட வகுப்புகளில் சேர்ந்தார்.

1958 ஆகஸ்ட்டில், விக்ஸ் நாட்டின் முதன்மை பல்கலைக்கழகமான பேராதனையில் உள்ள சிலோன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு மார்க்சிய அரசியல், குறிப்பாக ட்ரொட்ஸ்கிசம் பற்றி சூடான விவாதங்கள் இடம்பெற்றன.

வளாகத்தில் மேலோங்கியிருந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் தனது ஸ்ராலினிச ஆதரவு கருத்துக்கள் உடனடியாக சவால் செய்யப்பட்டதாக விக்ஸ் கூறினார். ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியைப் போலல்லாமல், போரையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் தொடர்ந்து எதிர்த்துவந்த லங்கா சம சமாஜக் கட்சியின் (ல.ச.ச.க.) ஆதரவாளர்களே மாணவர் சங்கத்தில் ஆதிக்கம் செலுத்தினர். ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர தன்மையைப் புரிந்துகொண்ட பிறகு, அவர் பல்கலைக்கழகத்தில் ல.ச.ச.க. மாணவர் குழுவில் சேர்ந்தார்.

1962 இல், பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, விக்ஸ் தெற்கு நகரான மாத்தறையில் உள்ள ல.ச.க.க. உள்ளூர் குழுவில் சேர்ந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவர் ஹம்பந்தொட்டையில் உள்ள புனித மறியாள் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். அங்கு அவர் கட்சியுடன் பணியாற்றிய மாணவர்கள் குழுவிற்கு கற்பித்தார்.

ல.ச.ச.க. ஒரு வெகுஜன தொழிலாள வர்க்கக் கட்சியாக இருந்தது. இருப்பினும், 1950களின் முற்பகுதியில் நான்காம் அகிலத்திற்குள் மைக்கேல் பப்லோ மற்றும் எர்னஸ்ட் மண்டேல் தலைமையிலான திருத்தல்வாதப் பிரிவின் பக்கம் அது சாய்ந்தது. இரண்டாம் உலகப் போரின் பின்னர், உலக முதலாளித்துவம் ஸ்திரமடைந்தமைக்கு அடிபணிந்து, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தை நிராகரித்த பப்லோவாதிகள், ஏற்கனவே உள்ள -ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் முதலாளித்துவ தேசியவாத- சந்தர்ப்பவாதத் தலைமைகளுக்கு முற்போக்கான பாத்திரத்தை வகிக்க அழுத்தம் கொடுக்க முடியும் எனக் கூறிக்கொண்டு தொழிலாளர்களை அவற்றுக்கு அடிபணியச் செய்ய முயன்றனர். அவ்வாறு செய்ததன் மூலம், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு உட்பட மார்க்சியத்தின் அடிப்படைக் கொள்கைகளை அவர்கள் நிராகரித்தனர்.

இந்த கலைப்புவாதப் போக்கிலிருந்து உண்மையான ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாக்கவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 1953 இல் ஸ்தாபிக்கப்பட்டது. அனைத்துலகக் குழுவை ல.ச.ச.க. எதிர்த்தமை ஒரு தசாப்த கால சந்தர்ப்பவாத பின்வாங்கலின் தொடக்கமாக இருந்ததோடு பாரிஸில் உள்ள பப்லோவாத தலைமையகத்தின் ஊக்குவிப்புடன் சிங்கள இனவாதம், பாராளுமன்றவாதம் மற்றும் தொழிற்சங்க சிண்டிகல்வாதத்திற்ககுமான அதன் அடிபணிவினால் குறிக்கப்பட்டு.

1964 இல், தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கமான '21 கோரிக்கைகள் இயக்கம்', ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) அரசாங்கத்தையும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தையும் உலுக்கியதால், பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க, ல.ச.ச.க. தலைவர்களை ஒரு கூட்டணியை உருவாக்க அழைத்தார். 1964 ஜூனில் நடந்த ல.ச.ச.க. மாநாட்டில், பெரும்பான்மையானவர்கள் அரசாங்கத்தில் சேர வாக்களித்து, ட்ரொட்ஸ்கிசத்திற்கு ஒரு வரலாற்றுத் துரோகத்தைச் செய்தனர். ட்ரொட்ஸ்கிசவாதிகள் என்று கூறிக் கொள்ளும் ஒரு கட்சி முதல் முறையாக முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்துகொண்டதோடு உயர்மட்ட ல.ச.ச.க. தலைவர்கள், அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொண்டு முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாத்தனர்.

1953 இல் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), 1963 ஆம் ஆண்டில், திருத்தல்வாதிகளுடன் மீண்டும் இணைந்துகொண்டது. இந்த மறு ஒருங்கிணைப்புக்கு எதிரான தீர்க்கமான தத்துவார்த்த, அரசியல் போராட்டத்தை அனைத்துலகக் குழு வழிநடத்தியது. மறு ஒருங்கிணைப்பை எதிர்த்த சோசலிச தொழிலாளர் கட்சியின் ஒரு சிறுபான்மை பிரிவினர், ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்பு குறித்து கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்த காரணத்தால் 1964 இல் வெளியேற்றப்பட்டதோடு, அவர்கள் அனைத்துலகக் குழுவுடன் இணைந்து 1966 இல் வேர்கர்ஸ் லீக்கை (தொழிலாளர் கழகம்) ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்தனர்.

1964இல் ல.ச.ச.க. மாநாட்டில், விக்ஸ் ஒரு வேட்பாளர் உறுப்பினராக இருந்ததோடு பண்டாரநாயக்க அரசாங்கத்தில் நுழைவதை எதிர்க்கும் தீர்மானத்தை முன்வைத்த 159 உறுப்பினர்களைக் கொண்ட சிறுபான்மை பிரிவை ஆதரித்தார். தீர்மானம் நிராகரிக்கப்பட்டபோது, ​​அவர்கள் மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்து புரட்சிகர ல.ச.ச.க. அல்லது LSSP (R) ஐ உருவாக்கினர்.

ல.ச.ச.க. மாநாட்டின் நுழைவாயிலில், விக்ஸ், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவான சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) தலைவர் ஜெரி ஹீலியைச் சந்தித்தார். ஹீலியுடனான தனது சந்திப்பு குறித்து, குறிப்பாக ல.ச.ச.க.யின் துரோகத் தலைவர்கள், தன்னை மாநாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க அனுப்பிய குண்டர்களை ஹீலி அச்சமின்றி சவால் செய்ததை பற்றி விக்ஸ் மிகுந்த உற்சாகத்துடன் பேசினார்,

ல.ச.ச.க.யில் இருந்து பிரிந்து சென்றாலும், புரட்சிகர ல.ச.ச.க. தலைவர்கள். பப்லோவாத சர்வதேசத்துடன் தொடர்ந்து இணைந்திருந்தனர். ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்புக்கு பாரிஸில் பப்லோவாத தலைமையின் நேரடி பொறுப்பு குறித்து எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்துவதை அவர்கள் எதிர்த்தனர்.

சோசலிச தொழிலாளர் கழத்தின் தலைமையிலான அனைத்துலக் குழு, ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்பால் இலங்கையில் உருவாக்கப்பட்ட அரசியல் நெருக்கடியில் தலையிட்டது. சோசலிச தொழிலாளர் கழத்தின் தலைவர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னணி இளைஞர்களில் கீர்த்தி, விஜே, விக்ஸ் ஆகியோர் இருந்தனர். இந்தக் காட்டிக்கொடுப்பு பப்லோவாதத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.

அனைத்துலகக் குழுவின் வழிகாட்டுதலுடன், இந்த இளைஞர்கள் 1968 ஜூனில் இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை (பு.க.க.) உருவாக்கத் தொடங்கினர். அந்த இளைஞர்கள் மத்தியில் கோட்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மேம்பட்டிருந்த கீர்த்தி, 19 வயதில் புதிய கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு திருப்புமுனையாக அமைந்த பு.க.க.யின் உருவாக்கம், இலங்கையிலும் இந்திய துணைக் கண்டத்திலும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தைப் புதுப்பித்தது.

சோசலிச அனைத்துலகவாதத்தை ல.ச.ச.க. காட்டிக் கொடுத்தமை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை உருவாக்கியது. அது நாட்டின் தெற்கே கிராமப்புறங்களில் கெரில்லாவாதம் மற்றும் சிங்கள பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற குட்டி முதலாளித்துவ தீவிரவாத அமைப்புகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. வடக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட பிரிவினைவாத இயக்கங்கள் தோன்றின. மார்க்சியத்தையும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர வகிபாகத்தையும் நிராகரித்த இந்த அமைப்புகளை கோட்பாட்டு ரீதியாக அம்பலப்படுத்துவதற்கு பு.க.க. முன்முயற்சி எடுத்தது.

1970களின் பிற்பகுதியில் கொழும்பின் வடகிழக்கில் உள்ள துல்ஹிரியவில் நெசவுத் கூட்டுத்தாபனத் தொழிலாளர்கள் கலந்து கொண்ட பு.க.க. கூட்டத்தில் விக்ஸ் உரையாற்றிய போது [Photo: WSWS]

அதன் குட்டி முதலாளித்துவ அரசியலின் அடிப்படையில், ஜே.வி.பி. 1971 ஏப்ரலில் ஒரு சாகச எழுச்சியை வழிநடத்தியது. இது, ஸ்ரீ.ல.சு.க., ல.ச.ச.க. மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட கட்சி இடையேயான இரண்டாவது கூட்டணி அரசாங்கத்தால் கொடூரமாக நசுக்கப்பட்ட போது, சுமார் 15,000 கிராமப்புற இளைஞர்கள் கொல்லப்பட்டனர். ஜே.வி.பி. உடன் அடிப்படையான அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், அரசு அடக்குமுறைக்கு எதிராக பு.க.க. ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வந்த நெருக்கடியின் மத்தியில், தொழிலாள வர்க்கம் பெருகிய முறையில் கூட்டணி ஆட்சியுடன் மோதலுக்கு வந்தது. ல.ச.ச.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகவும் சோசலிசக் கொள்கைகளுக்காகவும் போராட வேண்டும் என்று கோரி, பு.க.க. தொழிலாளர்களின் போராட்டங்களில் தலையிட்டு, ஒரு குறிப்பிடத்தக்க ஆதரவுத் தளத்தை கட்டியெழுப்பியது.

இறுதியில் இரண்டாவது கூட்டணி அரசாங்கம் சரிந்து, 1977 இல் ஜே.ஆர். ஜயவர்தனவின் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) ஆட்சிக்கு வர வழி வகுத்தது. ஐ.தே.க. அரசாங்கமானது அதன் 'திறந்த சந்தை பொருளாதாரக் கொள்கைகள்' மூலம் உழைக்கும் மக்கள் மீது பாரதூரமான தாக்குதலை முன்னெடுத்தது. ஜயவர்தன 1980 இல் 100,000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதன் மூலம் அரசு ஊழியர்களின் மிகப்பெரிய பொது வேலைநிறுத்தத்தை நசுக்கினார்.

அதிகரித்து வந்த சமூகப் பதட்டங்கள் மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில், ஐ.தே.க., தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்காக தமிழர்-விரோத பேரினவாதத்தைத் நாடியதால் அது 1983 இல் தீவு முழுவதும் ஒரு படுகொலைகளில் உச்சக்கட்டத்தை அடைந்ததுடன், வெளிப்படையான உள்நாட்டுப் போரின் வெடிப்பைக் குறித்தது. அடுத்த 26 ஆண்டுகளில், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள், தீவை பேரழிவிற்கு உட்படுத்திய பிற்போக்கு இனவாதப் போரை முன்னெடுத்து, தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், தொழிலாள வர்க்கத்தின் மீது சுமைகளை திணித்தது.

போரை இடைவிடாமல் எதிர்த்து, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்த, வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவத்தை திரும்பப் பெறக் கோரிய, தெற்காசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசைக் கட்டியெழுப்ப அழைப்பு விடுத்த ஒரே கட்சி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் / சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் வாரிசான பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP), 1970 களில் வலது பக்கம் திரும்பி ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டைக் கைவிட்டதால், பு.க.க. அரசியல் தாக்குதலுக்கும் தனிமைப்படுத்தலுக்கும் ஆளானது. 1985-86 பிளவில் தொழிலாளர் புரட்சிக் கட்சி துரோகிகளுக்கு எதிராக வேர்க்கர்ஸ் லீக்கின் தலைமையில் அனைத்துலகக் குழு முன்னெடுத்த போராட்டத்தை ஆதரித்த பு.க.க. தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக விக்ஸ் இருந்தார். இந்தப் பிளவே நான்காம் அகிலத்தில் மார்க்சியத்தின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் அகிலத்தினதும் தலைமையில் ஒரு தீர்க்கமான தத்துவார்த்த மற்றும் அரசியல் பங்கை வகித்த கீர்த்தி பாலசூரிய, 1987 டிசம்பரில் தனது 39 வயதில் காலமானார். இந்த இக்கட்டான இழப்பின் மத்தியில், விஜே டயஸ் அவருக்குப் பின்னர் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதுடன் 2022 ஜூலையில் அவர் இறக்கும் வரை கட்சியின் போராட்டங்களை வழிநடத்தும் மகத்தான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார்.

விக்ஸ் முக்கியமான பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். 1988 இல் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் பிளவுபட்டதிலிருந்து, அனைத்துலக் குழுவின் முதல் முன்னோக்கு ஆவணமான 'உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்' என்ற முன்னோக்கைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல்களில் பங்கேற்க அவர் அமெரிக்காவிற்குப் பயணம் செய்தார். இந்த முன்நோக்கு, அனைத்துலகக் குழுவின் அடுத்தடுத்த பணிகளுக்கு அடிப்படையாக இருந்த, உற்பத்தியின் உலகமயமாக்கல் மற்றும் அதன் அரசியல் விளைவுகள் பற்றிய பகுப்பாய்வை வழங்கியது.

இலங்கைக்குத் திரும்பியதும், விக்ஸ் மற்றும் பு.க.க. தலைமைத்துவம், புலிகளை நிராயுதபாணியாக்குவதற்கு இந்திய அமைதி காக்கும் படைகளை தீவுக்கு அழைத்து வந்த, 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக, 1988-90 இல் ஜே.வி.பி. முன்னெடுத்த பாசிச பிரச்சாரத்தை எதிர்கொண்டனர். இந்த ஒப்பந்தத்தை தேசத் துரோகம் என்று கண்டித்த ஜே.வி.பி., அதன் சிங்கள பேரினவாத பிரச்சாரத்தில் சேர மறுத்த ஆயிரக்கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை, படுகொலை செய்ய தனது துப்பாக்கிதாரிகளை அனுப்பியது. அதனால் கொல்லப்பட்டவர்களில் மூன்று பு.க.க. உறுப்பினர்களும் அடங்குவர்.

பு.க.க., அனைத்துலகக் குழுவின் ஆதரவுடன் தொழிலாளர் பாதுகாப்புப் படைகளை உருவாக்குதல் மற்றும் ஒரு பொது வேலைநிறுத்தத்தைத் தயாரிப்பது உட்பட, தொழிலாள வர்க்கத்தையும் அதன் அமைப்புகளையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க, தொழிலாளர் கட்சிகளின் ஐக்கிய முன்னணிக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

இந்த சர்வதேச பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, விக்ஸ் மற்றும் பு.க.க. உறுப்பினரும் தொழிற்சங்கத் தலைவருமான மறைந்த எச்.எம்.பி. ஹேரத் ஆகியோர் 1989 இல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு சென்று, ஐக்கிய முன்னணியின் அவசியம் குறித்து தொழிலாளர்களிடம் உரையாற்றினர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பல தொழிற்சங்க அலுவலர்களுடன் சேர்ந்து, பு.க.க.வின் அழைப்பை ஆதரிக்கும் அறிக்கைகளில் கையெழுத்திட்டனர்.

விக்ஸ், எச்.எம்.பி. ஹேரத் மற்றும் ஆஸ்திரேலிய சோசலிச தொழிலாளர் கழகத்தின் தேசிய செயலாளர் நிக் பீம்ஸ் (வலது) ஆகியோர் 1989 மே மாதம் சிட்னியில் ஒரு ஆஸ்திரேலிய தபால் ஊழியருடன் கலந்துரையாடிய போது. [Photo: WSWS]

1996 ஆம் ஆண்டில், பழைய சந்தர்ப்பவாத தலைமைகளின் சிதைவின் மத்தியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்துவதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற பகுப்பாய்வின் அடிப்படையில், பு.க.க., சோசலிச சமத்துவக் கட்சியாக உருமாறியது. விக்ஸ் மற்றும் ஏனைய நீண்டகால பு.க.க. தலைவர்கள், கட்சியின் ஸ்தாபக ஆவணமான 'சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள்' என்பதை எழுதுவதைச் சுழ இடம்பெற்ற கலந்துரயாடல்களில் தங்கள் மகத்தான அரசியல் அனுபவத்தை கொண்டு வந்தனர். இந்த ஆவணம் இலங்கையில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான நீடித்த போராட்டத்திலிருந்து அவசியமான அரசியல் படிப்பினைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

1998 இல் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) ஸ்தாபிக்கப்பட்டவுடன், தொழிலாள வர்க்கத்திற்கு இந்த வளர்ச்சியின் வரலாற்று முக்கியத்துவத்தை விக்ஸ் ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டு புரிந்துகொண்டார். இலங்கை மற்றும் இந்தியாவில் பரந்த அளவிலான வரலாற்று மற்றும் அரசியல் பிரச்சினைகளை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளை அவர் வலைத் தளத்துக்காக எழுதியுள்ளார்.

விக்ஸ் ஒரு ஆழ்ந்த பண்பட்ட மனிதர். சிங்களம் மற்றும் ஆங்கிலம் தவிர, இந்தியாவில் பௌத்த மதத்தின் எழுச்சியுடன் தொடர்புடைய பண்டைய மொழியான பாலி மொழியையும் அவர் படித்திருந்தார். இலங்கை மற்றும் உலக இலக்கியங்களில் அவருக்கு பரந்த ஆர்வம் இருந்தது. வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் பிற பிராதன ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளுடன் அவர் பரீட்சியமானவராக இருந்தார். வரலாற்றைப் பற்றிய, குறிப்பாக தெற்காசியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைப் பற்றிய கூர்மையான புரிதல் அவருக்கு இருந்தது.

கடந்த அக்டோபரில் விக்ஸின் 85 வது பிறந்தநாளில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான தோழர் டேவிட் நோர்த் அனுப்பிய வாழ்த்துக்களிலிருந்து மேற்கோள் காட்டி இந்த புகழஞ்சலியை முடிக்கிறோம்.

அன்புள்ள விக்ஸ், நீங்கள் 1939 செப்டம்பரில் இரண்டாம் உலகப் போர் வெடித்ததிலிருந்து வரலாற்றின் முழுப் போக்கையும் கடந்து செல்கின்ற ஒரு பெரிய சகாப்தத்தை அடைந்து விட்டீர்கள். அரசியல் காலத்தின் இந்த கணிசமான பரப்பளவை இப்போது நீங்கள் பார்த்து, உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த கொள்கைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்று அடக்கமின்மையின் தடயமே இல்லாமல் உங்களால் சொல்ல முடியும். “நான் மீண்டும் தொடங்க வேண்டியிருந்தால், நிச்சயமாக, இந்த அல்லது அந்தத் தவறைத் தவிர்க்க முயற்சிப்பேன், ஆனாலும் என் வாழ்க்கையின் பிரதான போக்கு மாறாமல் இருக்கும்,” என ட்ரொட்ஸ்கி தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி எழுதியது போல், உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் மிகவும் மறக்கமுடியாத வகையில் சொல்ல முடியும்.

நான் தனிப்பட்ட முறையில் பேசினால், கடந்த நான்கு தசாப்தங்களாக உங்கள் நெருங்கிய தோழராகவும் நண்பராகவும் இருக்கும் சிறப்பு உறவை பெற்றதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் அரசியல் ஆர்வத்தையும், உங்கள் அறிவுசார் மற்றும் கலாச்சார ஆர்வங்களின் பரந்த அளவையும், புரட்சிகரக் கொள்கைகளுக்கான தளராத தைரியத்தையும் பிடிப்பையும் நான் பாராட்டுகிறேன். ஆனால் உங்கள் வாழ்க்கைப் பயணம் இன்னும் அதன் போக்கை முடிக்கவில்லை. எங்களுக்கு முன்னால் உள்ள போராட்டங்களில் அனைத்துலகக் குழுவின் வேலைகளுக்கு உங்கள் அறிவும் பரந்த அனுபவமும் சேவை செய்யும் என்று நம்புகிறேன்.

தோழர் விக்ஸ், நாங்கள் உங்களுக்கு தலைவணங்குகிறோம். உங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த வரலாற்றுப் பணியை எதிர்கால சந்ததியினர் நிச்சயமாக நிறைவேற்றுவார்கள். தோழர் விக்ஸின் புரட்சிகர நினைவு நீடூழி வாழ்க!

Loading