முன்னோக்கு

ட்ரம்புக்கு எதிராக ஏப்ரல் 19ல் இடம்பெற்ற வெகுஜனப்  போராட்டங்களும் ஒரு புரட்சிகர மூலோபாயத்தின் தேவையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

நியூ யோர்க் நகரில் ஏப்ரல் 19 பேரணியின் ஒரு பகுதி [Photo: WSWS]

ஏப்ரல் 19 சனிக்கிழமையன்று, அமெரிக்கா எங்கிலுமான 700 க்கும் அதிகமான நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் இடம்பெற்ற ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான வெகுஜன போராட்ட அலை, பாசிச அச்சுறுத்தலுக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பில் ஒரு முக்கியமான வளர்ச்சியைக் குறிக்கிறது.

அமெரிக்க புரட்சியைத் தொடங்கி வைத்த லெக்சிங்டன் மற்றும் கொன்கோர்ட் போர்களுக்கு சரியாக 250 ஆண்டுகளுக்குப் பின்னர், நூறாயிரக் கணக்கானவர்கள் —அநேகமாக 1 மில்லியனை நெருங்கக்கூடும்— நவீன-கால கொடுங்கோலர்களும் வருங்கால மன்னர்களுமான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலோன் மஸ்க் ஆகியோருக்கு எதிராக, அவர்களின் கோபத்தை வெளிப்படுத்த வீதிகளில் இறங்கினர். நியூ யோர்க் மற்றும் சிக்காகோவில் இருந்து, கிராமப்புற அயோவா மற்றும் சிறிய நகரமான டென்னசி வரையில், இந்த ஆர்ப்பாட்டங்கள் மீண்டுமொருமுறை ட்ரம்ப் மற்றும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான எதிர்ப்பின் அளவை மட்டுமல்ல, வளர்ந்து வரும் தீவிரமயமாக்கலையும் வெளிப்படுத்திக் காட்டின.

ஏப்ரல் 19 சனிக்கிழமையன்று, இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், முந்தைய ட்ரம்ப் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுடன் ஒப்பிடும்போது அவற்றின் மிகவும் போர்க்குணமிக்க தன்மையாகும். 1,500 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் சுமார் 3 மில்லியன் மக்களை ஒன்றிணைத்த ஏப்ரல் 5 ஐ விட ஒட்டுமொத்த பங்கேற்பு குறைவாக இருந்தபோதிலும், சனிக்கிழமை பங்கெடுத்தவர்களின் உணர்வுகள் இன்னும் கூடுதலாக இடதை நோக்கி இருந்தன. ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்தவர்களில் பலர் ஜனநாயகக் கட்சிக்கு அதிக நனவான எதிர்ப்பையும், 1930 களின் பாசிச ஆட்சிகளுக்கும், இன்று ஒரு சர்வாதிகாரத்தை நிறுவ ட்ரம்பின் முயற்சிகளுக்கும் இடையிலான வரலாற்று ஒற்றுமைகளை அதிகரித்தளவில் வெளிப்படுத்திக் காட்டினர்.

இந்தப் போராட்டங்கள் பிப்ரவரியில் பேர்னி சாண்டர்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்த “அரசியல் புரட்சிக்” குழுவுடன் இணைந்த “50501” இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தலைமையை வெளிப்படையாக மீறி நடந்தன. ஏப்ரல் 5 ஆர்ப்பாட்டத்தின் அளவு குறித்து அரிதாகவே கருத்து தெரிவித்த முழு அரசியல் மற்றும் ஊடக நிறுவனத்தையும், போராட்டங்களின் தலைவர்களையும், இப்போராட்டம் அதிர்ச்சிக்குள்ளாக்கி பீதியை ஏற்படுத்தியுள்ளது.

திரைக்குப் பின்னால், ஜனநாயகக் கட்சி ஐயத்திற்கிடமின்றி திட்டமிடப்பட்ட ஏப்ரல் 19 போராட்டங்களை இரத்து செய்ய முயற்சிக்குமாறு “50501” தலைமையின் மீது அழுத்தம் கொடுத்தது. ஏப்ரல் 9 அன்று, இந்தக் குழு அதன் சமூக ஊடகத் தளங்களில் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. “நாங்கள் ஒரு பெரிய தேசிய முயற்சியைச் செய்யவில்லை” என்று அறிவித்து, அதற்கு பதிலாக இந்தக் குழு, மக்கள் சுற்றுலாக்களை நடத்தவும், நூலகங்களைப் பார்வையிடவும் அல்லது பிற அரசியல் சார்பற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஊக்குவித்தது. இது பரவலான கோபத்தைத் தூண்டியதுடன், சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெரும் எதிர்ப்பையும் சந்தித்தது.

குறிப்பிடத்தக்க வகையில், ஜனநாயகக் கட்சியின் ஒரு தலைவர் கூட ஏப்ரல் 19 ஆர்ப்பாட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. எவரும் பிரதான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவோ அல்லது பேசவோ இல்லை. திரைக்குப் பின்னால் போராட்டங்களைக் கைப்பற்ற முயன்ற அதேவேளையில், ஜனநாயகக் கட்சியின் அனைத்துப் பிரிவுகளும் அத்தகைய வெகுஜன எதிர்ப்பை அச்சத்துடனும் விரோதத்துடனும் பார்க்கின்றன.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற போராட்டங்கள் குறித்து மௌனமாக இருந்த உத்தியோகபூர்வ “இடது” ஜனநாயகக் கட்சியினரான பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் ஆகிய இருவரும் இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, அவர்களின் “தன்னலக்குழுவை எதிர்த்துப் போராடும்” சுற்றுப்பயணத்தின் மூலமாக, இருவரும் எதிர்ப்பை ஜனநாயகக் கட்சிக்குப் பின்னால் கட்டி வைக்க முனைந்தனர். இடாஹோவில் கடந்த வாரம் நடந்த ஒரு பிரச்சார நிகழ்வில், சாண்டர்ஸ், “இஸ்ரேலுக்கு தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு” என்று அறிவித்த சிறிது நேரத்திலேயே, பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை தனது பேரணியில் இருந்து வெளியேற்ற பொலிசுக்கு அதிகாரம் அளித்ததன் மூலம் சாண்டர்ஸ் தனது உண்மையான நிறத்தை வெளிப்படுத்திக் காட்டினார்.

அனைத்திற்கும் மேலாக, 100,000 க்கும் அதிகமான கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களை பாரியளவில் பணிநீக்கம் செய்ததன் மூலமாக, தொழிலாள வர்க்கத்தின் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்கண்டிராத தாக்குதல்களுக்கு தங்களை முழுமையாக தகவமைத்துக் கொண்டுள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து எந்தவொரு முன்னணி நிர்வாகியும் சனிக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய வாரங்களில், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் ஷான் ஃபெயின், அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை பேரழிவிற்கு உட்படுத்தும் ஒரு வர்த்தகப் போரைத் தூண்டும் ட்ரம்பின் சுங்கவரிக் கொள்கையை மீண்டும் மீண்டும் ஆதரித்து வருகிறார்.

இந்த பிற்போக்குத்தனமான சக்திகள் எதுவும் கிட்டத்தட்ட முழுமையாக இல்லாதது சனிக்கிழமை போராட்டங்களில் மிகவும் செறிவான இடதுசாரி சூழலை உருவாக்கியது. பாசிசத்தின் எழுச்சிக்கு உதவுவதில் இரண்டு முதலாளித்துவ கட்சிகளும் வகித்த பாத்திரத்தை பலரும் கண்டனம் செய்தனர்.

நியூ யோர்க் நகரில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறுகையில்:

குடியரசுக் கட்சி, ட்ரம்ப் போன்ற ஒருவரை ஆதரிப்பதால் மட்டுமல்ல, ஜனநாயகக் கட்சி அவரை அனுமதிப்பதாலும் நாங்கள் இந்த நிலையில் இருக்கிறோம். குடியரசுக் கட்சியினரைப் போலவே அவர்களும் இதனால் பயனடைகிறார்கள். அவர்கள் ஒருபோதும் உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள், ஆனால் அவர்கள் செய்கிறார்கள். இரு கட்சி உறவு என்பது பாசிசத்தில் இறங்குவதற்கான ஒரு நல்ல வழியாகும்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

மேலும் அவர் கூறிகையில்:

மக்கள் அமெரிக்காவை ஒரு நடுத்தர வர்க்க நாடாக மாற்ற விரும்புகிறார்கள், நாங்கள் அப்படி இல்லை. எமது நாடு, ஒரு தொழிலாளி வர்க்க நாடு. அமெரிக்காவில் பெரும்பான்மையான மக்கள் தொழிலாள வர்க்கத்தை சேர்ந்தவர்கள். … எங்கள் வருமானம் என்னவாக இருந்தாலும் எங்களுக்கு உரிமைகள் தேவை. வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் எங்களுக்குத் தேவை.

வளர்ந்து வரும் தீவிரமயமாதல் நியூ யோர்க்குடன் மட்டுப்படுத்தப்படவில்லை. டெட்ராய்ட் மற்றும் மிச்சிகனில் உள்ள லான்சிங் இரண்டிலும், சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றினர். ட்ரம்பை அனுமதித்ததற்காக ஜனநாயகக் கட்சியினரைக் கண்டித்து, சோசலிச அரசியலுக்குத் தொழிலாள வர்க்கம் திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது, பேச்சாளர்கள் பலத்த கரவொலியைப் பெற்றனர். பெரும்பாலான போராட்டங்களில், ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியினருக்கான எதிர்ப்பு, காஸா இனப்படுகொலைக்கு இரு கட்சிகளும் அளித்த ஆதரவின் மீதான ஆழ்ந்த வெறுப்புடன் தொடர்புடையது.

அமெரிக்கப் புரட்சி தொடங்கிய 250 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்தாபக பிதாக்களைப் போல உடையணிந்திருந்தனர். அவர்களில் பலர் நனவுபூர்வமாக அமெரிக்க மற்றும் பிரெஞ்சு புரட்சிகள் இரண்டினதும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தினர். “அவர்கள் 1939 இன் ஜேர்மனியை நமக்குக் கொடுக்க விரும்புகிறார்கள், நாங்கள் அவர்களுக்கு 1789 இன் பிரான்ஸைக் கொடுப்போம்” என்று ஒரு பதாகை அறிவித்தது.

ஜனநாயக உரிமைகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் முழுத் தொழிலாள வர்க்கத்தின் மீதும் ட்ரம்ப் ஆட்சியின் அதிகரித்து வரும் பாசிச தாக்குதல்களை போராட்டக்காரர்கள் துல்லியமாக நன்கறிந்திருந்தனர் மற்றும் அதற்கு விரோதமாக இருந்தனர். ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திலும் சட்டப்பூர்வ குடியிருப்பாளரான கில்மர் அப்ரிகோ கார்சியா சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதைக் குறிப்பிடும் பதாகைகள் இருந்தன - அவர் உரிய நடைமுறை இல்லாமல் கைது செய்யப்பட்டு எல் சால்வடாரில் உள்ள கொடூரமான CECOT சிறைக்கு நாடு கடத்தப்பட்டார்.

இன்னொரு போராட்டக்காரர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறுகையில்:

கேனரி நிலக்கரி சுரங்கத்தில் கில்மார் என்பவரை பிடித்து இழுத்தார்கள். அவர் மேரிலாந்தில் சட்டப்பூர்வமாக வசிப்பவர். … அவர்களால் அதை அவருக்குச் செய்ய முடிந்தால், மற்ற அனைவருக்கும் அதைச் செய்ய முடியும்.

ஏராளமான போராட்டக்காரர்கள் CECOT-ஐ (அங்கு ட்ரம்ப் நூற்றுக்கணக்கான வெனிசுலா குடியேற்ற மக்களை சட்டவிரோதமாக நாடு கடத்தியுள்ளார்) நவீனகால வதை முகாம் என்று சரியாக அடையாளம் கண்டனர். இந்த வாரம் தான், பாசிச சால்வடோர் ஜனாதிபதி நயீப் புக்கேலுடனான வெள்ளை மாளிகை சந்திப்பில், பல்லாயிரக்கணக்கான அமெரிக்க குடிமக்களை CECOT-க்கு நாடு கடத்தும் தனது நோக்கத்தை ட்ரம்ப் அறிவித்தார். இந்த நோக்கத்திற்காக பாரிய வதை முகாம்களின் வலையமைப்பை உருவாக்க புக்கேலை ஊக்குவித்தார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற போராட்டங்களின் போது வெளிப்படையாகத் தெரிந்த தீவிரமயமாக்கல் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், அது இன்னும் ஆரம்ப கட்டங்களில்தான் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, போராட்ட எதிர்ப்பு இயக்கத்திடம் பரந்த வரலாற்று அடித்தளம் கொண்ட சோசலிச நனவு இல்லை. அது தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றிய ஒரு புரட்சிகரக் கட்சியை முறையாக கட்டியெழுப்புவதன் மூலம்தான் அபிவிருத்தி அடைய முடியும்.

ஏப்ரல் 5 போராட்டங்களின் முக்கியத்துவத்தையும் ட்ரம்புக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பையும் பகுப்பாய்வு செய்த சோசலிச சமத்துவக் கட்சி பின்வருமாறு வலியுறுத்தியது:

(https://www.wsws.org/ta/articles/2025/04/09/ipte-a09.html)

இதுவரையில், அதற்கு ஒரு தெளிவான அரசியல் வேலைத்திட்டம் அல்லது அமைப்பு ரீதியான வெளிப்பாடு இல்லை. தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான மற்றும் நனவான சக்தியாக சூழ்நிலையில் தலையீடு செய்யவில்லை. தொழிற்சங்க எந்திரம் ட்ரம்பை ஆதரிக்கின்ற நிலைமைகளின் கீழ், ஜனநாயகக் கட்சி எந்த நிஜமான எதிர்ப்பையும் காட்டாத நிலைமைகளின் கீழ், வெகுஜன எதிர்ப்பின் மேலெழுச்சி ஒரு ஆரம்ப மற்றும் பெரிதும் தன்னிச்சையான வடிவத்தை எடுத்துள்ளது.

எவ்வாறிருப்பினும், இந்த தன்னியல்பான தன்மை அரசியல் தெளிவுபடுத்தலின் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பாசிசத்தின் நிஜமான இயல்பு குறித்த ஒரு புரிதலைக் கொண்டு தொழிலாள வர்க்கம் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும் —இது ஒரு தனிநபர் பிறழ்ச்சி அல்ல, மாறாக முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று நிலைமுறிவின் விளைபொருளாகும். ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் மட்டுமே எதிரி அல்ல. மாறாக ஜனநாயகக் கட்சி, தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அமெரிக்காவை ஆளும் நிதியியல் தன்னலக்குழுக்கள் உட்பட ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசும் ஆகும்.

இந்த மதிப்பீடு ஏப்ரல் 19 ஆர்ப்பாட்டங்களுக்கும் பொருந்தும். அவை பெரும்பாலும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தெளிவான தலைமையோ அல்லது நோக்குநிலையோ கொண்டிருக்கவில்லை. ஆனால் புறநிலை நிகழ்வுகள் தவிர்க்கவியலாமல் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த பிரிவுகளை தீவிரமயப்படுத்தி வருகின்றன, அமெரிக்க ஆளும் வர்க்கம் சர்வாதிகாரத்தை நோக்கி விரைந்து செல்கின்ற நிலையில், அவர்களின் பொருளாதார அந்தஸ்தும் அடிப்படை ஜனநாயக உரிமைகளும் கிட்டத்தட்ட ஒரே இரவில் தகர்க்கப்பட்டு வருகின்றன.

நியூ யோர்க் நகரம், சிக்காகோ, டெட்ராய்ட், சான் டியாகோ, சியாட்டில், வாஷிங்டன் டி.சி. மற்றும் பிற நகரங்கள் உட்பட அமெரிக்கா முழுவதும் நடந்த போராட்டங்களில், ஆர்ப்பாட்டக்காரர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரக் குழுக்களை அன்புடன் வரவேற்றனர். அவர்கள் “ட்ரம்ப் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவோம்!” என்ற சோசலிச சமத்துவக் கட்சி அறிக்கையின் ஆயிரக்கணக்கான பிரதிகளை விநியோகித்தனர். அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது:

பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்கவியலாததாகும். இதற்கு ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நனவுபூர்வமான தலையீடு தேவைப்படுகிறது. இன்று தொழிலாள வர்க்கம் மிகப்பெரியதாகவும், பூகோளரீதியில் ஒன்றோடொன்று இணைந்ததாகவும், முன்னெப்போதையும் விட மிகவும் சக்திவாய்ந்ததாகவும் உள்ளது. அதன் தீவிரமயமாக்கல் என்பது முதலாளித்துவத்தின் நெருக்கடியால் உந்தப்படும் ஒரு புறநிலை நிகழ்ச்சிப்போக்காகும்.

ஆனால், இந்த புறநிலை வலிமை நனவான அரசியல் நடவடிக்கையாக மாற்றப்பட்டாக வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) இந்த வரலாற்றுப் பணிக்குத் தேவையான புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்பி வருகின்றன.

அரசியல் குறித்த ஒரு தீவிர ஆய்வை நோக்கியும் சோசலிச மற்றும் தொழிலாள வர்க்க இயக்கத்தின் வரலாற்றை, எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தை முதலில் அதிகாரத்திற்குக் கொண்டுவந்த 1917 ரஷ்யப் புரட்சியின் அனுபவத்தை உட்கிரகித்துக் கொள்வதை நோக்கியும் திரும்புவதே இன்றியமையாத பணியாகும்.

மே 3 அன்று, உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) “பாசிசம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்” என்ற தலைப்பில் சர்வதேச மே தின இணையவழி பேரணியை நடத்துகின்றன.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைத்து, சோசலிச நனவை வளர்ப்பது மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர சோசலிச தலைமையை கட்டியெழுப்புவதற்கான அடித்தளங்களை அமைப்பது, ஆகியவற்றை முதன்மையான நோக்கமாகக் கொண்ட இந்தப் பேரணியில் ட்ரம்பிற்கு எதிரான போராட்டத்திலும், பாசிச அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்கும் அனைவரும் கலந்து கொள்வதற்கு திட்டமிட வேண்டும்.

சர்வதேச இணையவழி மே தினப் பேரணி நிகழ்வில் அனைரையும் பங்கேற்கச் செய்து அதன் வெற்றிக்கு உதவுங்கள்!

சோசலிச சமத்துவக் கட்சியில் சேருங்கள்!

சுரண்டலும், போரும், சர்வாதிகாரமும் அற்ற உலகை உருவாக்கப் போராடுங்கள்!

Loading