இலங்கை ட்ரொட்ஸ்கிசவாதி நந்த விக்ரமசிங்கவுக்கு புகழாரம்

இந்த மொழிபயெர்ப்பின் மூலக் கட்டுரைய இங்கு காணலாம்.

உலகெங்கிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களால் தோழர் விக்ஸ் என்று அழைக்கப்படும் தோழர் நந்த விக்கிரமசிங்க கடந்த ஞாயிற்றுக் கிழமை காலமானார். எமது வாசகர்களுக்கு அவர் அர்ப்பணித்துக்கொண்ட புரட்சிகர வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவருமான டேவிட் நோர்த், 2019 அக்டோபர் 15 அன்று தனது எண்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடிய, மூத்த இலங்கை ட்ரொட்ஸ்கிசவாதி நந்த விக்ரமசிங்கவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியை இங்கு பிரசுரிக்கின்றோம். விக்கிரமசிங்க, 1968 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவின் ஸ்தாபக உறுப்பினர் ஆவார்.

அன்பு தோழர் விக்ஸ்,

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சார்பாக, உங்கள் எண்பதாவது பிறந்தநாளில், எங்கள் இயக்கத்தின் வாழ்த்துக்களை நல்குவதோடு மட்டுமன்றி, உலக சோசலிசப் புரட்சிக்கான கட்சியைக் கட்டியெழுப்புவதில் உங்கள் வகிபாகத்தை பலமாக மெச்சுவதோடு எங்கள் நன்றியையும் நவில்வதில் பெருமிதம்கொள்கிறேன்.

நந்த விக்கிரமசிங்க [Photo: WSWS]

நான்காம் அகிலத்தின் ஒவ்வொரு காறியாளரும் மனிதகுலத்தின் தலைவிதியின் ஒரு துகளை தனது தோளில் சுமந்து செல்வதாக 1938ல் ட்ரொட்ஸ்கி அறிவித்தார். அரை நூற்றாண்டுக்கும் மேலான அரசியல் போராட்டங்களின் போக்கில், மனிதகுலத்தின் தலைவிதியின் ஒன்றுக்கு மேற்பட்ட துகள்களை நீங்கள் சுமந்து வந்திருக்கிறீர்கள் என்று ஒருவர் துணிச்சலாகச் சொல்லலாம்.

நான்காம் அகிலத்தின் கிட்டத்தட்ட முழு வரலாற்றையும் உள்ளடக்கியதே உங்கள் வாழ்வின் எண்பது ஆண்டுகளாகும். உங்கள் வாழ்க்கையின் காலவரிசை நமது இயக்கத்தின் வரலாற்றுப் போராட்டங்களில் பொதிந்துள்ளது. நீங்கள் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, ட்ரொட்ஸ்கி 25 ஜூலை 1939 அன்று 'இந்தியத் தொழிலாளர்களுக்கு ஒரு திறந்த கடிதம்' என்ற தனது புகழ்பெற்ற கடிதத்தை எழுதி ஒரு கூர்மையான எச்சரிக்கையை விடுத்தார்:

'இந்திய முதலாளித்துவம் ஒரு புரட்சிகரப் போராட்டத்தை வழிநடத்த இலாயக்கற்றது. அவர்கள் பிரிட்டிஷ் முதலாளித்துவத்துடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டு அதைச் சார்ந்து இருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் சொந்த சொத்துக்காக நடுங்குகிறார்கள். அவர்கள் வெகுஜனங்களைப் பற்றி பீதியடைந்துள்ளார்கள். என்ன விலை கொடுத்தாவது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்ய அவர்கள் முயற்சிப்பதோடு மேலிருந்து சீர்திருத்தங்கள் வரும் என்ற நம்பிக்கையை ஊட்டி இந்திய மக்களை மயக்குகிறார்கள். இந்த முதலாளித்துவத்தின் தலைவரும் தீர்க்கதரிசியும் காந்தி ஆவார். அவர் ஒரு போலித் தலைவரும் ஒரு பொய்யான தீர்க்கதரிசியும் ஆவார்!'

காந்தி பற்றிய இந்தக் கடுமையான மதிப்பீட்டிலிருந்து, ட்ரொட்ஸ்கி அத்தியாவசியமான மற்றும் தவிர்க்க முடியாத அரசியல் முடிவை எடுத்தார்:

'நாம் பொய்யான நம்பிக்கைகளைத் தூக்கி எறிவதோடு போலி நண்பர்களை விலக்கி வைக்க வேண்டும். நாம் நம் மீது, நமது சொந்த புரட்சிகர சக்திகள் மீது மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும். தேசிய சுதந்திரத்திற்கான, சுதந்திர இந்தியக் குடியரசுக்கான போராட்டமானது விவசாயப் புரட்சியுடனும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை தேசியமயமாக்குவதுடனும், நாட்டின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும், உழைக்கும் மக்களை அவர்களின் சொந்த தலைவிதியின் எஜமானர்களாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்ட பல பொருளாதார நடவடிக்கைகளுடனும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுடன் கூட்டணியில் உள்ள பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே இந்தக் கடமைகளை இட்டுநிரப்ப முடியும்.'

இந்தக் கடிதம் இலங்கையில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தீர்க்கமான அரசியல் உந்துதலை வழங்கியது. ட்ரொட்ஸ்கி மூலம் லங்கா சமசமாஜக் கட்சிக்கு கிடைத்த நிரந்தரப் புரட்சி முன்னோக்கின் அடிப்படையில் தனது அரசியல் நோக்குநிலையை தீர்மானித்துக்கொண்ட சிலோன் (இலங்கை) இளைஞர் தலைமுறையின் ஒரு பகுதியாக நீங்கள் இருந்தீர்கள்.

1964 ஆம் ஆண்டு லங்கா சமசமாஜக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக் கொடுத்ததை அடுத்து, உங்கள் நம்பிக்கைகளின் ஆழமும் தீவிரத்தன்மையும் பரிசோதனைக்கு உள்ளாகின. சிக்கலான செயல்முறையான அரசியல் தெளிவுபடுத்தலின் போக்கில், நீங்கள் அனைத்துலகக் குழுவுடன் உங்களை இணைத்துக் கொண்டு 1968 இல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினர் ஆனீர்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவின் தலைமைத்துவத்தில் நீங்கள் இருந்து வருகிறீர்கள். கொள்கைகள் மீதான உங்கள் அசைக்க முடியாத பிடிப்பு, உலகம் முழுவதும் உள்ள உங்கள் தோழர்களுக்கு ஒரு உத்வேகமாகும்.

தனிப்பட்ட முறையில், இப்போது ஒரு நூற்றாண்டின் மூன்றில் ஒரு பங்களவு படர்ந்துள்ள எங்கள் நீண்ட மற்றும் நெருக்கமான அரசியல் ஒத்துழைப்பை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன் என்பதை ஒப்புவிக்க அனுமதியுங்கள். அரசியல் பிரச்சினைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்த உங்கள் நேர்மையான மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டை நான் எப்போதும் பாராட்டி மிகவும் மதிப்பிட்டுள்ளேன். பல ஆண்டுகளாக இந்த ஒத்துழைப்பு ஆழமான மற்றும் நீடித்த நட்பின் பண்புகளைப் பெற்றுள்ளது.

மீண்டும் ஒருமுறை, இந்த எண்ணத்திலிருந்த அகலா மைல்கல்லை அடைந்ததற்கு வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கையின் ஒன்பதாவது தசாப்தத்தில், அனைத்துலகக் குழுவில் உள்ள உங்கள் அனைத்து தோழர்களுடன் சேர்ந்து, உலக சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கான போராட்டத்தைத் தொடரும்போது, ​​உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்களுடன்,

டேவிட் நார்த்

Loading