ட்ரம்ப் நிர்வாகம் ஈரான் மீது இராணுவத் தாக்குதலுக்கான முன்கூட்டிய திட்டமிடலில் ஈடுபட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ட்ரம்ப் நிர்வாகமும் அதிவலது இஸ்ரேலிய ஆட்சியும் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது ஓர் இராணுவத் தாக்குதலுக்கான விரிவான திட்டங்களை அபிவிருத்தி செய்துள்ளன என்பதை கடந்த வியாழனன்று நியூ யோர்க் டைம்ஸ் பிரசுரித்த ஒரு கட்டுரை தெளிவுபடுத்துகிறது. கூட்டுத் தாக்குதல் திட்டத்திற்கு இணங்க சமீபத்திய வாரங்களில் அப்பிராந்தியத்தில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் உட்பட அமெரிக்க இராணுவ வளங்கள்  குவிக்கப்பட்டுள்ள என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது.

டைம்ஸ் பத்திரிகையின்படி, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள் இரகசிய கமாண்டோ தாக்குதல்கள் முதல் பதுங்கு குழிகளை தகர்க்கும் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி ஒரு வார கால குண்டுவீச்சுத் தாக்குதல் வரையிலான செயல்பாட்டுத் திட்டங்களைப் பற்றி விவாதித்துள்ளனர். இது, வாஷிங்டன் முழு மத்திய கிழக்கையும் மில்லியன் கணக்கான மக்களுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு பிராந்தியப் போரில் மூழ்கடிக்கும் விளிம்பில் உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்காவின் இராணுவ-பாதுகாப்பு எந்திரத்துடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட பல டைம்ஸ் ஆசிரியர்களின் பெயரின் கீழ் வெளியிடப்பட்ட அந்தக் கட்டுரை, மே மாத தொடக்கத்தில் திட்டமிட்ட தாக்குதலில் ஈரானின் அணுசக்தி திறன்களை அழிக்கும் திட்டங்கள் குறித்து சியோனிச ஆட்சியும் வாஷிங்டனும் பல மாதங்களாக நெருக்கமான ஆலோசனையில் ஈடுபட்டு வருவதை வெளிப்படுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகையின் மேற்குப் பகுதியை விட்டு வெளியேறும்​​ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இடது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கைகுலுக்குகிறார். வாஷிங்டன், ஏப்ரல் 7, 2025 திங்கட்கிழமை [AP Photo/Mark Schiefelbein]

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆரம்பத்தில் “வான்வழியாகவும் கமாண்டோக்கள் மூலமும் தாக்குதல் நடத்தும் தனது விருப்பத்தை” வலியுறுத்தியதாக டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், “கடந்த செப்டம்பரில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கையின் ஆர்வம் கொண்ட வடிவமாக இந்தத் திட்டம் இருக்கிறது. அப்போது இஸ்ரேலியப் படைகள் சிரியாவில் ஹெலிகாப்டர்கள் மூலம் ஹிஸ்புல்லாவுக்கு ஏவுகணைகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நிலத்தடி பதுங்கு குழியை அழித்தன...

“கமாண்டோ தாக்குதல் யோசனையை கிடப்பில் போட்ட பிறகு, இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் மே மாதம் ஆரம்பத்திலிருந்து ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்திருக்கக்கூடிய ஒரு விரிவான குண்டுவீச்சு நடவடிக்கைக்கான திட்டத்தைப்பற்றி கலந்துரையாடத் தொடங்குவர். கடந்த ஆண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏற்கனவே ஈரானின் ரஷ்ய தயாரிப்பு S-300 வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டன. இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரானின் அணுஆயுத தளங்களைத் தாக்குவதற்கு ஒரு தெளிவான பாதையைக் கொண்டிருக்க அனுமதிக்கும் வகையில், அதன் எஞ்சியிருக்கும் வான் பாதுகாப்பு அமைப்புமுறைகள் மீது குண்டுவீச்சு தாக்குதல் தொடங்கியிருக்க வேண்டும்” என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் பத்திரிகைச் செய்தியானது, அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே நடந்து வரும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது என்பது தெளிவானது. கடந்த வார இறுதியில், ஓமானில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தைகள், 19 ஏப்ரல் 2025 அன்று ரோமில் தொடர திட்டமிடப்பட்டுள்ளன. ட்ரம்பின் சிறப்புத் தூதரும், பில்லியனர் சொத்து ஊகவணிகருமான ஸ்டீவ் விட்கோஃப், ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்தும், 2018 இல் ஐ.நா. ஆதரவிலான ஈரான் அணுசக்தி உடன்படிக்கையில் இருந்தும், ட்ரம்ப் ஒருதரப்பாக அமெரிக்காவை வெளியேற்றியதற்குப் பின்னர் ஈரான் மீது வாஷிங்டன் திணித்துள்ள மிருகத்தனமான தடையாணைகள் மீது சாத்தியமான நிவாரணம் குறித்தும் விவாதிக்க ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அபாஸ் அரக்சியை சந்திக்க உள்ளார்.

ஈரானுடன் ஒரு புதிய உடன்படிக்கையை எட்டுவதற்கு இரண்டு மாத காலக்கெடுவை நிர்ணயித்துள்ள ட்ரம்ப், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளார்.

முற்றிலும் உளவுத்துறை கசிவுகளை அடிப்படையாகக் கொண்டு கடந்த வியாழக்கிழமை வெளிவந்த டைம்ஸ்சின் கட்டுரை, இந்த அச்சுறுத்தலை பின்வருமாறு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: ஈரான் வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு அடிபணிய வேண்டும், அல்லது அது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவங்களின் ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு முகங்கொடுக்க வேண்டும்.

ஒரு பிரதான இராணுவ நடவடிக்கைக்கான இஸ்ரேலின் முன்னேறிய திட்டங்களுக்கு ட்ரம்ப் கடிவாளமிடுவது மற்றும் இராஜாங்க நடவடிக்கைகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக ஈரான் மீதான ஒரு தாக்குதலை “கைவிடுவது” ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கட்டுரை வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அங்கே கருத்து வேறுபாடுகள் இருக்கின்ற வரையில், அவை மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட தந்திரோபாய குணாம்சத்தைக் கொண்டுள்ளன என்பதையே முன்வைக்கப்பட்ட தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன. கட்டுரையின் ஒரு பத்தியில், துணை ஜனாதிபதி வான்ஸ் ஒரு கலந்துரையாடலில் இதுபற்றி வாதிட்டதாகவும், அதில் “ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள திரு.ட்ரம்பிற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பு இருந்தது என்றும், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், திரு.ட்ரம்ப் இஸ்ரேலிய தாக்குதலை ஆதரிப்பார் என்று திரு.வான்ஸ் கூறினார்” என்றும் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தாக குறிப்பிட்டது.

இந்த விடயத்தின் உண்மை என்னவென்றால், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஜனாதிபதிகளின் கீழ், அமெரிக்க ஏகாதிபத்தியம், தெஹ்ரானில் முதலாளித்துவ-மதகுருமார் ஆட்சியைக் கவிழ்த்து, முற்றிலுமாக வாஷிங்டனின் கட்டைவிரலின் கீழ் இருக்கக்கூடிய ஒரு கைப்பாவை அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஆட்சி மாற்றப் போருக்கு பல ஆண்டுகளாக தயாரிப்பு செய்து வருகிறது என்பதாகும். இதை மேற்கொள்வதற்கான தயாரிப்புகள் கடந்த 18 மாதங்களில் வியத்தகு முறையில் தீவிரமடைந்துள்ளன. அதேவேளையில், பைடென் மற்றும் ட்ரம்ப் ஆகியோரின் கீழ் அமெரிக்கா பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு தயக்கமற்ற ஆதரவை வழங்கியுள்ளது. லெபனான், சிரியா, அதற்கும் அப்பால், எரிசக்தி வளம் மிக்க மற்றும் மூலோபாய ரீதியாக முக்கியமான பிராந்தியத்தில், எல்லாவற்றிற்கும் மேலாக சீனா, ரஷ்யா மற்றும் அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அமெரிக்க மேலாதிக்கத்தைப் பாதுகாக்க, மத்திய கிழக்கின் வரைபடத்தை மீண்டும் வரைவதற்கான பரந்த உந்துதலின் முக்கிய அங்கமாக, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் பல முனைகளில் இஸ்ரேலின் அட்டூழியத்தை வாஷிங்டன் முழுவதுமாக பார்த்து வருகிறது.

ஈரானின் முதலாளித்துவ-மதகுருமார் ஆட்சி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடன் நல்லிணக்கம் காண முயலும் ஒரு “மிதவாத” அல்லது “சீர்திருத்த” கன்னைக்கும், சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமாக அணிதிரள்வதற்கு பொறுப்பேற்றுள்ள ஒரு “கடும்போக்கு” கன்னைக்கும் இடையிலான உள்மோதல்களால் நீண்டகாலமாக பிளவுபட்டுள்ளது.

ஈரானின் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் சமீபத்திய மாதங்களில் வாஷிங்டனுடன் புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதோடு, ஈரானுக்கு எதிரான இழிபுகழ்பெற்ற பருந்தான ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பொருளாதாரத் தடைகள் நிவாரணத்திற்கான தொடக்கத்தை வழங்கக்கூடும் என்றும் கூறினார். இறுதியில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கொமேனி, ஆய்வுப் பேச்சுவார்த்தைகளுக்கு தனது ஆசீர்வாதத்தை வழங்கினார். அதே நேரத்தில், தெஹ்ரான் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் நெருக்கமான உறவுகளைத் தொடர்ந்து தேடி வருகிறது. மேலும் அதன் அணுசக்தி திட்டம் குறித்து அவர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியும் வருகிறது.

கடந்த புதனன்று, மாஸ்கோவிற்கு விஜயம் செய்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி. அங்கு கொமேனியிடம் இருந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு ஒரு கடிதத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.

பாரம்பரிய கடும்போக்காளர்கள் வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு மௌனமாக தங்கள் ஒப்புதலை வழங்கியுள்ளனர் என்ற உண்மை, ஈரானின் முதலாளித்துவ-மதகுருமார் ஆட்சி எதிர்கொள்ளும் பிராந்திய மற்றும் உள்நாட்டு நெருக்கடிகளை பிரதிபலிக்கிறது. அமெரிக்க ஆதரவுடன் 2023 அக்டோபரில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் அதன் இனப்படுகொலையைத் தொடங்கியதிலிருந்து, பிராந்தியத்தில் ஈரானின் முக்கிய கூட்டாளிகளான காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, யேமனில் ஹௌதிகள் மற்றும் சிரியாவின் அசாத் ஆகியவை கடுமையாக பலவீனப்படுத்தப்பட்டுள்ளன அல்லது தூக்கியெறியப்பட்டுள்ளன. ஜூலை 2024 இல், தெஹ்ரானில் கௌரவ விருந்தினராக இருந்தபோது ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் படுகொலை செய்ததையும், அக்டோபர் மாத இறுதியில் ஈரானில் உள்ள முக்கிய இராணுவ இலக்குகள் மீது சியோனிச ஆட்சியின் ஏவுகணைத் தாக்குதல்களையும் தொடர்ந்து, ஈரானின் சொந்த பிரதேசத்தைப் பாதுகாக்கும் திறனும் தீவிரமாக கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

ஈரானில், ஆட்சி ஒரு சமூக வெடிமருந்துக் கிடங்கின் மேல் அமர்ந்திருக்கிறது. சமூக அழுத்தங்கள் மேற்கத்தைய பொருளாதாரத் தடைகளின் பேரழிவு தரும் தாக்கத்தால் தீவிரமடைந்துள்ளன. கடந்த ஜனவரியில், “சீர்திருத்தத்திற்கு” ஆதரவான நாளிதழில் வெளியான ஒரு அறிக்கை, 50 சதவீதமான மக்கள் மாதத்திற்கு 450 டாலர் வருமானத்துடன் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வதாகவும், ஈரானிய நாணயமான ரியால், செப்டம்பர் 2024 மற்றும் ஜனவரி 2025 க்கு இடையில் தோராயமாக 30 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், இது நுகர்வோர் விலைகளை மேலும் உயர்த்தியதாகவும் தெரிவித்தது.

இந்தக் காரணிகள் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் தோல்வி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை எந்த வகையிலும் தடுக்கவில்லை. டைம்ஸ் கட்டுரை தெளிவுபடுத்துவதைப் போல, ட்ரம்பும் அவரது ஆலோசகர்களும், இராணுவ நடவடிக்கையை நிராகரிப்பதற்குப் பதிலாக, வெறுமனே அதை தற்போதைக்கு நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளனர். பாசிச சிந்தனை கொண்ட ஒரு ஜனாதிபதி, ஈரானை நிர்மூலமாக்குவதாக பலமுறை அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் வளர்ந்து வரும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடி மற்றும் ட்ரம்பின் சர்வாதிகாரக் கொள்கைகளுக்கு அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சமூகப் பதட்டங்களை வெளிநாடுகள் மீது திசைதிருப்ப, ஈரானுக்கு எதிராக திடீரெனவும் தீவிரமாகவும் போரில் ஈடுபடுவது சாத்தியமான ஒரு உண்மையாகும்.

டைம்ஸ் கட்டுரையில் இப்போது குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஒரு பேரழிவு தரும் இராணுவத் தாக்குதலுக்கான உடனடி வாய்ப்பு, ஈரானிய ஆட்சிக்குள், மேற்கு நாடுகளை நோக்கி கடுமையான போக்கை ஆதரிக்கும் சக்திகளைப் போலவே, நல்லிணக்கத்தை ஆதரிக்கும் சக்திகளையும் எளிதாக வலுப்படுத்தக்கூடும்.

முந்தைய 2015 அணுசக்தி உடன்படிக்கையில் உள்ளடங்கியதை விட ஈரானின் படைத்துறைசாரா அணுசக்தி திட்டங்கள் மீது இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென்ற ட்ரம்பின் கடுமையான கோரிக்கைகளுக்கு அந்த ஆட்சி அடிபணிந்தாலும், ஓர் இராணுவ தாக்குதல் அச்சுறுத்தல் நீடிக்கும். அனைத்திற்கும் மேலாக, எந்தவொரு உடன்படிக்கையும் ஈரானின் தொலைதூர ஏவுகணை திட்டத்தின் வரம்புகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதை ட்ரம்ப் நிர்வாகம் சமிக்ஞை செய்துள்ளது —இது அமெரிக்க தாக்குதலுக்கு தெஹ்ரானின் மிக முக்கியமான தடுப்பு என்று வாதிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களுடன் (அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா) ஈரான் மற்றும் ஜேர்மனி இடையே 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈரான் அணுசக்தி ஒப்பந்தம், கூட்டு விரிவான செயல் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் UNSC தீர்மானம், சர்வதேச அணுசக்தி நிறுவனத்தால் (IAEA) தெஹ்ரான் ஒப்பந்தத்திற்கு “இணங்கவில்லை” என்று கருதப்பட்டால் அல்லது அக்டோபர் 2025 க்குள் புதிய ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மீதான ஐ.நா. தடைகளை “மீண்டும் கொண்டுவர” அனுமதிக்கிறது.

உக்ரேனில் ரஷ்யா மீது நடந்து வரும் அமெரிக்க/நேட்டோ போர் மற்றும் சீனாவுடனான ட்ரம்பின் வர்த்தகப் போர் ஆகியவற்றைக் கொண்டு பார்க்கையில், மேற்கத்திய சக்திகளின் உத்தரவின் பேரில் ஈரான் மீது ஐ.நா. தடையாணைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு பெய்ஜிங்கும் மாஸ்கோவும் உடன்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் சீனா ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளுக்கு மிக முக்கியமான வாடிக்கையாளராக உருவெடுத்துள்ளது. ஏனெனில், அமெரிக்கத் தடைகளை தவிர்க்க பெய்ஜிங் யுவானில் வணிகத்தை இதன் மூலம் ஒழுங்கமைக்க முடியும். மலிவான எண்ணெயை நிலையான விநியோகத்திற்கு ஈடாக, ஈரானில் 400 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய சீனா உறுதியளித்ததாக கூறப்படும் 25 ஆண்டு கூட்டாண்மை ஒப்பந்தத்தில் பொருளாதார ஒத்துழைப்பு முறைப்படுத்தப்பட்டது. மாஸ்கோவுடனான தெஹ்ரானின் உறவும் ஆழமடைந்துள்ளது. உக்ரேனில் ரஷ்யாவின் போருக்கு ஈரான் ட்ரோன்களை வழங்குவதோடு, அதற்கு ஈடாக ரஷ்யாவின் பாதுகாப்பு உபகரணங்களையும் ஈரான் பெறுகிறது. ஜனவரியில், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இராணுவ கூட்டாண்மை ஒப்பந்தம் ஏற்பட்டது. எனவே, பெய்ஜிங்கும் மாஸ்கோவும் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மீதான நேரடி அமெரிக்க தாக்குதலை, தவிர்க்க முடியாமல் அப்பிராந்தியத்தில் தங்கள் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களின் மீதான தாக்குதலாகக் கருதும். மேலும், ஒருபுறம் ரஷ்யாவும் சீனாவும், மறுபுறம் அமெரிக்காவுக்கும் இடையில் உக்ரேன், கிழக்கு ஐரோப்பா, இந்தோ-பசிபிக், மற்றும் பொருளாதார முன்னணியில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவை விரைவாக ஒரு முழுமையான போராக உருவெடுக்கக்கூடும்.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் “E3” என்று குறிப்பிடப்படும் ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு, ஈரான் மீது ஐ.நா. தடைகளை மீண்டும் விதிக்கும் அச்சுறுத்தல், தற்போதைய பேச்சுவார்த்தைகளில் செல்வாக்கு செலுத்த அவர்கள் வைத்திருக்கும் சில இராஜதந்திர கருவிகளில் ஒன்றாக உள்ளது. அதில் இருந்து அவர்கள் அனைவரும் ட்ரம்பால் கிட்டத்தட்ட விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதத்தில், IAEA இன் சமீபத்திய காலாண்டு ஆய்வு அறிக்கை, ஈரான் யுரேனியத்தின் அளவு 60 சதவிகிதம் தூய்மை நிலைக்கு செறிவூட்டப்பட்டுள்ளது, இது அணு ஆயுதத்தை உருவாக்க தேவையான 90 சதவிகிதத்தை விட சற்று குறைவாக உள்ளது என்பதை வெளிப்படுத்தியது. இதற்குப் பின்னர், E3 அமெரிக்காவுடன் இணைந்து ஈரானைக் கண்டித்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டது.

ஈரானின் பிராந்திய செல்வாக்கைக் குறைத்து அதன் அணுசக்தி திட்டத்தைக் குறைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் வாஷிங்டனுடன் அடிப்படை உடன்பாட்டில் இருந்தாலும், உக்ரேன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதன் அடிப்படையில் புட்டின் ஆட்சியுடன் இணக்கமாக இருக்க ட்ரம்ப் எடுத்த முயற்சிகள் மற்றும் ஐரோப்பிய சக்திகளுக்கு எதிரான அவரது சுங்கவரிகள் காரணமாக சமீபத்திய மாதங்களில் அட்லாண்டிக் நட்பு நாடுகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இது, ஈரானுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டுவதில் அவர்கள் ஒரே இலக்கைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பேச்சுவார்த்தைகள் அல்லது இஸ்ரேலிய ஆதரவுடன் வாஷிங்டன் ஒருதலைப்பட்ச இராணுவத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் மோதலில் ஈடுபடக்கூடும்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு புதிய உடன்பாடு ஏற்பட்டாலும், ஒரு பிராந்தியப் போர் அச்சுறுத்தல் கடுமையானதாகவே இருக்கும். அமெரிக்க ஏகாதிபத்திய கோரிக்கைகளுக்கு தெஹ்ரான் சரணடைவதென்பது, ஒருபுறம் வாஷிங்டனுக்கும் மறுபுறம் சீனா மற்றும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோதல்களைத் தீவிரப்படுத்தும். மேலும், அவை முன்பினும் நேரடியாக சண்டையிடுவதற்கு இட்டுச் செல்லும்.

அனைத்திற்கும் மேலாக, 1979 ஈரானிய புரட்சியைத் தொடர்ந்து தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கப்பட்ட பொருளாதார மற்றும் சமூக சலுகைகளில் எஞ்சியிருப்பதை அழிப்பதற்கான முதலாளித்துவ-மதகுரு ஆட்சியின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது இருக்கும். மேலும் இது ஈரானிய பொருளாதாரத்தை அமெரிக்க மூலதனத்தின் இரக்கமற்ற சுரண்டலுக்குத் திறந்து விடும். இந்த செயல்முறை நாட்டில் ஏற்கனவே கூர்மையான சமூகப் பதட்டங்களை மேலும் அதிகரித்து, ஆட்சியின் வீழ்ச்சியை அச்சுறுத்தும்.

மத்திய கிழக்கு முழுவதும் சூழ்ந்து வரும் போர் அபாயத்திலிருந்தும், போட்டியிடும் ஏகாதிபத்திய மற்றும் வல்லரசு நலன்களால் ஈரானிய மக்களுக்கு ஏற்படும் ஆழமடைந்து வரும் சமூக பேரழிவிலிருந்தும் விடுபடுவதற்கான ஒரே முற்போக்கான வழி சோசலிசத்திற்கான போராட்டமே ஆகும். ஈரானில் உள்ள தொழிலாளர்கள், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுடன், அவர்களின் தேசிய மற்றும் இன வம்சாவளியைப் பொருட்படுத்தாமல், ஏகாதிபத்திய மையங்களில் உள்ள தொழிலாளர்களுடன் தங்கள் போராட்டங்களை ஒன்றிணைத்து, உலகப் போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்த இயக்கம், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரோஷமான உந்துதலையும், முதலாளித்துவ-மதகுரு ஆட்சியின் திவாலான இஸ்லாமியவாதம் மற்றும் தேசியவாதம் ஆகிய இரண்டிற்கும் எதிராக தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தில் ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தை முன்நிறுத்த வேண்டும்.

Loading