இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஏப்ரல் 4 முதல் 6 வரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம், இரு தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்நகர்வுகளைக் குறிக்கிறது.
சீனாவுடனான பொருளாதார மற்றும் இராணுவ மோதலை அமெரிக்கா மூர்க்கத்தனமாக தீவிரப்படுத்தும் நிலையில், அதன் பிரதான மூலோபாய பங்காளியான புது தில்லியுடன், மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி/தே.ம.ச.) அரசாங்கம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மோடிக்கு உறுதியளித்தார்.
திசாநாயக்க, செப்டெம்பரில் பதவியேற்ற பின்பு, இலங்கைக்கு விஜயம் செய்த முதல் வெளிநாட்டுத் தலைவர் மோடி ஆவார். டிசம்பரில், இலங்கை ஜனாதிபதி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக தில்லிக்குச் சென்றார்.
வலதுசாரி இந்து பேரினவாத மோடிக்கு இலங்கையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சுதந்திர சதுக்கத்தில் இலங்கை ஆயுதப்படைகளின் 21 பீரங்கி குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தப்பட்டதுடன் சம்பிரதாய பூர்வமான அணிவகுப்பு மரியாதையுடன் அவருக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. வெளிநாட்டு பிரமுகர்களுக்கான இலங்கையின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான மித்ர விபூஷண் விருதை மோடிக்கு திசாநாயக்க வழங்கினார்.
உயர்மட்ட இந்தியக் குழுவில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் அடங்குவர்.
பாதுகாப்பு, எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, சுகாதாரம், வர்த்தகம் ஆகிய துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஏழு பிரதான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. தீவின் டிஜிட்டல் மாற்றத்திற்கான இந்திய உதவி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான நிதி, சுகாதாரத்தில் ஒத்துழைப்பு ஆகியவையே கவனம் செலுத்தப்பட்ட ஏனைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களாகும்.
1966 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே அது இந்திய-விரோத பேரினவாதத்தில் மூழ்கியிருந்தது. அதன் ஆவணங்கள், இட்சக்கணக்கான தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களை 'இந்திய விஸ்தரிப்புவாதத்தின்' ஏஜண்டுகள் என முத்திரை குத்தின.
1980களில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பு அரசாங்கத்தின் இனவாதப் போரை ஜே.வி.பி. முழுமையாக ஆதரித்தது. விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்குவதற்காக, 1987 ஆம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம், இந்திய அமைதி காக்கும் படைகள் தீவின் வடக்கிற்கு வரவழைக்கப்பட்டதை நாட்டைப் பிளவுபடுத்தும் ஒரு துரோகம் என கண்டனம் செய்த ஜே.வி.பி., அதற்கு எதிராக ஒரு பாசிச பிரச்சாரத்தை முன்னெடுத்து, அதன் உத்தரவுகளை மீறிய அரசியல் எதிரிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் படுகொலை செய்தது.
கடந்த மூன்று தசாப்தங்களில், பூகோளமயமாக்கல், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு போன்ற குறிப்பிடத்தக்க சர்வதேச மாற்றங்களுக்கு மத்தியில், ஜே.வி.பி. முதலாளித்துவ ஸ்தாபனத்தின் ஒரு கட்சியாக பரிணமித்துள்ளது. அது, அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளது. ஜே.வி.பி./தே.ம.ச., சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கனத் திட்டத்தை செயல்படுத்துவதாக பெருவணிகங்கள் மற்றும் சர்வதேச மூலதனத்திற்கும் வாக்குறுதியளித்தே கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தது.
வரவேற்பு விழாவில் பேசிய திசாநாயக்க, இந்தியா ஒரு பிராந்திய சக்தியாக மட்டுமன்றி, ஒரு 'உலக வல்லரசாக' உயர்ந்துள்ளதை பாராட்டினார். 'இந்தியாவின் பாதுகாப்புக்கு குழிபறிக்கும் நோக்கில் இலங்கைப் பகுதியை பயன்படுத்த யாரையும் அனுமதிப்பதில்லை என்ற எங்கள் நிலைப்பாட்டை பிரதமர் மோடியிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளேன்,' என்று அவர் கூறினார்.
உற்சாகமாக பதிலளித்த மோடி, 'எங்கள் பாதுகாப்பு நலன்கள் ஒன்றுசேர்க்கப்பட்டுள்ளன என்று நாங்கள் நம்புகிறோம்... எங்கள் பாதுகாப்பு ஒன்றையொன்று சார்ந்தது மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது' என்று அறிவித்தார். இந்தியாவின் தேசிய நலன்கள் குறித்த திசாநாயக்கவின் உணர்திறனுக்காக, அவருக்கு மோடி நன்றி தெரிவித்தார்.
திசாநாயக்க, தனது முன்னோடியான, மதிப்பிழந்த அமெரிக்க விசுவாசியான ரணில் விக்கிரமசிங்கவின் வெளியுறவுக் கொள்கையைத் தொடர்கிறார். விக்கிரமசிங்க 2023 ஜூலையில் இந்தியாவுக்கு விஜயம் செய்து, பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் 'கூட்டு நோக்கம்' என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ஒரு குறிப்பிடத்தக்க நகர்வாக, மோடியும் திசாநாயக்கவும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்தனர். இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த ஒப்பந்தத்தில் கூட்டுப் பயிற்சிகள், உளவுத்துறை பகிர்வு, பயிற்சியளித்தல், திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் உயர் மட்ட பரிமாற்றங்கள் ஆகியவை அடங்கும்.
ஐந்து வருட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். மோடிக்கும் திசாநாயக்கவிற்கும் இடையிலான உயர் மட்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து சனிக்கிழமை இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது பாதுகாப்பு ஒப்பந்தமாக இருப்பதோடு 1987 உடன்படிக்கையை விட இன்னும் முன் செல்கிறது.
கொழும்பு பாதுகாப்புக் குழு (CSC) மற்றும் இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பில் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. 2024 ஆகஸ்டில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கொழும்பு வருகையின் போதே சி.எஸ்.சி. தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியா, இலங்கை, மொரிஷியஸ் மற்றும் மாலத்தீவும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.
மின்சார வர்த்தகத்தை எளிதாக்குவதற்கு தென்னிந்தியாவின் புதிய மதுரைக்கும் இலங்கையின் மன்னாருக்கும் இடையில் 285 கி.மீ. உயர் மின்னழுத்த இணைப்பை உருவாக்குவதை உள்ளடக்கிய இன்னொரு பிரதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதில் பாக்கு நீரிணையில் 50 கி.மீ. வரையான கம்பிவடங்கள் நீருக்கடியில் இணைக்கப்படுவதுடன் இது 2030 ஆம் ஆண்டுக்குள் 340–430 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் பூர்த்தி செய்யப்பட உள்ளது.
எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு புது தில்லியும், கொழும்பும் ஒப்புக்கொண்டன. இந்தியாவின் தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) மற்றும் இலங்கையின், இலங்கை மின்சார சபையினதும் (CEB) கூட்டு முயற்சியான சம்பூர் சூரிய மின் சக்தி திட்டத்தை மோடியும் திசாநாயக்கவும் தொடக்கி வைத்தனர்.
கிழக்கு இலங்கையில் உள்ள ஒரு மூலோபாய துறைமுக நகரமான திருகோணமலையில் ஒரு எரிசக்தி மையத்தை உருவாக்க இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியங்களும் மற்றொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த திட்டத்தில் பல்தயாரிப்பு குழாய் அமைப்பதும், இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட எண்ணெய் தாங்கிகளைப் பயன்படுத்துவதும் உள்ளடங்குவதோடு ஓருபகுதி இந்திய எண்ணெய் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மூலோபாய நோக்கங்களுக்காக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த எண்ணெய் தாங்கி தொகுதி, உலகின் இரண்டாவது ஆழமான இயற்கை துறைமுகமான திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளதுடன் ஒரு முக்கியமான புவி-மூலோபாய சொத்தாகக் கருதப்படுகிறது.
துறைமுகம் மற்றும் இடப்பெயர்ப்பு வசதிகளுடன் கூடிய ஒரு தொழில்துறை மையமாக உருவாக்கப்பட உள்ள திருகோணமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய இருப்பை அதிகரிக்கும். வடக்கில் காங்கேசன்துறையில் ஏனைய துறைமுக வசதிகள் கட்டப்படும்.
திசாநாயக்க அரசாங்கம் எதிர்கொள்ளும் ஆழமான பொருளாதார நெருக்கடியை நன்கு அறிந்த மோடி, கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் உறவுகளை கட்டியெழுப்பும் நோக்கில் பல அடையாள சைகைகளைச் செய்தார். வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடனான இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவிற்கான இலங்கையின் 100 மில்லியன் டொலருக்கும் அதிகமான கடனை மானியங்களாக மாற்றுவதாக அவர் அறிவித்தார்.
இலங்கை பௌத்தர்களின் புனித வழிபாட்டுத் தலமான அனுராதபுரத்தில் உள்ள புனித ஸ்ரீ மகா போதியையும் மோடி வழிபட்டார். தீவின் ஒன்பது மாகாணங்களில் உள்ள 25 மாவட்டங்களிலும் 5,000 மத நிறுவனங்களுக்கு சூரிய மின் சக்தி கூரை அமைப்புகளை வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.
இலங்கை மீது 44 சதவீதம் மற்றும் இந்தியா மீது 27 சதவீத வரி விதிப்பு உட்பட, குறிப்பாக சீனாவுடன் ஒரு வர்த்தகப் போரை தூண்டிவிட்டு, ஒவ்வொரு நாட்டின் மீதும் 'எதிரீடு' வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையிலேயே மோடியின் வருகை நிகழ்ந்தது. இந்த வாரம் பெரும்பாலான நாடுகள் மீதான வரிகளை அவர் 90 நாட்களுக்கு இடைநிறுத்தியிருந்தாலும், ட்ரம்ப் சீனாவுடனான வரிப் போரை வியத்தகு முறையில் 125 சதவீதமாக உயர்த்தியுள்ளமை, அவரது நிர்வாகத்தின் பொருளாதாரப் போரின் மைய இலக்காக சீனா இருப்பதையும் இராணுவ மோதலுக்கான முன்னேறிய தயாரிப்புகளையும் இந்தியாவும் இலங்கையும் இதற்குள் இழுக்கப்படுவதையும் தெளிவுபடுத்துகிறது.
மேலும் படிக்க
- இலங்கையின் புதிய ஜனாதிபதி தனது முதல் விஜயமாக இந்தியாவுக்கு பயணித்தார்
- சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் சர்வாதிகாரத்துக்கும் போருக்கும் எதிராக, சோசலிசத்திற்காக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றது
- இலங்கை ஜனாதிபதி பெருவணிக மன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்துவதாக உறுதியளிக்கிறார்