இலங்கையின் மூத்த ட்ரொட்ஸ்கிசவாதி நந்த விக்ரமசிங்க 85 வயதில் காலமானார்

உலகெங்கிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களால் தோழர் விக்ஸ் என்று அழைக்கப்படும் தோழர் நந்த விக்கிரமசிங்கவின் மறைவை இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கிறது.

இலங்கையில் உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) தற்போதைய தேசிய ஆசிரியர் கே. ரட்நாயக மற்றும் மறைந்த தோழர்களான கீர்த்தி பாலசூரிய மற்றும் விஜே டயஸ் ஆகியோருடன் விக்ஸ் 1968 ஜூனில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) ஸ்தாபக உறுப்பினராக இருந்தார்.

நந்த விக்கிரமசிங்க [Photo: WSWS]

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கபட்டதில் இருந்து, விக்ஸ், அவரது உடல்நலக் குறைவு காரணமாக கட்சியின் அன்றாட அரசியல் பணிகளில் இருந்து ஓய்வுபெற்றது வரை, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் / சோசலிச சமத்துவக் கட்சியின் தலைமைத்துவத்தில் ஒரு முன்னணி மற்றும் முக்கிய பங்கை வகித்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் அவர் தனது 85 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தனது கடைசி நாட்கள் வரை, மோசமான உடல்நலக் குறைபாடுகள் இருந்தபோதிலும், இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர்களுடன் வழக்கமான அரசியல் மற்றும் தத்துவார்த்த கலந்துரையாடல்களில் அவர் ஈடுபட்டார்.

தோழர் விக்ஸின் பூதஉடல் ஏப்ரல் 23 புதன்கிழமை, மற்றும் ஏப்ரல் 24 வியாழக்கிழமை, ஆகிய நாட்களில் அவரது தோழர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் இறுதி அஞ்சலிக்காக கொழும்பு 8, பௌத்தலோக மாவத்தை, 483 இல் அமைந்துள்ள ஜெயரத்ன ரெஸ்பெக்ட் ஃபியூனரல் மலர்சாலையில் வைக்கப்படும். இறுதி ஊர்வலம் வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மலர்சாலையில் இருந்து தொடங்கும். இறுதி அஞ்சலி கூட்டமானது பிற்பகல் 3 மணிக்கு பொரலை கனத்தை பொது மயானத்தின் புதிய தகனக்கூடத்திற்கு அருகிலுள்ள மண்டபத்தில் இடம்பெறும். தகனம் மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.

தோழர் விக்ஸை அறிந்த அனைவரையும் மரணச் சடங்கில் கலந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்துமாறும், தங்களது இரங்கல் செய்திகளையும் நினைவுகளையும் எங்களுக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்கிறோம். வரும் நாட்களில் விரிவான இரங்கல் சரிதையை வெளியிடுவோம்.