ஜேர்மன் பாராளுமன்றம் நாஜிக்கள் மீதான வெற்றியைக் குறிக்கும் விழாவில் இருந்து ரஷ்யாவை விலக்கி வைத்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

பேர்லினில், ஜேர்மன் பாராளுமன்றம் மீது சோவியத் கொடியை செம்படை வீரர்கள் ஏற்றுகின்றனர், மே 2, 1945.

ஜேர்மன் பாராளுமன்றம் (Bundestag) மே 8 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80 வது ஆண்டு நிறைவின் முக்கிய நினைவேந்தல் நிகழ்வில் இருந்து ரஷ்யா மற்றும் பெலாரஸ் தூதர்களை விலக்கி வைத்துள்ளது. பசுமைக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அன்னலெனா பேர்பாக் தலைமையிலான வெளியுறவு அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் பாராளுமன்ற நிர்வாகம் தனது முடிவை எடுத்துள்ளது.

ஜேர்மனியின் கூட்டாட்சி மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட வெளியுறவு அமைச்சகத்தின் துண்டுப்பிரசுரம், ஜேர்மனியில் நடைபெறும் அனைத்து நினைவேந்தல் நிகழ்வுகளுக்கும், இரு நாடுகளின் பிரதிநிதிகளை அழைப்பதற்கு எதிராக அறிவுறுத்தல் விடுத்துள்ளது. மேலும், இந்த நாடுகளின் பிரதிநிதிகள் அறிவிக்கப்படாமல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் “தங்கள் தனியுரிமைகளைப் பயன்படுத்திக் கொண்டு” அவர்களை நிகழ்ச்சி இடம்பெறும் இடங்களிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் துண்டுப்பிரசுரம் அறிவுறுத்துகிறது.

சர்வதேச சட்டத்தின்படி, நாஜிக்களுக்கு எதிரான போரில் பெரும் இழப்பை அனுபவித்த ரஷ்யா, சோவியத் ஒன்றியத்தின் வாரிசு நாடாக இருந்து வருகிறது. இரண்டாம் உலகப் போரில் சுமார் 10 மில்லியன் சோவியத் வீரர்கள் இறந்தனர். நாஜி ஆட்சியை நிபந்தனையின்றி சரணடைய கட்டாயப்படுத்திய பேர்லின் போரில் மட்டும், 170,000 வீரர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர், மேலும் 500,000 பேர் காயமடைந்தனர். இதற்கும் மேலாக, யூதர்கள் அல்லது கம்யூனிஸ்டுகள் அல்லது நாஜிக்களின் விரிவாக்கத் திட்டங்களுக்குத் தடையாக இருந்தவர்கள், நாஜிக்களால் சுட்டுக் கொல்லப்பட்டும், விஷவாயு செலுத்தப்பட்டும் மற்றும் பட்டினிக்கு உள்ளாக்கப்பட்டும் குறைந்தது 15 மில்லியன் சோவியத் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

ரஷ்யாவின் 144 மில்லியன் மக்களில், நாஜி பயங்கரவாதத்தினாலோ அல்லது அதற்கு எதிரான போரிலோ நெருங்கிய உறவினர்களை இழக்காதவர்கள் எவரும் இல்லை. ரஷ்யாவின் பெருநகரமான லெனின்கிராட்டின் 28 மாத கால முற்றுகையில் மட்டும் 1.1 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், இப்பொழுது இந்த நாட்டின் பிரதிநிதிகள் ஜேர்மன் பாராளுமன்றத்தில் மட்டுமல்ல, இறந்துபோன பல்லாயிரக்கணக்கான சோவியத் சிப்பாய்கள் ஓய்வெடுக்கும் கல்லறைகளில் இடம்பெறும் அனைத்து நினைவு நிகழ்வுகளில் இருந்தும் ஒதுக்கப்பட்டு உள்ளனர்.

ரஷ்யா விலக்கி வைக்கப்பட்டிருப்பது மிகவும் வெளிப்படையான ஆத்திரமூட்டலாகும். மேலும், ஆளும் கட்சிகளைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகளால் கூட இது புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. உதாரணமாக, 71 வயதான ரஷ்ய தூதர் செர்ஜி நெட்ஷேவ், இரண்டாம் உலகப் போரில் ஜேர்மன் மண்ணில் இடம்பெற்ற மிகப்பெரிய போரில் 33,000ம் செம்படை வீரர்கள் வீழ்ந்த சீலோவில் (Seelow) நடந்த நினைவேந்தலில் கலந்துகொண்டார். பேர்லினின் அழுத்தம் இருந்தபோதிலும், பொறுப்பில் இருந்த உள்ளூர் அரசியல்வாதிகள் அவரை வெளியேற்ற மறுத்துவிட்டனர்.

பிராண்டன்பேர்க் மாநில சட்டமன்றத்தின் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) உறுப்பினர் சினா ஷோன்ப்ரூன் பொது ஒளிபரப்பு நிறுவனமான ARD-யிடம், “தனது சக நாட்டு மக்களை இங்கு நினைவுகூர விரும்பும் ஒருவரை நான் அழைக்காமல் இருக்க முடியாது. எனக்கு இது புரியவில்லை. இது ராஜதந்திரம் அல்ல” என்று குறிப்பிட்டார். கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி (CDU) மாவட்ட கவுன்சிலர் ஃப்ரீட்மேன் ஹான்கே, “80 ஆண்டுகள் என்பது மறக்கமுடியாத நினைவுநாள். அன்று நடந்ததை நான் பாராட்டவில்லை என்று இன்று முதல் சொல்ல முடியாது” என்று குறிப்பிட்டார். மேலும், தற்செயலாக, போர் கல்லறைகள் தொடர்பான பிரச்சினைகளில் அவர்கள் ரஷ்ய தூதரகத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக கருத்து தெரிவித்தார்.

ரஷ்யா இந்த “நினைவேந்தல் நிகழ்வுகளை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அவற்றை உக்ரேனுக்கு எதிரான அதன் ஆக்கிரமிப்புப் போருடன் முறையற்ற விதத்தில் தொடர்புபடுத்தலாம்” என்றும் கூறி வெளியுறவு அமைச்சகம் தனது ஆத்திரமூட்டலை நியாயப்படுத்தியது. என்ன ஒரு மூர்க்கத்தனமான பொய்! நினைவேந்தல் நிகழ்வுகளை போர் நோக்கங்களுக்காக எவரேனும் கருவியாக்குகிறார்கள் என்றால், அதனை ஜேர்மன் அரசாங்கமும் பேயர்பொக்கின் வெளியுறவு அமைச்சகமும்தான் மேற்கொள்கின்றன. ஹிட்லரின் வல்லரசு அரசியலை மீண்டும் உயிர்ப்பித்து, ரஷ்யாவிற்கு எதிராக மீண்டும் போரை நடத்துவதால், அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளில் இருந்து ரஷ்யாவின் பிரதிநிதிகளை விலக்கி வைக்கிறார்கள்.

அமெரிக்க அரசாங்கத்தைத் தவிர, வேறெந்த அரசாங்கமும் ஜேர்மன் அரசாங்கத்தைப் போன்று உக்ரேனிய போரில் இந்தளவுக்கு பெரும் தொகைகளை முதலீடு செய்திருக்கவில்லை. ஜேர்மன் டாங்கிகள், ஏவுகணைகள் மற்றும் கையெறி குண்டுகள் மீண்டுமொருமுறை ரஷ்ய சிப்பாய்களைக் கொன்று வருகின்றன. மேலும், ரஷ்யாவுக்கு எதிரான போருக்காக உக்ரேனிய துருப்புகள் ஜேர்மனியில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

மாஸ்கோ உடனான ஒரு போர்நிறுத்தத்திற்கு உடன்படுவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு பேர்லின் பீதியுடன் எதிர்வினையாற்றியுள்ளது. இரத்தம் சிந்திவரும் உக்ரேனிய இராணுவம் தற்காப்பில் இருந்தாலும், போரைத் தொடர்ந்து நடத்துவதற்கு கிடைக்கக்கூடிய அனைத்து வழிவகைகளையும் பேர்லின் அணிதிரட்டி வருகிறது. ரஷ்யாவுடன் ஆயுதமேந்திய மோதலில் வெற்றி பெற, சில ஆண்டுகளுக்குள், ஜேர்மன் இராணுவம் போருக்குத் தயாராக இருக்க வேண்டும். இதற்காக, CDU/CSU, SPD மற்றும் பசுமைக் கட்சியினரின் வாக்குகளுடன் ஒரு டிரில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள போர் நிதிக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மேல் சபையில் உள்ள இடது கட்சியின் பிரதிநிதிகளும் இதற்கு ஒப்புதல் அளித்தனர்.

உத்தியோகபூர்வ பிரச்சாரம் கூறுவதைப் போல, இந்த பிரம்மாண்டமான மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கும் “பாதுகாப்புக்கும்” எந்த சம்பந்தமும் இல்லை. மாறாக, உக்ரேன் போருடன் ஸ்தம்பித்துவிட்ட கிழக்கு ஐரோப்பா நோக்கிய பொருளாதார மற்றும் அரசியல் விரிவாக்கத்தைத் தொடர்வது, ரஷ்யா மீது ஒரு இராணுவத் தோல்வியைத் திணிப்பது, அந்த பெரிய நாட்டை உடைப்பது, மற்றும் அதன் கனிம வளங்கள் மற்றும் பிற செல்வங்களை சுரண்டுவது என்பதே இதற்கான நோக்கங்களாகும். முதலாம் உலகப் போரில் இரண்டாம் வில்ஹெல்மும், இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரும் பின்தொடர்ந்த அதே இலக்குகள்தான் இவைதான்.

இரண்டாம் உலகப் போரின் முடிவின் நினைவுகூரல்களில் இருந்து ரஷ்யா தடை செய்யப்படுவதற்கும், வரலாறு திட்டமிட்டு மாற்றி எழுதப்படுவதற்கும் இதுவே காரணமாகும். ஜேர்மன் அரசாங்கத்தின் சிடுமூஞ்சித்தனமான அணுகுமுறை, அது உக்ரேனிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளை திறந்த கரங்களுடன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு வரவேற்கிறது என்ற உண்மையால் எடுத்துக்காட்டப்படுகிறது.

ஜேர்மனியின் அழித்தொழிப்பு போரில் கொல்லப்பட்ட 28 மில்லியன் மக்களில், முக்கிய போர் முனைகளில் ஒன்றாக இருந்த உக்ரேனின் மில்லியன் கணக்கான மக்களும் அடங்குவர். அவர்கள் செம்படையில் இணைந்து போரிட்டதால், சோவியத் ஒன்றியத்தின் குடிமக்களாக இருந்ததால் அல்லது யூதர்களாக இருந்ததால் அழித்தொழிக்கப்பட்டனர்.

மறுபுறம், வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆட்சி முற்றிலும் மாறுபட்ட பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. ஜேர்மன் இராணுவத்தின் பக்கம் நின்று அதன் குற்றங்களில் பங்கெடுத்த நாஜி ஒத்துழைப்பாளர்களை அது போற்றிப் புகழ்கிறது, அவர்களுக்கு நினைவுச் சின்னங்களை எழுப்புகிறது, தெருக்களுக்கு அவர்களுடைய பெயர்களை சூட்டுகிறது. உதாரணமாக, பல ஆண்டுகளாக ஜேர்மனியில் உக்ரேனின் தூதராகப் பிரதிநிதித்துவப்படுத்திய ஆண்ட்ரிஜ் மெல்னிக், பாசிச ஸ்டீபன் பண்டேராவின் வெறித்தனமான அபிமானியாக உள்ளார். அவருடைய உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு (OUN) பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள், யூதர்கள் மற்றும் போலந்து மக்களின் இரத்தத்தில் நனைந்திருந்தது.

மேலும், நாஜிக்களின் குற்றங்களை அற்பமாக்கி, இரண்டாம் உலகப் போருக்கு சோவியத் ஒன்றியமே பகுதியளவு பொறுப்பு என்று அறிவிக்கின்ற ஒரு புதிய வரலாற்றுக் கதையை, ஜேர்மன் பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றன. இந்த வரலாற்று பொய்யைப் பரப்பிவரும் “ஐரோப்பா வழியாகப் பிளவு” என்ற கண்காட்சி மீதான ஒரு விரிவான விமர்சனத்தை உலக சோசலிச வலைத் தளம் சமீபத்தில் வெளியிட்டது. மேலும் இது குடிமைக் கல்விக்கான பெடரல் ஏஜென்சி மூலம் பள்ளிப் பாடங்களுக்கு ஒரு கட்டமைப்பாக செயல்படவும் நோக்கம் கொண்டுள்ளது.

இந்த அபிவிருத்தியானது, முன்னணி CDU/CSU அரசியல்வாதிகள் மற்றும் புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் —ஜென்ஸ் ஸ்பான், ஜோஹான் வேட்ஃபுல் மற்றும் மத்தியாஸ் மிடெல்பெர்க் உட்பட— அதிவலதுசாரி AfD கட்சியுடனான உறவுகளை இயல்பாக்குவதையும், “வேறெந்த எதிர்க்கட்சியைப் போலவே” அதைக் கையாள்வதை ஆதரிப்பதன் மூலம் தெரிவிக்கப்படும் அறிக்கைகளுடன் கைகோர்த்து செல்கின்றனர். 1,000 ஆண்டுகளுக்கும் அதிகமான பெருமைமிகு ஜேர்மன் வரலாற்றில் நாஜி ஆட்சியை “பறவை எச்சத்தின்” ஒரு துளியாக குறைத்துக் காட்டும் இந்த அதிவலதுசாரிக் கட்சி, நாஜி அபிமானிகளால் நிரம்பி வழிகிறது.

ஒரு மாதத்திற்கு முன்னர், “ஜேர்மன் நாடாளுமன்றம் போருக்காக 1 ட்ரில்லியன் யூரோ ஒதுக்க உடன்படுகிறது” என்ற கட்டுரையில் நாம் பின்வருமாறு எழுதினோம்:

இந்தப் பிரம்மாண்டமான ஆயுத தளவாட தொகுப்பின் நிஜமான நோக்கம், அமெரிக்க கட்டுப்பாட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளக் கூடிய, ஐரோப்பாவில் மேலாதிக்கம் செலுத்தக் கூடிய, மற்றும் உலகை வன்முறையாக மறுபங்கீடு செய்வதற்கான போராட்டத்தில் ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற ஏனைய பெரும் சக்திகளை எதிர்த்து நிற்கக் கூடிய ஒரு பிரதான இராணுவ சக்தியாக ஜேர்மனியை மீண்டும் மாற்றுவதாகும். ஹிட்லரின் இராணுவம் சரணடைந்து எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் இராணுவவாதம் அதன் போர்க் குற்றங்களுக்காக அதன் மீது திணிக்கப்பட்டிருந்த கடைசி தளைகளையும் தூக்கி எறிந்து கொண்டிருக்கிறது.

இரண்டாம் உலகப் போரின் முடிவைக் குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளில் இருந்து ரஷ்யாவை ஆத்திரமூட்டும் வகையில் ஒதுக்கியிருப்பது இந்த மதிப்பீட்டை ஊர்ஜிதம் செய்கிறது. இது உறுதியாக நிராகரிக்கப்பட வேண்டும்.

Loading