இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீது தோட்ட நிர்வாகமும் பொலிசும் நான்கு வருடங்களாக முன்னெடுத்து வரும் கொடூரமான பழிவாங்கல் நடவடிக்கைகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) உட்பட தோட்டத் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தொடர்கின்றன.
2021 பெப்ரவரி 17 முதல் மார்ச் 22 வரை, மஸ்கெலியாவின் ஓல்டன் தோட்டத்தில் 22 தொழிலாளர்களும் இரண்டு இளைஞர்களும் பொய் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், தோட்டத்தை நிர்வகிக்கும் ஹொரண பெருந்தோட்டக் கம்பெனி, கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 38 தொழிலாளர்களை உடனடியாக வேலை நீக்கம் செய்தது. தோட்ட முகாமையாளர் சத்தியமூர்த்தி சுபாஷ் நாராயணன் மற்றும் உதவி முகாமையாளர் அனுஷன் திருச்செல்வத்தின் மீதும் தாக்குதல் மேற்கொண்டதாக தொழிலாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போதிலும், தொழிலாளர்கள் அதை தொடர்ந்து உறுதியாக மறுத்துவருகின்றனர்.
இறுதியாக இரண்டு இளைஞர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்ட அதேவேளை, 22 தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருப்பதால், அவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மஸ்கெலியாவில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹட்டன் நீதவான் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்த தொழிலாளர்கள் மீது இன்னும் எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படாத போதிலும், அவர்களை மே 28 அன்று மீண்டும் நீதிமன்றத்திற்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ள 38 தொழிலாளர்களும் இன்னும் நிலையான தொழில் கிடைக்காமல் பிழைப்புக்காகப் போராடுகின்றனர்.
2021 தொடக்கத்தில் தோட்டத் தொழிலாளர்களின் பரந்த வேலை நிறுத்தத்தின் போதே ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை தொடங்கியது. பெப்பிரவரி 2 அன்று வேலை நிறுத்தத்தை தொடங்கிய 500 தொழிலாளர்கள், பின்னர் பெப்ரவரி 5 அன்று இ.தொ.கா. முன்னெடுத்த தேசிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். தங்கள் தினசரி சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்கக் கோரி சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
நிர்வாகம் தொடர்ச்சியாக வேண்டுமென்றே மேற்கொண்ட ஆத்திரமூட்டல்களை எதிர்கொண்ட ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள், மார்ச் 18 வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இ.தொ.கா. மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களால் தனிமைப்படுத்தப்பட்ட ஓல்டன் தொழிலாளர்கள், ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக பெப்ரவரி 17 அன்று முகாமையாளரின் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்தினர். இதனை பற்றிக்கொண்ட நிர்வாகம், தொழிலாளர்கள் தோட்ட உத்ததியோகத்தர்களை தாக்கினார்கள் என்ற கதையை சோடித்தது.
இந்த ஆண்டு ஜனவரி 9 அன்று, வேலை நீக்கம் செய்யப்பட்ட 38 தொழிலாளர்களில் 13 தொழிலாளர்கள், வேலை நீக்க காலத்துக்கும் உரிய ஊதியத்துடன் தங்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தக் கோரி, ஹொரண பெருந்தோட்டக் கம்பனிக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை, ஹட்டன் தொழில் நீதி மன்றம் தள்ளுபடி செய்தது மட்டுமன்றி, இந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் வழக்கு செலவுக்காக ஹொரண பெருந்தோட்டக் கம்பனிக்கு ரூபா 7,500 செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
முகாமையாளர்களை தாக்கியதால்தான் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள் என்ற பெருந்தோட்டக் கம்பனியின் சட்டத்தரணிகள் முன்வைத்த குற்றச் சாட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு அடிப்படையற்றது என தீர்ப்பளித்தார். 17 பெப்ரவரி 2021 அன்று தொழிலாளர்கள் முகாமையாளரின் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கியதோடு வீட்டை சேதப்படுத்தியதாக கம்பனி சட்டத்தரணிகள் கூறினர். ஆனால், இது தொடர்பான குற்றச்சாட்டை பொலிசார் சுமத்தவில்லை. கடந்த டிசம்பரில், இலங்கை சட்டமா அதிபர், முகாமையாளரின் வீட்டிற்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக தொழிலாளர்களுக்கு எதிராக குற்றம்சாட்ட போதுமான ஆதாரம் இல்லை என்று தெரிவித்தார்.
பொலிசார் இன்னும் ஒரு குற்றச்சாட்டை கூட தொழிலாளர்களுக்கு எதிராக சுமத்தியிருக்காத நிலையில், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் தொழிலாளர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள போதிலும், தொழில் நீதிமன்ற நீதிபதி இந்தப் போலியான கூற்றுக்களை ஏற்றுக்கொண்டார். உண்மையில், கடந்த டிசம்பரில், இலங்கையின் தலைமை சட்ட அதிகாரியான சட்ட மா அதிபர், முகாமையாளரின் வீட்டை சேதப்படுத்தியதாக தொழிலாளர்கள் மீது குற்றம் சாட்ட போதுமான ஆதாரங்கள் இல்லை என்று ஹட்டன் பொலிசாரிடம் தெரிவித்தார்.
13 தொழிலாளர்களுக்காக தொழில் நீதிமன்றில் வாதாடிய இ.தொ.கா. தொழிற்சங்க இயக்குநர் T.F. கதிர்வேலு, “இதற்கு முன்னர் இப்படி ஒரு தீர்ப்பு கொடுக்கப்படவில்லை”, இது 'தொழிலாளர்களுக்கு எதிரானது' என்று குறிப்பிட்டார். இலங்கை சட்டத்தின்படி மேல் நீதி மன்றில் 30 நாட்களுக்குள் ஒரு மேன் முறையீட்டை செய்தால், தொழில் நீதிமன்ற தீர்ப்பை சவால் செய்ய முடியும். எனினும், இ.தொ.கா. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் முறையிட மறுத்துவிட்டது.
அதற்குப் பதிலாக, கதிர்வேல் சில தொழிலாளர்களிடம், நீதிபதியின் உத்தரவைப் பின்பற்றி, ஒவ்வொருவரும் நிறுவனத்திற்கு 7,500 ரூபாய் செலுத்தினால், அவர்கள் தங்கள் வேலையைத் திரும்பப் பெறலாம் என்று கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிற்சங்கமானது அரசு மற்றும் கம்பனியுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது.
இதேவேளை, 17 தொழிலாளர்கள் தனிப்பட்ட முறையில் சட்டத்தரணியை ஒழுங்கு செய்து மீண்டும் வேலை வழங்கக் கோரி தொழில் நீதி மன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதன் தீர்ப்பு எதிர் வரும் மாதம் எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் நீதிமன்றினால் ஓல்டன் தோட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதானது இ.தொ.கா. உட்பட தோட்டத் தொழிற்சங்கங்க அதிகாரத்துவத்தின் துரோகத்தையும் தோட்ட நிர்வாகத்தின் ஒடுக்குமுறையையும் மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இ.தொ.கா. தலைமைத்துவம், ஆரம்பத்தில் இருந்தே தொழிலாளர்களை பாதுகாக்க மறுத்தது. பொலிஸ் 'சந்தேகநபர்களைத்' தேடிய போது, தொழிலாளர்களின் பெயர் பட்டியலை இ.தொ.கா. தலைவர்கள் வழங்கினர். எதிர்கால அடக்குமுறைகளை நிறுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் எனக் கூறிக்கொண்டு, சில தொழிலாளர்களை பொலிசில் சரணடையுமாறு இ.தொ.கா. அலுவலர்கள் அறிவுறுத்தினர்.
ஹொரண பெருந்தோட்டக் கம்பனி இலங்கையின் உயர்ந்த இலாபம் ஈட்டும் தொழில்துறை குழுமமான ஹேலிஸ் குழுமத்திற்குச் சொந்தமானதாகும். ஓல்டன் தோட்டத்தில் அதன் நடவடிக்கைகள், வெறுமனே ஒரு தோட்டத்தின் தொழிலாளர்களுக்கு எதிரானது மட்டுமல்லாது நாடு பூராகவும் உள்ள அதிகரித்துவரும் போராளிக் குணம் கொண்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு பாடத்தை கற்பிக்கும் நடவடிக்கையாகும்.
2019 முதல் 150,000 தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபா தினசரி சம்பளத்திற்காக நடத்திய தொடர் வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பாகமாகவே இச்சம்பவம் இடம் பெற்றது. உலக சந்தையில் தொழிற்துறையின் போட்டித் தன்மையை குறைக்கும் எனக் கூறி, தோட்டக் கம்பனிகள் இந்த கோரிக்கையை கடுமையாக எதிர்த்தன.
'வருமானப் பகிர்வு திட்டங்களை' ஏற்க வேண்டும் என பெருந்தோட்ட முதலாளிமார் தொழிலாளர்களிடம் கோருகின்றனர். இதில் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் சேர்ந்து சுமார் 1,000 தேயிலை செடிகளை பராமரித்து, தேயிலைக் கொழுந்தைப் பறித்து தோட்டக் கம்பனிக்கே விற்க வேண்டும். நிர்வாகம் அது வழங்கிய உபகரணங்கள் மற்றும் ஏனைய பொருட்களுக்கான செலவை வெட்டிக்கொண்டு மீதியை தொழிலாளர்களுக்கு கொடுக்கும். இந்த கொடூரமாக சுரண்டும் வழிமுறை, சம்பள முறைமையை அகற்றுவது மாத்திரமன்றி, இப்போது உள்ள ஊழியர் சேமலாப நிதி வழங்கும் முறைமையையும் அடிப்படை உரிமைகளையும் ஒழித்து, இந்த உழைப்பாளிகளை நவீன கால குத்தகை விவசாயிகளாக ஆக்கும் திட்டமாகும்.
ஹொரண பெருந்தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் வளர்ச்சிகண்டுவரும் போராட்ட குணாம்சத்தை நசுக்க உறுதிப்பாட்டுடன் உள்ளது. பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம், 2021 மார்ச் 3 அன்று, தொழிலாளர்கள் வன்முறை செய்கிறார்கள் என்ற அதன் பொய் குற்றச்சாட்டை தூக்கிப் பிடிப்பதற்காக, “தோட்ட வன்முறையை” கையாள்வதற்கு தோட்டங்களில் பொலிஸ் ரோந்து வேண்டும் என்றும், முகாமையாளர்களுக்கு துப்பாக்கி மற்றும் ஆயுதப் பயிற்சி வழங்க வேண்டும் என்றும் கோரி, ஹட்டனில் 500 தோட்ட முகாமையாளர்களின் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது.
மார்ச் 9 அன்று, இலங்கை தேசிய பாதுகாப்பு குழு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ தலைமையில் கூடி, தோட்டங்களில் “பாதுகாப்பு பிரச்சனைகள்” பற்றி கலந்துரையாடியது. எத்தகைய தீர்மானம் எடுக்கப்பட்டது என்பது தெளிவாக இல்லாதபோதும், பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவையே இது வெளிப்படுத்தியது.
இ.தொ.கா. மற்றும் ஏனைய தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், ஓல்டன் தொழிலாளர்களுக்கு எதிராக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தோற்கடிக்க தொழிலாளர்களை எந்த வகையிலும் அணிதிரட்டுவதற்கு எதிராகவே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன. பொலிசால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு எவரும் எந்த சட்ட உதவியும் செய்யவில்லை. கடந்த நான்கு வருடங்களாக, குற்றம் சாட்டப்பட்டுள்ள 22 தொழிலாளர்களும், தங்களது சொந்த பணத்திலேயே பயண, உணவு மற்றும் சட்ட செலவுகளை செய்துகொண்டு ஹட்டன் நீதிமன்றத்திற்கு வழக்குக்கு வருகின்றனர்.
ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான ஆத்திரமூட்டல் மற்றும் பழிவாங்கல் தனியான சம்பவங்கள் அல்ல. 2021 இல், தலவாக்கலையில் கட்டுக்கலை தோட்டத்தில் 11 தொழிலாளர்கள் பொய்க் குற்றச்சாட்டுகளால் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். ஹட்டன் அருகே உள்ள வெலிஓயா தோட்டத்தில், கோவிட்-19 தொற்று நோய் காலத்தில் நிவராணம் கோரிய 8 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவங்கள், தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்க பெருந்தோட்ட உரிமையாளர்கள் முன்னெடுக்கும் கூட்டு முயற்சிகளையே வெளிப்படுத்துகின்றன.
நாடு முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் மற்றும் 'பொருளாதார மறுசீரமைப்பு' திட்டத்தில் இலங்கை பெருந்தோட்டங்கள் பிரதான இலக்குகளாக உள்ளன. முன்னாள் விக்கிரமசிங்க அரசாங்கம், இலாபமற்ற பெருந்தோட்டங்களை மூடுவதாகவும் பயிர்செய்கையை பன்முகப்படுத்துவதாகவும் பெருந்தோட்டப் பகுதிகளில் சுற்றுலா மையங்களை நிறுவுவதாகவும் முன்னர் அறிவித்தது.
ஜனாதிபதி திசாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள சில குறிப்பிட்ட தோட்ட மறுசீரமைப்பு திட்டங்கள் ஒருபுறம் இருக்க, தோட்டத் தொழிலாளர்கள் பாரிய வேலை வெட்டுக்களையும் அவர்களின் நிலைமைகள் மீதான தாக்குதல்களையும் எதிர்கொள்கின்றனர்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஓல்டன் தோட்டத்திலும், இன்னும் பல தோட்டங்களிலும் தலையிட்டு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், இந்த கொடூரமான தாக்குதலை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவரவும் தலையிட்டது.
சோசலிச சமத்துவக் கட்சி ஓல்டன் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவை (AWAC) தொடங்கி, இ.தொ.கா. மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியை உருவாக்கிய தேசிய தொழிலாளர் சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் போன்ற பிற தொழிற்சங்கங்களின் துரோகத்தையும் தொழிலாளர்களுக்கு விளக்கியது.
இலங்கை முழுவதும் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் ஓல்டன் தோட்ட பழிவாங்கலின் அரசியல் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த அனுபவம், கொழும்பு அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் பெரிய தோட்ட கம்பனிகளின் கொடூரத்தனத்தை மேலும் வெளிப்படுத்தியுள்ளது. அவை மிகவும் அதிதீவிரமான சுரண்டல் வடிவங்களைத் திணிக்கத் தீர்மானித்துள்ளன.
எவ்வாறாயினும், இந்தத் தாக்குதல்களை ஒரு தொழில்துறை பொலிசாக செயல்பட்டுவரும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவு இல்லாமல் கட்டவிழ்த்துவிட்டிருக்க முடியாது. இந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் போராட்டங்களைத் தடுத்து காட்டிக்கொடுத்ததுடன் பொலிஸ் மிரட்டலுக்கு ஆதரவளிக்கின்றன.
முதலாளித்துவ அரசியல் கட்சிகளாகச் செயல்படும் தோட்டத் தொழிற்சங்கங்கள், ஆளும் உயரடுக்கின் வெவ்வேறு பிரிவுகளுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதோடு கடந்த ஐந்து தசாப்தங்களாக வெவ்வேறு அரசாங்கங்களில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளன. அதனால்தான் ஒவ்வொரு தோட்டத்திலும் உள்ள தொழிலாளர்கள் ஓல்டன் தொழிலாளர்கள் எடுத்த முடிவை ஏற்றுக்கொண்டு, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து சுயாதீனமாக, தங்கள் தொழில்களைப் பாதுகாக்கவும், கன்னியமான ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளை வெல்லவும் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுமுறை, கன்னியமான வேலை நிலைமைகள், வீட்டுவசதி, மருத்துவமனைகளுடன் வாழக்கைக்குப் போதுமான மாதச் சம்பளம் மற்றும் முறையான வசதிகளுடன் கூடிய பாடசாலைகள் மற்றும் வேலையற்ற அனைவருக்கும் தொழிகளைப் பெறவும் தொழிலாளர்கள் போராட வேண்டும். ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விலக்கிக்கொள்வதோடு வேலைநீக்கம் செய்யப்பட்ட 38 தொழிலாளர்களும் முழு ஊதியத்துடன் மீண்டும் வேலையில் அமர்த்தப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை ஆதரிக்குமாறும், சர்வதேச அளவில் தங்கள் முன்னெடுப்புகளை ஒருங்கிணைக்க தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் இணையுமாறும் இலங்கை முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி, ஒல்டன் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் ஏனைய நடவடிக்கைக் குழுக்களும் அழைப்பு விடுக்கின்றன.
இலங்கைத் தோட்டத் தொழிலாளர்கள் லிப்டன், டெட்லி மற்றும் ட்வினிங்ஸ் போன்ற மாபெரும் பெருந்தோட்ட மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளின் சர்வதேச வலையமைப்பால் சுரண்டப்படுகிறார்கள். இதேபோன்ற நிலைமைகளை எதிர்கொள்ளும் இந்தியா, கென்யா, மலேசியா மற்றும் வியட்நாமில் உள்ள தங்கள் சகாக்களை அவர்கள் தொடர்புகொள்ள வேண்டும்.
ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டத்தின் இன்றியமையாத அங்கமாக, இலாப நோக்குடைய முறைமையை தூக்கியெறிந்து, அனைத்து பிரதான நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளையும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்க ஒரு ஒருங்கிணைந்த அரசியல் போராட்டம் அவசியமாகும்.
மேலும் படிக்க
- இலங்கையில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான பழிவாங்கல் தொடர்கிறது
- இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான சோடிக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறு! வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்து!
- சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை தோட்டத் தொழிலாளர்களை விடுதலை செய்! கம்பனி-பொலிஸ் சதியில் இருந்து அனைத்து தொழிலாளர்களையும் பாதுகாத்திடு!