மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அரசியல் எதிர்ப்பை நசுக்குவதற்கும், முக்கிய கல்வித் துறைகளின் கட்டுப்பாட்டை அரசாங்கத்தின் மேற்பார்வைக்கு கொண்டுவரவும், மற்றும் பொதுவாக கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ் வளாகத்தில் சித்தாந்த பயங்கரம் மற்றும் வலதுசாரி சிந்தனை கட்டுப்பாட்டின் ஆட்சியை ஸ்தாபிப்பதற்குமான ட்ரம்ப் நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு பல்கலைக்கழகம் இணங்காது என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக வேந்தர் அலன் கார்பர் திங்களன்று அறிவித்தார்.
வெள்ளை மாளிகை உடனடியாக இதற்கு விடையிறுக்கும் வகையில், ஹார்வார்டுக்கு 2.2 பில்லியன் டாலர் பல ஆண்டு மானியங்களையும், 60 மில்லியன் டாலர் பல ஆண்டு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைத்தது. ட்ரம்ப் தனது அடாவடித்தனமான-அறியாமை பாணியில், ஹார்வார்டு பல்கலைக்கழகம் “அதன் வரி விலக்கு அந்தஸ்தை இழக்க நேரிடும்” என்றும், அதன் “அரசியல், சித்தாந்த மற்றும் பயங்கரவாதத்தால் ஈர்க்கப்பட்ட/ஆதரவு வழிகளைத் தொடர்ந்தால் ஒரு அரசியல் அமைப்பாக வரி விதிக்கப்படலாம்” என்றும் அச்சுறுத்தினார்.
ஹார்வர்டுக்கும் ட்ரம்ப் ஆட்சிக்கும் இடையிலான மோதல், கல்வித்துறை சுதந்திரம் உட்பட ஜனநாயக உரிமைகள் குறித்த அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது. அதே நேரத்தில், அடிப்படை உரிமைகள் மீதான இடைவிடாத தாக்குதல்களை எவ்வாறு எதிர்ப்பது மற்றும் தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வேலைத்திட்டத்துடன் மற்றும் அதன் சொந்த சமூக நலன்களைப் பாதுகாக்க பெருமளவில் தலையிட வேண்டியதன் அவசியத்தையும் இது எழுப்புகிறது.
ஏப்ரல் 11 அன்று, ஹார்வார்டுக்கு அனுப்பப்பட்ட ஒரு சர்வாதிகார ஆவணத்தில், ஏனைய விடயங்களுடன் சேர்ந்து, “பயங்கரவாதம் அல்லது யூத-எதிர்ப்புவாதத்தை ஆதரிக்கும் மாணவர்கள் உள்ளடங்கலாக, அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் சுதந்திர பிரகடனத்தில் பொறிக்கப்பட்டுள்ள அமெரிக்க மதிப்புகள் மற்றும் ஸ்தாபனங்களுக்கு விரோதமான மாணவர்களை அனுமதிப்பதைத் தடுக்க” பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசாங்கம் கோருகிறது.
அரசியலமைப்பின் மீது முழு அளவிலான தாக்குதலில் ஈடுபட்டுள்ள ஒரு பாசிச அரசாங்கத்திலிருந்தும், அதிகரித்து வரும் சட்டவிரோத நடவடிக்கைகளின் பட்டியலிலிருந்தும் இந்த கோரிக்கை வருகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் “பயங்கரவாதம் அல்லது யூத-விரோதத்தை” ஆதரிக்கிறார்கள் என்ற கூற்றைப் பொறுத்தவரை, இது அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன் இஸ்ரேலிய ஆட்சியால் பல்லாயிரக்கணக்கான காசா மக்களை இனப்படுகொலை மூலம் அழித்து வருவதற்கு எதிரான எதிர்ப்பை நசுக்க வடிவமைக்கப்பட்ட ஒரு கொடூரமான பொய்யாகும்.
மேலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையும், பிரிவும் அல்லது கற்பித்தல் அலகும் தனித்தனியாகக் கண்ணோட்டப் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்ற வகையில், கண்ணோட்டப் பன்முகத்தன்மைக்கான தணிக்கையை மேற்கொள்ள அது கடமைப்பட்டிருக்கிறது. அதாவது, வலதுசாரி மற்றும் வெறித்தனமான கண்ணோட்டங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். இந்த நிறுவனங்களை தமது பிரச்சார மையங்களாக மாற்றுவதற்காக, நாஜி வகை கோலைட்டர்களை அவற்றின் தலைவராக்க நிர்வாகம் விரும்புகிறது. இதனால், உயிரியல் அல்லது வானியல் துறைகளில் “அறிவார்ந்த வடிவமைப்பு” மற்றும் படைப்புவாதத்தை கற்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். மேலும், விவிலிய ஆய்வுகளுக்கு நிதி வழங்கப்படும், தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் பயன்பாடுகள் நிறுவன மட்டத்தில் கேள்விக்குள்ளாக்கப்படும், மற்றும் பல.
இதற்கும் கூடுதலாக, சியோனிசம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எதிர்ப்புகள் அகற்றப்படுவதை உறுதிசெய்ய பல்வேறு பள்ளிகள் மற்றும் துறைகளை நேரடியாக உளவு பார்த்து கண்காணிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதில் தெய்வீகப் பள்ளி, பட்டதாரி கல்விப் பள்ளி, பொது சுகாதாரப் பள்ளி, மருத்துவப் பள்ளி, மத்திய கிழக்கு ஆய்வுகளுக்கான மையம், தூரக் கிழக்கு மொழிகள் மற்றும் கலாச்சாரத் துறை மற்றும் பல உள்ளன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, பல்கலைக்கழக வேந்தர் கார்பரும், ஹார்வர்டும், ட்ரம்ப் அரசாங்கம் “அரசியலமைப்பின் முதல் திருத்தத்தை மீறி, உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக சுதந்திரங்களில் தலையிடும் கோரிக்கைகளை முன்வைக்கிறது” என்று சரியாகக் கூறுகின்றனர்.
பல்கலைக்கழகம் அதன் சுதந்திரத்தையோ அல்லது அரசியலமைப்பு உரிமைகளையோ விட்டுக்கொடுக்காது. ஹார்வார்டோ அல்லது வேறு எந்த தனியார் பல்கலைக்கழகமோ கூட்டாட்சி அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்படுவதை அனுமதிக்க முடியாது. அதன்படி, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அரசாங்கத்தின் நிபந்தனைகளை கொள்கையளவில் ஒரு ஒப்பந்தமாக ஏற்றுக்கொள்ளாது.
தாமதமாக இருப்பினும், ஹார்வர்டின் பரந்த பிரிவு ஆசிரியர்களும், பெரும்பான்மையான மாணவர்களும் பல்கலைக்கழக வேந்தரின் அறிவிப்பை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். இது பல வாரங்களாக தகவமைப்பு மற்றும் தெளிவின்மைக்குப் பிறகு நடந்தது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அவமானகரமான சரணடைதல் ஒரு வெறுப்பு உணர்வைத் தூண்டியது. வெள்ளை மாளிகையில் உள்ள பாசிச குண்டர்களுக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளால், இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான கார்பரின் முடிவு அவர் மீது திணிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. பொஸ்டன் மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக பாரிய போராட்டங்கள் நடந்து ஒரு வாரத்திற்கும் சற்று அதிகமான காலத்திற்குப் பிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பேச்சு சுதந்திரத்தை ஒழித்து, பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் அரசாங்கத்தின் இரும்புக்கரம் கீழ் கொண்டுவரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சியை நிராகரிப்பதில், ஹார்வர்டின் அறிக்கை ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றப் படியாகும். இருப்பினும், முன்கூட்டியே மகிழ்ச்சியடைவது ஒரு பெரிய தவறாகும்.
விமர்சனக் கண்ணோட்டத்துடன் படித்தால், கார்பரின் கடிதம் ஜனநாயக உரிமைகளை உறுதியாகக் கூறுவது மிகக் குறைவாக உள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான தெளிவான கண்டனம் அதில் மிகக் குறைவு. ஹார்வர்டில் “யூத-விரோதத்தை” எதிர்த்துப் போராடுவது அவசியம் என்ற அசல் பொய்யை அது ஏற்றுக்கொள்கிறது. இதன் மூலம் மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு முற்றிலும் நியாயமற்ற சட்டபூர்வமான தன்மையை இக்கடிதம் அளிக்கிறது.
மேலும், ட்ரம்ப் மற்றும் அவரைப் போன்றவர்களுக்கு பல்கலைக்கழகம் அனுப்பும் செய்தி, “ஹார்வர்ட் பல்கலைக்கழகம் என்ன செய்துள்ளது மற்றும் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது பற்றிய உரையாடலுக்குத் திறந்திருக்கிறது” என்று உறுதியளிப்பதன் மூலம் முடிகிறது. இது பல்கலைக்கழகம் கொள்கையற்ற சமரசத்திற்குத் தயாராக உள்ளது என்பதைத் தெளிவாகக் குறிக்கிறது.
1636 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மிகப் பழமையான மற்றும் மதிப்புமிக்க பல்கலைக்கழகமாகும். இதன் மதிப்பிடப்பட்ட 50.7 பில்லியன் டாலர் நிதியுதவி, இதை உலகின் மிகவும் பணக்கார நிறுவனமாக ஆக்குகிறது.
இந்த பல்கலைக்கழகமானது, ஒரு பெரிய முதலாளித்துவ-ஏகாதிபத்திய நிறுவனமாகும். உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள், அமெரிக்க ஜனாதிபதிகள் மற்றும் துணை ஜனாதிபதிகள், அமைச்சரவை செயலாளர்கள், மாநில ஆளுநர்கள், செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் பிற அரசியல் பிரமுகர்கள், தற்போதைய நிலையைப் பாதுகாப்பவர்களின் எண்ணற்ற கல்வியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் களமாகும். இது இராணுவ-உளவுத்துறை எந்திரம் மற்றும் பிற அரசு அமைப்புகளுடன் ஆழமான, இலாபகரமான தொடர்புகளைக் கொண்டுள்ளது.
கார்பர் தனது அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு, இராணுவ-உளவுத்துறை சமூகத்தின் செல்வாக்கு மிக்க உறுப்பினர்களுடனும், ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகளின் கூறுகள் மீதான பெருமளவு அதிருப்தி அடைந்துள்ள மெகா-மில்லியனர் மற்றும் பில்லியனர் நிதியாளர்களுடனும் தீவிர விவாதங்களை நடத்தியுள்ளார் என்று பாதுகாப்பாகக கூறலாம்.
இருப்பினும், ஜனநாயகத்தை சமரசமின்றி பாதுகாப்பதற்கான பல்கலைக்கழகத்தின் உறுதிப்பாட்டில் மாயைகளை வைத்திருக்காமல், ஹார்வர்டு ஒரு முக்கியமான கல்வி மற்றும் அறிவார்ந்த வளமாகவும் உள்ளது. இதர குறிப்பிடத்தக்க அமெரிக்க பல்கலைக்கழகங்களைப் போலவே, இது மிகவும் மதிப்புமிக்க ஆராய்ச்சியை மேற்கொண்டு முக்கிய அறிவுசார் உழைப்பை வழங்குகிறது. அரசாங்கம் ஏற்கனவே இதற்கு எதிராக ஒரு அழிவு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
பொஸ்டன் குளோப் பத்திரிகை இவ்வாறு தெரிவிக்கிறது,
காசநோயின் மர்மங்களை அவிழ்க்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து வரும் ஹார்வர்டின் உயர்மட்ட விஞ்ஞானி கடந்த செவ்வாய்க்கிழமை காலை விழித்தெழுந்தபோது, தனது ஆராய்ச்சியை நிறுத்துமாறு கூட்டாட்சி அரசு பிறப்பித்த உத்தரவைக் கண்டார்.
மிகச் சிறந்த, நிலையில், ஹார்வர்ட்டும் இதர பல்கலைக்கழகங்களும் மற்றும் கல்லூரிகளும் முக்கியமான கல்வி நிறுவனங்களாக இயங்கி வருகின்றன. கல்வியாளர்கள் திறன் கொண்ட ஒரு நிறுவனமாக இருக்கும் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் அழிக்க முயற்சிக்கிறது.
தத்துவஞானி ஜான் டுவேயின் வார்த்தைகளில்,
உண்மையை தேடுங்கள்; உண்மையை விமர்சன ரீதியாக சரிபாருங்கள்; பயமோ அல்லது வெளிப்புற ஆதரவோ இல்லாமல், கிடைக்கக்கூடிய சிறந்த முறைகள் மூலம் முடிவுகளை எட்டுவதுடன், இந்த உண்மையை மாணவருக்குத் தெரிவியுங்கள்; வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அதன் தாக்கத்தை அவர்களுக்கு விளக்குங்கள்.
இந்த நடவடிக்கைகளில் ஏதேனும் ஒன்றைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவது, “பல்கலைக்கழகத்திற்கே ஒரு முக்கிய காயத்தை ஏற்படுத்துவதாகும்” என்று டுவே தொடர்ந்து கூறினார்.
வர்க்க நலன்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் முதலாளித்துவ கல்விக்கூடத்தின் இந்த மிகவும் மகிழ்ச்சிகரமான விளக்கத்தை ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஜனநாயக உரிமைகளின் அடிப்படை பிரச்சினைகள் ஆபத்தில் உள்ளன என்பதை அங்கீகரிக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை, குறைந்த சக்தி வாய்ந்த பல்கலைக்கழகங்களை அச்சுறுத்தும் நம்பிக்கையில், ஹார்வர்ட் மீதான அவர்களின் மிருகத்தனமான மற்றும் வன்முறை தாக்குதலில், ட்ரம்பும் அவரது கூட்டாளிகளும் எந்த அசல் தன்மையையும் வெளிப்படுத்தவில்லை.
ஹிட்லரின் நாடகப் புத்தகத்திலிருந்து இன்னொரு பக்கத்தை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். வியன்னா இனப்படுகொலை நூலகம் சுட்டிக்காட்டுவது போல, நாஜி ஆட்சி “ஆசிரியர்கள் யார் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.” ஹிட்லர் ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ், “அனைத்து யூத ஆசிரியர்களும் (கம்யூனிஸ்டுகள் போன்று) விரும்பத்தகாத அரசியல் நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.”
இந்தச் சட்டம் அனைத்து ஆசிரியர்களுக்கும் நாஜிக் கட்சியில் உறுப்பினராக இருப்பதை கட்டாயமாக்கியது. [முதல் புத்தக எரிப்பு, இதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு பேர்லினில் உள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திற்கு எதிரே நடந்தது.] 1929ல் தோற்றுவிக்கப்பட்ட தேசிய சோசலிச ஆசிரியர் கழகம், நாஜிக்கள் அதிகாரத்திற்கு வந்ததைத் தொடர்ந்து ஆசிரியர்களின் கட்டுப்பாடு மற்றும் கல்விக்கு பொறுப்பேற்றது. அனைத்து ஆசிரியர்களும் ஒரு மாத கட்டாய நாஜிக்களின் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அது நாஜிக்களின் சித்தாந்தத்தையும் ஆட்சியின் கருத்துக்களை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.
பல்கலைக்கழகத்திற்குள் கல்விச் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கத்துடன் “கூட்டாட்சி அரசின் நிதி மற்றும் சிவில் உரிமைகள் அமலாக்க அதிகாரங்களை சட்டவிரோத மற்றும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தவறாகப் பயன்படுத்துவதாக” நிர்வாகம் மீது குற்றம் சாட்டி அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் ஹார்வர்ட் கிளை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நன்கு நிறுவப்பட்டது. ஆனால் கல்விச் சுதந்திரம் மற்றும் பிற ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு நீதிமன்றங்களிடம் ஒப்படைக்கப்பட முடியாது. ஏனெனில், நீதிமன்றங்களின் முடிவுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அரசாங்கம் மிரட்டி பில்லியன் டாலர் பணத்தை பறிக்கும் முயற்சி வெளிப்படுத்துவது போல, கார்பரும் இந்த நிறுவனங்களை வழிநடத்தும் நிர்வாகிகளும் பெரும் அழுத்தத்தின் கீழ் செயல்படுகிறார்கள். மேலும், அவர்களால் முடிந்தால் ஒரு ஒப்பந்தத்தை எட்ட விரும்புகிறார்கள்.
எவ்வாறிருப்பினும், இவை எந்த சமரசமோ அல்லது சரிசெய்வதற்கோ சாத்தியமில்லாத பிரச்சினைகள் ஆகும். புத்திஜீவித வாழ்வின் தலைவிதியும் மக்களின் ஜனநாயக உரிமைகளும் அந்தரத்தில் தொங்குகின்றன. காசா இனப்படுகொலையை எதிர்த்து வருவதுக்காக வெளிநாட்டு மாணவர்கள் கடத்தப்பட்டது உட்பட, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தாக்குதல்கள், பணவீக்கத்தால் வாழ்க்கைத் தரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களின் வேலைகள் அழிக்கப்பட்டு, சமூகப் பாதுகாப்பு, மருத்துவ உதவி மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றுடன் இவை ஒத்துப்போகின்றன. மேலும், இவை அனைத்தும் மக்களின் பரந்த அடுக்குகளை மேலும் வறுமையில் தள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
ட்ரம்ப் மற்றும் பிற பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை, பரந்த அளவிலான மக்கள் அணிதிரட்டல் இல்லாமல் வெற்றிகரமாக நடத்த முடியாது.
மாணவர்களையும் அவர்களின் சிந்தனை, கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் உரிமைகளையும் பாதுகாக்க தொழிலாள வர்க்கம் அணிதிரள வேண்டும். பல்கலைக்கழகங்களும் அவற்றில் உள்ள அறிவும் முழு உழைக்கும் மக்களின் பாரம்பரியமாகும் - மேலும் அது அவர்களுக்குச் சொந்தமான அல்லது அவர்களுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டிய வளமாகும். ஒரு முக்கியமான பிரச்சினை ஆபத்தில் உள்ளது. வெள்ளை மாளிகையில் ஊடுருவி, பின்தங்கிய மற்றும் அறியாமை அனைத்தையும் இடைவிடாமல் ஊக்குவித்து வரும் கலாச்சார நாசக்காரர்கள், இந்த நிறுவனங்களை அழிக்க உழைக்கும் மக்கள் அனுமதிக்க கூடாது.
பிரச்சினையின் மையத்தை - அதன் ஆழமான சமூக சமத்துவமின்மை மற்றும் தன்னலக்குழு ஆட்சியைக் கொண்ட முதலாளித்துவ அமைப்பு முறையை - தோற்கடிக்காமல் சர்வாதிகார அச்சுறுத்தலைத் தோற்கடிப்பது சாத்தியமற்றது. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்பது ஹார்வர்ட் யார்டு மற்றும் பிற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் எல்லைகளுக்கும் அப்பால் நீண்டு செல்லும் ஒரு போராட்டமாகும்.
இறுதி ஆய்வில், அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பது முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்கமுடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளது. சமூகத்தை ஆளும் தன்னலக்குழுவால் பேச்சு சுதந்திரத்தையும் விமர்சன சிந்தனையின் பயன்பாட்டையும் பொறுத்துக்கொள்ள முடியாது. பகுத்தறிவின் சக்தி, கட்டுப்பாடு இல்லாமல் பயன்படுத்தப்படும்போது, முதலாளித்துவம் நவீன சமூகத்தின் தேவைகளுடன் பொருந்தாது என்றும், அதை ஒழித்துக்கட்டி சோசலிசத்தால் மாற்றப்பட வேண்டும் என்ற முடிவுக்கு இட்டுச் செல்லும் என்பதையும் அது நன்கு புரிந்துகொள்கிறது.
பாசிஸ்டுகளுக்கு எதிராக ஹார்வர்ட் மற்றும் பிற பல்கலைக்கழகங்களைப் பாதுகாப்பதற்கு, சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகர இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். இது, இந்த இயக்கத்தை வழிநடத்தி அதற்கு ஒரு நனவான திசையை வழங்க வேண்டும்.