மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
வாஷிங்டனில் 1865 வசந்த காலம் விதிவிலக்காக லேசானதாக இருந்தது. ஏப்ரல் 14 அன்று, வெப்பநிலை 21°C ஐ எட்டியது என்று அன்றைய அமெரிக்க கடற்படை ஆய்வக பதிவுகள் தெரிவிக்கின்றன. தலைநகரின் பூர்வீக இளஞ்சிவப்பு, பிரகாசமான வண்ணம் கொண்ட அசேலியா பூக்கள், வண்ணமயமான மிதவெப்ப மண்டலங்களின் பெர்ரி மரங்கள் மற்றும் சோக்செர்ரிகள் பூத்துக் குலுங்கின. ஐந்து நாட்களுக்கு முன்பு அப்போமட்டாக்ஸில் ரொபர்ட் லீ சரணடைந்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியான மனநிலைக்கு இவை பங்களிப்பு செய்தன. இது நான்கு ஆண்டுகால உள்நாட்டுப் போரின் முடிவைக் குறிக்கும் என்று தோன்றியது.
வசந்த காலத்தின் சூடான மாலைப் பொழுது மக்கள் கூட்டத்தை தெருக்களுக்கு அழைத்து வந்தது. அன்று மாலை, ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனும் முதல் பெண்மணி மேரி டோட் லிங்கனும் ஃபோர்டு நாடக அரங்கில் பிரிட்டிஷ் நகைச்சுவை நாடகமான “எங்கள் அமெரிக்க உறவினர்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இரவு சுமார் 10:15 மணியளவில், பிரபல நடிகரான ஜோன் வில்க்ஸ் பூத், நாடக அரங்கில் லிங்கன் அமர்ந்திருந்த தனிப்பட்ட பெட்டிக்குள் நுழைந்தார். நாடகத்தில் சிரிப்பு ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்தபோது, இரண்டு அடி தூரத்தில் இருந்து தனது துப்பாக்கியால் ஜனாதிபதியை நோக்கிச் சுட்டார்.
அரை அங்குலத்திற்கும் சற்று குறைவான விட்டம் கொண்ட அந்த தோட்டா, லிங்கனின் தலையின் பின்புறம் இடது காதுக்கு அருகில் துளைத்துக்கொண்டு மூளை வழியாக மேல்நோக்கிச் சென்று, வலது கண்ணுக்கு மேலே பதிந்தது. நாடக அரங்கில் ஏற்பட்ட குழப்பத்தின் மத்தியில், பூத் தப்பி ஓடினார். அன்றிரவு நாடகத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஆங்கில நடிகை லாரா கீன், ஜனாதிபதியின் தனிப்பட்ட பெட்டிக்குள் சென்றார். அங்கே அவள் லிங்கனின் இரத்தம் வழியும் தலையை மடியில் சுமந்து கொண்டாள்.
அன்று மாலையில், லிங்கன் அருகிலுள்ள பீட்டர்சன் மாளிகைக்கு மாற்றப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் அவரது மகன் ரொபர்ட் ஆகியோர் கூடியிருந்தனர். 1856 ஆம் ஆண்டு அடிமைத்தனத்திற்கு ஆதரவான காங்கிரஸ்காரரால் அமெரிக்க செனட்டில் கிட்டத்தட்ட அடித்துக் கொல்லப்படும் நிலையில் இருந்த, அடிமை ஒழிப்புவாத செனட்டர் சார்லஸ் சம்னர், லிங்கனுக்கு அருகிலிருந்து அமைதியாக அழுது கொண்டிருந்தார். கடும் துயரத்துக்கு ஆட்பட்டிருந்த மனைவி மேரி டோட் லிங்கன் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்.
லிங்கன் இறுதிவரை சுயநினைவு பெறவில்லை. ஏப்ரல் 15, 1865 அன்று காலை 7:22 மணிக்குப் பிறகு லிங்கன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். “அவர் இப்போது யுகத்தைச்” சேர்ந்தவர் என்று போர் செயலாளர் எட்வின் ஸ்டாண்டன் அறிவித்தார்.
ஏப்ரல் 15 அன்று, அமெரிக்கா முழுவதும் தேவாலய மணிகள் ஒலித்தன. கட்டிடங்களிலிருந்து தேசபக்தி பதாகைகள் அகற்றப்பட்டு, கருப்பு துணிகளால் மாற்றப்பட்டது. லிங்கனின் படுகொலை புனித வெள்ளி அன்று நடந்தது என்ற உண்மை, தெய்வீக அருள் பற்றிய கருத்தில் இன்னும் வேரூன்றிய மத நம்பிக்கை கொண்ட மக்களிடையே தியாகம் மற்றும் மீட்சி பற்றிய கருப்பொருள்கள் இந்த நிகழ்வை நிரப்பியிருந்தது. (லிங்கன் இதை தனது நாட்டு மக்களிடமிருந்து அறிந்திருந்தார். எனவே, அவர் தனது உரைகளில் பைபிள் உருவகங்களைச் சேர்க்க முடிந்தது. இருப்பினும் அவர் ஒருபோதும் ஒரு தேவாலயத்தில் இணைந்து கொள்ளவில்லை. மேலும் அவரது நெருங்கிய நண்பரும் சட்ட கூட்டாளியுமான வில்லியம் ஹெர்ன்டன் ஜெபர்சன் அல்லது பெயின் போல ஒரு நாத்திகராகவும் தெய்வீகவாதியாகவும் இருந்ததாக நம்பினார்.)
பென்சில்வேனியாவின் யோர்க்கைச் சேர்ந்த ஒரு வயதான ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர், “அவர் எமக்காக சிலுவையில் அறையப்பட்டார்!” என்று ஈஸ்டர் வார இறுதியில் ஒரு பத்திரிகைக்கு தெரிவித்தார்.
அந்த முதியவர் சொன்னது உண்மைதான். கொலையாளியான பூத், அடிமைகளை விடுதலை செய்ததுக்காக பழிவாங்கும் விதமாக லிங்கனைக் கொன்ற ஒரு வெள்ளை மேலாதிக்கவாதியாக இருந்தான். ஏப்ரல் 10, 1865 அன்று, அப்போமட்டாக்ஸில் லீ சரணடைந்த மறுநாளும், படுகொலைக்கு நான்கு நாட்களுக்கு முன்பும், வெள்ளை மாளிகையின் புல்வெளியில் ஒரு மகிழ்ச்சியான கூட்டம் கூடி, ஒரு உரைக்காக அழைப்பு விடுத்தது. வெள்ளை மாளிகையின் பண்டிகை சூழலில் பிரகாசிக்கும் விளக்குகளால் ஒளிரும் மக்கள் கூட்டம், மூடுபனி இருளில் வெகுதூரம்வரை நீண்டிருந்தது என்று பத்திரிகையாளர் நோவா ப்ரூக்ஸ் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அப்போது, வெள்ளை மாளிகையின் வடக்கு நுழைவாயிலின் சாளரத்தில், உயரமான, மெலிந்த உருவத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதி நின்று கொண்டிருந்தார்.
ப்ரூக்ஸின் சாட்சியம், உள்நாட்டுப் போர் லிங்கனுக்கு ஏற்படுத்திய பெரும் இழப்பைக் குறிக்கிறது. லிங்கன் ஜனாதிபதி பதவியேற்றபோது 1.93 மீ உயரமும் 82 கிலோ எடையும் கொண்டிருந்தார். அவர் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில், 13 கிலோ எடை குறைவாகவும், தளர்ந்து, தசைகள் சுருங்கி, 56 வயதுக்கும் மேலான வயதைக் கொண்டிருந்தவராக காட்சியளித்தார். உள்நாட்டுப் போரின் பெரும் தேசிய துயரத்தின் பெரும்பகுதியையும், அவரது சொந்த துயரத்தையும் அவர் தனிப்பட்ட முறையில் தாங்கியதாகத் தெரிகிறது - 1862 ஆம் ஆண்டில் தனது அன்புக்குரிய குழந்தையான 11 வயது வில்லியை தைபோய்டு காய்ச்சலால் இழந்தார். இது வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள கால்வாயிலிருந்து எடுக்கப்பட்ட மாசுபட்ட நீர் விநியோகம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.
ஏப்ரல் 10, 1865 அன்று தனது திடீர் மாலை உரையில், லிங்கன் வெற்றிக்காக ஜெனரல் யூலிசஸ் எஸ். கிராண்ட் மற்றும் போடோமாக் இராணுவத்திற்கு நன்றி தெரிவிக்க கவனமாக இருந்தார். மேலும், யூனியனை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்திய அவர், கறுப்பின மக்களுக்கு சம வாக்குரிமை மற்றும் சிவில் உரிமைகளின் சமத்துவத்தை கூட பரிந்துரை செய்தார். அப்போது, லிங்கனுக்கு முன்னால் இருந்த ஏராளமான முகங்களில் பூத் ஒருவராக இருந்தார். பூத் ஒரு நண்பரிடம், “அது N_____ குடியுரிமையைக் குறிக்கிறது இப்போது, கடவுளின் அருளால், நான் அதை நிறைவேற்றுவேன்” என்று கூறினார். அதேநேரம், இதுவே லிங்கன் ஆற்றிய கடைசி உரையாகும்.
வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த கூட்டமைப்பு மாநிலங்களின் படைகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் தீவிர முயற்சியில், யூனியன் தலைவர்களின் தலைகளை வெட்டுவதற்கான சதித்திட்டத்தின் தலைவராக பூத் இருந்தார்.
ஏப்ரல் 14 அன்று ஒரே நேரத்தில் நடந்த தாக்குதலில் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் சீவர்டும் அவரது மகனும் பலத்த காயமடைந்தனர். அதே நேரத்தில், துணை ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜோன்சனையும் கிராண்டையும் கொல்வதற்கு பிற தோல்வியுற்ற தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிந்தையவர் அன்றிரவு லிங்கனுடன் ஃபோர்டின் நாடக அரங்கிற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், அன்றைய தினத்துக்கு முன்னதாகவே அவர் தனது திட்டங்களை மாற்றியிருந்தார்.
ஏப்ரல் 26 அன்று ஒரு மனித வேட்டையில் பூத் கொல்லப்பட்டார். மேலும் நான்கு சதிகாரர்கள் ஜூலை 7, 1865 அன்று தூக்கிலிடப்பட்டனர்.
பூத் மட்டுமே அந்தச் செயலைச் செய்தார். ஆனால், அந்த நேரத்தில் லிங்கன் உள்நாட்டிலும் ஐரோப்பாவிலும் பல எதிரிகளைக் கொண்டிருந்தார். ஐரோப்பாவில் இரண்டாம் அமெரிக்கப் புரட்சி கண்டத்தின் நீதிமன்றங்களிலும் அரண்மனைகளிலும் கால்நடுக்கத்தை ஏற்படுத்தியது. 1848 ஆம் ஆண்டின் எழுச்சியின் நினைவுகள் இன்னும் பசுமையாக இருந்தன. இங்கிலாந்தில், அதன் ஆளும் வர்க்கம், கூட்டமைப்பு படைகளுக்கு கிட்டத்தட்ட போரின் நிலைக்கு ஆதரவு காட்டியதால் பழமைவாத டோரியின் தி ஸ்டாண்டர்ட் பத்திரிகை, லிங்கன் “அவர் வாழும் போது ஒரு ஹீரோ அல்ல, எனவே அவரது கொடூரமான கொலை அவரை ஒரு தியாகியாக மாற்றாது” என்று அறிவித்தது.
பிளெபியன் பால் மால் கெசட் பத்திரிகை பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் குரலை வெளிப்படுத்தும் அளவுக்கு நெருக்கமாக வந்தது: “அவர் எங்களது சிறந்த நண்பர். இங்கிலாந்துக்கும் அமெரிக்காவிற்கும் இடையே விரோதத்தை விதைக்க முயன்ற அந்த வக்கிரமான சிறுபான்மையினரின் வடிவமைப்புகளுக்கு அவர் ஒருபோதும் தன்னைக் கீழ்ப்படுத்தவில்லை. அவர் எங்களைப் பற்றி ஒரு விரோதமான வார்த்தையையும் சொல்லவும் இல்லை அல்லது எழுதவும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தது.
லிங்கனின் வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய மிக ஆழமான பகுப்பாய்வு, வியன்னாவை தளமாகக் கொண்ட டை பிரஸ்ஸின் நிருபராகவும், சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் - முதலாம் அகிலத்தின் - அரசியல் தலைவராகவும், உள்நாட்டுப் போரை நெருக்கமாகக் கண்காணித்து வந்த கார்ல் மார்க்ஸிடமிருந்து வந்தது. மிக விரைவாக தன்னை ஒரு எதிர்ப்புரட்சியாளராகவும், விடுவிக்கப்பட்ட அடிமைகளின் பரம எதிரியாகவும் வெளிப்படுத்திக் கொண்ட ஆண்ட்ரூ ஜோன்சனை நோக்கி, முதலாம் அகிலத்தின் சார்பாக, மார்க்ஸ் பின்வரும் வரிகளை எழுதினார்.
ஆப்ரகாம் லிங்கனைப்பற்றி கார்ல் மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார் :
[லிங்கன்] ஒரு மனிதர் என்பதை உலகம் இப்போதுதான் கண்டுபிடித்துள்ளது. துன்பத்தால் துவண்டு போகாதவர், வெற்றியின் போதையில் மூழ்காதவர், தனது மகத்தான இலக்கை அடைய உறுதியாக முன்னேறுபவர், குருட்டுத்தனமான அவசரத்தால் ஒருபோதும் சமரசம் செய்யாதவர், முதிர்ச்சியுடன் தனது அடிகளை மெதுவாக எடுத்து வைப்பவர், ஒருபோதும் பின்னோக்கி செல்லாதவர், மக்கள் ஆதரவு அதிகரிக்கும் கொந்தளிப்பில் அடிமையாகி விடாதவர், பொதுமக்களின் விருப்பம் குறைவதால் மனச்சோர்வடையாதவர், கடுமையான நடவடிக்கைகளை ஒரு கனிவான இதயத்தின் கதிர்களால் சமநிலைப்படுத்துபவர், உணர்ச்சிகளால் இருண்ட காட்சிகளை நகைச்சுவையின் புன்னகையால் ஒளிரச்செய்பவர், தனது மகத்தான பணியை மிக எளிமையாகவும், சாதாரணமாகவும் செய்பவர், போலிப் பெருமையுடன் சிறிய செயல்களைச் செய்யும் அற்ப ஆட்சியாளர்களைப் போல அல்ல; ஒரே வார்த்தையில் சொன்னால், நல்லவராக இருப்பதை நிறுத்தாமல், சிறந்தவராக மாறுவதில் வெற்றிபெறும் அரிய மனிதர்களில் ஒருவர், உண்மையில், இந்த மகத்தான மற்றும் நல்ல மனிதரின் அடக்கம் என்னவென்றால், அவர் ஒரு தியாகியாக வீழ்ந்த பிறகுதான் உலகம் அவரை ஒரு வீரனாக கண்டுபிடித்தது.
ஏப்ரல் 21 முதல் மே 3 வரை நீடித்த வாஷிங்டன் டி.சி.யிலிருந்து இல்லினாய்ஸின் ஸ்பிரிங்ஃபீல்ட் வரையிலான 1,654 மைல் ரயில் பயணத்தில் லிங்கனின் இறுதிச் சடங்கு ரயிலை 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் - வட மாநிலங்களின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் - பார்வையிட்டனர். அமெரிக்காவின் இரத்தக்களரிப் போரின் துன்பத்தையும் இழப்பையும் அறிந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள், ரயில்வண்டிப் பாதை அருகே வரிசையாக நின்று, ரயில் கடந்து செல்வதைப் பார்க்க பெரும்பாலும் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.
வால்ட் விட்மேன் தனது “இளஞ்சிவப்பு மலர்கள் வாசலில் பூக்கும் போது” என்ற கவிதையில் இந்த ஊர்வலத்தை சித்தரித்து விவரித்தார் - இறுதிச் சடங்கு ரயில், அசாதாரணமாக பூகோலிக் நிலப்பரப்புகளில் ஊடுருவி, அசாதாரண மரணத்திற்கு ஆளான லிங்கனை சுமந்து சென்றது:
வசந்தத்தின் மார்பில், நிலம், நகரங்கள், சந்துகளுக்கு மத்தியில், பழைய காடுகளின் வழியாக, அருகில் ஊதா நிறப் பூக்கள் தரையில் இருந்து எழுந்த நிற்க, சாம்பல் நிற இடிபாடுகளைக் கடந்து, பாதைகளின் இருபுறமும் வயல்களில் உள்ள புல்வெளிகளுக்கு மத்தியில், முடிவில்லா புல்வெளியைக் கடந்து, மஞ்சள் ஈட்டி நிறைந்த கோதுமையைக் கடந்து, அடர் பழுப்பு நிற வயல்களில் அதன் போர்வையிலிருந்து ஒவ்வொரு தானியமும் எழுந்து நின்றது.
பழத்தோட்டங்களில் வெள்ளை, இளஞ்சிவப்பு பூக்கள் பூத்த ஆப்பிள் மரங்களைக் கடந்து, ஒரு உடல், அது கல்லறையில் ஓய்வெடுக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்வதற்காக இரவும் பகலும் ஒரு சவப்பெட்டியில் பயணிக்கிறது.
கவிதை நடையில், இந்த ரயில், லிங்கன் பிப்ரவரி 1861 இல் இல்லினாய்ஸிலிருந்து புறப்பட்டு, மார்ச் 4 அன்று, பதவியேற்ற நாளன்று வாஷிங்டன் டிசிக்கு பயணித்த பாதையை மீண்டும் பின்தொடர்கிறது. கூட்டமைப்பை உருவாக்கிய 11 தென் மாநிலங்களில் ஏழு ஏற்கனவே பிரிந்து அடிமைக் குடியரசை உருவாக்கியிருந்தன. உண்மையில், லிங்கன் 1861 இல் வெள்ளை மாளிகையை அடைய முடியுமா என்பது நிச்சயமற்றதாக இருந்தது. வாஷிங்டனுக்குள் நுழைய, அவர் முதலில் அடிமைகளைக் கொண்டுள்ள மாநிலமான மேரிலாந்து வழியாக செல்ல வேண்டியிருந்தது. ஏனெனில் யூனியனுக்கான விசுவாசம் அந்த மாநிலத்தில் நிச்சயமற்றதாக இருந்தது. லிங்கன் பிப்ரவரி 22 அன்று மாறுவேடத்தில் பால்டிமோரைக் கடந்து மறுநாள் தலைநகரை அடைந்தார். அங்கு அவர் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில், கூட்டமைப்பின் கிளர்ச்சியாளர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த தென் கரோலினாவின் சம்டர் கோட்டை தளத்தின் காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கட்டளை தளபதியிடமிருந்து தந்திகளை பெற்றுக் கொண்டார்.
நான்கு வருட இடைவிடாத உள்நாட்டுப் போருக்குப் பிறகு, பால்டிமோர் வழியாக லிங்கன் திரும்பியபோது, ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பிலடெல்பியா, நியூ யோர்க், பஃபலோ, கிளீவ்லேண்ட் மற்றும் பல நகரங்களில் இன்னும் பெரிய கூட்டத்தினருடன் காட்சிகள் மீண்டும் மீண்டும் வந்தன.
ஸ்பிரிங்ஃபீல்டில் லிங்கனின் நல்லடக்கத்திற்கு முன் இறுதி ஊர்வலத்தில் சிக்காகோ கடைசி நிறுத்தமாக இருந்தது. நகர மக்கள் தொகையில் ஐந்தில் நான்கு பங்கு பேர் இதில் கலந்து கொண்டதாக சிக்காகோ ட்ரிப்யூன் மதிப்பிட்டுள்ளது. அவர்களில் “பூர்வீக மற்றும் வெளிநாட்டில் பிறந்தவர்கள், வெள்ளையர்கள், கருப்பர்கள், முதியவர்கள், இளைஞர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள்” அடங்குவர். “வாகேகன், கெனோஷா, மில்வாக்கி, விஸ்கான்சின் மற்றும் பிற நகரங்களிலிருந்து மூத்த பிரதிநிதிகள்” உட்பட, அண்டை நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலிருந்து” சிக்காகோவிற்கு ஏராளமான மக்கள் வந்ததாகவும், எல்லா இடங்களிலும் தெருக்களிலும் நிரம்பியிருந்த கூட்டம் அதிகளவு இருந்ததாகவும், அன்றைய தினம் 250,000 பேர் கூடியிருந்திருக்க வேண்டும் என்றும் நியூ யோர்க் டைம்ஸ் மதிப்பிட்டுள்ளது. ஆனால், லிங்கன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, பிப்ரவரி 11, 1861 அன்று, ஸ்பிரிங்ஃபீல்டை விட்டு வெளியேறியபோது தனது சொந்த மாநிலத்திலிருந்து விடைபெற்றிருந்தார்:
எனது நண்பர்களே, என்னுடைய சூழ்நிலையில் இல்லாத எவரும், இந்தப் பிரிவால் நான் அடைந்த துயரத்தைப் புரிந்துகொள்ள முடியாது. இந்த இடத்திற்கும் இந்த மக்களின் கருணைக்கும் நான் எல்லாவற்றிற்கும் கடமைப்பட்டிருக்கிறேன். நான் இங்கே கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்து இளமையிலிருந்து முதுமைக்கு மாறிவிட்டேன். என் குழந்தைகள் இங்கே பிறந்தார்கள், அவர்களில் ஒருவர் இங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். நான் இப்போது புறப்படுகிறேன், எப்போது, எப்போதாவது திரும்புவேன் என்றுகூடத் தெரியாமல், வாஷிங்டனில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை விடப் பெரிய பணியைச் சுமந்து செல்கிறேன்.
இல்லினாய்ஸின் “மேற்கை வீழ்த்திய நட்சத்திரமான” லிங்கன், புதிய மேற்குப் பிரதேசங்களுக்கு அடிமைத்தனத்தை விரிவுபடுத்துவதற்கு அங்கீகாரம் அளித்த 1854 ஆம் ஆண்டின் கன்சாஸ்-நெப்ராஸ்கா சட்டத்தை எதிர்த்து ஒரு முக்கிய அரசியல் பிரமுகராக முதலில் உருவெடுத்திருந்தார். அந்த தருணத்திலிருந்து, அவரது வாழ்க்கை அடிமைத்தன பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாததாக மாறியது.
அவரது உரைகளும் எழுத்துக்களும் - 1858 ஆம் ஆண்டின் லிங்கன்-டக்ளஸ் விவாதங்கள், அந்த ஆண்டின் “வீட்டுப் பிரிவினை” உரை, 1860 ஆம் ஆண்டின் கூப்பர் யூனியன் உரை - இந்த நிலைப்பாடுகளை அசைக்க முடியாத கொள்கைகளாக வெளிப்படுத்தி, லிங்கனை குடியரசுக் கட்சியின் தலைமைக்கு உயர்த்தியது. இவை, நியூ யோர்க்கின் செனட்டர் சீவர்ட் மற்றும் ஓஹியோவின் செனட்டர் சால்மன் சேஸ் போன்ற வலிமையான எதிரிகளை வீழ்த்தின.
அடிமைத்தனத்திற்கு எதிரான லிங்கனின் தனிப்பட்ட எதிர்ப்பு நன்கு அறியப்பட்டதாகும். அவர் ஒரு அடிமைத்தன ஒழிப்புவாதியாக இல்லாமல், அடிமைத்தன எதிர்ப்பு அரசியல்வாதியாகவே அவரது நண்பர்களாலும் எதிரிகளாலும் கருதப்பட்டார். “நான் ஒரு அடிமையாக இருக்க விரும்பாதது போலவே, நான் ஒரு எஜமானராகவும் இருக்க விரும்பவில்லை. இது ஜனநாயகம் பற்றிய எனது கருத்தை வெளிப்படுத்துகிறது,” என்று லிங்கன் கூறினார். அல்லது, அவர் தனது பரம எதிரியான இல்லினாய்ஸ் செனட்டர் ஸ்டீபன் டக்ளஸுடனான ஒரு விவாதத்தில் கூறியது போல்:
இது, உலகம் முழுவதும் நன்மை மற்றும் தீமை என்ற இரண்டு கொள்கைகளுக்கும் இடையிலான நித்திய போராட்டமாகும். இந்த இரண்டு கொள்கைகளும் காலத்தின் தொடக்கத்திலிருந்து மோதிக் கொண்டிருக்கின்றன. எப்போதும் இது மோதிக் கொண்டே இருக்கும். ஒன்று மனிதகுலத்தின் பொதுவான உரிமை, மற்றொன்று மன்னர்களின் தெய்வீக உரிமை. அதன் வடிவம் எதுவாக இருந்தாலும், இது ஒரே கொள்கைதான். “கடினமாக உழைத்து, உங்கள் ரொட்டிக்கு சம்பாதியுங்கள். நான் அதை எடுத்து சாப்பிடுவேன்” என்று சொல்லும் அதே உணர்வுதான். இது எந்த வடிவத்தில் வந்தாலும் சரி, அது தனது சொந்த தேசத்து மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களது உழைப்பின் பலனை அனுபவிக்க முயலும் ஒரு மன்னனின் வாயிலிருந்து வந்தாலும் சரி, அல்லது அடிமைத்தனத்தை ஆதரிக்கும் ஒரு மனித இனத்திலிருந்து வந்தாலும் சரி, அது அதே கொடுங்கோன்மையை கொண்டிருக்கும் கொள்கையாகும்.
ஆயினும்கூட, குடியரசுக் கட்சி 1860 தேர்தலில் அடிமைத்தனம் ஏற்கனவே இருந்த இடங்களில் ஒழிக்கப்படாது என்றும், புதிய பிரதேசங்களுக்கு மட்டுமே தடை செய்யப்படும் என்றும் உறுதியளித்த ஒரு மேடையில் வெற்றி பெற்றது. பிரிவினை மற்றும் போர் வடிவில் தெற்கிலிருந்த உயரடுக்கினர் இந்த நிலைப்பாட்டை வன்முறையில் நிராகரித்த போதிலும், லிங்கன் நிர்வாகம் 1861-1862 இல் உள்நாட்டுப் போரை முன்னைய நிலைக்குத் திரும்புவதற்கான போராட்டமாக நடத்தியது.
லிங்கன் போர்க்கால விடுதலையை மெதுவாக பெற்றுக்கொண்டு, பெரும்பாலும் தெற்கில் தொழிற்சங்கவாதிகளின் ஆதரவைப் பெறுவதிலும், எல்லை அடிமை மாநிலங்களான மிசூரி, கென்டக்கி, மேரிலாந்து மற்றும் டெலாவேரை தக்கவைத்துக்கொள்வதிலும் பெரும்பாலும் நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே, தனது முதல் தொடக்க உரையில், லிங்கன் யூனியனைப் பாதுகாக்க வேண்டுகோள் விடுத்தார்: “நாம் எதிரிகள் அல்ல, நண்பர்கள். நாம் எதிரிகளாக இருக்கக்கூடாது. ஆர்வம் பலவீனமடைந்திருந்தாலும், அது நமது பாசப் பிணைப்புகளை உடைக்கக்கூடாது. நினைவின் மாய வளையங்கள் ... மீண்டும் நம் இயல்பின் சிறந்த தேவதைகளால் தொடப்படும்போது, யூனியனின் கோரஸை இன்னும் அதிகரிக்கும்.”
லிங்கனின் போர்க்கால உரைகள் அவரது சிந்தனை மற்றும் முன்னோக்கின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகின்றன. போரின் போக்கு லிங்கனுக்கு நிரூபித்தது. அவர் பின்னர் கூறியது போல், “நாம் அடிமைகளை விடுவிக்க வேண்டும் அல்லது நம்மை நாமே அடிமைப்படுத்த வேண்டும்.”
ஆகஸ்ட் 1863 இல், அடிமை விடுதலைப் பிரகடனத்தால் அனுமதிக்கப்பட்ட கறுப்பின மக்களுக்கு ஆயுதம் வழங்குவதை எதிர்க்கும் வாக்காளர்களின் இனவெறியை சவால் செய்யும் ஒரு பகிரங்க கடிதத்தை அவர் வெளியிட்டார். இல்லினாய்ஸின் ஸ்பிரிங்ஃபீல்டில் நடந்த ஒரு பொது நிகழ்வில் லிங்கன் அந்தக் கடிதத்தை “மிக மெதுவாக”, சத்தமாக வாசிக்கச் சொன்னார்:
தெளிவாகச் சொல்லப் போனால், கருப்பின மக்களைப் (Negroes) பற்றி நீங்கள் என்னுடன் மகிழ்ச்சியாக இல்லை. இந்த விஷயத்தில் உங்களுக்கும் எனக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். எல்லா மனிதர்களும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன். ஆனால், உங்களுக்கு அப்படி இல்லை என்று நினைக்கிறேன்... நீக்ரோக்களை விடுவிக்கப் போராட மாட்டாய் என்று சொல்கிறாய். அவர்களில் சிலர் உங்களுக்காகப் போராடத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அது முக்கியமில்லை. அப்படியானால், யூனியனைக் காப்பாற்ற மட்டுமே போராடுங்கள். அதைக் காப்பாற்ற உங்களுக்கு உதவுவதற்காக நான் இந்தப் பிரகடனத்தை வெளியிட்டிருக்கிறேன்... அமைதி இப்போது ஒரு காலத்தில் இருந்த அளவுக்கு தொலைவில் இல்லை. அது விரைவில் வரும் என்று நம்புகிறேன். அது நீடித்திருக்கும்; மேலும் அது எதிர்காலத்தில் பாதுகாக்கப்படுவதற்கு தகுதியானதாக இருக்கும். அப்போது, சுதந்திர மனிதர்களிடையே, வாக்குச்சீட்டிலிருந்து துப்பாக்கிக்கு மாற்றுவது சாத்தியமில்லை என்பது நிரூபிக்கப்படும்; மேலும் அத்தகைய மேல்முறையீடு செய்பவர்கள் தங்கள் வழக்கை இழந்து அதற்கான விலையைச் செலுத்துவது உறுதி. பின்னர், அமைதியான நாக்குகள், பற்களைக் கடித்து, நிலைத்த கண்கள் மற்றும் கையில் உறுதியாகப் பிடித்தபடி, மனிதகுலம் இந்தப் பெரிய சாதனையை அடைய உதவியதை நினைவில் கொள்ளும் கருப்பின மக்கள் இருப்பார்கள்; அதே நேரத்தில், சில வெள்ளையர்கள் ஒரு தீய இதயத்தாலும், வஞ்சக பேச்சுடனும், அதைத் தடுக்க முயன்றதை மறக்க முடியாமல் இருப்பார்கள் என்று நான் அஞ்சுகிறேன்.
ஜான் மீச்சம். வெளிச்சம் இருந்தது: ஆபிரகாம் லிங்கனும் அமெரிக்கப் போராட்டமும் (பக். 428). கிண்டில் பதிப்பு.
அந்த நேரத்தில், “சுதந்திரத்தை அழிப்பதற்கான போர் அடிமைத்தனத்தை ஒழித்துக்கட்டுவதற்கான போருடன் எதிர்கொள்ளப்பட வேண்டும்” என்ற ஃபிரடெரிக் டக்ளஸின் முடிவை லிங்கன் ஆதரிக்கத் தொடங்கினார். இது உள்நாட்டுப் போரை யூனியனுக்கான போராட்டத்திலிருந்து அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான ஒரு புரட்சிகரப் போராக மாற்றியது - ரஷ்யப் புரட்சிக்கு முன்னர் வரலாற்றில் மிகப்பெரிய தனியார் சொத்து பறிமுதல் இதுவாகும். உண்மையில், இந்தப் போராட்டம் குறித்த லிங்கனின் பார்வை அமெரிக்க நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உலகளாவிய தரத்தைக் கொண்டிருந்தது. அதன் இறுதி நோக்கம், மனித சமத்துவம் குறித்த சுதந்திரப் பிரகடனத்தின் வாக்குறுதியை நிறைவேற்றுவதும், நவம்பர் 1863 இல் அவர் கெட்டிஸ்பர்க் உரையில் கூறியது போல், “மக்களால், மக்களுக்காக, மக்களுக்கான அரசாங்கம், பூமியிலிருந்து அழிந்துவிடக் கூடாது” என்பதை உறுதி செய்வதுமாகும்.
தனது இரண்டாவது தொடக்க உரையில், லிங்கன் உள்நாட்டுப் போரை அடிமைத்தனக் குற்றத்திற்கான தவிர்க்க முடியாத தண்டனையாக முன்வைத்தார். இது, தெற்கு மற்றும் வடக்கிலுள்ள முழு மக்களுக்கும் வழங்கப்பட்ட வரலாற்று பழிவாங்கும் ஒரு வடிவமாகும்: “இந்தப் போர் என்ற வலிமையான கொள்ளை நோய் விரைவில் மறைந்து போக வேண்டும் என்று நாங்கள் மனதார நம்புகிறோம், மனதாரப் பிரார்த்திக்கிறோம்“ என்று அவர் கூறினார். ஆயினும், அடிமையின் இருநூற்று ஐம்பது ஆண்டுகால பழிவாங்கப்படாத உழைப்பால் திரட்டப்பட்ட அனைத்து செல்வங்களும் விழுங்கப்படும் வரை, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்டபடி, வாளால் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி இரத்தமும் வாளால் சிந்தப்பட்ட மற்றொரு துளியால் செலுத்தப்படும் வரை அது தொடர வேண்டும் என்று கடவுள் விரும்பினால், “கர்த்தருடைய தீர்ப்புகள் முற்றிலும் உண்மை மற்றும் நீதியானவை “ என்று இன்னும் சொல்லப்பட வேண்டும்.
பைபிளின் கிங் ஜேம்ஸ் பதிப்பின் - லிங்கன் மனப்பாடம் செய்யக்கூடிய பகுதிகள்-, சாராம்சத்தையும் விதிவாதத்தையும் தூண்டும் இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள், அவரது சொந்த மரணத்திற்கு 41 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டன.
லீ தனது கூட்டமைப்புப் படைகளின் எச்சங்களை அப்போமட்டாக்ஸில் கிராண்டிடம் ஒப்படைத்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, உள்நாட்டுப் போரை ஆரம்பித்த சம்டர் கோட்டை மீதான தாக்குதலுக்கு சரியாக நான்கு ஆண்டுகள் மற்றும் மூன்று நாட்களுக்குப் பிறகு, லிங்கனின் படுகொலை, சுமார் 700,000 அமெரிக்கர்களின் உயிரைப் பறித்த படுகொலையின் கடைசி செயலின் அடையாளமாக இருந்தது. மேலும், 4 மில்லியன் அடிமைகளை “இப்போதும் மற்றும் என்றென்றும்” விடுதலை செய்தது. மேலும், அமெரிக்காவிற்கு “சுதந்திரத்தின் புதிய பிறப்பை” உறுதி செய்தது.
இந்த நிகழ்வுகள் லிங்கனின் மகத்துவத்தை நிலைநாட்டின. “19 ஆம் நூற்றாண்டின் நாடக வரலாற்றில் லிங்கன் தான் மிகவும் பிரமாண்டமான மனிதர்” என்று விட்மேனால் பின்னர் கூற முடிந்தது. டால்ஸ்டாய் இதை ஒப்புக்கொண்டு, “லிங்கனை இந்த நூற்றாண்டின் ஒரே உண்மையான ஜாம்பவான்” என்று அழைத்தார். வேறு வீரர்களும் இருந்தனர், “ஆனால் உணர்வுகளின் ஆழத்திலும் தார்மீக வலிமையிலும் லிங்கனை எவருடனும் ஒப்பிட முடியாது” என்று ரஷ்ய நாவலாசிரியர் வலியுறுத்தினார். விக்டர் ஹ்யூகோ லிங்கனின் படுகொலையை “மனித இனத்திற்கு ஏற்பட்ட ஒரு பேரழிவு... அவர் அமெரிக்காவின் மனசாட்சியின் அவதாரம்” என்று அழைத்தார்
லிங்கனின் படுகொலையைக் கருத்தில் கொள்ளும்போது, வேறு சில “சிறந்த” வரலாற்று நபர்களிடம் எழுப்பக்கூடிய ஒரு கேள்வி எழ வேண்டும். 160 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வில், இன்றும் அவரது இழப்பின் உணர்வைத் தூண்டுவது எது?
லிங்கனின் படுகொலையில் என்றென்றும் பதிலளிக்கப்படாதவற்றிலிருந்து ஒரு பகுதி பதிலைக் கூறலாம். உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய காலத்திற்கு வழங்கப்பட்ட பெயரான மறுசீரமைப்பின் போதும், அதற்குப் பின்னரும் லிங்கன் ஒரு சமத்துவ நாட்டிற்கு பங்களித்திருக்க முடியும் என்று ஒருவரை நம்பத் தூண்டுகிறது.
ஆயினும்கூட, லிங்கன் உயிருடன் இருந்தபோதும், அவரது படுகொலைக்குப் பிறகும், உள்நாட்டுப் போரில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதன் மூலம் ஜனநாயகப் புரட்சி அதன் உச்சத்தை எட்டியது. தாடியஸ் ஸ்டீவன்ஸின் தலைமையில், தீவிர குடியரசுக் கட்சியினர், துரோகியான ஆண்ட்ரூ ஜோன்சனை பதவி நீக்கம் செய்து - அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து பதவியில் இருந்து நீக்குவதற்கு ஒரு கணம் முன்னதாகவே – பதினான்காவது மற்றும் பதினைந்தாவது திருத்தங்களை அறிமுகப்படுத்தினர். மேலும், கு க்ளக்ஸ் கிளானை அப்புறப்படுத்த கிராண்டின் கீழ் தெற்கில் இராணுவ ஆக்கிரமிப்பை நடத்தினர்.
இந்த நடவடிக்கைகள் எவ்வளவு தொலைநோக்கு கொண்டதாக இருந்தாலும், உள்நாட்டுப் போரால் எழுப்பப்பட்ட அடிப்படை சமூகக் கேள்வியை அவர்களால் தீர்க்க முடியவில்லை: தமக்கான சொத்துக்கள் எதுவும் இல்லாமல், உழைப்பு சக்தியை தவிர விற்க எதுவும் இல்லாமல், அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 4 மில்லியன் மக்களின் கதி என்னவாகும்?
தெற்கிலிருந்த தன்னலக்குழுக்களின் நிலங்களை மறுபங்கீடு செய்வதற்கான ஸ்டீவன்ஸின் அழைப்புகள் தனியார் சொத்துரிமையின் புனிதத்தன்மையை சவால் செய்தன. யூனியனைப் பாதுகாத்தல் மற்றும் அடிமைத்தனத்தை ஒழித்தல் என்ற அதன் மைய வரலாற்றுப் பணியை நிறைவேற்றிய லிங்கனின் குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையினரால் ஸ்டீவன்ஸின் அழைப்புகள் நிராகரிக்கப்பட்டன. குடியரசுக் கட்சியினரிடையே “சமநிலைப்படுத்தும்” போக்குகள் இருந்தன. ஆனால், அது ஒரு சோசலிசக் கட்சி அல்ல, அப்படி இருந்திருக்கவும் முடியாது.
அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டால், “சுதந்திர உழைப்பு” என்பது வடக்கின் பிம்பத்தில் தெற்கின் முடிவில் மீண்டும் உருவாக்கப்படும். அது சிறு விவசாயிகள், வணிகர்கள் மற்றும் கைவினைஞர்களின் பரந்த மக்கள்தொகையைக் கொண்டதாக இருக்கும் என்ற பொதுவான கருத்தை ஒருபோதும் உணர முடியாது. பருத்தி, சர்க்கரை மற்றும் புகையிலையின் பணப்பயிர் விவசாயம் தொடர்ந்தது. ஆனால், தெற்கில் பணமின்மை பங்கு பயிர் சாகுபடி எனப்படும் பயிர் உரிமை முறையின் வளர்ச்சியை உறுதி செய்தது, இது விடுவிக்கப்பட்ட அடிமைகளை மட்டுமல்ல, தெற்கின் வறிய வெள்ளையர்களையும் உள்ளெடுத்துக் கொண்டது.
கீழிருந்து ஒரு புரட்சிகர அச்சுறுத்தலைத் தடுக்க, ஜனநாயகக் கட்சியின் மூலம், தெற்கிலிருந்த ஆளும் வர்க்கத்தால் ஜிம் குரோ பிரிவினை படிப்படியாக செயல்படுத்தப்பட்டது. “இனப் பிரிவினை என்பது வாழ்க்கை முறையாக, இனங்களுக்கிடையேயான வெறுப்பின் இயல்பான விளைவு அல்ல” என்று மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் பின்னர் குறிப்பிட்டார். [ஆனால்] உண்மையில் இது, தெற்கில் வளர்ந்து வந்த பூர்போன் நலன்களால் தெற்கு மக்களைப் பிரித்து வைத்திருக்கவும், தெற்கு மக்களின் உழைப்பை நிலத்தில் மலிவானதாக வைத்திருக்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு அரசியல் சூழ்ச்சியாகும்.
இந்த விளைவைப் புரிந்து கொள்ள, அமெரிக்காவின் தெற்கிலிருந்து பார்வையின் கவனத்தை விரிவுபடுத்த வேண்டும். உள்நாட்டுப் போர் அடிமைத்தனத்தை ஒழிப்பதுக்கும் அப்பால் அதிகமாகச் செய்துள்ளது. இது வடக்கில் ஒரு புதிய தொழில்துறை சமூக ஒழுங்கின் தொட்டிலாகவும் இருந்தது. உள்நாட்டுப் போருக்கும் முதலாம் உலகப் போருக்கும் இடையிலான அரை நூற்றாண்டில், அமெரிக்கா முதன்மையாக விவசாய நாடாக இருந்து உலகின் முன்னணி தொழில்துறை சக்தியாக உயர்ந்தது.
அமெரிக்க வரலாற்றில் அடிமைத்தனம் முக்கிய பாத்திரம் வகித்த முதல் செயலை இந்தப் போர் திரையை விலக்கியது. இது ஒரு புதிய தலைமுறை கதாபாத்திரங்களை வெளிப்படுத்தியது: அது கொள்ளைக்கார முதலாளித்துவ பிரபுக்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் ஆவர். இதைத்தான் மார்க்ஸ் கணித்தார். அமெரிக்க சுதந்திரப் போர் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு புதிய எழுச்சி சகாப்தத்தைத் தொடங்கியதைப் போலவே, அமெரிக்க அடிமைத்தன எதிர்ப்புப் போர் தொழிலாள வர்க்கத்தினருக்குச் நல்லது செய்யும் என்று 1864 ஆம் ஆண்டு லிங்கன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துச் சொல்லி மார்க்ஸ் எழுதியிருந்தார். 1877 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ஒரு கடற்கரையிலிருந்து மறு கடற்கரை வரை பரவிய பெரும் இரயில் பாதை எழுச்சி மற்றும் பொது வேலைநிறுத்தங்களுடன் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் தோற்றம் முழு வீச்சில் அறிவிக்கப்பட்டது. 1876 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய ஹேய்ஸ்-டில்டன் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, தெற்கு உயரடுக்கினருடன் ஒரு மோசமான ஒப்பந்தத்தை மேற்கொண்ட பின்னர், அதே ஆண்டில், குடியரசுக் கட்சியினர் தெற்கில் மறுகட்டமைப்பிற்கு ஒரு உறுதியான முற்றுப்புள்ளி வைத்தனர் என்பது தற்செயல் நிகழ்வு அல்ல.
உள்நாட்டில் தொழிலாளர்களுக்கு எதிராகவும், வெளிநாடுகளில் ஏகாதிபத்தியப் போர்ப் பாதையிலும் முன்னேறியபோது, அமெரிக்க ஆளும் வர்க்கமானது, லிங்கனின் சிந்தனையை, அவரை தேசபக்தி மற்றும் முதலாளித்துவ சுய முன்னேற்றத்தின் தீங்கற்ற சின்னமாக மாற்ற முயற்சிக்கும் சடங்கு மற்றும் வெற்று அழைப்புகள் மூலம் நடுநிலையாக்க வேண்டிய ஒன்றாகக் கண்டது. சுவாரஸ்யமாக, இந்த புராணக்கதையால் அதிகம் ஈர்க்கப்பட்டவர்கள் நீண்ட காலமாக அமெரிக்காவின் இழிவான மற்றும் கசப்பான நடுத்தர வர்க்க தீவிரவாதிகள் மற்றும் கறுப்பின தேசியவாதிகள் ஆவர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, உலக சோசலிச வலைத்தளம் லிங்கனை —அமெரிக்க ஜனநாயகத்தின் மிகப் பெரிய அப்போஸ்தலர் ஜெபர்சனுடன் சேர்ந்து— அடிமைத்தனத்தைப் பொருட்படுத்தாத இனவெறி கொண்டவராகவும் கறுப்பின மக்களுக்கு விரோதமானவராகவும் சித்தரிக்கும் நியூயார்க் டைம்ஸ் மற்றும் அதன் முதன்மையான 1619 திட்டத்தின் முயற்சிகளுக்கு எதிராக அவரைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்பார்த்தபடி, போலியான “இடது” கல்வியாளர்கள் மற்றும் சுய-பாணி சோசலிஸ்டுகள் மத்தியில் டைம்ஸ் ஏராளமான ஆதரவைக் கண்டது. டொனால்ட் ட்ரம்பைச் சுற்றி பாசிசத்தின் தோற்றத்தால் தெளிவாக முன்வைக்கப்படும் இருத்தலியல் அச்சுறுத்தலை எதிர்கொண்டாலும் கூட!
ஆனால், லிங்கனை அவதூறு செய்யும் இத்தகைய முயற்சிகள், தொழிலாள வர்க்கத்தின் —கருப்பு, வெள்ளை மற்றும் குடியேறியவர்கள்— உணர்வுகள் மீதான அவரது பிடியை உடைப்பதிலும், அமெரிக்காவின் இரண்டாவது புரட்சிக்கான அவரது தலைமையின் நினைவை அழிப்பதிலும் ஒருபோதும் வெற்றிபெறவில்லை.
இது ஏப்ரல் 14, 1865 துயரத்தின் ஆழமான தன்மையை எடுத்துக்காட்டுகிறது: என்னவாக இருந்திருக்க முடியும் என்பதல்ல, ஆனால் இனி என்னவாக இருக்க முடியாது என்பதுதான். லிங்கன் தனது காலத்தின் ஒரு விளைபொருளாக உள்ளார். மார்க்ஸ் கூறியது போல், லிங்கன் “வரலாற்றின் ஆண்டுகளில் ஒரு தனித்துவமான மனிதராக இருந்தார்.”
டொனால்ட் ட்ரம்பும் அவரது காலத்தின் ஒரு விளைபொருளே. அமெரிக்க முதலாளித்துவத்தின் இறுதி வீழ்ச்சியில், அவரது அனைத்து குண்டர்தனம், எல்லையற்ற பேராசை, ஜனநாயகத்தின் மீதான அவரது வெட்கக்கேடான வெறுப்பு மற்றும் முழுமையான முட்டாள்தனம் ஆகியவற்றை அவர் உருவகப்படுத்துகிறார். சலுகை பெற்ற மகன், நியூ யோர்க் ரியல் எஸ்டேட்-மாஃபியா பாதாள உலகத்தின் விளைபொருளான ட்ரம்பின் “அரசியல் வேலைத்திட்டத்தை” ஒரே வார்த்தையில் சுருக்கமாகக் கூறலாம்: அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களிடமிருந்து திருடுவது, வெளிநாடுகளில் ஏகாதிபத்தியப் போரின் மூலமும் முதல் இரண்டு அமெரிக்க புரட்சிகளின் சாதனைகளை ரத்து செய்வதன் மூலமும் அடையப்படும்.
மறுபுறம், லிங்கன் இளம் அமெரிக்கக் குடியரசில் “சிறந்தது மற்றும் நல்லது” அனைத்தையும் உள்ளடக்கி வெளிப்படுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த இரண்டு புரட்சிகளால் “எண்பத்தேழு ஆண்டுகள்” இடைவெளியில் கொண்டு வரப்பட்ட சமத்துவக் கருத்தையும் வெளிப்படுத்தினார்.
வறுமையின் எல்லையில் வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன், —ஒரு வருடம் முறையான பள்ளிப்படிப்பும், அரை எழுத்தறிவு இல்லாத விவசாயியின் மகன்— அடிமைத்தனத்தை ஒழித்துக்கட்டுவதற்கான ஒரு புரட்சிகரப் போரை வழிநடத்த அமெரிக்காவால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று தோன்றியது.
1864 ஆம் ஆண்டு லிங்கனுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் கூறியது போல், உலகத் தொழிலாளர்கள்:
சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு இனத்தின் விடுதலைக்காகவும், ஒரு சமூக உலகத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், தனது நாட்டை வழிநடத்த, தொழிலாள வர்க்கத்தின் துடிப்பான மற்றும் துணிச்சலான ஒப்பற்ற மகனான ஆபிரகாம் லிங்கனை விதி தேர்ந்தெடுத்திருப்பது ஒரு புதிய சகாப்தத்தின் அறிவிப்பாகக் கருதுங்கள்.
மெஹ்ரிங் புத்தகங்களிலிருந்து கிடைக்கும் தொடர்புடைய படைப்புகள்:
Richard Carwardine, Lincoln: A Life of Purpose and Power
James McPherson, Battle Cry of Freedom: The Civil War Era
James McPherson, What They Fought For 1861-1865
James Oakes, Freedom National: The Destruction of Slavery in the United States, 1861-1865
James Oakes, The Crooked Path to Abolition: Abraham Lincoln and the Antislavery Constitution