மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ரஷ்ய பிராந்தியத்தில் உக்ரேனிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி கிராமங்களில் ஒன்றான குயேவோ மீதான கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்ததை அடுத்து, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரேனிய இராணுவத்தின் எட்டு மாத கால ஊடுருவல் திறம்பட முடிவுக்கு வந்துள்ளது.
உக்ரேன் அதன் சொந்த டொன்பாஸ் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் ரஷ்ய முன்னேற்றங்களுக்கு மத்தியில், கடந்த ஆண்டு ஆவணி மாதம் உக்ரேன் சாகசவாத படையெடுப்பைத் தொடங்கி, 1,000 முதல் 1,300 சதுர கிலோமீட்டர் ரஷ்யாவின் நிலப்பகுதியை கைப்பற்றியது. இது, இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஜேர்மனியின் இராணுவத்துக்கு பின்னர் ரஷ்யா மீதான மிகப்பெரிய தரைவழி படையெடுப்பாக அமைந்தது. ரஷ்ய பகுதிக்குள் அனுப்பப்பட்ட உக்ரேனிய துருப்புக்கள், ஐக்கிய இராச்சியத்தால் பயிற்றுவிக்கப்பட்டு நேட்டோவின் சண்டையிடும் டாங்கிகளைப் பயன்படுத்தியுள்ளன.
ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் வலதுசாரி சர்வாதிகார அரசாங்கம், டொன்பாஸில் உள்ள தனது சொந்த ஆட்கள் இல்லாத படைகள் மீது அழுத்தத்தை ஒரே நேரத்தில் குறைப்பதற்கும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான எதிர்கால பேச்சுவார்த்தைகளில் உக்ரேனின் நிலையை மேம்படுத்துவதற்கும் ஒரு வழிமுறையாக இந்தப் படையெடுப்பை முதலில் விளம்பரப்படுத்தியது. இதற்காக, உக்ரேனிய இராணுவம் அதன் சிறந்த படைகளில் கணிசமான பகுதியை ஒரு அழிவுகரமான ஊடுருவலை நோக்கி திருப்பியது. இது, கியேவின் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டிலோ அல்லது உக்ரேனிய இராணுவத்திற்கான ஒரு “இடைத்தடை மண்டலத்தை” உருவாக்குவதிலோ எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஆயிரக்கணக்கான உக்ரேனிய சிப்பாய்களின் மரணத்திற்கு வழிவகுத்தது.
கடந்த மார்ச் மாத தொடக்கத்தில், குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகரமான சுட்சாவிலிருந்து உக்ரேனியப் படைகள் “பேரழிவுகரமாக” திரும்பப் பெறப்பட்டதைப் பற்றி பிபிசி செய்தி வெளியிட்டது. குர்ஸ்க் படையெடுப்பின் படுதோல்விக்கு உக்ரேனிய இராணுவத் தலைமையை ஒருமனதாக கண்டித்த உக்ரேனிய சிப்பாய்களின் சாட்சியங்களின்படி, இது “ஒரு திகில் திரைப்படம் போன்று” இருந்தது.
டிமிட்ரோ என்ற ஒரு சிப்பாய், “சாலைகளில் நூற்றுக்கணக்கான அழிக்கப்பட்ட கார்கள், கவச வாகனங்கள் மற்றும் ATVக்கள் (அனைத்து நிலப்பரப்பிலும் செயல்படும் வாகனங்கள்) சிதறிக்கிடக்கின்றன. காயமடைந்தவர்களும் இறந்தவர்களும் ஏராளமாக உள்ளனர்” என்று தெரிவித்தார்.
ஆகஸ்ட் 2024 இல் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான உக்ரேனிய சிப்பாய்கள் தேவையில்லாமல் இறந்துவிட்டதாக டிமிட்ரோ மதிப்பிட்டு, “குர்ஸ்க் பிராந்தியத்தில் எல்லாம் முடிந்துவிட்டது ... நடவடிக்கை வெற்றிபெறவில்லை” என்று கூறினார்.
கடந்த செப்டம்பரில் குர்ஸ்கில் சண்டையிடும் போது கையை இழந்த முன்னாள் சூப்பர் மார்க்கெட் பாதுகாப்புக் காவலரும், கியேவில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவருமான 32 வயதான உக்ரேனிய சிப்பாய் ஒலெக்ஸி தேஷேவி, ராய்ட்டர்ஸிடம் பேசியபோது பேரழிவு தரும் குர்ஸ்க் படையெடுப்பைக் கண்டித்தார். மேலும், “நாங்கள் இந்த நடவடிக்கையைத் தொடங்கியிருக்கக் கூடாது” என்று கூறினார்.
கீயேவ் இன்டிபென்டன்ட் பத்திரிகையின் கருத்துப்படி, ரஷ்யாவின் 740 இராணுவ உபகரணங்களுடன் ஒப்பிடும்போது உக்ரேனுக்கான ஒட்டுமொத்த இராணுவ உபகரணங்களின் இழப்புகள் 790 ஆகும்.
ரஷ்ய அரசாங்கம், தனது சொந்த இராணுவ உயிரிழப்புகள் மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கிய இராணுவ உபகரணங்களால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகளுக்கு மேலதிகமாக, கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் ஆக்கிரமிக்கப்பட்ட ரஸ்கோய் போரெச்னோய் கிராமத்தில் 22 பொதுமக்கள் கொல்லப்பட்டதில் உக்ரேனிய சிப்பாய்களை தொடர்புபடுத்தியுள்ளது.
வழமையான பொய்யரான ஜெலென்ஸ்கியும் அவரது தலைமைத் தளபதி ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியும் குர்ஸ்க் நடவடிக்கையை ஒரு “வெற்றி” என்று தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். கடந்த மார்ச் மாத நடுப்பகுதியில், கியேவ் குர்ஸ்கில் இருந்து தனது படைகளை திரும்பப் பெறும்போது, பின்வாங்கும் சிப்பாய்கள் தமது “பணிகளை நிறைவேற்றியவுடன்” வெளியேறி வருவதாக ஜெலென்ஸ்கி அபத்தமாக அறிவித்தார். படையெடுப்பால் ஏற்பட்ட மரணம் மற்றும் அழிவுக்கு முழுக் கணக்கும் சொல்வது இராணுவ வரலாற்றாசிரியர்களின் பொறுப்பாகும்.
ஜெலென்ஸ்கி மற்றும் சிர்ஸ்கியின் பொய்யான கூற்றுக்கள் ஒருபுறம் இருக்க, அந்த நடவடிக்கையின் தோல்வி, நேட்டோ ஆதரவிலான உக்ரேனிய அரசுக்குள் இவ்விரு பிரமுகர்களின் நிலைப்பாட்டையும் தெளிவாக குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், இழிபுகழ்பெற்ற நவ-நாஜி அசோவ் படைப்பிரிவின் முன்னாள் தலைமைத் தளபதி போஹ்டன் குரோடெவிச் உடனான ஒரு நேர்காணலை கார்டியன் பத்திரிகை பிரசுரித்தது. அதில், அவர் உக்ரேனிய ஆயுதப் படைகளின் தலைவர் பதவியில் இருந்து சிர்ஸ்கியை நீக்க அழைப்பு விடுத்தார். 1941ல் சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்பில் ஒரு மையப் பங்கைக் கொண்டிருந்தவரும், 1944ல் இத்தாலியில் 335 குடிமக்கள் படுகொலை செய்யப்பட்ட ஆர்டீட்டின் படுகொலையை மேற்பார்வையிட்டவருமான இழிபுகழ் பெற்ற நாஜி போர்க்குற்றவாளியான ஆல்பேர்ட் கெஸ்ஸல்ரிங்கின் அபிமானியாக குரோடெவிச் நன்கு அறியப்பட்டவராக உள்ளார்.
குரோடெவிச் ஒரு சக்திவாய்ந்த நபராக உள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், குரோடெவிச்சின் வேண்டுகோளின் பேரில் ஜெலென்ஸ்கி, உக்ரேனின் கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் யூரி சோடோலுக்கு பதிலாக அவரது இடத்துக்கு பிரிகேடியர் ஜெனரல் ஆண்ட்ரி ஹ்னாடோவை நியமித்தார். இது உக்ரேனிய அரசின் மிக உயர்ந்த மட்டங்களுக்குள் அதிதீவிர வலதுசாரிகளின் கணிசமான செல்வாக்கை நிரூபித்தது.
குரோட்விச் ஆரம்பத்தில் குர்ஸ்க் படையெடுப்பை ஆதரித்த போதிலும், பிரிட்டிஷ் செய்தித்தாளுக்கு அவர் அளித்த கருத்துக்களில், குறிப்பாக ரஷ்யப் படைகள் தெற்கு டொன்பாஸில் உள்ள போக்ரோவ்ஸ்க் நகரத்தை நோக்கி முன்னேறி வந்தபோது, சிர்ஸ்கி “நீண்டகாலம் அங்கேயே இருந்ததற்காக” அவரை விமர்சித்தார்.
“சிர்ஸ்கி ஒரு உயர்ந்த விஞ்ஞானத்தையும் போர்க் கலையையும் பயன்படுத்த முயற்சிக்கவில்லை” என்று குரோடெவிச் கூறியதுடன், அவருக்கு இரண்டு செயல்பாடுகள் மட்டுமே இருப்பதாகக் குற்றம் சாட்டினார்: “எதிரி தாக்கினால், கூடுதல் படைகளை அங்கே அனுப்புங்கள். எதிரி மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தால், நாம் துருப்புக்களை திரும்பப் பெற்று, மக்களின் உயிர்களைப் பற்றி நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம் என்று கூற வேண்டும்” என்று தெரிவித்தார்.
அணிதிரட்டப்பட்ட சிப்பாய்களுக்கு போர்முனையில் இருந்து போதுமான ஓய்வு கொடுக்காததற்காகவும் அவர் சிர்ஸ்கியை தாக்கினார். உக்ரேனிய சிப்பாய்களிடம் தன்னை ஒரு மனிதாபிமானியாகக் காட்டிக் கொண்ட குரோடெவிச், “இராணுவத்தின் உயர் கட்டளையகத்திலிருந்தும், தலைமைத் தளபதியின் தலைமையகத்திலிருந்தும் குற்றவியல் உத்தரவுகள் அதிகளவில் பெறப்பட்டதால், நல்ல மனசாட்சியின்படி, அதைச் செயல்படுத்தவோ பின்பற்றவோ முடியவில்லை” என்று அசோவ் பட்டாலியனிலிருந்து தனது பதவியை விட்டு வெளியேறியதாகக் கூறினார்.
குர்ஸ்க் படையெடுப்பின் தோல்வியிலிருந்து தன்னையும் அசோவையும் விடுவித்துக் கொள்ள குரோடெவிச் பின்னோக்கிப் பார்க்க முயற்சிக்கும் அதே வேளையில், ரஷ்யாவில் “வரலாற்று ரீதியான உக்ரேனிய நிலங்களை” கைப்பற்றுவது நீண்ட காலமாக தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகளின் பகுத்தறிவற்ற கூற்றுக்களின் பாகமாக இருந்து வந்துள்ளது.
2022 செப்டம்பரில், பாசிச Right Sector அமைப்பின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான டிமிட்ரோ யாரோஷ், குர்ஸ்க் படையெடுப்பை முன்னறிவித்து, உக்ரேன் பல ரஷ்ய பிராந்தியங்கள் மற்றும் நகரங்களில் பிராந்திய உரிமை கோரல்களை செய்ய வேண்டும் என்று பேஸ்புக்கில் கோரிக்கை விடுத்தார். குறிப்பாக பெல்கொரோட், குபான் மற்றும் வொரோனெஜ் ஆகிய பகுதிகளை மேற்கோள் காட்டி, “உக்ரேனிய பிரதேசங்களை” கைப்பற்ற போரை விரிவுபடுத்த அழைப்பு விடுத்தார்.
அவரது நேர்காணலின் முடிவில், குரோடெவிச் இலண்டனில் நேரத்தை செலவிடப் போவதாகவும், “ரஷ்யா, பெலாரஸ், வட கொரியா போன்ற உக்ரேனுக்கு விரோதமான பிற நாடுகள் பற்றிய உளவுத்துறை தகவல்களைப் பெறுவதற்கும் மேற்கு நாடுகளுடன் தொடர்பு கொள்வதற்கும் பணிக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனமான மூலோபாய செயல்பாட்டு மற்றும் புலனாய்வு நிறுவனத்தை (Soia)” உருவாக்கப் போவதாகவும் அறிவித்தார்.
தனது லண்டன் விஜயங்கள் உக்ரேனிய ஆயுதப்படைகளின் முன்னாள் தலைமைத் தளபதி வலேரி ஜலுஸ்னியுடன் பிணைக்கப்படவில்லை என்று குரோடெவிச் வலியுறுத்தினார். ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடனான ஒரு பெரிய பொது மோதலுக்குப் பிறகு, ஜலுஷ்னி அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டு, தற்போது இங்கிலாந்தின் தூதராகப் பணியாற்றுவதற்கு அங்கு அனுப்பப்பட்டுள்ளார்.
உக்ரேனிய பாசிசத் தலைவர் ஸ்டீபன் பண்டேராவின் குறிப்பிடத்தக்க அபிமானியான ஜலுஷ்னி, எதிர்கால ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் விரும்பப்படும் ஒருவராக உள்ளார். மேலும், அசோவ் போன்ற பல்வேறு அதிதீவிர வலதுசாரி இராணுவம் மற்றும் அரசியல் அமைப்புகளால் ஜலுஷ்னி ஆதரிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், போரை முடிவுக்குக் கொண்டு வந்து அந்த நாடுகளின் வளங்களைச் சூறையாட ரஷ்யா மற்றும் உக்ரேனுடன் ஒரு ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகை முயன்றபோது, ஜலுஷ்னி லண்டனில் உள்ள சாத்தம் மாளிகையில் ஒரு ஆத்திரமூட்டும் உரையை நிகழ்த்தினார். அமெரிக்கா உலக ஒழுங்கை “அழித்து வருகிறது” என்றும் “தீமையின் அச்சில்” இணைந்துவிட்டது என்றும் அறிவித்தார். ஜெலென்ஸ்கி அரசாங்கம், ஜலுஷ்னியின் கருத்துக்களிலிருந்து பகிரங்கமாக விலகிக் கொண்டுள்ளது.
உக்ரேனிய படைகள் குர்ஸ்க்கில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள அதேவேளையில், கியேவ் பெல்கொரோட் பிராந்தியத்தில் அதன் எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தொடர்கிறது. “எதிரி பிராந்தியத்தில் எல்லைப் பகுதிகளில் நாங்கள் தொடர்ந்து செயலூக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம், அது முற்றிலும் நியாயமானது—போர் எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்ப வேண்டும்,” என்று ஜெலென்ஸ்கி கடந்த திங்களன்று ஒரு இரவு காணொளி உரையில் தெரிவித்தார்.