மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்து மற்றும் பனாமாவை இராணுவ பலத்தைக் கொண்டு இணைத்துக் கொள்ளும் திட்டங்களுக்கு ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்களின் பதில்கள், அவரது அச்சுறுத்தல்களை அவை தீவிரமாக எடுத்து வருகின்றன என்பதைத் தெளிவுபடுத்திக் காட்டுகின்றன.
கடந்த செவ்வாயன்று, ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் ட்ரம்ப் அவரது இலக்குகளை எட்ட இராணுவ பலத்தைப் பயன்படுத்தப்போவதாக குறிப்பிட்ட பின்னர், ஜேர்மன் சான்சிலர் ஓலாவ் ஷொல்ஸ் புதன்கிழமை பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையானது, அதிபர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதுபற்றி, ஐரோப்பிய நாடுகளின் பல தலைவர்கள், அரசாங்கங்கள் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவருடன் ஆலோசனை நடத்தியதாக ஷொல்ஸ் தெரிவித்தார்.
1975 ஆம் ஆண்டு, ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான ஹெல்சின்கி மாநாட்டின் ஒப்பந்தங்களைக் குறிப்பிட்டு, “சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டு எல்லைகளை மீறக்கூடாது” என்பதை ஜேர்மன் அதிபர் வலியுறுத்தினார். மேலும், “எல்லைகளை வலுக்கட்டாயமாக மாற்றக்கூடாது” என்று வலியுறுத்திய அவர், “உக்ரேனுக்கு எதிரான தனது மிருகத்தனமான ஆக்கிரமிப்புப் போரில் இந்தக் கொள்கையை மீறிய ரஷ்ய ஆட்சியாளரை” கடுமையாகக் கண்டித்தார். இதன் மூலம் ஷோல்ஸ் மறைமுகமாக ட்ரம்பை புட்டினுக்கு இணையாகக் காட்டினார்.
அதே நேரத்தில், அவர் என்ன பேசுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும், ட்ரம்பின் பெயரையோ அல்லது கிரீன்லாந்தையோ ஒரு முறை கூட அவர் குறிப்பிடுவதைத் தவிர்த்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜேர்மன் நலன்களுக்கு தீங்கு விளைவிக்காத வரையில், தொடர்ந்து இணைந்து வேலை செய்வதற்கான அவரது விருப்பத்தை ட்ரம்புக்கு சமிக்ஞை செய்ய ஷோல்ஸ் வெளிப்படையாக ஆர்வமாக இருந்தார்.
அதற்கு பதிலாக, ஷோல்ஸ் தனது ஐரோப்பிய கூட்டாளிகளுடனான பேச்சுவார்த்தைகளில், “அமெரிக்காவின் தற்போதைய அறிக்கைகள் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட புரிதல் இல்லாதது தெளிவாகியுள்ளது” என்பதை மிகவும் பொதுவான சொற்களில் விளக்கினார். எல்லைகளை மீறக்கூடாது என்ற கொள்கை ஒவ்வொரு நாட்டிற்கும் பொருந்தும், “அது நமக்கு கிழக்கு அல்லது மேற்காக இருந்தாலும் சரி, ஒரு சிறிய நாடாக இருந்தாலும் அல்லது மிகவும் சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு நாடும் இதற்கு கட்டுப்பட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன்-நோயல் பரோட்டும் ட்ரம்பின் இணைப்பு அச்சுறுத்தல்களை கண்டனம் செய்தார். “கிரீன்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பிரதேசமாகும். ஐரோப்பிய ஒன்றியமானது, பிற நாடுகள் அதன் இறையாண்மை எல்லைகளைத் தாக்க அனுமதிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை” என்று அவர் பிரான்ஸ் இன்டர் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.
அமெரிக்கா உண்மையில் கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதை அவரால் கற்பனை செய்ய முடியவில்லை என்றாலும், “காட்டின் சட்டம்” (law of the jungle) சர்வதேச உறவுகளில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு காலத்திற்கு உலகம் நுழைகிறது என்று அவர் கூறினார். ஐரோப்பா தன்னை மிரட்டுவதற்கு யாரையும் அனுமதிக்கக்கூடாது. அது, இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
18 ஆம் நூற்றாண்டிலிருந்து கிரீன்லாந்து டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. டென்மார்க்கின் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், கிரீன்லாந்திற்கான தனது திட்டங்களை ட்ரம்ப் நிறைவேற்றுவார் என்று நம்பும் கற்பனை தனக்கு இல்லை என்றும், “கிரீன்லாந்து என்பது கிரீன்லாந்து மக்களுக்குச் சொந்தமானது” என்றும் டிவி 2 இடம் கூறினார். 1979 முதல், தன்னாட்சி அந்தஸ்தைப் பெற்ற கிரீன்லாந்தின் பிரதம மந்திரி மியூட் எகெட், கடந்த டிசம்பரில் ட்ரம்பின் கருத்தை ஏற்கனவே நிராகரித்திருந்தார்.
“கிரீன்லாந்து எங்களுக்கு சொந்தமானது. நாங்கள் விற்பனைக்கு இல்லை, ஒருபோதும் விற்பனைக்கு வரமாட்டோம்,” என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
ட்ரம்பின் திட்டங்களுக்கு ஐரோப்பிய சக்திகளின் எதிர்ப்பு என்பது, சர்வதேச சட்டம் மற்றும் எல்லைகள் மீறப்படாமல் இருப்பது குறித்த கவலைகளால் எரியூட்டப்படவில்லை. மாறாக, அவற்றின் சொந்த ஏகாதிபத்திய அபிலாஷைகளால் எரியூட்டப்படுகிறது. மூன்று தசாப்தங்களாக, அவை கொள்ளையடிக்கும் பொருட்களில் பங்கெடுத்துக் கொள்வதற்காக அனைத்து அமெரிக்க ஏகாதிபத்திய போர்களையும் ஆதரித்து வந்துள்ளன. 1999 இல், யூகோஸ்லாவியா உடைந்து சேர்பியாவில் இருந்து கொசோவோவைப் பிரிப்பதற்காக நேட்டோ அதன் மீது குண்டுவீசியது. ஹிட்லரின் தோல்விக்குப் பின்னர் முதல் தடவையாக ஜேர்மனி இந்த ஆக்கிரமிப்புப் போரில் பங்கேற்றது.
2003 ஆம் ஆண்டு, சர்வதேச சட்டத்தையும் மீறி இடம்பெற்ற ஈராக் மீதான தாக்குதலை, ஜேர்மனியும் பிரான்சும் தங்கள் சொந்த நலன்களைப் பாதித்ததால் எதிர்த்தன. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தை பிளவுபடுத்துவதாக வாஷிங்டன் அச்சுறுத்தியபோது, அவர்கள் இந்த எதிர்ப்பை விட்டுக்கொடுத்தனர். 2011 ஆம் ஆண்டு லிபியா மீது பிரான்சால் தொடங்கப்பட்ட தாக்குதல், அந்நாட்டை காலனி அந்தஸ்துக்கு கீழ்ப்படுத்தியது,
ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேனிய போர், காஸா மீதான இஸ்ரேலிய இனப்படுகொலை, லெபனான் மற்றும் சிரியா மீதான இஸ்ரேலிய பயங்கரவாத குண்டுவீச்சுக்கள், மற்றும் ஈரானுக்கு எதிரான போர் தயாரிப்புகள் ஆகியவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவால் கூட்டாக ஆதரிக்கப்படுகின்றன மற்றும் நிதியளிக்கப்படுகின்றன.
கிரீன்லாந்தை இணைப்பதற்கான ட்ரம்பின் திட்டங்களுக்கு எதிராக, பேர்லினும் பாரீஸும் இப்போது எதிர்ப்பு காட்டுகின்றன என்றால், அது அவற்றின் நலன்களை நேரடியாக பாதிக்கிறது என்பதால் தான் ஆகும்.
உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தை (2.2 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள், அல்லது 1.3 மில்லியன் சதுர மைல்கள்) ஐரோப்பிய ஒன்றியம் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இந்த தீவானது, மதிப்புமிக்க மூலப்பொருட்களை கொண்டிருப்பதுடன், ஆர்க்டிக்கில் அமைந்திருப்பதால் மூலோபாய முக்கியத்துவத்தையும் பெற்றிருக்கிறது.
ஏகாதிபத்தியம் குறித்த விளாடிமிர் லெனினின் சிறந்த பகுப்பாய்வானது, இன்று மீண்டும் மிகவும் பொருத்தமாக இருந்து வருவதை நிரூபிக்கின்றது. ஏகாதிபத்திய கூட்டணிகள் என்பது, “தவிர்க்க முடியாமல் போர்களுக்கு இடையிலான காலங்களில் ஏற்படும் ஒரு ‘சமாதானம்’ என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. அமைதியான கூட்டணிகள் போர்களுக்கான களத்தை தயார் செய்கின்றன. அதன் விளைவாக, போர்கள் பிறக்கின்றன; ஒன்று மற்றொன்றை நிபந்தனைக்குட்படுத்துகிறது, உலகப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியலுக்குள் ஏகாதிபத்திய தொடர்புகள் மற்றும் உறவுகளின் ஒரே அடிப்படையானது, அமைதியான மற்றும் அமைதியற்ற போராட்டத்தின் மாற்று வடிவங்களை உருவாக்குகிறது” என்று லெனின் எழுதினார்.
முதலாளித்துவ நிலைமைகளின் கீழ், போட்டியாளர்களை வென்று அழிப்பதன் மூலமாக, உலகை வன்முறையாக மறுபங்கீடு செய்வதன் மூலமாக மட்டுமே இதனை “தீர்க்க” முடியும் என்கிற அளவுக்கு அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி உச்சக்கு வந்துள்ளது என்பதே வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப் மீண்டும் கொண்டுவரப்பட்டதன் புறநிலை முக்கியத்துவம் ஆகும். ஹிட்லர் ஒருகாலத்தில் ஆஸ்திரியா மற்றும் சுடெட்டன்லாந்தை இணைத்துக் கொண்டு, செக்கோஸ்லோவாக்கியாவைக் கீழ்ப்படுத்தி, இறுதியாக ஜேர்மனியின் பெருநிறுவனங்களுக்கு “வாழ்வதற்கான இடத்தை” உருவாக்குவதற்காக போலந்து, பிரான்ஸ், பின்னர் சோவியத் ஒன்றியம் மீது படையெடுத்ததைப் போலவே, ட்ரம்ப் வெற்றிகளுக்கும் இணைப்புகளுக்கும் அழுத்தமளித்துக் கொண்டிருக்கிறார்.
ட்ரம்பினது அரசாங்கம் தன்னலக்குழுக்களின் ஒரு அமைச்சரவையை கொண்டிருக்கிறது. இதில், மிகவும் ஒட்டுண்ணித்தனமான கூறுபாடுகள், நிதி மூலதனம் மற்றும் ஏகபோகங்களின் பிரதிநிதிகள், எலோன் மஸ்க் போன்ற பல பில்லியனர்களுக்கான அதிபதிகள், மற்றும் வெளிப்படையான பாசிசவாதிகள் போன்றவர்கள் உள்ளனர்.
ஐரோப்பிய சக்திகள் தங்கள் சொந்த ஏகாதிபத்திய நலன்களை இன்னும் ஆக்ரோஷமாக பின்தொடர்வதன் மூலமாகவும், மீள்ஆயுதமயமாக்கல், போர் மற்றும் அதன் சமூக விளைவுகளுக்கு எதிரான எதிர்ப்பை வன்முறையாக ஒடுக்குவதற்காக தங்களை பாரியளவில் ஆயுதபாணியாக்கிக் கொண்டும், பாசிச அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வர உதவுவதன் மூலமாகவும் இதற்கு எதிர்வினையாற்றி வருகின்றன.
ட்ரம்புக்கு எதிரான அவரது பத்திரிகை அறிக்கையில் ஷொல்ஸ், தான் கடந்த ஏழு ஆண்டுகளில் “ஜேர்மன் இராணுவத்தை (Bundeswehr) மீண்டும் சரியான பாதையில் கொண்டு வந்ததாகவும்”, ஜேர்மன் பாதுகாப்பு பட்ஜெட்டை இரட்டிப்பாக்கியதாகவும் பெருமைபீற்றினார். துணை அதிபரான, பசுமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ஹேபெக், தற்போதைய பாதுகாப்பு பட்ஜெட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாக, மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் என்று அழைப்பு விடுத்து வருகிறார்.
ஜேர்மன் பங்குச் சந்தையின் வெளியீடான Frankfurter Allgemeine Zeitung, ட்ரம்பை “உலகெங்கிலும் வலதுசாரி தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் ஒரு பல பில்லியன்களைக் கொண்டிருக்கின்ற [எலோன் மஸ்க்] நிதியுதவி வழங்கும் ஒரு குற்றவாளி” என்று வர்ணித்தது.
ஜேர்மனி “ஐரோப்பாவை தலைமை தாங்கி வழிநடத்தி” ஒன்றாக வைத்திருக்க வேண்டும், ஜேர்மனியின் செயலற்ற தன்மையானது ஜேர்மனியின் பலத்தை விட ஆபத்தானது என்றும் அப்பத்திரிகை முடிவுரையில் எழுதியுள்ளது.
அமெரிக்காவின் அழுத்தம் ஐரோப்பாவில் உள்ள வரலாற்று மோதல்களையும் மீண்டும் ஒரு உச்சகட்டத்திற்கு கொண்டு வந்துள்ளது. புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யவும் மற்றும் சமூக எதிர்ப்பை ஒடுக்கவும் அதிகாரத்தில் இருப்பவர்களால் ஊக்குவிக்கப்பட்டு, பாசிச மற்றும் அதிதீவிர-தேசியவாத கட்சிகள் அதிகரித்தளவில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவை ஏற்கனவே இத்தாலியில் ஜோர்ஜியா மெலோனியுடனும், நெதர்லாந்தில் கீர்ட் வைல்டர்ஸ் மற்றும் ஹங்கேரியில் விக்டொர் ஓர்பன் உடனான அரசாங்கங்களிலும் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆஸ்திரியாவில், ஹெர்பர்ட் கிக்லுக்கு ஒரு அரசாங்கத்தை அமைக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது; ஜேர்மனியில் பாசிச AfD இரண்டாவது பலமான கட்சியாக உள்ளது; பிரான்சில் அதிவலது மரின் லு பென் ஜனாதிபதியாகும் தருவாயில் உள்ளார்.
போர் மற்றும் பாசிசவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் இணைக்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச தாக்குதலால் மட்டுமே, இந்த அபிவிருத்தியைத் தடுத்து நிறுத்த முடியும் மற்றும் ஒரு பேரழிவைத் தடுக்க முடியும். இதற்காகத்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் போராடி வருகின்றன.