முன்னோக்கு

இணைப்பு மற்றும் உலகளாவிய வெற்றிக்கான வெளியுறவுக் கொள்கையை ட்ரம்ப் வெளிப்படுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், மார்-எ-லாகோவில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகிறார், செவ்வாய், ஜனவரி 7, 2025, புளோரிடாவின் பாம் பீச். [AP Photo/Evan Vucci]

கடந்த செவ்வாயன்று, பெயரளவிலான ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், பொருளாதாரக் கொள்கை தொடர்பாகவும், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை இணைப்பது தொடர்பாக இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது குறித்தும் அச்சுறுத்தலை விடுத்தார். பொருளாதார அழுத்தத்தை கொடுப்பதன் மூலமாக கனடாவை இணைக்க நிர்பந்திக்கவும், மேலும் அமெரிக்காவிடம் இருந்து “பாதுகாப்பை” பெறுவதற்காக ஐரோப்பாவை அதன் இராணுவ செலவுகளை இரட்டிப்பாக்க நிர்பந்திக்கவும் அவர் சூளுரைத்தார்.

“நாங்கள் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்றப் போகிறோம்” என்று ட்ரம்ப் கூறினார். பனாமா மற்றும் கிரீன்லாந்தை இணைத்துக் கொள்வதற்கு “பலவந்தமாக இராணுவத்தை” பயன்படுத்துவதை அவர் பரிசீலிப்பாரா என்று கேட்கப்பட்ட போது, ட்ரம்ப், “பொருளாதார பாதுகாப்புக்காக அவை நமக்குத் தேவை” என்று பதிலளித்தார்.

கனடாவை “ஐம்பத்தி ஒன்றாவது மாநிலம்” என்று அவர் முன்னர் குறிப்பிட்டதை விளக்குமாறு ஒரு நிருபர் கேட்டபோது, ட்ரம்ப் அவரது இணைப்புவாத அச்சுறுத்தல்களை இரட்டிப்பாக்கினார். மேலும், கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே “செயற்கையாக வரையப்பட்ட கோட்டை அகற்றுமாறு” கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.

ஈரான் மீதான ஒரு முழு அளவிலான அமெரிக்காவின் தாக்குதலை நிராகரிக்க மறுத்த ட்ரம்ப், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பைக் கைவிடாவிட்டால் “அனைத்து நரகமும் வெடிக்கும்” என்று கூறியதுடன், மத்திய கிழக்கு எங்கிலும் போரைத் தொடங்கப் போவதாக அச்சுறுத்தினார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது, உக்ரேனில் போருக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை வலியுறுத்திய ட்ரம்ப், “மூன்றாம் உலகப் போரை” பைடென் தொடங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். மேலும், ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போர்களால் தீவிரமடைந்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எடுத்துக்காட்டினார்.

இப்போது அவர் ஜனாதிபதி பதவியை ஏற்கவிருக்கும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவில் போர் நடத்துவதில் அர்ப்பணிக்கப்படும் தனது நிர்வாகத்தின் உண்மையான இலக்குகளை ட்ரம்ப் தெளிவுபடுத்துகிறார். உக்ரேனிய போர் குறித்த அவரது விமர்சனம், ஆளும் வர்க்கத்திற்குள் நடக்கும் தந்திரோபாய மோதல்களில் வேரூன்றியுள்ளது. மத்திய கிழக்கில் “அனைத்து நரகமும் வெடிக்கும்” என்ற அவரது அச்சுறுத்தல், அவரது நிர்வாகம் அன்றாடம் தீவிரமடைந்து வரும் நெருக்கடி மற்றும் உலகளாவிய போரில் ஒன்றாக ஈடுபட்டு வருவதை தெளிவுபடுத்துகிறது.

உலகளாவிய மேலாதிக்கத்திற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சியில் முக்கியமாக இருப்பது, 1938 இல் ஹிட்லர் ஆஸ்திரியாவை ஜேர்மனியுடன் இணைத்துக் கொண்டதை (Anschluss) முன்மாதிரியாகக் கொண்டு, நேரடி அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் உலகை மறுஒழுங்கு செய்வதற்கான முயற்சியாகும். மேலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான போட்டியாளராக இருக்கும் சீனாவுக்கு எதிராக, அதிகாரத்தை முன்னிலைப்படுத்துவதற்கு அவசியமானதாக பார்க்கப்படும் அமெரிக்காவின் அருகிலுள்ள நாடுகளில், அமெரிக்க அதிகாரத் தளத்தை பலப்படுத்த ட்ரம்ப் முயன்று வருகிறார்.

கனடாவினதும், கிரீன்லாந்தினதும் கணிசமான கனிம வளங்கள், எரிசக்தி இருப்புக்கள் மற்றும் ஆர்க்டிக் கடல்வழிகளுக்கான அணுகல்கள் ஆகியவற்றை ட்ரம்ப் நிர்வாகம் கருத்தில் கொள்வதுடன், மேலும், அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையிலான மையப் புள்ளியாக இருந்துவரும் பனாமா கால்வாய் இந்த முயற்சிக்கு மிக முக்கியமானவையாக இருந்து வருகின்றன.

அமெரிக்க இராணுவவாதத்தின் செயல்பாடுகளை, எந்தவொரு சட்டக் கட்டுப்பாடுகளாலும் அல்லது “சர்வதேச சட்டத்தின்” மூடிமறைப்புகளாலும் கட்டுப்படுத்தப்படும் சகாப்தம் முடிந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவிக்கிறார். இப்போதிலிருந்து, “வலிமையானவர்கள் தாங்கள் விரும்பியதைச் செய்கிறார்கள், பலவீனமானவர்கள் தாங்கள் செய்ய வேண்டியதை அனுபவிக்கிறார்கள்” என்பது அமெரிக்காவின் காட்டுத்தனமான சட்டமாக இருக்கிறது.

ட்ரம்பின் கருத்துக்கள் ஏகாதிபத்திய யுகம் முடிந்துவிட்டது என்ற அனைத்து வாதங்களுக்கும் சாவுமணி அடிக்கின்றன. ரஷ்ய புரட்சிகர மற்றும் மார்க்சிச தத்துவாசிரியர் விளாடிமிர் லெனின் விளக்கியதைப் போல, ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக் கட்டமாகும். ஒரு குறுகிய நிதிய தன்னலக்குழுவிடம் பாரியளவில் செல்வம் குவிந்திருப்பதும், பொருளாதார வாழ்வில் ஏகபோக நிறுவனங்களின் மேலாதிக்கமும், நாடுகளை இணைத்தல் மற்றும் காலனித்துவ ஆதிக்கத்திற்கான உந்துதலில் இருந்து பிரிக்க முடியாததாகும்.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பிறகு தொடங்கப்பட்ட மூன்று தசாப்தங்களுக்கும் மேலான தொடர்ச்சியான ஏகாதிபத்தியப் போரின் நிறைவாக, ட்ரம்ப்பின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலம் உள்ளது. இது, அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகின் கட்டுப்பாடற்ற அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது என்ற “புதிய உலக ஒழுங்கை” ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ் பிரகடனம் செய்தார்.

இதற்கு அதற்கடுத்த தசாப்தங்களில், இரண்டு முறை ஈராக் மீதான ஆக்கிரமிப்பை மேற்கொண்ட அமெரிக்கா, யூகோஸ்லாவியாவை சிறு சிறு அரசுகளாக உடைத்து, ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து ஆக்கிரமித்து, லிபியா மற்றும் சிரியாவின் அரசாங்கங்களை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தி தூக்கியெறிந்து, உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக ஒரு போரைத் தூண்டி, போர் மற்றும் இனப்படுகொலை மூலமாக மத்திய கிழக்கை மறுஒழுங்கமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்தக் காலகட்டம் முழுவதிலும், அமெரிக்கா தனது அடிப்படையான கொள்ளையடிக்கும் இலக்குகளை “மனித உரிமைகள்” மற்றும் “தேசிய சுய-நிர்ணய” உரிமையின் மொழியில் முன்வைத்து வந்துள்ளது. அல்லது “பயங்கரவாதத்திற்கு” எதிரான போரை ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் தொடங்கியது போல, பயங்கரவாதத்திற்கு ஒரு பதிலாக அலங்கரித்தது.

ஆனால், ட்ரம்ப் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான தன்னலமற்ற அல்லது தற்காப்பு பாசாங்குகளை கைவிட்டுள்ளார். அமெரிக்கா மிகப்பெரிய, மிகவும் சக்திவாய்ந்த இராணுவ மற்றும் கணிசமான பொருளாதார சக்தியைக் கொண்டுள்ளது. அதன் “கூட்டாளிகளிடமிருந்து” இன்றியமையாத அடிப்படையில் ஏகாதிபத்திய கப்பத்தை கறந்தெடுக்கவும், பிராந்திய விரிவாக்கம் மற்றும் நாடுகளை இணைப்பதற்கு இந்த சக்தியை அமெரிக்கா பயன்படுத்தும்.

கிரீன்லாந்து, பனாமா மற்றும் கனடாவை இணைத்துக் கொள்வது மற்றும் அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிகளை பாதுகாப்பதற்கான பணத்தை செலுத்த கட்டாயப்படுத்துவது பற்றிய ட்ரம்பின் ஆவேசங்கள், உலகளாவிய போராட்டத்தின் கட்டமைப்பிற்குள், குறிப்பாக சீனாவிற்கு எதிரான போராட்டத்தின் கட்டமைப்பிற்குள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதில், ட்ரம்ப்பின் செய்தியாளர் சந்திப்பில், அவரது ஆலோசகர் ஒருவரின் கருத்துக்களை உறுதிப்படுத்தி, அவர் தனது அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் உள்ள தர்க்கத்தை வாஷிங்டன் போஸ்டுக்கு விளக்கினார். இது குறித்து தி போஸ்ட், “கனடா, மெக்சிகோ, கிரீன்லாந்து மற்றும் பனாமா குறித்த ட்ரம்பின் கருத்துக்களில் ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்வதற்கான உலகளாவிய நோக்கம் பொதுவாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

CSIS என்ற சிந்தனைக் குழாமின் ஒரு பகுப்பாய்வாளரான ரியான் பேர்க் வாஷிங்டன் போஸ்ட்டிடம், “இந்த கால்வாய் மீதான சீனாவின் செல்வாக்கு மற்றும் அமெரிக்க நடவடிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்து கவலைகள் உள்ளன. தைவான் போன்ற நாடுகளில் தேசிய பாதுகாப்பு நலன்கள் உள்ள அவசரகால சூழ்நிலையில், அட்லாண்டிக் முதல் பசிபிக் வரை அமெரிக்க போர்க்கப்பல்களை நிலைநிறுத்துவதற்கான முதன்மை வழிகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்தி, ட்ரம்ப் அவரது பத்திரிகையாளர் கூட்டத்தில், “பனாமா கால்வாயை சீனா இயக்குகிறது” என்று அறிவித்தார். “பனாமா கால்வாய் எங்கள் இராணுவத்திற்காக கட்டப்பட்டது” என்று அவர் மேலும் கூறினார்.

அதேபோல், உக்ரேனுக்கான இராணுவ உதவியை நிறுத்தப் போவதாக ட்ரம்ப் விடுக்கும் அச்சுறுத்தல் என்பது, அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகளின் இராணுவ செலவினங்களை இரட்டிப்பாக்கும் முயற்சியை அடிப்படையாகக் கொண்டது என்று டிசம்பரில் பைனான்சியல் டைம்ஸில் வெளியிடப்பட்ட அறிக்கையை ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.

மேலும், “நேட்டோ உறுப்பு நாடுகள் பாதுகாப்பு செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கையை விடுக்கும் ட்ரம்ப், உக்ரேனுக்கு இராணுவ உதவியை தொடர்ந்து வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளார்” என்று டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் தனது செய்தியாளர் கூட்டத்தில், “ஐரோப்பா தற்போது நாம் செலுத்தும் பணத்தில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே கொடுக்கிறது. ... நீங்கள் உங்கள் கட்டணங்களை, நீங்களே செலுத்த வேண்டும் என்று நான் சொன்னேன். ... நேட்டோ 5 சதவீதத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் ... அவை 2 சதவீதமாக அல்ல, 5 சதவீதமாக இருக்க வேண்டும். ... நாங்கள் எங்கள் கட்டணங்களை செலுத்தவில்லை என்றால், அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து நம்மைப் பாதுகாக்குமா?... நீங்கள் பணம் செலுத்தவில்லை என்றால், நீங்கள் குற்றவாளி என்று அர்த்தம். ... நீங்கள் குற்றவாளியாக இருந்தால், நாங்கள் உங்களைப் பாதுகாக்க மாட்டோம்” என்று அறிவித்தார்.

ஐரோப்பாவை நோக்கிய தனது கொள்கையை ட்ரம்ப் ஒரு பாதுகாப்பு மோசடியின் வடிவத்தில் முன்வைக்கிறார். ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான உலகளாவிய போர் என்பது, அதிகரித்தளவில் அடிமை அரசுகளாக நடத்தப்பட்டு வரும் அமெரிக்காவின் “கூட்டாளிகளிடமிருந்து” கப்பம் பிழிந்தெடுப்பதற்கான கட்டமைப்பாக இருக்கிறது.

ட்ரம்பின் பத்திரிகையாளர் சந்திப்பானது, 1928 இல் ரஷ்ய புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கியின் மதிப்பீட்டை ஊர்ஜிதப்படுத்துகிறது:

நெருக்கடி காலகட்டத்தில், அமெரிக்காவின் மேலாதிக்கம் செழுமை காலகட்டத்தை விட இன்னும் முழுமையாகவும், இன்னும் பகிரங்கமாகவும், இன்னும் ஈவிரக்கமின்றியும் செயல்படும். மேலும், ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவில் இது நடந்தாலும் சரி, அல்லது இது அமைதியாக நடந்தாலும் சரி, அல்லது போர் மூலம் நடந்தாலும் சரி, அமெரிக்கா தனது சிரமங்கள் மற்றும் நோய்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முதன்மையாக ஐரோப்பாவின் இழப்பில் முயலும்.

ட்ரொட்ஸ்கி அதன்பின் 1934 இல் எச்சரிக்கை விடுத்தார்:

1914 இல் ஜேர்மனியை போரின் பாதையில் தள்ளிய அதே பிரச்சினைகளை அமெரிக்க முதலாளித்துவம் எதிர்கொள்கிறது. உலகம் பிளவுபட்டுள்ளதா? அது மறுபங்கீடு செய்யப்பட வேண்டும். ஜேர்மனியைப் பொறுத்த வரையில், அது “ஐரோப்பாவை ஒழுங்கமைப்பது” பற்றிய கேள்வியாகும். அமெரிக்கா உலகை “ஒழுங்கமைக்க” வேண்டும். வரலாறு மனிதகுலத்தை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்போடு நேருக்கு நேர் கொண்டு வந்துள்ளது.

ட்ரொட்ஸ்கியின் இந்த வார்த்தைகள், அவை எழுதப்பட்ட போது இருந்ததை விட இப்போது மிகவும் பொருத்தமானவையாக உள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “எரிமலை வெடிப்பானது,” வர்க்கப் போரின் ஒரு வெடிப்பாகவும் இருக்கும். ட்ரம்பின் பொருளாதார மற்றும் இராணுவ போர்முறைக்கு தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். பனாமா, மெக்சிகோ, உக்ரேன் அல்லது தாய்வானாக ஆகட்டும், தொழிலாளர்கள் போரில் கொல்லப்படுவதற்கு அனுப்பப்படுவார்கள்.

இந்த காரணத்திற்காகவே, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தைப் போலவே, போருக்கு எதிரான போராட்டமும், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அதன் சமூக மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்துடன் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

Loading