செப்டம்பர் 21 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) தலைவரும் இலங்கை ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க, டிசம்பர் 15 முதல் 17 வரை இந்தியாவுக்கு விஜயம் செய்தார். பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இதன் போது அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர், நிதி அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சருடனும் உயர் மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
திசாநாயக்க முதலில் இந்தியாவை விஜயம் செய்யத் தேர்ந்தெடுத்தது, சீனாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போர் தயாரிப்புகளில் கொழும்பை ஒருங்கிணைப்பதில் அவரது முன்னோடி ரணில் விக்கிரமசிங்கவின் வெளியுறவுக் கொள்கையைத் தொடர்வதற்கான அவரது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. தெற்காசியாவில் இந்தியா அமெரிக்காவின் முக்கிய மூலோபாய பங்காளியாகும்.
மூன்றாம் உலகப் போரின் தொடக்கத்தைக் குறிக்கும் பூகோள அரசியல் பதட்டங்கள் மற்றும் மோதல்களின் நிலைமைகளின் கீழ் திசாநாயக்கவின் விஜயம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் ஏற்கனவே உக்ரைனில் ரஷ்யாவிற்கு எதிராக வேகமாக அதிகரித்து வரும் போரில் ஈடுபட்டுள்ளன. அதே நேரத்தில், வாஷிங்டன் இஸ்ரேலை காசாவில் அதன் இனப்படுகொலைப் போரில் ஆதரிப்பதுடன் இது ஏற்கனவே லெபனான் மற்றும் சிரியாவிற்கு விரிவாக்கப்பட்டு, முதன்மையாக ஈரானுக்கு எதிராக இலக்கு வைப்பட்டுள்ளதுடன் சீனாவிற்கு எதிராக இந்தோ-பசிபிக் முழுவதும் அதன் ஆத்திரமூட்டல்கள், பொருளாதாரப் போர் மற்றும் இராணுவக் கட்டமைப்பை விரிவுபடுத்துகிறது.
1960 களின் பிற்பகுதியில் ஜே.வி.பி. தோன்றியதிலிருந்து அதன் பல தசாப்த கால இந்திய-விரோத பேரினவாத பதிவுகளைக் கருத்தில் கொண்டால், புது தில்லியுடன் நெருக்கமான உறவுகளுக்கான திசாநாயக்கவின் நடவடிக்கைகள் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
மாவோவாத மற்றும் காஸ்ட்றோவாத விவசாயிகள் கெரில்லாவாதம் மற்றும் சிங்கள ஜனரஞ்சகவாதத்தினதும் நச்சு கலவையான ஒரு அரசியல் சித்தாந்தத்துடன் சிங்கள கிராமப்புற இளைஞர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு குட்டி முதலாளித்துவ தீவிரவாத தேசியவாத இயக்கமாக ஜே.வி.பி உருவானது. தமிழ் பேசும் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களை 'இந்திய விரிவாக்கவாதத்தின் ஐந்தாவது படை' என்று அது கண்டனம் செய்தது.
1980 களில் அதன் வலதுசாரி சீரழிவின் போது, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்க தீவின் வடக்கு மற்றும் கிழக்கிற்கு இந்திய அமைதி காக்கும் துருப்புக்கள் எனப்படுவதை கொண்டுவந்து இறக்கிய 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை, நாட்டைப் பிளவுபடுத்தும் உடன்படிக்கை என ஜே.வி.பி. பேரினவாத அடிப்படையில் கண்டனம் செய்தது. உடன்படிக்கைக்கு எதிராக ஒரு கொலைகார, பாசிச பிரச்சாரத்தை அது முன்னெடுத்தது.
சர்வதேச அளவில் இதே போன்ற அமைப்புகளைப் போலவே, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பின்னர், ஜே.வி.பி.யும் தன்னை மாற்றிக் கொண்டு, 'ஆயுதப் போராட்டத்தை' கைவிட்டு 1990 களில் அரசியல் ஸ்தாபனத்துடன் ஒருங்கிணைந்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் நீண்டகால இனவாதப் போரின் தீவிரமான ஆதரவாளராக இருந்த ஜே.வி.பி., அரசாங்கம் புது தில்லியுடன் நெருக்கமான உறவுகளை நாடிய போது, 'இலங்கையின் தேசிய நலன்களை இந்தியாவிற்கு அடிபணியச் செய்வதாக' விமர்சித்தது.
இருப்பினும், ஜே.வி.பி. கடந்த தசாப்தத்தில், தேசிய மக்கள் சக்தி உருவாக்கத்தின் மூலம் வணிகத் தட்டுக்கள் மற்றும் இராணுவம் உட்பட ஆளும் உயரடுக்கினருடன் மிக நெருக்கமான உறவுகளை உருவாக்கிக்கொண்டு, அதற்கேற்ப தனது வெளியுறவுக் கொள்கையை சரிசெய்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேற நிர்பந்தித்த 2022 வெகுஜன எழுச்சியின் மத்தியில், ஜே.வி.பி. தலைவர்கள் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதர் ஜூலி சுங்கை சந்தித்தனர். அவர், ஜே.வி.பி. பொதுமக்களின் உணர்வுகளை எதிரொலிக்கும் 'ஒரு குறிப்பிடத்தக்க கட்சி' என்று பகிரங்கமாக அறிவித்தார்.
பெப்ரவரி தொடக்கத்தில், மோடி அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ விருந்தினராக இந்தியாவிற்கு ஐந்து நாள் விஜயம் மேற்கொண்ட திசாநாயக்க, அங்கு தான் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவின் தேசிய நலன்களுக்கு குழிபறிக்கும் வகையில் எதையும் செய்ய மாட்டேன் என்று புது தில்லிக்கு உறுதியளித்தார். தற்போது பதவியில் இருக்கும் அவர், இந்த மாதம் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கும், சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதற்குமான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
2022 இல் வெளிநாட்டுக் கடனை செலுத்தத் தவறியதால் நீடித்த வெகுஜன போராட்டங்களுக்கு வழிவகுத்த தீவின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், திசாநாயக்க பொருளாதார உதவிக்காகவும் ஏங்குகிறார். முந்தைய அரசாங்கத்தால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட 3 பில்லியன் டொலர் சர்வதேச நாணய நிதியக் கடனை பெரிதும் நம்பியுள்ள அவர், அதன் நிபந்தனைகளை முழுமையாக செயல்படுத்த உறுதிபூண்டுள்ளார்.
புது தில்லியில் மோடியுடன் திசாநாயக்க நடத்திய பேச்சுவார்த்தைகளின் முக்கிய அங்கம், எரிசக்தி ஒத்துழைப்பு ஆகும். இது இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவும் அதே வேளை, தீவை இந்தியாவை அதிகம் சார்ந்திருக்கச் செய்யும். இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எல்என்ஜி வழங்கவும், நாடுகளின் மின் கட்டமைப்புகளை இணைக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பங்களிப்புடன் ஒரு பெட்ரோலிய குழாய் பாதையை அமைக்கவும், அவற்றின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை மேலும் ஒருங்கிணைக்கவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இந்தியா மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா மீதுமான இலங்கையின் வளர்ந்து வரும் பொருளாதார சார்பு நிலை, அதே சக்திகளுடன் இலங்கையின் மூலோபாய அணிசேர்வுக்கும் வலுவாக செல்வாக்குச் செலுத்துகிறது.
புது தில்லிக்கு விஜயம் செய்தபோது, திசாநாயக்க மோடி அரசாங்கத்திற்கு 'இந்தியாவின் பாதுகாப்பு அல்லது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தனது பிரதேசத்தைப் பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது” என்றும் “சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான இந்தியப் பெருங்கடலுக்கு உறுதியளிக்கிறது' என்றும் வாக்குறுதி கொடுத்தார். இந்தியப் பெருங்கடலில் முக்கியமான கடல் பாதைகளுக்கு அருகில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள இலங்கை, தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் போட்டியில் ஒரு மையப் புள்ளியாகும்.
2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு எடுத்ததாலும், சீன ஆராய்ச்சி கப்பல்கள் இலங்கையில் நிறுத்தப்பட்டதாலும், இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள், குறிப்பாக இலங்கையில் சீனாவின் வளர்ந்து வரும் இருப்பு குறித்த கவலைகள் அதிகரித்தன. சீன ஆராய்ச்சி கப்பல்கள் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தப்படுவதற்கான உடன்பாடுகள் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ன. திசாநாயக்கவின் வருகையின் போது, அதை முழுமையாக தடை செய்வதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டைப் பேணுவதன் முக்கியத்துவத்தை இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தினார்.
டிசம்பர் 20 அன்று, வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல் வருகைகள் குறித்த தேசியக் கொள்கையை வகுக்க கொழும்பு செயல்பட்டு வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஹேரத் கூறினார். திசாநாயக்கவின் கருத்தை எதிரொலிக்கும் விதமாக, இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் இலங்கை அனுமதிக்காது என்று அவர் இந்தியாவுக்கு உறுதியளித்தார்.
திசாநாயக்கவின் இந்திய வருகையின் போது, கூட்டு இராணுவப் பயிற்சிகள், கடல்சார் கண்காணிப்பு, பாதுகாப்பு உரையாடல்கள் மற்றும் பரிமாற்றங்கள் உட்பட இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவுபடுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இது பிரதானமாக சீனாவை இலக்காககக் கொண்ட இந்தியாவின் மூலோபாய திட்ட நிரலில் இலங்கையை நெருக்கமாக ஒருங்கிணைப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்,.
இந்தியாவிற்கு திசாநாயக்க அளித்த உறுதிமொழிகள், முந்தைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிர்ணயித்த பாதையைத் தொடர்கின்றன. அவர் 2023 ஜூலையில் இந்தியாவுடன் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை ஆழப்படுத்தும் 'கூட்டு தொலைநோக்கு' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த மாதம் திசாநாயக்க-மோடி பேச்சுவார்த்தைகளைப் பாராட்டி விக்கிரமசிங்க ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்காவை நோக்கிய இலங்கையின் நகர்வை எதிர்கொள்ள சீனா முயற்சிக்கிறது. சிரேஷ்ட அதிகாரி கின் போயோங் தலைமையிலான சீனக் குழு ஒன்று டிசம்பர் 16–19 வரை கொழும்புக்கு விஜயம் செய்தது. டிசம்பர் 18 அன்று, சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் மீதான தடை காலாவதியானவுடன் இந்தியப் பெருங்கடலில் கடல்சார் ஆராய்ச்சியை மீண்டும் தொடங்குவதற்கான தங்கள் விருப்பத்தை சீன அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயினும்கூட, அதன் கணிசமான பொருளாதார செல்வாக்கு இருந்தபோதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளின், குறிப்பாக இந்தியாவின் அழுத்தத்தின் கீழ், கொழும்பில் சீனாவின் செல்வாக்கு குறைந்து வருகிறது.
போட்டியாளர்களான ரஷ்யா, சீனா மற்றும் அதன் நலன்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பு மூலம் தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள அமெரிக்கா முயற்சிக்கும் நிலையில், ஒரு பேரழிவு தரும் உலகளாவிய மோதலுக்குள் இழுக்கப்படுவதில் இலங்கை மற்றும் தெற்காசியாவில் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு எந்த நலனும் கிடையாது. ஏகாதிபத்தியப் போரின் மூலமான முதலாளித்துவ இலாப அமைப்புக்கு முடிவுகட்ட, இலங்கைத் தொழிலாளர்கள் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒரு புரட்சிகர சோசலிச மற்றும் போர் எதிர்ப்பு வேலைத்திட்டத்தில் இணைய வேண்டும்.