முன்னோக்கு

தோல்வியடைந்த ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி இடம்பெற்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு: ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வர தயாராகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜனவரி 6, 2025 அன்று, அமெரிக்க காங்கிரஸ் 2024 ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றிக்கு சான்றளித்துள்ளது. இது, பதவியேற்பு நாளான ஜனவரி 20 அன்று, முன்னாள் பாசிச ஜனாதிபதி வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கு முந்தைய இறுதி நடைமுறை நடவடிக்கையாகும்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகைக்கு முன்பாக இருந்து தனது ஆதரவாளர்களை வாஷிங்டனில் உள்ள கேபிட்டலை நோக்கி அணிவகுத்துச் செல்ல அழைப்பு விடுக்கிறார். ஜனவரி 6, 2021 [AP Photo/Jacquelyn Martin]

ஜனவரி 6, 2021 இல் தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் நான்காவது ஆண்டு நிறைவில், தேர்தலில் ட்ரம்பினால் தோற்கடிக்கப்பட்ட போட்டியாளரான துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தலைமையில் நடைபெற்ற ஒரு சம்பிரதாய விழாவில், காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ட்ரம்பின் வெற்றியை ஏறத்தாழ ஒருமனதாக சான்றளித்துள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் என்றென்றும் பொறிக்கப்பட்ட அந்த நாளில், தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்ட ஒரு ஜனாதிபதி, அமெரிக்க மக்களின் வாக்குகளை மீறி பதவியில் நீடிக்க ஒரு வன்முறை கிளர்ச்சியைத் தூண்டினார். இது ஒரு தன்னிச்சையாக இடம்பெற்ற போராட்டம் அல்ல. மாறாக, ட்ரம்பின் அரசியல் எதிர்ப்பாளர்களைக் கடத்தி கொலை செய்வதற்கும், தேர்தல் வாக்குகளின் சான்றிதழை சீர்குலைப்பதற்கும், ட்ரம்பை ஒரு தேர்ந்தெடுக்கப்படாத சர்வாதிகாரியாக திணிப்பதற்குமான ஒரு ஒருங்கிணைந்த முயற்சியாக இருந்தது.

ஜனவரி 6, 2021 இல் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதியானது, பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் எந்தவொரு எதிர்ப்பினாலும் தோல்வியடையவில்லை. மாறாக, ப்ரௌட் பாய்ஸ் (The proud boys) மற்றும் ஓத்கீப்பர்ஸ் (oath keepers) போன்ற நவ பாசிசக் ஆயுதக் குழுக்களின் அனுபவமின்மை மற்றும் திறமையின்மையால் ஏற்பட்டது.

1923 இல், மூனிச்சில் அடோல்ஃப் ஹிட்லரது நாஜிக் கட்சி “பீர் ஹால் ஆட்சிக்கவிழ்ப்பு” என்ற ஒரு தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்தியதில் இருந்து மீண்டு அதிகாரத்திற்கு வர 10 ஆண்டுகள் ஆனது. ஜனவரி 1933 இல், சக்திவாய்ந்த ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் அமைப்புகளை அழித்து இரண்டாம் உலகப் போரைத் தொடங்கி, படுகொலை மற்றும் பிற இனப்படுகொலைக் குற்றங்களைச் செய்த பாசிச சர்வாதிகாரத்தை நிறுவ முதலாளித்துவ வர்க்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக ஹிட்லர் இருந்தார்.

அரசியல் சீரழிவு மற்றும் அவமானத்தில் இருந்து காங்கிரஸின் இரு அவைகளையும், உச்ச நீதிமன்றத்தையும் மற்றும் இப்போது நிர்வாக பிரிவையும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள ஒரு குடியரசுக் கட்சியின் சவாலுக்கிடமற்ற தலைவராக, அதிகாரத்திற்கு திரும்புவதற்கு ட்ரம்ப்புக்கு வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே தேவைப்பட்டது.

அமெரிக்க ஜனநாயகத்திற்கான இந்த தோல்விக்கான காரணம், தந்திரம், இரக்கமற்ற தன்மை அல்லது அரசியல் தொலைநோக்கு ஆகியவற்றில் ட்ரம்பின் மேன்மையால் ஏற்படவில்லை. மாறாக, அமெரிக்காவின் பாசிசத் தலைவரான ட்ரம்ப், விரைவாக மீண்டு வருவதற்கு முழுக்க முழுக்க அவருக்கு பெயரளவில் எதிர்ப்பாளராக இருக்கும் முதலாளித்துவ ஜனநாயகக் கட்சியின் முதுகெலும்பற்ற தன்மைக்கும், தொழிற்சங்கங்களில் உள்ள அதன் ஊழியர்களுக்கும், அதே போல் சோசலிஸ்ட் என்ற முகமூடியை அணிந்திருந்து, ஜனநாயகக் கட்சியினருக்கு “இடது” மூடிமறைப்பை வழங்கிவரும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் போன்ற போலி-இடது குழுக்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறார்.

வெள்ளை மாளிகைக்குள் ட்ரம்ப் மீண்டும் நுழைவதற்கு ஜனநாயகக் கட்சியே வழி வகுத்தது. பைடென் நிர்வாகம் அதன் நான்கு ஆண்டுகால ஆட்சியின் போது, தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ட்ரம்பை பொறுப்பேற்க வைக்கும் எந்தவொரு தீவிர முயற்சியிலிருந்தும் அவரைப் பாதுகாத்தது. அதேநேரம், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக வெற்றிகள் மீது இன்னும் உறுதியான மற்றும் மிருகத்தனமான தாக்குதலை நடத்துவதற்கு, அவரது பணியாளர்கள் மற்றும் அரசியல் தளத்தை ஒன்று சேர்ப்பதற்கான வாய்ப்பு ட்ரம்புக்கு வழங்கப்பட்டது.

இந்த காலகட்டம் முழுவதும், பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் பிரதான முன்னுரிமை உலகெங்கிலும் ஏகாதிபத்திய போரின் நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பதாக இருந்துள்ளது: குறிப்பாக உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரைத் தூண்டுவதன் மூலமாகவும், இஸ்ரேலை ஆயுதபாணியாக்குவதிலும், காஸா, மேற்குக் கரை மற்றும் லெபனானில் அதன் இனப்படுகொலை வெறியாட்டத்திற்கு இஸ்ரேலுக்கு உதவுவதிலும், மற்றும் சீனாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்பில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ பலத்தைக் கட்டியெழுப்புவதிலும் பைடென் ஈடுபட்டிருந்தார்.

ஏகாதிபத்திய உலகப் போரின் இந்த வேலைத்திட்டத்திற்கு இரு கட்சிகளின் ஆதரவைப் பெற, பைடென் ஒரு வலுவான குடியரசுக் கட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தனது விருப்பத்தை மீண்டும் மீண்டும் அறிவித்தார். ட்ரம்ப் மற்றும் திருடப்பட்ட 2020 தேர்தல் பற்றிய அவரது பாசிச கண்டனங்கள் மற்றும் 2024 இல் அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் பழிவாங்கும் அச்சுறுத்தல்களைச் சுற்றி குடியரசுக் கட்சியினர் அணிதிரண்டிருந்த போதலும்கூட பைடென் இதனை அறிவித்தார்.

பைடென் இருகட்சியின் சமூக-பொருளாதார திட்டநிரலைப் பின்தொடர்ந்தார். அது பரந்த பெரும்பான்மை உழைக்கும் மக்களை ட்ரம்பின் கீழ் இருந்ததை விட பொருளாதார ரீதியாக மோசமாக ஆக்கியது. இதற்குக் காரணம் பரவலான பணவீக்கம், ஊதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக வெட்டுக்கள் ஆகும். அவ்விதத்தில் இது, தேர்தல் கல்லூரியின் பெரும்பான்மையுடன் மட்டுமல்ல, மக்கள் வாக்குகளின் மிகப் பெரிய பங்குடன், 2024 இல் ட்ரம்ப் வெல்வதற்கான அரசியல் அடித்தளத்தை உருவாக்கியது.

ட்ரம்ப், மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி வந்துள்ளதைப் போல, அமெரிக்க குடிமக்களின் குழந்தைகள் உட்பட மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரையும், அவர்களது குடும்பங்களையும் சுற்றி வளைத்து சிறையில் அடைப்பதற்கும், மற்றும் அமெரிக்க வரலாற்றில் பார்த்திராத அளவில் பாரிய நாடுகடத்தல்களை நடத்துவதற்கும் நிர்வாக உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு, ஜனாதிபதி அலுவலகத்தின் மலைப்பூட்டும் அதிகாரங்களை சர்வாதிகார நோக்கங்களுக்காக பயன்படுத்துவார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் பின்பற்றும் உலகளாவிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் ட்ரம்பின் அரசியல் முன்னுரிமைகள் முரண்படும் பட்சத்தில், ஆளும் உயரடுக்கிற்குள் ஏற்படும் ட்ரம்ப்பிற்கு எதிரான எதிர்ப்பு இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் சதி வடிவில் மட்டுமே எழும். ஒரு அரசியல் குண்டனும், ஏற்கனவே ஒருமுறை அரசியலமைப்பை தூக்கியெறிய முயன்று, அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரியாக இருக்கும் ட்ரம்ப்புடனான ஒத்துழைப்பை எதிர்ப்பதாக, எந்தவொரு முக்கிய ஜனநாயக கட்சிக்காரரும் எழுந்து நின்று கூறவில்லை.

இவர்கள் அனைவரும் ஜனாதிபதி பைடெனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்துள்ளனர். ட்ரம்ப் நவம்பர் 5 அன்று, தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவரை வெள்ளை மாளிகைக்கு பைடென் வரவேற்றார். மேலும் ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் ட்ரம்பை ஒரு பாசிசவாதி என்று கண்டனம் செய்து கொண்டிருந்த ஒரு மனிதர், ஜனாதிபதி பதவிக்கு வரலாற்றில் “சுமூகமான மாற்றத்திற்கு” வாக்குறுதியளித்தார்.

ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு காங்கிரஸில் சான்றிதழ் வழங்குவதற்கு கமலா ஹாரிஸ் தலைமை தாங்கியதுடன் தொடங்கிய இந்த வாரம், ஒரு ஆபாச நட்சத்திரத்திற்கு ட்ரம்ப் பணம் செலுத்தியதை மறைக்க மோசடி வணிக ஆவணங்களை தாக்கல் செய்த 34 குற்றச்சாட்டுகளில் மன்ஹாட்டன் நீதிபதி ட்ரம்புக்கு தண்டனை விதிப்பதுடன் முடிவடையும் என்பதை இது வெளிப்படுத்துகிறது. அமெரிக்க முதலாளித்துவத்தின் தரங்களின்படி கூட, இதில் பில்லியனர்கள் சாதாரணமாக எதில் இருந்தும் தப்பிவிடுவார்கள். ட்ரம்ப் ஒரு தண்டனை பெற்ற குற்றவாளியாவார்.

கடந்த திங்களன்று ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை சான்றளிப்பதற்கு செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 150 காங்கிரஸ் உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள், ட்ரம்பால் ஒன்றுதிரட்டப்பட்ட மற்றும் தூண்டிவிடப்பட்ட கும்பலால் கேபிடோலை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்ட பின்னரும் கூட, 2020 இல் பைடனின் பெரிய வெற்றியை சான்றளிப்பதற்கு எதிராக வாக்களித்தனர்.

அதிகாரத்திற்குத் திரும்பியவுடன் தனது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக, பதவியேற்கின்ற அன்றைய தினம், ட்ரம்ப்பின் அடிவருடி குண்டர்களின் செயல்களுக்காக, அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளிலிருந்து மன்னிப்பு வழங்குவதாக ட்ரப்பே தெளிவுபடுத்தியுள்ளார். சமீபத்தில், ட்ரம்ப் தன்னை மன்னிப்பார் என்று நம்பிக்கையை முன் கணித்து, தனக்கு எதிராக சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதியின் முகத்திற்கு நேரே ஒரு கலவரக்காரர் சிரித்தார்.

ஜனவரி 6 அன்று நடந்தது ஒரு பிறழ்ச்சி அல்ல. உலக சோசலிச வலைத்தளத்தின் (WSWS) புத்தாண்டு அறிக்கை விளக்குவது போல்:

2016 இல், ட்ரம்ப் பெற்ற ஆரம்ப வெற்றியும், அந்த விடயத்தில் ஜனவரி 6, 2021 அன்று இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியும், ஒரு பிறழ்ச்சி அல்ல. மாறாக, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் அரசியலில் ஏற்பட்டுள்ள ஒரு அடிப்படை மறுஒழுங்கமைப்பின் வெளிப்பாடுகள் என்பதை, அமெரிக்காவின் வருங்கால சர்வாதிகாரத் தலைவரின் மறு தேர்வு எடுத்துக்காட்டுகிறது.

ஜனவரி 6 மற்றும் ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்பானது, அதன் இயலாமை மற்றும் உடந்தையின் சான்றாகும்.

ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் மூன்றாவது ஆண்டு நிறைவில், ட்ரம்ப் 2024 மறுதேர்தல் பிரச்சாரத்தை அறிவித்த பின்னர், ஜனாதிபதி ஜோ பைடன், தாக்குதல் நடத்தியவர்கள் “அமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தில் கத்தியை வைத்திருந்தனர்” என்று அறிவித்தார். ஆயினும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில், ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பைடெனும் முன்னணி ஜனநாயகக் கட்சியினரும் வரவிருக்கும் நிர்வாகத்துடன் ஒத்துழைக்க அவர்களின் விருப்பத்தை அறிவிக்க விரைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை விவாத நிகழ்ச்சிகளில் அளித்த நேர்காணல்களில், சூமர், புதிதாக பதவியேற்றுள்ள செனட்டர் ஆடம் ஸ்கிஃப், ஜனவரி 6, 2021 மீதான பிரதிநிதிகள் சபையின் சிறப்பு விசாரணையின் முன்னாள் உறுப்பினர் மற்றும் பிரதிநிதிகள் சபையின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகிய அனைவரும் இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், அரசியல் ஒடுக்குமுறை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான வன்முறை தாக்குதல்களின் சாத்தியக்கூறைக் குறைத்துக் காட்டினர்.

சாத்தியமான இடங்களில் இருகட்சி உடன்பாட்டை நாடப்போவதாக சூமர் கூறினார். 2021 தாக்குதல்காரர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆடம் ஸ்கிஃப் வருத்தம் தெரிவித்தார். இது வன்முறையில் காயமடைந்த கேபிடல் பொலிசாருக்கு ஒரு அவமதிப்பு என்று முன்வைக்கப்பட்டது. மேலும், இது “நமது ஜனநாயகம் குறித்து ஒரு பயங்கரமான செய்தியை அனுப்பும்” என்று சூமர் குறிப்பிட்டார் .

2022 ஆம் ஆண்டில், ட்ரம்ப் சார்பு தாக்குதலாளியால் பெலோசியின் சொந்தக் கணவர் வன்முறையாக, கிட்டத்தட்ட கொல்லப்படும் அளவிற்கு தாக்கப்பட்டார். ஆயினும் பெலோசி, 2020 தேர்தலின் திருட்டு என்று கூறப்படுவதில் ட்ரம்ப் தொடர்ந்து கவனம் செலுத்துவது “மிகவும் வருத்தமளிக்கிறது” என்று கூறினார்.

“ஒரு தாக்குதலில் ஈடுபட்டவர்களை மன்னிப்பது சரியானது என்று நினைக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கப் போகிற ஒரு விசித்திரமான நபர்” என்று அவதானித்த பின்னர், பொலிஸ் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு பதிலாக, கேபிடோலுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக மட்டுமே தண்டிக்கப்பட்டவர்கள் ஒருவேளை மன்னிக்கப்படலாம் என்ற ஆலோசனையுடன் பெலோசி உடன்பட்டார்.

ட்ரம்பை எதிர்க்க ஜனநாயகக் கட்சியினர் மறுப்பது, முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் இரண்டு பிரதான அரசியல் கருவிகளில் ஒன்றான இக்கட்சியினதும் அடிப்படை வர்க்க குணாம்சத்தை வெளிப்படுத்துகிறது. அவர்களின் மிதமிஞ்சிய அச்சம் ட்ரம்ப் குறித்து அல்ல, மாறாக ஒரு சுயாதீனமான, அரசியல்ரீதியாக தீவிரமயப்பட்ட தொழிலாள வர்க்கம் மேலெழுவது குறித்ததாகும்.

இரு முதலாளித்துவ கட்சிகளில் (ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி) இருந்தும் சுயாதீனமாக அணிதிரட்டப்பட்டு, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கம் மட்டுமே ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் இயலுமை கொண்ட ஒரே சக்தியாகும்.

Loading