முன்னோக்கு

தன்னலக்குழு, பாசிசம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்

கார்ல் மார்க்ஸின் “ பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் “ என்ற மிகச் சிறப்புவாய்ந்த ஆய்வுக் கட்டுரையில், அரசியலை வரலாற்று சடவாத அணுகுமுறையில் விளக்கியுள்ளார். 1830 ஜூலையில் ஓர்லியன்ஸ் பிரபுபை ஆட்சிக்கு கொண்டு வந்த “புரட்சியின் இரகசியம்” குறித்து நிதி மந்திரவாதி லாஃபிட் கூறியதாக மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இப்பொழுதிலிருந்து வங்கியாளர்களே ஆட்சி செய்வார்கள்.” இதை தற்கால சூழலுக்கு ஏற்ப மாற்றினால், லாஃபிட்டுக்கு பதில் எலான் மஸ்க்கையும், 1830 ஆண்டுக்குப் பதில் 2024 ஆண்டை மாற்றினால், ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றியின் “இரகசியத்தை” பின்வருமாறு கூற முடியும்: “இப்பொழுதிலிருந்து தன்னலக்குழுக்களே ஆட்சி செய்வார்கள்.”

டெக்சாஸ், போகா சிகாவில் எலோன் மஸ்க்கின் பேச்சைக் கேட்கும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், November 19, 2024. [AP Photo/Brandon Bell]

இன்னும் மூன்றே வாரங்களில் பதவியேற்கவிருக்கும் ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வருவது என்பது ஒரு படுதோல்வி மற்றும் ஒரு அடிப்படை திருப்புமுனையைக் குறிக்கிறது. அமெரிக்காவின் சர்வாதிகாரத் தலைவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, 2016 இல் அவர் பெற்ற ஆரம்ப வெற்றியும், அதன் பின்பு இடம்பெற்ற ஜனவரி 6, 2021 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியும் பிறழ்வுகள் அல்ல. மாறாக, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் அரசியலின் ஒரு அடிப்படை மறுஒழுங்கமைப்பின் வெளிப்பாடுகள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

வரவிருக்கும் நிர்வாகம் செல்வந்தர்களின், செல்வந்தர்களால், செல்வந்தர்களுக்கான அரசாக இருக்கும். அமெரிக்காவின் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு, உலகின் மிகப் பெரிய செல்வந்தரும், ஓர்வெல்லியன் “அரசாங்கத் செயல்திறன் துறையின்” தலைவருமான மஸ்க் முதல், ட்ரம்பின் அமைச்சரவை மற்றும் வெள்ளை மாளிகையில் பணியாற்றும் பில்லியனர்களின் கூட்டம் வரையான தன்னலக்குழுவே அரசின் மீது நேரடிக் கட்டுப்பாட்டை செலுத்தும். கடந்த டிசம்பரின் நடுப்பகுதியில், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த உயர்மட்ட அடுக்குகளின் மொத்த செல்வவளம் கிட்டத்தட்ட அரை டிரில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் தன்மையானது, முதலாளித்துவ சமூக அமைப்பின் தன்மைக்கு ஏற்ற வகையில் அரச வன்முறையின் மறுஒழுங்கமைப்பைக் குறிக்கிறது. உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களும் பெருநிறுவனங்களும் எல்லையற்ற அளவில் வளங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். உலகின் 120 மிக வறிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விஞ்சும் அளவிற்கு தனிப்பட்ட செல்வவளத்தைக் கொண்ட, பலநூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை வைத்திருக்கும் பில்லியனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில், மூன்று மிகப்பெரும் செல்வந்தர்கள் இப்போது கூட்டாக மக்கள்தொகையில் அடிமட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினரின் கூட்டு செல்வ வளத்தை விட அதிகமான செல்வ வளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர்.

உலகளவில், உயர்மட்ட 1 சதவீதத்தினர் இப்போது அடிமட்ட 99 சதவீதத்தினரை விட அதிக செல்வத்தைக் கொண்டுள்ளனர். புளூம்பேர்க் செய்திகளின் சமீபத்திய தொகுப்புரையின் படி, உலகின் 500 பெரும் செல்வந்தர்கள் “2024 இல் பாரியளவில் செல்வந்தர்களாகி, ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்: இது, மொத்த நிகர சொத்து மதிப்பில் 10 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். “எட்டு தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மட்டும் இந்த ஆண்டு 600 பில்லியன் டாலருக்கும் அதிகமான இலாபத்தை அடைந்துள்ளனர். இது 500 செல்வந்தர்களிடையே $1.5 ட்ரில்லியன் டாலர் அதிகரிப்பில் 43 சதவீதமாகும்” என்று ப்ளூம்பேர்க் தெரிவிக்கிறது.

ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அரசியல் பிற்போக்குத்தனத்தின் நீண்டகால செயல்முறையின் உச்சக்கட்டமாகவும், வரவிருப்பவற்றின் முன்னறிவிப்பாகவும் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், 2020 தொடக்கத்தில், உலக சோசலிச வலைத்தளம் 2020களை “சோசலிசப் புரட்சியின் தசாப்தம்” என அழைத்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதன் பின்னரான ஆண்டுகள் முன்னெப்போதும் இல்லாத, ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த நெருக்கடிகளின் தொடரைக் கண்டன. உலக சோசலிச வலைத்தளம் தனது 2024 புத்தாண்டு அறிக்கையில், தொடரும் கோவிட்-19 பெருந்தொற்று நோயால் ஏற்படும் பெரும் உயிரிழப்புகளை “இயல்பாக்குவது” குறித்தும், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரில் அணுஆயுதங்களை “இயல்பாக்குவது” குறித்தும், காஸாவில் ஏகாதிபத்திய ஆதரவுடனான இஸ்ரேலிய இனப்படுகொலையை “இயல்பாக்குவது” குறித்தும் எச்சரித்தது.

ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாசிசவாத காட்டுமிராண்டித்தனம் மற்றும் முதலாளித்துவ சர்வாதிகாரத்தை “இயல்பாக்குவதின்” ஓர் அரசியல் வெளிப்பாடாகும். ஜனநாயகக் கட்சியும் முதலாளித்துவ ஊடகங்களும், “f -வார்த்தை” பாசிசம் ஒருபுறம் இருக்கட்டும், ஜனநாயகத்திற்கான ட்ரம்பின் அச்சுறுத்தல் குறித்த அனைத்து குறிப்புகளையும் கைவிட்டு, அதற்கு பதிலாக ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியுடன் அவற்றின் முழு ஒத்துழைப்புக்கு சூளுரைத்ததன் மூலம் இது சமிக்ஞை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வரவிருக்கும் நிர்வாகம், ஆரம்பத்தில் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் மீது ஒருங்குவிந்த, ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு பாரிய தாக்குதலை நடைமுறைப்படுத்த, “முதல் நாளில் இருந்தே” திட்டமிட்டு வருகிறது. அதன் மிகத் தீவிரமான முன்மொழிவுகளில் ஒன்று, அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட 14வது திருத்தத்தின் ஒரு முக்கிய அம்சமான பிறப்புரிமையான குடியுரிமையை ஒழித்துக்கட்டுவதாகும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இலக்கு வைப்பது, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலுக்கு முன்னோடியாக உள்ளது. அரசாங்கம் செல்வந்தர்களுக்கு மேலும் வரி குறைப்புகளை இயற்றுவதற்கு தயாராகி வருவதுடன், தொழிலாளர்கள் கடுமையான போராட்டத்தின் மூலம் வென்ற ஒவ்வொரு சமூக வேலைத்திட்டத்தின் மீதும் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி வருகிறது.

அமெரிக்காவில் தெளிவாகத் தெரிகின்ற நிகழ்ச்சிப்போக்குகள் உண்மையில் உலகெங்கிலும் உள்ளன. உலகெங்கிலும், முதலாளித்துவ அரசாங்கங்கள் பாரிய அரசியல் நெருக்கடிகளால் தத்தளித்து, மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டும், அதிகரித்தளவில் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு திரும்பியும் வருகின்றன.

ஜேர்மனியில், நவ-நாஜிக்களின் ஜேர்மனிக்கான மாற்றீட்டுக் கட்சி (AfD) இப்போது எலன் மஸ்க்கின் பகிரங்க ஆதரவுடனும், அரசியல் நிறுவனம் வலதை நோக்கி நகர்ந்துள்ளதன் மத்தியிலும் ஒரு பலமான முதலாளித்துவ கட்சியாக எழுந்து வருகிறது. பிரான்சில், “வங்கிகளின் ஜனாதிபதி” இமானுவல் மக்ரோன், இப்போது புதிய மக்கள் முன்னணியுடன் (NPF) ஒத்துழைத்து, மரின் லு பென்னின் பாசிசவாத தேசிய பேரணிக்கு (RN) நாடாளுமன்ற எதிர்ப்பு என்ற கவசத்தை ஒப்படைத்து ஆட்சி நடத்தி வருகிறார்.

இத்தாலியில், முசோலினியின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் ஜியோர்ஜியா மெலோனியின் அதிவலது அரசாங்கம், புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது, அதேவேளையில் ஆர்ஜென்டினாவில் ஜேவியர் மிலேய் பொதுச் சேவைகள் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புகளை அழிப்பதன் மூலமாக சமூக பிற்போக்குத்தனத்திற்கான அதிவலது மாதிரியை வழங்கி வருகிறார்.

இலங்கையில், வலதுசாரி, சிங்களப் பேரினவாத மற்றும் தேசியவாத ஜே.வி.பி., கடந்த ஆண்டு தேர்தல்களில் அதிகாரத்திற்கு வந்ததோடு சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை அமுல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. தென் கொரியா அரசியல் நெருக்கடியால் சூழப்பட்டுள்ளது. இராணுவச் சட்டத்தை திணிக்க முயற்சிக்கும் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில், ஆழமாக செல்வாக்கிழந்துள்ள தொழிற் கட்சி அரசாங்கம், உள்நாட்டில் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது போர் தொடுத்து, சீனாவுக்கு எதிரான அமெரிக்கப் போரில் இணைவதற்கான தயாரிப்புகளுக்கு தலைமை கொடுப்பது உட்பட, வலதுசாரி தாராளவாத/தேசிய கூட்டணியில் இருந்து பிரித்தறியவியலாத கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகள் முதலாளித்துவ நெருக்கடிக்கு ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பின் மூலம் மேலாதிக்கம் பெற்றுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகள் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டத்தின் வெடிக்கும் வெடிப்பினால் மேலாதிக்கம் செலுத்தப்படும். உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், விரிவடைந்து வரும் உலகப் போர், நடந்து கொண்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று நோய், H5N1 பறவைக் காய்ச்சல் மற்றும் குரங்கம்மை (mpox) போன்ற புதிய நோய்க்கிருமிகளின் தோற்றம், அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான ஒருங்கிணைந்த தாக்குதல், சுரண்டல் மற்றும் சமூகத் தேவைகளின் பெரும் அதிகரிப்புக்கு முகம் கொடுக்கத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த நெருக்கடிகளின் அடித்தளத்தில் சமூகம் முழுவதையும் இலாபத்திற்கும் தனிப்பட்ட செல்வக் குவிப்பிற்கும் அடிபணிய வைக்கும் ஒரு தன்னலக்குழு உள்ளது. இந்த தன்னலக்குழுவிற்கு எதிரான போராட்டம் அதன் இயல்பிலேயே ஒரு புரட்சிகரக் பணியாகும். அதன் செல்வவளம் பறிமுதல் செய்யப்பட வேண்டும், பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வின் மீதான அதன் இரும்புப்பிடி அகற்றப்பட வேண்டும். அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கும், உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கின் மீது ஜனநாயகக் கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதற்கும், சோசலிசத்தின் அடிப்படையில் அதாவது, தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவையின் அடிப்படையில் சமூகத்தை மறுஒழுங்கு செய்வதற்கும், உலகளவில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது இதற்கு அவசியமாகும்.

ஏகாதிபத்தியப் போரின் உலகளாவிய வெடிப்பு

இந்தத் தன்னலக் குழுக்களின் வெளியுறவுக் கொள்கையானது ஏகாதிபத்தியப் போர் மற்றும் சூறையாடலாகும். “ஏகாதிபத்தியம்” என்பது “(1) ஏகபோக முதலாளித்துவம்; (2) ஒட்டுண்ணித்தனம் அல்லது சிதைந்து வரும் முதலாளித்துவம்; (3) மரணப்படுக்கையில் இருக்கும் முதலாளித்துவம் ஆகும். கட்டற்ற போட்டியை ஏகபோகத்தால் பிரதியீடு செய்வது என்பது இதன் அடிப்படை பொருளாதார அம்சமாக இருப்பதுடன் ஏகாதிபத்தியத்தின் உச்சக்கட்டமாகும்” என்று லெனின் விளக்கினார். ஆதாரவளங்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கான போட்டியில், ஏகாதிபத்திய சக்திகள் மனிதகுலத்தை பேரழிவுக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்துகின்றன.

டிசம்பர் 16, 2022 வெள்ளிக்கிழமை, உக்ரேனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் பக்முத் அருகே உள்ள ரஷ்ய நிலைகள் மீது உக்ரேனிய சிப்பாய்கள் பியோன் பீரங்கிக் குண்டை பிரயோகிக்கின்றனர். [AP Photo/LIBKOS]

பனாமா கால்வாயை கையகப்படுத்துவது, கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது மற்றும் மெக்சிகோவில் இராணுவத்தை நிலைநிறுத்த அச்சுறுத்துவது குறித்த ட்ரம்பின் ஆத்திரமூட்டும் அறிக்கைகள் வரவிருக்கும் நிர்வாகத்தின் ஏகாதிபத்திய அபிலாஷைகளை எடுத்துக்காட்டுகின்றன. ட்ரம்பின் “அமெரிக்கா முதலில்” தேசியவாதத்தின் தொடர்ச்சியாக இருப்பதுடன் “அமெரிக்க கோட்டையின்” ஒரு உலகளாவிய கொள்கையாகும். இதில் மேற்கு அரைக்கோளத்தின் மீதான கட்டுப்பாடு என்பது சீனாவுடனான வளரும் மோதலில் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

பைடெனின் கீழ், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூன்று தசாப்த கால பிராந்தியப் போர்கள் இரண்டாவது மிகப்பெரிய அணுஆயுத சக்தியான ரஷ்யாவுடனான ஒரு பகிரங்க மோதலாக விரிவடைந்துள்ளன. பிப்ரவரி 2022 இல், உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிலிருந்து எழுந்த முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் புட்டின் ஆட்சியின் ஒரு திவாலான மற்றும் பிற்போக்குத்தனமான நடவடிக்கையாகும். எவ்வாறிருப்பினும், முதலாளித்துவ ஊடகங்களால் உலகெங்கிலும் கூறப்படுவதைப் போல, அது “தூண்டுதலற்றதாக” இருக்கவில்லை. நேட்டோவின் இடைவிடாத கிழக்கு நோக்கிய விரிவாக்கம் மற்றும் அமெரிக்க தலைமையிலான இராணுவ கூட்டணியில் உக்ரேன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததற்கு ரஷ்ய அரசாங்கத்தின் விடையிறுப்பாக அது இருந்தது.

மூன்று ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் யுத்தம் இரு தரப்பிலும் நூறாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்டுள்ளது. பைடென் நிர்வாகம் அதன் இறுதி வாரங்களில், ரஷ்ய நகரங்களை இலக்கு வைக்க அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரேனுக்கு அங்கீகாரம் அளித்தது, இது கியூப ஏவுகணை நெருக்கடிக்குப் பிந்தைய எந்தவொரு கட்டத்தையும் விட உலகை அணுஆயுத போரின் விளிம்பிற்கு நெருக்கமாக கொண்டு வந்தது.

நாட்டுக்குள்ளே அதிகரித்து வரும் எதிர்ப்பை எதிர்கொண்டு, ஜனநாயக உரிமைகள் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிருகத்தனமான தாக்குதலை நடத்தி வரும் கியேவில் உள்ள ஒரு வலதுசாரி ஆட்சியுடன் கூட்டணி சேர்ந்து, அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகளால் இந்தப் போர் தொடுக்கப்பட்டுள்ளது. போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் படை (YGBL) அமைப்பின் ஒரு முன்னணி உறுப்பினரான போக்டன் சிரோட்டியூக், உக்ரேனிய மற்றும் ரஷ்ய அரசாங்கங்கள் இரண்டையும் எதிர்த்த மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த போராடிய “குற்றத்திற்காக” இப்போது எட்டு மாதங்களாக இந்த ஆட்சியால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரத்தில், அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகளின் ஆதரவுடனும் மத்திய கிழக்கில் முதலாளித்துவ-தேசியவாத ஆட்சிகளின் உதவியுடனும், உடந்தையுடனும் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதல், ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் ஆழத்தை அம்பலப்படுத்தி உள்ளது.

காஸாவிலுள்ள முழு நகரங்களையும் அழித்தல், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை இலக்கு வைத்த தாக்குதல்கள், இலட்சக்கணக்கான மக்களை இடம்பெயர வைத்தல் ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படும் இந்த இனப்படுகொலையானது, ஒரு விரிவான பிராந்திய மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். இதில் சிரியாவில் அசாத் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது, ஹிஸ்புல்லாவின் தலைமையை அகற்றுவது, மற்றும் ஈரானுக்கு எதிரான கிளர்ச்சிகளை அதிகரிப்பது ஆகியவை அடங்கும். ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்ப மத்திய கிழக்கை மறுஒழுங்கு செய்வதே இதன் நோக்கம் ஆகும்.

அமெரிக்க அரசுக்குள் வெளியுறவுக் கொள்கையில் மோதல்கள் இருக்கும் அளவிற்கு, அதன் இலக்குகள் மற்றும் வழிமுறைகளைக் காட்டிலும் புவியியலுடன் —அதாவது, உலகின் எந்தப் பிராந்தியம் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் உடனடி இலக்காக இருக்க வேண்டும்— சம்பந்தப்பட்டிருக்கிறது. எவ்வாறிருப்பினும், அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் பிரதான உலகளாவிய போட்டியாளராக பார்க்கும் சீனாவுடனான ஒரு மோதலுக்கு தயாரிப்பு செய்வதே வரவிருக்கும் நிர்வாகத்தின் மையக் கவனக்குவிப்பாக இருக்கும்.

உலகளாவிய இராணுவ மயமாக்கலின் இந்த வெடிப்பானது, அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியில் இருந்து பிரிக்க முடியாததாகும். “டாலர் மேலாதிக்கம் “ குறித்த ட்ரம்பின் வலியுறுத்தல், அமெரிக்க நிதி மூலதனத்தின் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பாதுகாக்க இராணுவ ஆக்கிரமிப்பு எவ்வளவு தூரம் பயன்படுத்தப்படும் என்பதைக் காட்டுகிறது. கனடாவை “51வது மாநிலமாக” சேர்ப்பது பற்றிய ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், எதிரிகள் மற்றும் நட்பு நாடுகள் இரண்டிற்கும் எதிரான சுங்கவரிகள், வர்த்தகப் போர்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவை, நீண்டகால பொருளாதார சரிவின் மத்தியில் தனது மேலாதிக்கத்தைத் தக்கவைக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் எடுக்கும் நிர்க்கதியான முயற்சிகளை வெளிப்படுத்துகின்றன.

முதலாம் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடையிலான காலகட்டத்தில், 1928 இல் லியோன் ட்ரொட்ஸ்கி செய்த பகுப்பாய்வு, இன்றும் இன்னும் அதிக சக்தியுடன் பொருந்துகிறது.

ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

நெருக்கடியான காலகட்டத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கம் செழுமைக் காலத்தை விட இன்னும் முழுமையாகவும், இன்னும் வெளிப்படையாகவும், இன்னும் ஈவிரக்கமின்றியும் செயல்படும். இது ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவில் நடந்தாலும் சரி, அமைதியான முறையில் நடந்தாலும் அல்லது போரினால் நடந்தாலும் சரி, முதன்மையாக ஐரோப்பாவின் இழப்பில் அமெரிக்கா தனது சிரமங்கள் மற்றும் நோய்களில் இருந்து தன்னைக் கடக்கவும், விடுபடவும் முயல்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பானது, உலகை பூகோள ஏகாதிபத்திய மறுபங்கீடு செய்வதன் பாகமாக உள்ளது. இதில் அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளும் பங்கெடுத்துக் கொள்கின்றன. ட்ரம்பின் தேர்வு மற்றும் உக்ரேன் மீதான கொள்கை மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகளுக்கு ஐரோப்பிய சக்திகள் பதிலளித்துள்ளன. தேவைப்பட்டால், ஐக்கிய அமெரிக்காவிற்கு எதிராக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையின் அவசியத்தை இவை வலியுறுத்தி வருகின்றன. அனைத்து முன்னாள் காலனித்துவ நாடுகளும் வளங்கள், சந்தைகள் மற்றும் மூலப்பொருட்கள் மீதான கட்டுப்பாட்டிற்கான போட்டியில் மீண்டும் அடிபணிய இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

விரிவடைந்து வரும் உலகப் போர், பேரழிவுகரமான விளைவுகளுடன் மனிதகுலத்தை ஓர் உலகளாவிய மோதலுக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்தி வருகிறது. அதேநேரத்தில், வெளிநாடுகள் மீதான போர் என்பது உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான போரைப் பாரியளவில் தீவிரப்படுத்துவதை அவசியமாக்குகிறது. Foreign Affairs என்ற பத்திரிகையானது, சமீபத்தில் “முழுமையான போரின்” புதிய சகாப்தத்தை பற்றி பின்வருமாறு விவரித்தது: “இதில் போட்டியாளர்கள் தங்கள் சமூகங்களை பரந்த வளங்களிலிருந்து அணிதிரட்டுகிறார்கள், மற்றய அனைத்து அரச நடவடிக்கைகளையும் விட போருக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள், பல்வேறு வகையான இலக்குகளைத் தாக்குகிறார்கள், மேலும் அவர்களின் மற்றும் பிற நாடுகளின் பொருளாதாரங்களை மறுவடிவமைக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தது.

முதலாளித்துவத்தின் நெருக்கடியும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியும்

ஏகாதிபத்திய போர் என்பது ஒட்டுமொத்த முதலாளித்துவ ஒழுங்கின் அதிகரித்தளவில் சமாளிக்க முடியாத நெருக்கடிக்கு ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பாகும். கடந்த தசாப்தங்களில் இன்னும் அதிக தீவிர பொருளாதார நெருக்கடிகளின் வெடிப்பு, நிதியியல் தன்னலக்குழுவின் ஒட்டுண்ணித்தனத்தையும் பொறுப்பற்ற தன்மையையும் ஆழமாக்கியுள்ளது. அதன் பிரமாண்டமான செல்வம் உண்மையான மதிப்பின் உற்பத்தியில் இருந்து அதிகரித்தளவில் துண்டிக்கப்பட்டு வருகிறது.

வாஷிங்டன் ரென்டனில் போயிங் இயந்திர வல்லுநர்களின் மறியல் போராட்ட வரிசையின் ஒரு பிரிவு. [Photo: WSWS]

அடுத்தடுத்த நெருக்கடிகளுக்கு ஆளும் வர்க்கத்தின் பதிலளிப்பு, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு பிணையெடுப்பு மூலம் பாரிய நிதி உதவிகளை வழங்குவதாக இருந்துள்ளது. இது மிக சமீபத்தில் கோவிட்-19 பெருந்தொற்று நோயின் முதல் ஆண்டில் நடந்தது. பொதுச் சுகாதாரத்தை விட பெருநிறுவன இலாபங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், முதலாளித்துவ அரசாங்கங்களின் தொழிலாளர்களின் உயிர்கள் மீதான கொடூரமான அலட்சியத்தை இந்தத் பெருந்தொற்று நோய் வெளிப்படுத்தியுள்ளது. உலகளவில் 30 மில்லியனுக்கும் அதிகமானோர், பெரும்பாலும் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், இறந்துள்ளனர். குறைந்தது 500 மில்லியன் மக்கள் தற்போது நீண்டகால கோவிட் நோயின் அடிக்கடி பலவீனப்படுத்தும் விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரையில், அமெரிக்கா தலைமையிலான உலக அரசாங்கங்கள் டிரில்லியன் கணக்கான டாலர்களை பங்குச் சந்தைகளுக்குள் பாய்ச்சிய நிலையில், அது ஒரு நிதிய வெகுமதியாக இருந்தது. இந்த நடவடிக்கைகள் தற்காலிகமாக சந்தைகளை ஸ்திரப்படுத்திய போதிலும், அவை முதலாளித்துவ அமைப்புமுறையின் கீழமைந்த முரண்பாடுகளை தீர்ப்பதற்கு தவறின. மாறாக, அவை இன்னும் பெரிய அளவிலான ஊகங்கள் மற்றும் கடனைத் தூண்டி, இன்னும் கூடுதலான பேரழிவுச் சரிவுக்குக் களம் அமைத்தன.

பிட்காயின் (Bitcoin-ஒரு வகை டிஜிட்டல் நாணயம்) மற்றும் பிற கிரிப்டோகரன்சிகள் போன்ற ஊக நிதியக் கருவிகளின் எழுச்சியை விட இது வேறெங்கும் மிகவும் வெளிப்படையாக இல்லை, அவற்றின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு இப்போது 3.26 டிரில்லியன் டாலராக உள்ளது. டிசம்பர் 2024 இல், ஒரு பிட்காயினின் விலை 100,000 டாலர்களைத் தாண்டியுள்ளது. மேலும் அதன் “மதிப்பு” வரவிருக்கும் மாதங்களில் இரட்டிப்பாகவோ, மூன்று மடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ இருக்கலாம் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது அல்ல. நிச்சயமாக, ஒட்டுமொத்த கிரிப்டோ பொன்சி (Ponzi - பொன்சி திட்டம் என்பது முதலீட்டு மோசடி) திட்டமும் பொறிந்து, பெடரல் ரிசர்வ் ஊக வணிகர்களுக்கு இன்னும் பல ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்பு அவசியப்படுவதற்கும் அதிக சாத்தியக்கூறு உள்ளது.

பைனான்சியல் டைம்ஸில் வெளிவந்துள்ள சமீபத்திய அறிக்கை ஒன்று, அமெரிக்க கடன் அட்டை (credit card) கட்டணங்களை செலுத்தத் தவறுதல் 2010ல் இருந்து மிக உயர்ந்த மட்டத்தை அடைந்துள்ளன என்பதைக் காட்டுகிறது. அந்நியச் செலாவணிக் கடன்கள் மீதான தவறுகளும் நான்கு ஆண்டுகளில் மிக உயர்ந்த விகிதத்தை எட்டியுள்ளன. இது நிதிய உறுதியற்ற தன்மையின் வளர்ச்சியை அடையாளம் காட்டுகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் தேசியக் கடன் 33 டிரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.

ஊடகங்கள் மிகப் பெரும் செல்வந்தர்கள் இன்னும் செல்வம் குவிப்பதற்கான வாய்ப்புகளை பற்றி பெருமையாக பேசும் அதே வேளையில், பெரும்பான்மை மக்களின் உண்மை நிலவரம் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது: அதாவது வாழ்க்கைச் செலவு உயர்வு, மாறாத ஊதியங்கள், சீரழியும் பொதுச் சேவைகள் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அமெரிக்காவில் இந்நிலை பின்வருமாறு உள்ளது:

  • 2019 மற்றும் 2023 க்கு இடையில், வீட்டு வாடகைச் செலவுகள் நாடு முழுவதும் 30.4 சதவீதம் அதிகரித்துள்ளன. இது, கிட்டத்தட்ட பாதி வாடகைதாரர்களுக்கு “செலவுச் சுமையை” ஏற்படுத்தியுள்ளது. மேலும், வாடகைதாரர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் தங்கள் முழு வருமானத்தையும் வாடகைக்கு செலவிட்டுள்ளதாக 2024 கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. பலர் இரண்டாவது வேலைகள் (20 சதவீதம்), குடும்ப ஆதரவு (14 சதவீதம்) அல்லது ஓய்வூதிய சேமிப்புகளை (12 சதவீதம்) முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு முயன்றுள்ளனர்.
  • Z தலைமுறையினர் என்று அழைக்கப்படும் 1995ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த இளம் பருவத்தினரில் 31 சதவிகிதத்தினர் உட்பட சாதனை எண்ணிக்கையிலான இளம் அமெரிக்கர்கள், கட்டுப்படியாகாத வீட்டுவசதி காரணமாக, அவர்களின் மூத்தவர்கள், பெற்றோர்கள் அல்லது தாத்தா பாட்டிகளுடன் வாழ்கின்றனர். இளைஞர்களில் கால் பகுதியினர் இப்போது பல தலைமுறை வீடுகளில் வாழ்கின்றனர். இது, அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் மாணவர் மீதான கடனால் மேலும் உந்தப்படுகிறது.
  • அமெரிக்காவில் வீடற்றவர்களின் நிலை 2024 இல் சாதனையளவுக்கு 770,000 பேர் வரை எட்டியுள்ளது. இது, 2023 ஐ விட 18.1 சதவீத அதிகரிப்பாகும், கிட்டத்தட்ட 150,000ம் பிள்ளைகள் ஒரே இரவில் வீடற்ற நிலையை அனுபவிக்கின்றனர்—இது முந்தைய ஆண்டை விட 33 சதவீதம் அதிகமாகும்.
  • உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை நவம்பர் 2024 இல் 7.1 மில்லியனாக உயர்ந்துள்ளது. கூடுதலாக 4.5 மில்லியன் பேர் குறைந்த வேலையில் உள்ளனர் மற்றும் 5.5 மில்லியன் பேர் தொழிலாளர் சந்தையை விட்டு வெளியேறியுள்ளனர்.

உலக வங்கியின் கூற்றுப்படி, உலகில் கிட்டத்தட்ட 700 மில்லியன் மக்கள், ஒரு நாளைக்கு 2.15 டாலருக்கும் குறைவான வரையறுக்கப்பட்ட வருமானத்துடன் “கடுமையான வறுமையில்” வாழ்கின்றனர். மேலும் சுமார் 3.5 பில்லியன் மக்கள் (மனிதகுலத்தில் 44 சதவீதமாகும்) ஒரு நாளைக்கு 6.85 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர்.

இந்த நிலைமைகளானது சமூக எதிர்ப்பின் கணிசமான வெளிப்பாடுகளை உருவாக்கி வருகின்றன. அமெரிக்காவில், 2023 இல் 450,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் “பெரும் வேலை நிறுத்தப் போராட்டங்களில்” ஈடுபட்டிருந்தனர். இது முந்தைய ஆண்டை விட 280 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், பெருந்தொற்று நோய்க்கு முந்தைய நிலைக்கு திரும்பியது. இந்த வேலைநிறுத்தங்கள் தொழில்துறைகள் மற்றும் உள்ளிருப்பு போராட்டங்களை விரிவுபடுத்தியது. இதில் வாகனத் தொழிலாளர்கள், ஹாலிவுட் எழுத்தாளர்கள், நடிகர்கள், செவிலியர்கள், பொதுப் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் அடங்குவர். போயிங் விமானத்துறை தொழிலாளர்கள், கல்வித்துறை தொழிலாளர்கள், தொலைத்தொடர்பு தொழிலாளர்கள், மற்றும் அமேசன் மற்றும் ஸ்டார்பக்ஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் உட்பட வர்க்க போராட்டத்தின் வளர்ச்சி 2024 இலும் தொடர்ந்தது.

கடந்த ஆண்டில், ஆர்ஜென்டினா, கினியா மற்றும் நைஜீரிய தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை அச்சுறுத்திய சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து சக்திவாய்ந்த பொது வேலைநிறுத்தப் போராட்டங்களைத் தொடங்கினர். கென்யாவில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தேசியளவிலான “ஜெனரல் இசட் போராட்டங்களில்” (“Gen Z protests”- புதிய Z இளம் தலைமுறையினர்) மில்லியன் கணக்கான இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதைத் தொடர்ந்து பல துறைகளில் உள்ள தொழிலாளர்களை உள்ளடக்கிய வேலைநிறுத்தப் போராட்ட அலைகள் தொடர்ந்து இடம்பெற்றன. கிரீஸ் மற்றும் இத்தாலியில், தனியார்மயமாக்கம், ஊதிய வெட்டுக்கள் மற்றும் சமூக பாதுகாப்புகளின் அரிப்பு ஆகியவற்றிற்கு எதிரான பாரிய போராட்டங்களில் தொழிலாளர்கள் பொருளாதாரத்தின் பிரதான துறைகளை முடக்கினர். வட அயர்லாந்தில், 150,000 பொதுத்துறை தொழிலாளர்கள் சிறந்த ஊதியம் மற்றும் சிறந்த நிலைமைகளைக் கோரி வெளிநடப்பு செய்து, அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் கண்டிராத மிகப்பெரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசியா முழுவதும், தென் கொரியாவில் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் சாம்சங் ஊழியர்கள் மற்றும் இலங்கையில் இரயில்வே தொழிலாளர்கள் உட்பட முக்கிய தொழில்துறைகளில் குறிப்பிடத்தக்க வேலைநிறுத்தங்கள் வெடித்தன. சிலியில் செப்புச் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் பிரேசிலில் துறைமுகத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டங்கள் என்பன இலத்தீன் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் உலக மூலதனத்திற்காக தங்கள் உழைப்பை பண்டமாக்குவதை எதிர்ப்பதில் உள்ள உறுதியை எடுத்துக்காட்டுகின்றன. மெக்சிகோவில், எஃகு மற்றும் வாகனத்துறை தொழிலாளர்கள் குறைந்த ஊதியம் மற்றும் நாடுகடந்த பெருநிறுவனங்களால் திணிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு எதிராக போராடினர்.

துருக்கியில், உலோகத் தொழிலாளர்களும் சுரங்கத் தொழிலாளர்களும் தங்கள் ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாக்க போர்க்குணமிக்க போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜேர்மனியில் லுப்தான்சா (Lufthansa) மற்றும் வோல்ஸ்வாகன் (Volkswagen) ஆகியவற்றில் இடம்பெற்ற வேலைநிறுத்தப் போராட்டங்கள் ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரத்தில் தொழிலாளர்களிடையே பெருகிவரும் அதிருப்தியை அம்பலப்படுத்தின. பிரிட்டன் இரயில்வே மற்றும் விமான நிலையத் துறைகளில் பாரிய போராட்ட நடவடிக்கைகளைக் கண்டது. அதே நேரத்தில் துறைமுகங்கள், இரயில்வே மற்றும் பொதுத் துறைகளில் வேலைநிறுத்தப் போராட்டங்களால் பிரான்ஸ் உலுக்கப்பட்டது.

கனடாவில் இடம்பெற்ற வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஆயிரக் கணக்கான சஸ்காட்செவன் கல்வியாளர்களும், மேலும் இரயில்வே, துறைமுகம் மற்றும் கனடா தபால் தொழிலாளர்களும் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்கள் ட்ரூடோ அரசாங்கத்திடம் இருந்து கடுமையான எதிர்ப்பை சந்தித்தன, இது வாஷிங்டனுடன் ஒருங்கிணைந்து வேலைநிறுத்தப் போராட்டங்களை நசுக்க மீண்டும் மீண்டும் தலையீடு செய்தது.

பெருநிறுவன மற்றும் அரசு நலன்களுடன் அணிசேர்ந்துள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், தொழிலாளர்களின் இயக்கங்களுக்கு ஒரு தடையாக செயல்படுகின்றன. வேலைநிறுத்தங்களை ஒடுக்குவதற்கும், போராட்டங்களை தனிமைப்படுத்துவதற்கும், மற்றும் சாமானிய தொழிலாளர்களின் நலன்களைக் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தங்களைத் திணிப்பதற்கும் தொழிற்சங்க இயந்திரம் மீண்டும் மீண்டும் வேலை செய்து வருகிறது.

அமெரிக்காவில், சர்வதேச இயந்திர வல்லுநர்கள் சங்கம் (IAM) கடந்த ஆண்டு இடம்பெற்ற இரண்டு மாத கால போயிங் வேலைநிறுத்தப் போராட்டத்தை நாசப்படுத்தி, 33,000 தொழிலாளர்களை தனிமைப்படுத்தியது. மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முன்னதாக, தொழிலாளர்களுக்கு போதுமான வேலைநிறுத்த சம்பளம் வழங்கப்படவில்லை. ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் (UAW) உண்மையான வேலைநிறுத்தப் போராட்டம் இல்லாமல் ஒரு போலியான “வேலைநிறுத்தப்” பிரச்சாரத்தை ஆரம்பித்தது. அதே நேரத்தில், UAW தொழிற்சங்கத் தலைவர் ஷான் ஃபைன், தொழிலாளர்களின் எதிர்ப்பை அடக்கி, ட்ரம்புடன் வர்த்தகக் கொள்கைகளில் வேலை செய்வதாக உறுதியளித்துள்ளார். கப்பல்துறையில், சர்வதேச துறைமுகத் தொழிலாளர் சங்கமானது, (ILA) அக்டோபரில் 40,000ம் தொழிலாளர்களின் மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை விரைவாக முடித்துக் கொண்டு, 90 நாள் வெள்ளை மாளிகையின் தரகு நீட்டிப்பின் கீழ் அவர்களை திருப்பி வேலைக்கு அனுப்பியது.

கனடாவில், 55,000 அஞ்சல் துறை தொழிலாளர்களின் ஒரு மாத கால வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பின்னர், கனேடிய அஞ்சல் தொழிலாளர் சங்கம் (CUPW) மற்றும் கனேடிய தொழிலாளர் காங்கிரசும் தொழிலாளர் மந்திரி ஸ்டீவன் மக்கின்னன் விதித்த அரசாங்க வேலைநிறுத்தத் தடைக்கு அடிபணிந்தன. ஊதிய உயர்வுகள், வேலை பாதுகாப்பு, அல்லது புதிய தொழில்நுட்பங்கள் மீதான கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

ஒவ்வொரு போராட்டமும், அதிகாரத்தை சாதாரண தொழிலாளர்களுக்கு மாற்றுவதற்கும், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட, உலகளாவிய இயக்கத்தை முன்னெடுத்து தலைமை கொடுப்பதற்கும், தொழிலாளர்களால் கட்டுப்படுத்தப்படும் புதிய அமைப்பான சாமானிய தொழிலாளர் குழுக்களின் வளர்ச்சிக்கான கட்டாயத்தை எழுப்புகிறது.

புரட்சியின் தசாப்தத்தில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டம்

மனிதகுலம் தசாப்தத்தின் இரண்டாம் பாதியில் நுழைகின்ற நிலையில், சோசலிசப் புரட்சிக்கான புறநிலைமைகள் ஒரு அசாதாரண வேகத்தில் கனிந்து வருகின்றன. ஏகாதிபத்திய போர், மலைப்பூட்டும் சமத்துவமின்மை, காலநிலை பேரழிவு மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தல் என உலக முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட நிலைமைகள் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை போராட்டத்திற்குள் தள்ளி வருகின்றன.

ஒன்ராறியோவின் நயாகரா-ஆன்-தி-லேக்கில் மறியல் போராட்ட அணிவகுப்பில் கனடா தபால் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நவம்பர் 15, வெள்ளிக்கிழமை [Photo: WSWS]

நவீன வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள ஏதேனும் திட்டவட்டமான படிப்பினைகள் இருக்கின்றன என்றால், அது அமெரிக்காவிலும் உலகளவிலும் இப்போது நிலவுகின்ற செல்வ வள சமத்துவமின்மையின் அளவுகள் எப்போதும் சமூக வெடிப்புகளை உருவாக்குகின்றன என்பதுதான். ஆனால், ஒரு தெளிவான வேலைத்திட்டம், அமைப்பு மற்றும் தலைமைத்துவம் இல்லாமல் இத்தகைய போராட்டங்கள் வெற்றிபெற முடியாது என்பதையும் வரலாறு எடுத்துக்காட்டுகிறது.

ட்ரொட்ஸ்கியின் முக்கியமான படைப்பான அக்டோபரின் படிப்பினைகள் என்ற நூல் பிரசுரிக்கப்பட்டதைச் சுற்றி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் மோதல் வெடித்து வெறும் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் ஆகிறது. அதிகாரத்துவவாதத்திற்கு எதிரான இடது எதிர்ப்பாளர்களின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு, ஸ்ராலினிஸ்டுகளிடம் இருந்து ஒரு வெறித்தனமான பதிலைத் தூண்டியது. இந்த தாக்குதல்களில் இருந்து ட்ரொட்ஸ்கி தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்ட நிலையில், எழுந்த இரண்டு மையமான பிரச்சினைகளாவன: (1) 1917 அக்டோபரில் போல்ஷிவிக்குகளின் வெற்றி ஒரு சர்வதேச மூலோபாயத்தின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாக இருந்தது; மற்றும் (2) புறநிலை நிலைமை எந்தளவுக்கு அபிவிருத்தி அடைகிறதோ, அந்த அளவுக்கு புரட்சிகரத் தலைமையின் பாத்திரமான “அகநிலைக் காரணி” மிகவும் தீர்மானகரமானதாக இருக்கிறது.

தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகரத் தலைமையின் அபாயம் குறித்து ஆளும் வர்க்கமே நன்கறிந்துள்ளது. சோசலிசம் மீதான ட்ரம்பின் விஷமத்தனமான கண்டனங்கள், தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் கோபம், தொழிலாளர்களின் நலன்களை வெளிப்படுத்தும் ஒரு வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்குடன் ஒன்றிணைந்துவிடுமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்துகின்றன. ட்ரொட்ஸ்கிசத்தின் “அபாயத்தை” எதிர்கொள்ள கல்வித்துறைக்குள் இருக்கும் அடுக்குகளால் அளப்பரிய ஆதார வளங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, பிரிட்டிஷ் கல்வியாளர் ஜோன் இ. கெல்லி (John E.Kelly), ட்ரொட்ஸ்கிசத்தின் அந்திமம் (The Twilight of Trotskyism) என்ற அவரது 2023 ஆம் ஆண்டு புத்தகத்தில், “ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தலைமையிலான புரட்சிகர சூழல், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு முயற்சி இருந்தபோதிலும், எங்கும் செயல்படுத்தப்படவில்லை. இது, தீவிர அரசியலில் இருந்து விலகி அரசியல் ஆற்றல் மற்றும் வளங்களை துயரகரமாகவும் வீணாகவும் தவறாக வழிநடத்துவதற்கு சமமாகும்” என்று எழுதுகிறார். “’ட்ரொட்ஸ்கிசம் என்பது 21ம் நூற்றாண்டின் மார்க்சிசம்’ மற்றும் ட்ரொட்ஸ்கிச உலகிற்குள், ஒரேயொரு உண்மையான ட்ரொட்ஸ்கிச கட்சி மட்டுமே உள்ளது” என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கூற்றை, “அடக்கமற்ற மற்றும் திமிர்த்தனம்” என்று கெல்லி கண்டனம் செய்கிறார்.

கெல்லி மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையின் ஏனைய பாதுகாவலர்களைப் பொறுத்த வரையில், “தீவிர” அரசியல் என்பது ஐக்கிய இராஜ்ஜியத்தில் ஜெர்மி கோர்பின் மற்றும் உலகெங்கிலுமான இதேபோன்ற அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் சீர்திருத்தவாத முட்டாள்தனமாகும். இந்த வகை அரசியல் எதை உருவாக்கியுள்ளது? தொழிற் கட்சியை “சீர்திருத்துவதற்கு” கோர்பினின் முயற்சிகள், ஐரோப்பாவில் ஏகாதிபத்தியப் போரிலும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலிலும் முன்னணியில் இருக்கும் சேர் கெய்ர் ஸ்டார்மரின் அரசாங்கத்தை பெற்றெடுத்துள்ளது.

அமெரிக்காவில், பேர்ணி சாண்டர்ஸ், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் மற்றும் அவர்களைப் போன்றவர்கள், ஜனநாயகக் கட்சியின் போருக்கு ஆதரவான மற்றும் பெருநிறுவன-சார்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக மக்கள் அதிருப்தியைத் தூண்டி, ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சூழ்நிலைமைகளை உருவாக்கியுள்ளனர். பிரான்சில் ஜோன்-லூக் மெலோன்சோன், கிரீஸில் சிரிசா, ஜேர்மனியில் இடது கட்சி, ஸ்பெயினில் பொடெமோஸ் மற்றும் இன்னும் பலரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஆளும் வர்க்கத்தின் ஸ்தாபக கட்சிகளுக்கு அடிபணியச் செய்து, அதை மட்டுப்படுத்தவும் நடுநிலைப்படுத்தவும் முனைந்துள்ளனர்.

ட்ரொட்ஸ்கி, அவர் காலத்திய ஜோன் கெல்லீஸுக்கு பதிலளித்து, ஏப்ரல் 1939 இல் பின்வருமாறு குறிப்பிட்டார்:

முதலாளித்துவத்தின் அடித்தளங்களைப் பாதுகாக்க தங்களை அழைத்ததாக அவர்கள் உணர்ந்தாலும், சீர்திருத்தவாதிகள், விஷயங்களின் இயல்பிலேயே, பொருளாதார பொலிஸ் நடவடிக்கைகளுடன் அதன் சட்டங்களை வடிவமைக்க சக்தியற்றவர்களாக நிரூபிக்கின்றனர். அப்போது அவர்களால் தார்மீகத்தைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? திரு. Ickes, மற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் புதிய ஒப்பந்த விளம்பரதாரர்களைப் போலவே, இறுதியில், ஒழுக்கம் மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளை மறந்துவிட வேண்டாம் என்று ஏகபோகவாதிகளுக்கு அழைப்பு விடுத்தார். மழை வேண்டி பிரார்த்தனை செய்வதை விட இது எப்படி சிறந்தது?

உலகெங்கிலும் பாசிசத்தை ஊக்குவிப்பதன் மூலம் தனது பரந்த செல்வத்தை பாதுகாக்கும் எலன் மஸ்க் போன்றவர்களை சமூக சீர்திருத்தத்தை ஏற்க நிர்பந்திக்க முடியும் என்பதை விட திவாலான முன்னோக்கு வேறு என்ன இருக்க முடியும்? அனைத்திற்கும் மேலாக, தன்னலக்குழுக்களின் செல்வவளம் முற்றிலுமாக ஒரு சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறையுடன், அதாவது முதலாளித்துவத்துடன் பிணைந்துள்ளது.

மனிதகுலம் முகங்கொடுக்கும் நெருக்கடிக்கு ஒரே சாத்தியமான பதில் தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டுவதாகும். நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் “முதலாளித்துவவாதிகளின் தனித்தனி குழுக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய” ட்ரொட்ஸ்கி எழுப்பிய கோரிக்கையின் அவசரத் தன்மைக்கு சமூகத்தின் தன்னலக்குழுத் தன்மை சாட்சியமளிக்கிறது. முதலாளித்துவ தன்னலக்குழுவிற்கு எதிராக, உலக அளவில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் இதனை எதிர்த்து போராட வேண்டும்.

உலக சோசலிசப் புரட்சியை முன்னெடுப்பதில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர ஆற்றலைக் கட்டவிழ்த்து விடுவதற்குப் போராடும் ஒரே கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே ஆகும். ரஷ்யப் புரட்சியில் இருந்து ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டம் வரையில், மார்க்சிசத்தின் மகத்தான பாரம்பரியங்களில் வேரூன்றிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு அவசியமான தெளிவையும் ஒழுங்கமைப்பையும் கொண்டு தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குவதற்கு உறுதிபூண்டுள்ளது.

சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியைக் கட்டியெழுப்பு!

வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி இல்லாமல் சோசலிசத்தை அடைய முடியாது. சோசலிசத்திற்கான அரசியல் அடித்தளத்தை அமைக்கும் புரட்சியானது, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் தனது நலன்களை முன்னெடுப்பதற்கும் அதன் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நடத்தும் எண்ணற்ற போராட்டங்களின் போக்கில் தயாரிக்கப்படுகிறது.

2025 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரிவுகளின் பணியின் மையத்தில், முதலாளித்துவ தன்னலக்குழுவின் கட்டளைகளுக்கு எதிரான, உலகளாவிய எதிர்ப்பிற்கான ஒருங்கிணைப்பு நரம்பு மையமாக இருக்கும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை கட்டியெழுப்ப வேண்டும்.

இந்த பூமியின் மிகவும் சக்திவாய்ந்த பாரிய சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கம்தான், முதலாளித்துவ சமூகத்தின் அனைத்து மதிப்பிற்கும் ஆதாரமாகும். புள்ளிவிவரத்தின்படி, 2024 ஆம் ஆண்டில் மொத்த உலகளாவிய உழைப்பு சக்தியில் தோராயமாக 3.5 பில்லியன் மக்கள் இருந்தனர். இது, 1991 இல் 2.23 பில்லியனில் இருந்து 55 சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதில் 1.65 பில்லியன் சேவைத் தொழிலாளர்கள், 873 மில்லியன் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் 758 மில்லியன் தொழில்துறை தொழிலாளர்கள் அடங்குவர்.

தற்பொழுது சீனாவில் கிட்டத்தட்ட 800 மில்லியன் தொழிலாளர்களும், இந்தியாவில் 600 மில்லியன் தொழிலாளர்களும், அமெரிக்காவில் 170 மில்லியன் தொழிலாளர்களும், ஜேர்மனியில் 44 மில்லியன் தொழிலாளர்களும் உள்ளனர். ஆபிரிக்கா, ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில், ஒரு மகத்தான, முக்கியமாக இளம் தொழிலாள வர்க்கம் உள்ளது, நகர்ப்புற மையங்கள் மற்றும் பெருநகரங்களில் குவிந்துள்ளது, ஒவ்வொன்றிலும் 10 மில்லியனுக்கும் மேலான மக்கள் வசிக்கின்றனர். இந்தோனேசியாவில் 140 மில்லியன், பிரேசிலில் 108 மில்லியன், பாக்கிஸ்தானில் 80 மில்லியன், நைஜீரியாவில் 75 மில்லியன், பங்களாதேஷில் 74 மில்லியன் மற்றும் எதியோப்பியாவில் 61 மில்லியன் தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய உற்பத்தியின் செயல்பாட்டில் புறநிலையாக ஐக்கியப்பட்டுள்ள சர்வதேச தொழிலாள வர்க்கம், நாடுகடந்த நிறுவனங்கள் மற்றும் விநியோக வலையமைப்புகளால் மேலாதிக்கம் செய்யப்படுகிறது. இது, உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களை இலாப நலன்களுக்காக சுரண்டுகிறது. தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட தொழில்துறை தாக்குதலின் அபிவிருத்தியானது, தொழிலாளர்களாலேயே கட்டுப்படுத்தப்படும் தொழிலாள வர்க்கப் போராட்ட அமைப்புகளை ஸ்தாபிப்பதில் தங்கியுள்ளது.

ஏப்ரல் 2021 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) ஸ்தாபிக்கப்பட்டமை, தேசிய மற்றும் தொழில்துறை எல்லைகளுக்கு அப்பால் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தில் ஒரு தீர்க்கமான படியைக் குறித்தது.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கைகளில் இருந்து அதிகாரம் பறிக்கப்பட்டு, சாதாரண தொழிலாளர்களுக்கு மாற்றப்படும் அளவிற்கு மட்டுமே தொழிற்சங்கங்கள் வர்க்கப் போராட்டத்தின் கருவிகளாக புத்துயிர் பெற முடியும்.

2021 இல் ICFI விளக்கியது போல்:

பாரிய போராட்டத்திற்கான புதிய பாதைகள் உருவாக்கப்பட வேண்டும். 80 ஆண்டுகளுக்கு முன்பு, வரலாற்றின் ஒரு கட்டத்தில், தற்போதுள்ள தொழிற்சங்க அமைப்புகளின் சீரழிவு இன்றைய காலகட்டத்தை விட மிகக் குறைவாக முன்னேறியபோது, லியோன் ட்ரொட்ஸ்கி (உலக சோசலிசப் புரட்சியின் மிகப் பெரிய மூலோபாயவாதி) “முதலாளித்துவ சமூகத்திற்கு எதிரான பாரிய போராட்டத்தின் பணிகளுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடைய சுயாதீனமான போர்க்குணமிக்க அமைப்புகளை அனைத்து சாத்தியமான நிகழ்வுகளிலும் உருவாக்கி, தொழிற்சங்கங்களின் பழமைவாத எந்திரத்துடன் நேரடி முறிவை ஏற்படுத்துவதே“ நான்காம் அகிலத்தின் பணி என்று எழுதினார்.

உலகளவில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சாமானிய தொழிலாளர் குழுக்களின் வலையமைப்பை வளர்ப்பதற்கான போராட்டம் தொழிற்சங்கங்கள் இருக்கும் தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் பணியிடங்களுக்கு மட்டும் அல்ல. உண்மையில், இன்றைய வேலைத் தளங்களில் பெரும்பாலானவை தொழிற்சங்கப்படுத்தப்படவில்லை. இந்த சமூக உண்மை என்னவென்றால், எண்ணற்ற பணியிடங்களில் நடைமுறை அமைப்பின் ஆரம்ப மற்றும் ஒரே வடிவமாக சாமானிய தொழிலாளர் குழுக்கள் வெளிப்படும்.

தொழிலாளர்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், கூட்டு நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும், சுரண்டல், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிராக ஒரு ஐக்கியப்பட்ட தாக்குதலை நடத்துவதற்குமான கட்டமைப்பாக IWA-RFC அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராக பிளவுபடுத்த ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்படும் அனைத்து வடிவிலான தேசிய பேரினவாதம் மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத கிளர்ச்சிகளையும் அது எதிர்க்க வேண்டும். அது ட்ரம்ப் நிர்வாகத்தின் பாரிய நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கும் உலகெங்கிலுமான அதிவலதுசாரி அரசாங்கங்களுக்கும் எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒழுங்கமைக்க வேண்டும்.

தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் உள்ள தொழிலாளர்களால் சுயாதீனமாக உருவாக்கப்பட்ட சாமானிய தொழிலாளர் குழுக்கள், தொழிலாளர்கள் ஜனநாயக ரீதியாக ஒழுங்கமைக்கவும், தங்கள் சொந்த கோரிக்கைகளை வலியுறுத்தவும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் தங்கள் போராட்டங்களை இணைக்கவும் வழிவகை செய்கின்றன.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் காட்டிக்கொடுப்புகளை சவால் செய்யவும் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்னெடுக்கவும் கடந்த ஆண்டின் போது, சரக்கு விநியோகம், வாகன உற்பத்தி, கல்வி மற்றும் மருத்துவக் கவனிப்பு போன்ற முக்கிய தொழில்துறைகளில் சாமானிய தொழிலாளர் குழுக்கள் உருவாகியுள்ளன. பெருநிறுவன சுரண்டல், பாதுகாப்பற்ற வேலையிட நிலைமைகள் மற்றும் பொதுச் சேவைகளை அழிப்பதற்கான எதிர்ப்பை ஒழுங்கமைப்பதில் இந்த குழுக்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்து வருகின்றன. அவர்களின் போராட்டங்கள் ஒன்றோடொன்று தொடர்புடையவை மற்றும் ஒரு ஐக்கியப்பட்ட பதில் நடவடிக்கை தேவை என்பதை உணர்ந்து, அவர்கள் சர்வதேச தொடர்புகளை ஸ்தாபிக்கவும் தொடங்கியுள்ளனர்.

வரவிருக்கும் காலகட்டத்தில் IWA-RFC இன் பணியானது, இந்த வேலையை விரிவுபடுத்தி, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு ஒழுங்கமைக்கும் மையமாக சேவை செய்யும் ஒரு சக்திவாய்ந்த சர்வதேச வலையமைப்பை கட்டியெழுப்புவதாகும்.

2025 இல் சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்போம்! நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்பு! உலக சோசலிச வலைத் தளத்தை ஆதரியுங்கள்!

தொழிலாள வர்க்கம் பெரும் சவால்களை எதிர்கொள்கிறது, ஆனால் அதற்கு மகத்தான சக்தியும் உள்ளது. முதலாளித்துவத்தின் நெருக்கடியை ஆழப்படுத்தும் அதே நிகழ்ச்சிப்போக்குகள் —பூகோளமயமாக்கம், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் உற்பத்தி ஒன்றுகுவிப்பு— தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான நிலைமைகளையும் உருவாக்கி உள்ளன.

வரவிருக்கும் மாதங்கள் பெரும் அதிர்ச்சிகள், நெருக்கடிகள் மற்றும் வெகுஜனப் போராட்டங்களின் வெடிப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்படும். புரட்சிகரத் தலைமை இல்லாமல், இந்தப் போராட்டங்கள் காட்டிக்கொடுக்கப்படும், திசைதிருப்பப்படும், அல்லது நசுக்கப்படும் அபாயத்தை முகங்கொடுக்கும்.

உலக சோசலிச வலைத் தளம் அதன் வாசகர்கள் அனைவரையும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான முடிவை எடுக்குமாறு அழைப்பு விடுக்கிறது. தீவிர அரசியலுக்காக, புரட்சிகர அரசியலுக்காகப் போராட வேண்டிய நேரம் இது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முழு வரலாற்று மரபுகளிலும் வேரூன்றியுள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, தேசியவாதத்தின் அனைத்து வடிவங்களில் இருந்தும் முழுமையாக முறித்துக் கொள்ளவும் புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும் போராடுகிறது. இதைவிட வேறு பாதையில்லை.

சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுங்கள், அல்லது உங்கள் நாட்டில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதி இல்லையென்றால், அதனை கட்டியெழுப்ப உதவுங்கள்.

wsws.org/donate உலக சோசலிச வலைத் தளத்தின் புத்தாண்டு நிதிக்கு நன்கொடை வழங்குமாறும் நாம் எமது வாசகர்கள் அனைவரையும் அழைக்கிறோம். உலக சோசலிச வலைத் தளம் முற்றிலும் அதன் வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் ஆதரவிலேயே இயங்குகிறது. அதன் அரசியல் சுயாதீனத்தைப் பேணுவதற்கு அனைத்து பெருநிறுவன அல்லது அரசு நிதிகளையும் மறுத்து வருகிறது. உங்களது நன்கொடை உலக சோசலிச வலைத் தளத்தின் வேலைகளை நிலைநிறுத்துவதற்கும், விரிவாக்குவதற்கும் மற்றும் 2025 மற்றும் அதற்கு அப்பாலும் சோசலிசத்திற்கான போராட்டத்தை வலுப்படுத்துவதற்கும் இன்றியமையாததாகும்.

இந்த முக்கிய தருணத்தில், போர், சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்தை எதிர்க்க முனையும் ஒவ்வொரு தொழிலாளியும் இளைஞரும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுங்கள், உலக சோசலிச வலைத் தளத்தை ஆதரியுங்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக கட்டியெழுப்புங்கள்!

சோசலிச சமத்துவக் கட்சியில் இணைவது பற்றிய தகவல்களுக்கு, கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.

Loading