முன்னோக்கு

இஸ்ரேலிய அழித்தொழிப்பு ஆணையானது, ஒவ்வொரு போராளிக்கும் 20 பொதுமக்கள் கொல்லப்படுவதை அங்கீகரித்துள்ளதாக நியூ யோர்க் டைம்ஸ் வெளிப்படுத்துகிறது.

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

காஸா நகரின் ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில், இஸ்ரேலிய வான் மற்றும் தரைவழித் தாக்குதல்கள் இடம்பெற்ற இடிபாடுகளுக்குள் பாலஸ்தீனியர்கள் நடந்து செல்கின்றனர். திங்கள், ஏப்ரல் 1, 2024. [AP Photo/Mohammed Hajjar]

ஹமாஸ் அமைப்பின் ஆதரவாளர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு எதிரான ஒவ்வொரு முன்னெச்சரிக்கை தாக்குதலுக்கும் 20 போராளிகள் அல்லாதவர்களைக் கொலை செய்வதற்கு அங்கீகரிக்கும் அதிகாரபூர்வ இஸ்ரேலிய இராணுவ ஆவணங்கள் உள்ளன என்றும், சில சமயங்களில் இந்த விகிதம் ஒருவருக்கு 100 பேர்வரை எட்டுகிறது என்றும் நியூ யோர்க் டைம்ஸ் ஒரு விரிவான அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்களை படுகொலை செய்வதற்கு சமமான இலக்காக, வான்வழி குண்டுவீச்சுகள் மூலம் பொதுமக்களை படுகொலை செய்வதன் மூலம், காஸா மீது இஸ்ரேல் தனது போரை அழித்தொழிக்கும் போராக நடத்தி வருவதாக இந்த அறிக்கை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

2023 அக்டோபர் 7 தாக்குதல் தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேலிய இராணுவம் காஸாவின் பொதுமக்கள் பகுதிகள் மீது கட்டுப்பாடற்ற குண்டுவீச்சுக்கு அங்கீகாரம் அளித்து முன்னெப்போதும் இல்லாத உத்தரவை பிறப்பித்ததாக டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“ஒவ்வொரு தாக்குதலுக்கான உத்தரவில், 20 வரையான பொதுமக்களை கொல்லும் அதிகாரம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தாக “ டைம்ஸ் எழுதியது.

ஹமாஸுடன் தெளிவாகத் தொடர்புடைய நபர்கள், தங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் இருக்கும் போது, அவர்களது முழுக் குடும்பங்களையும் திட்டமிட்டு குறிவைத்து படுகொலை செய்வதற்கான நிலைமைகளை உருவாக்க இந்த உத்தரவானது இஸ்ரேலிய இராணுவத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. “எடுத்துக்காட்டாக, உறவினர்கள் மற்றும் அயலவர்களால் சூழப்பட்ட ஒரு வீட்டில் சாமானிய போராளிகள் இருந்தால், அவர்களை இஸ்ரேலிய இராணுவம் குறிவைத்து தாக்க முடியும் “ என்று அர்த்தமாகும்.

“இஸ்ரேலிய மூத்த தளபதிகள், ஹமாஸ் தலைவர்கள் மீதான தாக்குதல்களுக்கு ஒப்புதல் அளித்தனர். ஒவ்வொருவரும் 100க்கும் மேற்பட்ட போரில் ஈடுபடாதவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பார்கள் என்று அறிந்திருந்தனர் – இது, சமகால மேற்கத்திய இராணுவத்திற்கான ஒரு அசாதாரண வாசலைக் கடக்கிறது” என்று டைம்ஸ் மேலும் கூறியது.

ஹமாஸ் அனுதாபிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட “முன்கூட்டிய தாக்குதல்களில்” பயன்படுத்தப்பட்ட “முறைகளும், அதை நடத்துவதற்கான விதிகளும்”, முடிந்தவரை பலரைக் கொல்லும் நோக்கில், காஸா மீது பிரமாண்டமான குண்டுகள் மூலம் பரவலான தொடர் குண்டுவீச்சுக்களை மேற்கொண்டு, காஸாவை முடிந்தவரை அழித்துள்ளது என்று டைம்ஸின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

இந்தப் படுகொலையின் நோக்கம், இனரீதியாக சுத்திகரிக்கப்பட்ட காஸாவை நிரந்தரமாக இணைத்து, ஆக்கிரமித்து, இஸ்ரேலியர்களால் குடியேற்றப்பட வேண்டும் என்பதாகும். மேலும், இஸ்ரேலிய பிரதம மந்திரி நெதன்யாகு “புதிய மத்திய கிழக்கு” என்று அழைத்ததன் ஒரு பகுதியாக ஆக்கப்படும் காஸா, ஏகாதிபத்திய சக்திகளின் நேரடி மேலாதிக்கம் மற்றும் அவர்களின் இஸ்ரேலிய அடிமை நாடு வழியாக ஆதிக்கம் செலுத்தப்படும்.

இந்த வெகுஜன அழிப்பு தாக்குதல் இன்றுவரை தொடர்கிறது என்பது வியாழன் அன்று இடம்பெற்ற வான்வழித் தாக்குதலில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது, அக்டோபர் 2023 முதல் காஸாவில் கொல்லப்பட்ட மொத்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை 201 பேர்களாக கொண்டு வந்துள்ளது.

காஸாவின் சுகாதார அமைச்சின் படி, 2023 அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இன்றுவரை 45,361 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இந்த எண்ணிக்கை காஸாவின் மக்களை இஸ்ரேல் வேண்டுமென்றே பட்டினியால் கொன்று, அதன் சுகாதார அமைப்பை அழித்ததால் எற்பட்ட இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த ஜூலையில் தி லான்செட் பத்திரிகை வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் 186,000 ம் பேர்கள் அல்லது அதற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும் காஸாவில் ஏற்பட்டுள்ள சேதக் கட்டுப்பாட்டின் நிலைப்பாட்டில் இருந்து டைம்ஸ் வெளியிட்ட அறிக்கை, அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அழித்தொழிப்பு உத்தரவு இருப்பதை அரை-அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறது. பெரும்பாலான சம்பவங்கள் ஏற்கனவே இஸ்ரேலிய-பாலஸ்தீனிய வெளியீடான +972 இதழால் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு முக்கிய அமெரிக்க ஊடக ஆதாரம் ஒவ்வொரு போராளிக்கும் 20 பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு அங்கீகாரம் அளிக்கும் ஆவணத்தைப் பார்த்ததாகக் டைம்ஸ் அறிக்கை கூறியது இதுவே முதல் முறையாகும்.

இஸ்ரேலிய தாக்குதல்கள் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் நடத்தப்பட்டன. பெரும்பாலும் “லாவெண்டர்” என்ற அமைப்பின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி முழு கட்டிடங்களையும் அவற்றின் குடியிருப்பாளர்களையும் எந்த எச்சரிக்கையும் இன்றியும் சில சமயங்களில் கண்மூடித்தனமாகவும் அழிக்கவும் செய்தது.

2023 அக்டோபர் 7 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, அக்டோபர் 8 ஆம் தேதியும் தொடரப்பட்டது. டைம்ஸ் படி, “காஸாவில் உள்ள இராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்கள் என்று அறிவிக்கப்பட்டது... மேலும், ஒவ்வொரு நாளும் 500 குடிமக்களை ஒட்டுமொத்தமாக ஆபத்தில் ஆழ்த்துவதற்கு” அனுமதிக்கப்பட்டது.

ஒரு அசாதாரண பத்தியில், “டைம்ஸால் ஆலோசித்த மேற்கத்தைய அறிஞரும், பேராசிரியருமான மைக்கேல் என் ஷ்மிட் என்பவர், இது இடைநிலை அதிகாரிகளால் அவர்கள் அடைய வேண்டிய ஒதுக்கீடாகக் கருதப்படும் அபாயம் உள்ளதாக கூறியதாக” எழுதியது. சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதலுக்கான “ஒதுக்கீடு” நீக்கப்பட்ட போதிலும், பல நாட்கள் காஸாவில் 500 க்கும் மேற்பட்ட இறப்புகள் தினமும் பதிவாகியுள்ளன.

போரின் முதல் இரண்டு நாட்களில், “காஸாவில் இஸ்ரேல் வீசிய 90 சதவீதமான வெடிகுண்டுகள் 1,000 முதல் 2,000 பவுண்டுகள் எடை கொண்ட செயற்கைக் கோள்களினால் வழிகாட்டப்பட்ட குண்டுகளாகும்” என்று டைம்ஸ் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் பலமுறை இஸ்ரேலிய தலைவர்களை குறைந்த விளைவுகளை ஏற்படுத்தும் வெடி குண்டுகளை பாவிக்குமாறு ஊக்குவித்ததாகக் கூறியுள்ளனர். ஆனால், இந்த பொது அறிக்கைகள் பொய்யானவையாகும். கடந்த ஜூலையில் வெளியிட்ட ராய்ட்டர்ஸ்சின் அறிக்கையின்படி, அமெரிக்கா அக்டோபர் மற்றும் ஜூலைக்கு இடையே 14,000 2,000-பவுண்டு குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பியிருந்தது. இது வேறு எந்த வகையான ஆயுதங்களையும் விட அதிகமாகும்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம்

நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின் அறிக்கையின் கண்டுபிடிப்புகளை விளக்குவதற்கு இந்த வரைபடம் உதவுகிறது. அக்டோபரில் இருந்து காஸாவில் இறந்தவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும், அதிலும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் இறந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கை முடிவு செய்துள்ளது.

இந்த இனப்படுகொலை இடம்பெற்றுவரும் காலம் முழுவதும், இஸ்ரேல் சில சமயங்களில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அதீத ஆர்வத்துடன் இருந்தாலும், காஸா மக்களை அழித்தொழிக்கவோ அல்லது வலுக்கட்டாயமாக இடம்பெயர வைக்கவோ விரும்பவில்லை என்ற கூற்றை பைடென் நிர்வாகம் ஊக்குவிக்க முயன்றது.

எவ்வாறாயினும், நியூ யோர்க் டைம்ஸ் சரிபார்த்த ஆவணங்கள், அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுக்கு அவை வெளியான சில நாட்களுக்குள் உடனடியாகக் கிடைத்திருக்கும் என்பதுதான் உண்மையாகும். 2023 அக்டோபரில் இஸ்ரேலுக்கான பயணத்திற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனுக்கு இது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. அங்கு அவர் இனப்படுகொலைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் முழு ஆதரவையும் வழங்கி உறுதியளித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம்

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல், 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்க ஆதரவிலான போரில் முன்னெப்போதும் இல்லாத வகையில், விரைவான அழித்தொழிப்பின் திருப்புமுனையைக் குறிக்கிறது. “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” பிரகடனப்படுத்தப்பட்டதில் இருந்து அமெரிக்கா மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் பயன்படுத்தும் பல வழி முறைகளைப் பயன்படுத்தி போரை நடத்தி வருகிறது. 

2013 இல், PLOS மெடிசின் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 2003 மற்றும் 2011 க்கு இடைப்பட்ட காலத்தில் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு அரை மில்லியன் மக்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் 70 சதவீதம் பேர் வன்முறைத் தாக்குதல்களில் இறந்தனர்.

2001 முதல், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், லிபியா, சிரியா, ஏமன் மற்றும் சோமாலியா உட்பட உலகம் முழுவதும் அமெரிக்கா 100,000 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஒபாமா ஆட்சியில், ஜனாதிபதியின் செவ்வாய்கிழமை பயங்கரவாத சந்திப்புகளின் போது, ​​அமெரிக்க ஆளில்லா விமான படுகொலைகள் அதிர்ச்சியூட்டும் வழமையுடன் காணப்பட்டன. ஆர்வெல்லியன் இலக்கு அமைப்பு மேட்ரிக்ஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டவிரோத படுகொலைகளுக்கான இலக்குகளை அவர் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுத்தார்.

இந்த போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து ஒப்பிடக்கூடிய, புதுப்பித்த ஆய்வு எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், 2013 இல் ஈராக்கில் பயன்படுத்தப்பட்ட முறைகள் இந்த நாடுகளில் பயன்படுத்தப்பட்டால், இறப்பு எண்ணிக்கை மில்லியன் கணக்கானதாக இருக்கும்.

கடந்த கால் நூற்றாண்டில், அமெரிக்காவினால் சட்டத்திற்குப் புறம்பான கொலையை முறையாகப் பயன்படுத்துவது என்பது, இஸ்ரேலை “நிதானத்தைக்” காட்டுமாறு வலியுறுத்துகிறது என்ற வெள்ளை மாளிகையின் கூற்றுகளுக்கு விடையாக உள்ளது.

மாறாக, இஸ்ரேல், அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள் மற்றும் உளவுத்துறையைப் பயன்படுத்தி, “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்” போது அமெரிக்கா பயன்படுத்திய வழிமுறைகளை மட்டுமே முழுமையாக்கி, நிறுவனமயமாக்குகிறது. மேலும், இஸ்ரேலின் குற்றங்கள், உலகம் முழுவதும் மற்றும் அமெரிக்காவிற்குள்ளேயே, மக்கள்தொகை அதிகமுள்ள நகர்ப்புறங்களுக்கு எதிராக மக்கள் படுகொலைகளை மேலும் பயன்படுத்துவதற்கான முன்னுதாரணத்தை மட்டுமே அமைக்கும்.

காஸா இனப்படுகொலையில் ஏகாதிபத்திய சக்திகளின் உடந்தையானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான குற்றச்சாட்டை உருவாக்குகிறது. இது ஒட்டுண்ணி முதலாளித்துவ நிதிய தன்னலக்குழுவின் நலன்களைப் பாதுகாக்க இனப்படுகொலையை (சமூக காட்டுமிராண்டித்தனத்தின் மிக உயர்ந்த வடிவம்) முறையாக இயல்பாக்குகிறது.

Loading