சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் போர்க்குணமிக்க 37 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை ஸ்ராலினிச சி.ஐ.டி.யு, ஒடுக்கியதற்குப் பின்னர்,

சாம்சங் தொழிலாளர்களுக்கான முன்னோக்கிய பாதை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சி.பி.எம் தலைமையிலான தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பான இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சி.ஐ.டி.யு), 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள சாம்சங் இந்தியாவின் வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி ஆலையில், சுமார் 1,500 நிரந்தரத் தொழிலாளர்கள் நடத்திய 37 நாள் போர்க்குணமிக்க வேலைநிறுத்தப் போராட்டத்தை திடீரென முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

அக்டோபர் 17 அன்று, தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புவார்கள் என்று நம்பவைக்கப்பட்டனர். ஆனால், தென் கொரியாவை தளமாகக் கொண்ட நாடுகடந்த நிறுவனமான சாம்சங், சி.ஐ.டி.யு/சி.பி.எம் இன் காட்டிக்கொடுப்பை சாதகமாக பயன்படுத்தி, அதன் தொழிலாளர் விரோத தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இன்றைய தேதி வரை, வெறும் ஒரு சில தொழிலாளர்களே வேலைக்குத் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். பணிக்கு மீண்டும் அழைக்கப்பட்ட இவர்கள், “பயிற்சி வகுப்புகள்” என்ற பேரில், நிர்வாகிகளால் அச்சுறுத்தப்பட்டு நிர்வாகத்தின் பாசாங்கான தொழிலாளர் குழுவில் சேர நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் தங்களது 37 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலில் அவர்கள் வேலைநிறுத்தம் செய்துவரும் ஆலைக்கு 500 மீட்டர் தூரத்திற்கு செல்ல நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போராட்ட பகுதிக்கு விரைந்து, தொழிலாளர்களது கூடாரத்தை தரைமட்டமாக்கினர். [Photo: WSWS]

சி.ஐ.டி.யு, தொழிலாளர்களின் கோரிக்கைகளான, வேலை நேரத்தைக் குறைத்தல், நிர்வாகத்தின் கண்காணிப்பைக் குறைத்தல் மற்றும் அவர்களின் குறைந்த ஊதியத்தை உயர்த்துதல் போன்றவற்றை விடுத்து, மூர்க்கமான வணிக சார்பு திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) மாநில அரசாங்கத்திடம் முழுமையாக சரணாகதி அடைந்துள்ளது. வேலை நிறுத்தத்தின் மையப்புள்ளியான, சம்சுங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை (SIWU), தொழிலாளர் அமைச்சகத்தில் முறையாக பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட சி.ஐ.டி.யு, கை விட்டுள்ளது. இது, இந்திய தொழிலாளர் சட்டங்களின் கீழ் ஒரு சட்டப்பூர்வ உரிமையாகும்.

சாம்சங் தொழிலாளர்கள் இப்போது பழிவாங்கும் நிர்வாகத்தின் தயவில் உள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கெடுத்த தொழிலாளர்கள், தொழிற்சாலையின் வாசலில் அக்டோபர் 17 அன்று வந்து நின்றபோது, அவர்களுக்கு ஒரு நேரத்தில் 150 தொழிலாளர்கள் வீதமாக, கட்டாய “பயிற்சி” வகுப்புகள் அளிக்கப்படும் என்று சம்சுங் நிர்வாகத்தால் கூறப்பட்டது. இதுவரை, சுமார் 450 தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சாலைக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டம், தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதிலும் வர்க்கப் போராட்டத்திற்கான ஒரு முக்கிய தீப்பொறியாக மாறிக் கொண்டிருந்த நிலைமைகளின் கீழ், சி.ஐ.டி.யு இந்தப் போராட்டத்தை முறியடித்தது. இந்தியாவின் தீவிர வலதுசாரி, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களின் அழுத்தத்தின் கீழ், இந்த வேலைநிறுத்த போராட்டத்தை முறியடிக்க தி.மு.க அரசு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெட்கக்கேடான மற்றும் வன்முறையான பொலிசை கட்டவிழ்த்து அடக்குமுறையை கையாண்டது. இந்தப் போராட்டம், ஒரு பரந்த தொழிலாளர் அணிதிரள்வைத் தூண்டும் அபாயத்தைக் கொண்டிருந்தது.

சி.ஐ.டி.யு.வின் முழுமையான சரணடைதலுக்கு கூடுதல் காரணி ஒன்றுள்ளது. அது, ஸ்ராலினிச கட்சிகளான சி.பி.எம் மற்றும் சிறிய ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க உடன் நீண்டகால அரசியல் கூட்டணியில் இருந்து வருகின்றன என்பதாகும். இவ்விரு கட்சிகளும், தி.மு.க அரசாங்கத்தின் பொலிசாரின் நடவடிக்கை குறித்த அவர்களின் பெயரளவிலான விமர்சனங்கள் கூட்டணியின் “நலனுக்கு” உகந்ததல்ல என்பதையும், தி.மு.க, இக்கட்சிகளுடனான அதன் உறவுகளை நன்கு துண்டித்துக் கொள்ளக்கூடும் என்பதையும், தி.மு.க தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தை, சாம்சங் நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு தி.மு.க அரசாங்கத்திற்கும், நாற்றம்பிடித்த முறையில் காட்டிக்கொடுத்ததை சி.ஐ.டி.யு ஒரு வரலாற்று “வெற்றியாக” கொண்டாடி வருகிறது. நீண்டகால சி.ஐ.டி.யு நிர்வாகியும் SIWUவின் தலைவருமான முத்துக்குமார், “உலகமே வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வெற்றி, தொழிலாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது” என்று கூறினார்.

முத்துக்குமார் வரைந்திருக்கும் வெற்றியின் முற்றிலும் போலியான சித்திரத்திற்கு மாறாக, சாம்சங் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத்தளத்தின் நிருபர்களுடனான கலந்துரையாடலில், சி.ஐ.டி.யு தொழிற்சங்கமானது, தொழிலாளர்களின் முதுகில் குத்துவது குறித்து தங்கள் கோபத்தையும் கசப்பு உணர்வையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பிறகு, சம்சுங் நிறுவனம் SIWU ஐ அங்கீகரிக்க மறுக்கும் முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளது. ஸ்ராலினிஸ்டுகள் கோழைத்தனமாக தொழிலாளர்களின் அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதில் நிர்வாகத்தின் சிறந்த பங்காளியாக இருக்க முடியும் என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

எனவே, எந்தவொரு சாமானிய தொழிலாளர்களின் வாக்கெடுப்பும் இல்லாமல், சி.ஐ.டி.யு ஆல் SIWU தலைவர் பதவிக்கு திணிக்கப்பட்ட முத்துக்குமார், சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். உற்பத்தியை பெருக்க ஒத்துழைக்க வேண்டும் என்ற உறுதியான வேண்டுகோளுடன் நிர்வாகம் அதன் கடின நிலையிலிருந்து பின்வாங்கவில்லை என்றால், “விளைவுகள்” ஏற்படும் என்று தெளிவற்ற, வெற்று அச்சுறுத்தலை அவர் விடுத்தார்.

“சி.ஐ.டி.யு தொழிலாளர்கள் அமைதியை விரும்புகிறார்கள், மேலும் உற்பத்தியில் அவர்களுக்கு உதவ நாங்கள் அவர்களுக்கு வழிகாட்டுகிறோம், ஆகவே பாரபட்சமின்றி நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், இந்த தொழில்துறை அமைதியைப் பேணுவது சாம்சங் நிர்வாகத்தின் கடமை என்பதை நாங்கள் இதன்மூலம் அறிவிக்கிறோம்,” என்று முத்துக்குமார் குறிப்பிட்டார்.

இந்தம் பிரகடனமானது, ஸ்ராலினிச தலைமையிலான சி.ஐ.டி.யு பல தசாப்தங்களாக ஆற்றி வந்துள்ள முற்றிலும் நாற்றம்கண்ட பாத்திரத்துடன் முற்றிலும் பொருந்தி உள்ளது. இது ஒன்றன்பின் ஒன்றாக, போர்க்குணமிக்க தொழிலாளர்களின் போராட்டங்களை, குறிப்பாக இந்தியாவின் ஒரு பிரதான உற்பத்தி மையமாக மாறியுள்ள தமிழ்நாட்டில், தனிமைப்படுத்தி காட்டிக்கொடுத்து வருகிறது. எடுத்துக்காட்டாக, 2010 இல், தாய்வானை தளமாகக் கொண்ட Foxxcon நிறுவனத்தில் 7,000 தொழிலாளர்கள் மற்றும் சீனாவுக்கு சொந்தமான BYD கார்ப்பரேஷனின் சென்னை பகுதி ஆலையில் இருந்த 3,000ம் தொழிலாளர்கள், பல வாரங்கள் நீடித்த வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்திய போதிலும், சி.ஐ.டி.யு அவர்களை நிர்வாகத்திடம் முழுமையாக சரணடையச் செய்தது.

சாம்சங் வேலைநிறுத்தப் போராட்டத்தை பொறுத்த வரையில், மிகவும் குறைந்த ஊதியங்கள், நிலையற்ற ஒப்பந்த வேலைவாய்ப்பு, மற்றும் இந்தியா முழுவதிலும் நிலவும் கொடூரமான வேலை நிலைமைகள் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு பரந்த தொழிலாள வர்க்க அணிதிரட்டலின் முன்னோடியாக சி.ஐ.டி.யு இருக்க முனைவது ஒருபுறம் இருக்கட்டும், அது அமைந்துள்ள பாரிய ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூர் தொழில்துறை பகுதியில் தொழிலாளர்கள் மத்தியில் அதற்கு ஆதரவை அணிதிரட்ட சி.ஐ.டி.யு எதுவும் செய்யவில்லை. முத்துக்குமாரும் அவரது சக ஸ்ராலினிச அதிகாரிகளும் சி.ஐ.டி.யு உடன் இணைந்த ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கியதற்காக, 12 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாதங்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அருகிலுள்ள சாம்சங் விநியோக நிறுவனமான SH எலெக்ட்ரானிக்ஸ்சில் கிட்டத்தட்ட 100 நிரந்தர தொழிலாளர்களுடன் ஒரு கூட்டத்தையோ அல்லது கூட்டு நடவடிக்கையையோ ஏற்பாடு செய்யவில்லை.

அதற்கு பதிலாக, சி.ஐ.டி.யு தலைவர்கள், தி.மு.க தலைமையிலான தொழிலாளர் அமைச்சகம் மற்றும் நீதிமன்றங்களில் முறையீடு செய்யுமாறு தொழிலாளர்களை வலியுறுத்தி, அவர்கள் சார்பாக தலையிட அழுத்தம் கொடுக்கலாம் என்று கூறினர்.

உண்மையில், இந்த வேலைநிறுத்த போராட்டம் அதற்கு நேர் எதிரானதைக் காட்டியது. அரசும், நீதிமன்றங்களும், பொலிசும் சாம்சங் நிறுவனத்துடன் ஒத்துழைத்தன.

செப்டம்பர் 9 அன்று சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வெடித்தபோது, நிர்வாகம் வேலைநிறுத்தக்காரர்கள் நிறுவன வளாகத்திலிருந்து 500 மீட்டருக்குள் மறியல் செய்வதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவைப் பெற்றது. சி.ஐ.டி.யு இதற்கு கீழ்ப்படிந்து ஒப்புக் கொண்டு, ஆலைக்கு வெகு தொலைவில் ஒரு “எதிர்ப்புக் கூடாரத்தை” அமைத்தது. “சி.ஐ.டி.யு தலைமை தொழிலாளர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும்” என்று வாக்குறுதியளித்து, உலக சோசலிச வலைத்தள நிருபர்கள் போன்ற “வெளியாட்களுடன்” பேச வேண்டாம் என்றும் சி.ஐ.டி.யு தலைவர்கள் தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்த நிலையில், தி.மு.க மற்றும் மத்தியிலுள்ள பா.ஜ.க அரசாங்கங்கள் அதிகரித்தளவில் ஆத்திரமடைந்தன. மேலும் இது, முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் நற்பெயரை “சேதப்படுத்தும்” என்று பல்வேறு அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தனர். மேலும், போராட்டக்காரர்களை மிரட்டவும், துன்புறுத்தவும் போலீசார் அதிகளவில் கட்டவிழ்த்து விடப்பட்டனர்.

அப்போதெல்லாம் சி.ஐ.டி.யு, சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ தலைவர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பொலிஸ் மற்றும் அதைவிட முக்கியமாக அவர்களின் தி.மு.க கூட்டாளிகள் மீது மிகவும் கோழைத்தனமான விமர்சனங்களைத் தவிர வேறு எதையும் வெளியிடவில்லை. மேலும், அவர்களை “நியாயமானவர்களாக” இருக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

தி.மு.க அரசாங்கத்திற்கு தலைவணங்கி, தொழிலாளர்களின் கோரிக்கைகளில் எதையும் வென்றெடுக்காமல் வேலைநிறுத்த போராட்டத்தை முடித்துக் கொண்டு, காயத்திற்கு மேலும் அவமானம் சேர்க்கும் வகையில், சி.பி.எம், சி.பி.ஐ மற்றும் தமிழ் தேசியவாத விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) ஆகியவற்றின் மாநிலத் தலைவர்கள், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை “சுமூகமாக” தீர்ப்பதில் அவர் தலையிட்டதற்கு “நன்றி” தெரிவிக்க அக்டோபர் 26 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

சி.ஐ.டி.யு இன் துரோகப் பாத்திரமானது, சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ இன் பிற்போக்குத்தனமான ஸ்ராலினிச அரசியலில் இருந்து ஊற்றெடுக்கிறது. சோசலிசத்திற்காக போராடும் தொழிலாள வர்க்கத்தின் கட்சிகள் என்று அவை கூறிக் கொண்டாலும், அவை பல தசாப்தங்களாக முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு ஒருங்கிணைந்த பாகமாக செயல்பட்டு வந்துள்ளன. இந்தியாவை உலக மூலதனத்திற்கான ஒரு மலிவு-உழைப்பு புகலிடமாக மாற்றுவதற்கான இந்திய முதலாளித்துவத்தின் உந்துதலிலும், சீனாவை இலக்காகக் கொண்ட வாஷிங்டன் உடனான ஒரு “மூலோபாய பங்காண்மை” மூலமாக அதன் சூறையாடும் நலன்களை முன்னெடுப்பதற்கான அதன் முயற்சிகளிலும், அவை முக்கிய ஆதரவை வழங்கியுள்ளன.

போர்க்குணமிக்க தொழிலாளர் போராட்டங்களை தனிமைப்படுத்தி ஒடுக்கி வருகின்ற அதேவேளையில், சி.பி.எம், சி.பி.ஐ மற்றும் அவற்றின் இடது முன்னணி, நீண்டகாலமாக முதலாளித்துவத்தின் விருப்பமான தேசிய அரசாங்க கட்சியாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சி உட்பட பெருவணிக கட்சிகளுடன் தொழிலாள வர்க்கத்தை கட்டிப்போட வேலை செய்து வருகின்றன. அவர்கள் தேசிய அளவிலும் மாநிலங்களிலும் ஒன்றன்பின் ஒன்றாக வலதுசாரி, தொழிலாளர்-விரோத அரசாங்கங்களில் பங்கெடுத்துள்ளனர் மற்றும் ஆதரித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான அரசாங்கங்கள் இரண்டையும் அவை மாறி மாறி ஆதரித்து வருவதும் இதில் அடங்கும்.

அவர்கள் காங்கிரஸ் கட்சி மற்றும் தி.மு.க போன்ற பிராந்திய முதலாளித்துவ கட்சிகள் இந்து மேலாதிக்கவாத பா.ஜ.க. வுக்கு “மதச்சார்பற்ற” மாற்றீடுகள் என்ற அடித்தளத்தில், இந்தக் கட்சிகளுடன் தங்கள் கூட்டணிகளை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆயினும் இந்தக் கட்சிகள் அனைத்தும் வகுப்புவாதத்துடன் உடந்தையாக இருந்ததற்கான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன.

சி.பி.எம் தலைமையிலான இடது முன்னணி அரசாங்கம் அமைந்துள்ள மாநிலங்களில், முன்பு மேற்கு வங்கத்திலும், இப்பொழுது கேரளாவிலும், அது தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலைநிறுத்தங்களுக்கு தடை விதிப்பது உட்பட முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை பின்பற்றி வருகிறது.

தொழிலாளர்கள் முதலாளித்துவ அரசியலில் இருந்தும் மற்றும் அரசு-நெறிமுறைப்படுத்தப்பட்ட, முதலாளிகளுக்கு சார்பான “கூட்டு பேரம் பேசும் அமைப்புமுறையிலிருந்தும்” முறித்துக் கொண்டு, வர்க்கப் போராட்ட முறைகளின் அடிப்படையில் மிகவும் குறைந்த ஊதியங்கள், ஒப்பந்த வேலைவாய்ப்பு மற்றும் கொடூரமான வேலை நிலைமைகளுக்கு எதிராக, ஒரு எதிர்த் தாக்குதலை அதிகரிப்பதைத்தான் ஸ்ராலினிச அரசியல்வாதிகளும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும் கடுமையாக எதிர்க்கின்றனர். முதலாளிகளின் பக்கம் உள்ள அரசின் தவிர்க்க முடியாத தலையீடு, தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் வேறுபட்ட போராட்டங்களை ஒன்றிணைத்து, தொழிலாளர்களின் அதிகாரத்தை முறையாக அணிதிரட்டுவதன் மூலம் எதிர்கொள்ளப்பட வேண்டும்.

அதுபோன்றவொரு இயக்கம் ஒரு சோசலிச-சர்வதேசியவாத முன்னோக்கால் உயிரூட்டப்பட்டால் மட்டுமே அபிவிருத்தி அடைய முடியும்—அதாவது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலுக்கான போராட்டம் என்பது, இந்திய முதலாளித்துவம், அதன் அரசு எந்திரம் மற்றும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக மற்றும் சோசலிசத்திற்காக கிராமப்புற உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்கான போராட்டம் ஆகும்.

சி.ஐ.டி.யு, ஆனது, சம்சுங் தொழிலாளர்களின் வர்க்க நலன்களை வலியுறுத்தும் தொழிற்சங்க இயந்திரமாக இல்லை. மாறாக அது, தொழிலாளர்கள் அணிதிரள்வதை தடுப்பதற்கும், தி.மு.க அரசாங்கம் மற்றும் நாடுகடந்த நிறுவனமான சாம்சங்கின் சார்பாக மிருகத்தனமான தொழிலாளர்-சுரண்டலை நிலைநிறுத்துவதற்குமான ஒரு கருவியாக தன்னை நிரூபித்துள்ளது.

எனவேதான், சாம்சங் தொழிலாளர்கள் ஒரு சுயாதீனமான சாமானியத் தொழிலாளர் குழுவை ஸ்தாபிப்பதன் மூலம் விடயங்களை தங்கள் கைகளில் எடுக்க வேண்டும். அத்தகைய குழு, சி.ஐ.டி.யு தலைமையிலான SIWU க்கு முரணாக, ஆலையில் நிரந்தர, ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களை ஒன்றிணைத்து பொதுவான போராட்டத்தில் ஈடுபட பாடுபட வேண்டும். இது சாம்சங் நிர்வாகம் மற்றும் அவற்றின் பின்னால் நிற்கும் இந்திய அரசு, அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும், அனைத்து தொழிலாளர்களையும் எதிர்கொண்டுள்ள மிருகத்தனமான சுரண்டல் மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மைக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் சமூக சக்தியை அணிதிரட்டும் ஒரு மூலோபாயத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதிலும் சாமானிய தொழிலாளர் குழுக்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். நொய்டா, உத்தர பிரதேசம், தென் கொரியாவில் மற்றும் உலகெங்கிலும் உள்ள சாம்சங் தொழிலாளர்களுக்கு சிறப்பு அழைப்புகள் விடுக்கப்படவேண்டும்.

உலக பெருநிறுவனங்கள், ஏகாதிபத்திய போர் மற்றும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய அமைப்பான சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) பாகமாக இந்த குழுக்கள் மாற வேண்டும்.

Loading