இலங்கையில் கைது செய்யப்பட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வருடம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் கொழும்பில் பெலவத்தையில் உள்ள கல்வி அமைச்சிற்கு வெளியே டிசம்பர் 2 அன்று 500 க்கும் மேற்பட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட நான்கு பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு, புதன்கிழமை ஒரு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.

10 டிசம்பர் 2024 அன்று கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கூடியிருந்த போது [Photo by SDO]

L.P.S. அபேவிக்ரம, H.Y.L. பெரேரா, K.M.G. கொஸ்வத்த மற்றும் H.W. ஆராச்சிகே ஆகியோருக்கு தனித்தனியாக 100,000 ரூபா சரீரப்பிணையில் பிணை வழங்கப்பட்டது. விசாரணைக்கு மேலதிக கால அவகாசம் வேண்டும் என பொலிஸ் கூறியதால், அவர்களை அடுத்த ஆண்டு மார்ச் 25 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சுமார் 16,000 பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், 2021 முதல், உண்மையில் ஆசிரயர்களாகவே பணியாற்றி வருகின்றனர். கல்வி அமைச்சினால் நேரடியாக வேலைக்கு அமர்த்தப்பட்ட ஏனைய ஆசிரியர்களை காட்டிலும், இவர்களுக்கு மாதம் 6,500 ரூபாய் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இலங்கையின் ஆசிரிய சேவையில் உள்வாங்கப்பட வேண்டும் என்றும், ஏனைய அனைத்து ஆசிரியர்களுக்கும் இருக்கும் அதே உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்தும் கோரி வருகின்றனர்.

ஜனாதிபதி திசாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், டிசம்பர் 2 அன்று நடந்த போராட்டத்தை தாக்கி கலைக்க நூற்றுக்கணக்கான பொலிசாரை அனுப்பியது. புதிய ஆட்சி, சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள அதன் கொடூரமான சிக்கனத் திட்டத்திற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் ஈவிரக்கமின்றி நசுக்கும் என்பதற்கு இது மற்றொரு அறிகுறியாகும்.

நான்கு ஆசிரியர்கள் சட்டவிரோதமாக கூடி போக்குவரத்தை தடை செய்ததாக பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும், இந்த போலிக் குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றம் அவர்களுக்கு தண்டனை அளித்தால், அவர்களுக்கு மூன்றாண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மூன்று பொலிசாரை காயப்படுத்தினர் என்பதும் இந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும். டிசம்பர் 10 அன்று நடந்த அடையாள அணிவகுப்பின் போது கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் எவரையும் குற்றவாளிகள் என பொலிஸ் அதிகாரிகள் அடையாளம் காணவில்லை.

எவ்வாறாயினும், டிசம்பர் 2 ஆர்ப்பாட்டத்தில் என்ன நடந்தது என்பதற்கான உண்மையான கதை இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. போராட்டத்தின் போது, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்கள் மத்தியில் இருந்த ஒரு அந்நியரைப் பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர். இந்த நபர் இராணுவ புலனாய்வு அதிகாரி என தலங்கம பொலிஸார் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வு உத்தியோகத்தரே பொலிஸாருக்கு காயங்களை ஏற்படுத்தியதற்கு பொறுப்பாளி என்று கடுவெல நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலையான தலங்கம பொலிஸ் உத்தியோகத்தர் நீதவானிடம் தெரிவித்தாரா என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கையின் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று தெரிவித்தது.

புதன்கிழமை நடந்த பிணை விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வழக்கறிஞர்கள், சந்தேகத்திற்கிடமான நபர் கையில் கத்தியுடன் சுற்றித் திரிந்த படங்களை முன்வைத்தனர். பின்னர் அந்த படங்கள் ஊடகங்களில் வெளியாகின.

கடந்த காலங்களைப் போலவே, இந்த சம்பவங்கள் தொடர்பான எந்தவொரு பொலிஸ் விசாரணையும் உண்மையை அடக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என அடையாளம் காணப்பட்ட நபர், போராட்டக்காரர்கள் மத்தியில் வேடிக்கை பார்க்க நுழைந்திருக்கமாட்டார். அவருக்கு மேலதிகாரிகளால் திட்டவட்டமான வேலை ஒதுக்கப்பட்டிருக்கலாம்.

இந்த நபர் ஏன் ஆர்ப்பாட்டத்திற்குள் நுழைக்கப்பட்டார், அவருடைய பெயர் என்ன என்பதை தொழிலாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்? அவரை பிடித்து ஒப்படைத்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குத் தெரிவிக்காமல், எந்த அடிப்படையில் அவரை பொலிசார் விடுவித்தனர்?

திசாநாயக்க அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு செயற்பாட்டாளர்கள் இன்னும் மோசமான தந்திரங்களையும் ஆத்திரமூட்டல்களையும் தயாரிக்கிறார்களா?

இந்த அவசர மற்றும் நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட வேண்டும். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் 26 ஆண்டுகால இனவாதப் போரின் போது இலங்கைப் பொலிசும் இராணுவமும் அவற்றின் மோசமான தந்திர நடவடிக்கைகளுக்குப் பேர்போனவை. இந்த ஆத்திரமூட்டல்கள் எதுவும் விசாரிக்கப்படவில்லை.

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களை 2021 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் சேவையில் முழுமையாக இணைக்கப்பட வேண்டும் என்று கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர்கள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின் போது இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதாக உறுதியளித்தனர். பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தற்போது, ஜே.வி.பி.யின் தொழிற்சங்கங்களின் உயர்மட்ட அதிகாரியும் தற்போது இலங்கையின் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சருமான கே.டி. லால்காந்த, தேர்தல் பிரச்சாரத்தின் போது இவ்வாறு வாக்குறுதி கொடுத்த வீடியோவை பரப்பி வருகின்றனர்.

டிசம்பர் 2 ஆர்ப்பாட்டத்தின் மீதான வன்முறை பொலிஸ் தாக்குதலை பகிரங்கமாக ஆதரித்த லால் காந்தவும் ஏனைய ஜே.வி.பி. தொழிற்சங்கத் தலைவர்களும் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஏனைய தொழிலாளர்களையும் அலட்சியத்துடன் நடத்துகிறார்கள்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவரும், தற்போது பிரதி தொழில் அமைச்சருமான மஹிந்த ஜயசிங்க, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கண்டித்து, ஒரு துளி சாட்சியமும் வழங்காமல் பொலிஸ் உத்தியோகத்தர்களை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டி, பொலிஸாருக்கு பக்கபலமாக இருக்கின்றார்.

இலங்கையின் பிரதி தொழில் அமைச்சர் மகிந்த ஜயசிங்க, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளரும் ஜே.வி.பி.யின் நீண்டகால மத்திய குழு உறுப்பினரும் ஆவார் [Photo by Facebook/Mahinda Jayasinghe]

“இந்தப் போராட்டம் நடந்திருக்கக் கூடாது. அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதா என்ற பிரச்சினை எமக்கு உள்ளது” என்று ஜெயசிங்க கூறினார். 'அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்' என்ற தற்போதைய அரசியல் மந்திரத்தை அவர் மீண்டும் மீண்டும் கூறினார். ஆசிரியர் சேவைக்கான எந்தவொரு ஆட்சேர்ப்பும் போட்டிப் பரீட்சைகளுடன் ஆசிரியர்களின் சேவை நிமிடங்களின்படி நடக்க வேண்டும் என்று ஜெயசிங்க அறிவித்தார்.

சுயாதீனமாக இருப்பதாக கூறிக்கொள்ளும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளரான ஜோசப் ஸ்டாலினும் அதே நிலைப்பாட்டை எடுத்ததுடன் போட்டிப் பரீட்சை இல்லாமல் ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட வேண்டும் என்று கோரியதற்காக பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களைக் கண்டித்தார்.

போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியால் (மு.சோ.க.) கட்டுப்படுத்தப்படும் ஐக்கிய ஆசிரியர் சேவை சங்கமும், அவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதை எதிர்க்கின்றது. அந்த கோரிக்கையை அது ஆசிரியர் சேவை விதிகளை 'மீறல்' எனக் கூறிக்கொள்கின்றது. ஏனைய தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் பொலிஸ் தாக்குதல் பற்றியோ அல்லது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கைகள் பற்றியோ எதுவும் கூறாமல், அரசாங்கத்திற்கு தனது ஆதரவை சமிக்ஞை செய்துள்ளன.

2021 இல், பல்லாயிரக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகளின் நீண்டகால மற்றும் வளர்ந்து வரும் கோரிக்கைகளை தணிப்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் அரசாங்கம் சுமார் 50,000 பட்டதாரிகளுக்கு வேலைகளை வழங்கியது. இந்த நேரத்தில் 16,000 பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விளையாட்டு உட்பட ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக வேலைக்கு அமர்த்தப்பட்டாலும் சுமார் 30,000 வேலையற்ற பட்டதாரிகள் வேலையின்றி உள்ளனர்.

திசாநாயக்க டிசம்பர் 2 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்திற்குப் பின்னர் பேசிய அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கைகள் பற்றிக் குறிப்பிடுகையில், 'இதுபோன்ற சிக்கலான மற்றும் நீண்டகால பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தால் உடனடி தீர்வுகளை வழங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்' என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் வழங்கும் என்று யாரும் எதிர்பார்க்கக்கூடாது.

அரசாங்கத்தின் இழிவான பிரதிபலிப்பு, இலவசக் கல்வியை வெட்டுதல் மற்றும் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் மீதான முழு அக்கறையின்மை உட்பட, முந்தைய நிர்வாகங்களின் செலவுக் குறைப்பு சமூகத் தாக்குதல்களை ஒத்ததாகவே உள்ளது. இது தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் துரோகப் பாத்திரத்தையும் முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புமுறையை அவர்கள் சளைக்காமல் பாதுகாப்பதையுமே வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த மாதம், புதிய அரசாங்கத்தை பாராட்டிய பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள், கல்வி அமைச்சராகவும் இருக்கும் பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்தனர். இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்கீடு செய்தல், 12,000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர்களை பணியமர்த்துதல் மற்றும் பல்கலைக்கழகப் பதிவுக் கட்டணத்தை குறைத்தல் உட்பட கல்விச் செலவினங்களை அதிகரிப்பதற்கான அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்த அவர், இவை எதுவும் உடனடியாக சாத்தியம் இல்லை என்றார்.

டிசம்பர் 7 அன்று, தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டமைப்பு (CWAC) ஒரு அறிக்கையை வெளியிட்டது. பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டத்தைப் பாதுகாக்கவும், கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடக் கோருமாறும் அது தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுத்தது.

'கைது செய்யப்பட்ட நான்கு ஆசிரியர்களும் ஜனாதிபதி திசாநாயக்கவின் அரசாங்கத்தால் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் தயாரிக்கப்பட்டு வரும் வர்க்கப் போரின் முதல் பலிகடாக்கள் ஆவர் என்று நாங்கள் அறிவிக்கிறோம்” என அந்த அறிக்கை பிரகடனம் செய்தது.

'தொழிலாள வர்க்கம் இத்தகைய தாக்குதல்களை அனுமதிக்க கூடாது. சர்வதேச நாணய நிதியத்தின் இரக்கமற்ற சிக்கனத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிலையில், அரசாங்கம் விரைவில் உங்கள் மீது பாயும். எங்கள் வர்க்க சகோதர சகோதரிகளில் ஒரு பிரிவினர் மீதான தாக்குதலானது நம் அனைவரின் மீதான தாக்குதலாகும்!

தொழிலாளர் நடவடிக்கை குழுவின் கூட்டமைப்பின் அறிக்கை மேலும் கூறியதாவது: “தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க இந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களை நம்பியிருக்க முடியாது. அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்கள் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்று ஒருங்கிணைந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் பொய்யாகக் கூறுகிறது. இது ஒரு அரசியல் முட்டுக்கட்டையாக இருப்பதோடு தோல்விக்கே வழிவகுக்கும். இதனால்தான் தொழிலாளர்கள் தங்கள் வேலைத் தளங்கள், தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்கள் மற்றும் பெருந்தோட்டங்களிலும் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும். தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் முதலாளித்துவ கட்சிகள் இந்த நடவடிக்கை குழுக்களில் அனுமதிக்கப்பட கூடாது.”

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதல், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் சமூக நிலைமைகள் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும் என்பதை விளக்கியுள்ள அந்த அறிக்கை, பின்வரும் கோரிக்கைகளுக்காகப் போராட தொழிலாளர்களை வலியுறுத்தியது:

* சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கனத் திட்டம் வேண்டாம்!

* தனியார்மயமாக்கல் அல்லது மறுசீரமைப்பு வேண்டாம்! அரசுக்குச் சொந்தமான அனைத்து நிறுவனங்களையும் அவற்றின் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும்!

* வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டாம்!

தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டமைப்பு, இந்த முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாட, டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இணையவழி கூட்டமொன்றை தமிழில் நடத்துகிறது. உங்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கூட்டத்திற்காக இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்.

https://us06web.zoom.us/meeting/register/tZ0ocOCopz4rHtazw33JObTrmj3BB4ZpE9Sp#/registration

Loading