முன்னோக்கு

புலம்பெயர்ந்தவர்களில் தொடங்கி, பாரிய ஒடுக்குமுறைக்கான திட்டவரைவை ட்ரம்ப் முன்வைக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஒரு மாதத்திற்கு முன்னர், 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், அவரது முதல் விரிவான ஒளிபரப்பு நேர்காணலில், புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான பாரிய அடக்குமுறைகள், அரசியல் எதிரிகள் மீதான துன்புறுத்துதல்கள், அமெரிக்காவின் பெருநிறுவனங்கள் மற்றும் அவரது சக கோடீஸ்வரர்களுக்கான வரி குறைப்புக்கள், மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றின் ஒரு நிகழ்ச்சி நிரலை கோடிட்டுக் காட்டினார்.

NBC நியூஸின் கிறிஸ்டன் வெல்கரின் (Kristen Welker) “பத்திரிகையாளர்களை சந்தியுங்கள்” என்ற நிகழ்ச்சியில் இடம்பெற்ற இந்த நேர்காணல் கடந்த ஞாயிறு காலை ஒளிபரப்பப்பட்டது. ட்ரம்பின் பாசிச வேலைத்திட்டத்தை “இயல்பாக்குவதற்கும்”, ஜனநாயகக் கட்சியினருடன் இருகட்சி ஒத்துழைப்புடன் நிரம்பிய வெள்ளை மாளிகையில் பாரம்பரியமான நான்கு ஆண்டு பதவிக் காலத்தை விரும்பும் ஒருவராக அவரை சித்தரிப்பதற்கும் இந்த நேர்காணல், கார்ப்பரேட் ஊடகங்களின் பெரும் புதிய முயற்சியாக அமைந்தது.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் டிசம்பர் 8, 2024 அன்று “Meet the Press” இல் கிறிஸ்டன் வெல்கரால் நேர்காணல் செய்யப்பட்டார். [Photo by NBC News]

எவ்வாறாயினும், ட்ரம்பின் கருத்துக்களின் உண்மையான உள்ளடக்கமானது, வெல்கரின் கேள்விகளின் அருவருப்பான தொனி மற்றும் முன்னாள் ஜனாதிபதி வேண்டுமென்றே குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த முறையில் பேசிய விதம் ஆகிய இரண்டையும் பொய்யாக்குகிறது. அவர் தனது நிர்வாகத்தின் “முதல் நாளில்” அமெரிக்க அரசியலமைப்பை மீறும் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தார். ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க காங்கிரஸ் கட்டிடமான Capitol ஐ தாக்கிய நூற்றுக்கணக்கான பாசிச குண்டர்களை விடுவித்து, மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும், அவர்களது குடும்பங்களையும் சுற்றி வளைப்பதற்கு ட்ரம்ப் அழைப்புவிடுத்தார்.

அவரது நான்காண்டு பதவிக்காலத்தில் ஆவணமற்ற அனைத்து 11 மில்லியன் புலம்பெயர்ந்தோரையும் (தற்போதைய மொத்த மதிப்பீடு) நாடு கடத்துவாரா என்ற ஒரு நேரடி கேள்விக்கு விடையிறுக்கையில், ட்ரம்ப், “நல்லது, நீங்கள் அதைச் செய்தாக வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அது ஒரு கடினமான விடயம்—அதைச் செய்வது மிகவும் கடினமான விடயம்,” என்று பதிலளித்தார். ட்ரம்ப் அவசியப்படும் பொலிஸ்-இராணுவ அணிதிரட்டலின் அளவைக் குறித்து பேசினார். ஆனால், சட்டபூர்வ புலம்பெயர்வு அந்தஸ்து இல்லாமல் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அனுபவிக்கும் துயரங்களைக் குறித்து அவர் பேசவில்லை.

இந்த ஆவணமற்ற தொழிலாளர்களின் குழந்தைகளான மில்லியன் கணக்கான அமெரிக்க குடிமக்களும் நாட்டிலிருந்து அகற்றப்படுவார்கள். கலப்பு குடியேற்ற அந்தஸ்து கொண்ட 4 மில்லியன் குடும்பங்களைப் பற்றி கேட்டதற்கு ட்ரம்ப், இதனை அவர்கள் தேர்வு செய்யலாம், ஆனால் அவர்களது குழந்தைகள் தங்கள் தந்தை மற்றும் தாய்மார்களுடன் இருக்க விரும்பினால், அவர்களுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சிடுமூஞ்சித்தனமாக கூறினார்.

அமெரிக்காவில் பிறக்கும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்கான பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்யும் நிர்வாக உத்தரவிலும் அவர் கையெழுத்திடுவார். அத்தகைய நிர்வாக உத்தரவு அமெரிக்க அரசியலமைப்பை மீறும் என்றாலும், ட்ரம்ப் “சரி, நாங்கள் அதை மாற்ற வேண்டும். இதற்காக, நாம் மீண்டும் மக்களிடம் செல்ல வேண்டியிருக்கலாம். ஆனால், நாம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதைக் கொண்ட ஒரே நாடு நாங்கள் தான் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று கூறினார்.

பிறப்புரிமைக் குடியுரிமையை ஒழிப்பது என்பது 1861-65 உள்நாட்டுப் போரின் விளைவாக நிறைவேற்றப்பட்ட மூன்று சிவில் உரிமைகள் திருத்தங்களில் ஒன்றான 14வது திருத்தத்தை ரத்து செய்வதைக் குறிக்கும். திருத்தத்தின் பிறப்புரிமைக் குடியுரிமைப் பிரிவு, விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுக்கு குடியுரிமையின் உரிமைகளை மறுப்பதை முன்னாள் அடிமை மாநிலங்கள் நிரந்தரமாகத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது. அமெரிக்காவில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை உரிமைகளைத் தடுக்கும் முயற்சி, அடிமைகளுக்கு குடியுரிமை உரிமைகளை மறுத்த உச்ச நீதிமன்றத்தின் 1857 ட்ரெட் ஸ்காட் எதிர் சாண்ட்ஃபோர்ட் (Dred Scott v. Sandford) தீர்ப்பின் அடிப்படையிலான சமத்துவ-எதிர்ப்புக் “கோட்பாடுகளுக்கு” திரும்புவதைக் குறிக்கும்.

ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை புலம்பெயர்ந்தவர்கள் குறித்த பிற்போக்குத்தனமான பொய்களைக் கொண்டு ட்ரம்ப் நியாயப்படுத்தினார். “சிறைகளில் இருந்தும் மனநல காப்பகங்களிலிருந்தும் மக்கள் எமது எல்லைக்குள் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள்” என்றும், பைடென் நிர்வாகத்தின் போது 13,000 புலம்பெயர்ந்த கொலையாளிகள் தெருக்களில் விடப்பட்டனர் என்றும் புலம்பெயர்ந்த கும்பல்கள் அமெரிக்க நகரங்களை கைப்பற்றியுள்ளன என்றும் அதன் விளைவாக, குற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன என்றும் (நவீன சகாப்தத்தில் வரலாற்று ரீதியாக இவை குறைந்த மட்டத்திலே உள்ளன) பொய்யாக வலியுறுத்தினார்.

வெல்க்கர் இந்த பொய் மூட்டைகளை சவால் செய்வது ஒருபுறம் இருக்க, அதைத் தடுத்து நிறுத்துவதற்கு கூட கிட்டத்தட்ட எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் வெளித்தோற்றத்தில் ஒரு மாயையான, பொய்யர் என்ற வெளிப்படையான உண்மையையும் அவர் சுட்டிக்காட்டவில்லை. அமெரிக்கா தொடர்ந்து நேட்டோ அங்கத்துவ நாடாக இருக்கும் என்பது உட்பட இன்றியமையாத வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகளில் ட்ரம்பிடம் இருந்து வாக்குறுதிகளைப் பெறவும், மற்றும் அவர் அங்கம் வகிக்கும் உயர்மட்ட நடுத்தர வர்க்க, ஜனநாயகக் கட்சி-சார்பு சமூக அடுக்கின் கவலைகளுக்கு குரல் கொடுக்கவும் அவர் முயன்றார். மேலும், அஞ்சல் மூலம் கருக்கலைப்பு மாத்திரைகளின் விற்பனையைத் தடை செய்ய மாட்டோம் என்ற வாக்குறுதியைப் பற்றி ட்ரம்ப்பிடம் அவர் நேரடியாகக் கேட்டபோது, அந்த உறுதிமொழியைக் காப்பாற்றுவதற்கான அவரது உடன்பாட்டில் திருப்தி அடைந்ததாகத் தோன்றியது.

பைடென் மற்றும் கமலா ஹாரிஸ் போன்ற முன்னணி ஜனநாயகக் கட்சியினரும், பில் பார் மற்றும் லிஸ் செனி போன்ற குடியரசுக் கட்சியின் முன்னாள் ஆதரவாளர்களும் உட்பட, அவரது அரசியல் எதிரிகளை வழக்குத் தொடுத்து சிறையில் அடைப்பதற்கான பிரச்சாரத்தின் போது அவர் மீண்டும் மீண்டும் மிரட்டல் விடுத்தது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், FBIயும் நீதித்துறையும் மற்றும் அவரால் பரிந்துரைக்கப்பட்ட பாம் பாண்டி மற்றும் காஷ் பட்டேல் ஆகியோரால் இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படும் என்ற போலித்தனத்தின் பின்னால் ட்ரம்ப் ஒழிந்துகொண்டார்.

சமீபத்தில் வெளியான ஒரு புத்தகத்தின் பின்னிணைப்பாக 60 பேரின் “எதிரிகள் பட்டியல்” பட்டேலிடம் உள்ளது. இந்த அதிகாரிகள் மீது பட்டேல் விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு, ட்ரம்ப், “இல்லை, அதாவது, அவர் நினைத்ததைச் செய்யப் போகிறார். அவர்கள் யாரையாவது நேர்மையற்றவர், ஊழல்வாதி அல்லது ஊழல் அரசியல்வாதி என்று நினைத்தால், அவர்கள் அவ்வாறு செய்யக் கடமைப்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

பைடெனை விசாரிக்க சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பதற்கான தனது கடந்தகால அழைப்பைக் குறைத்து மதிப்பிடும் அதே வேளையில், ட்ரம்ப் தனது உண்மையான விஷத்தை ஜனவரி 6, 2021 அன்று அவர் செய்த சதிப்புரட்சியை விசாரித்த பிரதிநிதிகள் சபை தேர்வுக் குழுவின் உறுப்பினர்களுக்காக ஒதுக்கினார். இந்தக் குழுவின் குடியரசுக் கட்சியின் இணைத் தலைவரான லிஸ் செனி சிறைக்குச் செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று நேரடியாகக் கேட்டதற்கு, “குழுவில் உள்ள அனைவரும் அவர்கள் செய்ததற்கு அந்த விதிக்கு தகுதியானவர்கள்” என்று ட்ரம்ப் பதிலளித்தார்.

அதே நேரத்தில், ஜனவரி 6, 2025 அன்று பதவியேற்கும் நாளில், தண்டனை பெற்ற ஜனவரி 6 கலவரக்காரர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாக ட்ரம்ப் கூறினார்.

சமூக பாதுகாப்பு, மருத்துவப் பராமரிப்பு மற்றும் மருத்துவ உதவி ஆகியவை வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களின் விடயத்தில் மேசைக்கு வெளியே உள்ளன என்றும், நலன்புரி மட்டங்களில் குறைப்போ அல்லது ஓய்வூதிய வயதை உயர்த்துவது போன்ற தகுதி தேவைகளை இறுக்குவதோ இருக்காது என்றும் ட்ரம்ப் அறிவித்ததே இந்த ஒட்டுமொத்த நேர்காணலின் மிகப்பெரிய பொய்யாக இருந்தது. துல்லியமாக, பில்லியனர்களான எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசுவாமி ஆகியோரை அரசாங்க செயல்திறனுக்கான ஆலோசனைத் துறைக்கு ட்ரம்ப் நியமித்ததன் நோக்கமே, அமெரிக்க கூட்டாட்சி செலவினங்களை வருடத்திற்கு 2 டிரில்லியன் டாலர்களாக வெட்டித் தள்ளுவதற்காகும். இத்தொகை, பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்காகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய சாம்ராஜ்யத்தை பராமரிப்பதற்கான இராணுவச் செலவுகள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் கோடீஸ்வரர்களுக்கு வழங்கப்படும் வட்டி கொடுப்பனவுகள் ஆகியவை இரு முதலாளித்துவக் கட்சிகளாலும் தீண்டத்தகாததாகக் கருதப்படுகின்றன. அதேநேரம், கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பிற உள்நாட்டு சமூகச் செலவினங்களை கிட்டத்தட்ட அகற்றி, உரிமைத் திட்டங்களைக் குறைத்து, அதிகளவிலான வெட்டுக்களைச் செய்வதே, அவர்களுக்கான ஒரே வழியாகும்.

தனது முதல் 100 நாட்களுக்கான ஒரேயொரு வரவு-செலவு திட்டக்கணக்கு முன்னுரிமையை மட்டுமே பெயரிட்டுள்ள ட்ரம்ப், அடுத்த ஆண்டு காலாவதியாகின்ற, 2017 இல் அவர் முன்தள்ளிய செல்வந்தர்களுக்கான வரி விலக்குகளை புதுப்பிக்கின்றார். அதே நேரம், சமூகச் செலவினங்கள் மீதான வெட்டுக்களின் மூலம், பெரும் பணக்காரர்களின் பாக்கெட்டுகளில் டிரில்லியன்கணக்கான டாலர்களைக் குவிப்பதுடன், தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், குறிப்பாக ஏழைகளுக்கான சமூகத் திட்டங்களைப் பேரழிவிற்கு உட்படுத்துவதுடன், செலவின சுமையை அவர்கள் மீது சுமத்த வேண்டியிருக்கும்.

நிர்வாகத்தில், ஒரு டசினுக்கும் அதிகமான பில்லியனர்கள் உயர்மட்ட பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதோடு, பொருளாதாரக் கொள்கை மற்றும் வரிகள் தொடர்பான ஒவ்வொரு முக்கிய பதவியையும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள நிலையில், ட்ரம்ப் ஏற்கனவே அவரது அமைச்சரவையின் கலவை மூலமாக இதை அவரது முன்னுரிமையாக சமிக்ஞை செய்துள்ளார்.

இந்த வர்க்க இலக்குகள், குறிப்பாக வரிவிதிப்புகள் பிரச்சினையில் ஒருங்குவிந்த, தேசியவாத மற்றும் ஜனரஞ்சக சுலோகங்களால் மெல்லிய அளவில் மட்டுமே மறைக்கப்படுகின்றன. மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பெரும் புதிய வரிகளை விதிப்பது லாபகரமானதாக இருக்கும் என்று ட்ரம்ப் வாதிடுகிறார். “அது நம்மைப் பணக்காரர்களாக்கப் போகிறது,” என்று அவர் பெருமையடித்துக் கொள்கிறார்.

அமெரிக்க வர்த்தக பற்றாக்குறைகளைக் குறிப்பிட்டு, “கனடாவிற்கு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் மானியம் வழங்குகிறோம், நாங்கள் மெக்ஸிகோவிற்கு கிட்டத்தட்ட $300 பில்லியன் டாலர் மானியம் வழங்குகிறோம். இதை நாம் செய்யக்கூடாது-இந்த நாடுகளுக்கு நாம் ஏன் மானியம் கொடுக்க வேண்டும்? நாங்கள் அவர்களுக்கு மானியம் வழங்கப் போகிறோம் என்றால், அவர்கள் ஒரு மாநிலமாக மாறட்டும்” என்று அறிவித்தார்.

இந்தக் கருத்துக்கள் வெறுமனே பைத்தியக்காரத்தனமான பிதற்றல்கள் அல்ல. இவை, கைப்பற்றுதல், இணைத்தல் மற்றும் சுய-செல்வ வளப்படுத்தலுக்கான அகோரப் பசியை வெளிப்படுத்துகின்றன. இது ஏகாதிபத்தியத்தின் மரண ஓலத்தில், குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிறப்பியல்பில் உள்ளடங்கியுள்ளது.

ஜனநாயகக் கட்சி மற்றும் பெருநிறுவன ஊடகங்கள் உட்பட ஆளும் வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளும் ட்ரம்புக்கு முன்னால் மண்டியிடுவதானது, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும், மேலும் சர்வாதிகாரம் மற்றும் உலகப் போரை நோக்கி அமெரிக்க முதலாளித்துவம் திரும்புவதை எதிர்க்க வேண்டும் என்பதை மட்டுமே உறுதிப்படுத்துகிறது.

Loading