முன்னோக்கு

இனப்படுகொலையின் நோக்கம்: சர்வதேச மன்னிப்புச் சபை காஸா இனப்படுகொலையில் உள்ள தீய எண்ணத்தை அம்பலப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த புதன்கிழமை அன்று, சர்வதேச மன்னிப்புச் சபை 296 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கையை வெளியிட்டு இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக முடிவு செய்துள்ளது. “காஸாவிலுள்ள பாலஸ்தீனியர்களை அழிக்கும் நோக்கம்” மட்டுமே, இஸ்ரேல் மேற்கொண்டுவரும் பாரிய படுகொலைகள், கட்டாய இடப்பெயர்வுகள், மேலும் காஸாவிலுள்ள பாலஸ்தீனியர்களை வேண்டுமென்றே பட்டினி போடப்படுவதன் “அளவையும் வீச்சையும் விளக்க முடியும்” என்று இந்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்ட் 22, 2024 வியாழக்கிழமை, டெய்ர் அல்-பலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் காஸா பகுதி மீதான இஸ்ரேலிய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட உறவினருக்கு பாலஸ்தீனிய பெண்கள் துக்கம் அனுசரிக்கின்றனர். [AP Photo/Abdel Kareem Hana]

அக்டோபர் 2023 முதல், உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, காஸாவில் இஸ்ரேல் குறைந்தபட்சம் 44,580 பேரைக் கொன்றுள்ளது. மேலும், இறப்பு எண்ணிக்கை 186,000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் என்று தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. 1.9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அல்லது காஸாவின் 90 சதவீத மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த மாதம் ஒரு அறிக்கையில், காஸாவில் சரிபார்க்கப்பட்ட இறப்புகளில் 70 சதவீதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில், பாரிய படுகொலைகள் நனவாக இனப்படுகொலை நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளன என்பதை உறுதியாக நிறுவியுள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்டதன் மூலம், சர்வதேச மன்னிப்புச் சபை, இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக முறைப்படி குற்றம் சாட்டிய முதல் பெரிய சர்வதேச மனித உரிமை அமைப்பு ஆனது.

முக்கிய மனித உரிமை அமைப்புகள் இந்த வலியுறுத்தலைச் செய்ய இவ்வளவு காலம் எடுத்தது என்றால், இந்தக் கண்டுபிடிப்பின் பரந்த தாக்கங்கள்தான் அதற்குக் காரணமாகும். சர்வதேச மன்னிப்புச் சபை எதைச் சொன்னாலும் எழுதினாலும், இஸ்ரேலை இனப்படுகொலை நோக்கத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டுவது உலக ஜனநாயக நாடுகளின் தலைவர்களை (அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்) குற்றஞ்சாட்டுவதற்கு ஒப்பாகும். இவர்கள் மிக உச்சமான சர்வதேச குற்றங்களில் ஒன்றை மேற்கொள்வதற்கு நனவாக உடந்தையாக இருந்து வருகின்றார்கள்.

நவம்பர் 27 அன்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு மந்திரி யோவ் கெலண்ட் ஆகியோருக்கு கைது ஆணைகளைப் பிறப்பித்தது. “போரின் ஒரு வழிமுறையாக பாலஸ்தீனியர்களை பட்டினியால் வாட்டி வதைத்தது ஒரு போர்க்குற்றமாகும். மேலும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களான கொலை, துன்புறுத்தல் மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட்டதாக” இந்த இருவர் மீதும் ICC குற்றம்சாட்டியுள்ளது. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது என்றும், அனைத்து நாடுகளும் இந்த ஆக்கிரமிப்புக்கு ஒத்துழைப்பதை நிறுத்துமாறும் சர்வதேச நீதிமன்றம் (ICJ) ஜூலை 19 அன்று அறிவித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 9, 1948 அன்று, 39 நாடுகள் இனப்படுகொலை குற்றத்தைத் தடுக்கும் மற்றும் தண்டனை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இனப்படுகொலையை உத்தியோகபூர்வமாக ஒரு குற்றமாக ஆக்கிய இந்த ஒப்பந்தம், இந்தக் குற்றத்தை புரிந்தவர்கள் மீதான அதன் தடையை அமல்படுத்தியது. இது உலகின் பெரும்பாலான அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டது.

ஐரோப்பாவில் யூதர்களை அழித்தொழிக்க நாஜி ஜேர்மனியின் தலைவர்களின் திட்டமிட்ட மற்றும் முறையான முயற்சியான இனப்படுகொலை, 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்களின் தொழில்முறை படுகொலைக்கு வழிவகுத்ததுக்கு, இந்த ஒப்பந்தம் ஒரு விடையிறுப்பாக இருந்தது. யூத இனப்படுகொலை மற்றும் ஒட்டோமான் பேரரசின் கீழ் முன்பு இடம்பெற்ற ஆர்மேனியர்கள் மீதான இனப்படுகொலை ஆகிய இரண்டையும் விவரிக்க, “இனப்படுகொலை” என்ற வார்த்தையை உருவாக்கிய ரபேல் லெம்கினின் எழுத்துக்களை இந்த ஒப்பந்தம் முறைப்படுத்தியது.

ஐரோப்பாவை வெல்ல ஒரு ஆக்கிரமிப்பு போரைத் தொடங்க நாஜி ஜேர்மனியின் தலைவர்களின் சதியை அம்பலப்படுத்தி வழக்குத் தொடர்ந்த நூரெம்பேர்க் தீர்ப்பாயத்தின் தலைமை அமெரிக்க வழக்கறிஞர் ரோபர்ட் எச். ஜாக்சனின் சட்டக் குழுவுடன் லெம்கின் நெருக்கமாக பணியாற்றியிருந்தார்.

சர்வதேச சட்டத்தின் கீழ், இனப்படுகொலைக் குற்றம் என்பது, ஒரு குறிப்பிட்ட தேசிய, இன அல்லது இனக்குழு உறுப்பினர்களை உடல் ரீதியாகக் கொலை செய்வது மட்டுமல்ல. ஆனால், இத்தகைய செயல்கள் இனப்படுகொலையாக அமைவதற்கு, இலக்கு வைக்கப்பட்ட குழுவை அழிக்கும் நோக்கத்துடன் குற்றவாளிகளால் அவை செய்யப்பட வேண்டும். மற்றும் அந்தக் குழுவிற்கு எதிராக இயக்கப்பட்ட ஒத்த நடத்தையின் வெளிப்படையான வடிவத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இந்த இரண்டு கூறுகளும் காஸாவில் போதுமாக உள்ளன என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை நிறுவியுள்ளது.

இஸ்ரேலுக்கு பிரதான நிதி, இராணுவ மற்றும் அரசியல் ஆதரவை வழங்கிவரும் அமெரிக்க அரசாங்கமானது, நெதன்யாகு அரசாங்கம் காஸாவில் ஒரு இனப்படுகொலையை நடத்துகிறது என்பதை மறுத்து வருகிறது. டிசம்பர் 2023 இல், ஜனாதிபதி ஜோ பைடென் இஸ்ரேல் “கண்மூடித்தனமான குண்டுவீச்சை” நடத்துவதாக குற்றம் சாட்டினார் - இந்த அறிக்கையை வெள்ளை மாளிகை உடனடியாக பின்வாங்க முயன்றது. ஆனால், காஸா மீது இஸ்ரேல் அதன் தாக்குதலை தொடங்கியதில் இருந்து 14 மாதங்களில், காஸாவைத் தாக்குவதில் இஸ்ரேல் போதிய அக்கறை காட்டவில்லை என்றாலும், பாலஸ்தீனிய குடிமக்களை கொல்லும் எண்ணம் அதற்கு இல்லை என்று அமெரிக்க அரசாங்கம் நூற்றுக்கணக்கான முறை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை இந்த வாதத்தை ஒரு வேண்டுமென்றே கூறப்பட்ட மற்றும் அபத்தமான பொய் என்பதை அம்பலப்படுத்துகிறது. இந்த அறிக்கை, இஸ்ரேலிய அரசின் ஒவ்வொரு மட்டத்திலும், ஜனாதிபதியில் இருந்து முக்கிய காபினெட் தலைவர்கள், உள்ளூர் அதிகாரிகள், இஸ்ரேலிய துருப்புக்களின் அறிக்கைகள், எழுத்துக்கள் மற்றும் சாட்சியங்கள் வரை டசின் கணக்கான அறிக்கைகளை தொகுத்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையிலிருந்து ஒரு பகுதி [Photo]

சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கையை பின்வருமாறு விளக்குகிறது:

7 அக்டோபர் 2023 மற்றும் 30 ஜூன் 2024 க்கு இடையில் இஸ்ரேலிய அரசாங்க அதிகாரிகள், உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அளித்த 102 அறிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. அவை பாலஸ்தீனர்களை மனிதாபிமானமற்றவர்களாக சித்தரிக்கின்றன அல்லது அவர்களுக்கு எதிரான சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலை செயல்கள் அல்லது பிற குற்றங்களுக்கு அழைப்பு விடுத்தன அல்லது நியாயப்படுத்தின. இவற்றில், 7 அக்டோபர் 2023 மற்றும் 30 ஜூன் 2024 க்கு இடையில் இஸ்ரேலின் போர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரவைகளின் உறுப்பினர்கள், உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இஸ்ரேலின் ஜனாதிபதி ஆகியோரால் குறிப்பாக செய்யப்பட்ட 22 அறிக்கைகளை அது அடையாளம் கண்டுள்ளது மற்றும் இனப்படுகொலை செயல்களுக்கு அழைப்பு விடுப்பதாகவோ அல்லது அதனை நியாயப்படுத்துவதாகவோ தோன்றியது.

இந்த அறிக்கைகள் காஸாவை அழிப்பதையும் அதன் மக்களை நிர்மூலமாக்குவதையும் நடத்திய படையினரின் நடவடிக்கைகளுடன் முற்றிலும் மெய்ப்பித்துக் கொள்கின்றன.

இராணுவத்தின் மீதான நடத்தையில் இந்த அறிக்கைகளின் சாத்தியமான தாக்கத்தை மேலும் பரிசீலிக்க, சர்வதேச மன்னிப்புச் சபை 62 காணொளிகள், ஒலிப்பதிவுகள் மற்றும் இணையத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களை ஆராய்ந்தது. இஸ்ரேலிய சிப்பாய்கள் காஸாவை அழிக்க அழைப்பு விடுப்பது அல்லது காஸாவில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு மறுப்பது அல்லது பாலஸ்தீனிய சொத்துக்கள் அழிக்கப்படுவதைக் கொண்டாடுவது ஆகியவற்றை அவை எடுத்துக்காட்டின. மேலும் அவை எந்த அளவிற்கு மூத்த அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகளால் வழங்கப்பட்ட அறிக்கைகளை எதிரொலித்தன என்பதையும் ஆராய்ந்தன.

இந்த அறிக்கைகளின் அடிப்படையில்,

இனப்படுகொலை நோக்கம் மட்டுமே நியாயமான முடிவு என்று சர்வதேச மன்னிப்புச் சபை கண்டறிந்துள்ளது. காஸாவில் இஸ்ரேலின் நோக்கமும், இலக்கும் காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை அழிப்பதுதான் என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. மேலும் நியாயமான மாற்று விளக்கம் எதுவும் இல்லை. இஸ்ரேல் ஒரு ஆயுத மோதலின் பின்னணியில் செயல்படுவதால், அது வெளிப்படையாக இராணுவ இலக்குகளை கொண்டுள்ளது. இது, இனப்படுகொலை நோக்கத்துடன் கைகோர்த்துச் செல்லலாம் அல்லது பாலஸ்தீனியர்களின் அழிவுக்கு சேவை செய்யலாம். ஆனால், இந்த இராணுவ இலக்குகள் இஸ்ரேலின் தற்போதைய சட்டவிரோத நடவடிக்கைகளின் அளவையும் வீச்சையும் விளக்க போதுமானவை அல்ல. காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை அழிக்கும் நோக்கம் மட்டுமே அதற்கு இருக்கிறது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையிலிருந்து ஒரு பகுதி [AP Photo]

இந்தக் கட்டத்தில், சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை விட்டுச் செல்லும் இடத்தில் தொடர வேண்டியது அவசியம். இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகளை சர்வதேச மன்னிப்பு சபை எந்த சட்டபூர்வ சோதனைகளுக்கு உட்படுத்துகிறதோ அதே சட்ட சோதனைகளுக்கு அமெரிக்க தலைவர்களின் அறிக்கைகள் உட்படுத்தப்படும்போது என்ன நடக்கும்?

சர்வதேச மன்னிப்புச் சபை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விவிலியக் குறிப்புகளுக்கு பெரும் முக்கியத்துவத்தை அளித்தது. இது, விவிலிய புராணக் கதைகளில் வரும் “அமலேக்”, பழங்குடி மக்களை புராண மன்னர் டேவிட் மூலம் அழிக்கப்பட்டதை குறிக்கிறது.

கடந்த அக்டோபரில், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், பாலஸ்தீனிய குடிமக்கள் மீது இஸ்ரேலின் படுகொலையை நியாயப்படுத்தினார். “அவர்கள் பொதுமக்களால் பாதுகாக்கப்படுவதை ஹமாஸ் உறுதிசெய்கிறது” என்று கூறிய அவர், “நீங்கள் உங்களைப் பாதுகாக்க விரும்பினால் பொதுமக்களைக் கொல்ல அவர்கள் உங்களை கட்டாயப்படுத்துவார்கள்” என்று மேலும் தெரிவித்தார்.

இதன் பின்னர், அவர் டேவிட் மன்னரின் கட்டுக்கதையை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் அளவிற்கு சென்றார். “நல்லது, அவர்களுக்காக [பாலஸ்தீனியர்களுக்கு] எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. அவர்களின் நம்பிக்கை [இஸ்லாம்] இருப்பதற்கு முன்பே அவர்கள் (இஸ்ரேலியர்கள்) முதலில் அங்கு இருந்தனர். தாவீது ராஜாவின் காலத்தில் அவர்கள் இருந்தனர், தெற்கே உள்ள பழங்குடியினர் யூதேயா மற்றும் சமாரியாவைக் கொண்டிருந்தனர்” என்று கிளிங்டன் குறிப்பிட்டார்.

தாவீது ராஜாவின் இருப்பை வலியுறுத்தும் அதே விவிலிய நூல்கள், அமலேக்கியருக்கு எதிரான அவரது படையெடுப்பில், “தாவீது தேசத்தைத் தாக்கினார், ஆணையும் பெண்ணையும் உயிருடன் விடவில்லை, போய் அமலேக்கை முறியடி, ஆணையும் பெண்ணையும், சிசுக்களையும் பாலூட்டும் குழந்தைகளையும் கொன்று போடுங்கள்” என்ற யாவேயின் விவிலியக் கட்டளையின்படி தாவீது செயல்பட்டார்.

டிசம்பர் 2023 இல், செனட்டர் லிண்ட்சே கிரஹாம் இஸ்ரேல் காஸாவில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை எழுப்பினார். மேலும், பொதுமக்களைக் கொல்ல வெளிப்படையாக வாதிட்டார். “இவர்கள் ஒரு தீவிரமயப்பட்ட மக்கள்தொகையினர்,” என்று கிரஹாம் கூறினார். “நான் அப்பாவி மக்களைக் கொல்ல விரும்பவில்லை, ஆனால் இஸ்ரேல் ஹமாஸை மட்டுமல்ல, ஹமாஸைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்பையும் எதிர்த்துப் போராடுகிறது” என்று கூறினார்.

இந்த அறிக்கைகளும் அப்பட்டமாக போர்க்குற்றங்களை ஆதரிப்பது மட்டுமல்ல, இனப்படுகொலை நோக்கத்தின் பிரகடனங்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

பைடென், மக்ரோன், ஸ்டார்மர், ஷொல்ஸ் மற்றும் இஸ்ரேலுக்கு உடந்தையாக இருக்கும் ஏனைய அரசாங்கத் தலைவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்பதே சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் இருந்து வரும் ஒரே தர்க்கரீதியான அனுமானமாகும்.

பாரிய படுகொலைக்கான இந்த தூண்டுதல் எங்கிருந்து வருகிறது? 2008 ஆம் ஆண்டு வெளியான பேரரசு, காலனி, இனப்படுகொலை: முக்கிய வார்த்தைகள் மற்றும் வரலாற்றின் தத்துவம் (Empire, Colony, Genocide: Keywords and the Philosophy of History) என்ற புத்தகத்தில், இனப்படுகொலை அறிஞர் ஏ. டிர்க் மோசஸ் (A. Dirk Moses), யூத இனப்படுகொலைக்கு விடையிறுப்பாக உருவாக்கப்பட்டதற்கு பதிலாக, “[லெம்கின்] திட்டமிடப்பட்ட இனப்படுகொலையின் உலகளாவிய வரலாற்றில் ஐரோப்பிய காலனித்துவ வழக்குகளும் முக்கியமாக இடம்பெற்றன” என்று விளக்குகிறார். இவற்றில் “அமெரிக்க இந்தியர்களுக்கு எதிரான இனப்படுகொலை”, அத்துடன் இன்கான்கள் மற்றும் அஸ்டெக்குகளுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் “பெல்ஜிய காங்கோ” ஆகியவையும் அடங்கும்.

இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இனப்படுகொலை என்பது, கார்ல் மார்க்ஸின் வார்த்தைகளில், “ஒவ்வொரு துளையிலிருந்தும் இரத்தம் மற்றும் அழுக்கு சொட்ட” உலகிற்கு வரும் முதலாளித்துவத்தின் அனைத்து கொலைகார மரபுகளின் பாரிய, செறிவூட்டப்பட்ட மற்றும் தொழில்துறை அளவிலான வெளிப்பாடாகும்.

ஏகாதிபத்திய சக்திகள், ஜனாதிபதி ஜோ பைடெனின் வார்த்தைகளில், ஒரு “புதிய உலக ஒழுங்கை” பிரகடனப்படுத்தியுள்ளன, “நாங்கள் அதை வழிநடத்துவோம்” என்று அவர் மேலும் கூறுகிறார். இந்த புதிய உலக ஒழுங்கு என்பது, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காணப்படாத வன்முறையின் மூலம் திணிக்கப்பட்ட அப்பட்டமான காலனித்துவ மேலாதிக்கத்திற்கு திரும்புவதாகும். காஸா இனப்படுகொலையானது, ஒரு விபத்தோ அல்லது பிறழ்ச்சியோ அல்ல. மாறாக, ஏகாதிபத்திய சக்திகளால் உலகை மறுபங்கீடு செய்வதற்கான போராட்டத்தின் திட்டமிட்ட மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட வெளிப்பாடு ஆகும்.

இனப்படுகொலையை “ஜனநாயக” அரசுகள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வது ஒரு திருப்புமுனையை குறிக்கிறது. ஏகாதிபத்திய சக்திகள் ஜனநாயக முகமூடியை அணிந்துகொண்டு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் ஜனநாயக மரபுகளைப் பாதுகாப்பதாக உரிமை கோரும் காலம் முடிந்துவிட்டது. அவர்கள் யார் என்பதை உலகுக்குக் காட்டி வருகின்றனர்: அவர்கள் இரத்தவெறி கொண்ட கொலைகாரர்கள் மற்றும் கழுத்தை அறுக்கும் கும்பல்கள்.

புறநிலை சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள், அரசியலில் அவற்றின் பிரதிபலிப்பைக் காண காலம் எடுக்கும் என்பதை வரலாறு கற்பிக்கிறது. ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யும்போது, விளைவுகள் பூமியை உலுக்குகின்றன. காஸா இனப்படுகொலையை இழைப்பதில் ஏகாதிபத்திய சக்திகளின் பாத்திரம், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு சக்திவாய்ந்த உந்துசக்தியாக இருக்கும்.

Loading