வொல்ஃப்காங் வேபர் (1949-2024): ஒரு புரட்சிகர புத்திஜீவியும் ட்ரொட்ஸ்கிசப் போராளியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஜேர்மன் பிரிவை பல ஆண்டுகளாக வழிநடத்திய வொல்ஃப்காங் வேபர் (Wolfgang Weber), நவம்பர் 16 அதிகாலையில் தமது 75 ஆவது வயதில் மறைந்தார். அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

2010 இல் சோசலிச சமத்துவக் கட்சி (SGP-Sozialistische Gleichheitspartei) இன் கட்சிக் காங்கிரஸில் வொல்ஃப்காங் வேபர் [Photo: WSWS]

வொல்ஃப்காங் தனது வாழ்வில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிச கட்சியை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணித்தார். அவர் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்திற்காக அரசியல் ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் இடைவிடாது போராடினார்.

வொல்ஃப்காங்கின் வாழ்க்கை தொடர்பான அரசியல் மதிப்பீடானது, அவரது தலைமுறை முழுவதும் எதிர்கொண்ட அடிப்படை வரலாற்று கேள்விகள் மற்றும் பணிகளின் மதிப்பீட்டிற்கு வழிவகுக்கிறது. இது முக்கியமாக புரட்சிகர மார்க்சிசத்தின் தொடர்ச்சிக்கான போராட்டமாக இருந்தது. ஸ்டாலினிசம், பாசிசம் மற்றும் பாப்லோவாதம் ஆகியவற்றால் இது கடுமையாக தாக்கப்பட்டு, வரலாற்று ரீதியாக ஒரு நூலிழையில் தொங்கியது. வொல்ஃப்காங் அரசியல் நனவு பெற்ற காலகட்டத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) மட்டுமே இது பாதுகாக்கப்பட்டு மேலும் வளர்ச்சியடைந்தது. அப்போது ஜெரி ஹீலியின் தலைமையிலான பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) அதன் முன்னணி பிரிவாக இருந்தது.

வொல்ஃப்காங்கின் வாழ்க்கையானது, பாப்லோவாதத்தால் சிதைவுற்றிருந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் அதன் ஜேர்மன் பிரிவைக் கட்டியெழுப்புவதுடன் நெருக்கமாக பின்னிப்பிணைந்துள்ளது. போருக்குப் பிந்தைய தலைமுறையைச் சேர்ந்த அவர் (அப்போது ஒரு குழந்தையாக அவர் இருந்தார்), நாஜி ஆட்சியின் விளைவுகளிலிருந்து ஒரு முக்கிய படிப்பினையை பின்னர் பெற்றுக்கொண்டார் - அதாவது மற்றொரு பேரழிவைத் தவிர்க்க, தொழிலாள வர்க்கமானது ஸ்டாலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களின் தளைகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதே அதுவாகும். இந்த இலக்கிற்காக அவர் தனது வாழ்க்கையையும், அசாதாரண அறிவுஜீவித அறிவாற்றலையும் முழுமையாக அர்ப்பணித்தார்.

போருக்குப் பிந்தைய ஜேர்மனியில் இளைமைக் காலம்

வொல்ஃப்காங் 1949 ஜூன் 6 அன்று மியூனிக்கின் (Munich) தெற்கே உள்ள ஷ்லியர்சியில் (Schliersee) பிறந்தார். அங்கு அவரது பெற்றோர்கள், தாத்தா, பாட்டி மற்றும் இரண்டு மூத்த சகோதரர்கள் போருக்குப் பின்னர் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட மியூனிக்கிலிருந்து தப்பி வந்த ஒரு நெரிசலான கோடைகால வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். அவர் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, குடும்பம் மியூனிக்கிற்கும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வுர்ஸ்பேர்க்கிற்கும் (Würzburg) குடிபெயர்ந்தது. அங்கு வொல்ஃப்காங் தனது முழுமையான பள்ளிக் கல்விப் பெற்றார். விரைவில் ஆறு உறுப்பினர்களைக் கொண்டதாக மாறவிருந்த அந்தக் குடும்பம், காப்பீட்டு முகவராக இருந்த, பின்னர் கிளை மேலாளராக உயர்ந்த அவரது தந்தையின் ஊதியத்தில், சமூக அந்தஸ்தில் குறிப்பிடத்தக்க அளவில் உயர முடியவில்லை.

வொல்ஃப்காங்கின் பள்ளிக்காலமானது போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் தாங்க முடியாத துயரங்களால் நிறைந்திருந்தது. மாணவர்களை புதிய பழிவாங்கும் போருக்குத் தயார்படுத்த விரும்பிய பழைய நாஜி பள்ளி ஆசிரியர்கள், போர் முடிந்த பிறகும் மாற்றமின்றி இருந்த தேவாலய நிறுவனம், மற்றும் குட்டி-முதலாளித்துவ வர்க்கத்தினரிடையே எங்கும் நிலவிய கம்யூனிச எதிர்ப்பு ஆகியவை அவரது குழந்தைப் பருவத்தையும் இளமைக் காலத்தையும் வடிவமைத்தன. வொல்ஃப்காங் செவ்வியல் இலக்கியப் படைப்புகளில் மாற்றுக் கருத்துக்களைத் தேடினார். குறிப்பாக, பிரெடெரிக் ஷில்லர் (Friedrich Schiller) மற்றும் தியோடர் ஸ்டார்ம் (Theodor Storm) ஆகியோரின் படைப்புகளைப் படித்தார். மேலும், கிழக்கு ஜேர்மனியில் (GDR – German Democratic Republic - ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு) இருந்து ஒலிபரப்பான இந்த எழுத்தாளர்களைப் பற்றிய வானொலி நிகழ்ச்சிகளை இரசித்தார். அங்கு அவருக்கு குடும்ப உறவுகளும் இருந்தன.

செவ்வியல் மனிதநேயவாதக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட வொல்ஃப்காங், சமூக முரண்பாடுகள் தீவிரமடைந்த 1968-ன் மே மாத காலகட்டத்தில், ஷில்லர் (Schiller), ஸ்டோர்ம் (Storm) ஆகியோரின் படைப்புகளுடன் பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht), பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka) போன்றோரின் எழுத்துக்களையும் ஆழமாக அணுகினார். அவர் மதத்திலிருந்து விலகி, விஞ்ஞானபூர்வமான நாத்திகராக மாறினார். தனது சக தலைமுறையினரைப் போலவே, கலை, இலக்கியம், தத்துவம் செழித்தோங்கிய ஜேர்மனியில் எவ்வாறு பாசிசம் தலைதூக்க முடிந்தது என்ற கேள்வியால் தொடர்ந்து உந்தப்பட்டார். இந்த வரலாற்று உண்மையை ஆளும் வர்க்கம் மூடிமறைக்க முயன்றுகொண்டிருந்த காலமாக அது இருந்தது.

குறிப்பாக, பல சித்திரவதை முகாம்களில் இருந்து எடுக்கப்பட்ட அசல் காட்சிகளை ஒன்றிணைத்த பிரெஞ்சு ஆவணப்படமான “இரவும் பனிமூட்டமும்” (Nacht und Nebel, Night and Fog) வொல்ஃப்காங்கின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது முதல் அரசியல் அனுபவங்களில் ஒன்றாக, அவர் இஸ்ரேலில் ஐஷ்மன் விசாரணையையும் (Eichmann trial) பின்னர் ஜேர்மனியில் அவுஷ்விட்ஸ் விசாரணைகளையும் (Auschwitz trials) 12 வயதில் வானொலியில் தொடர்ந்து கேட்டார். ஆனால், பள்ளியிலும் அரசியல்ரீதியாக தூய்மைப்படுத்தப்பட்ட நூலகங்களிலும் அவரது கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. நிலவிய எண்ணற்ற மனிதநேயமற்ற வெறுப்பு அல்லது சமூக-உளவியல் விளக்க மாதிரிகள் முற்றிலும் போதுமானதாக இல்லை என்று அவர் கருதினார்.

வொல்ஃப்காங் பவேரியா மாநிலத்தின் சிறந்த உயர்நிலைப் பள்ளி மாணவராகப் பட்டம் பெற்றார். இதன் காரணமாக அவர் மாக்சிமிலியனியம் (Maximilianeum) என்ற மதிப்புமிக்க உயர்கல்விக்கான உதவியைப் பெற்றார். பின்னர் ஜேர்மன் மக்களின் கல்வி (Studienstiftung des deutschen Volkes) அறக்கட்டளையிடமிருந்து திறமைக்கான உதவி மானியத்தையும் பெற்றார். அவர் மியூனிக்கில் சட்டம் பயின்றார், அங்கு பல முன்னாள் நாஜிக்களை பேராசிரியர்களாக மீண்டும் எதிர்கொண்டார். இடைநிலைத் தேர்வுக்குப் பிறகு பொருளாதாரத் துறைக்கு மாறினார்.

வொல்ஃப்காங் ஒரு ட்ரொட்ஸ்கிஸ்டாக வளர்ச்சியடைதல்

வொல்ஃப்காங் மார்க்ஸின் சிந்தனைகளை ஆழமாக கற்கத் தொடங்கினார். அதேநேரம், ஐரோப்பா முழுவதும் எழுச்சி பெற்று வந்த தொழிலாளர் இயக்கங்களை நுணுக்கமாக அவதானித்தார். எனினும், தேசிய சோசலிசம் எவ்வாறு ஜேர்மனியில் ஆதிக்கம் செலுத்த முடிந்தது என்ற அவரது அடிப்படைக் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. 1971 அக்டோபரில், பிரிட்டனில் கல்விகற்கும் போது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவான சோசலிச தொழிலாளர் கழகத்துடன் (SLL) தொடர்பு கொண்டபோதுதான் அவருக்கு திருப்திகரமான விளக்கம் கிடைத்தது.

சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) நூல்களின் மேசையில் வொல்ஃப்காங் வாங்கிய முதல் புத்தகங்களில் ஒன்று லியோன் ட்ரொட்ஸ்கியின் ஜேர்மனி பற்றிய எழுத்துக்கள் ஆகும். இவை அதே ஆண்டில் முதன்முறையாக ஜேர்மன் மொழியிலும் வெளியிடப்பட்டன. ட்ரொட்ஸ்கி பாசிசத்தை வர்க்கப் போராட்டம் தீவிரமடைவதற்கு ஆளும் வர்க்கத்தின் எதிர்வினையென்று அதில் விளக்கியிருந்தார். பாசிசம் என்பது தொழிலாளர் வர்க்க அமைப்புகளை முற்றிலுமாக நசுக்க சீரழிந்த குட்டி-முதலாளித்துவ வர்க்கத்தை அணிதிரட்டுவதாகும். இந்தப் புரிதலுடன், இந்த வாழ்வா-சாவா போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் தலைமை குறித்த பிரச்சினையானது, அதாவது ட்ரொட்ஸ்கி எதற்காக தீவிரமாகப் போராடி வந்தாரோ அது, முன்னணிக்கு வந்தது.

வொல்ஃப்காங் வேபர், ஜேர்மனியில் நாஜிக்களின் எழுச்சி குறித்து ஆழமான பார்வையை பிற்காலத்தில் அவரே வழங்கியுள்ளார். ட்ரொட்ஸ்கியின் ஜேர்மனி பற்றிய எழுத்துக்களை முதன்முதலில் கற்றுக்கொண்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் ஒரு புதிய பதிப்பின் முன்னுரையில் அவர் கூறியதாவது: “ஹிட்லர் ஆட்சிக்கு வந்தமையானது, ஜேர்மனிய மக்களின் யூத-வெறுப்பால் நிகழவில்லை. மாறாக, சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) ஆகியவற்றின் குறுகிய, துரோக கொள்கைகளே காரணங்கள் ஆகும். இவைகள் தொழிலாளர் இயக்கத்தை அரசியல் ரீதியாக முடக்கி, இனவெறி மற்றும் யூத-எதிர்ப்பு போன்ற நச்சுக் கருத்துக்களுக்கு எதிரான அதன் சித்தாந்த எதிர்ப்பை படிப்படியாக சிதைத்ததற்கு ஹிட்லர் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளார்.”

அடுத்த காலகட்டத்தில், வொல்ஃப்காங் தனது சிறந்த அறிவுத்திறனின் பெரும்பகுதியை அக்டோபர் புரட்சிக்கு எதிரான ஸ்டாலினிசத்தின் துரோகம் மற்றும் அதன் பிற எண்ணற்ற குற்றங்களை ஆராய்வதில் செலவிட்டார். பிரிட்டனில் தங்கியிருந்தபோது, வொல்ஃப்காங் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் வலிமையை நேரில் கண்டறிந்தார். இந்த வலிமையானது, பழமைவாத ஹீத் அரசாங்கத்திற்கு எதிராக பெரும் வேலைநிறுத்தங்களை நடத்தி, நாட்டை தற்காலிகமாக முடக்கியது. ஸ்டாலினிசம் குறித்த கேள்வி தெளிவுபடுத்தப்பட்டால் மட்டுமே இந்த சக்தி தனது இலக்கை அடைய முடியும் என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

1971 நவம்பரில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கக் கூட்டணியின் கூட்டத்தில், வொல்ஃப்காங் முதன்முறையாக ஜெர்ரி ஹீலியின் உரையைக் கேட்டார். சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) தலைவரான ஹீலி, கடந்த இரு தசாப்தங்களுக்கு முன்னர், பாப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளைப் பாதுகாத்திருந்தார். ஹீலியின் தொழிலாளர்களை அணுகும் பாணியும், புரட்சிகரக் கட்சியின் கட்டமைப்பை போல்ஷெவிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியில் வைத்துப் பேசிய விதமும் வொல்ஃப்காங்கை பெரிதும் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) பாப்லோவாதிகளுடனான மறு இணைப்பு, இலங்கையின் லங்கா சம சமாஜக் கட்சியின் அரசியல் துரோகம், மற்றும் ஹங்கேரிய புரட்சி ஆகியவை குறித்த SLL-இன் ஆய்வுகளை வொல்ஃப்காங் ஆழமாக கற்று ஆராய்ந்தார்.

வொல்ஃப்காங்கைப் பொறுத்தவரை, அரசியல் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தும் முடிவு தொழிலாள வர்க்கத்திற்கான தேர்வாக இருந்தது. “எனக்கு மிகவும் அறிவாற்றல் மிக்க பல சக மாணவர்கள் இருந்தனர், ஆனால் இறுதியில் அதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அது அமைகிறது. நீங்கள் ஒரு வர்க்க முடிவை எடுக்க வேண்டும்” என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். இந்த அடிப்படையில், பிராங்க்ஃபர்ட் பள்ளி கோட்பாட்டினரைப் போல தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர சக்தியாக நிராகரித்த அல்லது பின்நவீனத்துவம் போல பொதுவாக வரலாற்று வளர்ச்சியை மறுத்த பல்வேறு குட்டி-முதலாளித்துவக் கோட்பாடுகளுக்கு எதிராக அவர் போர் தொடுத்தார்.

வொல்ஃப்காங் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றை மிகுந்த மரியாதையுடனும் மதிப்புடனும் நோக்கினார். இந்த அர்த்தத்தில் தன்னை தொழிலாள வர்க்கத்தின் மாணவனாகவே கருதினார். பிறரைவிட சிறப்பாகக் கேட்கும் திறன் கொண்டிருந்த அவர், தொழிலாளர்களின் அனுபவங்களையும் சிந்தனைகளையும் எப்போதும் ஆர்வத்துடனும் திறந்த மனதுடனும் வரவேற்றார். தொழிலாளர்களின் கருத்துக்களை ஆழமாக ஆராய்ந்து, பின்னர் அவற்றை விமர்சன ரீதியாக எதிர்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தினார். தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று வளர்ச்சியில் உள்ள எல்லா சிக்கல்களுக்கிடையிலும், அறிவொளி இயக்கம், சோசலிசம் மற்றும் மனிதநேயவாதம் ஆகியவற்றின் இலட்சியங்களை நனவாக்கக்கூடிய சமூக சக்தியாக அதனை அவர் அடையாளம் கண்டார். இந்த இலட்சியங்கள் உலகப் புரட்சிக்கான போராட்டத்தில் அவரது இளமைக் காலத்தை வடிவமைத்தன. இந்த அணுகுமுறையே அவரது தோழர்களுடனான தனிப்பட்ட உறவுகளையும் வரையறுத்தது.

சோசலிச தொழிலாளர் கழகம் (BSA-Bund sozialistischer Arbeiter)

1973 இல், வொல்ஃப்காங் முழு உற்சாகத்துடனும், ஆற்றலுடனும் மற்றும் அரசியல் உந்துதலுடனும் ஜேர்மனிக்குத் திரும்பினார். அவர் உடனடியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புதிய ஜேர்மன் பிரிவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 1971 இலையுதிர் காலத்தில் நிறுவப்பட்டிருந்த சோசலிச தொழிலாளர் கழகத்தில் (BSA) உறுப்பினரானார்.

மற்றய ஐரோப்பிய நாடுகளைப் போலவே, அந்நேரத்தில் ஜேர்மனியிலும் கடுமையான வர்க்கப் போராட்டங்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. 1960களில் இருந்து, உலக முதலாளித்துவத்தின் பொருளாதார நெருக்கடி மோசமடைந்தது. ஐரோப்பாவும் ஜப்பானும் அமெரிக்காவிற்கு பொருளாதார போட்டியாளர்களாக வெளிப்பட்டன. டாலரின் மதிப்பு அதிகரித்த அழுத்தத்திற்கு உள்ளானது. 1966 ஆம் ஆண்டில், ஒரு மந்தநிலை உலகப் பொருளாதாரத்தை உலுக்கியது. 1971 இல், அமெரிக்க அரசாங்கம் டாலர்-தங்க பரிமாற்றத்தன்மையை கைவிட்டது, அவ்விதத்தில் போருக்குப் பிந்தைய வளர்ச்சிக்கு அடித்தளத்தை உருவாக்கிய பிரெட்டன் வூட்ஸ் நாணய அமைப்புமுறையின் அடிப்படையை அகற்றியது. 1973 இல், உலகப் பொருளாதாரமானது மீண்டும் ஆழ்ந்த மந்தநிலைக்குள் மூழ்கியது. தொழிலாள வர்க்கமானது புரட்சிகர பரிமாணத்திலான ஒரு சர்வதேச தாக்குதலைக் கொண்டு பதிலிறுத்தது.

வொல்ஃப்கேங் மியூனிக் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் தனது படிப்பை மீண்டும் தொடங்கியதுடன், மாக்ஸிமிலியனில் வசித்து வந்தார். ஆனால் அவருடைய முக்கிய பணி இப்பொழுது மூனிக்கிலும் பின்னர் நூரெம்பேர்க்கிலும் BSA இன் உள்ளூர் குழுக்களை நிறுவுவதாகத்தான் இருந்தது.

1977 இல், BSA (சோசலிச தொழிலாளர் கழகம்) தலைமையானது வொல்ஃப்காங்கிடம் கட்சிக்காக முழுநேரமாக வேலை செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, அவர் எந்த தயக்கமும் இல்லாமல் தனது படிப்பை நிறுத்திவிட்டு, கட்சியைக் கட்டியெழுப்ப தனது முழு ஆற்றலையும் அர்ப்பணித்தார். அவர் தேசியக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் பல ஆண்டுகள் BSA-வின் மைய அங்கமாக இருந்த புதிய தொழிலாளர் பத்திரிகை (Neue Arbeiterpresse - New Workers Press) ஆசிரியர் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

இதே காலகட்டத்தில், வொல்ஃப்காங் அன்னி என்பவருடன் நெருக்கமானார். அன்னி பின்னர் அவரது வாழ்நாள் துணைவியானார். அவரும் அரசியல் போராட்டங்களில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். இருவருக்கும் பின்னர் இரண்டு குழந்தைகள் பிறந்தன. கட்சிப் பணிகளின் அழுத்தம் இருந்தபோதிலும், தங்கள் குழந்தைகளுக்கு உயர்தர கல்வியை வழங்க இருவரும் கடுமையாக உழைத்தனர்.

1970களில், சமூக ஜனநாயகக் கட்சி (SPD) பற்றிய கேள்வி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடனான விவாதங்களில் மையப் பங்கைக் கொண்டிருந்தது. பிரான்சில் 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தம் மற்றும் ஜேர்மனியில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் எதிர்ப்புக்கு எதிராக உயர் ஊதிய கோரிக்கைக்காக போராடிய எஃகுத்துறை தொழிலாளர்களின் செப்டம்பர் வேலைநிறுத்தங்களுக்குப் பின்னர், தன்னை “ஜனநாயக சோசலிஸ்ட்” என்று விவரித்த வில்லி பிராண்ட் (Willy Brandt) அரசாங்கத்திடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது.

வில்லி பிராண்ட் 1930களில் மத்தியவாத சோசலிச தொழிலாளர் கட்சியின் (SAP) முக்கிய உறுப்பினராக இருந்தார். நோர்வேயில் தஞ்சம் புகுந்திருந்த காலத்தில், SAP இன் இளைஞர் அமைப்பில் இருந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகளை தனிமைப்படுத்தியதிலும், SAP ஐ நான்காம் அகிலத்தில் இணைவதைத் தடுப்பதிலும் அவர் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.

பல தொழிலாளர்கள் பிராண்ட் மீது மாயைகளைக் கொண்டிருந்தனர். இச்சூழ்நிலையில் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக எவ்வாறு சிறப்பாகப் போராடுவது என்பது பற்றிய விவாதங்களில் வொல்ஃப்காங் தீவிரமாகப் பங்கேற்றார். “முதலாளித்துவ தாராளவாத சுதந்திர ஜனநாயகக் கட்சியை [FDP] அரசாங்கத்திலிருந்து வெளியேற்றி, சோசலிசக் கொள்கைகளுக்கு உறுதிபூண்ட சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மட்டும் கொண்ட அரசாங்கத்திற்காகப் போராடுங்கள்!” என்று அந்நேரத்தில் BSA-வின் கோரிக்கையானது, ட்ரொட்ஸ்கியின் இடைமருவு வேலைத்திட்டத்தின் தந்திரோபாயங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இது எப்போதும் SPD-யின் உண்மையான குணாம்சத்தை அம்பலப்படுத்துவதுடன் தொடர்புடையதாக இருந்தது.

வொல்ஃப்காங் சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) பங்கு பற்றிய வரலாற்றுப் புரிதலை மையமாகக் கொண்ட பல கட்டுரைகளை எழுதினார். “புதிய தொழிலாளர் பத்திரிகை” (”Neue Arbeiterpresse”) மற்றும் பின்னர் BSA-வின் தத்துவார்த்த இதழான “மார்க்சிச மீளாய்வு” (”Marxistische Rundschau”) ஆகியவற்றில் வெளியான “ரூர் போராட்டம் 1928 —அதன் வரலாறும் படிப்பினைகளும்” (“Ruhr Struggle 1928—Its History and Lessons,”) என்ற கட்டுரைத் தொடரில் அவர் பின்வருமாறு எழுதினார்:

1928 ஆம் ஆண்டின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) தலைமை வகித்த பாத்திரம், அடுத்த ஆண்டுகளில் தர்க்கரீதியான தொடர்ச்சியைக் கண்டது. இது புரூனிங் ஆட்சி மற்றும் அதன் அவசரகால உத்தரவுகளுக்கான ஆதரவில் தொடங்கி, நாஜி அரசை நோக்கிய தொழிற்சங்கங்களின் சாதகமான அணுகுமுறையை வெளிப்படுத்த ஸ்வஸ்திகாவின் கீழ் பாசிஸ்டுகளுடன் அணிதிரளுமாறு தொழிற்சங்கத் தலைவர்கள் விடுத்த அழைப்பு வரை விரிந்திருந்தது.

மியூனிக்கிலிருந்து வெறும் அரை மணி நேர வாகனப் பயணத்தில், நாஜிக்களின் டாக்கவ் (Dachau) சித்திரவதை முகாம் உள்ளது. அங்குள்ள நினைவுச் சின்னமானது முதல் சித்திரவதை முகாமை நினைவுகூர்கிறது. இந்த முகாமானது ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கட்டப்பட்டு, பின்னர் வந்த அனைத்து முகாம்களுக்கும் முன்மாதிரியாக விளங்கியது. BSA மற்றும் அதன் இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் கழகமானது (SJB) இளைஞர்கள் மற்றும் தொழிலாளர் குழுக்களுடன் இந்த நினைவிடத்திற்கு அடிக்கடி விஜயம் செய்தது. அப்போது, இனப்படுகொலையில் உயிர் பிழைத்தவர்களுடன் பேசவும் முடிந்தது. ஸ்டாலினிசத்தைப் புரிந்துகொள்ளாமல் பாசிசத்தை ஏன் புரிந்துகொள்ள முடியாது என்பதை நிரூபிக்க வொல்ஃப்காங் தனது அறிவைப் பயன்படுத்தினார்.

ஆனால், பிரிட்டிஷ் பிரிவு இப்போது தன்னை தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) என்று பெயரை மாற்றிக் கொண்டதுடன், வளர்ச்சியடைந்து வரும் அதன் சீரழிவின் காரணமாக, இளம் கட்சியின் பணி மேலும் மேலும் கடினமானது. தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இடதுசாரிப் பிரிவுக்கும், மத்திய கிழக்கின் தேசியவாத ஆட்சிகளுக்கும் அதிகமாக இணங்கிச் சென்ற WRP ஆனது, ஜேர்மன் பிரிவையும் அவ்வாறே செய்யுமாறு அழுத்தம் கொடுத்தது. இது BSA-வின் அரசியல் மற்றும் தத்துவார்த்த வேலைகளை முறைப்படி சீரழித்து, தோழர்களை சந்தர்ப்பவாத பெரிய அளவிலான பிரச்சாரங்களுக்குள் தள்ளியது. WRP-யின் அழுத்தத்தின் கீழ் நான்கு இதழ்களுக்குப் பிறகு மார்க்சிச மீளாய்வு (Marxistische Rundschau) நிறுத்தப்பட்டது.

தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) உடனான உடைவு

1985 இல் அமெரிக்காவில் டேவிட் நோர்த்தும் தொழிலாளர் கழகமும் (Workers League) முன்வைத்த WRP (தொழிலாளர் புரட்சிக் கட்சி) இன் நிலைப்பாடு குறித்த மார்க்சிச விமர்சனத்துடன் வொல்ஃப்காங் பரிச்சயமான போது, அவர் உற்சாகமாக இதற்கு எதிர்வினையாற்றினார். பல ஆண்டுகளுக்குப் பின்னர், BSA இன் மற்றொரு தலைவரான பீட்டர் சுவார்ட்ஸைக் குறிப்பிட்டு அவர் ஒரு கடிதத்தில் இவ்வாறு எழுதினார்: “1985 செப்டம்பர் இறுதியில் WRP தலைமையின் தேசிய சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான டேவிட் நோர்த்தின் போராட்டம் குறித்த ஆவணங்களை பீட்டர் என்னிடம் ஒப்படைத்து ஹீலியின் வெளியேற்றத்தை எனக்குத் தெரிவித்த போது, ஓடுகாலிகளுக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுப்பதற்கு அது எனக்கு மிகப்பெரும் ஊக்குவிப்பாக இருந்தது.”

அதைத்தான் வொல்ஃப்காங் செய்தார். அவர் “லியோன் ட்ரொட்ஸ்கியும் அக்டோபர் புரட்சியும்” என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதினார். 1987 ஆகஸ்டில் லண்டனில் ஹீலி ஆற்றிய ஒரு உரையை, 1917 அக்டோபர் புரட்சியின் தயாரிப்பு, தலைமை மற்றும் பாதுகாப்பில் ட்ரொட்ஸ்கியின் மாபெரும் முக்கியத்துவத்தை விளக்குவதற்கான வாய்ப்பாக அவர் பயன்படுத்தினார். ஹீலி தனது உரையில் கோர்பச்சேவைப் (Gorbachev) புகழ்ந்து, ட்ரொட்ஸ்கிக்கு எதிரான சில இழிவான ஸ்டாலினிச பொய்களை திரும்பக் கூறினார். வொல்ஃப்காங் ஹீலியின் பொய்களை மறுத்து, பெரஸ்த்ரோய்காவின் (perestroika) பிற்போக்கு பங்கை விளக்கியதோடு, அக்டோபர் புரட்சியின் அரசியல் படிப்பினைகளின் இன்றைய முக்கியத்துவத்தையும் முக்கியமாக எடுத்துரைத்தார்.

ஏறத்தாழ அதே காலகட்டத்தில், வொல்ஃப்காங் மற்றொரு தொடர் கட்டுரைகளில், பாப்லோவாதத்திற்கும் அதன் ஜேர்மன் கிளையான சர்வதேச மார்க்சியவாதிகள் குழுவிற்கும் (GIM) எதிரான போராட்டத்தை விரிவுபடுத்தினார். GIM ஆனது, மாவோயிச KPD யுடன் இணைந்து “ஐக்கிய சோசலிசக் கட்சியை” (VSP) உருவாக்கியது. தொழிலாள வர்க்கத்தில் கட்சியைக் கட்டமைப்பதில் பாப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய வொல்ஃப்காங், WRP-யிலிருந்து உடைவின் படிப்பினைகளையும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 1988 சர்வதேச முன்னோக்குகளின் தீர்மானமான “உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்“ என்பவற்றையும் அடிப்படையாகக் கொண்டார்.

அவர் பின்வருமாறு அதில் எழுதினார்:

போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், குறிப்பாக 1968-1975 ஆண்டுகளின் போது, பாட்டாளி வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களில் இருந்து பெறப்பட வேண்டிய வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்கான தீர்க்கமான படிப்பினை பின்வருமாறு: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக கட்டியெழுப்புவதன் மூலமாக, சர்வதேச பாட்டாளி வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் மூலம்தான் அதன் வெற்றியை உறுதிப்படுத்த முடியும், சந்தர்ப்பவாதம் மற்றும் தேசியவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான ஒரு சமரசமற்ற மற்றும் விட்டுக்கொடுக்காத போராட்டம் அதற்குத் தேவைப்படுகிறது.

WRP-யிலிருந்து ஏற்பட்ட உடைவும், நான்காம் அகிலத்தின் வரலாறு குறித்த நனவான மறுமதிப்பீடும் - டேவிட் நோர்த்தின் “நாம் பாதுகாக்கும் மரபியம்” நூலில் தொகுக்கப்பட்டுள்ளபடி - கட்சியின் பெரும் அரசியல் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தன. மேலும், இவை ஸ்டாலினிச ஆட்சிகளின் அடுத்தடுத்த பொறிவுக்கான தீர்மானகரமான தயாரிப்பாகவும் அமைந்தன.

1991 செப்டம்பரில் போலந்தின் ஸ்லூபிஸில் (Slubice) நடந்த ஒரு கூட்டத்தில் வொல்ஃப்காங் வேபர் [Photo: WSWS]

வொல்ஃப்காங் தனது போலந்தில் ஒற்றுமை 1980-81 மற்றும் அரசியல் புரட்சியின் முன்னோக்கு என்ற நூலில், போலந்தில் வர்க்கப் போராட்டத்தின் பெரும் எழுச்சியின் வளர்ச்சியை ஆய்வு செய்ததோடு மட்டுமல்லாமல், அரசியல் தலைமையின் துரோகத்தையும், அதை மூடிமறைப்பதில் பாப்லோவாதிகள் மற்றும் WRP ஓடுகாலிகளின் பங்கையும் வெளிச்சமிட்டுக் காட்டினார். இந்த நூல் ஸ்டாலினிசத்திற்கு எதிரான அரசியல் புரட்சிக்கும் உலக சோசலிசப் புரட்சிக்குமான ஒரு விவாதவியலாகும்:

ஸ்டாலினிச ஆட்சியானது நெருக்கடியை எதிர்கொள்ளும்போது, குட்டி-முதலாளித்துவ பிரிவுகளிலும் தொழிலாளர் வட்டாரங்களிலும் பல்வேறு எதிர்ப்பு இயக்கங்கள் தோன்றலாம். இவை ஆளும் ஆட்சிக்கு எதிராக துணிச்சலான மற்றும் தீவிர கோரிக்கைகளை முன்வைக்கும். ஆனால், இந்த இயக்கங்கள் ட்ரொட்ஸ்கிசத்தின் முன்னோக்குகள் மற்றும் கோட்பாடுகளையும், உலகப் புரட்சி மூலோபாயத்தையும், அதன் ஒரு பகுதியாக அரசியல் புரட்சியையும் ஏற்காதவரை, குரோன் (Kuron) மற்றும் மோட்ஸெலெவ்ஸ்கி (Modzelewski) போன்றோரைப் போல ஸ்டாலினிச அதிகாரத்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் கூட்டு அழுத்தத்திற்கு அடிபணிய நேரிடும். இறுதியில், இவர்களின் குறுகிய முன்னோக்கு தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்கு தடையாக மாறும்.

ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் (GDR) முடிவு

1989ல் கிழக்கு ஐரோப்பாவிலும், கிழக்கு ஜேர்மனியிலும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வளர்ச்சியுற்றபோது, வொல்ஃப்காங் பெரும் ஆர்வத்துடன் இதை எதிர்கொண்டார். 1989 ஆகஸ்டில், அவர் எழுதிய “ஜேர்மன் ஜனநாயக குடியரசிலிருந்து வெகுஜனங்கள் வெளியேறியதற்கான பின்னணி—தொழிலாளர்களின் எழுச்சியின் முன்னோடி” என்ற கட்டுரை, கிழக்கு ஜேர்மனியில் தீவிர தலையீட்டிற்கான ஒரு முன்னணி ஆக இருந்தது. சிறிது காலத்திற்குப் பின்னர், BSA தனது அறிக்கையை வெளியிட்டது: “SED ( ஜேர்மன் சோசலிஸ்ட் ஐக்கிய கட்சி - Sozialistische Einheitspartei Deutschlands) அதிகாரத்துவத்தை ஒழிக்க! தொழிலாளர் பேரவைகளை கட்டியெழுப்புங்கள்!”

1989 இலையுதிர்காலத்தில் எழுச்சி பெருகியபோது, வொல்ஃப்காங் கிழக்கு ஜேர்மனியின் தொழிலாள வர்க்கத்தில் தலையிடுவதில் தீவிரமாக பங்கேற்றார். அக்டோபர் இறுதியில், மேற்கு பேர்லினில் ஒரு தோழரின் வீட்டில் BSA ஒரு அரசியல் செயல்பாட்டு மையத்தை அமைத்தது. அப்போது பேர்லின் சுவர் இன்னும் இருந்து கொண்டிருந்தது. எல்லையைக் கடக்கும் ஒவ்வொருவரும் நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டனர். எனினும், BSA ஒரு டசின் தோழர்களையும், அரசியல் புரட்சிக்கான ஓர் அழைப்பின் ஆயிரக்கணக்கான நகல்களையும் எல்லையால் கடத்தி, நவம்பர் 4ஆம் தேதி பேர்லின் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் விநியோகிக்க முடிந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வொல்ஃப்காங் மிகுந்த உற்சாகம் கொண்டார். முதன்முறையாக, கிழக்கு ஜேர்மனியின் தொழிலாளர்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளவும், ஸ்டாலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் அரசியல் புரட்சி கருத்துக்களை பரப்பி விவாதிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், சோவியத் ஆக்கிரமிப்பு மண்டலத்தில் (SBZ) ஒஸ்கார் ஹிப்பே (Oskar Hippe) ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பை உருவாக்க முயன்றார். இந்த மண்டலத்திலிருந்துதான் பின்னர் ஜேர்மன் ஜனநாயக குடியரசு தோன்றியது. ஆனால் ஹிப்பே உடனடியாகக் கைது செய்யப்பட்டு, பவுட்சென் (Bautzen) நகரின் ஸ்டாசி (Stasi) சிறையில் எட்டு ஆண்டுகள் அடைக்கப்பட்டார்.

வொல்ஃப்காங் 1989 வசந்த காலத்தில் ஒஸ்கார் ஹிப்பே மற்றும் அவரது மனைவி கெர்ட்ரூட்டை (Gertrud) நேரில் சந்தித்தார். பல தசாப்தங்களாக அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய பில் (Bill) மற்றும் ஜோன் பிரஸ்ட் (Jean Brust) உட்பட பிற BSA உறுப்பினர்களுடன் சேர்ந்து அவர் இந்த ட்ரொட்ஸ்கிச மூத்த தலைவர்களைச் சந்தித்தார்.

ஒஸ்கார் ஹிப்பே தனது அனுபவங்களை விரிவாகப் பகிர்ந்து கொண்டார். அவர் ட்ரொட்ஸ்கியுடன் பலமுறை நேரில் சந்தித்து விவாதித்திருந்தார். ஜேர்மன் ஜனநாயக குடியரசில் BSA-வின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அவர், அதேசமயம் அதிக நம்பிக்கை கொள்வதில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினார். ஸ்டாலினிசம் தொழிலாளர்களின் சிந்தனையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை உடனடியாக சரிசெய்துவிட முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் ஜேர்மன் ஜனநாயக குடியரசில் (GDR) தொழில்துறை சிதைக்கப்படுவதற்கும், முதலாளித்துவ சுரண்டல் மீண்டும் கொண்டுவரப்படுவதற்கும் எதிரான போராட்டத்தில் வொல்ஃப்காங் பல கட்டுரைகள், அம்பலப்படுத்தல்கள், அறிக்கைகள் ஆகியவற்றை எழுதினார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் ஜனநாயக குடியரசின் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் “ஜேர்மன் ஜனநாயக குடியரசு - ஸ்டாலினிசத்தின் 40 ஆண்டுகள்“ என்ற முக்கியமான நூலை எழுதினார். அவர் முன்னுரையை இவ்வாறு தொடங்கினார்:

ஜேர்மன் ஜனநாயக குடியரசு முடிவிற்கு வந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின், “மேற்கத்திய நாடுகளின் வெற்றி” மற்றும் “முதலாளித்துவத்தின் வெற்றி” குறித்த மகிழ்ச்சி, ஒரு மந்தமான ஏமாற்ற உணர்வுக்கு வழிவிட்டுள்ளது. ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில், வாக்குறுதியளிக்கப்பட்ட “செழிப்பான நிலப்பரப்புகளுக்கு” பதிலாக ஒரு தொழில்துறை வனாந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜேர்மன் ஜனநாயக குடியரசுப் பகுதியில் இருந்த ஊழியர்களில் பாதிப்பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். ... 1989 முதல் நிகழ்வுகளின் வேகத்தால் தூண்டப்பட்ட கண்மூடித்தனமான உற்சாகம், அதிர்ச்சி மற்றும் உணர்வின்மை ஆகியவற்றிற்குப் பிறகு, மாறிவரும் உணர்வுகளுக்குப் பிறகு, இப்போது பகுத்தறிவும் தெளிவான சிந்தனையும் மேலோங்க வேண்டிய நேரம் இது.

பின்னர் அவர் ஜேர்மன் ஜனநாயக குடியரசின் தோற்றம் மற்றும் வரலாற்றை ஒன்பது அத்தியாயங்களில் ஆய்வு செய்தார். ஸ்டாலினிசமும் சோசலிசமும் ஒன்றே என்ற பெரும் பொய்யை அவர் மறுத்தார். இப்பொய்யானது ஸ்டாலினிசத்தின் குற்றங்களைப் பயன்படுத்தி கம்யூனிச-எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டுகிறது. அவர் தனது நூலை பின்வரும் வார்த்தைகளுடன் நிறைவு செய்தார்:

ஜேர்மன் ஜனநாயக குடியரசின் வரலாற்று மதிப்பீடு பற்றிய இருப்புநிலைக் குறிப்பானது ஒரு கடுமையான வரலாற்றுக் குற்றச்சாட்டைக் குறிக்கிறது; இது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நனவில் அழியாமல் பதிக்கப்பட வேண்டும்: ஸ்டாலினிசம் சோசலிசத்திற்கு இட்டுச் செல்லவில்லை. மாறாக, முதலாளித்துவத்திற்கே திரும்ப அழைத்துச் செல்கிறது! ஸ்டாலினிசம் சோசலிசத்தின் ஒரு “குறைபாடுள்ள முயற்சி” அல்ல, ஒரு ”தவறான மாதிரி” அல்ல, மாறாக அதன் சவக்குழி தோண்டும் கருவியாகும்.

வொல்ஃப்காங் தனது வாழ்வின் பிற்பகுதியிலும் இந்தக் கேள்வியை அடிக்கடி ஆராய்ந்தார். ஸ்டாலினிசத்தைப் பற்றிய தெளிவான புரிதல், குறிப்பாக ஜேர்மனியில் - அங்கு ஸ்டாலினிச மற்றும் முதலாளித்துவ ஆட்சிகள் ஒரே நேரத்தில் நிலவின - தொழிலாள வர்க்கம் தனது பெருமைமிகு சோசலிச மரபுகளுடன் மீண்டும் இணைவதற்கு அவசியம் என்று அவர் உறுதியாக நம்பினார். இந்தப் புரிதல் தொழிலாளர்களின் எதிர்கால போராட்டங்களுக்கு வழிகாட்டும் என்றும் அவர் கருதினார்.

வரலாற்று உண்மையைப் பாதுகாத்தல்

ஜேர்மன் ஜனநாயக குடியரசும் சோவியத் ஒன்றியமும் முடிவுற்ற பின், ஸ்டாலினிசத்தின் வீழ்ச்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னறிவித்தபடி, ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் கடுமையான வர்க்க மோதல்களின் ஒரு புதிய சகாப்தத்தைக் கொண்டுவந்துள்ளது என்பது தெளிவானபோது, ட்ரொட்ஸ்கிசம் மீதான தாக்குதல்களின் புதிய அலை தொடங்கியது. பிரிட்டனில், ட்ரொட்ஸ்கிசத்தை அவதூறு செய்யும் நோக்கில் பொய்கள் மற்றும் திரிபுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட ட்ரொட்ஸ்கியின் மூன்று வாழ்க்கை வரலாறுகள், இயன் தாட்சர், ஜெஃப்ரி ஸ்வெயின் மற்றும் ரோபர்ட் சர்விஸ் ஆகியோரால் ஐந்து ஆண்டுகளுக்குள் வெளிவந்தன. டேவிட் நோர்த் தனது லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகார் என்ற நூலில் இவற்றை முழுமையாக மறுத்துரைத்தார்.

வரலாற்று உண்மைகளைப் பாதுகாக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்தில் வொல்ஃப்காங் முக்கிய பங்காற்றினார். ரோபர்ட் சர்விஸின் (Robert Service) ட்ரொட்ஸ்கியை அவதூறு செய்யும் வாழ்க்கை வரலாறானது ஜேர்மன் மொழியில் வெளியிடப்படவிருந்தபோது, அவர் துரிதமாக செயல்பட்டார். புகழ்பெற்ற, அப்போது மிக வயதான வரலாற்று ஆசிரியரான பேராசிரியர் ஹெர்மன் வேபரை (Hermann Weber) அணுகினார். வேபருடனான அவரது நேர்காணலில், “ரோபர்ட் சர்விஸ் விஞ்ஞானபூர்வமான விமர்சனத்தை அல்ல, வெறும் வசைபாடலை எழுதியுள்ளார்!“ என்ற கருத்து வெளியிடப்பட்டது. இந்த நேர்காணல் இன்றும் பலரின் கவனத்தை ஈர்க்கிறது.

வொல்ஃப்காங் வேபர் 12 மதிப்புமிக்க புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களை ரோபர்ட் சர்விஸின் அவதூறான எழுத்துக்கு எதிராக குரல் கொடுக்க ஊக்குவித்தார். இதன் விளைவாக, ஜேர்மன் பதிப்பக நிறுவனமான சுஹர்காம்ப் வெர்லாக் (Suhrkamp Verlag), நூலில் பெரும் திருத்தங்களை மேற்கொள்ளவும், அதன் வெளியீட்டை ஒரு வருடத்துக்கும் மேல் தள்ளிப்போடவும் நிர்ப்பந்திக்கப்பட்டது.

2014 பிப்ரவரியில், வலதுசாரி வரலாற்று ஆய்வாளர் ஜோர்க் பாபெரோவ்ஸ்கி (Jörg Baberowski), ரோபர்ட் சர்விஸின் சீர்குலைந்த நற்பெயரை மீட்டெடுக்க அவரை ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திற்கு அழைத்தார். இந்நிகழ்வில், வொல்ஃப்காங் வெபர் சர்விஸின் வரலாற்று திரிபுகள் மற்றும் யூத-எதிர்ப்பு கருத்துக்களை எதிர்த்துப் பேசினார். சுமார் நூறு மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விவாதத்தில், வொல்ஃப்காங் சர்விஸின் நூலின் குறைபாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டினார்.

சர்விஸுடனான நிகழ்வில் இருந்து விமர்சகர்களை பாபெரோவ்ஸ்கி பலவந்தமாக வெளியேற்றிய போது, வொல்ஃப்காங் வேபர் பல்கலைக்கழக தலைவர் ஜான்-ஹெண்ட்ரிக் ஓல்பெர்ட்ஸுக்கு (Jan-Hendrik Olbertz) ஒரு திறந்த கடிதம் எழுதினார். சர்விஸை பாபெரோவ்ஸ்கி ஆதரிப்பது அவரது சொந்த வரலாற்று திரிபுகளுடன் தொடர்புடையது என வொல்ஃப்காங் சுட்டிக்காட்டினார். இதே வேளையில், டெர் ஷ்பீகல் (Der Spiegel) பத்திரிகை பாபெரோவ்ஸ்கியின் சர்ச்சைக்குரிய கூற்றை வெளியிட்டது: அதாவது ”ஹிட்லர் மனநோயாளி அல்ல, கொடூரமானவரும் அல்ல. அவர் தனது உணவு மேஜையில் யூதர்களின் படுகொலை பற்றி பேச விரும்பவில்லை.”

வொல்ஃப்கேங் பின்வருமாறு முடித்தார்:

ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கு குறிப்பிட்ட வழிமுறைகள் தேவை...

அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் கல்வித்துறை சுதந்திரம் மீதான பார்பெரோவ்ஸ்கியின் தாக்குதல், ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தை வலதுசாரி மற்றும் இராணுவவாத பிரச்சாரத்திற்கான ஒரு மையமாக மாற்ற விரும்பும் சக்திகளின் நோக்கங்களுக்கு சேவையாற்றுகிறது. அமெரிக்காவில் வலதுசாரி அரசியலின் கல்வித்துறை மையமாக விளங்கும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஹூவர் பயிலகத்துடன் பார்பெரோவ்ஸ்கி நெருக்கமான தொடர்புகள் கொண்டுள்ளார் என்பது நன்கறியப்பட்டதாகும்.

வொல்ஃப்காங் வேபர் ஆகஸ்ட் 2024 ஆண்டில் [Photo: WSWS]

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு இறுதிக்கட்ட புற்றுநோய் இருப்பதாகவும், மருத்துவர்கள் அவருக்கு குறைந்த நம்பிக்கையே அளித்ததாகவும் அறிந்த பின்னரும்கூட, வொல்ஃப்காங் தனது அரசியல் பணியைத் தொடர்ந்தார். நோய்க்கு எதிரான போராட்டம் கடினமாக இருந்தது. ஆனால் வொல்ஃப்காங் அதைத் தவிர்க்கவில்லை. வாழ்க்கை மற்றும் சமூக முன்னேற்றத்தின் இயக்கு சக்தியாக போராட்டத்தைப் புரிந்துகொண்டதால் அவர் போராட விரும்பினார்.

சமீப ஆண்டுகளில், வொல்ஃப்காங் குறிப்பாக இளம் தோழர்களுக்கு வரலாற்றுப் பிரச்சினைகளில் பயிற்சியளிப்பதில் கவனம் செலுத்தினார். மேலும், ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று மரபியத்திற்காக ஓயாது போராடினார். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று மரபுகளை விளக்குவதிலும் செயல்படுத்துவதிலும் வளர்ச்சியடைந்த ஒரு கூட்டு மற்றும் சர்வதேச காரியாளர்களின் பாகமாகவே அவர் எப்போதும் தன்னைக் கருதினார்.

நவம்பர் 2023 இல், காஸா படுகொலைக்கு எதிரான சோசலிச சமத்துவக் கட்சி (SGP) நிகழ்வில், ஒரு கட்சியைக் கட்டமைப்பது ஏன் அவசியம் என்பதை அறிய விரும்பிய இளம் பாலஸ்தீனியர்களின் கேள்விகளுக்கு வொல்ஃப்காங் பதிலளித்தார். வொல்ஃப்காங்கின் பதில் அவரது அரசியல் வாழ்வின் சிறந்த சுருக்க வெளிப்பாடாக இவ்வாறு அமைந்திருந்தது:

பேர்லினில் 11 நவம்பர் 2023 அன்று “காஸாவில் படுகொலையை நிறுத்து” என்ற SGP நிகழ்வில் வொல்ஃப்காங் வேபர் உரையாற்றுகிறார். [வேறு மொழி வசனங்களுக்கு மாற்றும் விவரங்களுக்கு CC (மாற்று மொழி வசன வரிகள்) ஐகானைக் (icon) கிளிக் செய்து, கியர் ஐகானை (Settings) தேர்ந்தெடுத்து, “தானியங்கி மொழிபெயர்ப்பு” (“auto-translate”) என்பதைத் தேர்ந்தெடுத்து பொருத்தமான மொழியைத் தேர்வு செய்யவும்.]

ரஷ்யாவில், தொழிலாள வர்க்கம் உண்மையில் அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஆனால் ஜேர்மனியில் அவ்வாறு நடக்கவில்லை. ஏன்? ஏனெனில் ஜேர்மனியில் ரஷ்யாவைப் போன்ற கட்சி கட்டியெழுப்பப்படவில்லை. ரஷ்யாவில் பல ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு அறிவூட்டப்பட்டது. புறநிலை நெருக்கடி ஏற்படும்போது தயாராக இருக்கும் காரியாளர்கள் உருவாக்கப்பட்டனர். இது, இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. தொழிலாள வர்க்கம் தந்திரங்கள் மற்றும் சூழ்ச்சிகளுக்கு இரையாகக் கூடாது என்பதையும், பசுமைக் கட்சியினர் சிறிது காலம் செய்ததைப் போல முற்போக்காக நடிக்கும் முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவையும் ஆதரிக்கக் கூடாது என்பதையும் அறிந்திருக்க வேண்டும். மாறாக, தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் போராடும் ஒரு சுயாதீனமான கட்சியை உருவாக்க வேண்டும்.

தொழிலாளர் இயக்கத்தில் சமூக ஜனநாயகம் ஆதிக்கம் செலுத்திய மற்றும் “இடது” வட்டாரங்களில் மார்க்சிச எதிர்ப்பு கோட்பாடுகள் மேலோங்கியிருந்த காலகட்டத்தில், வொல்ஃப்காங் நான்காம் அகிலத்தையும் உலக சோசலிசப் புரட்சிக்கான அதன் மார்க்சிச முன்னோக்கையும் பாதுகாத்தார். ஜேர்மன் ஜனநாயக குடியரசு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், “சோசலிசத்தின் தோல்வி” என்று எங்கும் அறிவிக்கப்பட்டபோதும், அவர் அதனை தொடர்ந்து எதிர்த்து வந்ததுடன், நான்காம் அகிலத்தையும் உலக சோசலிசப் புரட்சிக்கான அதன் மார்க்சிச முன்னோக்கையும் பாதுகாத்தார்.

வொல்ஃப்காங் தனது வாழ்வின் இறுதி ஆண்டுகளில், தான் ஆற்றிய பணியின் முக்கியத்துவத்தையும் குறிப்பிடத்தக்க தன்மையையும் அவரால் அனுபவமாக உணர முடிந்தது. உலகளாவிய முதலாளித்துவம் இறுதிக்கட்ட நெருக்கடியில் உள்ளது. அது போர், சமூக சமத்துவமின்மை, கலாச்சார வீழ்ச்சி மற்றும் பாசிசத்தை மட்டுமே உருவாக்குகிறது. சர்வதேச தொழிலாள வர்க்கம் இப்போது முன்னெப்போதையும் விட பரந்து விரிந்து, நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. உலக சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கான தீர்க்கமான ஆயுதமாக ட்ரொட்ஸ்கிசத்தைக் கண்டறியும் ஒரு பெரும் புயல் உருவாகி வருகிறது.

வொல்ஃப்காங்கை நாங்கள் பெரிதும் இழந்துள்ளோம்; அவரது மறைவு ஜேர்மனியிலும் உலகெங்கிலும் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு பேரிழப்பாகும். எனினும், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்திற்காகவும் உலக சோசலிசப் புரட்சிக்குமான அவரது இடைவிடாத போராட்டமும், அவர் கட்டியெழுப்ப உதவிய கட்சியின் வழியாக தொடர்ந்து செயலாற்றும். அவரது கடைசி மூச்சு வரை அவரிடம் நிரம்பியிருந்த அவரது நம்பிக்கை எங்களுக்கு மாபெரும் ஊக்கமளிக்கிறது.

Loading