கென்யாவின் இளம் தலைமுறையினரின் எழுச்சி, வேலைநிறுத்த அலை மற்றும் நிரந்தரப் புரட்சிக்கான போராட்டம் - பகுதி 2

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இந்தக் கட்டுரை மூன்று பகுதித் தொடரில் இரண்டாவது கட்டுரை ஆகும்.

பகுதி 1 | பகுதி 2

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டமும்

ட்ரொட்ஸ்கிச இயக்கம் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாட்டின் படிப்பினைகளைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது (ICFI), ஸ்டாலினிசம் மற்றும் மிஷேல் பப்லோவினதும் ஏர்னெஸ்ட் மண்டேலினதும் தலைமையிலான ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து விட்டோடிய பப்லோவாத ஓடுகாலிகள் போன்ற குட்டி-முதலாளித்துவ போக்குகளால் ஆதரிக்கப்பட்ட முதலாளித்துவ தேசியவாதத்தின் துரோகப் பாத்திரம் குறித்து எச்சரித்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவான சோசலிச தொழிலாளர் கழகம் (SLL - Socialist Labour League), கென்யாவின் சுதந்திரத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 1961 மே மாதம் ஒரு எச்சரிக்கையை இவ்வாறு விடுத்தது:

எர்னஸ்ட் மண்டேலுடன் மிஷேல் பப்லோ (வலது பக்கத்தில்) [Photo: WSWS]

இந்த சகாப்தத்தில் புரட்சிகர மார்க்சிசத்தின் இன்றியமையாத அம்சம் என்னவெனில், வளர்ச்சி குன்றிய நாடுகளின் தேசிய முதலாளித்துவ வர்க்கமானது ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தோற்கடிக்கவோ, ஒரு சுயாதீனமான தேசிய அரசை உருவாக்கவோ திறனற்றது என்ற கோட்பாடாகும். இந்த வர்க்கமானது ஏகாதிபத்தியத்துடன் பிணைப்புகளைக் கொண்டுள்ளது, மேலும் இது ஒரு சுயாதீனமான முதலாளித்துவ வளர்ச்சிக்கு முற்றிலும் செயலாற்ற முடியாதது, ஏனெனில் இது உலக முதலாளித்துவச் சந்தையின் ஒரு பகுதியாக இருப்பதால் முன்னேறிய நாடுகளின் உற்பத்திப் பொருட்களுடன் போட்டியிட இயலாது....

ஆபிரிக்காவிலுள்ள கானா போன்ற நாடுகள் அடைந்த “சுதந்திர” நிலையும், கென்யாவின் [ரொம்] ம்போயா (Mboya) போன்றவர்கள் வழிநடத்திய தேசிய சுதந்திர இயக்கங்களும் பிற நாடுகளில் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஊக்கமளிக்கின்றன என்பது உண்மையே. எனினும், நிக்ருமா, ம்போயா, நாசர், காசிம், நேரு, சுகர்னோ மற்றும் அவர்களைப் போன்றவர்கள் தங்கள் சொந்த நாடுகளின் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதே யதார்த்தம். அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள ஆதிக்க ஏகாதிபத்திய கொள்கை வகுப்பாளர்கள், இத்தகைய தலைவர்களிடம் அரசியல் “சுதந்திரத்தை” ஒப்படைப்பதன் மூலமோ அல்லது பாரூக் மற்றும் நூரிஸ்-சையத் போன்ற நிலப்பிரபுத்துவ சக்திகள் மீதான அவர்களின் வெற்றியை ஏற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே, சர்வதேச மூலதனத்தின் நலன்களும் மூலோபாய கூட்டணிகளும் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் பாதுகாக்கப்பட முடியும் என்பதை நன்கு உணர்ந்துள்ளனர்.

1953 இல் நிறுவப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, போருக்குப் பிந்தைய முதலாளித்துவ மறுஸ்திரப்படுத்தலின் அழுத்தத்தின் கீழ், தொழிலாள வர்க்கத்தின் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்துவ தலைமைகளுக்கு — அதாவது சமூக ஜனநாயகவாதிகள், ஸ்டாலினிஸ்டுகள் மற்றும் காலனியாதிக்க-எதிர்ப்பு இயக்கங்களில் மேலோங்கிய பல்வேறு முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ தேசியவாதப் போக்குகளுக்கு— தொழிலாளர்கள் தங்களைக் கீழ்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்த பாப்லோவாதப் போக்குக்கு எதிராகவும், மார்க்சிசத்தின் திரிபிற்கு எதிராகவும் ஒரு கடும் அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. இந்தச் சக்திகளுக்கு ஒரு புரட்சிகர ஆற்றலை வழங்கிய பாப்லோவாதிகள், நான்காம் அகிலத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியை கலைக்க முயன்றனர். சோசலிசத் தொழிலாளர் கழகம் பின்வருமாறு அப்போது எச்சரித்தது:

தேசியவாத தலைவர்களின் செல்வாக்கை அதிகரிப்பது ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் நோக்கமல்ல. சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்டாலினிசம் ஆகியவற்றின் தலைமைத்துவ துரோகத்தால் மட்டுமே அவர்களால் வெகுஜனங்களின் ஆதரவை கட்டளையிட முடிகிறது. இதன் விளைவாக, அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கும் வெகுஜனங்களுக்கும் இடையே இடைநிலையாளர்களாக மாறுகின்றனர். சோவியத் ஒன்றியத்தின் பொருளாதார உதவி வாய்ப்புகளானது அவர்களை ஏகாதிபத்தியவாதிகளுடன் கடுமையாக பேரம் பேச வைக்கிறது. இது முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ தலைவர்களிடையே உள்ள தீவிரவாதிகளை ஏகாதிபத்திய சொத்துக்களைத் தாக்கவும், மக்களின் ஆதரவை அதிகரிக்கவும் செய்கிறது. எனினும், எமது பார்வையில், ஒவ்வொரு சூழலிலும், இந்நாடுகளின் தொழிலாள வர்க்கமானது ஒரு மார்க்சிச கட்சியின் மூலம் அரசியல் சுயாதீனத்தைப் பெறுவதே முக்கியம் ஆகும். அவர்கள் சோவியத்துக்களை உருவாக்கி ஏழை விவசாயிகளை வழிநடத்தி, சர்வதேச சோசலிசப் புரட்சியுடனான அவசியமான தொடர்புகளை அங்கீகரிப்பதுமே இன்றியமையாததாக இருக்கிறது. எந்த சூழ்நிலையிலும், தேசியவாத தலைமையானது சோசலிஸ்டுகளாக மாறும் என்ற நம்பிக்கையை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் கொண்டிருக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு ஆகும். தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலை அவர்களின் சொந்தப் பணியாகும்.

பிரான்சுக்கு எதிரான 1954-1962 அல்ஜீரிய சுதந்திரப் போருக்குப் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி (FLN - National Liberation Front ), 1959 இல் கியூபாவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிடல் காஸ்ட்ரோவின் கெரில்லாக்கள், 1947 இல் பிரிட்டனிடம் இருந்து உத்தியோகபூர்வ சுதந்திரத்தின் பாகமாக திணிக்கப்பட்ட இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் எழுந்த முதலாளித்துவ ஆட்சிகள் உட்பட, உலகெங்கிலும், முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ தேசியவாதிகளை பப்லோவாதிகள் ஊக்குவித்தனர். கென்யாவில், கென்யாட்டாவின் (Kenyatta) கென்யா ஆபிரிக்க தேசிய ஒன்றியத்தின் (KANU) இடது பக்கம் அவர்கள் மாயைகளை அதிகரித்தனர்.

நான்காம் அகிலம் இதழின் 1963 ஜனவரி-மார்ச் பதிப்பு

சுதந்திரத்திற்கு முன்னதாக, பப்லோவாதிகளின் கோட்பாட்டு சஞ்சிகையான நான்காம் அகிலத்தின் 1963 ஜனவரி-மார்ச் பதிப்பு, முக்கிய பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்தது. இவற்றில் நிலப் பிரச்சினை, சுதந்திர கென்யாவின் ஆட்சி முறை (கூட்டாட்சி அல்லது மைய ஆட்சி), அரசியலமைப்பு எல்லைகள், பிராந்திய உரிமைகள் மற்றும் பிரிட்டிஷ் குடியேற்றவாசிகள் மீதான அணுகுமுறை ஆகியவை அடங்கும்.

[KANU] கட்சியின் இடதுசாரிகள் முக்கிய பிரச்சினைகளில் தெளிவற்று உள்ளனர். கென்ய அரசியலில் நிலவும் குழப்பம் மற்றும் பிற்போக்கு சூழலிலிருந்து வெளியேற வழி தேட வேண்டியது அவசியம். ஆபிரிக்க வெகுஜனங்களின் பேராற்றல் மிக்க போராட்ட உணர்வையும், குறிப்பாக விவசாயிகளின் நிலத்திற்கான தேவையையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும். எத்தகைய பிற்போக்கு சட்டங்கள் இயற்றப்பட்டாலும், வெகுஜனங்களின் அடிப்படை உரிமைகள் வெளிப்படும் என்பதால், மக்களின் போராட்டத்தை பழங்குடி வழிகளில் திசைதிருப்ப இயலாது. நில விடுதலை இராணுவம் [மௌ மௌ] ஊழல் அரசியல்வாதிகளின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு தடையாக உள்ளது.

கென்ய இடதுசாரி தேசியவாதிகள் மற்றும் தீவிரமயப்பட்ட விவசாயிகள் மீது விதைக்கப்பட்ட பிரமைகள் சுதந்திரத்தின் பின்னர் முற்றிலும் நிராகரிக்கப்பட்டன மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) முன்னோக்கை இவைகள் ஊர்ஜிதப்படுத்தின.

கென்யாவின் “இடதுசாரி” அணி துணை ஜனாதிபதி ஒடிங்கா (Odinga) மற்றும் மௌ மௌ தலைவர் பில்டாட் காக்கியா (Bildad Kaggia) ஆகியோரின் தலைமையில் ஒன்றுபட்டது. சோசலிசத்திற்காக போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்கள் மத்தியில் ஒரு வெகுஜன அடித்தளத்தை பாதுகாப்பதற்காக, அவர்கள் பின்வரும் கொள்கைகளை முன்வைத்தனர்: காலனித்துவத்தால் திணிக்கப்பட்ட எல்லைகளுக்குள் அரசால் இயக்கப்படும் தேசியவாத-முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி, இழப்பீடு இல்லாமல் ஐரோப்பிய குடியேறிய பண்ணைகளை கைப்பற்றுதல் மற்றும் சிவில் சேவை மற்றும் பொதுத்துறை வேலைகளை விரைவாக ஆபிரிக்கமயமாக்குதல் ஆகியவற்றை முன்வைத்தனர். இவை சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமான உறவு கொண்ட முதலாளித்துவ அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட வேண்டியவை என்றே கருதப்பட்டன, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கூட்டு நடவடிக்கையாக அல்ல.

கென்யாட்டாவும் எம்போயாவும் இறுதியில் KANU வின் இடதுசாரிப் பிரிவுக்கு எதிராகத் திரும்பினர். கென்யாட்டாவும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜேர்மனியிடமிருந்து பெற்ற கடன்களைப் பயன்படுத்தி, கிராமப்புற மக்களின் நலனுக்கு எதிராக வெள்ளையர் குடியேற்றவாசிகளிடமிருந்து நிலங்களை வாங்கி, பெரும் அளவிலான நிலங்களையும் செல்வங்களையும் கைப்பற்றினர். அரசுப் பணிகள், அரசு சார்பு நிறுவன வேலைகள், அரசாங்க ஒப்பந்தங்கள், கடன்கள் மற்றும் அமைச்சர் பதவிகள் அனைத்து சமூகங்களின் உயரடுக்கினருக்கும் வழங்கப்பட்டன. எனினும், கென்யாட்டாவின் கிகுயு (Kikuyu) இனத்தவர்கள் அதிகம் பயனடைந்தனர், இது வரும் தசாப்தங்களில் பழங்குடி வன்முறைக்கு விதையிட்டது. கென்யாட்டா மேலும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான கென்யாவின் உறவுகளை வலுப்படுத்தி, இராணுவத் தளங்களை நிறுவ அனுமதித்தார், அவை இன்றும் தொடர்கின்றன.

சுதந்திரத்திற்குப் பின்னரான ஆண்டுகளில், KANU வின் “இடதுசாரி” பிரிவு மற்றும் மௌ மௌ போராளிகளின் மீதமுள்ள சிறு குழுக்களிலிருந்து பப்லோவாதிகளால் ஆதரிக்கப்பட்ட சக்திகள், கென்யாட்டா ஆட்சியால் முறையாக ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்டன. காடுகளில் தங்கியிருந்த கடைசி மௌ மௌ தலைவர்களில் ஒருவரான ஜெனரல் பைமுங்கி (Baimungi), சுதந்திரம் கிடைத்த சில மாதங்களிலேயே கென்யாட்டாவின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டார், மேலும் மௌ மௌ அமைப்புகள் தடை செய்யப்பட்டன. முன்னாள் மௌ மௌ போராளியும் பத்திரிகையாளருமான பியோ காமா பின்டோ (Pio Gama Pinto) 1965 இல் படுகொலை செய்யப்பட்டார், அதைத் தொடர்ந்து 1975 இல் ஜனரஞ்சக தேசியவாதி ஜே.எம். கரியூகி கொல்லப்பட்டார். துணை ஜனாதிபதி ஒகிங்கா ஒடிங்கா KANU வை விட்டு வெளியேறி குட்டி-முதலாளித்துவ கென்யா மக்கள் ஒன்றியத்தை (Kenya People’s Union) அமைப்பதற்கு முன்னரே ஓரங்கட்டப்பட்டார். இந்த அமைப்பு பின்னர் தடை செய்யப்பட்டு, அதன் தலைவர்கள் 1969 இல் சிறையிலடைக்கப்பட்டனர்.

ஸ்டாலினிச தொழிற்சங்கத் தலைவர் மக்கான் சிங் (Makhan Singh), பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகளால் 11 ஆண்டுகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பின்னர், 1961ல் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையின் போது அவர், “கென்யாவில் உள்ள சுதந்திரத்தை நேசிக்கும் அனைத்து மக்களின் கடமையும் உடனடி சுதந்திரத்திற்காக ஜோமோ கென்யாட்டாவின் தலைமையின் கீழ் ஒன்றுபடுவதாகும்” என்று அறிவித்தார். அவர் விரைவில் KANU மற்றும் ம்போயாவின் KLF இல் இணைந்தார், பாராளுமன்றத்தில் ஒரு இடத்தைப் பெற முயன்றார். ஆனால் ஒடிங்கா மற்றும் சோவியத் அதிகாரத்துவத்துடனான அவரது தொடர்பின் காரணமாக கென்ய அரசியல் நிறுவனத்தால் ஒதுக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆட்சியின் முக்கிய வடிவமைப்பாளர்களில் ஒருவரான ரொம் ம்போயா 1969 இல் படுகொலை செய்யப்பட்டார் - இதற்கு கென்யாட்டா பரவலாக முதன்மை சந்தேக நபராகக் கருதப்பட்டார்.

“இரண்டாவது விடுதலைப் போராட்டம்” என்ற மோசடி

ஆபிரிக்காவின் பிற பகுதிகளில் உள்ள தனது சகாக்களைப் போலவே - கானாவின் நிக்ரூமா, கினியாவின் செகோ டூரே, தான்சானியாவின் நைரேரே, மொசாம்பிக்கின் மச்செல் மற்றும் தென்னாபிரிக்காவின் மண்டேலா, கென்யாட்டாவின் ஆட்சி (1963-1978), அதைத் தொடர்ந்து அவருக்குப் பின் பதவிக்கு வந்த டானியல் அராப் மோய் (1978-2002) ஆட்சி, வெளிநாட்டு ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கான ஆபிரிக்க மக்களின் அபிலாஷைகளை அடைவதற்கு ஆபிரிக்காவின் முதலாளித்துவ தேசியவாதிகளின் இயல்பான இயலாமையை இது அம்பலப்படுத்தியது.

கென்யாவின் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் துரோக பாத்திரம் வெளிப்படையானபோது, 1970கள் மற்றும் 1980களில் இரகசிய மாவோயிச இயக்கங்கள் வெளிப்பட்டன. இவை “இரண்டாவது விடுதலைப் போராட்டம்” என்ற கருத்தை முன்வைத்தன. இது உண்மையில் ஸ்டாலினின் பழைய “இரு-கட்ட புரட்சிக் கோட்பாட்டின்” புதிய வடிவமாகும். முதல் கட்டத்தில் தேசிய விடுதலையும் முதலாளித்துவ ஜனநாயகமும், அடுத்த கட்டத்தில் சோசலிசமும் என்பதே இந்தக் கோட்பாட்டின் சாராம்சம்.

கென்யாவைப் போன்ற நாடுகளில், முதலாளித்துவ தேசியவாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றி, ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் முதலாளித்துவ சர்வாதிகாரங்களை நிறுவிய இடங்களில், மாவோயிஸ்டுகள் “ஜனநாயகக்” கட்டம் நிறைவடையவில்லை என்று வலியுறுத்தினர். இந்த நோக்கத்திற்காக, அவர்கள் முதலாளித்துவ வர்க்கம் உட்பட அனைத்து வர்க்கங்களிலும் உள்ள “முற்போக்கான” மற்றும் “தேசபக்தி” சக்திகளுடன் கூட்டணிகளை உருவாக்க முயன்றனர்.

1962 இல் நிகிதா குருசேவ் ( Nikita Khrushchev) [Photo by Nationaal Archief, the Dutch National Archives, and Spaarnestad Photo / undefined]

சோவியத் அரச தலைவர் நிகிட்டா குருஷ்சேவ் 1956 இல் தனது “இரகசிய உரையை” வழங்கிய பின்னர், 1950 களின் பிற்பகுதியில் மாவோயிசம் ஒரு தனித்துவமான ஸ்டாலினிச போக்காக உருவெடுத்தது. இந்த உரையில் அவர் ஸ்டாலினின் குற்றங்களில் சிலவற்றைக் கண்டனம் செய்தார், ஆனால் ட்ரொட்ஸ்கிச இடது எதிர்ப்பாளர்களின் தலைவர்களையும், மாஸ்கோ விசாரணைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களையும் தனது பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து வேண்டுமென்றே விலக்கி வைத்தார்.

மாவோ “சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தை” கண்டனம் செய்தார். அதைத் தொடர்ந்து, 1971இல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நோக்கி நடைமுறைவாதத் திருப்பம் எடுத்தார், மேலும் வாஷிங்டனுடன் உண்மையில் சோவியத்-எதிர்ப்பு கூட்டணியை உருவாக்கினார். அமெரிக்காவுடனான அவரது நல்லிணக்கம், வெளிநாட்டு முதலீடு மற்றும் மேற்கத்திய நாடுகளுடனான வர்த்தக அதிகரிப்புக்கான அடிப்படை நிபந்தனையாக இருந்தது. இது சந்தை சீர்திருத்தங்களையும் முதலாளித்துவத்தின் இறுதி மீட்சியையும் தொடங்கி வைத்தது. மாவோவின் வாரிசுகள் 1989 இல் தியனென்மென் சதுக்கத்தில் தொழிலாள வர்க்கத்தை கொடூரமாக ஒடுக்கிய பின்னர், சீனாவை உலகின் சுரண்டல் தொழிற்சாலையாக மாற்றினர். சோவியத் ஸ்டாலினிஸ்டுகளும் இறுதியில் 1991 இல் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தை மீண்டும் நிறுவினர்.

சோவியத் அதிகாரத்துவத்துடனான உடைவு உலகெங்கிலும் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் பிளவுகளுக்கு இட்டுச் சென்றது, இதன் விளைவாக, குறிப்பாக ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்கா முழுவதிலுமான ஒடுக்கப்பட்ட நாடுகளில் மாவோயிச குழுக்கள் உருவாக்கப்பட்டன. இக்கட்சிகள் உண்மையான மார்க்சிச கட்சிகள் கட்டப்படுவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்தன.

முன்னாள் காலனிகளில், மாவோயிசம் தன்னை சோவியத் ஸ்டாலினிசத்திற்கு ஒரு இடதுசாரி மாற்றாக முன்னிலைப்படுத்தியது. சீனப் பிரதமர் சூ என்லாய் 1963-64 இல் 10 ஆபிரிக்க நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் புதிதாக சுதந்திரம் பெற்ற அரசுகளுக்கும், தேசிய முதலாளித்துவ விடுதலை இயக்கங்களுக்கும் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் இராணுவ ஆதரவிற்கு உறுதியளித்தார். 1965 ஜூனில் தான்சானியாவுக்கு மீண்டும் விஜயம் செய்த அவர், “ஆபிரிக்கா புரட்சிக்குத் தயாராக உள்ளது” என்று கூறினார். இது தெளிவாக கென்யாட்டாவின் கீழ் இருந்த கென்யாவை இலக்காகக் கொண்டிருந்தது. இதற்கு எதிர்வினையாக, கென்யாட்டா பெய்ஜிங்குடனான உறவில் பதட்டங்களை அதிகரித்து எதிர்வினையாற்றினார்.

அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் ( Nixon), ஏர் ஃபோர்ஸ் வன் விமானத்தின் படிக்கட்டு அடிவாரத்தில் நின்று சூ என்லாயுடன்( Chou EnLai) கைகுலுக்குகிறார். பாட் நிக்சனும் (Pat Nixon) சீன அதிகாரிகளும் அருகில் நிற்கின்றனர். பிப்ரவரி 21, 1972.

ஆயினும், மாவோயிசம் அதே வெளிப்படையான ஸ்டாலினிச “இரண்டு-கட்ட புரட்சி” மற்றும் அதனுடைய கண்டுபிடிப்பான “நான்கு வர்க்கங்களின் கூட்டு” ஆகியவற்றை ஒரு “தேசிய ஜனநாயகப் புரட்சி”க்கான போராட்டமாக குறியீடாக்கியது. அது முதலாளித்துவ தேசியவாதம், விவசாயிகளின் தீவிரவாதம் மற்றும் ஸ்டாலினிசம் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையை தனக்கு அடித்தளமாக கொண்டிருந்தது.

ஒவ்வொரு நாட்டிலும், மாவோயிஸ்ட்டுக்கள் முதலாளித்துவத்தின் ஏதாவதொரு பிரிவுடன் கூட்டணிகளை ஏற்படுத்திக் கொண்டு, உண்மையான பாட்டாளி வர்க்க புரட்சிகரக் கட்சிகள் கட்டப்படுவதை தடுத்து, பேரழிவுகளை உருவாக்கினர்.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது இந்தோனேசியா ஆகும். அங்கு, உலகின் மிகப்பெரிய பெய்ஜிங்-சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாள வர்க்கத்தை சுகர்னோவின் முதலாளித்துவ தேசியவாத ஆட்சிக்கு கீழ்ப்படுத்தியது. இது இந்தோனேசிய பாட்டாளி வர்க்கத்தை, ஒரு இராணுவப் புரட்சியை எதிர்கொள்ளும்போது அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்கி பாதுகாப்பற்றதாக்கியது. 1965 ல் இந்தப் புரட்சியின் போது, சுமார் 10 இலட்சம் தொழிலாளர்களும் விவசாயிகளும் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.

தொடரும்....

Loading