மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை சுற்றி வளைக்கவும் கைது செய்யவும் இராணுவம் பயன்படுத்தப்படும் என்று ட்ரம்ப் சூளுரைக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று தேசிய அவசரநிலையை அறிவிக்க விரும்புவதாகவும், ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றவுடன் மில்லியன்கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்த விரும்புவதாகவும் உறுதிப்படுத்தினார். ட்ரம்ப் அவரது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் அதிவலது குழுவான நீதித்துறை கண்காணிப்பு (Judicial Watch) இன் தலைவர் டாம் ஃபிட்டன் (Tom Fitton) எழுதிய ஒரு பதிவை மேற்கோளிட்டு வழிமொழிந்தார்.

ட்ரம்ப் “ஒரு தேசிய அவசரகால நிலையை அறிவிக்க தயாராக உள்ளார் என்பதோடு, பாரிய நாடுகடத்தல் திட்டத்தின் மூலமாக பைடெனின் படையெடுப்பை மாற்றியமைக்க இராணுவ ஆதாரவளங்களைப் பயன்படுத்துவார்” என்று ஃபிட்டன் எழுதினார். பாசிச முன்னாள் ஜனாதிபதி இந்த இடுகையை ஒரு வார்த்தையுடன் மேற்கோள் காட்டினார்: “உண்மையானது !!”

அந்த அறிக்கையானது திங்களன்று காலை 4:03 மணிக்கு வெளியிடப்பட்டதில் இருந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது முன்கண்டிராத ஒரு சர்வாதிகார தாக்குதலுக்கு தயாரிப்பு செய்ய ஏற்கனவே நடந்து வரும் முக்கியமான திட்டமிடல் குறித்து பெயரிடப்படாத ட்ரம்ப் உதவியாளர்களை மேற்கோளிட்டு ஏராளமான கட்டுரைகளை ஊடகங்கள் பிரசுரித்துள்ளன.

குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க முகமையால் (ICE -Immigration and Customs Enforcement) தற்போது நடத்தப்படும் தடுப்புக்காவல் மையங்களை விரிவுபடுத்துவது குறித்த விரிவான விவாதங்களும் இதில் உள்ளடங்கும். இவை ஏற்கனவே பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தின் கீழ் செய்யப்பட்ட பாரிய கைதுகளால் நிரப்பப்பட்டுள்ளன, குறிப்பாக கடந்த ஆண்டில், ஜனநாயகக் கட்சியினர் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ட்ரம்புடன் போட்டியிட முனைந்தனர்.

ட்ரம்ப் மற்றும் அவரது உயர்மட்ட குடிவரவு ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் பரிந்துரைத்த அளவிற்கு, வசதிகளை இயக்குவதற்கு தேவையான பணியாளர்கள் ICE யிடம் இல்லை. இந்த தடுப்பு முகாம்களின் செயல்பாடு தவிர்க்க முடியாமல் பென்டகனின் அதிகார வரம்பின் கீழ் வரும், இது பாஸே கமிடேட்டஸ் (Posse Comitatus) சட்டத்தை மீறுவதாகும். இந்தச் சட்டம் அமெரிக்க இராணுவத்தை அமெரிக்க எல்லைகளுக்குள் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடை செய்கிறது.

டெக்சாஸில் உள்ள புலம்பெயர்ந்தோர் நிரம்பி வழியும் இடத்திலிருந்து கசிந்த புகைப்படம்.

ட்ரம்ப் உட்பட முந்தைய நிர்வாகங்கள், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் மொத்த எண்ணிக்கையை 11-12 மில்லியன் என்று மதிப்பிட்டிருந்தன. அவர்களில் குறைந்தது பாதி பேர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர் மற்றும் அமெரிக்க குடிமக்களாக இருக்கும் பல குழந்தைகளைக் கொண்டுள்ளனர். ட்ரம்ப் அவரது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாடுகடத்துவதற்கு அவர் இலக்கு வைக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 15 மில்லியனாகவும், பின்னர் 20 மில்லியனாகவும் படிப்படியாக அதிகரித்துள்ளார்.

உண்மையில், “சட்டவிரோதமானவர்கள்” என்று சந்தேகிக்கப்படும் எவரொருவரும், அவர்களின் உண்மையான அந்தஸ்து என்னவாக இருந்தாலும், பொலிஸ்-இராணுவ சுற்றிவளைப்பில் அழைத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பல சந்தர்ப்பங்களில் அவர்கள் ஒருபோதும் வாழ்ந்திராத, மற்றும் அவர்கள் பேசாத மொழிகளைக் கொண்ட நாடுகளுக்கு அவர்களை திருப்பி அனுப்பப்படுவதற்காக அழைத்துச் செல்ல விமானங்களில் ஏற்றப்படுவார்கள். இது இனவாத போலீசின் மிக இழிவான குணாம்சங்களில் ஒன்றாகும்.

பெருந்திரளான மக்களை நாடு கடத்தும் அச்சுறுத்தலின் அளவு மலைப்பூட்டுவதாக உள்ளது. ஒபாமா நிர்வாகத்தால் 2013 இல் 430,000 புலம்பெயர்ந்தோர் ஒரே ஆண்டில் இதுவரை நாடுகடத்தப்பட்டவர்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். ட்ரம்ப் பதவியில் இருந்த முதல் நான்காண்டு காலத்தில், ஜனநாயகக் கட்சியின் “நாடுகடத்துவதில் ஈடுபட்ட தலைவர்” என்ற சாதனையை ஒருபோதும் சமன் செய்ததில்லை.

பெடரல் குடிபெயர்வு நீதிபதிகளால் வழங்கப்பட்ட இறுதி நாடுகடத்தல் உத்தரவுகளுக்கு உட்பட்ட 1.2 மில்லியன் புலம்பெயர்ந்தவர்களே அவரது முதல் இலக்காக இருக்கும் என்பதை ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். கியூபா, வெனிசுவேலா மற்றும் நிகரகுவா போன்ற அமெரிக்காவின் ஸ்திரமின்மை பிரச்சாரங்களால் தற்போது இலக்கில் வைக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து அகதிகளுக்கான நுழைவு விலக்கு விதிகளின் கீழ் நுழைய அனுமதிக்கப்பட்ட 530,000 புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். முக்கியமாக வெனிசூலா, ஹைட்டி, எல் சால்வடார், ஹோண்டுராஸ் மற்றும் உக்ரேனில் இருந்து வரும் மற்றொரு 860,000 பேருக்கு தற்காலிக பாதுகாக்கப்பட்ட அந்தஸ்து (TPS - Temporary Protected Status) இரத்து செய்யப்படுவது மற்றொரு நடவடிக்கையாக இருக்கும்.

ட்ரம்பும் மில்லரும் உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய உடன்பாட்டின் ஒரு முக்கிய விதிமுறையான “பிறப்புரிமை குடியுரிமையை” சவால் செய்ய திட்டமிட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. “பிறப்புரிமை குடியுரிமை (birthright citizenship) “ அமெரிக்க மண்ணில் பிறக்கும் எந்தவொரு குழந்தையும் இயல்பாகவே அமெரிக்க குடியுரிமைக்கு உரிமை உடையவர் என்று அறிவிக்கும் அரசியலமைப்பின் 14 வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது, 1942 முதல் காங்கிரஸ் மற்றொரு நாட்டின் மீது போர் அறிவிக்கவில்லை என்றாலும், ஒரு போரின் போது “எதிரி வெளிநாட்டினரை” தடுத்து வைக்க அமெரிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கும் 1798 ஆம் ஆண்டின் அந்நிய எதிரிகள் சட்டத்தை (1798 Alien Enemies Act) செயல்படுத்துவதாக பதிவியேற்கவிருக்கும் ஜனாதிபதி அச்சுறுத்தியுள்ளார். இந்தச் சட்டத்தின் பயன்பாடு அடிப்படையில் அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையிலான எல்லையைக் கடக்க அல்லது அவர்களின் விசா காலம் முடிந்தும் தங்கியிருக்க விரும்பும் குடிமக்கள் அனைவர் மீதும், அதாவது உலகம் முழுவதின் மீதும் போர் பிரகடனம் செய்வதற்கு ஒப்பானதாகும்.

கியூபா, ஹைட்டி, வெனிசுவேலா மற்றும் பெரும்பாலான மத்திய அமெரிக்க நாடுகள் உட்பட சில நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கும், அத்துடன் அமெரிக்க படையெடுப்புகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பிற நாடுகளில் இருந்து உள்ளூர் அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பாளர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ள சிறிய குழுக்களுக்கும் நிபந்தனையுடன் கூடிய விசாக்கள் அல்லது தற்காலிக அந்தஸ்து வழங்க அனுமதிக்கும் அனைத்து திட்டங்களையும் புதிய நிர்வாகம் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இரத்து செய்துவிடும்.

ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதற்குப் பின்னர், முதலாவதாக பெரியளவிலான முயற்சியானது அநேகமாக புதிய தடுப்புக்காவல் மையங்களைக் கட்டமைப்பதாக இருக்கும், இவற்றில் பல சட்டபூர்வ அல்லது ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் பெரும் மக்கள்தொகை உள்ள நியூ யோர்க், சிகாகோ மற்றும் ஹூஸ்டன் போன்ற பிரதான பெருநகரங்களுக்கு அருகே திட்டமிடப்பட்டுள்ளன.

புதிய ஜனாதிபதி ஜனவரி 20 அன்று பதவியேற்றவுடன் வெளியிடக்கூடிய நிர்வாக உத்தரவுகளை ட்ரம்பின் வழக்கறிஞர்கள் ஏற்கனவே வரைவு செய்து வருகின்றனர். ஹைட்டியர்கள் போன்ற பல நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தோருக்கான தற்காலிக பாதுகாக்கப்பட்ட அந்தஸ்தை நீக்குவதும் இதில் உள்ளடங்கும், அவர்களில் ஓஹியோவின் ஸ்பிரிங்ஃபீல்டில் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் 20,000 ஹைய்ட்டியர்களும் அடங்குவர், இவர்கள் ட்ரம்ப் மற்றும் அவரது துணை ஜனாதிபதி வேட்பாளர் ஓஹியோ செனட்டர் ஜே.டி. வான்ஸின் அவதூறு மற்றும் பொய்யான குற்றச்சாட்டுக்களின் இலக்காக உள்ளனர்.

மற்றொரு உத்தரவு, ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் குடியேற்ற எதிர்ப்பு உத்தரவுகளை மாற்றியமைத்து ஜனாதிபதி பைடெனின் கீழ் பிறப்பிக்கப்பட்ட அனைத்து நிர்வாக உத்தரவுகளையும் இரத்து செய்யும். தஞ்சம் கோருவோர் தங்களின் கோரிக்கைகளை அமெரிக்காவிற்குள் இருந்து அல்லாமல் மெக்சிகோவில் உள்ள தடுப்புக்காவல் மையங்களில் இருந்து முன்வைக்க நிர்பந்திப்பதன் மூலமாக சர்வதேச சட்டத்தை மீறுகின்ற “மெக்சிகோவில் தங்கியிரு” கொள்கையை மீட்டமைப்பதும் இதில் உள்ளடங்கும்.

தடுப்புக்காவல் மையங்களின் ஒரு பாரிய விரிவாக்கத்தைப் பின்தொடர்வதில், ட்ரம்ப் நிர்வாகம், நவம்பர் 5 தேர்தலுக்குப் பின்னர் பங்கு விலைகள் உயர்ந்துள்ள நிறுவனங்களான கோர்சிவிக் (CoreCivic) மற்றும் ஜியோ (Geo) போன்ற தனியார் சிறை நிறுவனங்களுக்கு பல பில்லியன் டாலர் வெகுமதியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்களுடனான ஒரு மாநாட்டு அழைப்பில், கோர்சிவிக் தலைமை நிர்வாக அதிகாரி டாமன் ஹைனிங்கர் (Damon Hininger) அறிவித்தார்: “இந்த தேர்தலின் முடிவு ICE க்கு முக்கியமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் பல காரணங்களுக்காக. முதலாவதாக, தடுப்புக்காவல் திறனுக்கான தேவை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

என்பிசி நியூஸ் தகவல்படி, குறிப்பாக நியூ யோர்க், வாஷிங்டன் மற்றும் சிகாகோ போன்ற நகரங்களுக்கு அருகில், ICE நடவடிக்கைக்காக காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்ட கைதிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க ட்ரம்பின் புலம்பெயர்வு குழு திட்டமிட்டுள்ளது, மேலும் இது தனியார் சிறை நிர்வாகிகளுடன் ஒரு ICE ஒப்பந்தத்தின் மூலமாக நிறைவேற்றப்படலாம்.

இது குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது:

நாடுகடத்தல்களின் எண்ணிக்கையை வியத்தகு முறையில் அதிகரிக்க ஒரு பன்முக திட்டத்தை உருவாக்கியுள்ளதாக திரு ட்ரம்ப்பின் குழு கூறியது, இது புதிய காங்கிரஸ் சட்டம் இல்லாமல் நிறைவேற்ற முடியும் என்று நம்பியது, இருப்பினும் சட்ட சவால்களை எதிர்பார்த்தது.

மற்றய முகமைகளில் இருந்து தற்காலிகமாக மறுநியமனம் செய்யப்படும் சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் ICE அதிகாரிகளின் பதவிகளை அதிகரிப்பது, மற்றும் கிளர்ச்சி சட்டத்தின் கீழ் உள்நாட்டு மண்ணில் சட்டத்தை அமல்படுத்த மாநில தேசிய காவலர்கள் மற்றும் கூட்டாட்சி துருப்புகள் செயலூக்கத்துடன் இருப்பது ஆகியவை குழுவின் திட்டத்தின் மற்ற கூறுகளில் உள்ளடங்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் இருப்பதை நிரூபிக்க முடியாதநிலையில் நாட்டின் உட்புறம் முழுவதும் வசிக்கும் மக்களுக்கு, தற்போது எல்லைக்கு அருகில் பயன்படுத்தப்படும் விரைவான அகற்றுதல் என்று அழைக்கப்படும் உரிய செயல்முறை இல்லாத வெளியேற்றங்களின் ஒரு வடிவத்தை விரிவுபடுத்தவும் குழு திட்டமிட்டுள்ளது.

பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில், உள்நாட்டு மண்ணில் பிறந்த குழந்தைகளுக்கு கடவுச்சீட்டு மற்றும் சமூக பாதுகாப்பு அட்டைகள் போன்ற குடியுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்குவதை நிறுத்துவதற்குக் குழு திட்டமிட்டுள்ளது.

அதிகாரத்திற்கு எதிரான கிளர்ச்சிச் சட்டம் (Insurrection Act) என்பது 1807 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டமாகும். 2020 இல், மினியாபோலிஸில் ஜார்ஜ் பிளாய்டின் (George Floyd) பொது மற்றும் விரிவாக பிரசாரம் செய்யப்பட்ட கொலைக்குப் பிறகு, போலீஸ் வன்முறைக்கு எதிரான பெரும் வெகுஜனப் போராட்டங்களை ஒடுக்க இந்தச் சட்டத்தை பயன்படுத்தி ட்ரம்ப் இராணுவத்தை தெருக்களில் அனுப்ப முயன்றார், ஆனால் அவரால் இதைச் செயற்படுத்த முடியாமல் இருந்தது.

Loading