வொல்ஃப்காங் வேபரின் நினைவாக (6 ஜூன் 1949 - 16 நவம்பர் 2024)

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ட்ரொட்ஸ்கிசத்திற்கான ஒரு தலைசிறந்த போராளியும் சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP-ஜேர்மனி) நீண்டகால தேசியக் குழு உறுப்பினருமான வொல்ஃப்காங் வேபர் (Wolfgang Weber), நவம்பர் 16 சனிக்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது மரணம் SGP மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) அனைத்து தோழர்களுக்கும் ஒரு பெரிய இழப்பாகும், அவர்களில் பலர் அவருடன் பல தசாப்தங்களாக நெருக்கமாகவும், பலர் அரை நூற்றாண்டுக்கும் மேலாகவும் பணியாற்றினர்.

நவம்பர் 2023 இல், காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான கூட்டத்தில் வொல்ஃப்காங் வெபர் உரையாற்றுகிறார். [Photo: WSWS]

பிரிட்டனில் 1970களின் ஆரம்பத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட வொல்ப்காங், அங்கு பல ஆண்டுகளாக பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பு மாணவராக இருந்தார். அவர் அந்த சமயத்தில் பிரிட்டிஷ் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்த இயக்கத்தாலும் ஜெரி ஹீலியின் தலைமையின் கீழ் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் கொள்கைப் பிடிப்பான போராட்டத்தாலும் ஈர்க்கப்பட்டார். மார்க்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி ஆகியோரின் எழுத்துக்களைத் தீவிரமாகப் படிப்பதற்கு, அவர் தனது மாணவர்கள் தங்கும் விடுதியை பயன்படுத்திக் கொண்டார்.

ஜேர்மனிக்கு திரும்பிய அவர், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பான சோசலிச தொழிலாளர் கழகத்தில் (BSA - Bund Sozialistischer Arbeiter) ஓர் அங்கத்தவரானார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, கட்சிக்காக முழுநேரமாக வேலை செய்வதற்கு அவர் தயாராக இருக்கிறாரா என்று கேட்கப்பட்டபோது, அவர் தயக்கமின்றி தனது படிப்பை விட்டுவிட்டு, அந்த நேரத்தில் எங்கள் மைய பத்திரிகையான Neue Arbeiterpresse இன் ஆசிரியர் பொறுப்பை பல ஆண்டுகளாக ஏற்றுக்கொண்டார்.

ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வின் அடிப்படையில், வொல்ஃப்காங் ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர பாத்திரம் குறித்து பல கட்டுரைகளை எழுதினார். தொழிலாள வர்க்கத்தில் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தோற்றம் மற்றும் அபிவிருத்தி பற்றிய ஒரு தெளிவான புரிதல் அவசியப்படுகிறது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

சந்தர்ப்பவாதரீதியில் உருக்குலைந்து ஸ்ராலினிசத்திற்கு நெருக்கமாக நகர்ந்திருந்த பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் (WRP) 1985/86 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முறித்துக் கொண்ட போது, வொல்ஃப்காங் உறுதியாக ICFI இன் பக்கம் நின்றார்.

1990 களின் தொடக்கத்தில், அவர் எழுதிய GDR - 40 Years of Stalinism: A Contribution to the History of the GDR (ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு - ஸ்ராலினிசத்தின் 40 ஆண்டுகள்: ஜேர்மன் ஜனநாயக குடியரசின் வரலாற்றுக்கு ஒரு பங்களிப்புடன், ஜேர்மன் மொழியில் மட்டும்) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர், அவர் போலந்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த அவரது கட்டுரைகளை போலந்தில் ஒற்றுமை 1980-81 மற்றும் அரசியல் புரட்சியின் முன்னோக்கு என்ற புத்தகத்தில் ஒன்றாக வெளியிட்டிருந்தார். போலந்து தொழிலாள வர்க்கத்தை பப்லோவாதிகள் காட்டிக்கொடுத்ததற்கு எதிராக அவர் ஒரு கூர்மையான விவாதத்தை நடத்தியதோடு, மேலும் WRP தலைமையின் பிற்போக்கு நிலைப்பாட்டை பற்றியும் கையாண்டார்.

வரலாற்று உண்மையைப் பாதுகாப்பதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்தில் வொல்ஃப்காங் ஒரு முக்கிய பாத்திரம் வகித்து வந்தார். ரொபர்ட் சர்வீஸின் ட்ரொட்ஸ்கியின் அவதூறான சுயசரிதை, டேவிட் நோர்த் தனது லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகார் என்ற புத்தகத்தில் விரிவாக மறுத்திருந்த பொய்யாக்கங்கள் ஜேர்மனியில் வெளியிடப்பட இருந்தபோது வொல்ப்காங் இந்த முயற்சியைக் கைப்பற்றினார்.

நன்கு அறியப்பட்ட, ஆனால் ஏற்கனவே மிகவும் வயதான வரலாற்றாசிரியர் பேராசிரியர் ஹெர்மன் வேபரைத் தொடர்பு கொண்ட வொல்ஃப்காங், அவருடன் இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். “ரோபர்ட் சேர்விஸ் ஒரு வசைமாரியை எழுதியுள்ளார், இது ஒரு விஞ்ஞானபூர்வ விவாதம் அல்ல!” என்ற தலைப்பிலான பேராசிரியர் வேபர் உடனான வொல்ஃப்காங்கின் நேர்காணல் இன்றும் ஈர்க்கிறது.

சேர்விஸின் வசைமாரிக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க புகழ்பெற்ற பன்னிரண்டு வரலாற்றாசிரியர்களை வொல்ஃப்காங் இணங்க வைத்தார். மேலும் சுஹ்ர்காம்ப் பதிப்பகம் (Suhrkamp Verlag) விரிவான திருத்தங்களைச் செய்து ஒரு வருடத்திற்கும் மேலாக அந்த வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அவரது அயராத அரசியல் பணிகளுக்கு மேலதிகமாக, வொல்ஃப்காங் கலாச்சார பிரச்சினைகளில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் நாடகம் அல்லது இசை நாடகத்தைப் பார்வையிட ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டார். மேலும் இந்த கேள்விகளை தொழிலாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

சமீபத்திய ஆண்டுகளில், புற்றுநோயுடன் போராடிய அவர், தனது கடைசி மூச்சு வரை அரசியலில் சுறுசுறுப்பாகவும் ஈடுபாட்டுடனும் இருந்தார். ஒரு சில நாட்களுக்கு முன்னர், அவர் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பின் அங்கத்தவர்களின் ஒரு ஆய்வுக் குழுவிற்கு தலைமை வகித்ததுடன், கட்சியின் தேசியக் குழுவின் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பினார்.

வொல்ஃப்காங் வேபர் தனது முழு வாழ்க்கையையும் தொழிலாள வர்க்கத்திற்கு சேவை செய்வதற்கும் சோசலிசப் புரட்சிக்கான தயாரிப்பிற்கும் அர்ப்பணித்த ஒரு தலைசிறந்த போராளி ஆவார்.

ஆம், எங்கள் தோழர் மற்றும் நண்பனின் மறைவு எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் பலம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் முக்கியத்துவத்தின் மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கையானது, நமக்கு ஒரு உதாரணத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.

அவரது அரசியல் வாழ்க்கை குறித்த விரிவான விமர்சனத்தை விரைவில் வெளியிடுவோம். sgp@gleichheit.de க்கு இரங்கல் கடிதங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading