முன்னோக்கு

ஆர்ஜென்டினாவின் பாசிச ஜனாதிபதி மிலேயை வரவிருக்கும் அமெரிக்க நிர்வாகத்திற்கான ஒரு முன்மாதிரியாக ட்ரம்ப் அறிவிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், வெளிநாட்டு அரசு தலைவர் உடனான அவரது முதல் சந்திப்பின்போது, புளோரிடாவில் உள்ள அவரது மார்-அ-லாகோ (Mar-a-Lago) உல்லாச விடுதியில் வியாழனன்று ஆர்ஜென்டினாவின் பாசிச ஜனாதிபதி சேவியர் மிலேய்க்கு (Javier Milei) ஒரு பிரம்மாண்டமான இரவு விருந்தளித்தார்.

சேவியர் மிலேய் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருடன் எலோன் மஸ்க் போஸ் கொடுக்கிறார் [Photo by Elon Musk]

அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்கு (MAGA) இயக்கத்தின், தனது சக தன்னலக்குழுக்களுக்கு முன்னால் வழங்கிய அறிக்கையில், கைதட்டல்களுக்கு மத்தியில் மிலேயை தனது நட்சத்திர விருந்தினராகவும் முன்மாதிரியாகவும் ட்ரம்ப் அறிமுகப்படுத்தினார்.  மேலும் ட்ரம்ப், “நீங்கள் செய்த பணி அபாரமானது. ஆர்ஜென்டினாவை மீண்டும் சிறந்ததாக்குங்கள், உங்களுக்கு MAGA வை தெரியும், நீங்கள் ஒரு MAGA மனிதர்” என்று குறிப்பிட்டார்.

இந்த காலா கொண்டாட்டமே ஒரு ஆபாசக் காட்சியாக இருந்தது. ஒரு நுழைவுச் சீட்டுக்கு 25,000 டாலர் வரை பணம் செலுத்திய பணக்கார பங்கேற்பாளர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த கண்ணாடிக் குவளைகளை தட்டி ஒலி எழுப்பியதுடன், மிலேய் மேடைக்குச் செல்லும் வழியில் “YMCA” பாடலுக்கு நடனமாடி எழுந்து நின்று கரவொலியும் எழுப்பினர். அங்கு மிலேய் ஹிட்லரின் கூச்சலுடன் கோமாளித்தனமான குரல்களை எழுப்பினார். ஒரு கட்டத்தில், ராம்போ போன்ற வெற்று தலை குண்டர்களாக நடித்து புகழ்பெற்ற சில்வஸ்டர் ஸ்டாலோன், ஆர்ஜென்டினா பாசிஸ்டைக் கட்டிப்பிடித்து கை விரல்களை மடித்து இருவரும் இடித்துக் கொண்டனர்.

ட்ரம்பின் வெற்றிக்குப் பின்னர், “உலகத்தின் மிகச் சிறந்த இடத்தில் சுதந்திரத்தின் காற்று மிகவும் வலுவாக வீசுகிறது” என்று ட்ரம்பை வாழ்த்திய மிலேய், “வரலாற்றிலேயே மிகப் பெரிய அரசியல் மறுபிரவேசம்” என்று கூறினார்.

இதற்கு பின்னர் அவர் “சோசலிசத்தின்” மீதான நீண்ட தாக்குதலைத் தொடங்கினார். அது அங்கிருந்தோர் மத்தியில் ஆரவாரத்தையும் விசில் சத்தங்களையும் தூண்டியது. மேலும், “1848 இல், மார்க்ஸ் தனது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற ஒரு மோசமான துண்டுப் பிரசுரத்தில், கம்யூனிச பூதம் ஐரோப்பாவை ஆட்டிப்படைக்கிறது என்று எழுதினார். ஆனால் இன்று, ஒரு வித்தியாசமான பூதம் உலகை ஆட்டிப்படைக்கிறது, அது சுதந்திரத்தின் பூதம்” என்று மிலேய் கூறினார்.

மிலேயின் வாயில் இருந்து வரும் “சுதந்திரம்” என்ற வார்த்தை, பெருநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஏகபோகங்கள் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதன் மூலமாக, இலாபத்தை பின்தொடர்வதன் மீதான எந்தவொரு இடையூறில் இருந்தும் அவற்றை விடுவிப்பதை அர்த்தப்படுத்துகிறது.

உழைக்கும் மக்களின் சமூக அந்தஸ்தை 19ம் நூற்றாண்டிற்கு கடிகாரத்தை பின்னோக்கி திருப்புவதற்கு மிலேய் வெளிப்படையாக ஆதரவாக இருக்கிறார். ஆர்ஜென்டினாவை “1860 இன் தாராளவாத மாதிரிக்கு” திரும்ப விரும்புவதாக அவர் முன்னதாக கூறியிருந்தார். இதன் அர்த்தம், சமூகப் புரட்சிக்கு அஞ்சும் ஆளும் வர்க்கத்தால், குறிப்பாக ரஷ்யாவில் அக்டோபர் 1917 புரட்சிக்குப் பின்னர், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சலுகைகளாக ஸ்தாபிக்கப்பட்ட பொதுக் கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, நெறிமுறை அமைப்புகள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் பொது அமைப்புகள் என்பன தகர்த்தெறியப்படும் என்பதாகும்.

மார்-அ-லாகோ காலா கொண்டாட்டத்தில், ட்ரம்பின் பிரச்சாரத்தின் முக்கிய நிதி ஆதரவாளரும் உலகின் மிகப் பெரிய பணக்காரருமான டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க்கை, ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் நான்காவது முறையாக மிலேய் சந்தித்தார்.

மிலேயின் வேலைத்திட்டம் ஏகாதிபத்திய நிதியியல் செல்வந்த தட்டுக்களின் மிகவும் ஈவிரக்கமற்ற பிரிவுகளின் நலன்களுடன் நேரடியாக பேசுகிறது என்பதை தெளிவுபடுத்தி, பில்லியனர் எலன் மஸ்க் கடந்த செப்டம்பரில் அவரது ட்டுவிட்டர் எக்ஸ் தளத்தில் “ஜனாதிபதி @JMilei ஆர்ஜென்டினாவை மகத்தான நிலைக்கு மீட்டெடுக்கும் ஒரு நம்பமுடியாத வேலையைச் செய்து வருகிறார்... ஆர்ஜென்டினாவில் நீங்கள் அமைத்துவரும் உதாரணம் உலகின் பிற பகுதிகளுக்கு ஒரு பயனுள்ள முன்மாதிரியாக இருக்கும்” என்று எழுதினார்.

இப்போது இதே மஸ்க், பில்லியனரும் முன்னாள் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருமான விவேக் ராமசாமியுடன் இணைந்து, சமூக செலவினங்களில் ட்ரில்லியன் கணக்கான வெட்டுக்களை முன்மொழிவதற்கும் மற்றும் முதலாளித்துவ பெருநிறுவனங்கள் மற்றும் நிதி மூலதனத்தின் மீதான அனைத்து நெறிமுறைகளையும் நீக்குவதற்கும் பணிக்கப்பட்ட ஒரு புதிய “அரசு செயல்திறன் துறைக்கு” தலைமை கொடுக்க உள்ளார்.

ஆர்ஜென்டினாவில் “எல் லோகோ” அல்லது பைத்தியக்காரன் என்று அறியப்படும் மிலேய்க்கு வழங்கப்பட்ட பகட்டு ஆரவாரங்கள், வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கு என்ன செய்ய இருக்கிறது என்பதை கண்ணாடியில் உயர்த்திக் காட்டுகிறது. ட்ரம்ப் “எங்கள் மாதிரியை நகலெடுக்கிறார்” என்றும், ஆர்ஜென்டினாவின் கட்டுப்பாடு நீக்கம் மற்றும் அரசு உருமாற்ற அமைச்சர் ஃபெடரிகோ ஸ்டர்ஸ்னேக்கர் “அமெரிக்க பொருளாதாரத்தை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது” என்பது குறித்து மஸ்க் உடன் விவாதித்து வருவதாகவும் மிலேய் கடந்த வாரம் கூறியிருந்தார்.

மிலேயின் அதே “வலி” மொழியைப் பயன்படுத்திய மஸ்க், 6.75 டிரில்லியன் டாலர் அமெரிக்க கூட்டாட்சி வரவு-செலவுத் திட்டத்திலிருந்து 2 டிரில்லியன் டாலர்களை வெட்டித் தள்ளுவதற்கு முன்மொழிந்தார். இது கடந்த டிசம்பரில் பதவிக்கு வந்ததில் இருந்து ஓராண்டிற்குள் மிலேய் செயல்படுத்திய வரவுசெலவுத் திட்ட வெட்டுக்களில் கிட்டத்தட்ட 30 சதவீதத்திற்கு ஒப்பாகும்.

ட்ரம்பின் “அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம்” என்ற கோஷம் பரந்த அளவிலான உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்துவதை அர்த்தப்படுத்தக்கூடும் என்ற நம்பிக்கையில் அவருக்கு வாக்களித்த தொழிலாளர்கள், ஆர்ஜென்டினாவின் அரசாங்கம் என்ன செய்திருக்கிறது என்பதையும், இப்போது அதனை முன்மாதிரியாக காட்டப்படுவதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இந்த விடயத்தைப் பொறுத்த வரையில், ட்ரம்புக்கு எதிராக வாக்களித்தவர்கள் அல்லது வாக்களிக்காதவர்கள், மேலும் நிலைமை அவ்வளவு மோசமாகாது என்று பாசாங்கு செய்து தொழிலாள வர்க்கத்தை மயக்கத்தில் வைத்திருக்கும் ஜனநாயகக் கட்சியின் முயற்சிகளுக்கு இப்போது உட்பட்டவர்கள் தங்கள் பார்வையை தெற்கு நோக்கி, ஆர்ஜென்டினாவை நோக்கித் திருப்ப வேண்டும். மேலும் அவர்கள் அமெரிக்காவில், அதே நிகழ்ச்சி நிரலை மோசமாக செயல்படுத்த விரும்புகிறார்கள்.

ஆர்ஜென்டினாவில் தன்னுடைய தேர்தல் பேரணிகளில், அறுக்கும் இயந்திரத்தை உயர்த்திப் பிடித்து, அரசாங்கச் செலவுகளைக் குறைப்பதாக உறுதியளித்த பின்னர், விரைவாக 13 அமைச்சரகங்களை அகற்றிய மிலேய், 10 சதவீதத்திற்கும் மேலான மத்திய அரசாங்க ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். மேலும் அவர், சூப் சமையலறைகளுக்கான உதவிகள் மற்றும் அனைத்து பொதுப் பணிகளையும் நிறுத்தியதோடு, கல்விக்கான செலவினங்களை 52 சதவீதமும், சமூக வளர்ச்சிக்கு 60 சதவீதமும், சுகாதாரப் பராமரிப்பில் 28 சதவீதமும், மாகாணங்களுக்கான உதவிகள் 68 சதவீதத்தையும் வெட்டித் தள்ளினார்.

ஆர்ஜென்டினாவில் மிலேய் பதவிக்கு வந்த ஓராண்டிற்குள்ளேயே, மில்லியன் கணக்கான மக்கள் மோசமான வறுமைக்குள் தள்ளப்பட்டனர். உத்தியோகபூர்வ வறுமை விகிதம் 41.7 சதவீதத்தில் இருந்து 52.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பணவீக்கம் குறைந்துள்ளது, ஆனால் ஆண்டுக்கு 193 சதவீதமாக உள்ளது. மேலும், டிசம்பரில் மிலேய் செயல்படுத்திய நாணயத்தின் பாரிய மதிப்பிறக்கத்துடன் ஒப்பிடும்போது இது குறைவாகும். தொடர்ந்து உயர்ந்து வரும் வீட்டுச் செலவினங்கள், கடந்த ஆண்டு ப்யூனஸ் அயர்ஸில் 135 சதவிகிதம் உயர்ந்துள்ளன.

மிலேய் ஆட்சியின் கீழ், முதல் ஒன்பது மாதங்களில், உண்மை ஊதியங்கள் பொதுத்துறை ஊழியர்களுக்கு 16.5 சதவீதமும், முறையான துறையில் தனியார் ஊழியர்களுக்கு 2.1 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன. நம்பகமான புள்ளிவிவரங்கள் இல்லை என்றாலும், முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களில் சுமார் பாதிப் பேர் பணவீக்கத்தால் இன்னும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ஜென்டினிய பொருளாதாரம் இந்த ஆண்டு 3.6 சதவீதம் சுருக்கம் அடையும். பெரும்பாலும் இந்த நடவடிக்கைகளின் விளைவாக, கணக்கிலடங்கா வேலைகள் அழிக்கப்படும். மிலேயின் கீழ் முதல் ஆறு மாதங்களில், சமூக பாதுகாப்பிற்கு பணம் செலுத்தும் முறையான ஊழியர்களாக பதிவு செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 5 சதவீதம் குறைந்துள்ளது. இதில் தனியார் துறையில் 150,859 வேலை இழப்புகள், பொதுத்துறையில் 67,133 வேலை இழப்புகள் மற்றும் சுயாதீன அல்லது சுயதொழில் செய்பவர்கள் மத்தியில் 291,959 வேலை இழப்புகள் ஆகியவையும் அடங்கும்.

இந்த பொருளாதார அதிர்ச்சி வைத்தியத்தை செயல்படுத்துவதற்கு பெருகிய முறையில் சர்வாதிகார ஆட்சி வடிவங்கள் தேவைப்படுகின்றன. பல மாதங்களாக இடம்பெற்றுவரும் ஓய்வூதியம் பெறுவோர், பல்கலைக்கழக உள்ளிருப்பு போராட்டங்கள் உட்பட, ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு துறையினரின் வேலைநிறுத்தங்களின் தொடர்ச்சியான எதிர்ப்பு அலைகள் இடம்பெற்று வருகின்றன. 

அப்பட்டமான பொலிஸ் அரசு ஒடுக்குமுறை மற்றும் அரசியல் எதிர்ப்பை குற்றமயமாக்குவதன் மூலம் மிலேய் இந்தப் போராட்டங்களுக்கு விடையிறுத்துள்ளார். அவரது நிர்வாகம் ஒரு கடுமையான ஆர்ப்பாட்ட-விரோத நடவடிக்கைக்கு உத்தரவிட்டதோடு, வீதிகளை தடுப்பது, மறியல் அணிவகுப்புகள் மற்றும் பல துறைகளில் வேலைநிறுத்தங்கள் மேற்கொள்வதை சட்டவிரோதமாக்கியது. தங்கள் ஓய்வூதியங்கள் வாழ்வாதாரத் தரத்திற்கும் கீழே குறைக்கப்படுவதை எதிர்த்து போராடிய வயதான ஓய்வு பெற்றவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி, தடியடி தாக்குதலை அவரது நிர்வாகம் மேற்கொண்டது. 

இதற்கிடையில், 1976 சி.ஐ.ஏ ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக ஆர்ஜென்டினாவை ஆட்சி செய்துவந்த பாசிச இராணுவ சர்வாதிகாரத்தின் குற்றங்களை மிலேய் இரட்டிப்பாக்கியுள்ளார். பாசிச இராணுவ ஆட்சியின் கீழ் சுமார் 30,000 இடதுசாரி தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.  

மிலேய் ட்ரம்பால் மட்டும் ஒரு முன்மாதிரியாக நடத்தப்படவில்லை, மாறாக, டாவோஸில் நடந்த கடைசி உலக பொருளாதார கருத்தரங்கு மற்றும் இத்தாலியில் நடந்த ஜி7 உச்சிமாநாடு உட்பட நிதியியல் செல்வந்த தட்டுக்கள் மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் பிரதான அரங்குகளிலும் ஒரு நட்சத்திர விருந்தினராக இருந்துள்ளார். மேலும் ஜேர்மன் சான்சிலர் ஓலாவ் ஷொல்ஸ் ஆல் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சனிக்கிழமை சந்தித்து பேசுகின்ற அவர், திங்கள்கிழமை பிரேசிலில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்கிறார். 

மிலேயின் பொருளாதாரக் கொள்கைகளைப் பாராட்டியுள்ள பைடென் நிர்வாகம், ஆர்ஜென்டினா தொழிற்சங்க அதிகாரத்துவத்தை ஒரு “முன்மாதிரி” என்று அழைத்து, மிலேயுடன் நெருக்கமாக வேலை செய்ய ஊக்குவித்து வருகிறது. இந்த ஒத்துழைப்பு, வேலைநிறுத்தங்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாரிய சமூக எதிர்ப்பை அடக்குவதற்கான பிற முயற்சிகளில் விளைந்துள்ளது. 

பைடெனின் கீழ் பென்டகன், மிலேய் நிர்வாகத்துடன் உறவுகளை வலுப்படுத்தி, போர் விமானங்களை வாங்குவதற்கும் அந்நாட்டில் அமெரிக்க ஆயுதத் தளவாட தொழிற்சாலைகளை அமைப்பதற்கும் ஒப்புதல் கொடுத்தது. அமெரிக்க ஏகாதிபத்தியம் மிலேய் நிர்வாகத்தை இலத்தீன் அமெரிக்காவில் சீனா, ரஷ்ய மற்றும் ஈரானிய செல்வாக்கிற்கு எதிரான ஒரு ஈட்டிமுனையாக காண்கிறது. மேலும் இலத்தீன் அமெரிக்காவை அது இன்னும் வெறுப்புடன் அதன் “சொந்த கொல்லைப்புறமாக” கருதுகிறது.

முசோலினியின் நவ-பாசிசவாத வாரிசான இத்தாலிய சகோதரத்துவ கட்சியை சேர்ந்த இத்தாலிய பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி மற்றும் காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெதன்யாகு ஆகியோரை மிலேய் சந்தித்து, அவர்களுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியுள்ளார். 

நிதியியல்-பெருநிறுவன செல்வந்த தட்டுக்கள் சமூக எதிர்புரட்சி மற்றும் அரசியல் சர்வாதிகாரத்தின் மூலமாக உலகை மறுஒழுங்கமைக்க முயன்று வருகின்றன. ட்ரம்பும் மிலேயும் இந்த வேலைத்திட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். இது, அமெரிக்கப் புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரால் உருவகப்படுத்தப்பட்ட சமூக சமத்துவம் பற்றிய அனைத்து கருத்துருக்களையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் அரசியல் வடிவங்களில் இத்தகைய தீவிர மாற்றமானது, தவிர்க்க முடியாமல் இன்னும் ஆழமான அரசியல் நெருக்கடிகளையும், பாரிய சமூகப் போராட்டங்களின் வெடிப்பையும் உருவாக்கும். ஆயினும், பாசிசம் மற்றும் உலகப் போரின் அச்சுறுத்தலை ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் நனவான மற்றும் புரட்சிகர தலையீடு மூலம் மட்டுமே தோற்கடிக்க முடியும். 

Loading