வெள்ளை மாளிகை உக்ரேனுக்கு இராணுவ ஒப்பந்தக்காரர்களை அனுப்புகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்க ஈடுபாட்டின் ஒரு பெரிய விரிவாக்கத்தின் ஒரு பாகமாக, உக்ரேனுக்கு அனுப்ப அமெரிக்க இராணுவ ஒப்பந்தக்காரர்களுக்கு பைடன் நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது. CNN மற்றும் ரஷ்ய ஊடக நிறுவனமான டாஸ் (TASS) உட்பட பல ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் இந்த முடிவை உறுதிப்படுத்தியுள்ளது.

பாசிசவாத டொனால்ட் ட்ரம்பால் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உழைக்கும் மக்களின் மோசமடைந்து வரும் சமூக நிலைமைகளுக்கு பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் அலட்சியம் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்கு பிரதான காரணியாக இருந்தது. ஆனால், உக்ரேனிய போருக்கான மக்கள் விரோதத்திற்கு ஒரு வாய்வீச்சு முறையீடு செய்யவும் அவரால் முடிந்தது.

ட்ரம்ப் பதவியேற்பதற்கு இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், உக்ரேன் போர் தொடர வேண்டும் என்பதே பைடென் நிர்வாகத்தின் முக்கிய கவலையாக உள்ளது. அந்த நோக்கத்திற்காக, பைடென், “கள உண்மைகளை” உருவாக்க முனைந்து, போரின் இந்த பெரும் விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளார்.

“அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் வழங்கப்பட்ட இராணுவ உபகரணங்களை பழுதுபார்த்து பராமரிக்க உக்ரேனுக்கு உதவுவதற்காகவும், நாங்கள் ஏற்கனவே வழங்கிய உதவியைப் பராமரிக்கவும், உக்ரேனுக்கு உதவும் குறைந்த எண்ணிக்கையிலான ஒப்பந்ததாரர்களுக்கு பாதுகாப்பு துறை ஏலங்களைக் கோருகிறது” என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் டாஸிடம் கூறினார்.

“அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கிய சில உபகரணங்களான (அல்லது வரும் மாதங்களில் உக்ரேனுக்கு வழங்கும்) F-16 போர் விமானங்கள் மற்றும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் போன்றவைகளை பராமரிக்க குறிப்பிட்ட தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவை” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மேலும், “ஒவ்வொரு அமெரிக்க ஒப்பந்ததாரரும் மற்றும் அமைப்பும் அல்லது நிறுவனமும் அவர்களின் ஊழியர்களின் தற்பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதோடு, மேலும் அவர்களின் ஏலத்தின் ஒரு பகுதியாக இடர் குறைப்பு திட்டங்களைச் சேர்க்க வேண்டும்” என்று பென்டகன் தெரிவித்தது.

“உக்ரேனில் ஏற்கனவே அமெரிக்க அரசாங்க ஒப்பந்ததாரர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், உக்ரேனின் எரிசக்தி கட்டத்தை வலுப்படுத்த உதவுவது மற்றும் பொருளாதார ஆதரவை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு உதவ அமெரிக்க நிறுவனங்களுடன் வெளியுறவுத்துறை மற்றும் USAID நேரடியாக ஒப்பந்தம் செய்து வருகின்றன” என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

யதார்த்தத்தில், இந்த இராணுவ ஒப்பந்தக்காரர்கள் ஒரு “பொறி கம்பி” ஆக சேவை செய்வார்கள். தாக்கப்பட்டால், அது போரை உக்கிரமாக்கக் கோரும் பிரச்சாரத்தை முன்னெடுக்க பயன்படுத்தப்படலாம்.

கடந்த ஆண்டு, ஆப்ராம்ஸ் போர் டாங்கி போன்ற உயர் தொழில்நுட்ப ஆயுதங்களின் முக்கிய விளைவு, உக்ரேனில் போர்க்களத்தில் அவற்றின் தாக்கம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது, அவற்றை பராமரிக்க ஒப்பந்தக்காரர்களை கட்டாயமாக அனுப்புவதுதான் என்று உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது.

ஒரு சிவிலியன் ஒப்பந்ததாரர் (இடது) ஜேர்மனியில் உள்ள ஒரு பயிற்சி பகுதியில் M1A1 ஆப்ராம்ஸ் பிரதான போர் டாங்கியில் போர் வாகன தந்திரோபாய ஈடுபாடு உருவகப்படுத்துதல் அமைப்பை நிறுவ உதவுகிறார்.

அமெரிக்காவின் பரந்த எம் 1 ஆப்ராம்ஸ் டாங்கிகள் உலகெங்கிலும் உள்ள இராணுவ தளங்களில் படைத்துறைசாரா ஒப்பந்தக்காரர்களால் சேவையில் ஈடுபடுகின்றன. மேலும் இந்த படைத்துறைசாரா ஒப்பந்தக்காரர்கள் பொதுவாக ஜெனரல் டைனமிக்ஸ் மற்றும் பிற பிரதான ஆயுத உற்பத்தியாளர்களின் நேரடி ஊழியர்கள் உட்பட சிறப்பு அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட அமெரிக்கர்களாக உள்ளனர். இராணுவத்தின் மிகவும் சிக்கலான வாகனமான ஆப்ராம்ஸ் டாங்கியின் செயல்பாட்டில் பணியாற்றும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் எட்டு மனித மணிநேர பராமரிப்பு தேவைப்படுகிறது.

கிழக்கு போர்முனையில் இருந்து போலந்து மற்றும் ஜேர்மனியில் உள்ள அமெரிக்க தளங்கள் வரையிலும் நூற்றுக்கணக்கான மைல்கள் நீண்டு, எந்திரங்களை செயல்பாட்டில் வைத்திருக்க அவசியமான சிறப்பு உயர்-தொழில்நுட்ப, துல்லியமான பாகங்களுக்கான பாரிய வினியோக சங்கிலிகளை உருவாக்குவதுடன் சேர்ந்து, நேட்டோ நாடுகளில் இருந்து ஆயிரக் கணக்கான படைத்துறைசாரா பராமரிப்பு பணியாளர்கள் உக்ரேனுக்கு நிலைநிறுத்தப்படுவார்கள்.

இந்த வினியோக வழிகள், அமெரிக்க சிப்பாய்கள் மற்றும் உக்ரேனுக்குள் பாயும் ஆயுத அமைப்புகள் மீதான ரஷ்ய தாக்குதல்களின் இலக்குகளாக மாறக்கூடும். உக்ரேனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கர்களின் “உயிர்களைக் காப்பாற்றுவதற்காக” “வான் வெளியை மூடுவதற்கும்” மற்றும் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட மண்டலத்தைத் உருவாக்குவதற்கும் போரின் ஆரம்பத்தில் முதலில் எழுப்பப்பட்ட கோரிக்கை, ஒட்டுமொத்த அமெரிக்க ஊடகங்களாலும் விரைவாக எழுப்பப்படும்.

துல்லியமாக இத்தகைய விரிவாக்கச் சுழலைத்தான் பைடென் நிர்வாகம் அதன் எஞ்சிய பதவிக் காலத்தில் செயல்படுத்த முற்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை “Face the Nation” விவாத நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ஜனாதிபதி ஜோ பைடென் புதன்கிழமை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்புடன் ஒரு சந்திப்பை நடத்துவார். இதன் போது உக்ரேன் ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்று கூறினார்.

“அமெரிக்கா உக்ரேனில் இருந்து விலகிச் செல்லக்கூடாது, உக்ரேனில் இருந்து வெளியேறுவது ஐரோப்பாவில் அதிக உறுதியற்ற தன்மையைக் குறிக்கிறது என்று காங்கிரஸ் மற்றும் வரவிருக்கும் நிர்வாகத்திற்கு வாதத்தை முன்வைக்க அடுத்த 70 நாட்களில் ஜனாதிபதி பைடனுக்கு வாய்ப்பு கிடைக்கும்” என்று சல்லிவன் கூறினார்.

பைடென் நிர்வாகம் உக்ரேனுக்கான ஒரு பெரிய நிதிப் பொதியை, இதுநாள்வரை போருக்கு ஏற்கனவே செலவிடப்பட்ட $174 பில்லியனைத் தவிர, காங்கிரஸ் மூலம் நிறைவேற்ற முயல்கிறது,

கடந்த வார இறுதியில், உக்ரேன் மாஸ்கோ மீது 34 ட்ரோன்களை ஏவியது. இது போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய தலைநகர் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும்.

போர்க்களத்தில் உக்ரேன் ஒரு இராணுவ வீழ்ச்சியை முகங்கொடுத்து வருகிறது என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. ரஷ்ய ஒப்லாஸ்து (குர்ஸ்க் மாவட்டம்) பகுதியைக் கைப்பற்றியுள்ள உக்ரேனிய துருப்புகள் மீதான ஒரு தாக்குதலுக்காக, வட கொரியாவால் அனுப்பப்பட்டதாக கூறப்படும் துருப்புகள் உட்பட 50,000 புதிய துருப்புகளை ரஷ்யா குவித்துள்ளதாக அமெரிக்க செய்தித்தாள்கள் கூறுகின்றன. இதற்கிடையில், உக்ரைன் படைகள் கிழக்கு உக்ரேனில் தொடர்ந்து பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.

கடந்த செப்டம்பரில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் ரஷ்யாவின் அணுவாயுத கொள்கை ஆவணத்தில் முன்மொழியப்பட்ட ஒரு புதுப்பிப்பை கோடிட்டுக் காட்டினார், அது மாஸ்கோ அணுவாயுதங்களைப் பயன்படுத்தும் நிலைமைகளை விரிவாக்கும்.

“ரஷ்யாவிற்கு எதிராக, அணு ஆயுதம் அல்லாத எந்த நாடும், அணு ஆயுத அரசின் பங்கேற்புடன் அல்லது ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் ரஷ்யாவிற்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பும், ரஷ்ய கூட்டமைப்பின் மீதான கூட்டுத் தாக்குதலாக கருதப்படும் என்று ஆவணத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு முன்மொழிகிறது” என்று புட்டின் கூறினார்.

Loading