இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யார்?

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) ஆகியவற்றின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, செப்டம்பர் 21 அன்று இலங்கையின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டன. அந்தக் கட்டுரைகளில் அவை திசாநாயக்கவை மார்க்சிஸ்ட், இடதுசாரி, 'லெனினை விரும்பும் ஜனாதிபதி' மற்றும் 1948 இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து நாட்டை ஆண்ட பாரம்பரிய கட்சிகளை தோற்கடித்த 'மக்கள் ஜனாதிபதி' என்றெல்லாம் வருணித்தன.

சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப்போய் முதலாளித்துவத்தை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜே.வி.பி., எப்படி மார்க்சிசத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றோ, அல்லது அதன் தலைவர் திசாநாயக்கவை எந்த வகையில் லெனினின் அபிமானியாகவோ அல்லது மக்களின் ஜனாதிபதியாகவோ கருதமுடியும் என்றோ எழுத்தாளர்கள் எவரும் விளக்கவில்லை.

கடந்த காலத்தில் ஜே.வி.பி.யின் சொந்த ஊடகம், சூழ்நிலைக்கு பொருத்தமின்றி மார்க்ஸ் மற்றும் லெனினிடம் இருந்து மேற்கோள் காட்டி, அவர்களின் முதலாளித்துவ சார்பு கொள்கைகள் மற்றும் செயல்களை நியாயப்படுத்தியது. அதன் மே தின ஊர்வலங்களில், சிவப்பு சட்டை அணிந்த ஜே.வி.பி. ஆதரவாளர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் குறிப்பாக ஸ்ராலின் மற்றும் அதன் தலைவர்களின் உருவப்படங்களை ஏந்தி சென்று அதை சோசலிமாக காட்டிக்கொண்டனர்.

ஜே.வி.பி ஆதரவாளர்கள் 2016 இல் அதன் மே தின பேரணிக்கு மேடை அமைத்துக்கொண்டிருந்த போது [Photo by Janatha Vimukthi Peramuna /CC BY-SA 3.0] [Photo by Janatha Vimukthi Peramuna / undefined]

உண்மையில், ஜே.வி.பி. மார்க்சிச விரோத தத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்ராலினையே அரவணைத்துக்கொண்டது. இதுவே ஜே.வி.பி. ஒரு உண்மையான மார்க்சிசக் கட்சியாக இருக்கவில்லை என்பதை காட்டுகிறது. இந்த ஆண்டு மே தினத்தில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகும் போது, ஜே.வி.பி. தனது சிவப்பு சட்டையையும் உருவப்படங்களையும் கைவிட்டிருந்தது. ஜே.வி.பி. யையும், அதன் கடந்த காலத் தலைவர்கள் மற்றும் திசாநாயக்கவையும் எந்த விமர்சனமும் இன்றி 'மார்க்சிஸ்டுகள்' என்று சித்தரிப்போர், அரசியல் ரீதியில் அறிவில்லாதவர்கள் அல்லது வேண்டுமென்றே உழைக்கும் மக்களை ஏமாற்றுவதில் ஈடுபட்டுள்ளவர்களாவர்.

ட்ரொட்ஸ்கிசமே இன்றைய மார்க்சிசம் ஆகும். இதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் இலங்கையில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி உட்பட உலகம் முழுவதும் உள்ள அதன் பிரிவுகள் மட்டுமே பிரதிநிதித்துவம் செய்கின்றன. உலக சோசலிசப் புரட்சியை நிராகரித்து, 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்ற பிற்போக்கு தேசியவாத தத்துவத்தை அரவணைத்துக் கொண்டு, 1917 அக்டோபர் புரட்சிக்கு புதைகுழி தோண்டிய ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தில், ட்ரொட்ஸ்கிசமானது மார்க்சிசத்தை பாதுகாத்து அபிவிருத்தி செய்துள்ளது.

லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க.), 1964 இல் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் கீழ் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்திற்குள் நுழைந்தகொண்டு சோசலிச சர்வதேசவாதத்தை காட்டிக் கொடுத்ததைத் தொடர்ந்து, 1960 களின் பிற்பகுதியில் ஜே.வி.பி. தலைதூக்கியது. தன்னை ட்ரொட்ஸ்கிஸ்ட் எனக் கூறிக்கொண்ட ஒரு கட்சியான ல.ச.ச.க. செய்த காட்டிக்கொடுப்பு, ஜே.வி.பி. போன்ற குட்டி முதலாளித்துவ தீவிரக் குழுக்களும் தமிழ் அமைப்புகளும் தலைதூக்க வழிவகுத்தது.

ஜே.வி.பி., ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் பெய்ஜிங் சார்பு கன்னையிலிருந்து பிரிந்து உருவாக்கப்பட்டதோடு காஸ்ட்ரோ, சே குவேரா மற்றும் மாவோ சேதுங்கின் விவசாய கெரில்லாவாதத்தின் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையைத் தழுவிக்கொண்டது. இவை அனைத்தும் சிங்கள தேசப்பற்றுவாதம் மற்றும் தீவின் சிங்கள பௌத்த பெரும்பான்மையின் மேலாதிக்கத்துடன் பிணைக்கப்பட்டது.

1971இல் கிராமப்புற சிங்கள இளைஞர்களின் பேரழிவுகரமான எழுச்சியில் 15,000 பேர் கொல்லப்பட்டதற்கும், அதே போல், 1980களின் பிற்பகுதியில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான, பல்லாயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்களின் படுகொலைக்கான கதவைத் திறந்துவிட்ட அதன் பிற்போக்கு பிரச்சாரத்திற்கும் ஜே.வி.பி. பொறுப்பாளியாகும். எவ்வாறாயினும், கடந்த மூன்று தசாப்தங்களாக, இந்த குட்டி-முதலாளித்துவ அமைப்பு முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு, வலதுசாரி, ஏகாதிபத்திய சார்பு கட்சியாக தன்னை மாற்றிக்கொண்டது.

முதலாளித்துவ ஆட்சியின் நீண்டகால கட்சிகளான, இப்போது பல துண்டுகளாக பிளவுபட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) மீதும் மற்றும் அவற்றை வழிநடத்திய ஆளும் வர்க்க வம்சங்கள் மீதும் வெகுஜனங்கள் மத்தியில் வளர்ச்சியடைந்துள்ள ஆழமான வெறுப்பை சுரண்டிக் கொண்ட ஜே.வி.பி.,/தே.ம.ச., ஒரு ஆழமான பொருளாதார, சமூக நெருக்கடிக்கு மத்தியில், ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்தாபகத்திற்கு எதிரான கட்சியாக தன்னைக் காட்டிக்கொண்டது,

அதே நேரத்தில், திசாநாயக்கவும் அவரது கட்சியும் ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதாக உறுதியளிக்கின்றனர். சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன திட்ட நிரலுக்கு அவர் மீண்டும் மீண்டும் தனது ஆதரவை அறிவித்ததுடன் அமெரிக்க மற்றும் இந்திய அதிகாரிகளை சந்தித்து அவர்களின் ஒப்புதலைப் பெற்றார்.

2022இல் சகிக்க முடியாத சமூக நிலைமைகளுக்கு எதிரான நீடித்த வெகுஜன எழுச்சி, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேறி இராஜினாமா செய்ய நிர்பந்தித்தபோது, ஆளும் உயரடுக்குகள் கடும் அதிர்ச்சியடைந்தன. புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தி தங்களின் வாழ்க்கை நிலைமைகளை இன்னும் ஆழமாக நாசம் செய்யும் நிலையில், மீண்டும் அத்தகைய எழுச்சிக்கு வீதிக்கு இறங்கும் உழைக்கும் மக்களை அடக்குவதற்கான வழிமுறையாக, இப்போது ஆளும் தட்டின் குறிப்பிடத்தக்க பகுதியினர் ஜே.வி.பி. பக்கம் திரும்பியுள்ளனர்.

2022 எழுச்சியின் போது, ஆழமான 'அரசியல் ஸ்திரமின்மையை' உருவாக்கும் 'அராஜகத்தை' ஒடுக்குவதற்கு அனைத்து பாராளுமன்றக் கட்சிகளும் ஒன்றுபடுமாறு அவர் அழைப்பு விடுத்தபோது, மக்கள் மீதான ஜே.வி.பி.யின் விரோதப் போக்கை திசாநாயக்க அடிக்கோடிட்டுக் காட்டினார். வெகுஜன இயக்கத்தைத் தடம் புரளச் செய்வதற்கும் அதை பாராளுமன்ற சூழ்ச்சிகளுக்கு அடிபணியச் செய்வதற்கும் ஒரு இடைக்கால நிர்வாகத்தை அவர் முன்மொழிந்தார். இதன் விளைவாக, வெகுஜன ஆதரவு இல்லாத, அமெரிக்க சார்பு, சர்வதேச நாணய நிதிய சார்பு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதியாக வெற்றிபெற்ற திசாநாயக்க, பெரும்பான்மையைப் பெற்று 'வலுவான அரசாங்கத்தை' ஸ்தாபிக்கும் நோக்கத்துடன் ஒரு திடீர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். ஜே.வி.பி. ஏற்கனவே தனது அடக்குமுறை ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியாக, அதன் அரசாங்கம் கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று வலியுறுத்தியுள்ளது.

லக்ஷ்மன் நிபுன ஆராச்சி [Photo by Facebook/Lakshman Nipuna Arachchi]

திசாநாயக்கவின் வலது கையாக செயல்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி, கடந்த வாரம் புதிய அரசாங்கத்தின் தொழிலாள வர்க்க விரோத குணாம்சத்தை தெளிவான முறையில் சமிக்ஞை செய்தார். தேர்தலுக்குப் பின்னர், ஜே.வி.பி.யின் முதல் செயல்களில் ஒன்று, கட்சி சார்ந்த தொழிற்சங்கங்களைக் கலைத்து 'வேலைநிறுத்தங்களை' கடந்த காலத்தின் ஒரு விஷயமாக்குவதாக அவர் அறிவித்தார். இந்த நடவடிக்கை வணிக அதிகாரத்துவத்தை இலக்காகக் கொண்டிருக்கவில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்திற்கும் அதன் வர்க்க நலன்களுக்காக போராடுவதற்கு தொழிற்துறை போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அதன் ஜனநாயக உரிமைக்கும் எதிரானது ஆகும்.

இந்த கருத்துக்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் மார்க்சிசத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை மாறாக, அவை ஆட்சிக்கு வந்தவுடன், அதன் பெருவணிகக் கொள்கைகளுக்கு எதிராக தலைதூக்கும் எந்தவொரு தொழிலாள வர்க்க எதிர்ப்பையும் நசுக்கத் தயாராகி வரும் ஒரு பாசிசக் கட்சிக்கு ஒப்பானவை ஆகும்.

யார் இந்த திசாநாயக்க?

அனுர திசாநாயக்க ஒரு வாழ்நாள் ஜே.வி.பி. உறுப்பினர் ஆவார். 1987 இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான ஜே.வி.பி.யின் உக்கிரமான இந்திய-எதிர்ப்பு, சிங்கள பேரினவாத பிரச்சாரத்தின் மத்தியிலேயே அவர் கட்சிக்குள் ஈர்க்கப்பட்டார். 19 வயதில் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவனாக இருந்த இவர், வட-மத்திய மாகாணத்தில் உள்ள தம்புத்தேகம மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தார். தனது உறவினரான சுனில் அய்யா மூலம் ஜே.வி.பி.யின் சோசலிச மாணவர் ஒன்றியத்தில் சேர்ந்தார்.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தனது அரசாங்கம் ஆரம்பித்து வைத்த இனவாதப் போரின் ஆழமான நெருக்கடியின் மத்தியில், 1987 ஜூலையில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் உடன்படிக்கையை கையெழுத்திட்டார். இந்த உடன்படிக்கையின் கீழ், இந்திய துருப்புக்கள் தீவின் வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்க அனுப்பப்பட்ட அதே நேரம், மாகாண சபை அமைப்பை நிறுவுவதன் மூலம் தமிழ் உயரடுக்குகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டது.

ஜே.வி.பி., இனவாதப் போருக்கான அதன் தீவிர ஆதரவின் தொடர்ச்சியாக, தேசியவாதம் மற்றும் பேரினவாதத்தின் அடிப்படையில், 'தாய்நாட்டைக் காட்டிக்கொடுப்பதாக' அறிவித்து, உடன்படிக்கையை கடுமையாக எதிர்த்தது. அது “இந்திய ஏகாதிபத்தியத்தை” கண்டித்து அதிகாரப் பகிர்வு தேசத்தை பிளவுபடுத்தும் என்று அறிவித்தது.

ஜயவர்தனவின் ஐ.தே.க. ஆட்சியானது 1983 ஆம் ஆண்டு முழு உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்ட காட்டுமிராண்டித்தனமான தமிழர்-விரோத படுகொலையை ஜே.வி.பி.யே நடத்தியதாக பொய்யாகக் கூறி ஜூலையில் அதை தடை செய்தது. உண்மையில், ஐ.தே.க. குண்டர்களே கொழும்பிலும் தீவின் பிற பகுதிகளிலும் தமிழர்-விரோத வன்முறை அலையைத் தூண்டிவிட்டனர்.

உடன்படிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், 'தாய்நாடு இல்லையேல் மரணம்!' என்ற கோஷத்தின் கீழ் கொழும்பு அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி. ஒரு பாசிச தேசபக்தி பிரச்சாரத்தை ஆரம்பித்தது. அதன் தலைமறைவு இராணுவப் பிரிவான தேசபக்தி மக்கள் இயக்கம் (தேசபிரேமி ஜனதா வியாபராய), எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தது. அவர்களின் பிரச்சாரத்தை எதிர்த்த ஆயிரக்கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்கள், தொழிற்சங்கவாதிகள், மாணவர் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களும் ஜே.வி.பி. துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) மூன்று உறுப்பினர்களை ஜே.வி.பி. கொன்றது. 12 நவம்பர் 1988 அன்று பிடவெல; 23 டிசம்பர் 1988 அன்று பி.எச் குணபால, 24 ஜூன் 1989 அன்று கிரேஷன் கீக்கியனகே ஆகியோர் கொல்லப்பட்டனர். உடன்படிக்கையை எதிர்த்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இலக்குவைக்கப்பட்டது என்று எச்சரித்ததுடன், சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் சிங்கள, தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்தது.

ஜயவர்தனவும் அவருக்குப் பின் வந்த ரணசிங்க பிரேமதாசவும், ஜே.வி.பி. பிரச்சாரத்தை சாக்குப்போக்காக பயன்படுத்திக் கொண்டு, ஜே.வி.பி.க்கு எதிராக மட்டுமன்றி கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் நிலவும் பரவலான அமைதியின்மையை அடக்குவதை இலக்காகக் கொண்ட பயங்கரவாத ஆட்சியை கட்டவிழ்த்து விட்டனர். சுமார் 60,000 இளைஞர்கள் இராணுவத்தினதும் அதன் கொ5cc21e13லைப் படைகளாலும் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

ரோஹன விஜேவீர [Photo by Facebook/Rohana Wijeweera Returns]

நூற்றுக்கணக்கான உள்ளூர் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் ஜே.வி.பி. தலைவர் ரோஹன விஜேவீரவும் 13 அரசியல் குழு தலைவர்களும் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்காக, அரசியல் குழு உறுப்பினர் சோமவன்ச அமரசிங்க நாட்டை விட்டு வெளியேறி கட்சியின் எதிர்கால தலைவராக ஆனார்.

விஜேவீர மற்றும் ஏனைய தலைவர்களின் படுகொலையும் கிராமப்புற இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் கண்டித்து, பிரேமதாச அரசாங்கத்தின் கொலைகார அரச அடக்குமுறைக்கு எதிராக ஒரு சர்வதேச பிரச்சாரத்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் முன்னெடுத்தன.

பல்லாயிரக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்களைப் போன்று திசாநாயக்கவின் குடும்பமும் பாதுகாப்புப் படைகளாலும், அவர்களுடன் தொடர்புடைய குண்டர்களாலும் துன்புறுத்தல்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டது. எவ்வாறாயினும், அந்த நேரத்தில் திசாநாயக்க என்ன செய்து கொண்டிருந்தார் என்பது தெரியவில்லை.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிமுகம், 'அப்போது அரசாங்கத்தால் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான பரவலான போராட்டங்களில் அவர் பங்கேற்றார்' என்று குறிப்பிடுகிறது. அவர் ஜே.வி.பி./தேசப்பற்று மக்கள் இயக்கம் நாடு முழுவதும் அதன் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அரவிந்த என்ற புனைப்பெயருடன் உறுப்பினராக இருந்துள்ளார்.

திசாநாயக்கவும் ஜே.வி.பி.யும் கொலைகார, பேரினவாதப் பிரச்சாரத்தில் இருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்ள முயன்றாலும், அதற்குத் தலைமை தாங்கியவர்களையும், அதில் பங்குபற்றியவர்களையும் 'தேசப்பற்றுள்ள மாவீரர்கள்' என்று அது எப்போதும் போற்றி வருகிறது. அந்தக் காலப்பகுதியில் திசாநாயக்கவின் செயற்பாடுகள் என்னவாக இருந்தன?

உடன்படிக்கைக்கு எதிரான ஜே.வி.பி.யின் விஷமத்தனமான பிரச்சாரம், 'தாய்நாட்டுக்கு' எதிரான, எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வரும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் பதிலளிப்பதில் புதிய அரசாங்கம் பயன்படுத்தக்கூடிய வழிமுறைகள் பற்றிய எச்சரிக்கையாகும்.

திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி.யின் மீள் குழுவாக்கம்

ஐ.தே.க. அரசாங்கத்தின் பயங்கரவாத ஆட்சி தணிந்ததால், திசாநாயக்கவுக்கு 1992 இல் களனி பல்கலைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞானம் கற்க முடிந்ததுடன் அவர் ஜே.வி.பி. மாணவர் பிரிவின் செயற்பாட்டாளராகவும் ஆனார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் ஜே.வி.பி. தலைவருமான அனுரகுமார திசாநாயக்க, 4 செப்டம்பர் 2024 அன்று வர்த்தகர் மன்றத்தில் உரையாற்றிய போது [Photo by NPP Facebook]

செல்வாக்கு மிக்க ஒரு ஐ.தே.க. உறுப்பினர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளின் உதவியுடன் 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த அமரசிங்க, திசாநாயக்கவைத் தொடர்பு கொண்டார். ஜே.வி.பி. கடும் விரோதம் கொண்டிருந்த இடங்களில் இருந்து தனக்கு ஏன் இத்தகைய உதவி வழங்கப்பட்டது என்பதை அமரசிங்க ஒருபோதும் விளக்கவில்லை.

கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் அமரசிங்க ஜே.வி.பி. உறுப்பினர்களை ஒன்று திரட்டிக் கொண்டிருந்தார். அடுத்த இரண்டு தசாப்தங்களில், திசாநாயக்க அவரது வலதுகரமாக ஆனார். ஜே.வி.பி. வெளிப்படையாக முதலாளித்துவ சார்பு நோக்குநிலையை ஏற்றுக்கொண்டு, கொழும்பு அரசியல் ஸ்தாபகத்துடன் தன்னை இணைத்துக் கொண்ட நிலையில், திசாநாயக்க கட்சியில் அவரது உயர்வை உறுதிப்படுத்தினார்.

1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் உச்சக்கட்டத்தை அடைந்த ஸ்ராலினிசத்தின் நெருக்கடிக்கு மத்தியில், சர்வதேச அளவில் நடக்கும் அரசியல் மாற்றங்களை இந்த நிகழ்ச்சிப்போக்கு பிரதிபலித்தது. உலகெங்கிலும் உள்ள 'ஆயுதப் போராட்டத்தை' அடிப்படையாகக் கொண்ட தேசியவாத குட்டி முதலாளித்துவ அமைப்புகள், வணிக வேலை ஆடைகளுக்காகவும் பாராளுமன்றத்தில் அல்லது பெருநிறுவனத் துறைகளில் இருக்கைகளுக்காகவும் தங்கள் தானியங்கி துப்பாக்கிகளையும் போராளி சீருடைகளையும் மாறிக்கொண்டிருந்தன.

குறிப்பாக 1993 மே தினத்தில் விடுதலைப் புலிகள் ஜனாதிபதி பிரேமதாசவை படுகொலை செய்ததைத் தொடர்ந்து இனவாத யுத்தம் விரிவடைந்ததுடன், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்கும் அடக்குவதற்கும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் ஜே.வி.பி.யை ஒரு பயனுள்ள கருவியாக எண்ணி அதன் பக்கம் திரும்பினர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகி வந்த சந்திரிகா குமாரதுங்க அவர்களுள் பிரதானமானவராவார்.

விமல் வீரவன்ச, ரில்வின் சில்வா ஆகியோருடன் திசாநாயக்கவும் இணைந்து இந்த மாற்றத்திற்கும், அதன் முந்தைய ஏகாதிபத்திய-எதிர்ப்பு வாய்வீச்சை கைவிடுவதற்கும் முழுமையாக ஆதரவளித்ததோடு அமரசிங்கவின் ஆதரவுடன் ஜே.வி.பி. தலைமைத்துவத்திற்கு வேகமாக உயர்ந்தார்.

1997 இல், திசாநாயக்க ஜே.வி.பி.யின் மத்திய குழுவிற்கும் அடுத்த ஆண்டு கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான அரசியல் குழுவுக்கும் நியமிக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டில், ஜே.வி.பி.யின் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த அவர் விரைவில் அதன் பிரதான பேச்சாளராக ஆனார்.

நவம்பர் 2001 இல் அவர் இலங்கைக்கு திரும்புவதற்கு முன்னர், Lacnet.org இணையத்தளத்தில் ஒரு நேர்காணலில், அமரசிங்க, ஸ்ராலினிசத்திலிருந்து பெறப்பட்ட அதன் முன்னாள் மார்க்சிச சொற்றொடர்களை ஜே.வி.பி. கைவிட்டதை மூடிமறைத்தார். '19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மார்க்சிசம் பழைய பாணியாகிவிட்டது,' என்று அவர் அறிவித்தார். “நாங்கள் பழைய காலத்து மார்க்சிசவாதிகள் அல்ல. எங்களுக்கு புதிய யோசனைகளை வழங்கும் வேறு எந்த ‘இசம்’ (‘ism’) மூலமாகவும் செல்வாக்கு செலுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என அவர் அறிவித்தார்.

கட்சியின் கடந்தகால ஏகாதிபத்திய-எதிர்ப்பு வாய்வீச்சுகளை தூக்கி எறிந்துவிட்டு, 11 செப்டம்பர் 2001 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், 'பயங்கரவாதத்தின் மீதான போர்' என்ற அவரது பிரகடனத்தை பாராட்டி அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷிற்கு கடிதம் எழுதிய ஜே.வி.பி. தலைவர் அமரசிங்க, இலங்கையில் “விடுலைப் புலிகளின் பயங்கரவாதத்தை” எதிர்த்துப் போராட ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

2001 டிசம்பரில் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஜே.வி.பி.யின் தேர்தல் விஞ்ஞாபனம், இலங்கையானது புஷ்ஷின் 'பயங்கரவாதத்தின் மீதான போருடன்' அணிசேர்ந்து நிற்க வேண்டும் என்றும், 'இலங்கையில் இருந்து புலி (விடுதலைப் புலிகள்) பயங்கரவாதத்தை துடைத்தழிப்பதற்கு' 'இந்த சாதகமான சூழ்நிலையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்' என்றும் அறிவித்தது.

ஜே.வி.பி.யின் சந்தை சார்பு நோக்குநிலையையும் தெளிவுபடுத்திய இந்த விஞ்ஞாபனம், முதலீட்டாளர்களுக்கு தாராளமான வரி விலக்களிப்புகள் உட்பட சலுகைகளை உறுதியளித்ததுடன் தொழிற்சங்க நடவடிக்கைகள் பொதுஜன விரோதத்தை -அதாவது, குறிப்பாக பெருநிறுவன உயரடுக்கின் விரோதத்தை- ஏற்படுத்திவிடக் கூடாது என்று வலியுறுத்தியது. பிசினஸ் டுடே உடனான ஒரு நேர்காணலில், 'தொழிலாளர்கள் மத்தியில் கடுமையான அமைதியின்மை' பற்றி எச்சரித்த ரில்வின் சில்வா, சீன ஆட்சி தொழிலாள வர்க்கத்தை ஒழுக்கப்படுத்துவதை உயர் வளர்ச்சிக்கான முன்மாதிரியாக ஊக்குவித்தார்.

1994 ஜனாதிபதி தேர்தலில், எதேச்சதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக சந்திரிகா குமாரதுங்க உறுதியளித்தார் என்ற சாக்குப் போக்கை கூறி, தமது சொந்த வேட்பாளரை விலக்கிக் கொண்ட ஜே.வி.பி. தலைவர்கள், குமாரதுங்கவிற்கு ஆதரவளிக்க உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். ஆட்சிக்கு வந்த பின்னர் குமாரதுங்க வாக்குறுதியை கைவிட்டார்.

அதன் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐ.தே.க. உடன் சென்று அது அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவிய பின்னர், ஜே.வி.பி. குமாரதுங்கவின் பக்கம் நின்றது. 2003 நவம்பரில், ஜே.வி.பி.யின் அழுத்தத்தின் கீழ், ஜனாதிபதி குமாரதுங்க, 2004 மார்ச்சில் ஐ.தே.க. அமைச்சரவையில் இருந்து மூன்று முக்கிய அமைச்சுக்களைக் கைப்பற்றியதுடன் அந்த அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்தார்.

2004 ஏப்ரல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற புதிய தேர்தல் கூட்டணியை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஜே.வி.பி. இணைந்து கொண்டது. கூட்டமைப்பு வெற்றிபெற்றதுடன் ஜே.வி.பி. 39 ஆசனங்களைப் பெற்ற பின்னர், நான்கு அமைச்சுப் பதவிகள் அதற்கு வழங்கப்பட்டன. திசாநாயக்க விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை அமைச்சரானார்.

விஜித ஹேரத், கே.டி. லால்காந்த மற்றும் சந்திரதாச விஜேசிங்க ஆகியோர் முறையே கலாசார அலுவல்கள், கிராமிய பொருளாதாரம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்களுக்கான அமைச்சர்களாக பதவியேற்றனர். இதே அமைச்சுக்களில் ஜே.வி.பி.யின் ஏனைய நான்கு பேர் பிரதியமைச்சர் பதவிகளைப் பெற்றனர்.

குமாரதுங்க விடுதலைப் புலிகளுடன் சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கம் எடுத்த முயற்சிகளை முறியடிக்க முற்பட்ட நிலையில், அவர் முன்னர் இடைநிறுத்திய சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு கடனுக்காக மிகவும் ஏங்கினார்.

குமாரதுங்க, அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை மானியங்களை அகற்றி, உழைக்கும் மக்களை கடுமையாக பாதிப்படையச் செய்ததன் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதற்கான தனது தயார்நிலையை சமிக்ஞை செய்தார். இந்த நடவடிக்கையை ஜே.வி.பி. அமைச்சர்கள் எதிர்க்கவில்லை. பெட்ரோல், சமையல் எரிவாயு, நாட்டின் முக்கிய உணவான அரிசி மற்றும் பால் மா உட்பட அனைத்தினதும் விலைகளும் அதிகரித்தன. ஜே.வி.பி., 1,000 கிராமப்புற குளங்கள் அல்லது நீர் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்குமான வசதிகளையும் புனரமைப்பதாக பெருமையடித்துக்கொண்டது. ஆனால் எதுவும் நிறைவேறவில்லை.

2004 டிசம்பரில் சுனாமி பேரழிவு தீவின் தென் கரையோரப் பகுதியை அழித்ததைத் தொடர்ந்து, இனவாத அடிப்படையில் குமாரதுங்கவுடன் ஜே.வி.பி மோதலுக்கு வந்தது. குறிப்பாக, தமிழ் புனர்வாழ்வு மையங்கள் உட்பட, 2004 டிசம்பரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, நிவாரண உதவிகளை விநியோகிப்பதற்காக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் சுனாமிக்குப் பிந்தைய செயல்பாட்டு முகாமைத்துவ முறைமை (PTOMS), “புலி பயங்கரவாதிகளுக்கு” நன்மை பயப்பதாக ஜே.வி.பி. அறிவித்தது. ஜே.வி.பி.யின் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினர்.

ஜே.வி.பி., 2005 ஆம் ஆண்டின் இறுதியில், புலிகளுடனான போர்நிறுத்த உடன்படிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்ததன் பின்னர், ஜனாதிபதி பதவிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் மஹிந்த இராஜபக்ஷவுடன் மற்றொரு உடன்படிக்கையை மேற்கொண்டது. திசாநாயக்க, ஏனைய ஜே.வி.பி தலைவர்களுடன் சேர்ந்து இராஜபக்ஷவின் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்த போதிலும், அரசாங்கத்தில் சேரவில்லை.

பாராளுமன்றத்தில், இராஜபக்ஷவின் போர் வரவு-செலவுத் திட்டங்களையும், அடக்குமுறை அவசரகால சட்டங்களை நீட்டிப்பதையும் அவர்கள் ஆதரித்தனர். ஜே.வி.பி., போரை முன்னெக்கும் பெயரில், கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீண்டும் செயல்படுத்துமாறு அவருக்கு அழுத்தம் கொடுத்து வர்க்கப் போராட்டத்தை நசுக்க உதவியது.

2008 மே மாதம் இராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்த பின்னர் விமல் வீரவன்சவை கட்சி விட்டு நீக்கியபோது, திசாநாயக்க ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவராக ஆனார். 2009 மே மாதம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, போரின் இறுதி மாதங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு எதிரான இராணுவத்தின் போர்க்குற்றங்களை ஜே.வி.பி. இறுதிவரை பாதுகாத்து வந்த அதே நேரம், இராஜபக்ஷவிடம் இருந்து தூர விலகிக்கொண்டது.

2010 ஜனாதிபதித் தேர்தலில், ஜே.வி.பி., முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை 'பொது வேட்பாளராக' ஆதரிப்பதில் ஐ.தே.க. உடன் கூட்டணி வைத்தது. இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு இராஜபக்ஷ அரசாங்கத்துடன் பொன்சேகாவும் பொறுப்பாளியாக இருந்தபோதிலும், ஜே.வி.பி. பொன்சேகாவை இராஜபக்ஷவிற்கு 'ஜனநாயக மாற்றீடாக' தூக்கிப் பிடித்தது.

திசாநாயக்க கட்சித் தலைவரானார்

1992ல் இருந்து கட்சியை வழிநடத்தி வந்த அமரசிங்கவிற்குப் பதிலாக திசாநாயக்க 2014 பெப்ரவரியில் கட்சியின் தலைவரானார். மத்திய குழுவின் பெரும்பான்மையானவர்கள் திசாநாயக்கவை ஆதரித்து அமரசிங்கவை ஓய்வுபெற நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது.

கடந்தகால வன்முறைகளை கைவிட்டு 'தேசிய ஒற்றுமை'க்காக நிற்கும் ஜே.வி.பி.யை இலங்கையிலும் சர்வதேச அளவிலும் மரியாதைக்குரிய கட்சியாக சித்தரிக்கும் முயற்சியுடன் இந்த தலைமை மாற்றம் தொடர்புடையது. பெரு வணிகம் மற்றும் சர்வதேச மூலதனத்திற்கான ஆதரவு மீண்டும் முன்னுக்கு வந்தது.

2014 மே மாதம் லண்டனில் நடைபெற்ற சிங்கள புலம்பெயர்ந்தோரின் கூட்டத்தில் உரையாற்றிய திசாநாயக்க, 1988-1990 காலப்பகுதியில் உடன்படிக்கைக்கு எதிரான பேரினவாத பிரச்சாரத்தில் ஜே.வி.பி. மேற்கொண்ட வன்முறைக்காக கட்சியின் சார்பில் முதல் தடவையாக மன்னிப்புக் கோரினார். இருப்பினும், அதே மூச்சில், இது ஐ.தே.க. அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்க்கும் நடவடிக்கையாக இருந்ததாக கூறி கட்சியின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார். இது ஒரு பொய்யாகும்.

இன மோதல்களை தோற்றுவித்ததற்காக கடந்த அரசாங்கங்களை வஞ்சத்தனமாக திசாநாயக்க குற்றம் சாட்டினார். இது உண்மையாக இருந்தாலும், அந்த அரசாங்கங்கள் பலவற்றை ஆதரிப்பதில் ஜே.வி.பி.யின் சொந்த பங்கையும் 'புலி பயங்கரவாதத்திற்கு' எதிரான இடைவிடாத போருக்கான அதன் கோரிக்கையையும் திட்டமிட்டு மூடி மறைப்பதாகும்.

சிங்கள இனவாதம், ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சிக்காக இராஜபக்ஷவை தாக்கிய அதே வேளை, ஜே.வி.பி.யும் அதன் புதிய தலைவரும், வாஷிங்டனின் ஆதரவுடன் வலதுசாரி ஐ.தே.க. உடன் சேர்ந்து இராஜபக்ஷவை வெளியேற்றுவதற்கான சதியில் இணைந்தனர். ஸ்ரீ.ல.சு.க.யின் சிரேஷ்ட தலைவர் மைத்திரிபால சிறிசேன, இராஜபக்ஷவிடம் இருந்து பிரிந்து, ஐ.தே.க. தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன், 2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் போருக்கு ஆதரவளித்த அமெரிக்கா, பின்னர் நிதி மற்றும் இராணுவத் தளபாடங்களுக்காக அவர் சீனாவின் பக்கம் இழுபட்டுச் சென்றதை எதிர்த்தது.

ஜே.வி.பி. நேரடியாக சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுக்கவில்லை என்றாலும், அது இராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்யக் கோரி ஆரவாரமான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தது. வாக்குகள் பிளவுபடக்கூடாது என்பதற்காக ஜே.வி.பி. தனது சொந்த ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தவில்லை.

1 டிசம்பர் 2014 அன்று டெய்லி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “எதிர்க்கட்சி வெற்றி பெற்றாலும் நாங்கள் பெரும்பான்மையாக இருக்காவிட்டாலும் [இராஜபக்ஷவின்] இந்த சர்வாதிகாரத்தை கவிழ்க்க அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்….” என திசாநாயக்க அறிவித்தார். “[ஐ.தே.க.] தலைவர் ரணில் (விக்ரமசிங்க) பிரதமராக வருவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று அவர் குறிப்பாக வலியுறுத்தினார்.

இராஜபக்ஷவை வெளியேற்றுவதற்கான அமெரிக்க அழுத்தத்தை சுட்டிக்காட்டிய திசாநாயக்க, தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளில் ஒன்று 'சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படும் அபாயம்' ஆகும் என்று கூறினார்.

தேர்தலின் பின்னர் ஜே.வி.பி. அரசாங்கத்துடன் இணையவில்லை. எவ்வாறாயினும், பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரை தனது சிறுபான்மை அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுப்பதற்காக சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட 13 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய நிறைவேற்று சபைக்கு திசாநாயக்க நியமிக்கப்பட்டார். ஜே.வி.பி. தலைவர், சிறிசேன மற்றும் பிரதமராக ஆன விக்கிரமசிங்கவின் போலியான நல்லாட்சி தோரணையை பாராட்டியதோடு, வாஷிங்டனை நோக்கிய வெளியுறவுக் கொள்கையில் அவர்களின் திடீர் மாற்றத்தைப் பற்றி எந்த கவலையும் கொள்ளவில்லை.

சிறிசேன-விக்கிரமசிங்கவின் 'தேசிய ஐக்கிய' அரசாங்கம், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் பரவலான எதிர்ப்பைத் தூண்டும் ஒரு கொடூரமான சிக்கனத் திட்டத்தை செயல்படுத்தியது. அதன் பிறகே அரசாங்கத்திற்கு ஒரு விமர்சன அணுகுமுறையை எடுத்த ஜே.வி.பி., அதே நேரம் அதன் ஆட்சிக்கு எந்த அச்சுறுத்தல் வருவதையும் தவிர்க்க தொழிலாளர்களின் போராட்டங்களைத் தடுத்து வந்தது.

2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று தேவாலயங்கள் மற்றும் சொகுசு விடுதிகள் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு பெற்ற இஸ்லாமியக் குழுவினால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், ஜே.வி.பி மற்றும் திசாநாயக்கவும் இனவாத அரசியலை கைவிட்டதுபோல் கடந்த காலத்தில் காட்டிய பாசாங்குகளை விளக்கச்சித்திரமாக அம்பலப்படுத்தியது. பாராளுமன்றத்தில் பேசிய திசாநாயக்க, முஸ்லிம் 'பயங்கரவாதத்தை' கண்டனம் செய்ததுடன் நின்றுவிடாமல், 'இந்த அழிவுகரமான கருவானது முஸ்லிம் கருப்பைக்குள்ளேயே உருவாகிறது' என்று பிரகடனம் செய்தார்.

2019 ஆகஸ்டில், ஜே.வி.பி. தலைமையானது, அதன் கடந்த காலத்தை மேலும் மூடிமறைக்கவும், அதற்கு சட்டபூர்வமான தன்மையைக் கொடுப்பதற்கும் மேல் மத்தியதர வர்க்கத்தின் அடுக்குகளை இழுக்க, தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) என்ற தேர்தல் முன்னணியை உருவாக்குவதாக அறிவித்தது.

அக்டோபர் 20 அன்று சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு சமீபத்திய அரசியல் கட்டுரை, தேசிய மக்கள் சக்தி அரசியல் ஸ்தாபகத்திற்குப் பின்னால் ஆளும் வட்டங்களில் உள்ள கூட்டுப் பற்றி சிறிது வெளிச்சம் போட்டுக் காட்டியது. 2019 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர், சிறிசேன-விக்கிரமசிங்க ஆட்சியின் போது நடத்தப்பட்ட ஒரு உரையாடலின் ஒரு பகுதியாக, திசாநாயக்க ஐ.தே.க.இன் உயர்மட்ட தலைவர்களை சந்தித்தார்.

சண்டே டைம்ஸ் விளக்கியதாவது: “பேச்சுவார்த்தையின் போது ஐ.தே.க.யின் பிரமுகர் ஒருவர்... ஜே.வி.பி.யின் அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டு, கட்சியை மறுபெயரிடுவதற்கான ஆலோசனையை வழங்கினார். அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான பரிந்துரை சாதாரண மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதாக இருந்தது. ஒரு புதிய முகமானது உள்நாட்டிலும் வெளியுலகிலும் ஈர்க்கும் வேண்டுகோளாக இருக்கும் என்று அவர் கூறினார்.

அத்தகைய மறுபெயரிடலானது 'வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய ஜே.வி.பி.யின் முந்தைய பதிவு பற்றிய விமர்சனத்தை ஓரங்கட்டும்' என்றும் அவர் ஜே.வி.பி. தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.

தற்போது பிரதமராக இருக்கும் கலாநிதி ஹரிணி அமரசூரிய உட்பட, ஏற்கனவே ஜே.வி.பி.யைச் சுற்றி திரண்டிருந்த பிரபல கல்வியாளர்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் உயர்மட்ட செயற்பாட்டாளர்களால் தேசிய மக்கள் சக்தி என்று மறுபெயரிடுதல் இடம்பெற்றுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், வணிகர்கள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை உள்ளடக்கியதாக தேசிய மக்கள் சக்தி விரிவடைந்தது.

இந்தக் காலகட்டத்தில், குறிப்பாக 2022 வெகுஜன எழுச்சியைத் தொடர்ந்து, கொழும்பு இராஜதந்திர வட்டங்களில், குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஜே.வி.பி./தே.ம.ச. நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்குடன் ஜே.வி.பி. தலைவர் திசாநாயக்க [Photo by US Ambassador Julie Chung Facebook page]

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், 2022 ஜூலையில் ஜே.வி.பி. அலுவலகத்தில் திசாநாயக்கவையும் ஏனைய தலைவர்களையும் சந்தித்த பின்னர், பின்வருமாறு அறிவித்தார்: “என்னைப் பொறுத்தவரை ஜே.வி.பி. ஒரு குறிப்பிடத்தக்க கட்சி. அவர்களது இருப்பு வளர்ந்து வருகிறது. அண்மைக் காலங்களில் அவர்கள் பொதுமக்களை ஈர்த்துவருகிறார்கள்... அமெரிக்க அரசாங்கத்திற்கான ஒரு கட்சியாக மட்டும் இல்லாமல், தனிப்பட்ட முறையிலும் ஜே.வி.பி.யின் தலைமையுடன் தொடர்புகொள்வது எனது கடமை என்று நான் நினைத்தேன்.”

ஜே.வி.பி.யின் வரலாற்றில், சோசலிச வாய்ச்சவடால்களை புறந்தள்ளி, இலங்கை ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய சார்பு அரசியல் கருவியாக அதை மாற்றுவதில் திசாநாயக்க ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை ஆற்றியிருப்பது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும். திசாநாயக்க அரசாங்கம் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது சுமத்துவதற்கும் எந்தவொரு எதிர்ப்பையும் இரக்கமின்றி நசுக்குவதற்கும் பொலிஸ்-அரசு நடவடிக்கைகள் உட்பட எந்த அடக்குமுறையையும் பயன்படுத்துவதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), திசாநாயக்க அரசாங்கத்தின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக வரவிருக்கும் வர்க்கப் போர்களுக்கு அரசியல்ரீதியாகத் தயாராகுமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. ஜே.வி.பி./தே.ம.ச. மற்றும் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் ஏனைய அனைத்துக் கட்சிகளுக்கும், அவர்களின் போலி-இடது அடிவருடிகளுக்கும் எதிராக, சர்வதேச சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்டு, கிராமப்புற ஏழைகளையும் இளைஞர்களையும் ஒன்றிணைத்து, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அணிதிரட்டுவது அவசியமாகும்.

நவம்பர் 14 நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி தலையிடுகிறது. தலைநகர் கொழும்பு, வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் மத்திய பெருந்தோட்டப் பகுதியான நுவரெலியா ஆகிய மூன்று தேர்தல் மாவட்டங்களுக்கு 41 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக, தங்கள் வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்கும், சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை அமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், தொழிலாளர்களுக்கும் கிராமப்புற உழைப்பாளர்களுக்கும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம். எங்கள் பிரச்சாரத்தை ஆதரிக்குமாறும், எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களித்து, இந்த முன்னோக்கிற்கான போராட்டத்தில் எங்களுடன் இணைந்துகொள்ளுமாறும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

Loading