இலங்கை ஜனாதிபதி அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என மீண்டும் அறிவிக்கின்றார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அக்டோபர் 24 அன்று தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.)/மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தேர்தல் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி அநுர திசாநாயக்க 'முந்தைய [விக்கிரமசிங்க] நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை” என அறிவித்தார்.

23 செப்டம்பர் 2024 அன்று பதவியேற்ற பின்னர் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஊடகங்களுக்கு உரையாற்றுகிறார் [Photo by Sri Lanka President's Media Division]

அரச துறையில் 2025 ஜனவரி முதல் ஊதிய உயர்வுக்கு தேவையான நிதியை செப்டம்பர் மாதம் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்ட விக்கிரமசிங்கவின் அறிக்கையை திசாநாயக்க நிராகரித்தார். அவர் தேர்தலில் தோல்வியுற்றதால், 'தற்போதைய அரசாங்கத்தை குறைத்து மதிப்பிடச் செய்யும் நோக்கில் கருத்துக்களை வெளியிடுவதை விட வெறுமனே வீட்டில் இருக்க வேண்டும்' என்று திசாநாயக்க முன்னாள் ஜனாதிபதியை கண்டித்துள்ளார்.

திசாநாயக்க, தனது அரசாங்கம் வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் அரசு துறையின் ஊதியப் பிரச்சினையை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளும் என்று கூறியதுடன், “பொருளாதார மறுசீரமைப்பு சம்பந்தமாக நன்கு திட்டமிடப்பட்ட அணுகுமுறைக்கு” அவரது நிர்வாகத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.

அவரது கருத்து, அரசாங்கத்தின் முன்னுரிமை 'பொருளாதார சீர்திருத்தங்களே' தவிர அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வோ அல்லது உழைக்கும் மக்களின் பிற அவசரத் தேவைகளோ அல்ல என்பதையே சுட்டிக்காட்டுகிறது. இது தொழிலாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும்.

திசாநாயக்க குறிப்பிடும் 'பொருளாதார சீர்திருத்தங்கள்' சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்டுள்ள சிக்கன கொள்கைகளே ஆகும். விக்கிரமசிங்க ஆட்சியானது, ஊதிய முடக்கம், மின்சார மற்றும் தண்ணீர் கட்டண உயர்வு, பொதுச் சுகாதாரம் மற்றும் கல்விக்கான நிதிக் குறைப்பு, பெறுமதி சேர் வரி உட்பட வரிகளை அதிகரிப்பது போன்ற பல கொடூரமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியது. விக்கிரமசிங்க அரசுக்கு சொந்தமான பல நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வதன் மூலம் தனியார்மயமாக்குவதற்கு தயார்படுத்தினார்.

திசாநாயக்க கடந்த மாதம் ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிக்கு வந்து, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை நிறுவி, நவம்பர் 14 ஆம் திகதி முன்கூட்டிய ஒரு பாராளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். திசாநாயக்கவும் அவரது தே.ம.ச./ஜே.வி.பி.யும் மீதமுள்ள அனைத்து 'சீர்திருத்தங்களையும்' முன்னெடுப்பதற்கு ஒரு கணிசமான பாராளுமன்ற பெரும்பான்மையுடன் 'வலுவான அரசாங்கத்திற்கு' அழைப்பு விடுக்கின்றன. அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கல் அல்லது வணிகமயமாக்குதல், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதன் மூலம் பொதுச் சேவைகளை குறைத்தல் மற்றும் பொதுச் சுகாதாரம், கல்வித்துறையில் மேலும் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிடுவதும் அவற்றில் உள்ளடங்கும்.

இந்த சிக்கன நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம், 2028ல் இருந்து செலுத்த தவறிய வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும், பெருவணிக இலாபங்களை அதிகரிப்பதற்குமான முன்நிபந்தனைகளை உருவாக்குவதாகும்.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான அரசாங்க நிலைப்பாடு பற்றிய விடயம் முதலில் அக்டோபர் 15ம் திகதி ஊடகவியலாளர் மாநாட்டில் எழுந்தது. அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத்திடம், கடந்த விக்கிரமசிங்க நிர்வாகம் அறிவித்த சம்பள உயர்வை அரசாங்கம் வழங்குமா என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

விக்ரமசிங்க, 2025 ஜனவரியில் இருந்து அரசாங்க ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளத்தை சுமார் 25 சதவிகிதம் உயர்த்த அமைச்சரவை முடிவு செய்ததாக கடந்த செப்டம்பரில் அறிவித்தார். இது ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்னதாக வாக்காளர்களைக் கவரும் ஒரு அவநம்பிக்கையான மற்றும் இழிந்த முயற்சியாகும்.

ஆகஸ்ட் 28, 2024 அன்று இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க [AP Photo/Eranga Jayawardena] [AP Photo/Eranga Jayawardena]

நிதியமைச்சகத்துடன் எவ்வித ஆலோசனையும் இன்றி விக்கிரமசிங்க இந்த முடிவை எடுத்ததாக ஹேரத் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 'நாங்கள் இந்த நிதி நிலைமையை கடந்து செல்ல வேண்டும் மற்றும் ஒரு முடிவை எடுக்க வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார். வாக்குகளைப் பெறுவதற்காகவே விக்ரமசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அவர் கூறினார்.

சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் மறுப்பது தாங்க முடியாத வாழ்க்கைச் செலவால் பாதிக்கப்பட்டுள்ள 1.4 மில்லியனுக்கும் அதிகமான அரச ஊழியர்களை பாதிக்கும்.

ஹேரத்தின் கூற்றுக்களை மறுத்த விக்கிரமசிங்க, தேவையான நிதியை முறையாக ஒதுக்கியதாக வலியுறுத்தினார்.

விக்கிரமசிங்கவுக்கு தொழிலாளர்கள் மீதும் ஏழைகள் மீதும் அனுதாபம் இல்லை. பதவியில் இருந்தபோது, சம்பள உயர்வுக்காக அரசு ஊழியர்களின் போராட்டங்களுக்கு அவர் விரோதமாக இருந்தார். தனது அரசாங்கத்திற்கு நிதி இல்லை என்றும், பொருளாதார திவால்நிலையிலிருந்து மீள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலமுறை கூறினார்.

அவர் ஆர்ப்பாட்டம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக அத்தியாவசிய சேவை சட்டங்களை விதித்து, வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தடுத்து, அவர்களுக்கு எதிராக கொடூரமான பொலிஸ் மற்றும் இராணுவ தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டார்.

அரசாங்க ஊழியர்கள் மாதத்திற்கு 20,000 ரூபாய் சம்பள உயர்வு கோரியும் முந்தைய இரண்டு ஆண்டுகளில் நிறுத்தப்பட்ட ஓய்வூதிய சம்பள உயர்வுக்காகவும் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் பாரிய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். இந்த எதிர்ப்பை எதிர்கொண்ட விக்கிரமசிங்கவுக்கு செப்டம்பர் மாதம் போதிய சம்பள உயர்வை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அந்த முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு வழங்கப்பட்டாலும், உண்மையான சம்பளங்களின் பெரும் சரிவை ஈடுசெய்ய இது போதுமானதாக இருக்காது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, 2022, 2023 ஆம் ஆண்டுகளில் அனைத்து தொழிலாளர்களின் உண்மையான சம்பளம் முறையே 27 மற்றும் 22 சதவீதம் குறைந்துள்ளது.

முன்மொழியப்பட்ட சம்பள உயர்வை திசாநாயக்க வழங்க மறுத்தமை, அவரது ஆட்சி அதன் சிக்கனக் கோரிக்கைகளுடன் ஒத்துப்போகிறது என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகும். தற்போது, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 339 மில்லியன் டாலர் பிணை எடுப்பு கடனின் நான்காவது தவணைத் தொகையைப் பெறுவதற்கான தீவிர முயற்சியில் அரசாங்கம் உள்ளது.

கடந்த வாரம் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகள் வாஷிங்டனுக்கு விஜயம் செய்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்களை சந்தித்தனர். சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் உறுதியை அவர்கள் தெரிவித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா 'இந்த அர்ப்பணிப்பால் தான் ஊக்குவிக்கப்பட்டதாக” தெரிவித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவரது வார்த்தைப்பிரயோகங்கள் எதுவாக இருந்தாலும், திசாநாயக்க விக்கிரமசிங்க செயல்படுத்திய அதே கொள்கைகளைத்தான் தொடர்கிறார்.

சம்பள உயர்வை அரசாங்கம் வழங்க மறுப்பது குறித்து அரச துறை தொழிற்சங்கங்கள் முற்றிலும் மௌனம் சாதிக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜனாதிபதியின் ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள அரச மற்றும் மாகாண அரசு சேவைகள் தொழிற்சங்கங்களின் கூட்டு (CSPSSTU) அரசு ஊழியர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்தது. மற்ற தொழிற்சங்க அதிகாரத்துவங்களைப் போலவே, CPSSTU ஊழியர்கள் மத்தியில் இருந்து வரும் அழுத்தத்தை தணிக்கும் முயற்சியாக மட்டுமே நடவடிக்கைகளுக்கு அழைப்புவிட்டது.

CSPSSTU இன் தலைவர் சந்தன சூரியராச்சி ஒரு பிரதான ஜே.வி.பி. தலைவராவார். அவர் கொழும்பு மாவட்டத்தில் என்.பி.பி வேட்பாளராக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க உட்பட மேலும் பல ஜே.வி.பி. தொழிற்சங்க தலைவர்களும் தே.ம.ச. பட்டியலில் தேர்தலில் நிற்கின்றனர். விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் பல தொழிற்சங்கங்களின் தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.

அவர்கள் அனைவரும் பொருளாதார நெருக்கடிக்கு உழைக்கும் மக்களை விலை கொடுக்க கட்டாயப்படுத்தும் திட்டத்தை அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.

ஊதிய உயர்வுக்கு நிதி இல்லை என்ற அரசின் கூற்றை அரசுத் துறை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். சம்பள உயர்வு என்பது முதலாளித்துவ அரசாங்கங்களின் தயவினால் வழங்கப்படும் விஷயமல்ல. மாறாக தொழிலாளர்களின் அடிப்படைத் தேவையும் உரிமையுமாகும்.

கொழும்புத் துறைமுகம், புகையிரதம், பெருந்தோட்டங்கள், ஆடைத்துறை மற்றும் பாடசாலைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை உள்ளடக்கிய தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டானது அரச ஊழியர்களை அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்க்குமாறும் , அவர்களின் உரிமைகளுக்காக ஒரு போராட்டத்தை தொடங்கத் தயாராகுமாறும் அழைப்பு விடுத்தன. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை நம்ப முடியாது என்றும், இந்த ஊழல், முதலாளித்துவ சார்பு எந்திரங்களிலிருந்து சுயாதீனமாக தங்களை ஒழுங்கமைக்க வேண்டும் என்று அந்த அறிக்கை கூறியது.

அது அறிவித்ததாவது: 'திசாநாயக்க ஆட்சியின் கொடூரமான சமூகத் தாக்குதலை எதிர்த்துப் போராடுமாறு அனைத்து அரசுத் துறை தொழிலாளர்களையும் நாங்கள் அழைக்கிறோம். இத்தாக்குதல் அரச ஊழியர்களுக்கு மட்டுமன்றி, முழு தொழிலாள வர்க்கத்திற்கும் கிராமப்புற மக்களுக்கும் எதிராக இயக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் தனியார் நிறுவன தொழிலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்.”

அறிக்கை பின்வரும் வேலைத்திட்டத்தை முன்வைத்தது:

  • 'அங்கீகரிக்கப்பட்ட சம்பள உயர்வில் கைவைக்காதே!' என தொழிலாளர்கள் அறிவிக்கவேண்டும். உண்மையான ஊதியங்களின் கடந்த கால அரிப்புக்கு முழுமையாக ஈடுசெய்யும் ஊதிய உயர்வு அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அனைத்து ஊதியங்களும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்க வேண்டும்!
  • சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைளை எதிர்! அனைத்து வெளிநாட்டு கடன்களையும் நிராகரி!
  • தனியார்மயமாக்கலை எதிர்த்திடு! தனியார்மயமாக்கலை எதிர்கொள்ளும் அரசுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திடு!
  • அனைத்து இன மற்றும் வகுப்புவாத பிளவுகளையும் நிராகரி! தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்காக போராடு!
  • செல்வந்த உயரடுக்கினரால் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதன் மூலம் திரட்டப்பட்ட பெரும் செல்வத்தை கைப்பற்றுங்கள்.
  • வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் தோட்டங்களை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் வைப்போம்.
  • அந்த அறிக்கை வலியுறுத்துவது போல், “இந்தப் போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கத்தின் மூலமாகவும், ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டை கட்டியெழுப்புவதன் மூலமாகவும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இது தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் உள்ள இதேபோன்ற குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டது'.

இந்த புரட்சிகர வேலைத்திட்டத்திற்காக போராடுவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி தேசியத் தேர்தலில் தலையிடுகிறது. இந்த போராட்டத்தில் தொழிலாளர்களும், இளைஞர்களும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading