முன்னோக்கு

வோல்க்ஸ்வாகன் ஆலை மூடல்கள் அறிவிக்கப்பட்ட பிறகு: வாகனத் தொழில்துறையில் வேலை வெட்டுக்களுக்கு எதிரான ஓர் உலகளாவிய சாமானிய தொழிலாளர்களின் பிரச்சாரத்திற்காக!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

சட்டனூகா வோல்க்ஸ்வாகன் தொழிலாளர்கள் [Photo by Volkswagen]

வாகனத்துறை மற்றும் ஏனைய தொழில்துறைகளில் வேலை வெட்டுக்களுக்கு எதிராக ஓர் உலகளாவிய பிரச்சாரத்திற்கு சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி அழைப்பு விடுக்கிறது. தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உதவியுடனும், உடந்தையுடனும் நாடுகடந்த பெருநிறுவனங்கள் நடத்தும் பாரிய தாக்குதல்களுக்கு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சக்தியை அணிதிரட்டுவதன் மூலம் பதிலளிக்க வேண்டும்.

உலகளாவிய மறியல் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் மற்றும் சர்வதேச வேலைநிறுத்த நடவடிக்கையில் உச்சக்கட்டத்தை அடைவது உட்பட உலகளாவிய பிரச்சாரத்தை தொழிலாளர்கள் தயாரிப்பு செய்ய வேண்டும். ஏறக்குறைய ஏழு வார கால வேலைநிறுத்தத்திற்கு பதிலடியாக 17,000 வேலைநீக்கங்களை அறிவித்துள்ள போயிங் நிறுவனம் உட்பட வேலை வெட்டுக்களை முகங்கொடுக்கும் ஏனைய தொழில்துறைகளின் தொழிலாளர்களுடன் கூட்டணி சேர்ந்து, அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிற நாடுகளில் உள்ள வாகனத்துறை தொழிலாளர்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு வழிகளை ஸ்தாபிப்பதன் மூலமாக, இதற்கான அடித்தளம் தயாரிக்கப்பட வேண்டும்.

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டிலும் வாகனத்துறை தொழிலாளர்கள் மத்தியில் உள்ள சாமானிய தொழிலாளர் குழுக்கள், அனைத்து முக்கிய தொழிற்சாலையையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட வேண்டும். இது தொழிலாளர்களுக்கு, உலகளாவியளவில் தொழில்துறையை மூடுவதை தடுப்பதற்கான அதிகாரத்தை அளிக்கிறது.

கடந்த திங்களன்று, வோல்க்ஸ்வாகன் நிறுவனம் ஜேர்மனியில் குறைந்தபட்சம் மூன்று ஆலைகளை மூடவிருப்பதாகவும், இது பத்தாயிரக் கணக்கான வேலைகளை அழிக்கும் என்றும் ஜேர்மனியில் உள்ள IG Metall தொழிற்சங்கம் அறிவித்தது. வாகனத் தொழில்துறையில் உலகளவில் ஏற்பட்டுள்ள தொடர் வேலை இழப்புகளில் இதுவே சமீபத்தியதாகும். ஐரோப்பாவில் மட்டும், பெல்ஜியத்தில் Audi ஆலையை மூடுவது மற்றும் ஃபோர்டு, ஸ்டெல்லாண்டிஸ் மற்றும் பிற பெரிய வாகன உற்பத்தியாளர்களின் வெட்டுக்கள், உதிரிபாகங்கள் துறையில் பல்லாயிரக்கணக்கான வேலை வெட்டுக்கள் ஆகியவை இதில் அடங்கும்.

அமெரிக்காவில் பெருமளவில் வேலை வெட்டுக்கள் நடந்து வருகின்றன. Stellantis இன் வாரன் டிரக் ஒருங்கிணைப்பு ஆலையில் கிட்டத்தட்ட 2,450 வேலை வெட்டுக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான துணை தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செவ்வாயன்று, Stellantis டெட்ராய்டில் உள்ள அதன் Mack அசெம்பிளி ஆலையில் மேலும் வேலை வெட்டுக்களை அறிவித்தது. ஜெனரல் மோட்டார்ஸ் அதன் மிசூரியில் உள்ள ஃபேர்ஃபாக்ஸ் ஆலையிலிருந்து 1,700 தொழிலாளர்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்து வருகிறது. மேலும், இந்த நிறுவனம் நாடெங்கிலும் நூற்றுக்கணக்கான தற்காலிக பகுதி-நேர தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்து வருகிறது. இதன் மூலம் அதன் மென்பொருள் மற்றும் சேவைப் பிரிவில் பணியாற்றும் 1,000ம் ஊழியர்களை நீக்கியுள்ளது.

நிர்வாகம் அதன் இலக்குகளை அடைந்தால், இந்த வெட்டுக்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் மிகச் சிறியதாகிவிடும். வேலைகள் இழப்பு என்பது உலகளாவிய வாகன தொழில்துறை மின்சார வாகனங்களுக்கு மாறுவதன் ஒரு பகுதியாகும். முதலீட்டு செலவை ஈடுகட்டவும், புதிய தொழில்நுட்பத்தால் உறுதியளிக்கப்பட்ட குறைந்த தொழிலாளர் செலவுகளை அடையவும் நிறுவனங்கள் வேலைகளை வெட்டுவதற்கு இடைவிடாத போட்டியில் உள்ளன. நூறாயிரக்கணக்கான, ஏன் மில்லியன் கணக்கான வேலைகள் அச்சுறுத்தலின் கீழ் உள்ளன.

இரயிவேயிலிருந்து கப்பல்துறை, தளவாடங்கள், பொறியியல் மற்றும் திரைப்படத்துறை வரையுள்ள இதர தொழில்களில் உள்ள வேலைகள் தானியங்கி மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் அச்சுறுத்தப்படுகின்றன. உழைப்பின் உற்பத்தித்திறன் நீண்ட காலத்திற்கு முன்னரே வறுமை மற்றும் பிற அனைத்து சமூகப் பிரச்சினைகளையும் அகற்றுவதற்குத் தேவையான நிலையை எட்டியுள்ளது. ஆனால், அனைத்து பொருளாதார வாழ்வும் தனியார் இலாபத்திற்கு அடிபணிய வைக்கப்பட்டிருப்பதால், இவை நீடிப்பது மட்டுமல்ல, மாறாக மோசமடைந்து வருகிறது.

சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) தொழிலாளர்களை தரையில் தள்ளுவதன் மூலம் இலாபத்தை அதிகரிக்க உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்கான முதலாளிகளின் “உரிமையை” நிராகரிக்கிறது. அதற்கு பதிலாக, உற்பத்தியின் மீதான தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் மூலமாக, மிகப்பெரும் பெருநிறுவனங்களை பொது பயன்பாடுகளாக மாற்றுவதன் மூலமாக, தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளை எட்டுவதற்கு நாங்கள் போராடுகிறோம். புதிய தொழில்நுட்பங்களின் பயன்கள் உற்பத்தியாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு செல்ல வேண்டுமே தவிர, விரல் விட்டு எண்ணக்கூடிய ஒட்டுண்ணிகளுக்கு அல்ல.

பணிநீக்கங்களுக்கு எதிரான பிரச்சாரம் உலகளவில் இருக்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு தொழில்துறையும் உலகந்தழுவிய உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளைப் பயன்படுத்தி செயல்படுகிறது. ஒரு “ஜேர்மன்” அல்லது “அமெரிக்க” கார் என்று இப்போது எதுவும் இல்லை. மாறாக, பெருநிறுவன தலைமையகங்கள் வொல்ப்ஸ்பேர்க்கில் இருந்தாலும் சரி அல்லது டெட்ராய்டில் இருந்தாலும் சரி, நவீன வாகனங்கள் டசின் கணக்கான நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த உழைப்பின் ஒரு விளைபொருளாக உள்ளது.

அட்லாண்டிக்கின் இரண்டு பக்கங்களிலும், ஆளும் வர்க்கம் பாரிய வேலைநீக்கங்களுக்கு, சீனாவிடம் இருந்து வரும் போட்டியைக் குற்றஞ்சாட்ட முனைந்து வருகிறது. பைடென் நிர்வாகம் சீன வாகனங்கள் மீது 100 சதவீத வரிகளை விதித்துள்ளது. அதேவேளையில் செவ்வாயன்று, ஐரோப்பிய ஒன்றியம் சீன வாகனங்கள் மீதான சுங்கவரிகளை ஏறத்தாழ 45.3 சதவீதமாக பாரியளவில் உயர்த்தியது. இத்தகைய பாதுகாப்புவரி நடவடிக்கைகள் நுகர்வோர் மீது ஒரு பிற்போக்குத்தனமாக திணிக்கும் வரியாகும். இது உழைக்கும் மக்களை வாகனத் தயாரிப்பாளர்களின் இலாபங்களுக்கு அதிக விலைகள் மூலம் உதவித் தொகை கொடுக்க கட்டாயப்படுத்துகிறது.

பல தசாப்தங்களாக, பிரதான பெருநிறுவனங்கள் உலகளாவிய உற்பத்தியின் அடிமட்டத்தை நோக்கிய ஓர் உலகளாவிய போட்டியில் தொழிலாளர்களை குழிதோண்டிப் புதைப்பதற்கான ஒரு ஆப்பாக பயன்படுத்தி வந்துள்ளன. ஆனால், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் தேசிய அரசாங்கங்களால் ஊக்குவிக்கப்படும் தேசிய பிளவுகளை நிராகரிக்கும் ஒரு சர்வதேச மூலோபாயத்துடன், தொழிலாளர்கள் தாக்குதலை முன்னெடுத்து, கடந்த காலத்தில் சாத்தியமானதை விட மிகவும் சக்திவாய்ந்த, ஐக்கியப்பட்ட வர்க்க இயக்கத்தைக் கட்டியெழுப்ப பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியைப் பயன்படுத்த முடியும்.

போயிங் வேலைநிறுத்தம் குறித்து IWA-RFC ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுக்கூட்டம், இது சாத்தியம் என்பதைக் காட்டுகிறது. வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஏனையவர்கள் உட்பட ஆறு கண்டங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் உலகளாவிய முக்கியத்துவம் குறித்த இந்த கூட்டத்தில் பங்கெடுத்தனர். மேலும் அவர்கள், வேலைநிறுத்தத்தை உடைக்க அரசாங்கம், மற்றும் போயிங் தொழிற்சங்கத்தின் விற்றுத்தள்ளல்களின் முயற்சிகளுக்கு எதிராக, போயிங் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான ஒரு உலக மூலோபாயம் குறித்தும் இக்கூட்டத்தில் கலந்துரையாடினர்.

இந்தப் பிரச்சாரம் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒரு கிளர்ச்சியாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அதிகாரத்துவம், பணிநீக்கங்கள் மற்றும் ஊதிய வெட்டுக்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக வெளிநாட்டு போட்டியாளர்களுக்கு எதிராக அவர்களின் “சொந்த” முதலாளிகள் போட்டியிட உதவி வருகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிற்சங்கங்கள் அதிகாரத்துவ சர்வாதிகாரங்களாக ஆகி வருகின்றன, அவற்றுக்குள் இருக்கும் தொழிலாளர்களின் கட்டுப்பாடு முற்றிலும் இல்லை. தொழிற்சங்க எந்திரம் ஒழிக்கப்பட்டு, சாமானிய தொழிலாளர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட வேண்டும்.

ஜேர்மனியில், வோல்ஸ்வாகன் நிறுவனத்தின் மேற்பார்வை குழுவில் அமர்ந்திருக்கும் “தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள்” மற்றும் பிற பெருநிறுவன அமைப்புகள் மூலமாக ஆலைகளை நிர்வகிக்க உதவும் ஐ.ஜி மெட்டல், வெட்டுக்கள் “சமூகரீதியில் ஏற்கத்தக்க” விதத்தில், அதாவது, அடிமட்டத்திலிருந்து செயலூக்கமான எதிர்ப்பைத் தூண்டாமல் நடத்தப்படுவதை உறுதிப்படுத்த மட்டுமே அது உதவும் என்று கூறியுள்ளது. அமெரிக்காவில், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்க அதிகாரத்துவம் ஒரு புதிய விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் பணிநீக்கங்களை செயல்படுத்த உதவி வருகிறது. அதேவேளையில், வேலை வெட்டுக்களுக்கு முகங்கொடுத்து வரும் கனேடிய மற்றும் மெக்சிக்கன் வாகனத்துறை தொழிலாளர்கள் மீது பழியைத் திருப்பவும் அது முயன்று வருகிறது. ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கம் பைடென் வெள்ளை மாளிகையுடன் மிக நெருக்கமாக பிணைந்துள்ளதால், அது கிட்டத்தட்ட கூட்டாட்சி மத்திய அரசாங்கத்தின் ஒரு துறையாகத்தான் செயல்பட்டு வருகிறது.

கட்டுப்படுத்தவியலாத தொழிற்சங்க எந்திரத்தில் இருந்து அடித் தளத்திற்கு அதிகாரத்தைக் கைமாற்றுவதற்கு தொழிலாளர்களை அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோக்கு மட்டுமே சாத்தியமான முன்னோக்கு ஆகும். சாமானிய தொழிலாளர் குழுக்கள் அதிகாரத்திற்கான புதிய அங்கங்களாக கட்டியெழுப்பப்பட வேண்டும். அவை தொழிலாளர்கள் தங்கள் ஜனநாயக விருப்பத்தை செயல்படுத்தவும் மற்றும் உலகளவில் நடவடிக்கைகளுக்குத் தயாரிப்பு செய்யவும் சுயாதீனமாக செயல்படுவதற்கான வழிவகைகளை உருவாக்க வேண்டும்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் போக்கை மாற்றுவதற்கு கீழிருந்து “அழுத்தம்” கொடுக்க முடியாது. ஏனெனில் அவர்களின் ஆறு இலக்க சம்பளம் நிர்வாகத்துக்கும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் தொழிலாளர் அமைதியை பேணுவதில் தங்கியுள்ளது. இதற்கு, அதிகாரத்துவத்தின் அதிகாரத்தை நொறுக்குவதே ஒரே விடையிறுப்பாக இருக்க வேண்டுமே தவிர, அதைச் சீர்திருத்துவது அல்ல.

நாஜி ஜேர்மனியின் தேசிய கார் நிறுவனமாக முதலில் ஸ்தாபிக்கப்பட்ட வோல்ஸ்வாகன், தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடனும், அரசுடனும் ஒருங்கிணைந்திருந்ததில் உலகில் மிக முக்கிய உதாரணங்களில் ஒன்றாக உள்ளது. “ஜேர்மன் நிறுவனம்” பெருநிறுவன பங்குதாரர்கள், ஐ ஜி மெட்டல் தொழிற்சங்கம் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்திற்கு இடையிலான ஒரு முத்தரப்பு கூட்டணியாக நடத்தப்படுகிறது. “சமூக கூட்டாண்மை” மற்றும் “இணை-தீர்மானம்” ஆகியவற்றின் அடிப்படையில், தொழிலாளர்கள் மற்றும் மூலதனத்தின் நலன்கள் சமரசப்படுத்தப்பட முடியும் என்று கூறப்பட்டது.

ஆலை மூடல்கள் இதை ஒரு பொய் என்பதை அம்பலப்படுத்துகின்றன. தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகம், அரசாங்கம் மற்றும் அதிகாரத்துவத்தின் தேசிய ஐக்கியமே இதன் உண்மையான அர்த்தமாகும்.

அட்லாண்டிக்கின் இருபுறமும், இந்த முத்தரப்பு கூட்டணி ஒரு போர் கூட்டணியின் குணாம்சத்தை ஏற்று வருகிறது. பைடென், தொழிற்சங்கங்களை தனது “உள்நாட்டு நேட்டோ” என்று அழைக்கிறார். மேலும், போருக்கு இன்றியமையாத விநியோகச் சங்கிலிகளை இயங்க வைக்க இதை நம்பியுள்ளார். ஜேர்மனியிலும் இதுவே உண்மையாகும், அங்கு அரசாங்கம் நாஜிக்களுக்கு பிந்தைய மிகப்பெரிய மீள்இராணுவமயமாக்கலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் தொழிற்சங்க அதிகாரிகள் காஸா இனப்படுகொலை உட்பட போருக்கான எதிர்ப்பை குற்றமாக்கும் முயற்சிகளுக்கு உதவுகின்றனர் மற்றும் உடந்தையாக உள்ளனர்.

ஒரு தூய தேசிய கட்டமைப்பிற்குள் தொழிலாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது சாத்தியமற்றது என்பது ஒவ்வொரு நாட்டிலும் சர்வாதிகாரத்தை நோக்கிய சரிவில் எடுத்துக்காட்டப்படுகிறது. ஒட்டுமொத்த பெருநிறுவன தொழிலாளர் கட்டமைப்பும், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்தை கழுத்தை நெரிக்கவும் மற்றும் வெளிநாட்டு போட்டியாளர்களுக்கு எதிரான போருக்கு நாட்டை தயாரிப்பு செய்யவும் வடிவமைக்கப்பட்டிருந்த பாசிசத்தின் கீழான தேசிய தொழிலாளர் சிண்டிகேட்டுகளை மேலும் மேலும் ஒத்திருக்கிறது.

பாசிசத்தின் முதன்மையான பில்லியனர் ஆதரவாளர் எலோன் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கார் நிறுவனமான டெஸ்லா மின்சார வாகன மாற்றத்தில் முக்கியமானது. ட்ரம்ப் கட்டியெழுப்பி வருகின்ற பாசிசவாத இயக்கத்தை அவர் ஊக்குவிப்பது, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திட்டமிடப்பட்டு வருகின்ற தாக்குதல்கள் ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் இணக்கமற்றவை என்பதைக் காட்டுகிறது. பல தசாப்தங்களாக கம்யூனிச-விரோதம் மற்றும் வேலைகளை “திருடும்” வெளிநாட்டவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களில் மூழ்கியுள்ள தொழிற்சங்க அதிகாரத்துவம், ஒரு பாசிசவாத சர்வாதிகாரத்திற்கும் கூட தன்னை தகவமைத்துக் கொள்ளவும் முழுமையாக தயாராக உள்ளது.

சமத்துவத்துடன் பொருந்தாத இலாபகர அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கம் உலகளவில் அணிதிரள வேண்டும். பணிநீக்கங்களுக்கு எதிரான போராட்டம், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் மனிதத் தேவையைப் பூர்த்தி செய்யவும் புதிய தொழில்நுட்பங்கள் மீது தொழிலாளர்களின் கட்டுப்பாட்டிற்கான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். வோல்ஸ்வாகன் மற்றும் ஏனைய நாடுகடந்த பெருநிறுவனங்கள் பொது பயன்பாடுகளாக மாற்றப்பட்டு, அனைவரது நலனுக்காக தொழிலாளர்களாலேயே நடத்தப்பட வேண்டும். ஆதாரவளங்கள், சந்தைகள் மற்றும் வினியோக சங்கிலிகளை கைப்பற்றுவதற்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் உந்துதலால் தூண்டப்பட்டு வருகின்ற போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்துடன் இது இணைக்கப்பட வேண்டும்.

Loading