இலங்கை கல்வி அமைச்சர் மாணவ தலைவர்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அக்டோபர் 17 அன்று, அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பும் (IUSF) பல மாணவர் குழுக்களும் புதிய இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்து, அரசு பல்கலைக்கழகங்கள் உட்பட பொதுக் கல்வியில் ஆழமடைந்து வரும் நெருக்கடியை விரைவாக தீர்க்குமாறு அழைப்பு விடுத்தன.

17 அக்டோபர் 2024 அன்று இலங்கை பிரதமர் ஹரினியை சந்திப்பது குறித்து IUSF ஒருங்கிணைப்பாளர் மதுஷன் சந்திரஜித் (நடு) செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார். அமரசூரிய கல்வி அமைச்சராகவும் உள்ளார். [Photo by Facebook/IUSF]

ஹரினி அமரசூரிய, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஜனதா விமுக்தி பெரமுன / தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கல்வி அமைச்சராகவும், அதன் மூன்று பேர் கொண்ட அமைச்சரவையின் உறுப்பினராகவும் உள்ளார்.

IUSF, போலி-இடது முன்னணி சோசலிஸ்ட் கட்சியால் (FSP) கட்டுப்படுத்தப்படுவதுடன், இது வலதுசாரி பெருவணிக ஆதரவு ஜே.வி.பி./தே.ம.ச ஆட்சி தொடர்பாக மாயைகளை ஊக்குவித்து, திசாநாயக்கவின் தேர்தலை 'மக்களின் எதிர்பார்ப்புகளின்' வெளிப்பாடு என்று பாராட்டியது.

IUSF அமைப்பாளர் மதுஷன் சந்திரஜித், அமரசூரியாவுக்கு எழுதிய ஏழு பக்க கடிதத்தைத் தொடர்ந்து, மாணவர் சங்கத் தலைவர்களின் கூட்டம் அரசு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகளை கோடிட்டுக் காட்டியது.

அக்டோபர் 21 அன்று ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய IUSF அமைப்பாளர் சந்திரஜித், மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு விரைவான தீர்வுக்கான கோரிக்கைகளுக்கு அமைச்சரிடமிருந்து மாணவர் தலைவர்கள் 'சாதகமான பதிலை' பெறவில்லை என்று புலம்பினார்.

IUSF இன் கடிதத்தில் பல்கலைக்கழக விடுதிகள் மற்றும் விரிவுரை மண்டபங்கள் இல்லாமை, மஹாபொல கொடுப்பனவுகள் தாமதம் (மாணவர்களுக்கான நிதி உதவி), ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கல்வியை தனியார்மயமாக்கல் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன. அரசு பல்கலைக்கழகங்களுக்கு 12,900 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும், ஆனால் தற்போது 6,548 பேர் மட்டுமே பணியில் உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேராதனை மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களில் முறையே முகாமைத்துவ பீடமும் கணினி விஞ்ஞான பீடமும் இயங்குவதற்கு தேவையான வசதிகள் இல்லாதுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களுக்கான பதிவுக் கட்டணம் 2,100 ரூபாயிலிருந்து 6,100 ரூபாவாக (20 அமெரிக்க டாலர்) உயர்த்தப்பட்டுள்ளதுடன், ஏனைய பல்கலைக்கழகங்களில் பரீட்சைக் கட்டணமும் பிற அடிப்படைச் செலவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்வியை தனியார்மயமாக்குவதை நிறுத்துமாறும், மகாபொல மாணவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

முன்னைய கல்வி அமைச்சர்களைப் போலவே அமரசூரியவும் இந்த கோரிக்கைகளுக்கு ஜே.வி.பி/என்.பி.பி நிர்வாகம் உடனடித் தீர்வுகளை வழங்காது என்று அறிவித்தார். IUSF அமைப்பாளர் சந்திரஜித், ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, மருத்துவக் கல்வியை தனியார்மயமாக்குவதை நிறுத்துவது குறித்து கல்வி அமைச்சரால் 'ஒரு திட்டவட்டமான பதிலைச் சொல்ல முடியவில்லை' என்றும், மஹாபொல உதவிகள் அதிகரிக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தினார்.

முன்னாள் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட வருமானத்திற்கு ஏற்ற வரியின் காரணமாக பலர் நாட்டை விட்டு வெளியேறியதன் விளைவாக ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக IUSF தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், கொழும்பின் வரிக் கொள்கைகள் குறித்து மீளாய்வு செய்வதற்கு கால அவகாசம் எடுக்கும் என்றும், விடுதி பற்றாக்குறை குறித்து 'கொள்கைரீதியான முடிவை எடுப்பது' சாத்தியமில்லை என்றும் அமரசூரிய தூதுக்குழுவிடம் கூறினார். சுருங்கச் சொன்னால், அமைச்சர் மாணவர் தலைவர்களை ஏமாற்றி சமாதானப்படுத்தினார்.

திசாநாயக்க அரசாங்கமும் அதன் பொருளாதார ஆலோசகர்களும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கட்டளைகளுக்கு முழுமையாக உறுதியளித்துள்ளனர் என்பதற்கான மற்றொரு உறுதிப்படுத்தலாகும். புதிய ஆட்சியானது விக்ரமசிங்கவின் முந்தைய வேலைத்திட்டத்தை தக்கவைத்துக்கொள்ளும் என்பதை தெளிவாக்குவதன் மூலம் 3 பில்லியன் டாலர் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு கடனின் அடுத்த தவணையை பெற்றுக்கொள்வதை பாதுகாக்க முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.

இந்த நடவடிக்கைகள், VAT உட்பட கூர்மையான வரி அதிகரிப்புகளை உள்ளடக்கியது. இது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி, ஊதிய முடக்கங்களை திணித்து, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கி, மதிப்பிடப்பட்ட 500,000 வேலைகளை அழிப்பதுடன் கல்விக்கும் சுகாதாரத்துறைக்கான அரசாங்க நிதியை திட்டமிட்டுக் குறைப்பதையும் தொடங்கியுள்ளது.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6 வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆதரிப்பதாக ஜே.வி.பி முன்பு கூறியது. NPPஇன் கற்பனையான மற்றும் தேசியவாத தேர்தல் அறிக்கையான 'செழிப்பான தேசம்! அழகான நாடு!” என்பதில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் “கல்விக்கான ஒதுக்கீட்டை படிப்படியாக 6 சதவீதம் வரை உயர்த்தும்” என்று வலியுறுத்தியது.

எவ்வாறாயினும், செப்டம்பர் 28 அன்று இலங்கை முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான பாடசாலை அதிபர்களின் செயலமர்வில் உரையாற்றிய அமரசூரிய, பொருளாதார வீழ்ச்சியின் பின்னணியில் கல்விக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீத நிதியை 'ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்த முடியாது' என்றார். அரசாங்கம், 'இந்த இலக்குகளை திட்டமிட்ட' இலக்காகக் கொள்ளும் என்று அவர் இழிந்த முறையில் கூறினார்.

விக்ரமசிங்கவின் தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்புக்கு எதிரானது என்று ஜே.வி.பி/என்.பி.பி முன்னர் கூறியதாக IUSF ஒருங்கிணைப்பாளர் சந்திரஜித் ஊடக மாநாட்டில் தெரிவித்தார். “இந்தக் கொள்கையை எதிர்த்த பின்னர், மருத்துவக் கல்வியை தனியார்மயமாக்குவதை தே.ம.ச ஏன் எதிர்க்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை,” என்று அவர் கூறினார். 'தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று புதிய அரசாங்கத்திற்கு அவரது கடிதம் அழைப்பு விடுத்திருந்தது, இது 'மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு' என்று அறிவித்தது.

அவர்களின் கோரிக்கைகளுக்காக போராட தனது அமைப்பு 'பல்கலைக்கழகங்களுக்குள் கிளர்ச்சியை' தொடங்கும் என்று IUSF அமைப்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மாணவர்களின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த திசாநாயக்க ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று கூறி அடுத்தடுத்த கொழும்பு அரசாங்கங்களின் கீழ் இருந்ததைப் போலவே, IUSF போராட்டங்களை நடத்தும்.

1978 ஆம் ஆண்டு ஜே.வி.பி. ஆல் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து, இந்த முட்டுச்சந்தான அரசியல் பதாகையின் கீழ் IUSF மாணவர்களை அணிதிரட்டியுள்ளது. 2012ல் ஜேவிபியில் இருந்து பிரிந்த பின்னரும் அதே முன்னோக்கை FSP உம் தொடர்ந்தது. இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கம், ஒரு புரட்சிகர முதலாளித்துவ எதிர்ப்பு வேலைத்திட்டத்தில் மாணவர்கள் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புவதிலிருந்து தடுப்பதாகும்.

IUSF க்கு மாறாக, ஜேவிபி/என்பிபி 'மக்களின் அபிலாஷைகளை' நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை. அதிகாரத்தை வெல்வதற்காக ஆளும் உயரடுக்கின் பாரம்பரியக் கட்சிகளுக்கு எதிரான வெகுஜன கோபத்தை இழிந்த முறையில் தனக்கு பயன்படுத்திக் கொண்டது. இப்போது சர்வதேச நாணய நிதியத்துடனும் இலங்கை பெருவணிகத்துடனும் கைகோர்த்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் மீது அவர்களின் மிருகத்தனமான தாக்குதல்களைத் திணிக்கிறது.

முதலாளித்து அமைப்பினுள் மாணவர்கள், தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் எதிர்கொள்ளும் மோசமான சமூகப் பிரச்சினைகளுக்கு தேசிய தீர்வு எதுவும் கிடையாது. இலாப நோக்கு அமைப்பின் நெருக்கடி ஆழமடையும் போது, பொதுக் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற முக்கிய சமூக சேவைகள் முதலில் இலக்கு வைக்கப்படுகின்றன. அமெரிக்காவிலும் இலங்கை உட்பட மற்ற எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் இதுவே உண்மை.

காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் உக்ரேனில் நேட்டோ தலைமையிலான போருக்காகவும், சீனாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்புக்காகவும் அமெரிக்காவின் பைடென் நிர்வாகம் பில்லியன் கணக்கான டாலர்களை ஒதுக்குகிறது. இது சமீபத்தில் அவசரகால நிவாரண நிதி திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கான மத்திய ஆட்சியின் ஆதரவை நிறுத்தியது, இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 380,000 கல்வியாளர்களின் வேலைகளை இல்லாதொழிக்கும்.

1977 ஆம் ஆண்டு ஜெயவர்த்தன அரசாங்கத்தின் 'திறந்த சந்தை' கொள்கைகளில் தொடங்கி அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள், இலவச பொதுக் கல்விக்கான நிதியை திட்டமிட்டுக் குறைத்து, நாடு முழுவதும் தனியார் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் விரிவாக்கத்திற்கு வழிவகுத்தன.

அனைத்து மட்டங்களிலும் இலவச உயர்தரக் கல்விக்கான போராட்டம், மஹாபொலவை அதிகரிப்பதற்கான ஆதரவு மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளின் தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதது. இதன் அர்த்தம், திசாநாயக்க அரசாங்கம் மற்றும் அதன் சர்வதேச நாணய நிதிய கொள்கைகளுக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தின் தேவையையே குறிக்கிறது.

இப்போது வெளிநாட்டு கடனாளிகளுக்கு திருப்பிச் செலுத்த பயன்படும் திரட்டப்பட்ட இலாபங்களும்; தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட பில்லியன் கணக்கான ரூபாக்களும் பொதுக் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற தேவையான சமூக சேவைகளை விரிவுபடுத்துவதற்கு வழங்கப்பட வேண்டும்.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரே சர்வதேச மற்றும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தை நோக்கி மாணவர்கள் திரும்ப வேண்டும்.

FSP மற்றும் IUSF தலைவர்கள் இந்த முன்னோக்கிற்கு விரோதமாக உள்ளதுடன், மாணவர்கள் மட்டுமே தீர்வுகளுக்காக முதலாளித்துவ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று பொய்யாகக் கூறுகின்றனர்.

இராஜபக்ஷ ஆட்சியை வீழ்த்திய 2022 வெகுஜன எழுச்சியின் போது, இடைக்கால முதலாளித்துவ ஆட்சிக்கான சமகி ஜன பலவேகய மற்றும் ஜே.வி.பி/என்.பி.பி ஆகியவற்றின் அழைப்புகளுக்கு ஆதரவளிக்குமாறு தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை FSP மற்றும் IUSF வழிநடாத்தியது. இந்த முன்னோக்கு வெகுஜன இயக்கத்தை காட்டிக்கொடுத்ததுடன், விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கும் வழி வகுத்தது.

நாங்கள், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புமாறும், பின்வரும் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்திற்காக போராடுமாறும் மாணவர்களை கேட்டுக்கொள்கிறோம்:

  • பெரு நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் தேசியமயமாக்குவோம்!
  • சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கையும், தனியார்மயமாக்கலும் வேண்டாம்! அனைத்து வெளிநாட்டு கடன்களையும் நிராகரிப்போம்!

சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். இதுதான் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டமாகும்.

உங்கள் பல்கலைக்கழகங்களில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பின் கிளைகளை உருவாக்கவும் இணைந்து கொள்ளவும், உங்கள் மாவட்டத்தில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவும், அதன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கவும் மற்றும் அதன் முன்னோக்குக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் மாணவர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மின்னஞ்சல் அல்லது WhatsApp மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்.

Email: iysseslb@gmail.com

WhatsApp: +94773562327

Loading